ஆ. தனஞ்செயனின் விளிம்புநிலை மக்கள் வழக்காறுகள் : புத்தக மதிப்புரை

This entry is part 23 of 44 in the series 22 ஏப்ரல் 2012

அ. ஜெயபால்

தமிழகத்தில் நாடோடிகள், மானிடவியல் கோட்பாடுகள், அடையாள மீட்பு, தலித்துகள்-பெண்கள்-தமிழர்கள் , ஆதி மருத்துவர் போன்ற அடித்தள ஆய்வு சார்ந்த நூல்களை தமிழுலகிற்கு கொடுத்திருக்கின்ற வல்லினம் பதிப்பகம், ஜூலை 2006 ல் விளிம்புநிலை மக்கள் வழக்காறுகள் (இனவரைவியல் ஆய்வு) என்ற ஓர் ஆழமான நூலை தந்திருப்பதன் மூலம் தன்னுடைய இருப்பை வெளிபடுத்தியிருக்கிறது. இந்நூல் நாட்டார் வழக்காற்றியலின் சிரத்தையான ஆய்வாளர் ஆ. தனஞ்செயன் அவர்களின் பனிரெண்டு கட்டுரை தொகுப்புகள் ஆகும்.

19 ஆம் நூற்றாண்டில் உருப்பெற்ற ‘Folklore’ என்ற சொல் தமிழ்ச் சூழலில் மக்கள் வரலாறு , நாட்டுப்புற வரலாறு என்றெல்லாம் அழைக்கப் பட்டு, தற்போது நாட்டார் வழக்காறு என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், வாய்மொழிக் கலை, வாய்மொழி இலக்கியம் என்ற சொற்களே பொருத்தமானவையாக இருக்கும் என்று பாமன் அவர்கள் கூறுகிறார். தொடக்கத்தில் மக்களின் நம்பிக்கைகள், சடங்குகள், பாடல்கள், பழமொழி, நிகழ்த்துக் கலைகள் ஆகியவற்றை ஆவணப் படுத்துதல், ஆய்வுக்கு உட்படுத்துதல் என்று செயல்பட்ட நாட்டார் வழக்காற்றியல் துறை, இன்று மிகப் பெரிய அறிவியல் துறையாக, சமூகவியல், மானுடவியல், இனவரைவியல் போன்ற உலகியல் சார்ந்த தத்துவங்களோடும், கோட்பாடுகளோடும் இணைந்து தனது எல்லையை விரித்துக் கொண்டிருக்கிறது. இந்த அறிவியற் கூறுகளின் விழுமியமாக இந்த நூலை பார்க்க முடியும். ப்ருன்வாந்து, ஹீர்ச்கொவிட்ஸ், பெட்டெர்மன், அகர், டென்சின், ஹவிலாந்து, ஆபிரகாம் போன்ற இனவரைவியல்(Ethnography) ஆய்வாளர்களோடு இந்நூல் நகர்ந்து செல்கிறது.கவிஞர் பழமலையின் ‘சனங்களின் கதை’ சமூக யதார்த்தங்களைப் பற்றி எவ்விதமான ஆரவாரமோ, அலங்காரமோ இல்லாமல், இனவரைவியலின் பலத்தோடு திகழ்கிறது என்றும், தலித்திய எழுத்தார் பாமாவின் கருக்கு, சாதியமைப்பு, தலித் உட்சாதிமோதல், கிறித்துவத்தில் தீண்டாமை குறித்து தீவிரமாக பேசுவதால், கருக்கு தலித்துகளின் சுய இனவரைவியல் என்பதையும் நுட்பமாக எடுத்து சொல்கிறார்.

‘கட்டுமரங்கள்’ (கவிதை தொகுப்பு), ‘தஞ்சாவூர் மாவட்டக் கடலோர மீனவர் பாடல்கள்’ (முனைவர் பட்ட ஆய்வு), ‘குலக் குறியியலும் மீனவர் வழக்காறுகளும்’ (ஆய்வு நூல்) என்று கடல், மீன், காற்றோடு உறவாடும் ஆ. தனஞ்செயன், இந்நூலில் மீனவரின் சுறாமுள் வழிபாடு, ஏழு கன்னிமார் வழிபாடு, அம்பாப் பாட்டு குறித்த விரிவான தரவுகளோடு, மீனவ சமுதாய வாழ்வினை வகைப்படுத்தி இருப்பது அவரின் நுண்மான் நுழை புலத்திற்கு சான்றாக திகழ்கிறது எனலாம்.சமூக விளிம்பில் நாடோடியாக தள்ளப்பட்ட பூவிடையார் (சாதியாக பழமரபு கூறுகிறது), எப்படி பூமாட்டுக்காரர், பூம்பூம் மாட்டுக்காரர், பெருமாள் மாட்டுக்காரர் ஆனார்கள் என்பதை, மரபுவழிப்பட்ட கதைகளின் வழி ஆராயும் ஆசிரியர், கடந்தகால யதார்த்தம், நிகழ் கால யதார்த்தம் என்ற இரு வேறு தன்மைகளில் அவர்களின் வாழ்க்கை அமைப்பினை வகைமைப் படுத்துகிறார்.

‘நிஜ நாடக இயக்கம்’ மு. இராமசாமி, ‘துளிர்’ ராஜி, ‘கூத்துப் பட்டறை’ ந.முத்துசாமி, பேராசிரியர்.செ.இராமானுஜம், கே. ஏ. குணசேகரன், முருகேசன், பிரளயன், மங்கை போன்ற நவீன நாடகக் காரர்களின் மத்தியில், வாய் மொழிக் கூறுகள், மொழிசாராத கருத்துப் புலப்படுத்தக் கூறுகளின் மரபார்ந்த நிகழ்த்துக் கலைவடிவங்கள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தினை, அவர்களின் நாடகப் பிரதியைக் கொண்டே விவரித்துக் கூறுகிறார். இந்நூல் மக்களின் வாழ்க்கை முறை சார்ந்த, அன்றாட நிகழ்வுகளை, அதனைப் பேசும் இலக்கியங்களை மேலை நாட்டு தத்துவங்களோடும், கோட்பாடுகளோடும் பேசுகிறது. இது நாட்டார் வழக்காற்றியலை, அறிவியல் அணுகுமுறையில் ஆய்வுக்கு உட்படுத்தியதில் கிடைத்த வெற்றி என்ற போதிலும், மறுபுறம் இவ்வணுகுமுறை(சமூகவியல், மானுடவியல், இனவரைவியல்,..), நாட்டார் மரபுகளையும், அடையாளங்களையும், நாம் நம்மை அறியாமலேயே இழக்க நேரிடுமோ என்ற அச்சமும், இறுதில் கோட்பாடுகள் மட்டுமே எஞ்சி நிற்க வழி வகுக்குமோ என்ற எண்ணமும் ஏற்படுகிறது.

ஏனெனில், இன்றைய சூழலில் நாட்டார் தெய்வங்கள் குறித்த ஆய்வுகள் கூட, பொதுவாக அந்த வழிபாட்டு முறை, நம்பிக்கைகள் முதலியவற்றிலிருந்து விலகிய நிலையில் நின்று, அதனை விளங்கி கொள்ள முயல்பவையாகவே இருக்கின்றன. அறிவுத் தளத்தில் நின்று பற்பல கேள்விகளை எழுப்பி அணுகுவோர்கும், அந்த வழிபாட்டில் பங்கேற்பாளராக இருப்போர்க்கும் மிகப் பெரிய வித்தியாசத்தை, நாம் காண முடியும். இதனை நாட்டார் தெய்வங்கள், ‘வைதிக இந்து மதத்திற்குள்’ உள்ளிழுக்கப் படுதலில் காணலாம். இந்தப் புரிதலில் இந்நூலை அணுகுதல் என்பது, எட்வர்த் சயித் கூறியது போல, ஆய்வாளரின் கருத்தாக்கம் வேற்றார் பண்பாட்டின் மீது திணிக்க முயல்கிறதோ என்ற கேள்வி நம்மில் பலருக்கு
எழலாம்.

விளிம்புநிலை மக்கள் வழக்காறுகள் புத்தக மதிப்புரை
ஆசிரியர் : ஆ. தனஞ்செயன்
மதிப்புரை கட்டுரையாளர் : அ. ஜெயபால்

Series Navigationசுஜாதாவின் வஸந்த் வஸந்த் – விமர்சனம்கடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 11
author

அ. ஜெயபால்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *