தகழியின் பாப்பி அம்மாவும் பிள்ளைகளும்

author
0 minutes, 3 seconds Read
This entry is part 12 of 28 in the series 9 செப்டம்பர் 2012

 

பாஸ்கர் லக்ஷ்மன் 

வாழ்விலும் தாழ்விலும், மாறாத சிறந்த குண நலன்களும் மனித நேயமும் கொண்ட மனிதர்களை இன்றும் நாம் எதிர்கொள்கிறோம். ஆனால் அதன் சதவிகிதம் குறைந்துள்ளது என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். முப்பது வருடங்களுக்குமுன்கூட ஒரே தெருவிலோ, கிராமத்திலோ இருப்பவர்கள் ஒரே குடும்பம் போல்தான் இருந்து வந்தார்கள். இன்று , குறிப்பாக, நகரங்களில் பக்கத்து வீட்டில்கூட யார் இருக்கிறார்கள் என்று தெரியாத நிலைதான் உள்ளது. குடும்பத்துடன் வெளியூருக்குச்  செல்ல நேர்ந்த என் நண்பர் ஒருவர் ஒரு வாரம் தன்னுடைய மீன் வளர்க்கும் தொட்டியைப் பாதுகாத்துக் கொள்ளச் சொல்லிக் தன் பிளாட்டில் இருக்கும் பலரிடம் கேட்டபோது ஒருவரும் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. இதுதான் இன்றைய நிலை.

 

ஆனால் பாப்பி அம்மாள் மேல் பல குற்றங்களையும், வசவுகளையும் வாரி  இறைத்துக் கொண்டிருக்கும் அண்டை வீட்டார்கள், பாப்பி அம்மாள் பிரசவ வேதனையில் அவதிப்படும்போது, அனைத்து வேற்றுமைகளையும் மறந்து நடு இரவில் அவளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்கிறார்கள். அந்த மனித நேயத்தை மிகவும் விரிவாக இந்தப் புனைவில் தகழி விவரித்துள்ளார்.

 

பாப்பி அம்மாள் தன் முதல் குழந்தையான பத்மநாபனை க் கொடுத்த கையோடு அவள் கணவன் இறக்கிறான். பாப்பி அம்மா தன் குழந்தையுடன் மிகவும் சிரமமான வாழ்க்கையை மேற்கொள்கிறாள். அப்போது  தன் அண்டை வீட்டர்களான குட்டி அம்மா, நாணி  அம்மா, பாரு அம்மா, காளியம்மா முதலியவர்கள்தான் பத்மநாபன்  பசியறியாமல் வளர உதவுகிறார்கள். அவன் அந்த அன்பின் ருசியை இறுதி வரை மறக்காமல் இருக்கிறான்.

 

சூழ்நிலை காரணமாக நான்கு சக்கரம் (பழைய திருவாங்கூர் நாணயம்) கொடுத்த பாச்சு பிள்ளையுடன் உறவு கொண்டு பாப்பி அம்மாளுக்கு  கார்த்தயாயினி என்ற மகள் பிறக்கிறாள். ஆனால் பாச்சுப் பிள்ளை தான் கார்த்தயாயினியின் தகப்பன் என்பதை ஒப்புக் கொள்ள மறுக்கிறான். அதன் பிறகு பாப்பி அம்மாளுக்கு  கோவிந்த நாயர் தொடர்பு நாராயணன் என்ற குழந்தையின் பிறப்பு.

 

பாப்பி அம்மாவின் முதல் மகனான பத்மநாபன்  கோயம்பத்தூரில் வேலைக்குச் செல்கிறான். அவன் இரண்டு ஓணம் படிக்கைக்கு வீட்டில் இல்லாமல் அந்த வருட ஓணம் படிக்கைக்கு வரும் சமயம்தான் பாப்பி அம்மாள் கோவிந்தா நாயர் மூலம் கர்ப்பமாகி இருக்கிறாள் அவள் இதை எப்படி பத்மநாபனிடம் தெரிவிப்பது என்று தவிக்கிறாள். அண்டை வீட்டாரை பார்க்கச் செல்லும்போது தான் கேட்க நேரிடும் கேலிப் பேச்சுக்கு அவன் பொறுமையாக இருக்கிறான். மேலும் அவனது காதுபட பாட்டி (தந்தையின் அம்மா) வீட்டில் பேசப்படும் கூர்மையான சொற்களினால் மனம் நொந்து, அங்கு எதுவும் சாப்பிடாமல் வெளியேறுகிறான்.  பத்மநாபன்  ஊர் செல்லும் வரை பாப்பி அம்மா வீட்டில் இருக்கும் கோவிந்த நாயர் அதன் பிறகு அங்கு வருவதை நிறுத்திக் கொள்கிறார். இதை நோட்டம் விடும் அண்டை வீட்டார் குட்டி அம்மா கணவன் குட்டன் உதவியுடன் வக்கீல் நோட்டீஸ் அனுப்புகிறார்கள். அதற்கு பாப்பி அம்மாவின் சம்மதம் இல்லை எனத் தெரிந்தவுடன் அந்த முயற்சியை பாதியில்  கை விடுகிறார்கள்.

 

இதன் நடுவில் பாலகிருஷ்ணன் நன்கு முன்னேறி பாண்டி  நாட்டில் டீக்கடை வைத்து பணம் சம்பாதித்து சொந்தமாக நிலம் வாங்குகிறான். பாரு அம்மாவின் மகனான பரமேஸ்வரன் பிள்ளையைத் தன்னுடன் அழைத்துச்  செல்கிறான். அவனும் வீட்டிற்கு பணம் அனுப்புகிறான். இதைக் கேட்டு குட்டி அம்மாவும், குட்டன் பிள்ளையும் தங்கள் பிள்ளையான வாசுதேவனை பாலகிருஷ்ணனுடன் அனுப்ப முடியவில்லையே என்று சண்டை இடுகிறார்கள். ஆனால்  ஒரு நாள் வீட்டில் பணத்தைத் திருடிக் கொண்டு வீட்டை விட்டு வாசுதேவன் ஓடிவிடுகிறான். அவனைக் காணும்  பத்மநாபன்  வாசுதேவனையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டு வேலை போட்டுத் தருகிறான்.

 

பத்மநாபனை பாரு அம்மாவின் மகளான பங்கஜாக்ஷிக்கும், பரமேஸ்வரன் பிள்ளையை கார்த்தியாயினிக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என நாணியம்மா யோசனை கூறுகிறாள்.  இன்று வசதியாக இருக்கும் பாப்பி அம்மாள் இந்த சம்மந்தத்தை ஏற்றுக் கொள்வாளா என யோசிகிறார்கள். அவள் பத்மநாபனும், பாச்சுப் பிள்ளையும்தான் இதனை முடிவு செய்ய வேண்டும் என்றும், தனக்கு இதில் சம்மதம் எனவும் கூறுகிறாள். பத்மநாபனுடன்  இருக்கும் வாசுதேவன் அங்கிருந்து மீண்டும் ஊர் திரும்பி பத்மநாபனைப் பற்றி அவதூறு கூறுகிறான்.

 

ஆனால் பத்மநாபனிடமிருந்து வரும் கடிதம் வாசுதேவன் பணத்தைத் திருடிக் கொண்டு ஓடி வந்துவிட்டான் என்ற செய்தியைத்  தெளிவாக்குகிறது. பத்மநாபன்  பரமேஸ்வரனுக்கு ஒரு ஓட்டல் வைத்துக் கொடுக்க முயற்சிப்பதாகவும், தானும் சிறிது பணம் சம்பாதித்தவுடன் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் கடிதத்தில் கருத்துத் தெரிவிக்கிறான். பாச்சுப் பிள்ளை பாப்பி அம்மாவின் வசதியைப் பார்த்து அங்கு வந்து ஒட்டிக் கொள்கிறார். அவர் முடிவும் பாப்பி அம்மாவின் வீட்டிலேயே நடக்கிறது. பாச்சுப் பிள்ளையை எரித்து இறுதிச் சடங்கை நாராயணன் செய்கிறான்.

 

இந்தப் புதினத்தைப் பொறுத்தவரை அந்தக்காலத்து கேரள மக்கள் வாழ்கையைப் பிரதிபலிப்பதாக இருக்கிறது. மனித நேயம், அண்டை வீட்டார் பொறாமை, தொழிலுக்காக இடம் பெயர்தல், தன இன மக்களை ஒருங்கிணைத்து அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு வழிகாட்டுதல் என்ற பண்புகளை முன் வைக்கிறது.

 

பாப்பி அம்மாள் போல் பொறுமையும், சகிப்புத் தன்மையும் இருக்கும் ஒரு [பாத்திரப் படைப்பு இன்றுள்ள சூழ்நிலையில் எந்த அளவுக்கு ஒத்து வரும் எனக் கூற முடியாது. ஆனால் கேரள மக்களின் கடும் உழைப்பு  மற்றும் தொடர் முயற்சி ஒரு தொடர்கதை என்பதில் சந்தேகமில்லை. தமிழில் சு.ரா. வின் மொழிபெயர்ப்பும் வாசிக்க ருசியாகத்தான் இருக்கிறது. இதைக் காலத்தைக் கடந்து நிற்கும் மிகச் சிறந்த இலக்கியப் படைப்பு எனக் கூற இயலவில்லை. இருந்தாலும் பாத்திரச் சித்தரிப்புகள் மேலோட்டமானவைகளாக இல்லை. ஒரு முறையேனும் படிக்கப்பட வேண்டிய நாவல்.

 

Series Navigation2016 ஒபாமாவின் அமெரிக்காமிஷ்கினின் “ முகமூடி “
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *