ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-37

This entry is part 1 of 22 in the series 30 மார்ச் 2014

அத்தியாயம்-27

போருக்குப் பிந்தைய அரசு.

ஒரு வழியாக குருக்ஷேத்திரப் போர் என்னும் நீண்ட பயணத்தை நாம் கடந்து வந்து விட்டோம். இப்பொழுது நமது பயணம் மேடு பள்ளங்களற்றப் பாதையில் பயணிக்கும். ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றி இனி குறிப்பிடப்படுவதெல்லாம் அவர் ஒரு களங்கமற்றவர்: தூய்மையானவர் என்பதாகும். அவருடைய நற்குணங்களும்,புண்ணிய கீர்த்திகளும் போற்றப்பட்டு அவர் ஒரு தெய்வ நிலைக்கு உயர்த்தப் படுகிறார்.

போர் முடிந்ததும் மேன்மைமிகு அதி புத்திசாலியான யுதிஷ்டிர மகராஜா மேலும் ஒரு புத்திசாலித்தனமான முடிவை எடுக்கிறார். அர்ஜுனனிடம் தமது உறவினர்களை எல்லாம் போரிட்டுக் கொன்றதற்காக தான்  மிகவும் வேதனையும், அவமானமும் அடைவதாகவும் எனவே காட்டிற்கு சென்று சில காலம் பிச்சை எடுத்து வாழப் போவதாகவும் கூறுகிறார். அர்ஜுனன் மிகவும் எரிச்சலுருகிறான்.  விழுப்புண்கள் தாங்கியபடி தான் எதிரிகளை வெற்றி கொண்டதை சிறிதும் பாராட்டாமல் இப்படி ஒன்றுக்கும் உதவாத வேதாந்தி போல  யுதிஷ்டிரர் பேசுவதற்கு அர்ஜுனன் வேதனைப் படுகிறான். எல்லாவற்றையும் உதறி விட்டுக் காட்டுக்குச் செல்லும் யோசனையை முற்றிலும் வெறுக்கிறான். பீமன்,நகுல சகதேவர்கள் மற்றும் பாஞ்சாலி போன்றோர் அவர் முடிவினை மறுத்து யுதிஷ்டிரரைத் தடுத்தாலும் அவர் தன் முடிவில் மாறாமல் இருக்கிறார். ரிஷிகளான வியாசரும், நாரதரும் மற்றும் அனைத்து முக்கிய  அன்பர்களும் யுதிஷ்டிரனின் மனதை மாற்ற எடுக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன. ஸ்ரீகிருஷ்ணர் ஒருவர்தான் அவருடன் வாதாடி அவர் மனதை மாற்றுகிறார். வெற்றியின் பயன் அதனை அனுபவிப்பதுதான்  என்கிறார். இதன் பிறகே ஒரு வெற்றி வாகை சூடிய மன்னன் போல யுதிஷ்டிரர்  ஹஸ்தினாபுரம் திரும்புகிறார்.

ஸ்ரீகிருஷ்ணர் அவரை மன்னனாக மகுடம் சூட்டி அரியணையில் அமர வைக்கிறார். யுதிஷ்டிரர் கிருஷ்ணருக்குப் புகழ் மாலை சூட்டி அவரை வணங்குகிறார். ஸ்ரீகிருஷ்ணர் வயதில் யுதிஷ்டிரரைக் காட்டிலும் சிறியவர். வயதில் முதிர்ந்த ஒருவர் இளையோரை வணங்குதல் நடைமுறையில் இல்லாத ஒன்று. இப்பொழுது வணங்கியதைப் போல அவர் இதற்கு முன்பு ஸ்ரீகிருஷ்ணரை வணங்கியதில்லை.

அந்தச் சமயம் குருவம்சத்தின் பிதாமகரான பீஷ்மர் அம்புப் படுக்கையில் தனது மரண வேதனையைப் பொறுத்துக் கொண்டு சூரியன் உத்தராயணத்தில் பிரவேசிக்கும் காலத்திற்காகக் காத்திருக்கிறார். அவரைப் பார்க்க ஸ்ரீகிருஷ்ணர் பாண்டவர்களுடன் செல்கிறார். வழியில் யுதிஷ்டிரர் ஸ்ரீ கிருஷ்ணரிடம் பரசுராமனின் கதையைக் கூறுமாறு ஸ்ரீகிருஷ்ணரைப் பணிக்க அவரும் சொல்கிறார். அவர்கள் வருவதைப் பார்த்து பீஷ்மரும்,  அவர் அம்புப் படுக்கைக்கு அருகில் இருக்கும் ரிஷிகளும் ஸ்ரீகிருஷ்ணரை துதி செய்கின்றனர். ஸ்ரீகிருஷ்ணர் அம்புப் படுக்கையின் அருகில் செல்கிறார்.

ஸ்ரீகிருஷ்ணர் பின்னர் யுதிஷ்டிரரிடம் பீஷ்மரிடமிருந்து பாடம் கேட்டுக் கொள்ளுமாறு கட்டளையிடுகிறார். ஸ்ரீகிருஷ்ணரின் விருப்பம் பீஷ்மர் அறிந்து வைத்துள்ள தர்மங்கள் எல்லாம் அவருடன் மடிந்து விடக் கூடாது என்பதாகும். அம்புப் படுக்கையின் அருகில் சென்று பீஷ்மரிடம் தான் அறிந்த தர்மங்களை யுதிஷ்டிரருக்கு உபதேசம் செய்யுமாறுக் கேட்டுக் கொள்கிறார். அதற்கு பீஷ்மர் , “ ஓ! ஜனார்தனரே ! நீரே சர்வ உலகங்களின் சாச்வதமான ஆத்மாவாக இருகிறீர். ஆனால்  நேரிடையாக யுதிஷ்டிரனுக்கு தர்மோபதேசம் செய்யாத காரணம் என்ன? நீரே யுதிஷ்டிரருக்கு உபதேசம் செய்யத் தகுதியானவர். நானோ அம்புப் படுக்கையில் வலியுடன் படுத்திருக்கிறேன். என் மனம் நிலை கொள்ளாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் என்னால் எவ்வாறு யுதிஷ்டிரருக்கு உபதேசம் செய்ய முடியும்? “ என்கிறார். ஸ்ரீ கிருஷ்ணர் அதற்கு “பிதாமகரே! உமக்கு நான் ஒரு வரம் அளிக்கிறேன். அதன்மூலம் உன் வலியும் வேதனையும் அகன்று நீர் ஒரு இளைஞனைப் போல் உணர்வீர். உம்முடைய பழைய புத்திகூர்மையும், முக்காலங்களை உணரும் தன்மையும் உம்மை வந்தடையும் “ என்கிறார்.

ஸ்ரீகிருஷ்ணர் சொன்ன மறுகணமே பீஷ்மருக்கு அத்தகைய சக்திகள் வந்து சேர்கின்றன. இருப்பினும் அவர் தர்மோபதேசம் செய்யாமல் காத்திருக்கிறார். “ வாசுதேவரே! ஏன் நீரே யுதிஷ்டிரனுக்கு தர்மோபதேசம் செய்யக் கூடாது ? “ என்று கேட்கிறார். அதற்கு ஸ்ரீகிருஷ்ணர் “ கீர்த்திக்கும், சிரேசுக்கும் நானே ஆதிமூலம் என்று தெரிந்து கொள்ளும். உத்தமமும், அதமும் கொண்ட அனைத்து உயிரனங்களும் என்னால் உண்டாக்கப்படுகின்றன. சந்திரனின் கிரணங்கள் குளிர்ச்சியானவை என்பதை ஒருவன் சொல்லக் கேட்டு இந்த உலகில் எவராவது ஆச்சரியப் படுவார்களா என்ன? அதே போல் உலகம் முழுவதும் எனக்குக் கீர்த்தி உள்ளது என்பதனைக் கேட்டு எவர் ஆச்சரியப் படப் போகிறார்கள்? ஆகையால் ஏற்கனவே பிரகாசிக்கும் அறிவுபடைத்த உனக்கு மேலும் பிரகாசிக்கும் அறிவை அளிக்கப் போகிறேன்  “ என்கிறார். பீஷ்மரும் உற்சாகத்துடன் நான்கு வருணங்களுக்கும் உண்டான தர்ம நுணுக்கங்களை தருமனுக்கு எடுத்துரைக்கிறார். சாந்தி பர்வம் இங்கே நிறைவுறுகிறது.

இந்தப் பர்வத்தில் மகாபாரதத்தின் மூன்று தளங்களும் முன் நிறுத்தப் படுகின்றன. இதன் முதல் தளம் வெறும் புறவடிவில் உள்ளது. தர்மம் குறித்த விளக்கங்களைப் பல்வேறு ஆசிரியர்கள் அவரவர் அறிவுக்கு எட்டிய வண்ணம் விளக்கம் கொடுப்பதே அடுத்த இரண்டு தளங்களாகும். இந்தப் பர்வத்தில் எதனைப் பற்றிக் கூறப்பட்டுள்ளதோ அதில் உள்ள ஒரு முக்கியமான விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். என்னதான் இங்கே மறைபொருளாகக் கூறப் பட்டிருந்தாலும் இதிலிருந்து நமக்குப் புரிவது என்னவென்றால் ஒரு நேர்மை தவறாத மன்னனுக்கு மணிமுடி சூட்டினாலும்  கூட அதன் மூலம் ஒரு தர்ம ராஜ்ஜியத்தை ஸ்தாபிக்க முடியாது.  ஏன் எனில் அந்த நேர்மையான மன்னனின்  சந்ததியினர்  அவனைப் போலவே ஒரு நேர்மையான ஆட்சியைக் கொடுப்பார்கள் என்று சொல்ல முடியாது. நல்ல மனம் படைத்த யுதிஷ்டிரர் வயதான காரணத்தால் அதிக நாள் உயிருடன் இருக்க முடியாது. அவனுடைய சந்ததியினர் அவரைப் போலவே நேர்மையான ஆட்சியைத் தருவார்கள் என்று நம்ப முடியாது. எனவே ஒரு நேர்மையான மன்னனுக்கு முடி சூட்டுவதோடு நின்று விடாமல் ஒரு நல்லாட்சிக்கான கோட்பாடுகளைத் தத்துவங்களாகத் தொகுத்துக் கொடுத்துவிட்டால் பின்வரும் மன்னர்களும் அந்தத் தத்துவக் கோட்பாடுகளுக்கு ஏற்றவாறு ஆட்சி புரிவது எளிதாகி விடும். ஒரு ராஜ்ஜியத்தை நிறுவப் போரில் வெற்றி பெறுவது முதல் படிதான். ஆனால் அதற்குப் பின்பு ஒரு நேர்மையான அரசை நிறுவதுதான் முக்கியமானது. ஸ்ரீ கிருஷ்ணரும் அப்படி ஒரு தத்துவக் கோட்பாட்டை வடிவமைக்க பீஷ்மரைத் தேர்ந்தெடுக்கிறார். இதை அவர் செய்வதற்கு வலுவான காரணங்கள் உள்ளன. “ நீர் குருவம்சத்தின் பிதாமகர் மட்டுமல்லர். நன்னடத்தை உள்ளவர். ஆழமான ஞானம் உடையவர். ஒரு மன்னனுக்குரிய கடமைகளையும், பொறுப்புகளையும் நன்கு அறிந்தவர். அதே போல பல்வேறு பதவிகளில் உள்ளவர்களின் கடமைகளையும், பொறுப்புகளையும் நன்கறிந்தவர். “ என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர். எனவேதான் பீஷ்மர் ஒரு நல்ல ஆட்சிக்கு தேவையான கோட்பாடுகளைத் தொகுத்துத் தருகிறார்.

பீஷ்மர் இறந்த பிறகு யுதிஷ்டிரர் மீண்டும் சோகக் கடலில் மூழ்குகிறார். அவர் மீண்டும் காட்டிற்குச் செல்லத் தயாராகிறார்.  இந்த முறை ஸ்ரீகிருஷ்ணர் இந்த விஷயத்திற்காக யுதிஷ்டிரரிடம் நேரிடையாகவே மோதுகிறார். மற்ற எவரையும் விட யுதிஷ்டிரரின் பிரச்சினையின் மூலம் எதுவென்று ஸ்ரீகிருஷ்ணருக்கு மட்டும்தான் தெரியும். யுதிஷ்டிரரை வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது அவருடைய தான் என்ற அகங்காரம் . தனது குழம்பிய அகங்காரத்தின் காரணமாக அவர் தடுமாறிய நிலையில் இருந்தார். நுட்பமான அகம் சார்ந்த பிரச்சனைகளான “ நான் குற்றம்   புரிந்தவன் . “ , “ நான் துக்கபடவே பிறந்தவன்  “ போன்றவையே அவருடையப் புலம்பலின் ஆணிவேர்.

ஸ்ரீகிருஷ்ணர் அந்த ஆணிவேரைத் தூர்த்தெறியும் பொருட்டு “ உன்னைக் கொல்ல நினைக்கும் எதிரிகள் இன்னும் அழியாமல்  உனக்குள்ளேயே  இருகின்றார்கள். யுதிஷ்டிர மகாராஜாவே! இந்த உலகில் இரண்டு விதமான எதிரிகள் உள்ளனர். ஒன்று உடல் சாந்த எதிரிகள். மற்றது மனம் சார்ந்த எதிரிகள். இரண்டு எதிரிகளும் ஒருவரை ஒருவர் சார்ந்தவர்கள். க்ஷயம், மூலம், பிராணன் இந்த மூன்றும்தான் உடலின் முக்கியக் கூறுகள். ஒழுக்கம், காமம், மற்றும் வெறுப்பு இந்த மூன்றும்தான் மனதை சமநிலைப் படுத்துபவை. ……….இந்த நேரம் நீ உன் மனதை சமநிலையில் வைத்திருக்க வேண்டும். சோகத்தில் மூழ்காதே வெற்றிக் களிப்பிலும் மிதக்காதே. விருப்பு வெறுப்பு அற்றவனாக இரு. உன் சொந்த விருப்பங்களைக் குழி தோண்டிப் புதை. ஒரு உறுதியான, நிலையான நெஞ்சுடன் உன் மூதாதையர் வழி வந்த உனக்குச் சொந்தமான அரசை நீ நேர்மையுடன் ஆட்சி புரிவாய். “ என்கிறார்.

“ கற்றறிந்தவர் கூறும் அதே மொழியில் உனக்கு ஆசையின் இயல்பை எடுத்துரைக்கிறேன். கவனமுடன் கேள். ஆசையே தன்னைப் பற்றிக் கூறுகிறது . ‘ பற்றின்மையும், ஒழுக்கமும் இல்லாத எவராலும் என்னை வெல்ல முடியாது. கடுமையாகத் துதி செய்வதன் மூலம் என்னை வெல்லலாம் என்று நினைத்தால் அவன் மனதில் செருக்ககாகப் போய் அமர்ந்து அவனுடைய சகல வேலைகளையும் நாசம் செய்வேன். முக்தி நிலையை அடைய எண்ணி ஒருவன் என்னைத் துரத்த நினைத்தால் நான் அவனைப் பார்த்து எள்ளி நகையாடுவேன். எனவேதான் கற்றறிந்தவர்கள் என்னை மனத்தடை என்றும் அழிக்க முடியாத வஸ்து என்றும் கூறுகின்றார்கள். “

“ எனவே இங்கே பார் தர்ம ராஜா! இந்த ஆசையை அழிக்க முடியாது. எனவே உன் ஆசையை அசுவமேத யாகம் போன்ற யாகங்களை நடத்துவதன் மூலம் நெறிப்படுத்து. உன்னுடைய இறந்த சகோதரர்கள் உயிர் பெற்று வருவார்கள் என்பது என்றும் நிறைவேறாத ஆசையாகும். எனவே நீ அடிக்கடி பெருமூச்சு விட வேண்டிய அவசியம் இல்லை. பெரும் வேள்விகள் புரிவதன் மூலம் இந்த உலகில் நல்லதாக எதையாவது சாத்திதுக் காட்டு. உனது அடுத்த பிறவிக்கு அது உபயோகமாக இருக்கும்.”

தரும ராஜ்ஜியம் நிறுவப் பட்டுவிட்டது. தருமம் உபதேசிக்கப் பட்டு விட்டது. என் நூலில் பாண்டவர்களைப் பற்றிக் குறிப்பிடுவதன் காரணம் அவர்களுக்கு ஸ்ரீகிருஷ்ணருடன் உண்டான உறவினால்தான். ஸ்ரீகிருஷ்ணர் பாண்டவர்களுடன் அவருக்குண்டான தொடர்பினால்தான் மகாபாரதத்தில்  தோன்றுகிறார். இப்பொழுது மகாபாரதத்தில் அவருடைய தேவை முடிந்து விட்டதால் அவர் விலகவே முடிவு செய்கிறார். ஆனால் மிக்க ஆர்வமுடைய மகாபாரதக் கவிஞர்கள் அவரை விடுவதாக இல்லை. — இந்தக் காலத்தில் செய்தி தேடி அலையும் பத்திரிகைத் துறையினரைப் போல—அந்தக் கவிஞர்கள் அர்ஜுனனின் ஒரு அபத்தமான அறிவிப்பினை முன் வைப்பதன் மூலம் ஸ்ரீகிருஷ்ணரின் இருப்பினை மேலும் சில காலம் நீட்டிக்கப் பார்க்கிறார்கள்.” நீங்கள் யுத்தத்தின் பொழுது எனக்கு உபதேசித்த அனைத்தும்  மறந்து போய்விட்டது. மீண்டும் ஒரு முறை உபதேசியுங்கள் “ என்கிறான். ஸ்ரீகிருஷ்ணர் ; “ நான் உனக்கு உபதேசித்தப் பாடங்களை மறந்து விட்டாய் என்பது உன்னுடைய துரதிர்ஷ்டம். அதே வார்த்தைகள் என்னிடமிருந்து மீண்டும் உதிக்காது. யுத்தம் நடை பெற்ற சமயம் என்னிடம் சில விசேஷ சக்திகள் இருந்தன. இப்பொழுதுதான் தெரிகிறது எந்த அளவு  சிரத்தையுடன் நீ உபதேசங்களைக் கேட்டாய் என்று. உனக்கு மீண்டும் அவற்றை உபதேசிக்கும் உத்தேசம் எனக்கு இல்லை. இருப்பினும் ஒரு பழைய கதை ஒன்று………….”

பண்டைய காலத்தில் புழங்கி வந்த ஒரு மிகப் பிரசித்தி பெற்ற கதையை கூறுவதன் மூலம் ஸ்ரீகிருஷ்ணர் மேலும் சில பாடங்களை அர்ஜுனனுக்குப் போதிக்கிறார். யுத்தகளத்தில் அர்ஜுனனுக்கு போதிக்கப்பட்டவை தொகுக்கப் பட்டு கீதை என்ற பெயரில் வழங்கப் பட்டது. இரண்டாவது முறை ஸ்ரீகிருஷ்ணன் போதித்தப் பாடங்கள் தொகுக்கப் பட்டு அனுகீதை என்று வழங்கப் படுகிறது.( அனு என்றால் இளைய, பிந்தைய என்று பொருள். ) அனுகீதையின் ஒரு பகுதி பிரம்ம கீதை என்று அழைக்கப் படுகிறது. அனுகீதையுடன் சேர்த்து மகாபாரதம் முழுவதிலும் தர்மம் குறித்த விரிவுரைகள் பகவத்கீதை, பிரஜாகரம், சனந்த சல்லாஜம், மார்கண்டேய சம்சயம் என்ற பெயரில் கிடைக்கின்றன.இவற்றுள் ஆன்மீக மதிப்பில் பகவத் கீதை முதல் இடம் வகிக்கிறது.

இருந்தாலும் மற்றவைகளும்- அனுகீதையும் சேர்த்து—முக்கிய தர்மங்களாகவேக் கருதப் படுகின்றன. கிழக்கின் புனித நூல்கள் என்ற வரிசையில் ஜெர்மானிய அறிஞர் மாக்ஸ் முல்லர் அனுகீதையையும் சேர்த்திருக்கிறார். பம்பாய் உயர்நீதி மன்றத்தின் நீதிபதியாக  விளங்கிய காசிநாத் த்ரியம்பிக தெலாஸ் என்பவர் அனுகீதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார். தனது மொழிபெயர்ப்பின் முன்னுரையில்  நீதிபதி காசிநாத் அனுகீதை மகாபாரதத்தைச் சேர்ந்தது இல்லை : பல நூற்றாண்டுகள் கழிந்து பிற்காலத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது என்பதை ஆணித்தரமாக  நிரூபிக்கிறார். “ அனுகீதையின் செய்யுள் அமைப்பைப் பார்க்கும்பொழுது நாம் அது பகவத் கீதைக்கு பல நூற்றாண்டுகளுக்குப் பின்பு இயற்றப்பட்டது”  என்று அடித்துக் கூறுகிறார்.

சரி , மகாபாரதத்திற்கு வருவோம். அர்ஜுனனுக்கு மேலும் ஒரு முறை அனுகீதையாக தர்மோபதேசம் செய்த பின்பு ஸ்ரீ கிருஷ்ணர் யுதிஷ்டிரரிடம் சொல்லிக் கொண்டு துவாரகைக்குத் திரும்புகிறார். அவருடைய பிரிவு என்பது நண்பர்கள் நடுவில் அபரிமிதமான உணர்ச்சிகளின் வெளிப்பாடாக மிகவும் உணர்ச்சி பூர்வமாக விளக்கப் பட்டிருக்கும். .

துவாரகையை அவர் அடைந்து  தனது பந்து மித்திரர்களை ஸ்ரீகிருஷ்ணர் சந்திக்கிறார். அவருடைய தந்தையான வசுதேவர் ஸ்ரீகிருஷ்ணரிடம் குருக்ஷேத்திர யுத்தம் குறித்தச் செய்திகளைக்  கேட்க விருப்பப் படுகிறார். ஸ்ரீகிருஷ்ணர் குருக்ஷேத்திர யுத்தத்தைச் சுருக்கமாக விவரிக்கிறார். இந்தத் தகவல்களில் இயற்கைக்குப் புறம்பான, அமானுஷ்யமானவை   எவையும் இல்லை. அபிமன்யுவின் மரணத்தைப் பற்றி மட்டும் வசுதேவரிடம் விவரிக்கவில்லை துவாரகையில் தந்தையின் வீட்டில் வந்திருக்கும் சுபத்திரயிடம்தான் முதலில் அபிமன்யுவின் மரணத்தைப் பற்றி ஸ்ரீகிருஷ்ணர் விரிவாக எடுத்துரைக்கிறார்.

ஸ்ரீகிருஷ்ணரிடமிருந்து விடைபெறும்பொழுது யுதிஷ்டிரர் தான் நடத்த இருக்கும் அசுவமேத யாகத்தில் கலந்து கொள்ளுமாறு அவரை அழைக்கிறார். ஸ்ரீகிருஷ்ணரும் பல யாதவர்கள் புடைசூழ யாகத்தில் கலந்து கொள்ள ஹஸ்தினாபுரம் செல்கிறார். அந்த நேரத்தில்தான் உத்தரையின் குழந்தை இறந்து பிறந்து விட ஸ்ரீ கிருஷ்ணர் அந்தக் குழந்தையை உயிர்ப்பிக்கிறார். இதனால் அவர் அமானுஷ்ய சக்தி படைத்தவர் என்ற முடிவுக்கு நாம் வர முடியாது. இன்று கூட சில மருத்துவர்கள் பிறந்த உடன் பேச்சு மூச்சின்றி கிடக்கும் ஒருசில சிசுக்களை சில மருத்துவ முறைகளால் உயிர்ப்பிக்கச் செய்வதைக்  காண்கிறோம். அதே போன்றுதான் ஸ்ரீகிருஷ்ணரும் தனக்குத் தெரிந்த ஒரு மருத்துவ முறை மூலம் உத்தரையின் சிசுவை உயிர்ப்பிக்கச் செய்திருக்க வேண்டும். ஏன் என்றால் அவர் காலத்தில் ஸ்ரீகிருஷ்ணர் ஒருவர்தான் சகல கலா வல்லவர்.

அசுவமேத யாகம் முடிந்ததும் ஸ்ரீகிருஷ்ணர் ஹஸ்த்தினாபுரத்தை விட்டுக் கிளம்புகிறார். பாண்டவர்கள் ஸ்ரீகிருஷ்ணரை மீண்டும் சந்திக்கவே இல்லை.

*****************************************************

Series Navigationநீங்காத நினைவுகள் 40புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ 51பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : அண்டவெளி மோதல்களில் குள்ளக் கோள் சாரிக்ளோவில் வளையங்கள் உண்டானது முதன்முதலில் கண்டுபிடிப்புசென்றன அங்கே !’ரிஷி’ கவிதைகள்வால்ட் விட்மன் வசனக் கவிதை – 68 ஆதாமின் பிள்ளைகள் – 3சீதாயணம் நாடகப் படக்கதை – ​2 ​6நெய்யாற்றிங்கரை
author

சத்தியப்பிரியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *