பஞ்சதந்திரம் தொடர் 41-காக்கைகளும் ஆந்தைகளும்

This entry is part 18 of 28 in the series 29 ஏப்ரல் 2012


இங்கே, காக்கைகளும், ஆந்தைகளும் என்ற மூன்றாவது தந்திரம் ஆரம்பமாகிறது. அது போரும், சமாதானமும் பற்றியது. அதன் முதற் செய்யுள் பின்வருமாறு:

ஏற்கனவே பகைவர்களாயிருந்து பின்னால்
நேசம் பாராட்டுகிறவர்களை நம்பவேண்டாம்!
ஆந்தைகள் கூடிவாழ்ந்த குகைக்குக் காக்கைகள்
நெருப்பு வைத்து எரித்துவிட்டன.

‘’அது எப்படி?’’ என்று அரசகுமாரர்கள் கேட்க, விஷ்ணு சர்மன் சொல்லத் தொடங்கினார்:

தென்னாட்டில் பிருதிவிப்பிரதிஷ்டானம் என்றொரு நகரம் இருக்கிறது. அதன் அருகாமையிலே பல கிளைகளுள்ள பெரிய ஆலமரம் ஒன்றிருக்கிறது. அதில் மேகவர்ணன் என்ற காக்கையரசன் இருந்து வந்தது. அதற்கு ஏராளமான காக்கைப் பரிவாரங்கள் உண்டு. மேகவர்ணன் அந்த மரத்தையே தனது ஜாகையாகக் கொண்டு காலங் கழித்து வந்தது.

அதேமாதிரி, ஒரு மலைக்குகையைத் தன் கோட்டையாகக் கொண்டு அரிமர்ததனம் என்ற ஆந்தையரசன் கணக்கற்ற ஆந்தைப் பரிவாரங்களோடு இருந்து வந்தது. ஏற்கனவே இவற்றிடையே பகைமை இருந்து வந்தது. ஆகவே, குகைக்கு அருகில் சுற்றித் திரியும் எந்தக் காக்கையைக் கண்டாலும் அதை ஆந்தையரசன் கொன்றுவிட்டுச் சென்றது. இப்படியே தினந்தோறும் காக்கைகள் கொல்லப்பட்டு வந்தன. அந்த ஆலமரத்தைச் சுற்றிலும் எங்கு பார்த்தாலும் காக்கைகள் இறந்து கிடந்தன. இப்படி நடப்பது சகஜம்தான். ஏனெனில்,

பகைவனைக் தன்னிஷ்டம்போல் நடக்க அனுமதித்தாலும், சோம்பலினால் நோயைக் கவனிக்காமல் விட்டாலும், அவை நாளடைவில் மெள்ள, ஆனால் நிச்சியமாக,  உன்னைக் கொன்றுவிடுகின்றன.

ஒருநாள் மேகவர்ணன் தனது மந்திரிகள் எல்லாவற்றையும் கூப்பிட்டது. அவர்களைப் பார்த்து, ‘’தோழர்களே, நமது எதிரி திமிர் படைத்தவன். முயற்சியுள்ளவன் சமயமறிந்தவன். இரவில் தினசரி வந்து நம் அணிகளைக் கொல்கிறான். அவனைத் திருப்பித் தாக்குவதற்கு என்னவழி? இரவிலே நமக்குக் கண் தெரிவதில்லை. பகலிலோ அவனுடைய கோட்டை எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. தெரிந்திருந்தால் நாம் போய் அதைத் தாக்கலாம். இதற்கு என்ன உபாயம் செய்யலாம? சமாதானம், சண்டை, தளத்தை மாற்றிச் செல்வது, இடம் பெயராது இருந்துகொள்வது, உறவு கொள்வது, நயவஞ்சமாக நடந்து கொள்வது — என்று ஆறு வகை உபாயங்கள், உண்டு. இப்பொழுது இவற்றில் எதை அனுஷ்டித்தால் நல்லது?’’ என்று கேட்டது.

‘’அரசே! தாங்கள் இந்தக் கேள்வியைக் கேட்டது மிகவும் தகும்.

அரசர்கள் தங்களைக் கேட்காவிட்டாலும் மந்திரிகள் நல்லதைச் சொல்ல வேண்டும். அரசன் கேட்பானேயானால் நிச்சயமாகச் சொல்லவேண்டும்.

(முதலில் கசந்தாலும்) முடிவிலே நன்மையைத் தரும் உண்மையைச் சொல்லாமல் முகஸ்துதியாகப் பேசிக்கொண்டிருக்கிற மந்திரிகள் அரசனுக்கு விரோதிகளே.

என்றொரு பழமொழி இருக்கிறது. எனவே இபோது ரகசியாலோசனை செய்வது நல்லதே’’ என்றன மந்திரிகள்.

மேகவர்ணன் தன் பரம்பரை மந்திரிகளான உஜ்ஜீவி, சஞ்ஜீவி, அனுஜீவி, பிரஜீவி, சிரஜீவி என்கிற ஐந்து மந்திரிகளையும் தனித்தனியே ஆலோசனை கேட்கத் தொடங்கியது. முதலில் உஜ்ஜீவியைப் பார்த்து, ‘’நண்பனே, இருக்கிற நிலைமையில், நீ என்ன நினைக்கிறாய்?’’ என்று கேட்டது. அதற்கு அது, ‘’அரசே, பலசாலிகளோடு சண்டை பிடிக்கக் கூடாது. அவனோ பலசாலிமட்டுமல்ல. சமயமறிந்து தாக்குகிறவனாகவும் இருக்கிறான். ஆகவே தாங்கள் அவனோடு சமாதானம் செய்து கொள்ளுங்கள்.

வல்லவனுக்குத் தலைவணங்கு! பிறகு தக்க சமயம் நேரும் போது தலைதூக்கு! எப்போதும் தலைக்குமேல் வெள்ளம் போய்க்கொண்டிராது. அப்படியே அவனது செல்வமும் என்றென்றும் மேலோங்கியிராது.

செல்வமும், குணமும், அறிவும், வெற்றிப்பரம்பரையும் பெற்று உள்நாட்டில் பிளவுகள் அற்றிருக்கும் பகைவனோடு சமாதானம் செய்துகொள்!
உன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் போலிருந்தால் துஷ்டர்களோடு சமாதானமாகப் போய்விடு! உயிரை முதலில் பாதுகாத்துக் கொண்டால் பின்னால் ராஜ்யத்தைக் காத்துக் கொள்ளமுடியும்.

எண்ணற்ற போர்களில் வெற்றி கொண்டவனுடன் சுமாதானம் செய்து கொள்! அவனுடைய வல்லமையைக் கண்டு உனக்கு மற்றப் பகைவர்கள் தலைவணங்குவார்கள்.
உனக்குச் சமமானவனோடும் சமாதானம் செய்துகொள்! போரில் வெற்றி என்பது யாருக்கும் நிச்சயமானதில்லை. எனவே சந்தேகத்திற்கிடமளித்துவிடாதே, என்று பிரகஸ்பதி சொல்லுகிறார்.

சமபலமுள்ள பகைவர்களோடு சண்டை செய்தால் வெற்றி யாருக்கு
என்று சொல்வதற்கில்லை. ஆகவே முதலில் முதன் மூன்று உபாயங்களை (ஸாமம், தானம், பேதம்)ச் செய்து பார். கடைசியாகச் சண்டை செய்!

சமாதானத்தின் பெருமையை அறியாமல், அதிகார போதையில் அறிவு குருடாகி, சமபலமுள்ளவனோடு சண்டை செய்பவன் மண்குடம் உடைவதேபோல் சிதைவுறுகிறான். நிலம், நண்பன், பொன், இவை மூன்றும் சண்டையின் பலனாகக் கிடைக்கின்றன. மூன்றில் ஏதாவது ஒன்று கூடக் குறைவதானாலும் நீ சண்டைக்குப் போகாதே!

கல்லும் மண்ணும் நிறைந்த வளையைச் சிங்கம் தோண்டினால் அதன் நகங்கள்தான் ஒடிந்து போகும். அதிகமாக மிஞ்சினால் ஒரு எலிதான்  கிடைக்கும்.

ஆகவே, எங்கே நல்ல பயன் கிடைக்காமல், கடும் போர் மட்டும் கையில் மிஞ்சுமோ, அங்கே சண்டையைக் கிளறி விடாதே?

வல்லவர்கள் தாக்கும்போது நாணல் புல்லைப்போல் தலையைக் குனிந்துகொடு; லட்சுமியின் அருள் தடங்கலின்றிக் கிடைத்து வர வேண்டுமானால் பாம்பைப்போல் ஒரு போதும் சீறாதே!

நாணல்புல்லைப்போல் தலைவணங்குபவன் காலக்கிரமத்தில் உயர்நிலையடைகிறான். பாம்புபோல் சீறுகிறவர்கள் கொலையுண்டு போகின்றனர்.

ஆமை ஓட்டுக்குள் புகுந்து கொள்வதுபோல் தலை பதுங்கிக் கொள்; அடிபடவேண்டி நேரிட்டாலும் படு! தக்க தருணம் வருகிறபோதெல்லாம் புத்திசாலிகள் கருநாகம்போல் தலைதூக்கிப் பார்ப்பார்கள்.

சுருங்கச் சொன்னால்,

வல்லவனோடு சண்டையிடக்கூடாது என்று எனக்குத் தோன்றுகிறது. காற்றை எதிர்த்து மேகம் சண்டை செய்வதை யாராவது கண்டதுண்டா?

என்று பதிலளித்தது உஜ்ஜீவி.

இந்தச் சொற்களைக் கேட்ட காக்கையரசன் சஞ்ஜீவி என்ற மந்திரியைப் பார்த்து, ‘’நண்பனே, உன் அபிப்பிராயத்தையும் கேட்க விரும்புகிறேன்’’ எறது.

‘’அரசே! உஜ்ஜீவி சொல்வது எனக்குச் சரியென்று தோன்றவில்லை. ஏனென்றால் எதிரி கொடியவனாய், பேராசை பிடித்தவனாய், தர்மமில்லாதவனாய் இருக்கிறான். எனவே தாங்கள் அவனோடு சமாதானம் செய்யக்கூடாது.

சத்தியமும் தர்மமும் அற்ற சத்துருக்களுடன் என்றும் சமாதானமாகப் போய்விடக் கூடாது. அப்படியே செய்து கொண்டாலும் அவர்களின் துஷ்டத்தனத்தால் சீக்கிரமே மாறிவிடுவார்கள்.

எனவே, அவனோடு சண்டை பிடிக்க வேண்டும் என்பதே என் அபிப்பிராயம்.

கொடுமை, பேராசை, சோம்பல், பொய், மடமை, அச்சம், உறுதியின்மை, தயாரிப்பிலில்லாமை, வீரர்களை அவமதிக்கும் போக்கு, முதலிய தன்மைகளைப் பெற்ற பகைவனைச் சுபலமாக வெல்ல முடியும்.

என்றொரு பழமொழி கூறுகிறது. இதற்கு மேலாக இன்னொரு விஷயமும் உண்டு. அவன் நம்மை அவமானப்படுத்தியிருக்கிறான். அவனோடு இப்போது நீங்கள் சமாதானம் பேசினால் அவன் கோபங்கொண்டு மறுபடியும் தாக்குவான்.

நான்காவது உபாயத்தால் (சண்டையால்) ஜெயிக்க வேண்டிய எதிரியிடம் சமாதானம் என்பது கூடாது. வியர்க்க வைத்து ஜுரத்தை இறக்கவேண்டியிருக்க, யாராவது நீரில் தலைகுளிக்கச் செய்வார்களா?

மிகுந்த கோபமுள்ளவனிடம் சமரசம் பேசினால் அவனது கோபம் வெடித்துக் கிளம்பும். நன்றாகக் கொதிக்கும் எண்ணெய்யில் தண்ணீர்த் துளிகளை விட்டால் எப்படியாகுமோ அப்படி!

மேலும், அவன் பலசாலி என்று சொல்வதும் ஆதாரமற்றது.

சிங்கம் யானையைக் கொல்வதுபோல், உற்சாகமும், திறமையுள்ள மெலியவன்கூட வலுவுள்ள எதிரியை ஜெயித்து சாம்ராஜ்யத்தை அடைகிறான்.

சுயபலத்தால் எதிரியைக் கொல்ல முடியாமற்போனால் மாயத்தால் அவனைக் கொல்லவேண்டும். பீமன் பெண்ணுருவம் கொண்டு சென்று கீசகனைக் கொல்லவில்லையா, அதுபோல!

யமனைப்போல் உக்கிரமுள்ள அரசனுக்கு எல்லா எதிரிகளும் தலைவணங்கி விடுகின்றனர். அவனே இரக்கங்காட்டுபவனாகி விட்டால் அவனை எல்லா எதிரிகளும் கொல்ல விரும்புகிறார்கள்.

இன்னொரு பலசாலியின் முன்னே ஒருவனுடைய பலம் மங்குமேயானால், அவனது தாயின் இளமை வீணானதைத் தவிர அவன் பிறந்ததனால் என்ன பயன்?

பகைவனின் ரத்தம் என்கிற குங்குமத்தால் ராஜ்யலட்சுமியின் உடலில் பூசாவிட்டால் அவள் தைரியசாலிகளுக்குக் கூட தன் முழு அருளையும் அளிப்பதில்லை.

பகைவனின் ரத்தத்தாலும், பகைவனின் மனைவியின் கண்ணீராலும் நனைக்கப்பட்டிராத ராஜ்யமுள்ள அரசனின் வாழ்வில் சிறப்பு ஏது?

என்று பதிலளித்தது சஞ்ஜீவி.

பிறகு காக்கையரசன் அனுஜீவியைப் பார்த்து, ‘’நண்பனே, உன் அபிப்பிராயத்தைச் சொல்’’ என்றது. அதற்கு அந்த மந்திரி, ‘’அரசே, அந்தத் துஷ்டன் அதிக பலமுள்ளவன், மரியாதையில்லாதவன்; ஆகவே அவனோடு சண்டைக்குப் போவது, சமாதானம் செய்வது, இரண்டும் சரியில்லை. இந்தத் தளத்தைவிட்டுச் சென்று விடுவதே நமக்குத் தகும்.

பலத்தினால் திமிர் கொண்டவனும், துஷ்டனும், மரியாதையில்லாதவனுமான விரோதியுடன் சண்டை சமாதானம் இரண்டும் கூடாது. தளத்தைவிட்டுச் செல்வதே வெற்றிக்கு வழி.

தளமாற்றத்தால் இரண்டு நன்மைகள் உண்டு: ஒன்று, ஆபத்திலிருந்து உயிரைக் காத்துக்கொள்வது: இரண்டாவது, வெற்றி கிட்டும் முறையில் திட்டமிட்டு படையெடுப்பதற்கு அவகாசம் பெறுவது.

சிறந்த வீரனும் வெற்றிபெற விரும்புகிறவனும் சித்திரை, கார்த்திகை மாதங்களுக்கிடையேதான் எதிரி நாட்டின் மேல்படையெடுக்க வேண்டும். மற்ற மாதங்களில் படையெடுக்கலாது.

எதிரி சங்கடத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறபோதும், பலவீனனாயிருக்கிறபோதும், போரார்வம் மிக்கவர்களுக்கு எந்தக் காலமும் படையெடுக்கத் தகுந்த காலமே.

தீரர்களையும், வீரர்களையும், பலசாலிகளையும், வைத்துச் சொந்த தளத்தைப் பலப்படுத்திக்கொண்ட பிறகு எதிரி நாட்டில் முதலில் ஒற்றர்களைப் பரப்பிவிட்டு கடைசியில் படையெடுக்க வேண்டும்.

ஆகவே, அரசே! தற்சமயம் தாங்கள் தளத்தை மாற்றுவதுதான் தகுந்த காரியம். பலசாலியான அந்தப் பாவியுடன் சண்டையோ சமாதானமோ செய்வது சரியல்ல.

இன்னொரு விஷயம், காரணம் காரியம் இரண்டையும் கவனிப்போமானால் பின்வாங்கிச் செல்வதே தக்கது என்று ராஜநீதி சொல்கிறது. எப்படியென்றால்,

ஆடு பின்வாங்குவது பலமாக முட்டுவதற்கே. சிங்கம் பதுங்குவது மேலும் கோபத்தோடு பாய்வதற்கே. புத்திசாலிகள் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு நெஞ்சில் வஞ்சத்தை இரகசியத்தில் வைத்து வளர்த்து வருவார்கள்.

பலம் பொருந்திய பகைவனைக் கண்டு நாட்டைவிட்டுச் செல்பவன், யுதிஷ்டிரனைப்போல் உயிரைக் காத்துக் கொண்டு பிறகு ராஜ்யத்தை அடைகிறான்.

பலவீனன் அகங்காரங்கொண்டு பலசாலியோடு சண்டை செய்தால் அவன் எதிரியின் விருப்பத்தைத்தான் நிறைவேற்றுவான். தனது உயிரையும் குலத்தையும் தான் நாசமாக்கிக் கொள்வான்.

ஆகவே, பலசாலியை நாம் சமாளிக்க வேண்டியிருப்பதால் இப்போது பின்வாங்குவதே நல்லது. இது சண்டையோ, சமாதானமோ செய்துகொள்ளும்  காலமில்லை’’ என்று பதில் வந்தது.

அதனுடைய வார்த்தைகளைக் கேட்டபிறகு காக்கை அரசன் பிரஜீவி என்ற மந்திரியிடம், ‘’நண்பனே, உன் அபிப்ராயத்தைத் தெரிவி’’ என்று சொல்லிற்று.

‘’அரசே, எனக்குச் சண்டை, சமாதானம், தளமாற்றம் மூன்றுமே சரியென்று தோன்றவில்லை. முக்கியமாகத் தளமாற்றம் சரியென்று தோன்றவேயில்லை. எப்படியென்றால்,

முதலை தன் இருப்பிடத்திலிருக்கும்போதுதான் யானையைக் கூட ஜெயித்துவிடும். தன் இருப்பிடத்தை விட்டுப்போனால் நாய்கூட அதைத் தோற்கடித்துவிடும்.

பலசாலிகள் தாக்கும்போது நீ உன் சொந்தக் கோட்டைக்குள் இருந்துகொள்! அங்கிருந்துகொண்டே உன் நண்பர்களை உதவிக்கு அழைத்து உன் விடுதலைக்கு முயற்சி செய்!

எதிரி வருவதைக் கண்டு பயத்தால் நடுங்கிப்போய் தன் இருப்பிடத்தை விட்டுச் செல்கிறவன், மறுபடியும் அங்குத் திரும்பி வருவதில்லை.

தன் தளத்திலேயே இருந்து கொள்கிற ஒருவன் பலமுள்ள நூறு சத்ருக்களையும் எதிர்த்துச் சண்டை செய்ய முடியும். ஆகவே இருக்கிற இடத்தைவிடட்டுப் பெயரக்கூடாது.

எனவே, தன் கோட்டையைப் பலப்படுத்த வேண்டும். அதன் அகழியையும், மதிற்சுவர்களையும் திடப்படுத்த வேண்டும். இயந்திரங்களும், அம்புகளும் கொண்டு திகழும்படி அதைச் செய்து வைக்க வேண்டும். தானியவகைகளைக் கொண்டு கோட்டையை நிரப்பி வைக்க வேண்டும்.

யுத்தம் செய்யத் தீர்மானித்து எப்போதும் தயாராக இருக்கிறவன் யுத்தத்தில் பிழைத்தால் புகழ்பெறுகிறான், இறந்தால் சுவர்க்கம் அடைகிறான்.
இளைத்தவர்களேயானாலும் அவர்களெல்லோரும் ஒன்று சேர்ந்தால் அவர்களைப் பலசாலிகளாலும் துன்புறுத்த முடியாது. ஒரேயிடத்தில் கூட்டமாக வளரும் புதரைப் புயல்காற்று பெயர்ப்பதில்லையல்லவா?

மரம் பெரிதாக இருக்கலாம். நன்றாக வேரூன்றியும் இருக்கலாம். இருந்தாலும் அது தனி மரமாக நின்றால் அதைப் பலமான புயல்காற்று வேரோடு பெயர்த்து எறிகிறது.

ஆனால் மரங்கள் நன்கு வேரூன்றி கூட்டம் கூட்டமாக இருந்தால் அவற்றைப் புயல்காற்று சுலபத்தில் பெயர்க்கிறதில்லை.

அதுமாதிரியே, தனி மனிதன் ஒருவன் அதிவீரனாக இருந்தபோதிலும் அவனைத் தோற்கடிக்க முடியுமென்றே எதிரிகள் மதிக்கின்றனர். ஆகவே அவனை இம்சிக்கின்றனர்.

என்று சொல்லிற்று.

அந்த விஷயத்தையும் கேட்டபிறகு காக்கையரசன் சிரஜீவியைப் பார்த்து, ‘’நண்பனே, உன் அபிப்பிராயத்தையும் சொல்’’ என்றது.

‘’அரசே, அந்த ஆறு உபாயங்களில் உறவுகொள்வதே சிறந்தது என்று எனக்குத் தோன்றுகிறது. எனவே தாங்கள் அதையே அனுசரிக்க வேண்டும். எப்படியென்றால்,

சாமர்த்தியமும், தீரமும் இருந்தாலும் சகாயமில்லாமல் என்ன செய்ய முடியும்? காற்று சிறிதேனும் அடிக்காவிட்டால் நெருப்பு தானாகவே அணைந்துவிடுகிறது.

ஆகவே, நீங்கள் இருந்துகொண்டே யாராவது ஒரு பலசாலியுடன் உறவு உடன்படிக்கை செய்துகொள்ளவேண்டும். அவன் மூலம் எதிரிக்கு ஈடு கொடுக்கும் அளவுக்குப் பலம் சேர்க்க முடியும். அப்படிச் செய்யாமல், தாங்கள் சொந்த தளத்தைவிட்டுச் சென்றால் யாரும் வாய் வார்த்தையால் கூடத் தங்களுக்கு உதவமாட்டான்.

காட்டில் எரியும் நெருப்புக்குக் காற்று உதவியாக இருக்கிறது. அதே காற்றுத்தான் விளக்கையும் அணைக்கிறது. இளைத்தவனை யார் மதிப்பார்கள்?

மேலும், பலசாலியோடுதான் உறவுகொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. பலவீனர்களோடு வைத்துக்கொள்கிற உறவும் தன்னைக் காத்துக்கொள்ள உதவும்.

மூங்கில் பலமில்லாததுதான் என்றாலும் அது கூட்டமாக இருந்தால் அதை வீழ்த்துவது கஷ்டம். பலமில்லாத அரசர்கள் ஒன்றாய்ச் சேர்ந்திருந்தால் அவர்களை ஜெயிக்க முடியாது.

அப்படியிருக்க, பலசாலிகளோடு உறவுகொள்வதைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா? எப்படியென்றால்,

பெரியவர்களோடு ஒன்று சேர்ந்தால் யாருக்குத்தான் உயர்வு இல்லை? தாமரை இலைமேல் இருக்கும் நீர்த்துளி முத்துப்போல் ஒளிபெறுகின்றது அல்லவா?

எனவே, அரசே! உறவு கொள்வதின்றி வேறு விதத்தில் பலம் சேர்க்க முடியாது. உறவுகொள்ள வேண்டும் என்பதே என் அபிப்ராயம்’’ என்று சிரஜீவி பதிலளித்தது.

இந்த அபிப்பிராயங்களைக் கேட்டபின் மேகவர்ணன் ஸ்திரஜீவி என்கிற மந்திரியைக் கேட்டது. மேகவர்ணனின் தந்தையிடம் வெகுகாலமாக மந்திரியாயிருந்தது ஸ்திரஜீவி. அது ஒரு தீர்க்கதரிசி. எல்லா ராஜநீதி சாஸ்திரங்களையும் கரைகண்டது. அதைப் பார்த்து மேகவர்ணன், ‘’பெரியவரே, நீங்கள் இங்கு இருக்கும்போதே இவர்கள் எல்லோரையும் நான் கேட்டதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அவர்கள் சொன்னதை எல்லாம் நீங்கள் கேட்டுவிட்டு எது சரியோ அதைச் சொல்வீர்கள் என்பதே அது. ஆகவே எது சரியோ அதன்படி கட்டளையிடுங்கள்’’ என்று சொல்லிற்று.

அதற்கு ஸ்திரஜீவி, ‘’குழந்தாய், இவர்கள் எல்லோரும் நீதி சாஸ்திரத்தைக் கொண்டுதான் சொன்னார்கள். ஒவ்வொன்றும் அந்தந்தக் காலத்துக்குச் சரியானதுதான். ஆனால் தற்சமயம் நயவஞ்சமாக நடப்பதற்குத் தான் காலம். ஒரு பழமொழி உண்டு

சண்டையிலும் சரி, சமாதானத்திலும் சரி, நம்பிக்கை வைக்கலாகாது. பலம்வாய்ந்த பாவியை நயவஞ்சகத்தைக் கொண்டுதான் வெல்லவேண்டும்.

தான் யாரையும் நம்பாமல், ஆசைகாட்டி எதிரியை நம்ப வைத்து அதன்மூலம் சுலபமாக வென்றுவிடலாம்.

நாசமாக்க விரும்பும் விரோதியை அறிவாளிகள் முதலில் தாங்களே வளர்த்துவிடுகின்றனர். சர்க்கரைப்பாகு முதலில் ஜலதோஷத்தை அதிகரிக்கச் செய்யும். பின்னால் அதை அறவே போக்கிவிடும்.

பெண்கள், பகைவர்கள், கெட்ட நண்பர்கள், குறிப்பாக விலைமாதர்கள் இவர்களிடம் நேராக நடந்துகொள்கிறவன் வாழ்வதில்லை.

கடவுள், பிராமணன், குரு ஆகியோரிடமும், தன்னிடத்திலும் ஒருவன் நேராகவே நடந்துகொள்ள வேண்டும். மற்றவர்களிடம் கபடமாகத்தான் நடக்க வேண்டும்.

மனதை அடக்கும் சந்நியாசி உலகமுழுவதையும் நேராகப் பார்க்கலாம். ஆனால் செல்வம் விரும்புகிறவர்கள், முக்கியமாக அரசர்கள், அப்படிச் செய்வதற்கில்லை.

நயவஞ்சகமாக நடந்துகொள்கிற நீ, நிச்சயமாக உன் ஸ்தானத்திலேயே இருப்பாய். பேராசையுள்ள பகைவனைச் சாவு சீக்கிரமே கொண்டுபோய் விடுகிறது.

மேலும், எப்போது விரோதியிடம் பலவீனம் ஏதாவது ஏற்படுகிறதோ அப்போது பார்த்து அவனைக் கொல்லவேண்டும்’’ என்று ஸ்திரஜீவி சொல்லிற்று.

‘’பெரியவரே, விரோதியின் இருப்பிடமே எனக்குத் தெரியவில்லையே! பின் எப்படி அவன் பலவீனம் தெரியப்போகிறது!’’ என்றது மேகவர்ணன்.

‘’குழந்தாய், அவன் இருப்பிடத்தை மட்டுமல்ல. அவனுடைய பலவீனத்தையும் ஒற்றர்கள் மூலமாக அறிந்து சொல்கிறேன்.

பசுக்கள் வாசனையைக்கொண்டு பார்க்கின்றன. பிராம்மணர்கள் வேதங்களைக் கொண்டு பார்க்கின்றனர். அரசர்கள் ஒற்றர்களைக் கொண்டு பார்க்கின்றனர். மற்றவர்கள் கண்களைக் கொண்டு பார்க்கின்றனர்.

இதைப்பற்றி இன்னொரு செய்யுளும் உண்டு:

தன் தரப்பிலுள்ள உதவியாளர்களையும், முக்கியமாக எதிர் தரப்பினரையும் பற்றிச் சிறந்த ஒற்றர்கள்மூலம் அறிந்து வைத்திருக்கும் அரசன் கெட்டநிலை அடைவதில்லை.

என்று ஸ்திரஜீவி சொல்லிற்று.

‘’பெரியவரே, உதவியாளர் எப்படிப்பட்டவர்கள்? எவ்வளவு பேர் இருக்க வேண்டும்? ரகசிய ஒற்றர்கள் எப்படி இருக்க வேண்டும்? எல்லாவற்றையும் சொல்லுங்கள்’’ என்றது மேகவர்ணன்.

‘’இந்த விஷயங்களை யுதிஷ்டிரர் கேட்டபோது நாரதர் சொன்னார்:

‘எதிர்தரப்பில் பதினெட்டுவிதமான உதவியாளர்களும், தன்தரப்பில் பதினைந்து வித உதவியாளர்களும் இருக்க வேண்டும். ஒவ்வொரு உதவியாளனுக்கும் மூன்று ரகசிய ஒற்றர்களை நியமித்து அவர்களைப் பற்றி அறிந்து வர வேண்டும். அவர்களின் மூலமாகத் தன் தரப்பு, எதிர் தரப்பு இரண்டும் வசமாகிவிடும்.

எதிரிக்கு உதவியளர்கள் பதினெட்டுபேர்.  தன் தரப்பில் பதினைந்து பேர்.  இவர்கள் ஒவ்வொருவரையும் அறிய இரகசிய ஒற்றர்கள் மூன்றுபேர் இருக்க வேண்டும்.

என்று சொல்லப்பட்டிருக்கிறது. உதவியாளன் என்பது இங்கே வகுத்த காரியத்தைத்தான் குறிக்கிறது. அதைச் சரியாக செய்யவிட்டால் அரசனுக்கு நாசமேற்படும். சரிவரச் செய்து முடித்தால் அரசனுக்கு உயர்வு தரும். அது எப்படி என்றால், எதிர்தரப்பில் மந்திரி, புரோகிதன், சேனாதிபதி, யுவராஜா, வாயில்காப்போன், அந்தப்புரக் காவலாளி, ஆலோசனையாளர், வரி வசூலிப்போன், கட்டியக்காரன், சடங்குகளைக் கவனிப்பவன், குதிரைலாயத்தின் தலைவன், பொருளாளன், யானைகளின் தலைவன், கணக்கன், போர் இலாகா மந்திரி, கோட்டையைக் காப்போன், அரசனின் அன்பன்,  காட்டு இலாகா அதிகாரி என்றபடி உதவியாளர்கள் இருக்கிறார்கள். இவர்களைப் பிரித்து விட்டால் எதிரியை வென்றுவிடலாம். தன் தரப்பில் பட்டத்தரசி, தாயார் செயலாளர், பூக்காரன், படுக்கையறைக்காவலாளி, ஒற்றர்களின் அதிகாரி, வான சாஸ்திரி, வைத்தியன், நீர் சேர்ப்பவன், தாம்பூலம் ஏந்துபவன், குரு, மெய்க் காப்பாளன், சமையல் அதிகாரி, சிவிகைபிடிப்போன், நடன மாதர்கள், என்று பதினைந்து உதவியாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் மூலமாகத்தான் தன் தரப்பு வீழ்ச்சியடையும், எப்படி என்றால்,

வைத்தியன், வான சாஸ்திரி, குரு, தன் கட்சியிலேயே உளவு வேலை செய்வார்கள். பாம்புப்பிடாரனும், பைத்தியக்காரனும் எதிரிவசமுள்ள யாவற்றையும் அறிவார்கள்.

என்றது ஸ்திரஜீவி.

‘’பெரியவரே, காக்கைகளும் ஆந்தைகளும் கொன்றுகொள்ளும் அளவுக்கு இப்படிப் பகைத்துக்கொள்வானேன்?’’ என்று மேகவர்ணன் கேட்டது. ‘’கேள்’’ என்று ஸ்திரஜீவி சொல்லத் தொடங்கியது.

Series Navigationதங்கம் 4 – நகை கண்காட்சிமலை பேச்சு – செஞ்சி சொல்லும் கதை -23
author

அன்னபூர்னா ஈஸ்வரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *