வேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – அத்தியாயம் 10

This entry is part 1 of 14 in the series 30 ஏப்ரல் 2017

ஜோதிர்லதா கிரிஜா

10

… சிகிச்சைக்குப் பின் மருத்துவ மனையிலிருந்து திரும்பியுள்ள சுமதி தன் வீட்டுக் கூடத்தில் ஒரு கட்டிலில் படுத்திருக்கிறாள். அவளைத் தாக்கியவர்கள் ஏற்படுத்திய எலும்பு முறிவால் அவளது இடக்கை ஒரு தூளிக் கட்டில் வைக்கப்பட்டுள்ளது. அடிபட்டதால் அவளது முழங்கால் ஒன்றிலும் கட்டுப் போடப்பட்டுள்ளது. உச்சந்தலையில் ஒரு பிளாஸ்திரி ஒட்டப்பட்டுள்ளது.
சிறு வானொலிப்பெட்டியில் சுமதி சினிமாப் பாடல்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறாள். ஜெயராமன் தம் அலுவலகத்துக்குப் போயிருக்கிறார். ஜானகி வழக்கம் போல் வீட்டு அலுவல்களைச் செய்துகொண்டிருக்கிறாள். கதவு தட்டப்படும் ஓசை கேட்டு ஜானகி வாசலுக்கு விரைகிறாள். அவள் கதவைத் திறந்ததும் சுந்தரி உள்ளே வருகிறாள்.
ஜானகி, புன்சிரிப்புடன், “அட! சுந்தரியா! என்ன ஆச்சரியம்! வா, வா. … சுமதி! யார் வந்திருப்பது என்று பார். உன் தோழி சுந்தரி!” என்கிறாள்.
விரைந்து சென்று தன் கைப்பையை மேஜை மீது வைத்துவிட்டு அவள் சுமதி படுத்துக்கொண்டிருக்கும் கட்டிலுக்குச் சென்று ஒரு நாற்காலியை இழுத்து அதனருகே போட்டுக்கொண்டு அதில் உட்காருகிறாள். அவளது வலக்கையை இழுத்துத் தன் கைகளுள் பொத்திக்கொண்டு, கண் கலங்கியவாறு, “ஏய்! என்ன இது, சுமதி! யார் இப்படி உன்னைத் தாக்கியது? யாரென்று கண்டு பிடிக்க முடிந்ததா? என்ன நடந்தது? எல்லாவற்றையும் விவரமாய்ச் சொல்லு!….” என்று கேட்கிறாள்.
ஜானகி அடுக்களைக்குள் நுழைகிறாள்.
“சொல்லுகிறேன், சுந்தரி! தொலைபேசியில் உனக்கு இன்று முழு விவரத்தையும் சொல்லத்தான் எண்ணியிருந்தேன். நேற்றுதான் நான் வீட்டுக்கு வந்தேன். … அம்மா! சுந்தரிக்குக் காப்பி கொண்டுவர முடியுமா?..”
“இதோ, வந்துகொண்டே இருக்கிறேன்,” என்று ஜானகி அடுக்களையிலிருந்து குரல் கொடுக்கிறாள்.
“விஷயம் தெரிந்துதான் வந்தாயா? எப்படி உனக்குத் தெரிந்தது?”
ஜானகி இருவரிடமும் காப்பிக் கோப்பைகளைக் கொடுக்கிறாள்.
“கூப்பிட்டால் நானே வந்து எடுத்துக்கொண்டிருந்திருப்பேனே!” என்கிற அவள் சுமதியிடம், “நான் ஊரில் இல்லை. என் மாமா ஊருக்குப் போயிருந்தேன். நான் திரும்பி வந்ததும் என் அப்பாதான் நீ தாக்கப்பட்ட செய்தி விடிவெள்ளி நாளிதழில் வந்திருந்தது பற்றிச் சொன்னார். …” என்கிறாள்.
இரண்டு பெண்களும் காப்பியைச் சுவைத்துப் பருகுகிறார்கள்.
“மதராஸ் காப்பிதான் சூப்பரோ சூப்பர்! என்ன வித்தை செய்கிறீர்கள், அம்மா?”
“பெரிய வித்தை ஒன்றுமில்லை, சுந்தரி. முதலில் இறக்கும் டிகாக்‌ஷனில் தயாரிக்கும் காப்பிதான் மிக நன்றாக இருக்கும். காப்பிவடிகட்டியில் பாதி அளவுக்குக் காப்பிப் பொடியைப் போட்டு விட்டு அதை நன்றாக அமுக்க வேண்டும். அது கால் பகுதியாக இறங்க வேண்டும். அதன் பின் அதன் மேல் கொதிக்கும் வெந்நீரை ஊற்ற வேண்டும். பொடியை அமுக்கி வைத்திருப்பதால் டிகாக்‌ஷன் மிக மெதுவாய்த்தான் இறங்கும். ஆனால் ‘திக்’ ஆக முழு மணத்தோடு இறங்கும். அப்படி இறங்கிய டிகாக்‌ஷனில் அதன் பின் கொஞ்ச நேரம் நன்றாய்க் கொதித்த பாலை ஊற்றிச் சர்க்கரையும் போடவேண்டும். அவ்வளவுதான்! இது ஒரு வித்தையா என்ன!….”
“நான் திரும்பிப் போனதும் அப்படியே செய்கிறேன், அம்மா. மிக்க நன்றி…சரி…என்ன நடந்தது, சுமதி?”
இருவரும் பேசத் தொடங்கவே, ஜானகி அடுக்களைக்குச் செல்லுகிறாள்.
“அன்று நான் வீடு திரும்பிக்கொண்டிருந்த போது – பேருந்து நிறுத்தத்தை அடைய இன்னும் சற்றே தொலைவு இருக்கையில் – என் அருகில் வந்து சட்டென்று கிறீச்சிட்டு நின்ற ஒரு காரிலிருந்து முகமூடி அணிந்த மூன்று பேர் விரைவாக இறங்கி என்னைச் சூழ்ந்துகொண்டார்கள். அந்தத் தெரு – உண்மையில் அது ஒரு சந்துதான் – ஆளரவமே இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்தது. இரண்டு பேர் என்னிரு கைகளையும் பற்றி முறுக்கினார்கள். மூன்றாம் ஆள் ஒரு தடிக் கம்பால் என் மீது அடித்தான்….”
“ஒ! அட, கடவுளே! ஆனால் உனக்குத்தான் கராத்தே தெரியுமே!”
“ஆனால் அவன் என்னைத் தாக்கியது என் பின்புறத்திலிருந்து! தவிர தாக்குதல் திடீரென்று நடந்தால் ஒன்றும் செய்ய முடியாது. நான் என்ன செய்ய? கிழே விழாமல் சமாளித்துக்கொள்ளவும், திருப்பி அவர்களைத் தாக்கவும் நான் முற்படுவதற்குள் அவன் இன்னோர் அடி அடித்துவிட்டான். அதுவும் உச்சந்தலையில்! நான் அரை மயக்கத்துடன் கீழே விழுந்துவிட்டேன். ஆனால் விழுந்துகொண்டிருந்த போதே, அவர்கள் மூவரும் தங்கள் காரில் அவசரமாய் ஏறி மறைந்து போனதை என்னால் கவனிக்க முடிந்தது. காரணம், இன்னொரு கார் திடீரன்று குறுக்குச் சந்தின் வழியாக அந்த இடத்துக்கு வந்ததுதான்!…”
“அந்த மூவரும் வந்த காரின் பதிவு எண்ணை நீ பார்க்கவில்லையா?”
“முடியவில்லை. ஏனெனில் அப்போது மாலை மங்கி இருட்டத் தொடங்கிவிட்டிருந்தது. எனக்கும் உணர்வு மங்கி நான் அரைக்கண் மூடிய நிலையில் விழுந்துவிட்டேன்….”
“அப்புறம்?”
“அந்த அரை மயக்கநிலையிலும் அங்கு வந்து நின்ற காரிலிருந்து இறங்கிய மூன்று மனிதர்கள் என்னைத் தூக்கித் தங்கள் காரின் பின்னிருக்கையில் போட்டதை என்னால் உணர முடிந்தது. மிக அருகில் இருந்த மருத்துவமனையில் என்னைச் சேர்த்த பின், என் கைப்பையில் இருந்த முகவரி அட்டையைப் பார்த்து எங்கள் வீட்டுத் தொலை பேசியின் இலக்கத்தைத் தெரிந்துகொண்டு என் அப்பாவுக்குத் தகவல் சொன்னார்கள். அம்மாவும் அப்பாவும் அலறிப் புடைத்துக்கொண்டு மிக விரைவில் ஒரு டாக்சியில் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார்கள்.”
“அவர்கள் வந்த போதும் நீ அரை மயக்க நிலையில்தான் இருந்தாயா?””
“இல்லை. நான் முழு மயக்கத்துக்குப் போய்விட்டிருந்தேன். ஆனால், அதிருஷ்டவசமாக அவர்கள் என்னைத் தாக்கியவர்கள் ஏறிச் சென்ற காரின் பதிவு எண்ணைக் கவனித்து அதைக் குறித்துக்கொண்டு விட்டார்கள். எனவே, என் நாளிதழ் ஆசிரியர் மூலம் என்னால் காவல் துறைக்கு ஆதாரத்துடன் புகார் செய்ய முடிந்தது…”
“துரதிருஷ்டமான அந்த நிலையிலும் இது ஒர் அதிருஷ்டம்தான்!”
“ஆமாம். குழந்தைத் தொழிலளிகளைப் பணியில் அமர்த்துவதாய் நான் எந்தச் சட்டமன்ற உறுப்பினர் பற்றிப் புகார்க் கட்டுரை எழுதினேனோ அந்த ஆளின் காராய்த்தான் அது இருக்கும் என்று நாங்கள் எல்லாரும் நினைத்தோம். நாளிதழின் ஆசிரியர்தான் என் சார்பில் புகார் செய்தார். ஆனால், மறு நாளே காவல்துறையின் உதவி ஆணையர்களில் ஒருவர் அந்தப் புகாரை விலக்கிக்கொள்ளும்படி கேட்டு என் ஆசிரியரோடு தொலைபேசினார். அதன் பின் என்னோடும் அவர் பேசினார். ஆனால் நான் மறுத்துவிட்டேன்.”
“அமைச்சர்கள் மட்டத்திலிருந்து அவருக்கு நெருக்கடி இருந்திருக்கும் என்பது வெளிப்படை!”
“அதேதான்! உண்மையில், அந்தக் காவல்துறை அலுவலரே வெட்கமே இல்லாமல் அப்படித்தான் சொன்னார்!”
“பாவம் காவல்துறை அலுவலர்கள்! அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் ஆட்டிப் படைக்கும் வெறும் கைப்பாவைகள் அவர்கள்! அவர்கள் கீழ்ப்படிய மறுத்தால் உடனே வேற்றூருக்கு மாற்றி விடுவார்கள். அல்லது அவர்கள் குடும்பத்துப் பெண்களோ குழந்தைகளோ பாலியல் முறையில் துன்புறுத்தப்படுவார்கள். அவர்களின் குழந்தைகள் கடத்தப்பட்டுக் கொலையும் கூடச் செய்யப்படும் அபாயம் உண்டு!”
“ஆமாம். நீ சொல்லுவது ஒரு வகையில் சரிதான். காவல்துறையினர் எல்லாரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால், இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது!”
“ஆனால், சுமதி, அதற்குப் பெரும்பாலான காவல்துறையினரேனும் மனச்சாட்சி, அச்சமின்மை, கையூட்டு வாங்காமை ஆகிய நேர்மையான தன்மைகள் உள்ளவர்களாக இருக்க வேண்டும்… அப்படி இருந்தால் இந்த அயோக்கியர்களால் என்ன செய்யமுடியும்? அரசியல்வாதிகளில் இருப்பது போலவே காவல் துறையினரிலும் முக்கால்வாசிப் பேர் அயோக்கியர்களாக இருக்கிறார்களே! ஆழ்ந்து ஆராயப் புகுந்தால், நம்மில் பலரும் – பொது மக்கள் உள்பட – மோசமானவர்களாய்த்தானே இருக்கிறார்கள்! எனவே தான் நம் அதிகாரிகளும் நமது தரத்தில் இருக்கிறார்கள்!”
“அதேதான், சுந்தரி. ஜார்ஜ் பெர்னார்ட் ஷா அன்றே சொல்லவில்லையா – நமது தரத்தில்தான் நம்மை ஆள்பவர்களும் இருப்பார்கள் என்று? இந்த அயோக்கிய அரசியல்வாதிகள் அனைவரும் நமது இன்றைய சமுதாயத்தின் ஒட்டுமொத்த சாரம்தான். என்ன செய்வது?”
“சரி. உன் வழக்கின் இப்போதைய நிலை என்ன? அதைச் சொல்லு.”
“நான் உதவிக் காவல்துறை ஆணையரைத் தொலைபேசியில் அழைத்துக் காவல்துறை அலுவலர்களில் பலரும் எத்தகைய கோழைகளாகவும், அரசியல்வாதிகளின் கைப்பொம்மைகளாகவும் இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தும் இன்னொரு கட்டுரையையும் எழுதப் போவதாய்த் தெரிவித்தேன். அவர், ‘அப்படியே செய்யுங்கள், அம்மா. இன்னும் அதிக வன்மையுடன் உங்கள் கட்டுரை இருக்கட்டும். அப்போதுதான் மக்களும் எங்கள் சிக்கல்களைப் புரிந்துகொள்ளுவார்கள்’ என்று கூறிவிட்டுச் சிரித்தார்!”
“அப்படியானால், இதற்கெல்லாம் என்னதான் தீர்வு? குற்றவாளிகளை எப்படித்தான் தண்டிப்பது?”
“அதன் பின் நான் நேஷனல் டிடெக்டிவ் செர்விசெஸ் எனும் தனியாரின் துப்பறியும் அமைப்போடு தொடர்புகொண்டு அவர்களிடம் விஷயத்தைச் சொன்னேன். அவர்கள் துப்பறிய ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.”
“அவர்கள் ஏதேனும் கண்டுபிடித்தார்களா?”
“உம். என்னைத் தாக்கியவர்கள் வந்த அந்தக் கார் எந்த அரசியல்வாதிக்கும் சொந்தமானதன்று. ரகுவீர் எனும் உள்ளூர்த் தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமானதாம். நான் தாக்கப்பட்டதன்பின் சுமார் மூன்று மணி நேரம் கழித்துத் தம் கார் காணாமல் போயிருப்பதாக அந்த ஆள் காவல்துறைக்குப் புகார் அனுப்பியுள்ளார். எனவே, அரசியல்வாதிகளால் நியமிக்கப்பட்ட அந்தப் போக்கிரிகள் அந்தக் காரைத் திருடியிருக்கிறார்கள் என்பது வெள்ளிடை மலை! … இரண்டு நாள்கள் கழித்து அந்தக் கார் மதராசுக்கு வெளியே ஓரிடத்தில் நின்றிருந்தது கண்டு பிடிக்கப்பட்டதாம். விஷயம் இத்தோடு நிற்கிறது….”
“அந்தத் துப்பறிவாளர் அந்தத் தொழிலதிபர் ரகுவீரோடு பேசினாரா?”
“உம். பேசினாராம். நேரிலும் சந்தித்தாராம். ஆனால் தமக்கு எந்த அரசியல்வாதியையும் தெரியாது என்றும், என் கட்டுரையைத் தாம் படிக்கவில்லை என்றும் அவர் சொன்னாராம். ஆனால், அந்தச் சட்டமன்ற உறுப்பினர்தான் இதைச் செய்தது என்பதை எவ்வாறு நிரூபிப்பது? எனவே எனது புகாரை நீக்கிக்கொள்ள நான் மறுத்துவிட்டதால், காவல்துறையில் இந்த வழக்கு இன்னும் நிலுவையில்தான் இருந்துவருகிறது.”
“பிரகாஷுக்கு இதெல்லாம் தெரியுமா?”
“தெரியாது. சொல்லவேண்டாமென்றுதான் சொல்லவில்லை. வீணாய்க் கவலைப்படுவானே என்பதால்தான். என் அப்பாவும் அதையேதான் சொன்னார்.”
“உனக்குக் கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறானல்லவா?”
“உம். ஆனால் எப்போதாவதுதான் பேசுகிறான். அடிக்கடி இல்லை.”
“உன் அம்மாவை எரிச்சல்படுத்த வேண்டாம் என்பதற்காகவா?””
“ஆமாமாம். அதேதான்!” என்று கூறியபின் சுமதி சிரிக்கிறாள்.
“இப்போது வலி எப்படி இருக்கிறது? தலைக்காயம் மோசமானதாக இருந்ததா?”
“கடவுளின் அருளால் அது ஆழமானதாக இல்லை. என் கைத் தூளியையும் இரண்டு-மூன்று நாள்களில் எடுத்துவிடுவார்களாம். முழங்காலிலும் கட்டுப் போட்டிருந்தாலும், அது மோசமான அடியாக இல்லை. கூடிய விரைவில் நான் முற்றும் சரியாகிவிடுவேன்…”
அப்போது கதவு தட்டப்படும் ஓசை கேட்கிறது. உடனே எழுந்து போய்க் கதவு திறக்கும் சுந்தரி வெளியே நின்றிருக்கும் பிரகாஷைப் பார்த்து வியப்படைகிறாள்.
“ஹேய், பிரகாஷ்! என்ன ஆச்சரியம்!”
”ஹாய், சுந்தரி! நானும் அதையேதான் சொல்ல இருந்தேன். நீ எங்கே இப்படி இங்கு வந்திருக்கிறாய்?”
காலணிகளைக் கழற்றிய பின் பிரகாஷ் சுந்தரியோடு உள்ளே போகிறான்.
“ஹேய். சுமதி! பிரகாஷ் வந்திருக்கிறான்!…”
உடலில் கட்டுகளுடன் கூடத்துக் கட்டிலில் படுத்திருக்கும் சுமதியைக் கண்டதும் பிரகாஷ் அதிர்ச்சி யடைகிறான். சுமதி புன்னகையுடன் தலையசைத்து அவனை வரவேற்கிறாள். அதிர்ச்சியில் இருக்கும் பிரகாஷ் பதிலுக்குப் புன்னகை செய்யாமல் அவளது கட்டிலுக்கு அருகில் இருக்கும் நாற்காலியில் அமர்கிறான். பின்னர் கட்டுகள் அற்ற அவளது வலக்கையை அவன் இலேசாய்த் தொடுகிறான். ஆனால், சுமதி உடனே தன் கையை இழுத்துக்கொள்ளுகிறாள்.
தாழ்ந்த குரலில், “வேண்டாம், பிரகாஷ். அம்மா இருக்கும் போது தயவு செய்து என்னைத் தொடாதே. பார்த்துவிட்டால் வம்பு. உடனே உன்னை விரட்டியடித்துவிடுவார்…. அதோ பார்! அடுக்களையிலிருந்து எட்டிப் பார்க்கிறார்….ஜாக்கிரதை!” என்று சுமதி அவனை எச்சரிக்கிறாள்.
அடுக்களை வாசற்படியில் நின்று கவனிக்கும் ஜானகியைப் பார்த்ததும் பிரகாஷ் எழுந்து நின்று, “குட் மார்னிங், அம்மா!” என்கிறான்.
பதிலுக்குக் கூட எதுவும் சொல்லாமல் ஜானகி அடுக்களைக்குள் சென்றுவிடுகிறாள். ஏமாற்றத்துடன் கீழுதட்டைப் பிதுக்கித் தோள்களையும் குலுக்கிக்கொள்ளும் பிரகாஷ் உட்கார்ந்துகொள்ளுகிறான். சுந்தரி இன்னொரு நாற்காலியை இழுத்துப்போட்டுக்கொண்டு அவர்கள் அருகே அமர்கிறாள்.
“உன் அம்மாவைப் பற்றி நாம் பிறகு பேசுவோம்…உனக்கு என்ன ஆயிற்று? அதைச் சொல்லு, முதலில்! ஏதேனும் விபத்தில் சிக்கிக்கொண்டாயா?”
“ஆமாம்.”
“எப்போது?”
“ஒரு வாரத்துக்கு முன்னால். …அது இருக்கட்டும். உன் அப்பா இங்கு வந்து சென்றது உனக்குத் தெரியுமா?”
“தெரிய வந்தது. அது பற்றிப் பேசத்தான் வந்திருக்கிறேன். … சுமதி! அவர் திடீரென்று இங்கே வந்திருக்கிறார். எனக்கு அவர் கிளம்பினதே தெரியாது. என்னை நம்புகிறாய்தானே?”
“நம்புகிறேன், பிரகாஷ்! … கொஞ்ச நேரத்துக்கு முன்னால்தான் சுந்தரியும் வந்தாள். உன் அப்பா வந்து போனது பற்றியெல்லாம் இனிமேல்தான் அவளுக்கு நான் சொல்லவேண்டும்… அதைப்பற்றி அவளுக்குச் சொல்லலாம்தானே?”
“தாராளமாக. சுந்தரியை நான் அன்னியளாய் நினைத்தால், அப்பாவின் வருகை பற்றிய பேச்சை அவள் முன்னால் எடுத்திருப்பேனா? இப்போது விவரமாய் எல்லாவற்றையும் சொல்லு. அப்பா சொன்னார்தான். அவர் கொஞ்சம் விந்தையான மனிதர். அவர் எதையும் ஒளிக்கக்கூடியவர் அல்லர்தான். இருந்தாலும், அன்று நீங்கள் பேசியதை யெல்லாம் உன் வாய்ப்படவும் நான் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அது ஒரு சரிபார்த்தல் என்று வைத்துக்கொள்ளேன் …”
அப்போது ஜானகி அங்கு வருகிறாள். பிரகாஷுக்கு அருகில் உள்ள ஒரு முக்காலியின் மீது காப்பிக் கோப்பையை ஓசையுடன் வைக்கிறாள். அவள் முகத்தில் சிரிப்பு இல்லை. எனினும் அதைப் பாராட்டாமல் பிரகாஷ் அவளை நோக்கிப் புன்னகை புரிகிறான். ஆனால் அவளோ பதிலுக்குக் கூடப் புன்னகை புரியாமல் நகர்ந்துவிடுகிறாள். பிரகாஷ் காப்பியைப் பருகுகிறான்.
“ஏன், பிரகாஷ்? நீ உன் அப்பாவின் பேச்சை நம்பவில்லையா?”
“அப்படி இல்லை. நீ என்ன சொல்லுகிறாய் என்பதையும் நான் கேட்க விரும்புகிறேன். அவர் மறதியால் எதையாவது சொல்ல விட்டிருக்கலாம்… அதனால்தான்…”
“சரி. சுருக்கமாய்ச் சொல்லுகிறேன். உன்னை மணந்துகொள்ளும் எண்ணத்தை நான் கைவிட்டால், பத்து லட்சம் இழப்பீடாய்த் தருவதாய் ஆசை காட்டினார். அதனால் நான் மிகவும் புண்பட்டுப் போனேன். என் அப்பாவும்தான். நான் அவரை விரட்டுவது போல் வாசல் பக்கம் கை காட்டினேன். ‘என்னை என்ன, விலைமகள் என்றா நினைத்தீர்கள்’ என்றும் கேட்டேன். அதன் பின் அவர் அந்தத் தொகையை இரண்டு மடங்கு ஆக்குவதாய் மேலும் ஆசை காட்டினார். அவரது இடத்தில் வேறு எவரேனும் இருந்திருந்தால், கராத்தே அறிந்தவளான நான் அவரை அடித்துக் கடாசி யிருந்திருப்பேன் என்றேன். அவர் பிரகாஷின் தந்தை எனும் ஒரே காரணத்தால் அப்படிச் செய்யாமல் இருந்தேன் என்றும் சொன்னேன். உடனே அவர் பெரிதாய்ச் சிரித்துவிட்டுக் கைதட்டினார். இரைந்த அந்தச் சிரிப்புக்கு என்ன அர்த்தம் என்பது எங்களுக்குப் புரியவில்லை. நாங்கள் திகைத்துப் போனோம். அதன் பின் அவர் அது எனக்கு அவர் வைத்த பரீட்சை என்றும் அதில் நான் தேறி விட்டதாகவும் கூறி என்னைப் பாராட்டினார். உனக்குச் சரி என்று சொன்னது நீ பணக்காரன் என்பதாலா என்று என்னைச் சோதித்தாராம்!… அதன் பின் அவர் புறப்பட்டுப் போனார்…”
“அவ்வளவுதானா?”
“இல்லை. இன்னும் இருக்கிறது. அவர் மறுபடியும் அன்று மாலையே வந்தார். மற்றும் ஒரு நிபந்தனையுடன்! நான் கிறிஸ்துவ மதத்துக்கு மாற வேண்டும் என்றார். நான் முடியாது என்று சொன்னேன்.”
பிரகாஷ், காலிக் காப்பிக்கோப்பையை முக்காலியில் வைத்துவிட்டு. “உனது நிலைப்பாடு சரியானதுதான். நல்லதும் கூட!” என்கிறான்.
“அதன் பின் என் அம்மா நான் உன்னை மணப்பதற்கு ஆட்சேபித்து வருவது பற்றிச் சொன்னேன். அவரது முழுச் சம்மதமும் கிடைத்த பிறகுதான் நான் பிரகாஷை மணப்பேன் என்றும் தெரிவித்தேன். எனவே நான் ஹிந்து முறைப்படி மணப்பது ஒன்றுதான் அவருக்கு நான் அளிக்கக்கூடிய ஒரே ஆறுதல் என்றும் சொன்னேன். மணமாகி அவருடைய மருமகள் ஆனதன் பிறகு மதமாற்றத்துக்குச் சம்மதிப்பேன் என்றும் திட்டவட்டமாக அறிவித்தேன்…”
“மிகவும் நியாயமான நிலைப்பாடு, சுமதி. என்னைப் பொறுத்த வரையில், கல்யாணத்துக்குப் பிறகும் நீ கிறிஸ்துவ மதத்துக்கு மாறவேண்டும் என்று நான் சொல்ல மாட்டேன். அது உன் சொந்த விருப்பம். நீயாகவே அப்படி முடிவு செய்தால், அது பற்றியும் எனக்குப் பரவாயில்லை. ஆனால், நானாக ஒரு போதும் மதம் மாறும்படி சொல்லவே மாட்டேன். அது ஒரு முட்டாள்தனமான எண்ணம்….அப்புறம்? அவர் அதற்குச் சம்மதித்துவிட்டுக் கிளம்பிவிட்டாரா?””
சுமதி, சிரித்துவிட்டு, “இல்லை! அவர் மேலும் மேலும் வாக்குவாதம் செய்தபடியே இருந்தார். ‘என் அம்மாவுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக நான் ஒன்றும் பிரகாஷை ஹிந்து மதத்துக்கு மாறச் சொல்ல வில்லையே!’ என்று நான் கேட்டேன்! ‘ஆகவே, நீங்களும் மத மாற்றத்துக்கு என்னை வற்புறுத்தக் கூடாது’ என்றேன்.”
பிரகாஷ் சிரித்துவிட்டுக் கைதட்டுகிறான். பின்னர், “அதற்கு அவர் என்ன சொன்னார்?” என்று ஆவலுடன் வினவுகிறான்.
உன் அப்பாவும் இரைந்து சிரித்துவிட்டு, நான் ஒரு கெட்டிக்காரப் பெண் என்று சான்றிதழ் கொடுத்த பின் கிளம்பிப் போனார். இதையெல்லாம் உனக்குத் தொலைபேசியில் தெரிவிக்க நான் விரும்பினேன். ஆனால் மறு நாளே நான் இந்த விபத்துக்கு ஆளானதால் முடியவில்லை….”
“இது எப்படி நேர்ந்தது, சுமதி?”
சுமதி நடந்ததை விவரிக்கிறாள்.
அவள் சொல்லி முடித்ததும் “கடவுளே! நான் தெரு விபத்து என்றல்லவா எண்ணினேன்! அப்புறம்?”
எழுந்துகொள்ளும் சுந்தரி, “சுமதி! நீ பேசிக்கொண்டிரு. நான் போய்க் குளிகத்துவிட்டு வருகிறேன். அதற்கு முன்னால் அடுக்களையில் எட்டிப் பார்த்து உன் அம்மாவுக்கு என் உதவி ஏதேனும் சமையல் வேலையில் தேவைப்படுமா என்று கேட்கிறேன்….” என்று சொல்லிவிட்டு அடுக்களைக்குப் போகிறாள்.
“அவர்கள் ஏன் இப்படி ஒரு பயங்கரத்தை உனக்குச் செய்ய வேண்டும், சுமதி?”
“விடி வெள்ளியில் நான் எழுதிய கட்டுரையைப் படித்தால், உனக்குப் புரியும். அதன் நகல் ஒன்றை உனக்கு அனுப்பி யிருந்தேனே? ஆனால் அதற்குப் பிறகு எனக்கு நீ எழுதிய கடிதத்தில் அதைப் பற்றி நீ ஒன்றுமே எழுதவில்லை…. அதன் பின் நான் உன்னோடு தொலைபேசிய போது அது பற்றிக் கேட்க மறந்துவிட்டேன்…”
தலைமாட்டு மேஜை மீதுள்ள அந்த இதழை எடுத்து அவள் அவனிடம் தருகிறாள். அவன் அதைப் படிக்கத் தொடங்குகிறான்.
jothigirija@live.com

Series Navigationஇரா. காமராசு கவிதைகள் — சில சிந்தனைகள் ‘ கணவனான போதும்… ‘ தொகுப்பை முன் வைத்து …
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *