“தேசிய ஆலோசனைக் குழுமம்” தயாரித்துள்ள “மத வன்முறை மசோதா” – ஒரு கருத்தாய்வு

This entry is part 25 of 43 in the series 29 மே 2011

அருண் ஜெயிட்லி

எதிர்க்கட்சித் தலைவர், ராஜ்ய சபை

 

“மத மற்றும் இலக்கைக் குறிவைத்த வன்முறைத் தடுப்பு (நீதி மற்றும் இழப்பீடுக்கான அணுகல்) மசோதா 2011 பொதுத் தளத்தில் இடப்பட்டுள்ளது. இந்த மசோதா மத சம்பந்தமான வன்முறைகளைத் தடுப்பதற்காகவும், அவ்வாறு வன்முறையில் ஈடுபடுவோர்களுக்குத் தண்டனை அளிப்பதற்காகவும் தயாரிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. சட்டமாக்கப்படவுள்ள மசோதாவின் நோக்கம் அவ்வாறு சொல்லப்பட்டாலும், அதன் உண்மையான நோக்கம் அதற்கு நேர்மாறானதாக இருக்கிறது. இந்த மசோதாவானது சட்டமாக்கப்பட்டால், அரசின் அதிகாரவரம்பில் தலையிடுவதாகவும், ஒன்றிணைந்த அரசியல் சமுதாயத்தைத் தகர்ப்பதாகவும், வெவ்வேறு மதத்தவரிடையே நிலவும் நட்புறவில் சமமின்மை உருவாக்குவதாகவும்தான் இருக்கும்.

 

இந்த சட்ட மசோதா செயலளவில் என்ன சொல்கிறது

 

இந்த மசோதாவில் மிக முக்கியமாக விளக்கப்பட்டுள்ள சொற்பொருள் என்னவென்றால் அது “குழு” என்பதே. ஒரு ‘குழு’ என்பது மதச் சிறுபான்மையினரையோ, மொழிச் சிறுபான்மையினரையோ, மட்டுமல்லாது ராஜ்ஜிய அளவில் பட்டியல் ஜாதியினரையும் (ஷெட்யூல்டு வகுப்பினர்), பட்டியல் பழங்குடியினரையும் (ஷெட்யூல்டு பழங்குடியினர்) கூட சேர்த்துள்ளதாகும். இந்த மசோதாவானது இரண்டாம் அத்தியாயத்தில் புதிய குற்றங்கள் அடங்கிய ஒரு தொகுப்பையே உருவாக்கியுள்ளது. இந்த மசோதாவின்கீழ் வரும் குற்றங்கள், ஷெட்யூல்டு வகுப்பினர் மற்றும் ஷெட்யூல்டு பழங்குடியினர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், 1989 கீழும் தண்டனைக்குறியதாகும் என்று 6-வது க்ஷரத்து கூறுகிறது. ஒரே குற்றத்திற்காக ஒருவர் எப்படி இரண்டு முறை தண்டிக்கப்படலாம்?

 

ஒரு குறிப்பிட்ட ‘குழு’வைச்சேர்ந்த ஒருவர் மீது மற்றொருவர் ஏதாவது ஒரு பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டாலும் அவர் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாகக் கருதப்படுவார் என்று 7-வது க்ஷரத்தில் கூறப்பட்டுள்ளது. ஒருவர் வாய்ச்சொற்கள் மூலமாகவோ, எழுத்துக்கள் மூலமாகவோ அல்லது கண்ணுக்குப் புலப்படும் வகையிலோ, ஒரு ‘குழு’விற்கு எதிராகவோ அல்லது ஒரு ‘குழு’வைச் சேர்ந்தவருக்கு எதிராகவோ துவேஷம் ஏற்படுமாறு நடந்துகொள்வது “துவேஷப் பிரசாரம்” எனும் குற்றத்தைச் செய்வதாகக் கருதப்படும் என்று 8-வது க்ஷரத்து கூறுகிறது. 9-வது க்ஷரத்து ‘மத மற்றும் இலக்கைக் குறிவைத்த வன்முறை’க்காக ஒரு குற்றத்தை உருவாக்குகிறது. ஒருவர் தனியாகவோ, மற்றவருடன் சேர்ந்தோ அல்லது ஒரு அமைப்பினால் தூண்டப்பட்டோ ஒரு ‘குழு’விற்கு எதிராக சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கையில் ஈடுபட்டால் அவர் ‘மத மற்றும் இலக்கைக் குறிவைத்த வன்முறை’க்குற்றத்தில் ஈடுபட்டதாகக் கருதப்படுவார். ஒரு ‘குழு’விற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கும் விதத்தில் ஒருவர் நிதியளித்தாலோ அல்லது செலவு செய்தாலோ அவருக்குரிய தண்டனையை 10-வது க்ஷரத்து அளிக்கிறது. ஒரு ‘குழு’வைச் சேர்ந்தவருக்கு மனரீதியாகவோ, உடல் ரீதியாகவோ, வலியும் வேதனையும் ஏற்படுமாறு ஒரு பொது (அரசு) ஊழியர் நடந்துகொண்டால் அவர் சித்திரவதைக் குற்றத்தைப் புரிந்தவராவார் என்று க்ஷரத்து-12 கூறுகிறது. அவ்வாறு இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ள குற்றங்கள் சம்பந்தமாக அரசு(பொது) ஊழியர் கடமை தவறியதாகக் கருதப்பட்டு அவருக்கு 13-வது க்ஷரத்து தண்டனை அளிக்கிறது. ராணுவத்தையோ, பாதுகாப்பு படைகளையோ கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அரசு அதிகாரி, அவர்கள் தங்களுடைய கடமைகளைச் சரியாகச் செய்யாவிட்டாலோ, அல்லது தன்கீழ் இருக்கும் ஊழியர்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்காமல் போனாலோ, க்ஷரத்து-14 அவரைத் தண்டிக்கிறது. ’மறைமுகப் பொறுப்பு’ எனும் கொள்கையை க்ஷரத்து-15 விரிவாக்கம் செய்கிறது. தன் மேற்பார்வையில் பணியாற்றுபவர்கள் தவறு இழைக்கும்போது அவர்களைக் கட்டுப்படுத்த இயலாதவராகக் கருதப்படும் அதிகாரி மறைமுகப் பொறுப்பின்படி தவறிழைத்தவராகிறார். இந்த க்ஷரத்தின் படி குற்றம் இழைத்ததாகச் சொல்லப்பட்டுள்ளவர்கள், மேலதிகாரிகளின் ஆணைகளை தங்கள் மேல் எடுக்கப்படும் நடவடிக்கைகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியாது என்று க்ஷரத்து-16 கூறுகிறது.

 

மதத் தகறாறுகளில் இழைக்கப்படும் குற்றங்கள் சட்டம் ஒழுங்குப் பிரச்சனைகள் ஆகும். சட்டம் ஒழுங்கு என்பது மாநில அரசுகளின் அதிகார வரம்பில் உள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகளிடையே உள்ள அதிகாரப் பங்கீட்டின்படி, ஒரு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு விஷயங்களில் நேராகத் தலையிடுவதற்கோ,  நடவடிக்கை எடுப்பதற்கோ அல்லது அவை சம்பந்தமாக சட்டம் இயற்றவோ மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை. அறிவுரைக் குறிப்புகள் அல்லது வழிகாட்டும் குறிப்புகள் அனுப்புவது, இறுதியாக அரசியல் அமைப்புச் சட்டத்தின் க்ஷரத்து 356-ன் படி ஒரு மாநில அரசு மீது நடவடிக்கை எடுப்பது பற்றிய கருத்தை மேற்கொள்ளவது ஆகியவைதான் மத்திய அரசின் அதிகார வரம்பிற்குள் வருகின்றன. இந்த மசோதா சட்டமாக்கப் பட்டால், மத்திய அரசு மாநில அரசுகளின் அதிகாரத்தைத் தட்டிப் பறித்ததோடு மட்டுமல்லாமல் அவைகளின் அதிகார வரம்பிற்குள் சட்டம் இயற்றியது போலுமாகும்.

 

சிநேகபாவமான சமூக நல்லிணக்க உறவுகளை நோக்கி இந்தியா சீராக சென்றுகொண்டிருக்கிறது. ஒரு சிறிய மதத் தகறாரோ அல்லது ஜாதிச் சண்டையோ ஏற்பட்டால்கூட அவைக்கு எதிராக நாடு முழுவதும் உணர்வுக் குரல்கள் எழும்புகின்றன. உடனே அரசுகள், ஊடகங்கள், நீதிமன்றங்கள் மற்றும் அனைத்து நிறுவனங்களும் தங்கள் கடமைகளைச் செய்கின்றன. மதப்பிரச்சனைகளைக் கிளப்புபவர்கள் கண்டிப்பாகத் தண்டிக்கப்படவேண்டும். இருப்பினும், இந்த மசோதாவானது, மதப் பிரச்சனைகளை பெரும்பான்மைச் சமூகத்தவர் மட்டுமே உருவாக்குகிறார்கள், சிறுபான்மைச் சமூகத்தவர் உருவாக்குவது கிடையாது என்கிற அனுமானத்தில் தொடர்கிறது. ஆகவே, சிறுபான்மையினருக்கு எதிராக பெரும்பான்மைச் சமூகத்தவர் இழைத்த குற்றங்கள் தண்டிக்கப்பட்வேண்டும்; ஆனால் பெரும்பான்மையினருக்கு எதிராக சிறுபான்மையினர் இழைக்கும் அதேமாதிரியான குற்றங்கள் குற்றங்களே கிடையாது! எனவே, சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இழைக்கப்பட்டால் மட்டுமே அது பாலியல் வன்முறை குற்றம் என்பதாகும். பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் “குழு” என்கிற காட்சி வரம்பிற்குள் வரமாட்டார். ‘துவேஷப் பிரசாரம்’ என்பது சிறுபான்மையினருக்கு எதிராக மட்டுமே இழைக்கப்படும் குற்றம், மற்றபடி இல்லை. ஏற்பாடு செய்யப்பட்ட, இலக்கைக் குறிவைத்த வன்முறை, துவேஷப் பிரசாரம், அக்குற்றங்களைப் புரிவோருக்கான நிதியுதவி, அரசு (பொது) ஊழியர்கள் செய்யும் சித்திரவதை மற்றும் கடமை தவறுதல் ஆகியவை எல்லாம் சிறுபான்மையினருக்கு எதிராகச் செய்தால் மட்டுமே குற்றங்களாகும்; பெரும்பான்மை சமுதாயத்தினருக்கு எதிராகச் செய்தால் குற்றங்கள் கிடையாது. பெரும்பான்மைச் சமுதாயத்தைச் சேர்ந்த எந்த ஒரு நபரும் எப்போதும் பாதிக்கப் பட்டவராக முடியாது. எனவே இந்த மசோதாவானது, பாரபட்ச முறையில் குற்றங்களுக்கு மறுவிளக்கம் கொடுத்து, அந்த அனுமானத்திலேயே தொடர்கிறது. பெரும்பான்மை சமுதாயத்திற்கு எதிராக குற்றம் இழைத்த எந்த ஒரு சிருபான்மையினத்தைச் சார்ந்தவரும் இந்தச் சட்டத்தினால் தண்டிக்கப்படப்போவது இல்லை. பெரும்பான்மைச் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே இந்தக் குற்றங்களைச் செய்வதற்கு ஏதுவானவர்களாகையால் அவர்கள் மட்டுமே இக்குற்றங்களில் ஈடுபடுவர்; எனவே பெரும்பான்மைச் சமுதாயத்தவர்கள்மீது மட்டுமே குற்றமும் அதற்கான தண்டனையும் சுமத்தப்படவேண்டும் என்கிற நோக்கமே இந்த மசோதா சட்டமாக்கப்ப்டுதலின் பின்னே இருக்கிறது. இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ள விதத்தில் செயல்முறைப் படுத்தப்பட்டால், இந்தச் சட்டமானது மிகவும் தவறான முறையில் உபயோகப் படுத்தப்படுவதற்கு ஏதுவாகும். ஒரு சில சமுதாயத்தைச் சேர்ந்தவ்ர்களை, தாங்கள் என்ன செய்தாலும் தங்களுக்குத் தண்டனை கிடைக்காது என்கிற ஊக்கத்தை ஏற்படுத்தி மதப் பிரச்சனைகளைத் தூண்ட வைக்கும். இனி பயங்கரவாத ஜிகாதி குழுக்கள் பயங்கரவாத வன்முறைகளில் ஈடுபடமாட்டார்கள். இந்தச் சட்டத்தினால் தங்களுக்கு எப்படியும் தண்டனை கிடைக்கப்போவதில்லை என்கிற தைரியத்தில் ஊக்கமுற்று மதப் பூசல்களை உருவாக்குவார்கள். பெரும்பான்மைச் சமூகத்தவர்களைச் சேர்ந்தவர்களை மட்டுமே இந்தச் சட்டம் குற்றவாளிகளாக்கும். மதத்தின் படியோ அல்லது ஜாதியின் படியோ, சட்டம் ஏன் பாரபட்சம் பார்க்கவேண்டும்? குற்றவாளி எந்தப் பிறப்பாக இருந்தாலும் அவன் குற்றம் குற்றமே. ஒரு குற்றத்தை அழித்து குற்றத்திலிருந்து குற்றவாளியை அவன் ஜாதியும் மதமும் தப்புவிக்கும் சட்டம் ஒன்று இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் இயற்றப்படப்போகிறது.

 

இச்சட்டத்தின் நடைமுறைப் படுத்தலை உறுதி செய்பவர் யார்

 

இந்த மசோதாவானது 7 அங்கத்தினர்கள் கூடிய மத நல்லிணக்கம், நீதி மற்றும் இழப்பீடுக்கான தேசிய ஆணையம்ஒன்றிற்கு வழி வகுக்குகிறது. இந்த 7 பேரில் குறைந்த பட்சமாக 4 பேர், தலைவர் மற்றும் உப தலைவர் உட்பட, ஒரு ‘குழு’வை சேர்ந்தவராக, அதாவது சிறுபான்மையினத்தவராக இருப்பர். அதே போன்ற ஒரு ஆணையம் ஒவ்வொரு மாநிலத்திலும் உருவாக்கப்படும். ஆகவே, இந்தக் குழுக்களின் உறுப்புரிமை ஜாதி மற்றும் மதத்தின்படியே இருக்கும். இந்தச் சட்டத்தின்படி குற்றவாளிகள் பெரும்பான்மைச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக் மட்டுமே இருக்க முடியும். சட்டத்தை நிறைவேற்றுவது சிருபான்மையினத்தவரை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு குழுவாகும். இந்த ஆணையத்திற்கு உதவியாக, போலிஸ் மற்றும் பிற புலன்விசாரணைக் குழுக்களை அரசாங்கம் வழங்கவேண்டும். விசாரணை செய்யவும், அனைத்துவிதமான கட்டிடங்களுக்குள்ளே நுழையவும், நுழைந்து திடீர் சோதனை செய்யவும், புகார்களை ஏற்று விசாரணை செய்யவும், மேற்கொள்ளும் விசாரணைகளை பதிவு செய்யவும், அவற்றை குற்றம் சாட்டுவதற்கான பரிந்துரைகளுடன் அரசாங்கத்திற்கு அனுப்பவும், இந்த ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு. ராணுவத்துடன் செயல் தொடர்பு கொள்ளவும், அதன் மீது நடவடிக்கை எடுக்கவும் இந்த ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு. மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு அறிவுரைக் குறிப்புகள் வழங்குவதற்கும் இந்த ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு. பிரதமர், உள்துறை அமைச்சர், பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவர்கள், அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு அரசியல் கட்சியின் தலைவர்கள் ஆகியோர் அடங்கிய ஒரு குழுவே இந்த ஆணையத்தின் அங்கத்தினர்களை நியமனம் செய்யும். அதே போன்றதொரு ஏற்பாடு மாநில அளவிலும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்த ஆணையத்தின் கூட்டமைப்பை உருவாக்குவதில் எதிர்கட்சிகளின் பங்கே அதிகம்.

 

பின்பற்றவேண்டிய செயல்முறைகள்

 

இந்தச் சட்டத்தின்கீழ் விசாரணையின்போது மேற்கொள்ளப்படவேண்டிய செயல்முறைகள் மிகவும் அசாதாரணமானவை. கிரிமினல் புரொஸீஜர் கோட் (சிஆர்.பி.சி) பகுதி 161 கீழ் எந்த கூற்றும் பதிவு செய்யப்படமாட்டாது. பாதிக்கப்பட்டவர்களின் கூற்று பகுதி 164-ன் கீழ் அதாவது நீதிமன்றத்தின் முன்பே பதிவு செய்யப்படும். இந்தச் சட்டடத்தின் கீழ் தகவல்களையும், தொலைத் தொடர்புகளையும் தடுக்கவோ, குறுக்கீடு செய்யவோ அரசாங்கத்திற்கு உரிமை உண்டு. 74-வது க்ஷரத்தின்படி, துவேஷப் பிரசாரம் குற்றம் சாட்டப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவர் தான் குற்றம் செய்யவில்லை என்று நிரூபிக்கும்வரை அவர் குற்றம் செய்தவராகவே கருதப்படுவார். ஆகவே, குற்றம்சாட்டப்படுவதே குற்றம் செய்ததற்கான நிரூபணம் ஆகிவிடுகிறது. அரசின் அனுமதியின்றியே அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்தச் சட்டத்தின் 67-வது க்ஷரத்து வழிசெய்கிறது. சிறப்பு அரசாங்க வழக்கறிஞர் சத்தியத்திற்கும் உண்மைக்கும் உதவியாக நடக்காமல் பாதிக்கப்பட்டவரின் நலன்களைக் காப்பவராகவே இருப்பார். பாதிக்கப்பட்டவர் மற்றும் புகார் அளித்தவரின் பெயர் மற்றும்  அடையாளங்கள் வெளியில் தெரிவிக்கப்படமாட்டாது. பாதிக்கப்பட்டவருக்கும், மனுதாரருக்கும் விசாரணையின் போக்கை போலிஸ் அவ்வப்போது தெரிவிக்கும். இந்தச் சட்டத்தின்கீழ், ஏற்பாடு செய்யப்பட்ட இலக்கைக் குறிவைத்த வன்முறை நடப்பது, அரசியல் அமைப்புச் சட்டத்தின் 355-வது க்ஷரத்தின் படி, ஒரு மாநிலம் அதனளவில் பாதிக்கப்பட்டு, ஜனாதிபதி ஆட்சி அமுல்படுத்தப்படவேண்டிய நிலையில் இருப்பதாகக் கருதப்படும்.

 

மூத்த தலைவர்களை, அவர்கள் எந்தக் குற்றமும் செய்யாதவர்களாக இருப்பினும், அவர்களை எப்படி மாட்டிவிடுவது என்று குஜராத் மாநிலத்தின் அனுபவம் மூலம் கற்றுக்கொண்டு அதைத் தொழிலாகவே நடத்தும் சமூக தொழில்முனைவோர்கள் சிலருடைய வேலையாகவே இந்த மசோதா தெரிகிறது.

 

இந்த மசோதாவின் கீழ் கூறப்பட்டுள்ள குற்றங்கள் வேண்டுமென்றே தெளிவின்றி விவரிக்கப்பட்டுள்ளன. மத மற்றும் இலக்கைக் குறிவைத்த வன்முறை என்பது தேசத்தின் மதச்சார்பற்ற தன்மையை அழிப்பதாகும். மதச்சார்பின்மை என்பது எது என்பதில் நியாயமான அரசியல் வேற்றுமைகள் இருக்கலாம். மதச்சார்பின்மை என்பது மனிதருக்கு மனிதர் வேறுபடும். நீதிபதி எந்த விளக்கத்தை பின்பற்றவேண்டும்? அதைப்போலவே, ‘விரோதமான சுற்றுச்சூழல்’ ஒன்றை உருவாக்குவது, விரோதமான சுற்றுச்சூழல் என்பது எது என்று தீர்மானிக்க தேவையான இடம் தரும்.

எந்த ஒரு மதப் பிரச்சனை ஏற்பட்டாலும், தவறிழைத்தது பெரும்பான்மை சமூகத்தவரே என்கிற அனுமானத்திற்கு இட்டுச்செல்வது இந்த மாதிரியான ஒரு சட்டத்தின் தவிர்க்கமுடியாத விளைவாகும். குற்றம் செய்யப்படவில்லை என்று நிரூபிக்கப்படும் வரை அந்தக் குற்றச்சாட்டு இருந்துகொண்டே இருக்கும். பெரும்பான்மைச் சமூகத்தைச் சார்ந்த ஒருவரே இந்தச் சட்டத்தின் மூலம் குற்றவாளியாக்கப் படுவார். சிறுபான்மைச் சமூகத்தைச் சார்ந்த ஒருவர் எந்த காலத்திலும், மதத்தகறாறு, துவேஷப் பிரசாரம் போன்ற குற்றங்களைச் செய்யமாட்டார். இந்த சட்டத்தின் கீழ் அவர் அப்பாவி என்கிற மறைமுகமான ஆனால் சட்டப்பூர்வமான பிரகடனம் செய்யப்படுகிறது. ஜாதி மற்றும் மத அடிப்படையில் அங்கத்தினர்கள் சேர்க்கப்படுவதால், மத்திய மற்றும் மாநில அளவில் பாரபட்சத் தன்மைக்கு உட்பட்ட நிறுவனமாகவே இந்த ஆணையம் இருக்கும்.

 

எந்த நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டதோ, அதே நோக்கத்துடன் இந்த மசோதா சட்டமாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டால், இந்தியாவில் நிலவும் மத நல்லிணக்கத்தை பாதித்து அமைதிக்கும் ஒற்றுமைக்கும் பங்கம் விளைவிக்கும் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. பயங்கரமான விளைவுகளுடன் கூடிய சட்டம் இது. இது நிச்சயமாக தவறான விதத்தில் உபயோகப்படுத்தப்படும். சிறுபான்மை வகுப்புவாதத்தை ஊக்குவிக்கும். சமத்துவம், நேர்மை ஆகியவற்றின் அடிப்படை கொள்கைகளுக்கு விரோதமானது இச்சட்டம். தேசிய ஆலோசனைக் குழுமத்தில் உள்ள “சமூக தொழில்முனைவோர்” இத்தகைய ஆபத்தான பாரபட்சமான சட்ட மசோதாவைத் தயாரிக்கக்கூடியவர்கள் என்பது எதிர்பார்க்கப்படுவதுதான். அந்தக் குழுமத்தின் அரசியல் தலைவர் எவ்வாறு அந்த மசோதாவை அனுமதித்தார் என்பது வியப்பளிக்கிறது. தடா என்கிற பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராக சிலர் பிரசாரம் மேற்கொண்டபோது, பயங்கரவாதிகளும் சாதாரண சட்டத்தின் கீழே தான் விசாரணை செய்யப்படவேண்டும் என்று விவாதம் செய்தவர்கள் இந்த ஐக்கிய முன்னேற்ற கூட்டணியின் அங்கத்தினர்கள். அதைவிட அசுரத்தன்மை வாய்ந்த ஒரு சட்டம் இபோது முன்மொழியப்படுகிறது.

 

மத்திய அரசு இந்த அவக்கேடை நிறைவேற்றுவதை நம்பிக்கையற்ற நிலையில் மாநில அரசுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும். அவ்ர்களுடைய அதிகாரங்கள் அபகரிக்கப்படும். அமைதிக்கான, மத நல்லிணக்கத்திற்கான தேடுதல் நேர்மையின் மூலம்தான் எதிர் பாரபட்சம் மூலம் அல்ல.

 

Series Navigationஇந்தியப் பொருளாதாரத்தின் உண்மையான பிரச்சனைகள்ஏதுமற்றுக் கரைதல்
author

அருண் ஜெயிட்லி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *