வைரமணிக் கதைகள் – 14 காபி குடிக்காத காதலன்

1
0 minutes, 30 seconds Read
This entry is part 20 of 25 in the series 3 மே 2015

 

“அவள் ஞாபகத்திற்காகக் குடிக்க ஆரம்பித்தேன்.”

 

சரக்கு அடுக்குவதற்காக மேலே ஜிங்க் ஷீட் போர்த்தி நீளக் கிடங்கு போல் கட்டப்பட்டிருந்த அந்தக் கிராமத்துக் கடை மாடியில் ராமகிருஷ்ணன் சொன்னான்.

 

நிலா வெளிச்சம் பெரிதாய் விரித்திருந்த பாயில், முழ உயரத்தில் ஒரு பச்சைப் பாட்டில், மினுமினுக்கின்ற இரண்டு எவர்சில்வர் டம்ளர்.

 

முறுமுறுவென்று ஓசையிடும் ஓர் உடைத்த கோலி சோடாப்புட்டி. ஒரு தட்டிலே வாணியம்பாடி கடையில் வாங்கிய காராபூந்தி.

 

இந்தப் பின்னணியில் அவன் சொன்னது அலங்காரமாகக் கொஞ்சம் ‘ட்ரமடிக்’காக இருந்தது.

 

ராமகிருஷ்ணன் என்னைச் சும்மா பார்க்க வந்திருக்கிறான். நானும் அவனும் பால்ய நண்பர்கள். அடிக்கடி அவன் கிராமத்துக்கு வருவான்.

 

நானும் டவுனுக்குப் போவேன். இந்தத் தடவை இடைவெளி நீண்டுவிட்டது. கோடையில். பி.எட். படிப்புக்காக நான் மைசூர் போய்விட்டேன்.

 

அவன் விஸ்கியைத் தன் டம்ளரில் நிரப்பிக் கொண்டு என்னைப் பார்த்தான்.

 

நான் குடிப்பதில்லை என்று அவனுக்கு நன்றாய்த் தெரியும். எனினும் ஒவ்வொரு முறையும் என் மனப்போக்கில் தளர்ச்சி ஏற்பட்டிருக்கிறதா, ஏற்படாதா என்று கோருவது போல், விஸ்கியை டம்ளரில் நிரப்பும் போதெல்லாம் அவன் என்னைப் பார்ப்பான்.

 

“எனக்கு வெறும் சோடா.”

 

“தெரியும்.”

 

“பின்னே ஏன் பார்த்தாய்?’ என்று கேட்கத் தோன்றியது, கேட்கவில்லை.

 

அவன் விஸ்கியில் சோடாவைக் கலந்தான். எனக்கு வெறும் சோடாவை ஊற்றினான். ஒரு ‘கல்ப்’ விழுங்கியதும் அவன் பேச்சு தொடர்ந்தது. சூடு பிடித்தது.

 

“குடிக்கும் போதெல்லாம் அவள் ஞாபகம்தான் வருகிறது. அவளுக்காகக் குடிக்கிறேன். ஏழெட்டு வருஷமாச்சு.”

 

“நீ குடிக்க ஆரம்பிச்சா?”

 

“ம். இல்லே. அவளைப் பார்த்து. நீ கேட்டதுக்கும் சேர்த்து.”

 

அவன் இரண்டாவது ‘கல்ப்’பில் டம்ளர் முழுவதையும் தீர்த்தான். முகம் சுளித்து நெற்றி நெறிந்தது. இவ்வளவு கஷ்டமாயிருந்தால் ஏன் குடிக்கிறான் என்று நினைத்தேன். ராமகிருஷ்ணன் மீது பரிதாபம் வந்தது.

 

“இது நல்ல சரக்கில்லே,” என்று அதிருப்தியோடு சொன்னான்.

 

“ஃபாரின் தானே?”

 

“ஆமாம். ஆனா ஸிரிஞ்ச் மூலமா ஒரிஜினலை எடுத்துட்டு மட்டத்தைக் கலந்துடறாங்க. பாஸ்டர்ட்ஸ்.”

 

அவன் காராபூந்தியை ஒரு கைப்பிடி அள்ளி வாயில் கொட்டிக் கொண்டான்.

 

கரகரவென்று ஏதோ ஒரு கசப்பான அனுபவத்தை வெறியோடு கடப்பவன் போன்று அவன் காணப்பட்டான்.

 

“நான் ஸ்கூல்லே படிக்கிறப்போ நீ அந்த லெண்டிங் லைப்ரரியிலே வேலை செஞ்சுக்கிட்டிருந்தியே. ஞாபகமிருக்கா?”

 

“சொல்லு.”

 

“அப்ப நீ என்னைக் கூப்பிடுவியே அந்தப் பெயர் ஞாபகமிருக்கா?”

 

“ம். பழைய பஞ்சாங்கம்.”

 

“ஏன் அப்படிக் கூப்பிட்டே?”

 

“இப்ப போய்க் கேட்டா?”

 

“ப்ளீஸ்.”

 

“அப்ப நீ காப்பி சாப்ட மாட்டே. டீ, சிகரெட், ஸைட், ஸெக்ஸ் புக்ஸ், வெற்றிலை, ஏன் மட்டன், இப்படி எந்த வம்பு தும்பும் உனக்கு இல்லே. அந்தத் தூய்மை எனக்கு அப்ப வேடிக்கையா இருந்தது. ஸோ, அப்படிக் கூப்பிட்டேன்.”

 

என் சோடாவில் நுரைக் குமிழ்கள் குற்றுயிராய்த் துடித்தன.

 

ராமகிருஷ்ணன் தன் இரண்டாவது “பெக்”கை ஊற்றினான்.

 

“பெண்கள் ஆழமானவர்கள்.”

 

சாதாரணமாகத் தோன்றும் அந்த வார்த்தையை ஒரு குற்றச்சாட்டு போல், திகிலூட்டுகின்ற ஆழம் கொடுத்து அவன் சொன்னான்.

 

“யு மீன் மாலினி?” என்றேன்.

 

“ஆமாம். குடிக்கும்போது அவள் ஞாபகம் வருது. ஆத்திரம் வந்துருது. அவளுக்காகக் குடிக்கிறேன். அவளையே குடிக்கிறேன்.”

 

காராபூந்தியின் கரமுர நொறுகல், மந்தைவெளியில் குலைத்த ஒரு நாய் ஓசையில் மங்கிக் கேட்டது.

 

“நீ அவகிட்டே நல்லாத்தானே பழகிட்டு இருந்தே? வாஸிட் எ லவ் அஃபேர்?”

 

“அது சாதாரண லவ் இல்லே. ஒர்ஷிப். வழிபாடு. மாலினியை உனக்குத் தெரியும். வர்ணிக்க வேண்டியதில்லை. சின்னச் சின்ன வார்த்தையாகக் கழுத்தைச் சாய்த்துச் சாய்த்து விட்டுக் கொண்டே அவள் பேசறப்ப அவ கண்களைப் பார்த்திருக்கிறாயா?”

 

மீண்டும் நான் காத்திருந்தேன். எரிச்சலாய் இருந்தது – காத்திருப்பதில் – ஒரு குடிகாரப் பிதற்றலை கேட்பதில்.

 

ஆனால் இது ராமகிருஷ்ணன். என் பிரியமான பரிவுள்ள டீ காப்பி சாப்பிடாதிருந்த ‘இன்னஸண்ட்’ ராம கிருஷ்ணன்.

 

“பொம்பிளை ஆழமானவ. நம்ப முடியாதவ. மாலினி பேசறப்ப நீ கவனிச்சதில்லே. அவள் கண்கள்ளே ஒரு பவர். காந்த சக்தி. தான் சொல்றது அத்தனையும் நெஜம். ஐ மீன் இட்.

இப்படி நமக்குள்ளே நுழைஞ்சு வந்து நம்மைப் பின் அப்பண்ற மாதிரி பேசுவா. அவளை மொதல்லே லைப்ரரியிலே தான் பாத்தேன். நான் எடுத்து வச்சிருந்த புத்தகத்தைப் பாத்துட்டு இதை எப்ப ரிடர்ன் பண்ணுவீங்கன்னு கேட்டா.“

 

“நீங்க படிக்கணுமான்னு கேட்டேன். எஸ்னு மெதுவாச் சிரிச்சுக்கிட்டே ஒரு ரிக்வெஸ்ட் மாதிரி சொன்னா. அப்பவே அதை அவளுக்கு கொடுத்திட்டேன்.”

 

ராமகிருஷ்ணன் இரண்டாவது ‘கல்ப்’ விழுங்கினான். மீண்டும் காராபூந்தி.

 

சவமாகியிருந்த என் சோடாவைக் குடிக்கத் தோன்றியது.

 

வேண்டாம். அப்புறம் ராமகிருஷ்ணனுக்கே அது தேவைப்படும்.

 

“அடிக்கடி கோயிலுக்குப் போவோம். சில்ட்ரன்ஸ் பார்க். சினிமா, கோட்டை இப்படி எங்கெங்கேயோ என்னென்னவோ பேசியிருக்கோம். ஸெக்ஸ் மொராலிடி. எதெதுவோ!”

 

திடீரென்று விஸ்கி புட்டியின் மீது கோபம் ஏற்பட்டது போல் ராமகிருஷ்ணன் அதன் கழுத்தைப் பிடித்துத் தூக்கி நச்சென்று ஓசை எழும் விதமாக அதைக் கீழே வைத்தான்.

 

“இத்தனைக்கும் ஒரு தடவைகூட அவளை நான் டச் பண்ணதில்லே. எத்தனையோ சந்தர்ப்பம் கெடைச்சிருக்கு. என்னமோ எனக்குத் தோணலே. நீ என்னை நம்புவே இல்லே?”

 

“ம்ம்…” என்று நான் ஆமோதித்தேன்.

 

“இதெல்லாம் இன்னைக்குப் பைத்தியக்காரத்தனமாகத் தோணுது. அன்னிக்கு அவகூட இருந்து பேசி அவ பார்க்கிறதை அனுபவிச்சா மட்டுமே ஏதோ ப்ளாரஸண்ட் வெளிச்சம் மாதிரி ஒரு நிறைவு இருந்தது. அப்பத்தான் நான் அதிகமாகக் கவிதை எழுதினேன்.”

 

என் மூளையில் ஏனோ கிறுக்குத் தோன்றியது. கிண்டலாகக் கேட்டேன். “காதல் கவிதைகளா?”

 

“மடையா!” என்று கத்தினான். அவனைப் புண்படுத்தியதற்காக வருத்தம் ஏற்பட்டது.

 

“சாரி… ஜஸ்ட் ஃபார் ஃபன்.”

 

“உன் ஃபன்னும் நீயும். கவிதைன்னாலே காதல் தானேடா.”

 

பளிச்சென்று ஆழமாகத் தாக்குவது போல் ஒரு புதிய அர்த்தம் வழங்குவது போல் அவன் சொன்னான்.

 

“ப்ரொஸீட்,” என்றேன்.

 

“எங்களிடையே இருந்த உறவு என்னவென்று திட்டவட்டமாகச் சொல்ல முடியாது.

 

“அது காதல்தானா? காதல் மாதிரியா? ஸெக்ஸ் கவர்ச்சி இருந்தது உண்மை.

 

“அதைவிட மேலாக எங்கள் ரெண்டு பேர் மனசிலேயும் பொறந்த நாள் தொட்டு இருந்த ஒரு பள்ளம், இல்லே, ஒரு காலியிடம். அது. ஃபில் அப் ஆன உணர்ச்சிதான் ரொம்ப.”

 

எனக்குக் கொட்டாவி வந்தது.

 

மனிதர்கள் பேசுவதில், காதலியைப் பற்றிய இடம் வரும் போதெல்லாம் அதிகமாகப் பிதற்றுகிறார்கள் என்பது என் அனுபவம்.

 

“போர் அடிக்கிறேனா?”

 

“நோ. நாட் அட் ஆல்… சொல்லு,”

 

“செங்கத்துக்கு என் ஃபிரெண்ட் கல்யாணத்துக்கு ஒருமுறை போனேன். கல்யாணப் பொண்ணு மாலினிக்கு உறவாம். அவளும் வந்திருந்தா.சத்திரத்திலே இடமில்லே. ராத்திரி தூங்கணும். ஃப்ரெண்டு ஒரு வீட்டு மாடியிலேயே ஒரு ரூம் ஏற்பாடு பண்ணியிருந்தான்.மாலினியையும் அவளுடைய சொந்தக்காரர்களையும் கூட்டிக்கிட்டு அந்த ரூமுக்குப் போனேன். அவங்களை அறையிலேயே விட்டுட்டு நான் மாடி வராந்தாவிலே படுத்துட்டேன்.”

 

ராமகிருஷ்ணன் விஸ்கியை டம்ளரில் நிரப்பினான்.“சோடா தீர்ந்து போச்சோ?”

 

“இந்தா.” என்று சவமான சோடா நிரம்பிய டம்ளரை நீட்டினேன்.

 

“பன்னிரெண்டு மணி இருக்கும். யாரோ தொட்ட மாதிரி இருந்தது. விழிச்சேன். மாலினி நின்னா!

 

“நிலா வெளிச்சம். ரூமிலே இருந்து மூணு நாலு மாவு மில் ஓடற குறட்டைச் சத்தம். என்னன்னு கேட்டேன். குறட்டை ஓசையிலே தூக்கம் வரலைன்னா. என்ன பண்ணுவோம்னேன்.

 

“பேசிக்கிட்டு இருப்போம்ன்னு சொன்னா – இவங்க தப்பா நெனைச்சுக்கப் போறாங்கன்னு தயங்கினேன்.

 

“அந்த மாடியிலே வராந்தாவுக்கு வெளியே விசாலமான மொட்டை மாடி. கொட்டகை போட்டுப் பெரிய கல்யாண பந்தி நடத்தலாம். அங்கே மூலையில் போய் உட்கார்ந்து பேசுவோம். இவங்க விடற குறட்டையிலே எத்தனை மணிக்கு எழுவாங்கன்னு சொல்ல முடியாதுன்னா.”

 

மீண்டும் அவன் விஸ்கி பாட்டிலை உயர்த்தி நக்கென்று வைத்தான்.

 

“நான்சென்ஸ். எனக்கு ஏன் அந்தப் புத்தி? நோ அவள்தான் என்னைத் தூண்டினாள். தூக்கக் கலக்கமான மை கரைஞ்சு கலைஞ்ச கண்ணு, பின்னலை அவுத்துக் கோடாலி முடிச்சா அவ போட்டிருந்தது.

 

“ஐ ஃபெல்ட் ஸெக்ஸ் இன் ஆல் ஆஃப் தெம். என்னமோ தோணி அவளைத் தொட்டேன். அதை எதிர்க்காமே பேசிக்கிட்டிருந்தா. காத்து. நல்லா சொகமான காத்து. அவ முந்தானை வெலகிச்சு.

 

“அவ கண்ணைப் பார்த்தேன். அதிலே என்னா போதை தெரியுமா? மறுபடியும் அவ மொழங்கையைத் தொட்டேன். கவனிக்காமே பேசிட்டே இருந்தாள். என்னை மீறி அவ இடுப்பை அணைச்சு அவளை இறுகத் தழுவி உணர்ச்சி வசப்பட்டு ஒரு முத்தம் கொடுத்தேன்.

 

“என்னை உதறி எறிஞ்சுட்டு பளாரென்று என் காது ஙொய்ணு கத்தறா மாதிரி ஓங்கி ஒரு அறைவிட்டா.

 

“நான் அதை எதிர்பார்க்கலே. மாலினி, மாலினின்னேன். ஜாக்கிரதைன்னு கத்தினா. ‘நீ தொட்டா அதுக்கு நான் ஈல்டு ஆயிடுவேன்னு பாத்தியோ?

 

“எல்லா ஆம்பிளைக்கும் ஒரே மூஞ்சிதான். என்ன வேஷம் போட்டாலும் இப்படித் திடீர்ன்னு கலைஞ்சு ஒரு சுய ரூபம் வெளிப்பட்டுப் போகுது’ன்னு கத்தினா.ரெண்டு பேரும் ஒண்ணும் பேசாம அஞ்சு நிமிஷம் அங்கியே ஒக்காந்திருந்தோம்.அற்புதமான ஒரு கண்ணாடிப் பாத்திரம் விழுந்து நொறுங்கிட்ட மாதிரி எனக்குள்ளே ஒரே சூன்யமா இருந்துச்சு. அப்புறமாக அவ விர்ருன்னு உள்ளே போய்ட்டா…”

 

ராமகிருஷ்ணன் நிறுத்திவிட்டு விஸ்கி புட்டியிலிருந்து இன்னும் ஒரு பெக் ஊற்றிக் கொண்டான்.

 

“அப்ப நான் ரொம்ப வருத்தப்பட்டேன். அது வேஸ்ட் அவ ஒரு ஃபில்த். என்ன பண்ணினாள்னுதான் ஒனக்கும் தெரியுமே!

 

“ஒரு கார் மெக்கானிக்கோட ஓடிப் போய்ட்டா. என்கிட்ட மகா பத்தினி மாதிரி பேசிட்டு! சாதாரண ஒரு கார் மெக்கானிக்.  அவன் ஒரு வுமனைசர்… ட்ரங்கர்ட், பிளாட்பாரம். அவனோட ஓடிப் போயிட்டா… ஓ…” என்று கையை வானவெளியை நோக்கி விரித்தான் ராமகிருஷ்ணன்.

 

“அவளுக்காகத் தான் குடிக்க ஆரம்பிச்சேன்.”

 

அவன் அழப் போகிறான் என்று எனக்குப் புரிந்தது. பார்க்கக் கண்றாவியான காட்சிகளில் அதுதான் முதன்மையானது. குடித்துவிட்டு அழுவது.

 

நான் அவசரமாக முந்தினேன்.

 

“அழ ஆரம்பிக்காதே ராமகிருஷ்ணன்! நான் சொல்லப் போவது உனக்கு ஒரு ஷாக்.”

 

“மே யுவர் ஷாக் கோடு டெவில்ஸ்.”

 

“நான் மாலினியைச் சந்தித்தேன்.”

 

“என்ன?”

 

“மைசூரிலே. பி.எட் படிக்க வந்தா. நீயும் நானும் ப்ரெண்ட்ஸுன்னு அவளுக்குத் தெரியாது.“காஷுவலாப் பேசிட்டே காண்டீனுக்குப் போனோம். தனக்குக் காப்பி வேணாம்ன்னு சொல்லிட்டா. ரொம்ப வற்புறுத்தியும் வேணாம்னுட்டா.ஏன்னு கேட்டேன் காப்பி, டீ கூடச் சாப்பிடாத நண்பர் ஒருத்தர் – ராமகிருஷ்ணன்னு பேர். அவரோட ஞாபகத்துக்காக அதை விட்டுட்டேன்னா… உன்னை அவ எவ்வளவு மதிக்கிறா தெரியுமா?”

 

மூன்று நிமிஷம் ஒரு மௌனம்.

 

“டேய்.. நீ பொய் சொல்றே.”

 

“இடியட். நான் ஏன் பொய் சொல்லணும்? எனக்கு என்ன லாபம்?”

 

“நெஜம்மாவா… ஓ மை ஏஞ்சல்…”

 

குடித்துவிட்டு ராமகிருஷ்ணனால் எப்படி அழாதிருக்க முடியும் ?

 

அழத் தொடங்கினான்.

 

++++++++++++++++++++++

வைரமணிக் கதைகள்

[வையவன் ]

முதற் பதிப்பு : 2012

 

பக்கங்கள்:500

விலை:ரூ. 500

 

 

கிடைக்குமிடம்: தாரிணி பதிப்பகம்

4 A, ரம்யா ப்ளாட்ஸ்

32/79, காந்தி நகர் 4வது பிரதான சாலை

அடையார், சென்னை-20

மொபைல்:  9940120341

Series Navigationநான் யாழினி ஐ.ஏ.எஸ் [நாவல்] அத்தியாயம் -4நாடக விமர்சனம் வாட்ஸ் அப் வாசு
author

வையவன்

Similar Posts

Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    ஒரு அருமையான கதையை குடி போதையில் சொல்லும் விதம் அருமை. வாழ்த்துகள் வையவன் அவர்களே…அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

Leave a Reply to Dr.G.Johnson Cancel reply

Your email address will not be published. Required fields are marked *