ஜோதிர்லதா கிரிஜா
28.11.2012 துக்ளக் இதழில், ‘இதில் ஒரு ராஜ தர்மம் இருக்கிறது’ என்கிற தலைப்பின் கீழ் ராமர் சீதையைக் காட்டுக்கு அனுப்பியது சரிதான் எனும் ரீதியில் சோ அவர்கள் எழுதியிருக்கிறார். ராமர் ஓர் அவதார புருஷன் என்றே நானும் நம்புகிறேன். மச்சாவதாரம் தொடங்கி அனைத்து அவதாரங்களும் சார்ந்த இலக்கியங்கள் இந்தப் புவியில் உயிரினங்களின் தோன்றத் தொடங்கியதிலிருந்தான பரிணாம வளர்ச்சியையே எடுத்துச் சொல்லுகின்றன. மனிதனாய்ப் பிறக்கும் எவரும் ராமனைக் காட்டிலும் உயர்ந்தவனாக இருக்க முடியாது என்பதையே ராமாவதாரம் தெரிவிப்பதாய்த் தோன்றுகிறது. அதாவது, எந்த மனிதனாலும் முழுக்க முழுக்க அப்பழுக்கே அற்றவனாக இருக்க முடியாது என்பதே ராமாயணத்தின் செய்தி எனப் படுகிறது. அதிலும் பெண் என்று வரும்போது, அவள் கிள்ளூக்கீரைதான் என்பது ஆனானப்பட்ட அவதார ராமனின் கருத்தாகவே இருக்கும் போது, பிற சாதாரணர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டியதில்லை என்பதே ராமாயணத்தின் செய்தி. எனவே, ராமன் எனும் மனித அவதாரத்தை நொந்து பயனில்லை. மானிடனை அவ்வாறு படைத்துள்ள ஆண்டவனைத்தான் நோக வேண்டும்.
திரௌபதியைத் துகிலுரிக்கச் செய்யப்பட்ட முயற்சியைத் தடுக்காமல் செயலற்றுப் பார்த்துக்கொண்டிருந்த பீஷ்மரை இன்றளவும் பலர் பிதாமகர் என்கிற அடைமொழியுடன் கொண்டாடிப் பிதற்றிக்கொண்டிருப்பது, மகாபாரதத்தைப் புனிதம் என்று தவறாய்க் கருதுவதன் விளைவேயாகும். அவரது பொறுப்பு ராஜ்ய பாரம்
மட்டுமே என்றும் அதனால் திரௌபதியின் மானபங்கத்தைத் தடுக்க அவர் முயலாதது குற்றம் ஆகாது என்றும் கூறிக் குறைந்த பட்ச மனிதாபிமானம் கூட இல்லாத அவரது பண்பற்ற செயலை நியாயப் படுத்துதல் போன்றதே ராமர் ஓர் அரசர் எனும் காரணத்தால் அவர் சீதையை விரட்டியது சரியே என்று ராமருக்கு வக்காலத்து வாங்குவதும் ஆகும். மாபெரும் இலக்கியங்களுக்கு மதச் சாயத்தை அளவுக்கு மேல் பூசி, அவற்றின் பால் பெரிதும் பற்றுக் கொள்ளூவதால், நியாய அநியாயங்களைப் பாகுபடுத்தி நடுநின்று ஆராய்ந்து விமர்சிப்பது அறிவுஜீவிகளுக்கும் கூட இல்லாமல் போகிறது என்பதற்கு இவ் விரண்டு அநியாயங்களும் எடுத்துக்காட்டுகளாம்.
ராமர் சீதையைக் கைவிட்டது எந்த அடிப்படையில் ராஜரீகமான அவசியம்? மக்களின் அபவாதப் பேச்சு அரசாட்சியை எவ்வாறு பாதிக்கும் என்பதற்கு, சோ அளிக்கும் விளக்கம் ஏற்புடையதன்று. ‘இப்படி சீதையைப் பற்றிச் சந்தேகப்படுகிற பேச்சு பரவிக்கொண்டே போனால், அது அவளுக்கும் நல்லதல்ல, ஆட்சிக்கும் நல்லதல்ல’ என்ற முடிவுக்கு அவர் வந்தார் என்கிறார் சோ. மக்களுள் சிலர் பரப்பிய அவதூற்றின் அடிப்படையில் சீதையைத் துரத்தியது மட்டும் அவளுக்கு நல்லதாமா! இதென்ன வாதம்? ஒரு விதிவிலக்குக்கூட இல்லாமல் மக்களில் அனைவருமே அந்த அபவாதத்தை ஏற்றிருப்பார்களா என்ன? அக்கினிப் பிரவேசம் செய்து சீதை தனது அப்பழுக்கின்மையை உலகுக்கு மெய்ப்பித்துவிட்ட நிலையில் அந்த அபாண்டத்தை நம்புவதற்கு அத்தனை மக்களும் அறிவிலிகளா!
அரசனின் மனைவி பற்றி நாட்டில் பலவித விமர்சனங்கள் எழுந்துவிட்டால், அவனது ஆணைகளுக்கு மரியாதை இருக்காது என்று சோ சொல்லுகிறார். சீதை தனது தூய்மையை நிரூபித்த பின்னரும், ராமர் அவளைக் காட்டுக்கு அனுப்பியது அநீதி என்னும் கருத்துக்கொண்ட பலரின் அதிருப்தி மட்டும் அரசாட்சியைப் பாதிக்காதா? இத்தகையோருக்கு ராமர் மீது மரியாதையும், அவர்தம் ஆணைகளை ஏற்கும் கீழ்ப்படிதலும் வந்து விடுமா?
தமக்கே உடன்பாடு இல்லாத நிலையிலும், ராமர் சீதையை அக்கினிப் பிரவேசத்துக்கு உட்படுத்தியது அவளது களங்கமின்மையை உலகுக்குக் காட்டுவதற்காகத்தானே? அப்படி மெய்ப்பித்த பிறகும், ராமரே சீதையைக் காட்டுக்கு அனுப்பியது என்ன நியாயம்? கடவுள் மனிதனாக அவதரிக்கும் போது மனிதனுக்குரிய இயல்புகளுடன்தான் நடந்து கொள்ளுவார் என்று சொல்லப்படுகிறது. எனவே, ராமர் மீது கடவுள்தன்மையை அதீதமாய்த் திணித்து அவரது ஒவ்வொரு செயலுக்கும் – வாலிவதம் உட்பட – நியாய்ம் கற்பித்தல் சரியாகுமா?
சோவின் விமர்சனக் கருத்துச் சரியென்றால், ராமர் முடிதுறந்து சீதையோடு அரண்மனையை விட்டு வெளியேறியன்றோ இருக்க வேண்டும்? அதுதானே சரியான தீர்வாக இருந்திருக்கும்? சீதைக்கும் வருத்தம் நேர்ந்திராது; மக்களுக்கும் ராமரின் ஆணைகளை மதிக்காத மனநிலை ஏற்பட்டிராதல்லவா? சீதையை வெளியேற்றிய பிறகு ராமர் வேறு திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது சீதைக்கு அவர் இழைத்த கொடுமையை இல்லை யென்றாக்கிவிடாது. அவரது ஏகபத்தினி விரதத்தைப் பாராட்டலாமே யன்றி, அவர் சீதைக்கு இழைத்த கொடுமையை இதன் மூலம் நியாயப் படுத்திவிடவோ சரிக்கட்டி விடவோ முடியாது.
ஆனானப்பட்ட ராஜாஜியே, தமது ராமாயணத்தின் முடிவுரையில் ராமனின்பால் தம் அதிருப்தியைத் தெரிவித்திருப்பதோடு, ‘ சீதையின் துயரம் இன்னும் முடியவில்லை. நம் பெண்களின் வாழ்க்கையில் அது தொடர்கிறது’ என்றல்லவோ அங்கலாய்த்திருக்கிறார்?
முடிவாக, நம் மதிப்புக்குரிய சோ இது போல் சிந்திப்பதும், ராமருக்குச் சப்பைக்கட்டுக் கட்டுவதும் ஏமாற்றம் அளிக்கிறது.
………
jothigirija@live.com
- சந்திரனில் விவசாயம் எப்படி நடக்கலாம் என்று யூகம் தரும் இயந்திர விவசாயப் பண்ணைகள்
- மலேசிய தான் ஸ்ரீ சோமா அறவாரியத்தின் அனைத்துலகப் புத்தகப் பரிசினை இலங்கை அறிஞர் மு.பொன்னம்பலம் வென்றார்
- மூன்று பேர் மூன்று காதல்
- மதிப்பும் வீரமும்
- ‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……………… 8. தி.ஜ.ரங்கநாதன் – ஆஹா ஊகூ
- அரசன் சார்ந்த அறநெறி / இல்லற நெறி – (இராமாயண ராமர் பற்றி)
- காளை மேய்த்தல்(Ox Herding)- பத்து ஜென் விளக்கப் படங்கள்
- வெளி
- கண்ணீர்ப் பனித்துளி நான்
- தாகூரின் கீதப் பாமாலை – 43 சதுப்பு நிலப் பாடல்கள்
- ஒருவர் சுயத்தனம் பற்றி எனது பாடல் -1 (1819-1892) (புல்லின் இலைகள் -1)
- நினைவுகளின் சுவட்டில் (105)
- சந்திப்பு
- வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 39
- மேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் அங்கம் -4 பாகம் -6
- பி.ஜி.சம்பத்தின் “ அவன் நானல்ல ( மலையாளக்கதை ) – ஒரு பார்வை
- 22 ஃபீமல் கோட்டயம் ( மலையாளம் )
- நம்பிக்கை ஒளி! (10)
- சீமைத் தரகர்களும் ஊமை இந்தியர்களும்
- வந்த வழி-
- பாகிஸ்தானில் பாதுகாப்பற்ற கருக்கலைப்பால் நிகழும் மரணங்கள்
- வேள்வெடுத்தல் (வேவு எடுத்தல்) என்னும் நகரத்தார் திருமண நடைமுறை
- ஆத்ம சோதனை
- உன்னை போல் ஒருவன், முசுலிம்களுக்கு எதிரான படமில்லை? – 1
- பூகோளம் சூடேறி ஆர்க்டிக் பனிப் பாறைகள் உருகி கடல் வெப்பம், மட்டம் உயர்வு.
- அக்னிப்பிரவேசம் -13