வைரமணிக் கதைகள் -5 இடிதாங்கி

1
0 minutes, 39 seconds Read
This entry is part 10 of 15 in the series 1 மார்ச் 2015

 

கடையை மூடிப் பூட்டை ஆட்டிப் பார்த்து விட்டுச் சாவியை சொக்கேசம் பிள்ளையிடம் ஒப்படைக்கும்போது தான் வானத்தில் முதலாவது இடி முழக்கம் கேட்டது.

 

துரைசாமி முதலியார் அண்ணாந்து பார்த்தார். மப்பும் மந்தாரமுமாக எந்த நேரத்திலும் வானம் பொத்துக் கொள்ளலாம் என்று பயமுறுத்திற்று.

 

முதலாளி சொக்கேசம் பிள்ளை மேற்கே போக வேண்டும். குமாஸ்தா துரைசாமி முதலியார் கிழக்கே போக வேண்டும். வீடு அந்தத் திசையில்தான்.

 

ஆரணி கடைத் தெருவில் எல்லாக் கடைகளும் பூட்டிவிட்டாலும் கடைசியாக அணையும் விளக்கு சொக்கேசம் பிள்ளையின் ‘மீனாட்சி ஜவுளி மாளிகை’யுடையதுதான்.

 

இரவு மணி பத்தானாலும் சரி, பனிரெண்டானாலும் சரி, இதுதான் நடைமுறை!  கடை மூடியானதும் முதலாளியும் குமாஸ்தாவும் இரண்டு நிமிஷம் விடைபெற்றுக் கொள்வது போல நடுவீதியில் நிற்பார்கள்.

 

‘காலையிலே சரக்கு வந்திடுச்சான்னு லாரி ஷெட்லே போய் ‘கன்ஃபர்ம்’ பண்ணிக்குங்க. பாங்குக்குப் பணம் கட்டி வாங்கிடலாம்.”

 

“துர்வாசலு நாயுடு ஐட்டத்துக்கு இன்னிக்கு ஏதாவது அட்ஜஸ்ட் பண்ணணும்.”

 

“பிள்ளையார் கோவில் அபிஷேகத்துக்கு ஏற்பாடு பண்ணிடணும்.”

 

இப்படி ஏதாவது கடை சம்பந்தமாகவோ, குடும்ப விஷயமாகவோ பேசி, துரைசாமி முதலியாரின் அன்றைய ஊழியத்திற்கு முத்தாய்ப்பு வைத்துவிட்டு, சொக்கேசம் பிள்ளை மேற்கே புறப்படுவார். இப்படியே இருபது வருஷம் ஓடியிருக்கிறது.

 

இன்றைக்கு அவர்கள் ஒன்றும் பேசாமல் நின்றார்கள்.

 

பளிச்சென்று கண் பூத்து விடுவது போல் ஒரு பெரிய மின்னல். அவர்களை, வீதியை, இனங் காட்டுவது போல் ஒரு வெளிச்சம்.

 

சொக்கேசம் பிள்ளைக்கு பாரிச உடம்பு. நாற்பதின் வரம்பைத் தொடுகிற வயசு. முகத்திலும் உடம்பிலும் ஐம்பது காட்டுகிற மூப்பு. போகம், கவலை என்று எல்லாம் மிதமிஞ்சியதால் ஓர் அகால முதுமை.

 

துரைசாமி முதலியாருக்குப் போன மார்கழியோடு அறுபது கழிந்து விட்டது. முகத்தில் நாற்பதுதான். முதன்முதலாக மீனாட்சி ஜவுளி மாளிகையில் குமாஸ்தாவாக அடியெடுத்து வைத்த போது இருந்த அதே முகக்களை. ஒரு ஜவுளிக் கடை குமாஸ்தாவாகவே எஞ்சிய வாழ்நாளைக் கழித்து விடுவது என்று ஒரு சர்வ நிச்சயத்திற்கு வந்துவிடுவதால் மட்டும் இப்படி ஒரு மார்க்கண்டேய தேஜஸ் வந்துவிடாது.

 

முதலியார் ‘இட்டமுடன் என் தலையில் இன்னபடி என்று எழுதிய சிவன் சாகவில்லை’ என்று நெஞ்சுக்கு ஒரு நீதி வாக்கியம் சொல்லி. கடைப் பலகைகளுக்குள் ஓர் உலகத்தைச் சிருஷ்டித்துக் கொள்ளும் வல்லமை சித்திக்கப் பெற்றிருந்தார்.

 

பெரிய குடும்பம், பிள்ளை குட்டி. பிக்கல் பிடுங்கல் எல்லாம் உண்டுதான். அததுக்கு ஓர் எல்லை என்று ‘முட்ட முட்டப் பஞ்சமேயானாலும் பாரம் அவன் தலையில்’ என்று பளுவை சிவன் தலையில் ஏற்றிவிட முடிந்த தெம்பில் முதலியார் நாற்பதிலேயே ‘ப்ரீஸ்’ ஆகிவிட்ட முகக்களை பெற்றார்.

 

இருவரும் மின்னல் வெளிச்சத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டபோது தொடர்ந்தது இரண்டாவது இடி. குலை நடுங்குகிற ஓசை.

 

முதலாளி என்னவோ சொல்லப் போகிறார் என்று முதலியார் எதிர்பார்த்தார். சொக்கேசம் பிள்ளைக்கு என்னவோ சொல்ல வேண்டும் என்று குடைச்சல். எப்படிச் சொல்வது என்றுதான் விளங்காமல் மௌனமாக நின்றார்.

 

“குடை கொண்டு வரலீங்களா?” என்று மட்டும் கேட்டார்.

 

“இல்லே. பெரிய பெண்ணு இன்னிக்கு வெயில்லே ஆஸ்பத்திரிக்குப் போகறேன்னு கேட்டது. விட்டுட்டு வந்துட்டேன்.”

 

“நான் வண்டியிலேயே போயிடுவேன். நீங்க போறதுக்குள்ளே மழை வந்துடும் போல இருக்கே!  கொண்டு போய் விட்டுடட்டுமா?”

 

“இல்லே வேணாம். நான் போய்க்கறேன்” என்று வானத்தை அண்ணாந்து பார்த்துவிட்டுச் சொன்னார் முதலியார். வழியில் ஒதுங்கக் கட்டிடங்கள் உள்ள தைரியம்.

 

“அப்ப…” என்று விடைபெறுவதற்காக முதலியார் இழுத்த போதுதான் பிள்ளை விஷயத்திற்கு வந்தார்.

 

“நாளைக்குக் கடை சாவி வாங்கப் பையனை அனுப்ப வேண்டாம்.”

 

முதலியார் துணுக்குற்றுப் பார்த்தார். “கடை இல்லே?”

 

முதலியார் முகத்தில் கேள்விக்குறி.

 

“நாளைக்கு ஜப்திக்கு வர்றாங்க. தெரியுமில்லே?”

 

“ரத்னம் சொன்னான்.”

 

“வந்து, இருக்கறத்தை அள்ளிவிட்டுப் போவட்டும்! தொண்ணூத்தி மூணாயிரம் வட்டி… காம்பவுண்ட் இண்ட்ரஸ்ட் வேற போட்டுக்கிட்டிருக்கான். கட்டவா முடியும்?”

 

முதலியார் பேச்சற்று விட்டார்.

 

“சும்மா கடையைத் தொறந்து வச்சு ஈ ஓட்டிட்டிருப்பானேன்?”

 

“பாக்கியாவது வசூலாகுமில்லே!”

 

“ஹூம். பெரிய வசூல்! பார்த்துக்கிட்டுத் தானே இருக்கீங்க.”

 

மூன்றாவது இடி கேட்டது. முதலியாரின் கண் கட்டிடத்திற்கு மேல் வைத்திருந்த இடிதாங்கியின் மீது பழக்க தோஷத்தால் பாய்ந்து திரும்பியது.

 

“மாச வாடகைக்கும், கரெண்ட் பில்லுக்கும் கூட வர்ற பாக்கி வசூல் கட்டி வரல்லே. அப்புறம் கடை தொறந்து வச்சு என்ன புண்ணியம்?”

 

“தைரியத்தை விட்டுடலாமா?”

 

“ஹாங்… என்ன தைரியம்! எல்லாம் பார்த்தாச்சு. அதெல்லாம் ஒங்க காலம் மொய்லியாரே!”

 

முதலியார் தேற்றுவதா தேற்றிக் கொள்வதா என்று இப்போது முளைத்த புதிய பளுவை சிவன் தலைக்குப் பற்றெழுத யோசித்தார்.

 

“வாங்கின கடனுக்குப் பயந்து தலையில் முக்காடு போட்டு மறைஞ்ச காலம் போச்சு. இப்ப காலரைத் தூக்கி விட்டுட்டு ‘கடந்தானே பிள்ளை… தரலாம். மாட்டேன்னா சொல்றேன்னு. சந்திரிகா ஸில்க் ஹவுஸுக்கு கண் எதிர்க்கப் போறான்! பார்த்துக்கிட்டுதானே இருக்கீங்க?”

 

முதலியாருக்குத் தேற்றிக் கொள்ள ஒன்றுமில்லை. தேற்றுவிக்கத்தான் வேண்டும்.

 

“கடையை மூடிட்டா பொளுது எப்படிப் போகும்?” முதலியார் உனக்கு என்று முன்னிலை ஒருமையைத் தவிர்த்துக் கொண்டு கேட்டார்.

 

ஒரு காலத்தில் எஸ்.வி. நகரத்தில் முதலியார் நடத்திய கடையில் இவர் மாதிரி குமாஸ்தா வாக முதலியாரிடம் ஊழியம் பார்த்தவர்தான் சொக்கேசம் பிள்ளை.

 

என்ன இருந்தாலும் இந்த நிமிஷம் வரை முதலாளி. அதனால் கடைப்படியை முதலில் மிதித்ததுமே மேற்கொண்ட மரியாதை மிச்சமிருந்தது.

 

“பொளுது” என்று முனகினார் பிள்ளை. உடம்பு நடுங்கியது.

 

“போகிற மாதிரி போவட்டும்.”

 

“ஒண்ணு சொல்லலாமா?” முதலியார் கேட்டார்.

 

“என்ன?”

 

“நமச்சிவாயம் பிள்ளைக்குப் பாரிச வாயுவாம் சந்தை ஜவுளிக்கு வண்டி ஓட்டிப் போக முடியாம நின்னுட்டாரு…”

 

“அதனாலே…”

 

“வர்ற திங்கள் வண்டி எடுத்துக்கிட்டு நான பொறப்படறேன்.”

 

உத்தரவு கேட்கிறாரோ?

 

பிள்ளை, “சரி! செய்யுங்கோ! நான் என்ன சொல்லட்டும்?” என்றார்.

 

“அதுக்கில்லே!” முதலியார் இழுத்தாற் போல் நிறுத்தினார்.

 

“சொல்லுங்க.”

 

“கூடவந்தா பொளுது போகும். பழையபடி பிக்கப் பண்ணிக்கக் காலம் வந்தாப் பார்த்துக்கிறது.”

 

முதலாளிப் பிள்ளைக்கு குமாஸ்தா முதலியார் வேலை வாய்ப்புக் காட்டினார்.

 

பழைய வேலைதான். எஸ்.வி. நகரம் கடை ஆரம்பிக்கு முன் வண்டி கட்டிக் கொண்டு சந்தை சந்தையாக முதலியார் முதலாளியாகவும் பிள்ளை குமாஸ்தாவாகவும் திரிந்து, பெட்ரோமாக்ஸ் விளக்கு வெளிச்சத்தில் துணி விற்ற சில்லறைகளையும் நோட்டுக்களையும் எண்ணிப் பையில் முடிந்த பழைய வேலை.

 

சொக்கேசம் பிள்ளையிடம் முதலியார் தவிர வேறு யாரும் கேட்டிருக்க முடியாது அதை.

 

“அது முடியும்னு தோணலீங்க!”

 

பதில் சொல்லிக் கொண்டே பிள்ளை, ‘மீனாட்சி ஜவுளி மாளிகை’ என்று பெயர் எழுதிய கடைப் பலகையைப் பார்த்தார்.

 

இப்போது வற்புறுத்த வேண்டாம் என்று முதலியாருக்கும் பட்டது.

 

“ஞாயித்துக் கெழமை நான் வீட்டுக்கு வர்றேன்!”

 

“ஆமாமா… வாங்க. நான் ஒங்க கணக்கைப் பார்த்து ரூபா ஸெட்டில் பண்ணிடறேன்’ என்று சொல்லிவிட்டுக் கடை ஓரம் நிறுத்தியிருந்த மொபெட் பெட்டியில் சாவியைப் போட்டுவிட்டு அதை ஸ்டார்ட் செய்தார் பிள்ளை.

 

மொபெட் ஓசை மங்கித் தேய்ந்து மூன்றாவது இடி ஒலி கேட்டது. முதலியாருக்கு மழை பயம் வரவில்லை. திரும்பி நிதானமாக மூடியிருந்த கடை வாசலைப் பார்த்தார். இருபது வருஷம். ஓட்டமாக ஓடிய காலம்.

 

ம்ஹூம் என்று ஒரு பெருமூச்சு எழுந்தது. மாட்டுக்குப் பழகிய ஒரு செக்கு வட்டம் போல் அந்தக் கடை வாசல் திண்ணை, பலகை, பூட்டு எல்லாம் ஒரு பழக்க தோஷத்தில் பாசமாய்ப் பிடித்திழுத்தன.

 

இனிமேல் மறுபடியும் சந்தை வண்டி ஏற வேண்டும். மூட்டையைக் கட்டி, கூடாரத் துணியைக் கட்டி, வண்டிக்காரனை விரட்டி, மாடுகளை அதட்டி ஒரு பழைய மேடைக்குத் திரும்ப வேண்டும்

.

‘அதனாலென்ன, ஒரு தரம் பார்த்தாச்சு. இன்னொரு தரம் பார்த்தாப் போவுது. குடிக்கிற கஞ்சி கூடினா என்ன, குறைஞ்சா என்ன? நடக்கிறபடி நடக்கட்டும்’ என்று வடகோடு உயர்ந்தென்ன, தாழ்ந்தென்ன என்ற சித்த புருஷர் பாவனையில் நினைவில் வந்து விழுகிற பாரத்தை விச்ராந்தியாகச் சிவன் தலையில் ஏற்றி விட்டு நடந்தார் முதலியார்.

 

“ஆனாலும் பிள்ளை…” என்று மனத்தில் கேள்வி ஒரு கொக்கி போடாமலில்லை.

 

‘இருக்கிற காலத்திலே இப்படி ஆடியிருக்க வேண்டாம். இது ஜவுளி வியாபாரம் தானே! துணி கிழியற மாதிரி ஒரு நாள் கிழிஞ்சுத்தான் போவும். உஷாரா இருந்தாலே போய்விடும். பிடி விட்டு ரூட் மாறினா எப்படி நிக்கும்?’

 

முதலியார் கீழ்ப்பாய்ச்சிக் கட்டிய காவியேறிய வேஷ்டியும், முழங்கை வரை ஒரு காமராஜ் ஆப்பாரம் சட்டையுமாக நடக்கும் போது, வாடிக்கைக்காரர்களுக்கு கடையில், தான் தானாக எடுத்துப் போடுகிற துணிகள் மாதிரி நினைவுகள் அடுக்கின.

 

ஒரு கிடுகிடு பாதாளத்திலிருந்து பாவும் தறியுமாக வேகு வேகென்று ஓடிப் புறப்பட்ட வாழ்வு. அப்புறம் ஒரு சிறு மேடு. மறுபடியும் பள்ளம். மீண்டும் ஊச்சென்று கோபுர உயரத்திற்கு ஏறிய எஸ்.வி. நகரம் ஜவுளிக் கடை.

 

அப்போதே கூட இருந்தவர்தானே பிள்ளை! மீசை முளைக்காத பையனாக, ரங்கராட்டினம் போல் எத்தனையோ கடை ஏறியதையும் எத்தனையோ கடை தாழ்ந்ததையும் பார்த்தவர் தானே! எப்படித் தன்னை மறந்துவிட முடிகிறது?

 

சந்து திரும்பியபோது முதலியார் தம் மனப் போக்கை நினைத்துச் சிரித்துக் கொண்டார்.

 

‘அதான் காசோட குணம்! அது சேரச் சேர ஆளும் புத்தியும் மாறல்லேன்னா அது என்ன காசு! அதுல என்ன நியாயம்?’

 

‘இப்ப மறுபடியும் சந்தை வண்டிக்கு வாடான்னா வந்துடுவாரோ…”

 

சொக்கேசம் பிள்ளை என்கிற தன் குமாஸ்தாவிடமே தாம் குமாஸ்தாவாக வந்து பணியாற்ற முதலியார் ஒப்புக் கொண்ட மூலகாரணம், இப்போது மின்வெட்டிற்று.

 

‘கடையை மூடப் போறதைப் பத்தி கடைசி நிமிஷத்திலே எங்கிட்ட சொன்னாரே! மீனாட்சி கிட்டே சொல்லிட்டாரோ?’

 

மீனாட்சியை நினைக்கும் போதுதான் முதலியாருக்கு அவருடைய நிர்ச்சிந்தை, நிர்விசாரம் எல்லாம் ஒதுங்கிப் போய் நேச பாசம், பிரியம் என்று மனிதப் பிடிப்புகள் ஞாபகம் வரும்.

 

எஸ்.வி. நகரத்தில் முதலியாரின் கடை முறிகிற சமயத்தில் மீனாட்சிதான் வீடு தேடி வந்து விவரம் கேட்டாள்.

 

“பெரியப்பா! (மீனாட்சி முதலியாரைப் பார்த்த முதல் நாளிலேயே அவர் பெரியப்பாவாய்ப் போனார்.) வீட்டிலே கடை தொடங்கறாங்க.”

 

“கேள்விப்பட்டேம்மா… ரொம்ப சந்தோஷம்!”

 

“நீங்களும் கடை மூடறதாச் சொன்னாங்க.”

 

“தெய்வ சித்தம்.”

 

சற்று நேர மௌனம்.

 

“அவுங்களுக்கு அவ்வளவா விவரம் போதாது. வயசும் சின்னது. அனுபவமும் இல்லே.”

 

“என்ன பண்ணட்டும்?”

 

“கூட நீங்க போய் இருக்கணும்! கடையை கவனிச்சுக்கணும்!”

 

இவர் மௌனம் சாதித்தார்.

 

“அது சரிப்பட்டு வருமா கொழந்தே?”

 

“ஏன்?”

 

“அடேய் சொக்கேசான்னு கூப்பிட்ட நாக்கு அடங்கணுமே! சம்பளம் எண்ணிக் குடுத்த குமாஸ்தாகிட்டே சம்பளம் வாங்க கை நீளுமாம்மா?”

 

“நீங்க கைநீட்டி சம்பளம் வாங்க வேண்டாம். நான் சொல்லி, வீட்டுக்கு அனுப்பிடறேன். நாக்கு அடங்காட்டா என்ன? உரிமை இருக்கில்லே. எப்படி வேணும்னாலும் கூப்பிடுங்க.”

 

அப்போதும் முதலியார் தயங்கினார்.

 

“பெரியப்பா… ஒங்களை விட்டா எனக்கு வேற யாரையும் நம்பத் தோணலே. இல்லேன்னா எதுக்குக் கடை தொறக்கணும்?

 

“சரிம்மா… நான் வர்றேன்.”

 

படியேறி பேரேட்டைப் பிரித்து முதல் போணிக்குத் துணி கிழித்துக் கொடுத்ததுமே.

 

“சொக்கேசா பில் போடு…” என்று வாய் வந்தது. அடக்கிக் கொண்டார். மீனாட்சியின் முத்து உதிரும் புன்னகை, இருபது வருஷத்திற்கும் அவர் நாவை அடக்கியே போட்டு விட்டது.

 

நினைக்கிற போதும், யாரிடமாவது பேசுகிற போதும் கூட அவர் இவர் என்று சொக்கேசன், சொக்கேசம் பிள்ளையாவதற்கு முன்பே பழக்கமாகி விட்டது.

 

“இவர் மீனாட்சியிடம் விஷயத்தைச் சொல்லியிருப்பாரோ?”

 

ஞாயிற்றுக்கிழமை வீட்டிற்குப் போனால் ‘பெரியப்பா ஒங்களைத்தானே நான் மலை போல் நம்பினேன்’ என்று அவள் கேட்கிற நிலை வந்துவிடும்.

 

என்ன சொல்ல…?

 

“இது ஜவுளி வியாபாரம்மா! ஏறும், எறங்கிடும். போய்ட்டே இருக்க வேண்டியதுதான். எறங்கிட்டோமேன்னு உட்கார்ந்தா படுத்துடும்” இதுதான் சொல்ல வேண்டும். இவ்வளவுதான் சொல்ல முடியும்.

 

சொக்கேசம் பிள்ளையின் பலவீனங்களுக்குத் தார்க்குச்சி போட்டு மடக்கி மடக்கியும் காசு அவரைக் கண் மூடியாக்கிய பிறகு என்ன செய்வது?

 

விட்ட இடத்திலிருந்து தொடங்க வேண்டியதுதான்.

 

அனுபவம்தான் கைமுதல். பாடம் தான் கொள்முதல்!

 

இடிகள் முழங்கிக் கொண்டிருந்தன. முதலியார் கடை மேலிருந்த இடிதாங்கியை நினைத்து நடந்தார்.

 

அவர் வீட்டிற்குள் நுழைந்த பிறகுதான் மழை தொடங்கியது.

 

ஞாயிற்றுக்கிழமை பிள்ளை வீட்டிற்குள் நுழைந்தார் முதலியார்.

 

கோட்டை மாதிரி இரும்புக் கம்பி வைத்த கதவு. மொஸைக் இழைத்த திண்ணை, நிகுநிகு வென்று பாலிஷ் மின்னிய கம்பங்கள். உள்ளே நிசப்தம். ஏற்கெனவே உள்ள, பிள்ளை குட்டி இல்லாத நிசப்தத்தோடு, கடை முறிந்து ஜப்தி நடந்த நிசப்தம்.

 

“மீனாட்சி.”

 

“வர்றேன் பெரியப்பா”! எங்கோ தொலைதூரத்திலிருந்து குரல் வந்தது.

 

சோகமோ துக்கமோ திரண்டு வந்து நிற்கப் போவது போல ஓர் உள் நடுக்கத்தோடு முதலியார் மீனாட்சியை எதிர்பார்த்தார்.

 

ஆனால் அவள் புன்னகையோடுதான் வந்து நின்றாள்.

 

கொஞ்சம் நேரம் அவளைப் பார்த்தார்.

 

எப்போது வந்து அவளைப் பார்த்தாலும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல மனத்தில் ஒரு பாசம் சுரக்கும்…

 

செல்வம், சந்துஷ்டி, பாக்கியம், மங்களம் என்று கொஞ்சம் கொஞ்சம் சேர்ந்து கண் நிரம்ப, மனசு நிரம்ப, மதுரை மீனாட்சி கோயிலில் அவள் கொலுவில் நிற்கிற மாதிரி ஒரு பூரிப்பு வரும். இன்று ஏதோ குறைந்தது.

 

“பிள்ளை இருக்காராம்மா?”

 

அவள் ஒரு வருத்தப் புன்னகை செய்துவிட்டு, ஒரு காகிதத் துண்டை நீட்டினாள்.

 

“மீனாட்சிக்கு… நான் வடக்கே போகிறேன். தேடுவதில் அர்த்தமில்லை. கிடைத்தாலும் இப்போது ஆரணிக்குத் திரும்ப மாட்டேன். கடன்களை, உள்ள சொத்தைக் கொண்டு நேர் செய்தாகி விட்டது.

 

பெரியப்பா பழையபடி சந்தை வண்டிக்குக் கூப்பிட்டார். அவர் மனசு எனக்கு இல்லை. நான் கோழை. அந்தஸ்துக்கு அதிகம் பழகிவிட்டேன். அவரிடம் என்னை மன்னிக்கச் சொல்லவும். அவர் கணக்கைப் பார்த்து சம்பளம் ஒரு காகிதத்தில் கட்டி வைத்திருக்கிறேன். சேர்ப்பிக்கவும்.

 

உன் ஜீவனத்திற்கு வீட்டை வாடகைக்கு விட்டுக் கொள்ளவும். மனசு முறிந்து உட்கார்ந் திருந்தால் பைத்தியக்காரத்தனமான யோசனை எல்லாம் வருகிறது. வருத்தப்பட வேண்டாம்.

 

இப்படிக்கு சொக்கேசன்.”

 

படித்து முடித்துவிட்டு நிமிர்ந்தார் முதலியார்.

 

“இப்பவும் ஒங்களைத்தான் பெரியப்பா நம்பிக்கிட்டிருக்கேன்!” என்று சிரித்தாள். பாதி அழுகை மறைந்த வேதனைச் சிரிப்பு.

 

சம்பந்தமில்லாமல் முதலியாருக்கு ஜவுளிக் கடைக்கு மேல் பொருத்தப்பட்டிருந்த இடி தாங்கியின் ஞாபகம் வந்தது.

 

மீனாட்சி உள்ளே போய் கடைச்சாவியைக் கொண்டு வந்தாள்.

 

“நாளைக்கு கடையைத் திறங்க பெரியப்பா!”

 

அவர் அவளை நிமிர்ந்து பார்த்தார்.

 

“அவரால தாங்க முடியலே. போய்ட்டாரு! நீங்க போய்க் கடை திறங்க. நான் கடைக்கு வர்றேன்” என்றாள் மீனாட்சி.

 

 

——————————————————————–

வைரமணிக் கதைகள்

[வையவன் ]

முதற் பதிப்பு : 2012

 

பக்கங்கள்:500

விலை:ரூ. 500

 

 

கிடைக்குமிடம்: தாரிணி பதிப்பகம்

4 A, ரம்யா ப்ளாட்ஸ்

32/79, காந்தி நகர் 4வது பிரதான சாலை

அடையார், சென்னை-20

மொபைல்:  99401 20341

Series Navigationவெட்கச் செடியும் சன்யாசி மரமும்தப்பிக்கவே முடியாது
author

வையவன்

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *