1969 ஆம் ஆண்டு நிலவில் முதன்முதல் மனிதத் தடம் பதிக்க ஆழ்ந்து திட்டமிட்ட அமெரிக்கப் பொறியியல் வல்லுநர்.

This entry is part 1 of 25 in the series 27 ஏப்ரல் 2014

 

Apollo Moon Mission Leader

John Houbolt -4

 

சி. ஜெயபாரதன், B.E (Hons), P. Eng (Nuclear), கனடா

 

http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=4Ch0OgkkJKI

September 12, 1962.ogg
Author: NASA    Date: 12 September 1962
 

மனித இனம் முதன்முதல் வைக்கும் மாபெரும் முன்னடி!

‘இது மனிதன் வைக்கும் ஒரு சிறு காலடி! ஆனால் மானிட இனத்துக்கு மாபெரும் பாய்ச்சல்! [One Small Step for a Man; One giant leap for Mankind] ‘ என்று பறை சாற்றி அருகில் இருக்கும் அடுத்த அண்ட கோள மான சந்திர மண்டலத்தில் முன்னடி வைத்தார் முதல் விண்வெளித் தீரர் நீல் ஆர்ம்ஸ்டிராங். இருபதாம் நூற்றிண்டில் புரட்சி ஏற்படுத்திய நூதன மாபெரும் மகத்தான சாதனைகளில் உச்ச இடத்தைப் பெறுவது இது ஒன்றுதான்! பூத ராக்கெட் சனி 5 விடுதலை வேகத்தில் [Escape Velocity] மீறிப் பிரமாண்டமான புவி ஈர்ப்பை மண்டலத்தைத் தாண்டி, சந்திர ஈர்ப்பு மண்டலத்தை வட்டமிட்டு, நிலவுத் தேரை இறக்கி, இரு விண்வெளி வீரர்கள் தரையில் நடமாடி, பாதுகாப்பாய்ப் பூமண்டலத்துக்கு மீண்ட விஞ்ஞானப் பொறியல் சாதனையே முதல் இடம் பெறுகிறது! மனிதர் கற்பனையில் உதித்துக் கவிதையிலும், கதைகளிலும், காவியங்களிலும் இயற்றிப் புகழ்ந்த வெண்ணிலவை நேரில் கண்டு, கருநிலவு என்று கண்டு பிடித்தது மாபெரும் மானிட சாதனையே!

 

American Commitment

அமெரிக்கா அடுத்தடுத்து வெற்று விண்கோள்களை அனுப்பியும், ஒற்றை மனிதன் ஓட்டும் பல ‘புதன் ‘ விண்சிமிழ்களை [Mercury Spacecraft] ஏவியும், பிறகு இரட்டை மனிதர் இயக்கும் பல ‘ஜெமினி ‘ விண் குமிழிகளைச் [Gemini Spacecraft] சுற்ற வைத்தும், இறுதியில் மூவர் முடுக்கும் ‘அபொல்லோ ‘ விண்குறித் திட்டங்களை [Apollo Space Missions] அமுலாக்கியும், மனிதனைச் சந்திர தளத்தில் நடமிட, இமாலய முயற்சிகள் 12 ஆண்டுகள் 22 பில்லியன் டாலர் செலவில் செய்யப் பட்டன.

1961 மே மாதம் 24 ஆம் தேதி அமெரிக்கா ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடி, சந்திர மண்டலப் பயணத்துக்கு அழுத்தமாக அடிகோலி, ’1970 ஆம் ஆண்டு முடிவுக்குள் மனிதன் ஒருவனைச் சந்திர மண்டலத்தில் இறக்கி நடமாடி அவன் பாதுகாப்பாய் பூமிக்குத் திரும்பும் ஒரு குறிக்கோளைச் சாதிக்க, இந்த தேசம் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் ‘ என்று கட்டளை யிட்டுக் கடிகாரத்தை முடுக்கி விட்டார்.

 

John Houbolt -3

 ஜான் ஹௌபோல்ட்

(1919 – 2014)

நிலவில் மனிதன் முதன்முதல் தடம் வைத்துப் பாதுகாப்பாய் மீள 1960 ஆண்டுகளில் திட்ட மிட்டு வெற்றிகரமாய் நிறைவேற்றியவர் நால்வர் : அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடி, ராக்கெட் மேதை வெர்னர் ஃபான் பிரௌன், அமெரிக்க பொறியியல் நிபுணர் ஜான் ஹௌபோல்ட், நீல்ஸ் ஆர்ம்ஸ்டிராங் ஆகியோர்.  முக்கிய இந்த நால்வரில் தெரிந்தும், தெரியாமல் மறைந்து போனவர் இஞ்சினியர், ஜான் ஹௌபோல்ட்.   நாசா நிலவில் தடம் வைக்க ஏவிய  மனிதர் இயக்கும் அபொல்லோ விண்வெளித் திட்டக் குறிப்பணிகள் யாவும் ஜான் ஹௌபோல்ட் மேற்பார்வையில் வெற்றிகரமாக நடந்தேறின.   அபொல்லோ -11 பயணமே முதன்முதல் தீரர்  நீல் ஆர்ம்ஸ்டிராங்கை நிலவில் இறக்கியப் பாதுகாப்பாய் தூக்கி மீண்டது.   அடுத்து  நிகழ்ந்த ஆறு அபொல்லோ மனிதப் பயணங்களில் அபொல்லோ -13 தோல்வியைத் தவிர, ஐந்து பயணங்கள்  மேலும் வெற்றி அடைந்து, 12  அமெரிக்க விண்வெளித் தீரர்கள் சந்திரனில் கால்தடம் பதித்து பல மாதிரி மண்ணுடன் மீண்டார்.  பொறியியல் நிபுணர் ஜான் ஹௌபோல்ட், தன் 95 ஆவது வயதில் நோய்வாய்ப்பட்டு 2014 ஏப்ரல் 15  ஆம் தேதி காலமானார்.

 

Wernher von Braun

முதல் சந்திர யாத்திரை முடித்த மூன்று விண்வெளித் தீரர்கள்

பல்லாண்டுகள் பயிற்சி பெற்ற விண்வெளி விமானிகள் நீல் ஆர்ம்ஸ்டிராங் [Neil Armstrong], மைக்கேல் காலின்ஸ் [Michael Collins], எட்வின் அல்டிரின் [Ediwin Aldrin] மூவர் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். நீல் ஆர்ம்ஸ்டிராங் ஓஹையோ வாபகொனிடாவில் [Wapakoneta, OH] 1930 ஆகஸ்டு 5 ஆம் தேதி பிறந்தார். நீல் ஆறாவது வயதில் ஆகாயத்தைப் பார்த்து விமானத்தில் பறக்க அழைத்துச் செல்லும்படி தந்தையை வற்புறுத்தினார். அவரது கனவு நிரந்தரமாய் நிறைவேறி தனது 16 ஆம் வயதில் விமான ஓட்டுநர் அனுமதி [Pilot License] பெற்றார். 1947 இல் கடற்படை ஆகாயப் பயிற்சி [Naval Air Cadet] மாணவரானார். பர்தேவ் பல்கலைக் கழகத்தில் [Purdue University] அவர் விமானவியல் பொறியியல் துறைப் [Aeronautical Engineering] படிக்கும் போது, 1950 இல் தடைப்பட்டு கொரியன் யுத்தத்தில் பங்கெடுக்க நேரிட்டு போரில் காயப் பட்டார். ஒலிமீறிய [Supersonic] வேகத்தில் ஓடும் ஜெட் சண்டை விமானங்களை 1100 மணி நேரம் ஓட்டியும், X-15 ராகெட் விமானங்களை இயக்கியும் மிக்க அனுபவம் பெற்றவர்.

 

Saturn V Rocket Launch

‘தேசீய விண்வெளிப் பயண ஆணையகம் ‘ [National Aeronautics & Space Administration] நாசாவில் [NASA] சேர்ந்து, ஜெமினி 8 [Gemini 8] விண்சிமிழ் ஆட்சி விமானியாக [Command Pilot], டேவிட் ஸ்காட்டுடன் [David Scott, Co-Pilot] மனிதர் அற்ற அஜினா ராக்கெட் [Agena Roket] சிமிழுடன் விண்வெளி இணைப்புக் கையாட்சியை [Space Docking Maneuver] முதன் முதல் செய்து காட்டினார். அப்போது ஒரு ராக்கெட் எஞ்சின் பழுது பட்டு இடையூறு செய்கையில், ஜெமினிச் சிமிழைத் துரிதமாய்ப் பிரித்து, ஆட்சி ஏற்பாட்டைக் கட்டுப் படுத்தி, அபாயத் தப்புவிக்கும் [Emergency Splashdown] முறையில் பசிஃபிக் கடலில் பாய்ந்து காப்பாற்றினார். 1969 ஜூலை 20 இல் கரி நிலவில் முதலில் கால் வைத்த உலக மனிதனாகி, விண் வெளிப் பயணச் சரித்திரத்தில் நிரந்தர இடம் பெற்றார். நாசாவிலிருந்து வெளியேறி, 1971 முதல் 1979 வரை ஓஹையோ சின்சினாடிப் பல்கலைக் கழகத்தில் அண்ட வெளி விமானப் பொறியல் பேராசிரியராகப் பணியாற்றினார்.

 

Apollo -11 Crew Astronauts

 

விண்வெளி விஞ்ஞானத்தில் நிபுணர் எனப்படும், எட்வின் யுஜீன் அல்டிரின் [Edwin Eugene Aldrin] நியூ ஜெர்ஸி மான்ட்கிலைரில் 1930 ஜனவரி 20 தேதி பிறந்தவர். நியூ யார்க், வெஸ்ட் பாயின்ட் [West Point, N.Y.] அமெரிக்காவின் படைத்துறைக் கழகப் [Military Academy] 1951 பட்டதாரி. கொரியா யுத்தத்தில் 66 தடவைப் பறந்து போர்க்குறித் [Combat Missions] தாக்குதலில் பங்கெடுத்த, அமெரிக்க விமானப்படை விமானி. 1963 இல் கேம்பிரிட்ஜ் M.I.T. பொறிக் கூடத்தில் விண்வீதி யந்திரவியலில் [Orbital Mechanics] Ph.D. பட்டம் பெற ஒரு நியதி [Dissertation] எழுதியவர். 1966 நவம்பர் 11 இல் ஜெமினி 12 விண்வெளிப் பயணத்தில், ஜேம்ஸ் லோவெல் [James Lovell] விமானியுடன் பறந்து, 5.5 மணி நேரம் ‘அண்டவெளி நீச்சல் ‘ [Space Walk] செய்து, சூன்ய விண்வெளியில் மனிதன் பாதுகாப்பாக பணி செய்ய முடியும், என்று இயங்கிக் காட்டினார். அபொல்லோ 11 பயணத்தில் சந்திரனில் நடமாடிய இரண்டாவது மனிதன் என்று விண்வெளிச் சரித்திரப் புகழ் பெற்றவர்.

 

Apollo Spacecraft

 

Apollo -11 Spaceship

 

ரோமாபுரியில் 1930 அக்டோபர் 31 ஆம் தேதி பிறந்த மைக்கேல் காலின்ஸ் [Michael Collins] வெஸ்ட் பாயின்ட் படைத்துறைக் கழகத்தில் பயிற்சி பெற்று விமானப்படை விமானி ஆனவர். ஜெமினி 10 அண்ட வெளிப் பயணத்தில் ஜான் யங் [John Young] விமானியுடன் பறந்து, அஜினா விண் வாகனத்துடன் 475 மைல் உயரத்தில் இணைப்பு [Rendezvous] செய்து காட்டியவர். 1969 இல் முதல் சந்திரப் பயணத்தில் ஆட்சிக் கூடகம் [Command Module] தன்னை சந்திர வீதியில் 60-75 மைல் உயரத்தில் சுற்றி வந்து, ஆர்ம்ஸ்டிராங், அல்டிரின் சந்திர தளத்தில் நடமிடும் போது, கண்காணித்துக் கொண்டு வந்தவர்.

Moon Mission Path

 

சந்திர மண்டலம் நோக்கி விண்வெளிப் போட்டிகள்

மனித விண்வெளித் திட்டங்களை [Manned Space Programs] ரஷ்யாவும், அமெரிக்காவும் 1961 ஆண்டு முதல் நிறைவேற்றிச் சந்திரப் பயணத்திற்கு அடிகோலின. ஏப்ரல் 12, 1961 இல் ரஷ்யாவின் அகில விமானி [Cosmonaut] யூரி ககாரின் [Yuri Gagarin] வாஸ்டாக் [Vostok 1] விண்சிமிழில் முதன் முதல் பூமியை ஒரு முறை வலம் வந்தார். அவரது விண்சிமிழ் 1:48 மணி நேரம் பறந்து, பூமியைக் குவிமையப் [Focus] படுத்தி நீள்வட்ட வீதியில் [Elliptical Orbit], நெடுஆரம் [Apogee] 203 மைல், குறுஆரம் [Perigee] 112 மைல் உச்சியில் சுற்றி வந்தது. அடுத்து அமெரிக்கா 1961 மே 5 இல் தனது முதல் விண்வெளி விமானி [Astronaut] அலன் செப்பர்டைப் [Alan Shepard] புதன் விண்சிமிழில் [Mercury Spacecraft] பறக்க விட்டது. வாஸ்டாக், புதன் திட்டங்களுக்குப் பிறகு, ரஷ்யாவின் வாஸ்கோடு [Voskhod], அதே சமயம் அமெரிக்கா வின் ஜெமினித் [Gemini] திட்டங்கள் நடத்தப் பட்டு, பல விண்வெளி விமானிகள் அண்டவெளி நீச்சலையும் [Space Walk] நெடுநாள் சுற்றுக்களையும் செய்துக் காட்டினார்கள். 1965 முதல் 1966 வரை அமெரிக்கா பத்து ஜெமினி விண்வெளிப் பயணங்களை முடித்து, சந்திர மண்டல யாத்திரைக் குரிய, இறுதி அபொல்லோத் [Apollo] திட்டங்களை ஆரம்பித்தது. 1966 நவம்பர் முடிவு வரை அமெரிக்கா அண்டவெளிப் பயணத்தில் 2000 மனித-கால [Man Hours] அனுபவத்தைப் பெற்றுச் சந்திர யாத்திரைப் போட்டியில் முன்னணியில் இருந்தது. அதே சமயம் ரஷ்யாவின் மனித விண்வெளிப் பயிற்சியளவு 12 மணி நேரங்களே!

 

Apollo 11 Towards the Moon

 

அபொல்லோத் திட்டத்தை 1961 மே 25 ஆம் தேதி ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடி ஆரம்பித்து வைத்தார். அத்திட்டம் ‘மனித விண்வெளி நிலவுத் திட்டம் ‘ [Manned Lunar Space Program]. அதன் குறிப்பணிகள் [Mission] இரண்டு: முதலாவது, மனிதன் ஒருவனை சந்திரனில் நடமிட விட்டு, அவனைப் பாதுகாப்புடன் மீண்டும் பூமிக்குக் கொண்டு வருவது. இரண்டாவது, ரஷ்யாவுக்கு முந்தி அந்தச் சாதனையை முடித்துக் காட்டி, அண்டவெளிப் படையெடுப்பில் அமெரிக்காவை முன்னணியில் நிற்க வைப்பது. அசுரப் பணியான அபொல்லோ திட்டத்தில் [1965 உச்ச காலத்தில்] வேலை புரிந்தோர் 36,000 பொதுப் பணியாளர் [Civil Servants], ஒப்பந்த ஊழியர் [Contractor Employees] 376,700 பேர். 1961-1973 இல் ஆண்டு ஒதுக்குத் தொகை [Budget] 5.2 பில்லியன் டாலர். நாசாவின் [NASA] பதினேழு அபொல்லோக் குறிப்பணிகளின் [Apollo Missions 1 to 17] மொத்தச் செலவு தொகை மட்டும், 25.4 பில்லியன் டாலர்.

 

Apollo

 

அபொல்லோ முயற்சிகளில் மனித உயிர்ச் சேதமும், பெரும் பொருட் சேதமும் இல்லாமல் போகவில்லை! 1967 ஜனவரி 27 ஆம் தேதி முதல் அபொல்லோ 1 விண்சிமிழ்ச் சோதனையின் போது, உள்ளே தீக்கனல் விளாசி [Flash Fire] விண்வெளி விமானிகள், விர்ஜில் கிரிஸ்சம், எட்வெர்டு வொயிட், ராஜர் சாஃபி மூவரும் உயிரோடு எரிந்து, ஏவு தளத்திலே [Launching Pad] சிமிழ் சிதைந்து நாசமாகிப் பெரும் பின்னேற்றத்தைக் [Setback] கொடுத்தது. யோக மற்ற அபொல்லோ 13 பயணம் துவங்கி இடை வழியிலே முடமாகிச் சந்திரனைத் தொட முடியாமல் திரும்பிட வேண்டியதாயிற்று.

அபொல்லோத் திட்டங்களில் செய்து முடிக்க வேண்டியவை: 12 மனித விண்வெளிக் குறிப்பணிகள். இரண்டு பணிகளில் [அபொல்லோ 7,9] மூவர் பூமிச் சுற்றி வந்து பயிற்சி பெறுவது. இரண்டு பணிகளில் [அபொல்லோ 8,10] மூன்று மனிதர் சந்திரனைச் சுற்றி வந்து விபரம் அறிவது. மூன்று பணிகளில் [அபொல்லோ 11,12,14] சந்திர தளத்தில் நடமாடி மண்டலத்தை ஆராய்வது. கடேசி மூன்று பணிகளில் [அபொல்லோ 15,16,17] சந்திர மண்டலத் தேர்வுகள் [Lunar Exploration] நடத்துவது.

 

Final Descent

 

கென்னடி விண்வெளி மையத்தில் கிளம்பிய அபொல்லோ 11

எட்டு நாள் பயணத் திட்டமிட்ட அபொல்லோ 11 முதல் சந்திர யாத்திரை 1969 ஜூலை 16 ஆம் தேதி தயாரானது. சந்திரப் பயண ஏவு ராக்கெட் சனி 5 [Saturn V] ராக்கெட் மேதை வெர்னர் ஃபான் பிரெளன் [Wernher Von Braun] டிசைன் செய்தது. 363 அடி உயரமுடன் மூன்றடுக்காய் [Three Stage] தொடுக்கப் பட்டு, 2800 டன் எடை கொண்டு, 3500 டன் உதைப்புத் [Thrust] திறமுடைய, அந்த அசுர ராக்கெட் ரதம் கென்னடி விண்வெளி மையத்தில் [Kennedy Space Center] இழுத்துக் கொண்டு வரப் பட்டது. ராக்கெட் முனையில் ஆட்சிக் கூடகம்

[Command Module], பணிக் கூடகம் [Service Module] இணைக்கப் பட்டிருக்க, நிலாக் கூடகம் [Lunar Module] மூன்றாம் அடுக்கு ராக்கெட் நுனியில் பொருத்தப் பட்டிருந்தது. விண்வெளிச் சிமிழ் [ஆட்சி, பணி, நிலாக் கூடகத் தொடுப்பு] மட்டும் 45 டன் எடை உள்ளது. ஆட்சி-பணிக் கூடகத் தொடர் சந்திரனைச் சுற்றி வரவும், நிலாக் கூடகம் சந்திர மண்ணில் இறங்கி ஏறவும் தகுதி பெற்றவை.

 

Apollo 16 Lunar Module

12 அடி உயரம், 13 அடி விட்டமுடன் கூம்பு [Cone] வடிவுள்ள ஆட்சிக் கூடகம், விமானிகள் கையாளும் பொறிகளும், கண்காணிப்புக் கருவிகளும் கொண்டது. பூவாயு மண்டலத்தில் மீண்டும் நுழையும் போது, புவி ஈர்ப்பு விசை இழுக்க, அதி வேகத்தில் உராய்வு வெப்பக்கனல் [Frictional Heat] எரித்துச் சிதைத்து விடாதபடி ஆட்சிக் கூடகத்தின் வெளிப்புறம், நன்கு கவசம் பூணப் பட்டுள்ளது. கூடக முனையில் சேர்க்கும் இணைப்பு வாயிலும், கதவும் [Docking Parts] உள்ளன. 22 அடி நீளம், 12.75 அடி விட்டமுடன் உருளை [Cylinder] வடிவுள்ள பணிக் கூடகத் தில் எரிபொருள், சிறு ராக்கெட் எஞ்சின், மெதுவாய்ச் சந்திரனில் இறங்க எதிர்-உதைப் பாணம் [Retro-Rocket], மின்சக்தி யந்திரம், உணவு, நீர் ஆகியவை அடங்கி யுள்ளன. 20 அடி உயரம், 11 அடி விட்டமுடன் 13 டன் எடையுள்ள நிலாக் கூடகத்தில் இணைப்பு நுழைவாயில் கதவும், இறங்கி ஏற இரண்டு ராக்கெட்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தளவியல் [Geology] சாதனங்களும் மற்றும் பிற சோதனைக் கருவிகளும், மலைக் கற்கள் மணல் மாதிரிகளைக் கொண்டு செல்லக் கலன்களும் கொண்டது.

 

Second Astronaut Landing

தரையில் ராக்கெட் சுடப்பட்டு ஏவப்படும் போது, மூன்று விண்வெளி விமானிகளும் ஆட்சிக் கூடகத்தில் ஒருங்கே அமர்ந்திருப்பர். 138 அடி நீளம், 33 அடி விட்ட முள்ள முதல் அடுக்கு, திரவ ஆக்ஸிஜன் + கெரோஸின் [Liquid Oxygen, Kerosene] எரியும் ஐந்து ராக்கெட் எஞ்சின்களைக் கொண்டு இயங்கி 41 மைல் உயரத்தில் விட்டு அது துண்டித்துக் கொண்டது. அடுத்து 81 அடி உயரம், 33 அடி விட்டமுள்ள இரண்டாம் அடுக்கு, திரவ ஆக்ஸிஜன் + திரவ ஹைடிரஜன் [Liquid Hydrogen] எரியும் ஐந்து ராக்கெட் எஞ்சின்கள் சுடப்பட்டு விண்சிமிழ் 116 மைல் உச்சியை அடையவும் அது துண்டித்துக் கொண்டது. இறுதியில் மூன்றாம் அடுக்கு 58 அடி நீளம், 22 அடி விட்டமுள்ள ஒற்றை ராக்கெட் சுடப்பட்டு விண்சிமிழ், பூமண்டல வீதியில் [Earth ‘s Orbit] சிறிது தூரம் சுற்றத் தொடங்கியதும் எஞ்சின் நிறுத்தப் பட்டது. பூகோள ‘ஓய்வு வீதியில் ‘ [Parking Orbit] சுற்றும் போது, விண்சிமிழ் ‘எடையிழப்பு ‘ [Weightless] அடைகிறது. அப்போது ஓய்வு வீதியில் சுற்றும் விண்சிமிழின் வேகம் 17,400 mph.

 

Apollo Command Service Module

 

அமெரிக்கக் கழுகு நிலவின் அமைதித் தளத்தில் இறங்கியது.

அச்சமயம் தரை ஆட்சி [Ground Control] மின்கணணிகள் காலத்தையும், தூரத்தையும் துள்ளியமாய்க் கணித்து, மூன்றாம் அடுக்கு ராக்கெட் எத்துணை அளவு உதைப்புக் [Thrust] கொடுக்க வேண்டும் என்று விண்வெளி விமானிகளுக்கு அறிவுரை எட்டியதும், ராக்கெட் மீண்டும் முடுக்கப் பட்டு ‘விடுதலை வேகத்தை ‘ [Escape Velocity 25,000 mph] நெருங்கி, பூமியின் பிரமாண்டமான ஈர்ப்பு விசையை மீறி சந்திர மண்டல ஈர்ப்பில் சிக்கிக் கொள்கிறது. விடுதலை வேகம் என்பது ஓர் விண்வெளி அண்டத்தின் ஈர்ப்பு விசையைக் கடக்கும் குறைந்தளவு வேகம். அவ்வாறு விடுதலை அடைந்த ராக்கெட், ஒருவித உந்து சக்தி இழப்பின்றி தொடர்ந்து செல்லும். பூமியின் ஈர்ப்பை விட்டு விண்சிமிழ் விடுதலை பெற, வினாடிக்குச் சுமார் 7 மைல் வேகம் [25,000 mph] தேவைப் படுகிறது.

 

Man on the Moon

 

Lunar Module touchdown

 

மூன்றாவது அடுக்கு ராக்கெட் எரிந்து, சந்திர ஈர்ப்பு மண்டலத்துள் அகப்பட்டதும், ஆட்சி-பணிக் கூடகம் பிரிவு பட்டு 180 டிகிரி திரும்பி மூன்றாவது அடுக்கின் முனையில் உள்ள நிலாக் கூடகத்தை இணைத்து வெளியே அகற்றியதும், மூன்றாம் அடுக்கு ராக்கெட் அறுந்து கொள்கிறது. பிறகு ஆட்சி-பணி-நிலாக் கூடகத் தொடர் நிலாவை வட்ட மிட்டு, இறங்க வேண்டிய ‘அமைதித் தளத்தைக் ‘ [Tranquility Base] கண்டு பிடித்து நெருங்கியதும், ஆர்ம்ஸ்டிராங், அல்டிரின் இருவர் மட்டும் ஆட்சிக் கூடகத்தி லிருந்து சந்திரக் கூடகத்தில் இடம் மாறிக் கொண்டார்கள். அவர்களை ஏற்றிக் கொண்டு கூடகம் பிரிந்து, சந்திர ஈர்ப்பு விசையால் வேகமாய்க் கீழே இழுக்கப்பட, கூடக ராக்கெட் மேலே இயங்கித் தடுத்து மெதுவாகக் கட்டுப்பாட்டு முறையில் இறங்கியது. அச்சமயம் விண்ணில் கண்காணிப்பாக ஆட்சி-பணிக் கூடத்தில், 70 மைல் உயரத்தில் விமானி மைகேல் காலின்ஸ் ‘சந்திர ஓய்வு வீதியில் ‘ [Lunar Parking Orbit] நிலவைச் சுற்றி வந்தார்.

 

Buzz Aldrin on the Moon

Return to Earth

புறப் பட்ட மையத்திலிருந்து 102:45 மணி நேரம் கழித்துச் சரியாக மாலை 4:17 EDT மணிக்கு [1969 ஜூலை 20] அமெரிக்கக் கழுகு, ‘சந்திரத் தேர் ‘ அமைதித் தளத்தில் இறங்கி சந்திரதள சாம்பல் தூசியைக் கிளப்பி, ஒரு சரித்திரச் சம்பவத்தை உலகிற்கு எடுத்துக் காட்டியது. முதலில் இறங்கி முன்னடி வைத்தவர், நீல் ஆர்ம்ஸ்டிராங். ‘இது மனிதன் வைக்கும் ஒரு சிறு காலடி! ஆனால் மானிட இனத்துக்கு இது மாபெரும் பாய்ச்சல்! ‘ என்று ஆர்ம்ஸ்டிராங் பறை சாற்றியதை 250,000 மைல் தொலைவில் கோடான கோடி பூகோள மக்கள் செவிமடுத்து, தொலைக் காட்சியில் முதல் மனிதர் சந்திரனில் இறங்கி நடமாடித் தீரச் சாதனை புரிவதைக் கண்டு களித்தார்கள்.

நிலவின் அமைதித் தளத்தில் சேகரித்த மாதிரிகள், செய்த பணிகள்

ஆர்ம்ஸ்டிராங், அல்டிரின் இருவரும் புவியின் ஈர்ப்பில் ஆறில் ஒரு பங்குள்ள நிலவின் ஈர்ப்பில் ‘அமைதித் தளத்தில் ‘ [Tranquility Base] எவ்விதச் சிரமமும் இல்லாமல், இரண்டரை மணி நேரம் 160 அடி தூரம் நடமாடினார்கள். அப்போது 49 பவுண்டு பாறைக் கற்கள், மண் மாதிரிகள் சேகரித்தனர். சூரியக் காற்று [Solar Wind] நகர்ச்சியை ஆராய ஒரு லேசர்க் கதிர் எதிர்பரப்பியை [Laser Beam Reflector] சந்திர தளத்தில் அமைத்தனர்.

 

 

Entering the Atmosphere

 

அடுத்து நிலவின் தள அதிர்வை [Seismic] அறியக் கருவிகளும் நிர்மானிக்கப் பட்டன. அமெரிக்கக் கொடியைத் தரையில் நட்டு வைத்தனர். ‘பூகோள மனிதர் சந்திர தளத்தில் முதலில் இங்குதான் முன்னடி வைத்தார். நாங்கள் சகல மனித இன சமாதானத்திற்காக வந்தோம். 1969 ஜூலை ‘ என்று அழுத்தி எழுதி, நிக்ஸன், மற்றும் மூன்று விமானிகள் கையெழுத்திட்ட ஓர் உலோகத் தகடை அங்கே ஊன்றினார். அடுத்து 250,000 மைல் தொலைவில் இருக்கும் வெள்ளை மாளிகையில், ஜனாதிபதி நிக்ஸனுடன் [Nixon] விண்கோள் தூரத் தொடர்பில் [Satellite Communications] இருவரும் போனில் உரையாடினார்கள். அத்துடன் சந்திரனில் எண்ணற்ற வண்ணப் படங்கள் எடுத்துக் கொண்டார்கள்.

 

Parachute drop

 

விண்வெளி விமானிகள் சந்திரனை விட்டு பூமிக்கு மீட்சி

சந்திரக் கூடகம் நிலவின் தரையில் 21:36 மணி நேரம் தங்கியது. சந்திரனில் நடமாடிச் செய்பணிகளை முடித்துக் கொண்டு 60 மணி நேர மீட்சிப் பயணத்துக்குத் தயார் செய்தனர். இரு விமானிகளும் சந்திரக் கூடகத்தின் மேற் சிமிழில் ஏறிக், கீழ்த் தாங்கும் நாற்காலியைத் தரையில் துண்டித்து விட்டு, சிறு ராக்கெட் எஞ்சினை எரித்து மேல் எழும்பி, ஆட்சி-பணிக் கூடகத்தோடு இணைந்து கொண்டது. அடுத்து விமானிகள் இருவரும், ஆட்சிக் கூடகத்தில் மாறிக் கொண்டதும், சந்திரக் கூடகம் துண்டிக்கப் பட்டு, ஆட்சி-பணிக் கூடகம் மட்டும் பிரிந்து, ராக்கெட் 5400 mph விடுதலை வேகத்தில் சந்திர ஈர்ப்பை மீறி, பூமி நோக்கி மீண்டது.

 

Spacecraft Recovery

 

பூவாயு மண்டலத்தருகே வந்ததும், சரியான சமயத்தில் பணிக் கூடகம் துண்டிக்கப் பட்டது. ஆட்சிக் கூடகம் மட்டும் மூன்று விமானிகளுடன் ஊர்ந்து, புவி ஈர்ப்பு விசையில் இழுக்கப் பட்டுத் தானாக வளர் வேகத்தில் [Acceleration due to Gravity] பாய்ந்து, உராய்வு வெப்பக்கனலின் ஊடே எரி நட்சத்திரம் போல் தீப்பறக்க வந்து இறங்கியது. பசிஃபிக் சமுத்திர மட்டத்தை அணுகும் முன்பே, மூன்று பாராசூட் [Parachute] குடைகள் தானாக வெளியேறி, ஜலை 24 ஆம் தேதி ஆட்சிக் கூடகம் பாதுகாப்பாகக் கடலில் விழுந்து மிதந்தது. விமானிகளைக் கண்டு பிடித்துக் கரை சேர்க்க அமெரிக்காவின் கப்பல் U.S.S. ஹார்னெட் [U.S.S Hornet] தயாராக ஹவாயிலிருந்து [Hawaii] 950 மைல் தென்மேற்குத் திசையில் காத்திருந்தது. மூன்று விமானிகளும் தீட்டு நீக்கப் [Decontaminated] பட்டு, 14 நாட்கள் சூழ் அரணில் [Quarantined] அடைக்கப் பட்டு அண்ட வெளிக் கிருமிகள் எவையும் பூமியில் பரவா வண்ணம் கிருமித் தடுப்பு ஆடை [Biological Isolation Garments] அணிந்து தனியாக வைக்கப் பட்டனர்.

 

Three Astronauts in Chamber

 

நாசாவின் எதிர்கால விண்வெளித் தேடல் படையெடுப்பு

நாசா முதன்முதல் வெற்றிகரமாகச் செய்த விண்வெளிச் சந்திரப் பயணம் ஓர் அடிப்படை மாடல் அதிதீரச் சாதனையாய்ப் பின்வந்த  அகில நாட்டு வானியல் விஞ்ஞானிகளுக்கும், பொறி நுணுக்க வல்லுநர்களுக்கும் அண்டவெளித் தேடலில் வழி வகுத்தது.   அடுத்து நாசா, ஐரோப்பாவில் ஈசா [European Space Agency] செவ்வாய் [Mars], வெள்ளி [Venus], பூதக்கோள் வியாழன் [Jupiter],  சனிக்கோள் [Saturn], புதன் [Mercury] போன்ற கோளங்களின் தேடல் படையெடுப்புக்கு விதையிட்டது. அவற்றைப் போல் வால்மீன், வக்கிரக் கோள்கள் [Asteroids] ஆய்வு களுக்கும் வழி வகுத்தது.  2014 இல் நாசாவின் வாயேஜர் விண்கப்பல்கள் [Voyager 1 & 2 Spaceships] பல மில்லியன் மைல்கள் கடந்து நமது பரிதி மண்டலம் தாண்டி அடுத்த சூரிய மண்டலத்தில் பயணம் செய்கிறது..

 

Earth seen from the Moon

 நிலவிலிருந்து  நீர்க்கோள்  பூமியின்  வடிவம்

++++++++++++++++++

தகவல்:

படங்கள் : நாசா விண்வெளி மையம்.

1.  http://www.nasa.gov/mission_pages/apollo/missions/#.U1nVUnC_gcF  [Apollo Missions to the Moon]

2.  http://en.wikipedia.org/wiki/Wernher_von_Braun  [German Rocket Designer]

3.  http://www.space.com/21809-john-c-houbolt.html   [John Houblt]

4.  http://nssdc.gsfc.nasa.gov/planetary/lunar/apollo.html  [Apollo Program (1963-1972)]

5.  http://en.wikipedia.org/wiki/Apollo_program  [Apollo Program (April 22, 2014)]

6.  http://en.wikipedia.org/wiki/John_Houbolt  [April 26, 2014]

7.  http://en.wikipedia.org/wiki/Moon_landing   [April 25, 2014]

8. http://www.kidport.com/reflib/science/moonlanding/moonlanding.htm [2012]

9.  http://en.wikipedia.org/wiki/Apollo_11  [April 26, 2014]

 

++++++++++++++++++++++

S. Jayabarathan [jayabarathans@gmail.com]  April 27, 2014

Series Navigation
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

2 Comments

  1. Avatar
    ஒரு அரிசோனன் says:

    மதிப்பிற்குரிய ஜெயபாரதன் அவர்களுக்கு,
    எளிய தமிழில் யாவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் விளக்கி இருக்கிறீர்கள். தமிழிக்கு அறிவியலைக் கொண்டுவரும் உங்கள் சேவை தொடரட்டும்.

  2. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    அன்பு நண்பர் அரிசோனன்,

    விஞ்ஞானக் கருத்துகளைத் தமிழில் எழுத முடியும், தமிழில் எழுத வேண்டும்,தமிழில் படிக்க வேண்டும் என்பது நீண்ட காலப் பேரவா. அதைச் சிறப்பாகச் செய்ய தவறாது திண்ணை ஆசிரியர்கள் கடந்த 12 ஆண்டுகளாக எனக்கு இடமளித்து வருகிறார்.

    பாராட்டு அளித்த உங்களுக்கும், இடமளிக்கும் திண்ணைக்கும் என் பணிவான நன்றிகள்.

    பணிவன்புடன்,
    சி. ஜெயபாரதன்

Leave a Reply to ஒரு அரிசோனன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *