அக்னிப்பிரவேசம்-22

This entry is part 27 of 31 in the series 10 பெப்ருவரி 2013

தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத்

yandamoori@hotmail.com

தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன்

tkgowri@gmail.com

சூரியன் உதிக்கப் போவதற்கு அடையாளமாக கிழக்குத் திசையெல்லாம் செந்நிறக் கம்பளத்தை விரித்தாற்போல் இருந்தது. விஸ்வம் தன் வீட்டிற்கு முன்னால் இருந்த பூச்செடிகளுக்கு இடையே உட்கார்ந்திருந்தான். பக்கத்திலேயே ட்ரான்ஸிஸ்டரிலிருந்து பத்திப் பாடல் மெல்லிய குரலில் கேட்டுக் கொண்டிருந்தது.

கேட்டிற்கு அருகில் ரிக்ஷா நின்ற ஓசை கேட்டுக் கண்களைத் திறந்தான் விஸ்வம். பாவனாவும், பாஸ்கர் ராமமூர்த்தியும் சாமான்களுடன் இறங்கிக் கொண்டிருந்தார்கள். சந்தோஷத்தால் விஸ்வத்தின் கண்கள் பனித்தன. மாப்பிள்ளை தன் விருப்பத்தைத் தெரிந்து கொண்டாற்போல் பாவனாவை அழைத்துக் கொண்டு வந்தது அவனிடம் நன்றியுணர்ச்சியை ஏற்படுத்தியது. அருகில் வந்த பாவனாவை அன்புடன் அணைத்துக் கொண்டான். பாவனா கொஞ்சம் இளைத்து விட்டாற்போல் இருந்தது. ஆனாலும் அவள் கண்களில் சந்தோஷம் பளிச்சிட்டதைப் பார்த்த போது மனம் பூரித்து விட்டது.

“கடிதம் போட்டிருந்தால் ஸ்டேஷனுக்கு வந்திருப்பேன் இல்லையா?”

“அழகாய் இருக்கு மாமா! நாங்க என்ன சின்னக் குழந்தைகளா? அல்லது இதுதான் புது இடமா? உங்களை எல்லாம் பார்க்கணும் போல் இருந்தது. வந்து விட்டோம்” என்றான் மூர்த்தி. அந்தப் பதில் விஸ்வத்தின் சந்தோஷத்தை இருமடங்காக்கியது.

“ரொம்ப சந்தோசம்.” மகிழ்ந்து போனான் அவன்.

இரண்டு நாட்கள் சந்தோஷமாய்க் கழிந்துவிட்டன. மூன்றாவது நாள் ஆரம்பித்தான் பாஸ்கர் ராமமூர்த்தி.

“பாவனா! உங்க அப்பா இப்போ கொஞ்சம் தேறி இருக்கிறார் போல் இருக்கு இல்லையா?”

“ஆமாங்க. காலம்தானே அந்தக் காயத்தை மறக்கடிக்கணும்? அம்மா போய் ஒரு வருஷம் ஆகிவிட்டது.”

“ச்சே.. அதைச் சொல்லவில்லை. பொருளாதார ரீதியாய் கொஞ்சம் நன்றாய் இருக்கிறார் போல் தெரிகிறது. புது சாமான்கள் வாங்கி இருக்கிறார். கடனைக் கூட அடைத்து விட்டாற்போல் இருக்கு.”

‘ஆமாங்க. என் கல்யாணத்திற்கு அதிகமாய் செலவு பண்ணவில்லை இல்லையா? அதன் மூலவே பாதி தேறி விட்டார் என்று நினைக்கிறேன். அந்த விஷயத்தில் உங்கள் உதவியை என்றைக்குமே மறக்க முடியாது.” மன்ப்பூர்வமாகவே சொன்னாள் அவள்.

”அது இல்லை பாவனா! அப்பொழுது ஒன்றுமே வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். காரணம் வேறு இருந்தது என்று வைத்துக்கொள். எனக்கு ஏதோ பணம் வரும் என்று நம்பினேன். அதோடு கல்யாணத்திற்கு நிறைய செலவு பண்ணிவிட்டேன். இப்போ அதையெல்லாம் எப்படித் தீர்ப்பது என்று தெரியவில்லை. கடன்காரர்களிடமிருந்து தப்பித்துக் கொண்டு தலைமறைவாகத் திரிவது பழக்கமாகிவிட்டது. இந்தப் பயணத்தை வைத்துக் கொண்டது கூட அவர்களுக்குப் பயந்துதான். உனக்குத் தெரியாது பாவனா! எவ்வளவு நரகத்தை அனுபவித்துக்கொண்டு இருக்கிறேன் என்று.” அவன் தொண்டை அடைத்தது.

“அப்படி என்றால் இப்போ என்ன செய்வது?” பயந்தவாறு கேட்டாள்.

“உங்க அப்பாவைக் கேட்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.”

“அப்பாவையா? அவரிடம் அவ்வளவு பணம் ஏது?”

“இதோ பார் பாவனா! உங்க அப்பாவைக் கஷ்டப்படுத்தணும் என்ற உத்தேசம் எனக்கு இல்லை. ஒரு இருபத்தையாயிரம் வரதட்சணை வேண்டும் என்று கல்யாணத்திற்கு முன்னாடியே கேட்டிருந்தால் என்ன பண்ணியிருப்பார்?”

பாவனா யோசித்தாள். “கண்டிப்பாகக் கொடுத்திருப்பார்.” ஒப்புக்கொண்டாள். மற்றவர்கள் எல்லோரும் லட்சக்கணக்கில் கேட்டதற்கு இது எவ்வளவோ குறைச்சல்தானே?

“நானும் அதையே தான் சொல்கிறேன். தேவை ஏற்படும் என்று தெரியாததால் அப்போது கேட்கவில்லை. இப்போது சங்கடத்தில் இருக்கிறேன். கேட்பதில் தவறென்ன? அப்படியும் அக்காவிடம் கேட்டேன். ‘ஏதோ கொள்கைக்காக வரதட்சணை வாங்கிக்கொள்ளாமல் விட்டுவிட்டு இப்போழுது எங்களை ஏன் கேட்கிறாய்?’ என்று கோபித்துக்கொண்டாள். இப்போது யாரைப் போய்க் கேட்பேன், சொல்லு.”

“ஆனால் அப்பாவுக்கு உங்கள் மேல் உயர்ந்த எண்ணம் இருக்கு. இப்போ போய்க் கேட்டால் என்ன நினைப்பார்?”

“அதனால்தான் உன்னையே கேட்கச் சொல்கிறேன். நான் கேட்டால் வரதட்சணை என்றாகிவிடும். நீ கேட்டால் உதவி என்று நினைப்பார். எப்படிக் கேட்பாயோ, என்ன பண்ணுவாயோ, உன் இஷ்டம். அதன் மூலமாய் நம் கஷ்டம் தீர்ந்துவிடும். அப்புறமாய் சம்பளத்தைக் கொண்டு வந்து உன் கையில் கொடுத்து விடுகிறேன். சிக்கனமாய் எப்படி செலவு செய்வாயோ? அது உன் விருப்பம். என் செலவுக்கு மாதத்திற்கு எவ்வளவு தரணும் என்று நீ நினைக்கிறாயோ அதை நீயே தந்துவிடு.”

பாவானா விரும்பியதும் இப்படிப்பட்ட நடத்தையைதான். ‘இன்னும் பத்துரூபாய் கொடு’ என்று அவன் கெஞ்சுவதும், தான் கொஞ்சம் அழவைத்துவிட்டுப் பிறகு தருவதும்! எத்தனை அழகான அனுபவம்?

“முயற்சி செய்கிறேன்” என்றாள்.

பாஸ்கர ராமமூர்த்தி அன்றைக்கே கிளம்பி போய்விட்டான்.

********

வாக்களித்துவிட்டாளே தவிர பாவனாவுக்குத் தந்தையிடம் அதைப் பற்றிப் பேசுவது அத்தனை சுலபமாக இருக்கவில்லை. அவள் கவலையுடன் இருப்பதைப் பார்த்துவிட்டு விஸ்வம் தானாகவே கேட்டான.

“ஏம்மா? மாப்பிள்ளை தனியாய் இருப்பார் என்று கவலையாய் இருக்கா?”

“இல்லை அப்பா. அதெல்லாம் ஒன்றும் இல்லை.” தைரியத்தைக் கூட்டிக்கொண்டாள். “அப்பா! நான் ஒரு விஷயம் கேட்கட்டுமா?” அருகில் போய் உட்கார்ந்துகொண்டாள்.

“கேளும்மா? என்ன தயக்கம்? பிரச்சனை ஏதாவது இருந்தால் என்னிடமில்லாமல் வேறு யாரிடம் சொல்லுவாய்?”

‘கல்யாணத்துக்கு முன்னால் உங்க மாப்பிள்ளை இருபத்தையாயிரம் கேட்டிருந்தால் என்ன பண்ணியிருப்பீங்க?”

விஸ்வத்தின் புருவம் உயர்ந்தது. “ஏம்மா? வரதட்சணையைப் பற்றி ஏதானும் பேச்சு வந்ததா?”

“இல்லை அப்பா. அவர் ஒன்றும் கேட்கவில்லை. ஆனால் அவருக்குக் கடன் இருக்கு. கல்யாணத்தின் போது அக்காவிடமிருந்து பத்தாயிரம் கடன் வாங்கினாராம். போன வாரம் அவங்க வந்து வாய்க்கு வந்தபடி பேசிவிட்டுப் போனாங்க. எனக்கே வருத்தமாய் இருக்கு.”

“என்ன இது? அப்போ நான் துருவித் துருவி கேட்ட போதுகூட ஒன்றுமே சொல்லவில்லையே? கொடுத்த பணத்தைக்கூட திருப்பிக் கொடுத்து விட்டானே?”

“ஆமாம். அப்போது பிரமோஷன் வரும் என்றும், ஏதோ அரியர்ஸ் வரும் என்றும் நினைத்திருந்தாராம். அதெல்லாம் இப்போதைக்கு வரப்போவதில்லை என்று தெரிந்து விட்டதாம், அதனால் ரொம்ப கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்.”

பெரும்பாலான பெண்களைப் போலவே பாவானாவும் தவறு செய்துவிட்டாள். கணவனைப் பற்றிக் கெடுதலாகச் சொன்னால் பிறந்தவீட்டில் அவன் மதிப்பு குறைந்துவிடும் என்ற வருத்தம் அது. அதுவும் விஸ்வதிற்கு பாஸ்கர ராமமூர்த்தியிடம் அபரிமிதமான மதிப்பு வேறு!

“அப்படிக் கவலைப்பட வேண்டியது இல்லை என்று கடிதம் எழுதி போடு. நாலு நாளில் பணம் தருகிறேன். அனுப்பி விடுவோம்’ என்றான் விஸ்வம்.

வேலை சுலபமாகி விட்டதால் பாவனாவின் மனம் நிம்மதியடைந்தது. மறுநாளே விஸ்வம் நிலத்தை அடமானம் வைத்து இருபத்தையாயிரம் வாங்கி வந்தான். மாப்பிள்ளைக்கு சந்கோஜப்பட வேண்டாம் என்று கடிதம் எழுதி டிராப்ட் அனுப்பி வைத்தான். அது கிடைத்ததாய் நன்றி தெரிவித்து மாமனாருக்குக் கடிதம் போட்டான் மூர்த்தி.

*********

என் பிரியமான மூர்த்தி,

நீங்கள் போய் பத்து நாட்கள் ஆகிவிட்டன. எனக்கோ பல யுகங்கள் ஆகிவிட்டாற்போல் இருக்கிறது. பணம் கிடைத்ததாய் அப்பாவுக்குக் கடிதம் போட்டுவிட்டால் போதுமா? உங்கள் அன்பார்ந்த மனைவி இங்கே இருப்பது நினைவு இல்லையா?

உங்களிடமிருந்து கடிதம் வந்தால் என்னை அழ வைக்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார்கள் என் தம்பியும், தங்கையும்… ஆனால் நீங்கள் அந்த அவகாசத்தையே தரவில்லை. நானோ ஒவ்வொரு நிமிஷமும் உங்களிடமிருந்து கடிதம் வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். அதையும் விட நீங்களே வந்து விடுவீர்கள் என்றும் எதிர்பார்க்கிறேன். எங்க தோட்டத்தில் உள்ளா பூக்கள் எல்லாம் கூட உங்கள் வருகைக்காக வாசல்பக்கம் பார்த்துக் கொண்டு இருக்கின்றன. சில மணி நேரங்களே மலர்ந்து தரையில் உதிர்ந்து கிடக்கும் பவழமல்லி கூட கடைசி நிமிடம் வரையில் உங்கள் வருகைக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது.

அவற்றைப் பார்க்கும் போது எனக்குக் கண்களில் நீர் துளிர்க்கிறது. வாசலில் பந்தலில் படர்ந்திருக்கும் ஜாதிமல்லிக் கொடியின் கதையோ வேறு. இவ்வளவு நாளாய் என் கூந்தலை அலங்கரிக்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தது. இப்போதோ உங்கள் பாதத்தின் கீழே நசுங்கிப் போவதற்குத் துடித்தபடி, விடியலில் பூமழையை வாசல் முழுவது தெளிக்கிறது. ஆனாலும் உங்களுக்கு இரக்கம் இல்லை.

இனி மல்லிகைச் செடியைப் பற்றியோ கேட்கவே வேண்டாம். அதன் பூக்கள் என் கூந்தலை அலங்கரிக்க மாட்டாயாம். உங்கள் காலடியில் மிதியடியாய் இருக்கப் போவதில்லையாம். நம் படுக்கையின் மீது நம் இருவரின் உடல்களுக்குக் கீழே நசுங்கிப் போகத் துடித்துக் கொண்டு இருக்கின்றன.

உனக்கு எந்த வருத்தமும் இல்லையா என்று நினைக்கிறீங்க இல்லையா? எப்படிச் சொல்லுவேன்? என் உடலில் ஒவ்வொரு அணுவும் உங்கள் ஸ்பரிசத்திற்காகத் தவித்துக் கொண்டிருக்கிறது என்றும், குளிர்ந்த நிலவு கூட என்னைச் சுட்டு பொசுக்குகிறது என்றும். நாம் சந்தித்தால் நாட்கள் நோடிபோழுதில் கழிந்துவிடும். இவ்வளவு நொடிகளை வீணாக்குவது உங்களுக்கு அழகல்ல. சீக்கிரமாய் வந்துவிடுங்கள்.”

உங்கள் பாவனா

கணவனுக்கு எழுதிய முதல் கடிதம் அது. தபாலில் சேர்த்தது முதல் பதிலை எதிர்பார்த்துக் கொண்டே இருந்தாள். அந்தக் கடிதத்தைக் கண்டதும் உடனேயே புறப்பட்டு வந்துவிடுவான் என்று எண்ணியிருந்தது பொய்த்துவிட்டது. மூர்த்தி மாமனாருக்குக் கடிதம் எழுதினான். பாவனாவை சனிக்கிழமை ரயிலில் ஏற்றிவிட்டால் ஞாயிற்றுக் கிழமை ஸ்டேஷனுக்கு வருவதாய்.

‘எனக்கு எழுதினால் இப்பொழுதே புறப்பட்டு வந்து விடுவேன் என்று பயம் போலும்’ என்று தனக்குள் சிரித்துக் கொண்டாள். பாவனா அந்தச் சனிக்கிழமை ரயிலேறினாள், கூடவே ஏகப்பட்ட சாமான்களுடன்.

பெண்களுக்கு பிறந்த வீட்டிற்குப் போனால் மாமியார் வீட்டின் பெருமையையும், கணவனின் வருமானத்தை எல்லோரும் மதிக்க வேண்டும் என்று பாடுபடுவார்கள். செயல்களை விட வார்த்தைகள்தான் அங்கே பிரபாவத்தைக் காட்டும். ஏன் என்றால் பெண்ணிடமிருந்து பொருளை விரும்பும் பிறந்த வீட்டார் ரொம்ப குறைவு. ஆனால் பிறந்த வீட்டிலிருந்து போகும்போது மட்டும் ஏதோ ஒரு புது சாமான், புடவை இல்லா விட்டால் முகம் வாடிப் போய்விடும். அவற்றைக்காட்டி புகுந்த வீட்டில் பெருமையாய் சொல்லிக்கொள்வார்கள். அதிலும் மூத்த மகளாய் இருந்தால் இன்னும் அதிகம். முதலில் நடந்த சுபகாரியம் என்பதால் சம்பிரதாயங்களை தவறாமல் பின்பற்றுவார்கள். எல்லா பண்டிகைகளுக்கும் அழைத்து சீர்வரிசை செய்வார்கள். தங்கை, தம்பி முதலியோர் அக்காவுக்காக எதையும் விட்டுக் கொடுப்பார்கள். ‘பாவம் அக்கா! புது இடத்திற்குப் போக வேண்டியிருக்கிறதே’ என்ற இரக்கத்தோடு.

அத்தானுக்கு விருப்பமானது என்று சிலவும், அக்காவுக்குப் பிடிக்கும் என்று சில பணியாரங்களையும் தயாரித்தார்கள். போனதுமே கஷ்டப்படக்கூடாது என்று சில பொருட்கள், இங்கே விலை மலிவு என்று பருப்பு, அரிசி, பழவகைகள் என்று மேலும் சில பொருட்கள் செர்ந்துவிட்டதால் ஏகப்பட்ட சாமான்கள் சேர்ந்துவிட்டன. மூர்த்தி ஸ்டேஷனுக்கு வருவான் என்று பாவனா எந்த மறுப்பும் சொல்லவில்லை.

ரயில் சென்ட்ரல் ஸ்டேஷனுக்குள் நுழையும்போதே பாவனாவின் கண்கள் பிளாட்பாரத்தை பரபரப்புடன் பார்க்கத் தொடங்கிவிட்டன. தன்னைக் கண்டதுமே அவனிடம் தோன்றும் உணர்வுகளைப் பற்றி எண்ணிக் கொண்டவள் வெட்கமடைந்தாள். இவ்வளவுநாள் பிரிவுக்குப் பிறகு வீட்டிற்குப் போனதுமே அவன் நடவடிக்கைகள் எப்படி இருக்குமோ? அதுவும் அவள் அப்படிப்பட்ட கடிதத்தை எழுதிய பிறகு.

ரயில் நின்றதும் மூர்த்தி கண்ணில் படவில்லை. கூலியைக் கொண்டு சாமான்களை இறக்கி வைத்து நின்றாள். ஐந்து நிமிஷங்கள் ஆகியும் அவன் ஜாடையே இல்லை.

அவள் வீட்டுக்குப் போய்ச் சேரும்போது பாஸ்கர் ராமமூர்த்தி தனியாய் இருந்தான் வீட்டில்.

“நீ வருவதற்குள் வீட்டை எல்லாம் சரி பண்ணி வைக்கணும் என்று கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தேன்” என்றான் அவள் வேறு கேள்வி கேட்கும் அவகாசம் தராமல்.

பாவனாவுக்கு பயமாய் இருந்தது. பாஸ்கர் ராமமூர்த்தி மனதில் எது இருந்தாலும் வெளியே பட்டென்று சொல்லிவிடுவான். கத்துவான், அடிப்பான். ஆனால் அவனிடம் தந்திரம் எதுவும் கிடையாது. வீட்டை சரி பண்ணுவது என்பது அவன் பண்ணும் வேலையில்லை. பண்ணவும் மாட்டான். அந்த விஷயம் அவளுக்கு நன்றாக தெரியும். ஆனாலும் இப்படிப் பொய் சொல்கிறான் என்றால் யாருடைய பாதிப்போ அவன்மீது இருக்கிறது என்று அர்த்தம். அது மிகவும் ஆபத்தானது.

பெரும்பாலான மனைவியர்கள் போலவே பாவனாவும் தவறு செய்தாள்.   முன்பின் அறிமுகமில்லாத இருவர் திருமணத்தால் ஒன்றிணைகிறார்கள். முதல் நாளிலிருந்தே ஒருத்தரைப் பற்றி இன்னொருத்தர் தெரிந்துகொள்ள முயற்சி செய்கிறார்கள். சில நாட்களா வரை அவர்களுக்கு எதிராளியிடம் நல்ல குணங்கள்தான் தென்படுகின்றன. வேடிக்கை என்னவென்றால் எதிராளியின் பலவீனங்களைக் கூட அப்பொழுது அவ்வளவாக பொருட்படுத்தாமல் எளிதாக ஏற்றுக்கொண்டு விடுவார்கள். அவர்களுடைய உண்மை சொரூபத்தைத் தெரிந்து கொள்வதற்குள் தாமதமாகி விடுகிறது. இருவருள் ஆதிக்கம் படைத்த சுபாவம் கொண்டவர்கள் அதற்குள் அடுத்தவர் மீது அதிகாரத்தை நிலை நாட்டத் தொடங்கி விடுவார்கள்.

ரொம்ப நாட்களுக்குப் பிறகு மனைவி வீடு திரும்பியிருக்கிறாள் என்ற நினைப்பே அவனுக்கு இருந்ததாகத் தெரியவில்லை. தந்தையிடம் சொல்லி இருபத்தையாயிரம் உடனே அனுப்பச் செய்தாள் என்ற நன்றியைக் கூட காட்டவில்லை. அவள் கொண்டுவந்தவற்றில் தனக்குப் பிடித்தவற்றை, வசந்திக்குப் பிடித்தவற்றை எடுத்து அவன் தனியாக வைத்துக் கொண்டான்.

“என்னங்க? கடன் எல்லாம் தீர்ந்துவிட்டதா?” சாதாரணமாய்க் கேட்டாள் அவள்.

“ஏன்? கணக்குக் காட்டணுமா?” கடுமையாய் இருந்தது அவன் பதில்.

“அதில்லைங்க. இவ்வளவு பர்னிச்சர் எல்லாம் வாங்கி இருக்கீங்க. திரும்பவும் கஷ்டப்படப போறீங்களே என்றுதான்.” மென்று விழுங்கினாள்.

“இருந்த பணத்தில்தான் வாங்கினேன். நம் வீட்டுக்காகதானே? அடுத்தவங்களுக்கு வாங்கித் தரலியே?”

அவன் கத்தல் அக்கம் பக்கத்தார் காதுகளில் விழும்படியாய் பெரிதாய்த்தான் இருக்கும்.

பாவனாவால் அதற்குமேல் பேச முடியவில்லை. அவன் சந்தோஷமாய் இருந்த  சமயம் பார்த்துக் கொஞ்சுவது போல் கேட்டாள்.

“ஏங்க? என் கடிதத்திற்கு பதிலே போடவில்லையே ஏன்?”

“உங்க வீட்டார் பார்த்தால் அழவைப்பார்கள் என்று நீதானே எழுதி இருந்தாய்?”

“அந்த மாதிரி அழ வைப்பத்தில் எவ்வளவு சந்தோஷம் இருக்கும் என்று உங்களுக்கு என்ன தெரியும்?”

“”அது இருக்கட்டும். ஆனாலும் அதென்ன கடிதம்? வேசியைப் போல் செக்ஸுக்காகத் தவித்துக் கொண்டிருப்பது போல்? வசந்தி மற்றவர்கள் அதைப்பார்த்து ஒரே சிரிப்பு. உனக்கு வெட்கம் என்பதே இல்லை.”

பாவனா அதிர்ந்துவிட்டாள். “நான் எழுதிய கடிதத்தை அவர்கள் எல்லோரும் பார்ப்பதா? சீ.. சீ.. கொஞ்சம் கூட பண்பு இல்லாதவர்கள்.” கோபமாகச் சொன்னாள்.

“ஏன்? நான்தான் காண்பித்தேன். நீயும் உன் தேவடியாள் புத்தியும்” என்றான் எரிச்சலுடன்.

“தேவடியாள் அந்த சுகத்திற்காக தவிக்கமாட்டாள். அவளிடம் போகிறவர்களுக்குத்தான் இருக்கும் அந்த தவிப்பு. மற்றவர்களின் கடிதங்களைப் படிப்பவர்களை விட தேவடியாள் எவ்வளவோ மேல்.” எரிச்சலை அடக்கிக் கொள்ள முடியாமல் சொல்லிவிட்டாள்.

“என்ன? வார்த்தைக்கு வார்த்தை எதிர்த்து வாயாடுகிறாயா? கொஞ்சம் சுயநினைவு இருக்கட்டும். நாக்கை அடக்கி பேசு. வீட்டுக்கு வந்ததுமே தொடங்கி விட்டது  கழுத்தறுப்பு! சீ.” அவன் வெளியே போய்விட்டான்.

அவன் திரும்பி வரும்போது நள்ளிரவு ஆகிவிட்டது. கதவைத் திறந்ததுமே குப்பென்று நாற்றம் மூக்கைத் தாக்கியது. இதற்கு முன்னால் என்றுமே பாஸ்கர் ராமமூர்த்தி குடித்தது இல்லை. இது புதுப் பழக்கம்.

அந்தப் பழக்கத்திற்கு அவன் எவ்வளவு தூரம் அடிமையாகி விட்டிருந்தான் என்று அவளுக்கு வெகு சீக்கிரத்திலேயே தெரிந்துவிட்டது. அவனை மாற்ற வேண்டும் என்றும், அந்தப் பழக்கத்திலிருந்து மீட்க வேண்டும் என்றும் அவள் எடுத்த முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை. நண்பர்கள் கூட்டம் அதிகமாகிவிட்டது.. அவர்கள் சொன்னதுதான் அவனுக்கு வேதம். குடித்துவிட்டு வருவதும், நள்ளிரவில் ரகளை செய்து பெரிதாக கத்துவதும் நித்தியபடி ஆகிவிட்டது. அக்கம் பக்கத்தருக்கு முன்னால் எவ்வளவு இளப்பமாய் விட்டான் என்று புரிந்து கொள்ளும் நிலையில் இல்லை அவன்.

இரவு பத்துமணி ஆகப் போகிறது. மூர்த்தி என்றும் போலவே இன்னும் வீடு திரும்பவில்லை. பாவனா சாப்பிட்டுவிட்டுப் புத்தகம் படித்தபடி உட்கார்ந்திருந்தாள். கோபிசந்த் எழுதிய நாவலைப் படித்துக் கொண்டிருந்தாள். ஒரு காலத்தில் அந்த நாவல் பிடிக்காமல் ஒதுக்கியிருந்தாள். அப்பொழுது அதைப் புரிந்து கொள்ள முடியாமல் அவ்வாறு எண்ணிவிட்டாள். அதைப் படிக்கப் படிக்க அவளுக்கு மூர்த்திதான் நினைவுக்கு வந்தான். தன்னுடைய இயலாமையை மூடி மறைக்க அவன் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்த வழி, குடிப்பது.

கதவு தட்டிய ஓசை கேட்டது. மூர்த்தியாக இருந்தால் பெயர் சொல்லி கூப்பிடுவான். யார் என்று தெரியவில்லை. பாவனா ஜன்னல் வழியாகப் பார்த்தால். பக்கத்துவீட்டு ராமநாதன்.

“அவர் இன்னும் வரவில்லை” என்றாள் ஜன்னல் வழியாகவே.

“அப்படியா? காலையில் எங்கள் வீட்டிலிருந்து ஸ்க்ரூ டிரைவர் வாங்கிக்கொண்டு போனான். அவசரமாய் தேவைப்படுகிறது. தரமுடியுமா?””

பாவனா கதவைத் திறந்தாள். “வாங்க உள்ளே. பார்த்து தருகிறேன்.” எவ்வளவு தேடியும் அது கிடைக்கவில்லை.

“பரவாயில்லை. நாளைக்குக் கேட்டு வாங்கிக்கொள்கிறேன்” என்றானே தவிர நாற்காலியை விட்டு எழுந்துகொள்ளவில்லை.

என்ன பேசுவதென்று அவளுக்குப் புரியவில்லை.

“உங்களைப் பார்த்தால் இரக்கமாய் இருக்கு. எப்படி சகித்துக்கொண்டு இருக்கீங்க அவரை?”

அவன் பேச்சைக் கேட்டதும் பாவனாவுக்கு பயம் ஏற்பட்டது.

‘உங்களைப் போன்ற அழகான மனைவி எனக்கு இருந்தால் ஆபீசுக்குக் கூடப் போகாமல் இருபத்திநாலு மணி நேரமும் அருகிலேயே உட்கார்ந்து இருப்பேன்.”

“நீங்க என்ன பேசுறீங்கன்னு உங்களுக்கே தெரிகிறதா?” கோபமாய்க் கேட்டாள்.

“அட! அதுக்குள்ளே கோபம் எதுக்கு? ஏதோ தனியாய் இருக்கீங்க. கம்பெனி தரலாமே என்று நினைத்தேன். அவ்வளவுதான்.”

“தேவையில்லை. நீங்க போகலாம்.”

“என்றைக்காவது தேவைப்பட்டால் கூப்பிடுங்கள். நான் எப்பொழுதும் தயாராய் இருப்பேன்.” அவன் போய்விட்டான் சிரித்துக்கொண்டே.

பாவனாவுக்கு துக்கம் பொங்கிக்கொண்டு வந்தது. கணவனின் நடத்தை அவ்வாறு இருப்பதால்தான் அவன் அவ்வளவு தூரம் துணிந்திருக்கிறான். அன்றிரவு முழுவதும் அவள் தூங்கவே இல்லை. மூர்த்தியிடம் பேசவும் இல்லை. தந்தைக்கு கடிதம் எழுதாமல் முடியாது என்று தோன்றியது. ஆனால் அவர் வந்தாலும் என்ன பண்ணிவிடுவார்? மாப்பிள்ளையை அதட்டிக் கேட்கும் துணிச்சல் இல்லை அவருக்கு.

அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே தபால் வந்தது. தந்தையிடமிருந்து கடிதம். அதைப் படித்துவிட்டு அப்படியே ஸ்தம்பித்துப் போய் நின்றுவிட்டாள்.

பாஸ்கர் ராமமூர்த்தி பத்தாயிரம் வேண்டும் என்று கேட்டிருப்பதாகவும், கடன் வாங்கி அனுப்பி வைப்பதாகவும் எழுதியிருந்தார்.

பாஸ்கர் ராமமூர்த்தி ரொம்ப உற்சாகத்துடன் இருந்தான். மாமனாருக்குக் கடிதம் எழுதி ஒரு வாரம்தான் ஆகிறது. இன்றோ நாளையோ பணம் வந்துவிடும் என்ற நம்பிக்கை இருந்தது. வந்ததுமே நல்லதாய் ஒரு மைசூர் சில்க் புடவை வாங்கிக்கொண்டு போய் வசந்திக்குத் தரவேண்டும். அவள் சந்தோஷத்தோடு வந்து மேலே விழுந்தால் வெற்றி பெருமிதத்துடன் சிரிக்கவேண்டும். “இவ்வளாவு சீக்கிரத்தில் பணம் கேட்டால் தரமாட்டார்’ என்றாள் அவள். விஸ்வதிற்கு பாவானாவிடம் எவ்வளவு அன்பு என்று அவளுக்குத் தெரியாது.

அதைத் தொடர்ந்து பாஸ்கர ராமமூர்த்தியின் யோசனைகளை நிர்மலாவின் சொத்துமேல் தாவிற்று. பாவனாவை நல்ல விதமாய் வலையில் போட்டுக்கொள்ள வேண்டும். ஆவேசம் வந்தால் ஏதோ பெசிவிடுகிறாளே தவிர, கொஞ்சம் அன்பாய் இருப்பதுபோல் பேசினால் உருகிப் போய்விடுவாள். சீக்கிரத்திலேயே அவளைக் களத்தில் இறக்கி விட வேண்டும்.

அந்த பரமஹம்சாவைப் பற்றி நினைத்தாலே பயமாக இருக்கிறது. இந்தமுறை நிர்மலாவிடம் நேராக போக வேண்டும். சொந்த மகளைப் பார்த்ததுமே அவளால் அடையாளம் கண்டுகொள்ள முடியும். நடந்ததை எல்லாம் சொல்ல வேண்டும். என்ன இருந்தாலும் பெற்ற வயிறு! உணர்ந்துகொள்ளும்.

அன்பாய் இழுத்து அணைத்துக்கொள்வாள். தன் மகளை அழைத்து வந்ததற்கு வீட்டு மாப்பிள்ளையாய் அவனை மதிப்பாள்.

“மாமியாரே! உங்க சொத்துக்காக் இல்லை நாங்க வந்தது. என் தாய் செய்த பாவத்திற்கு பிராயச்சித்தம் இது. அவ்வளவுதான்” என்று சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட வார்த்தைகள் பெண்களிடம் நன்றாக வேலை செய்யும். யோசித்தவாறே ராமமூர்த்தி மெயின் ரோடை விட்டு ஒரு சந்துக்குள் நுழைந்தான். அதற்கும் பக்கத்தில் இருந்த சந்தில்தான் இருந்தது ஒயின் ஷாப்.

ஷோகேசுக்குள் இருந்த பாட்டில்கள் மேல் இருந்த பெயர்களைப் படித்துக் கொண்டிருந்த ராமமூர்த்தியின் தோளில் யாரோ கை வைக்கவும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். எதிரே முறுவலுடன் நின்று கொண்டிருந்த ஆளைப் பார்த்ததுமே அவன் உடல் சிலிர்த்தது. பக்திமானாய் இருக்கும் அவன் இந்த கடையில் தென்படுவான் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை.

‘திங்க் ஆஃப் தி டெவில்’ என்று நினைத்ததுமே எதிர்பட்டுவிட்டான். “என்னப்பா? நீ இங்கே இருந்தது எனக்கு எப்படித் தெரிந்தது என்றுதானே ஆச்சரியப்படுகிறாய்? அப்போதே சொன்னேன் இல்லையா? நான் சர்வாந்தர்யாமி என்று? நான் வீட்டில் உட்கார்ந்து கொண்டே உன்னைப் பற்றியும், உன் எண்ணங்களைப் பற்றியும் கண்டுபிடித்து விடுவேன். ஆஸ்பத்திரியில் ரொம்ப நாள் இருந்தாய் போலிருக்கு. இப்போ சௌக்கியம்தானே? எண்ணங்கள் சரியாக இருந்தால் ஆரோக்கியமும் சரியாக இருக்கும்.”

‘சௌக்கியம்தான்.” தொண்டையை செருமிக்கொண்டு மெதுவாய்ப் பதிலளித்தான் மூர்த்தி.

“குட்! அப்போதே சுவர்க்கதிற்குப் போயிருக்க வேண்டியவன் நீ. ஆனால் எனக்கு உன்மீது இறக்கம்தானே தவிர கோபம் இல்லை. அதனால்தான் வீட்டில் இருந்துகொண்டே உன்னைக் காப்பாற்றினேன். ஆனால் உன்னுள் சொத்தை பற்றிய யோசனை நீங்க மாட்டேன் என்கிறது. அடுத்த தடவை மட்டும் என்னால் காப்பாற்ற முடியாது. உன்னிஷ்டம்.”

பாஸ்கர் ராமமூர்த்தி பயந்து நடுங்கிவிட்டான். அந்த விஷயத்தை அவன் யோசித்து ஐந்து நிமிஷம் கூட ஆகவில்லை. அதற்குள் அவன் இப்படி இங்கே வந்ததைப பார்த்தால் உண்மையாகவே  இவனிடம் ஏதோ சக்தி இருப்பதாய்த் தோன்றுகிறது. இவனுடனா தான் மோத நினைப்பது? இன்றைக்கு வீட்டிற்குப் போய்ச் செருவதற்குள் இன்னொரு விபத்து நடந்தாலும் ஆச்சரியப்பட வேண்டியது இல்லை.

அவனை உயிர் பயம் பிடித்துக்கொண்டது.

“இன்றும் பயமில்லை. அதான் சொன்னேனே? உன் யோசனைகளை நல்ல வழியில் இருக்கும் வரையிலும் உனக்கு எந்த ஆபத்தும் வராது.” பரமஹம்சா ஜெபியிலிருந்து ஒரு போட்டோவை எடுத்து காண்பித்தான். அது அவனுடைய போட்டோதான். “இதை உன்னிடம் வைத்துக்கொள். தினமும் பூஜை பண்ணிக் கொண்டிரு. இந்த வீபூதியை வைத்துக்கொள். நல்லது நடக்கும்.”

“சரி” என்று தலையை அசைத்தான் மூர்த்தி.

“போயிட்டு வா தம்பி! உன் பில்லை நான் கொடுத்துவிட்டுப் போய்க் கொள்கிறேன்.” அவன் தோளில் அன்போடு தட்டினான். பாஸ்கர் ராமமூர்த்தி தூக்கத்தில் நட்ப்பவனைப் போல் வெளியே நடந்தான்.

பரமஹம்சா ஜெபியிலிருந்து பணத்தை எடுத்து செல்ஸ்மேனிடம் தந்தான். அவனுக்குத் தேவையான வெளிநாட்டுச் சரக்கு அவன் காரில் அதற்கு முன்பே வைக்கப் பட்டுவிட்டது.  அவன் இப்பொழுது ரொம்ப பணக்காரன். வெளிநாட்டுச் சரக்கைத்தான் பயன்படுத்துவான். அந்தச் சுற்றுவட்டாரத்தில் பரிச்சயம் ஆனவர்கள் யாரும் கண்ணில் படமாட்டார்கள் என்றுதான் அந்த கடையில் வாடிக்கையாய் வாங்கிக் கொண்டிருந்தான்.

(தொடரும்)

 

Series Navigationபெருங்கதையில் ஒப்பனைடோண்டு ராகவன் – அஞ்சலி
author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *