வேர் மறந்த தளிர்கள் – 14,15,16

This entry is part 17 of 25 in the series 7 ஜூலை 2013

14 மனமாற்றம்

காலையில் எழுப்பினாலும் படுக்கையை விட்டு எளிதில் எழுந்திரிக்க மாட்டேன்கிறான்!
“என்னங்க……பார்த்திபன் இப்படிப் பண்றான்……நீங்கப்பாட்டுக்கு அவனை ஒன்னும் கேட்காம இருக்கிறீங்க?”
“அவன்,எங்க பேசறமாதிரி நடந்துக்கிறான்……?”
“அதற்காக……அவன் செய்யிறத் தப்ப கேட்காம இருந்திட முடியுமா….?”
“அவசரப்பட வேண்டாம் அம்பிகை, எதையும் பக்குவமாத்தான் கேட்கனும், கொஞ்சம் விட்டுதான் கொடுப்போமே!”
“நாளைக்கு ஏதும் பிரச்சனைனு வந்துட்டா இழப்பு நமக்குதான் என்பதை மறக்காம இருந்தா சரிங்க…..!”
“அம்பிகை, நீ எதுக்கும் பயப்படாதே…..! நடப்பதெல்லாம் நன்மைக்கேனு நினைச்சுக்க!”
          மாலையில்  கணவனும்  மனைவியும்  இருவரும் இரவு ஏழு மணிக்கு முன்பதாகவே  இல்லம் திரும்பி விடுகின்றனர். ஆனால்,தன் ஒரே மகன் பார்த்திபன் மட்டும் இன்னும் வீடு திரும்பாமல்   இருந்தது அம்பிகைக்கு  கவலையாக  இருந்தது. அதிலும்  காலையில்  கலக்கி வைத்திருந்த காப்பியும், எடுத்து வைத்திருந்த  ரொட்டியும் அப்படியே இருந்ததைப் பார்த்ததும் அவரதுக் கவலை மேலும் வலுத்தது!
           சில  எறும்புகள் ரொட்டி சுற்றப்பட்ட பிளாஸ்டிக் உறை மீது ஊர்ந்து கொண்டிருந்தன.சுறுசுறுப்புடன் அவை எதையோ தேடிப் பயணித்துக் கொண்டிருந்தன! மனச் சஞ்சலத்துடன் மேசை மீது  வைக்கப்பட்டிருந்த கிளாஸ்சை எடுத்துக் கழுவிச் சுத்தப்படுத்தி அதற்கான டிரேயில் ஒழுங்காக அடுக்கி வைக்கிறார்.ரொட்டியைப் பாதுகாப்பாக அதற்கான டப்பாவில் வைக்கிறார்.
          அந்த ரொட்டியை உண்பதற்கான நாள்  இன்னும்  சில தினங்கள் எஞ்சியுள்ளன என்பதை ரொட்டியைச் சுற்றியுள்ள உறையில் தெளிவாகக் குறிப்பிடப் பட்டிருந்தது ! மகன்  காலையில்  என்ன  சாப்பிட்டானோ….! என்ற கவலை  அம்பிகையின் உள்ளத்தை வருத்தியதால் மனம் ஒரு நிலையில்  இல்லை!
          வரவேற்பறையில் இருக்கும் குளிர்சாதனத்தைத்  தட்டி விடுகிறார் தினகரன். அன்றைய தினசரியைக் கையில் எடுத்துக் கொண்டு,
“ அம்பிகை  இன்றைக்கு என்ன சமையல்?” என்ற      கேள்வியோடு மனைவியின் முகத்தை ஏரிட்டுப் பார்க்கிறார்!
         அம்பிகையின்  கவனமெல்லாம் மகன் மீது படிந்துவிட்டதால்  கணவர் கேட்டதையும் கவனத்தில் கொள்ளாமல்  எங்கோ பார்த்துக் கொண்டிருக்கிறார்.
“அம்பிகை……!அம்பிகை……! என்று மீண்டும்  கணவர் அழைத்த போதுதான் சுய நினைவுக்குத்  திரும்புகிறார்!
“என்னங்க ……? என்ன…..என்ன…..கேட்டிங்க……. ?” தடுமாற்றமுடன்  கணவரைப் பார்க்கிறார்!
“சரிதான் …….. நீ எங்க  இருக்கிறே அம்பிகை …….?”
“ இல்லைங்க…..பார்த்திபனை நினைத்துக்  கொண்டிருந்ததால நீங்கள் கேட்டதைக்  கவனத்தில் கொள்ள முடியாமல்  போயிடுச்சி. மன்னிச்சிடுங்க !ஆமாம்……நீங்க என்ன  கேட்டிங்க…? மீண்டும்…..ஒருமுறை  சொல்லுங்க”   பரிதாபமாகக்  கேட்கிறார்.
        “இன்றைக்கு  என்ன  சமையல்  செய்யப் போற அம்பிகை  என்று கேட்டேன்” என்றார்  அழுத்தமுடன் தினகரன்.
“ பிரிட்ஜில்  நிறையக்காய்கறிகள்,  மீன், கோழி, இறைச்சி இன்னும் சமையலுக்குத் தேவையான எல்லாம்  தயாரா  இருக்குங்க, உங்களுக்கு  என்ன  வேணும்னு சொல்லுங்க உடனே சமைக்கிறேன்………!” என்று பதற்றமுடன்   பதில்    கூறுகிறார்  அம்பிகை!
            பசிக்கு மட்டும்  சாப்பிடும் . வழக்க முடைய  தினகரனுக்கு  எதைச் சமைக்க  வேண்டும்  என்று  மனைவிக்குக் கட்டளையிடும்  தகுதி  அவருக்கு  இல்லாததால், “என்ன மெனுன்னு கேட்டா எனக்கு என்ன தெரியும் அம்பிகை? பசி ருசி அறியாதுன்னு சொல்லுவாங்க.பசிக்கு எதைக்கொடுத்தாலும் சாப்பிட மட்டும்தான் எனக்குத் தெரியும் என்பதைத்தான் நன்றாய்த் தெரிந்து வைத்திருக்கும் நீ தர்மசங்டமான கேள்வியைக் கேட்டால் நான் என்ன பண்ண?
           “பிள்ளையை நினைச்சு நான் குழம்பிப் போயிருக்கிறேனு உங்களுக்குத் தெரியுது….அதைப் புரிந்து கொண்டு எனக்கு உதவக் கூடாதா?” கோபித்துக் கொள்கிறார் அம்பிகை.
         “ ஞான சூனியமா ஆண்கள்….சாப்பிடுவதோடு நின்றுவிடாமல் சமையலைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதை இப்போது உணர்திட்டேன். ம்…..இப்ப என்ன பண்றது? எதிர்காலத்தில் முயற்சி செய்றேன்! ” கவலையுடன் கூறுகிறார்.
                             15 மகன் திரும்பல
 “நான் இருக்கும் போது உங்களுக்கு அந்த முயற்சி வேண்டாம்,உங்களுக்கு என்ன பிடிக்கும் என்று கோடிக்காட்டினா, குழம்பிப்போயிருக்கும் எனக்குச் சட்டென்றுச் சமையலைச் செய்ய ஏதுவா இருக்கும் இல்லே…?”
          “பேசி…..நேரத்தை வீணாக்காம மளமளன்னு எதையாவது  சமை…..அம்பிகை  பசி வயிற்றைக்  கிள்ளுது…..!” சமையலில்  தனக்கு  இதுவரையில் எதுவும்  தெரியாது  என்ற சிதம்பர ரகசியத்தை அப்பட்டமாக ஒத்துக்கொண்ட  தினகரன்  மனைவியின்  முகத்தைப் பரிதாபமாகப் பார்க்கிறார்.களைப்புடன் வீடு திரும்பியிருக்கும் கணவர் முகத்தைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.
           “என்னங்க…..தேநீர் கலக்கித் தர்றேன். முதல்ல அதைக் குடிச்சிட்டுப் பேப்பரைப் படியுங்க, அரைமணி  நேரத்திலே  உங்களுக்குப்  பிடித்தச் சமையலைச் செஞ்சிடுறேன்!” நவீன மின்சார கேத்தலில் ஏற்கனவே கொதித்திருந்த சுடுநீரில் அம்பிகை  சில நிமிடத்தில் தேநீர்  கலக்கிக் கணவரிடம் கொடுக்கிறார்.
           இரவு மணி  ஏழு. இன்னும்  பார்த்திபன் வீடு திரும்பாமல் இருந்தான்.அம்பிகை  சமையல்  வேலைகளில்  மும்முரம்  காட்டினாலும் வாசலை நோக்கியே அவரது கவனம் முழுமையாக இருந்தது.காலையில்  வேலைக்குச் சென்ற  மகன்  இன்னும்  இல்லம்  திரும்பாமல்  இருந்ததை எண்ணி மனம் சஞ்சலம் அடைகிறார்.
           மாலை முதலே மழை பெய்வதற்காக மேகம் கருத்துக் கொண்டிருந்தது! வானத்தில் சூழ்ந்திருக்கும் கருமேகம் போல் அம்பிகையின் உள்ளத்திலும் கவலைக் கீற்றுகள் சூழத்தொடங்கின! ஏனோ…..இனம் புரியாதக் கவலையில் தோய்ந்து அவர் மனம் அமைதி கொள்ள மறுக்கிறது!
            அரை மணி நேரத்துக்குள் சமையல் ஆகிறது.சமைத்த  உணவுகளை  மேசை  மீது   எடுத்து  வைக்கிறார்.  மகன் இல்லாமல்  கணவர் மட்டும்  தனியாக  அமர்ந்து  உணவு  உண்பதைப் பார்ப்பதற்கு  மகிழ்ச்சியாக  இல்லை! மகனும்  சேர்ந்து  சாப்பிட்டால் சிறிய குடும்பம் எப்படி  அழகாக  இருக்கும்?
            இரவு மணி  எட்டாகிறது. அப்போதும்  மகன்  வீடு  வந்து சேரவில்லை. அம்பிகை மனம் என்னன்னவோ எதிர்மறை எண்ணங்களால் சிக்குண்டு தவிக்கிறார்.மாலை முதலே இடி இடித்துக் கொண்டிருந்த  வானம் இப்போது மழை மெதுவாகப் பெய்யத் தொடங்கியது.
            இரவு  ஒன்பதரை நெருங்கிய போது, மழையும்  வலுவாகப் பெய்யத் தொடங்கியது. ‘வானத்தைப் பார்த்து ஏங்கி நிற்கும் பயிரைப் போல்’ அம்பிகை  மகனின் வருகையை உறுதிச்  செய்ய  வாசலில்  முழுமையாகக்  கண்களையும்   கவனத்தையும் பதிக்கத் தொடங்கினார்.கைபேசியில் அவர் பலமுறைத் தொடர்புக் கொண்டும் மகனிடமிருந்து எந்தவிதமானத் தகவலும் இல்லாததால் மேலும் கலக்கமடைந்தார்.
              இரவு மணி பத்து.  இன்னும் மகன் வீடு திரும்பவில்லை! அவன்  வருவதற்கானத் தடயமும் ஏதுமில்லை! இடியும் மின்னலும் கூடிக் கனத்த மழையுடன் ‘சோ’  வென்று இசை சேர்த்துப் பொழியத்  தொடங்கியது! மகனுக்கு  என்ன  ஆச்சோ? என்று  கவலை  இடியாக உள்ளத்தை  ஊடுருவி  மனக்கலக்கத்தால்  விக்கித்து  நிற்கிறார்  அம்பிகை!
            மகனின் வருகைக்காக வழி மீது விழி வைத்து இரவெல்லாம் வாசலில் காத்துக்கொண்டிருக்கிறார்.எனினும்,மகன் மட்டும்இன்னும் வீடு திரும்பவே இல்லை!
           வெள்ளிக்கிழமை முன்னிரவு தொடங்கிய மழை மறுநாள் சனிக்கிழமை, பூமியை நையப் புடைக்க  வேண்டும் என்று வானம் எண்ணியதோ தெரியவில்லை  என்றைக்கும்  இல்லாதத் திருநாளாக  வானம்  சரமாரியாக  மழையைப் பெய்யச் செய்துப்  பூமித்தாயை  ஒரு கலக்குக்  கலக்கிக் கொண்டிருந்தது!
          காலை  கண் விழித்தது  முதல்  இரவு வரை உழைத்தப் பின் உடல்  அசதியால் மெய் மறந்து  மக்கள்  ஆழ்ந்த  உறக்கத்தில் இருந்தனர். ஊரே அடங்கி இருந்தது !
              இரவெல்லாம் தூங்காமல் கண்விழித்திருந்த, அம்பிகைக்கு வயிற்றில்  பாலை  வார்த்தது  போல், பார்த்திபன் கார் திடீரென  வாசலில்  வந்து  நிற்கிறது!  போன  உயிர் மீண்டது  போல், அம்பிகை அவசர அவசரமாக  வாசல் கதவைத் திறக்கிறார். காரிலிருந்து  பார்த்திபன்  மெதுவாக   வெளியே  வருகிறான்!
“பார்த்திபன்…….பார்த்திபன்!………! உனக்கு என்னப்பா ஆச்சு? இவ்வளவு  நேரம்  நீ……எங்கப்பா  போன…..?”  இடைவெளி  இல்லாமல் பதற்றமுடன் கேள்விகளை  அடுக்குகிறார்  தாயார்!
                         16நண்பர்கள்
             அம்மா பதற்ற மிகுதியால் எழுப்பிய அத்தனைக் கேள்விகளுக்கும்  பதில்  கூறாமல் தட்டுத் தடுமாறி  அவன்  தன் அறையை  நோக்கிச்  செல்கின்றான்! .அவனுடன் அருகில்  சென்ற  போது  பார்த்திபன்  மீது  மதுவாடை…….! தாயாரின் மூக்கைத் துளைத்தது!  ஒருகணம்  அவர் மூச்சு நின்றிவிடும்  போலாகிவிட்டது!
             மகனுக்குக்  குடிப்பழக்கம்  எப்படி வந்தது? ஒன்னே  ஒன்னு கண்ணே  கண்ணுன்னு  தோள் மீதும் , மார்பு மீதும்  போட்டுப் பொத்திப்  பொத்தி வளர்த்த  மகன் இப்படி ஒரு குடிகாரனாக  வந்து நிற்கிறானே என்று எண்ணிப்பார்க்கும் போது  அவரது  இதயமே  சுக்கு நூறாக நொருங்கிப்போனது!
          இவற்றையெல்லாம்  கவனித்துக் கொண்டிருந்த, தினகரனுக்குப்  பிரமை பிடித்தவர்  போல்,  இடிந்து  நிற்கிறார்! தனக்கு  இல்லாதப் பழக்கம்  தன் மகனுக்கு எப்படி வந்தது?  என்று மனதில்  தொக்கி  நின்ற கேள்விக்குப்  பதில்  காண முடியாமல்  வெளியில்  நனைந்து  நிற்கும்  தென்னை மரம்  போல, அறையில்  வாடிய  மனதுடன் தன்னை மறந்த நிலையில்  நீண்ட   நேரம்  நிற்கிறார்!
           தன்குடும்பம்  எந்த  திசையை  நோக்கிச்  செல்கிறது? செல்லும் பாதை   சரிதானா? இந்த ஊர்   மக்கள்  தன்னைப் பற்றி என்ன  நினைப்பார்கள்? யாரோ…..திட்டமிட்டுத் தன் குடும்பத்தை  அழிக்க  முற்பட்டுவிட்டார்களா?
            வளர்ந்துவிட்ட  பிள்ளையை  அதட்டி  மிரட்டி  வளர்ப்பது  தகுமா?  அதிலும்  படித்துப்  பட்டதாரியாக  நல்ல வேலையில்  பணியாற்றுபவன் . கைநிறையச் சம்பாதிப்பவன் . வீட்டுக்கு ஒரே பிள்ளை , பெற்றோர்  படித்தவர்கள்  பண்பு  நிறைந்தவர்கள்.
            நல்ல குடும்பத்தில்  பிறந்த பிள்ளை குடும்பத்தின்  பாரம்பரியத்தையும், பண்பாடுகளையும்  பிள்ளைக் குழி தோண்டிப் புதைத்துவிடுவானா? பிள்ளை மீது  வைத்திருந்த  அலாதியான  நம்பிக்கை இப்படிச் சிதறுண்டுப்போய்விட்டது…..! என்று எண்ணி அதிர்ச்சி  அடைகிறார் தினகரன்.
               வெளியில் தலைக்காட்ட   முடியாமல்  செய்துவிட்டானே  என்று  மனம் ஆத்திரம்  கொள்கிறார். சனிக்கிழமை, மறுநாள் ஓய்வு  என்பதால் , நண்பர்களோடு,சினிமா, நாடகம், ஆடல்  பாடல், என்று நிகழ்ச்சிகளுக்குச்  சென்று வீடு திரும்புவது, சற்று  கால தாமதமாகும்  என்பதெல்லாம்  சாதாரணமாக   நிகழும்  நிகழ்வுதான்  என்றாலும் இன்று, நேரம்  கழித்து  வந்தது  ஒரு புறமிருக்க , மது  அருந்தி  குடும்பத்திற்குப்  கெட்டப்  பெயரை  உண்டு  பண்ணிவிட்டானே  என்று  நினைக்க  நினைக்க அவருக்கு ஆத்திரம் ஆத்திரமாக  வந்தது!
            மறுநாள்   மகன் பத்து  மணிபோல்  படுக்கையை விட்டு எழுந்தான். எழுந்தவன்  காலைக் கடன்களை  முடித்துக் கொண்டு பசியாறுவதற்கு மேசைக்கு வந்தான். நேற்று நண்பர் ஒருவரிடம்  பிறந்த  நான்  விழாவுக்குச்  சென்றதாகவும்  நண்பர்கள் மதுவை வற்புறுத்திக் கொடுத்து விட்டதாகக் காரணம் சொன்னான்.
           முதல் தடவையாக  அப்பா சற்றுக்  கடுமையாகப்  பேசுகிறார்!
“பார்த்திபன் ……..இனி அத்தகைய  நண்பர்களோடுச்  சேரக் கூடாது.வேலை முடிந்தவுடன் வீட்டிற்கு நேரத்தோடு வந்து விடவேண்டும்! என்ன……. சொல்றது  விளங்குதா !” அப்பா ஆத்திரப் பட்டது அதுதான் முதல் முறை. அம்பிகைக்கூட கணவர் அப்படிப் பேசியது கண்டுப் பயந்து போகிறார்! “சரி அப்பா….. என்று  பார்த்திபன் அமைதியுடன் கூறுகிறான்.
           இறுக்கமான சூழலில் மூவரும் காலை  பசியாறுகிறார்கள்! எல்லாரது முகங்களும் எதையோ பரிகொடுத்ததுப் போல் காணப்படுகின்றன! குடும்பத்தில்ஒருவர் செய்யும் தவறு ஒட்டுமொத்தமாகக் குடும்பத்தின் பெயர் கெட்டுவிடும் அல்லவா?
           அப்பா கடுமையாகப் பேசிய பிறகு,பார்த்திபனின் போக்கில் மாற்றம் தெரிந்தது.இனி பிரச்னை ஏதும் எழாது என்ற நம்பிக்கைக்கு ஏற்படுகிறது.அம்பிகைக்கு இப்போதுதான் நிம்மதியாக இருந்தது!
           இப்போதெல்லாம்  அப்பா  அம்மா  மெச்சியப்  பிள்ளைப் போல பார்த்திபனுக்குத்  தான் உண்டு  தன் வேலை உண்டு என்று தனக்குள்ளே போட்டுக் கொண்ட கட்டுப்பாட்டினால்,யாதொருச் சிக்கலுமின்றி அவனது  காலம் ஓடியது.
           ஓய்வு நேரங்களில் லேப்டொப்பில் அமர்ந்து விடுவான். ‘பேஸ்புக்’ வழி நண்பர்களோடு தொடர்பு கொண்டு பேசி மகிழ்வான்.எப்போது பார்த்தாலும் அவன் அறையில் லேப்டொப்பைப் பயன் படுத்தியவாறு இருப்பான்.
     சில  வேளைகளில்  நண்பர்களின்  திருமணம்,பிறந்த நாள் விழா, போன்ற நிகழ்வுக்குச் சென்று வருவான்.நெருங்கிய  உறவு என்றால் குடும்பத்தோடு  நிகழ்ச்சிகளுக்குச்  சென்றுவருவோம்.  சில வேளைகளில் தனியாக நிகழ்வுகளுக்குச்  செல்ல  நேர்ந்தால் நிகழ்வு முடிந்தவுடனே வீட்டிற்குத் திரும்பி விடுவான். கண்டபடி நண்பர்களுடன் அரட்டை அடித்துக் கும்மாளம் போடும் நிலை அவனிடம் முற்றாக அற்றுப் போயிருந்தது!
            குடும்ப உறுப்பினர்களிடையே நிலவிய அன்னியோன்னியமான உறவினால் அப்பா அம்மா பிள்ளை ஆகிய மூவரிடையே அணுக்கமான  உறவு மீண்டும் வேரூன்றித் தழைத்து நின்றது! இப்போதெல்லாம் மகிழ்ச்சி குடும்பத்தில் தாண்டவமாடியது! காலையில் வேலைக்குச் செல்லும் முன்பாக மூவரும் ஒன்றாக அமர்ந்து பசியாறுவார்கள்.
           இயன்றவரையில் மூவரும் வேலை முடிந்தவுடன் விரைவாக வீடு திரும்பியவுடன் இரவு உணவை ஒன்றாகச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர்! இத்தகைய அருமையான சூழலைப் பல காலம் வீணாக்கிவிட்டோமே என்று எண்ணம் மூவரிடமும் இருந்திருக்க வேண்டும்.
உறவில் விரிசல் ஏற்படாமல் இருக்கக் கவனமுடன் பார்த்துக் கொள்கின்றனர்.
Series Navigationவால்ட் விட்மன் வசனக் கவிதை -31 என்னைப் பற்றிய பாடல் – 24 (Song of Myself) கூட்டத்தில் என் கூக்குரல் .. !குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 17
author

வே.ம.அருச்சுணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *