ஆதாமும்- ஏவாளும்.

This entry is part 25 of 33 in the series 14 ஏப்ரல் 2013

இரா.ஜெயானந்தன்.

இனிய நிலவே ! இன்று நீ,
என் நிலா முற்றத்தில் மலர்ந்து விட்டாய் !
உன் வரவிற்காக காத்திருந்து – நான்
மல்லிகை பந்தல் வளர்த்திருந்தேன்.
பூக்கள் மலர்ந்த, மணந்த போது
உன்னை மணம் முடித்தேன்!

அதோ பார் ! அந்த மொட்டுக்குள்
எத்தனை வசந்தங்கள் ! – நீயோ
உன் இதழ் மொட்டால் – என்னை
உயிர்த்தெழ வைத்தாய் !

உன் சிரிப்பை பிரித்து – என்
கவிதைக்குள் வைத்தேன் !
நீயோ ! என் மன ஊஞ்சலின்
மணிகளை ஆட்டிவிட்டு – என்
நெஞ்சுக்குள் ஒளிந்துக் கொண்டாய் !

இரவு,
தென்றலால் இலைகளில் கவிதை எழுதும்,
நான்,
உன் விரல்களால் கடற்கரை மணலில்,
நம்,
வாழ்வை எழுதுகின்றேன் !

ரோஜா இதழ்களில், பன்னீர் துளிகளுக்கு
நந்தவனங்களில் தேடி அலைதேன் !
இனறு,
என் வாழ்வில் நீ,
வசந்தக் காலத்தையே கொண்டு வந்தாய் !

இனி நான் பாதி,
நீ  பாதி அல்ல;

உன்னுள் நான், என்னுள் நீ!

வணக்கம் ராஜகுமாரனே !
இன்னும் நான்,
அக்ர காரத்தையே தாண்டவில்லை,
நீயோ,
சிகரத்தில் ஏறி,
சிம்மாசனத்தில் அமர்ந்து விட்டாய் !

நம் இருவர் கைகளிலும்
ஒரே புல்லாங் குழ்ல்தான் !
இனி,
நாம் இருவரும் ஒரே ராகத்தில்,
நம் வாழ்வை வாசிப்போம் !

என் வாழ்வின்,
திசைகளை தீர்மானிக்க
நீயோ , சாரதியாக வந்து விட்டாய் !
நான் மலைகளை கல்லாக்கி,
உன் கைகளில் தருகின்றேன்.
நீ அதனை,
சிலைகளாய் மாற்றி
சித்திரங்களாய் செய்துவிடு !

என் சிறகுகளுக்கு
நீ, புது விசையை தருகின்றாய் !
இனி வானம்கூட – எனக்கு,
தொட்டுவிடும் தூரம்தான் !

என் தோட்டத்தில்,
உன் பட்டாம்பூச்சிகள்தான் பறக்கின்றன !
காற்று கொண்டு வந்த செய்தியில்,
உன் காதல் கவிதைகள்தான்,
ரீங்காரமிடுகின்றன !

இன்று
கைகளால் இணைந்து கொண்டோம்,
இதயங்களால் பிணைந்து கொண்டோம் !
இனி,
அடுத்த தலைமுறக்கு,
ஆயிரமாயிரம்,
அறிவுச் சுரங்களை,
தேடுவோம் வா !

Series Navigationகுழந்தைகளின் கல்விபெறும் உரிமை மதிக்கப்படுகிறதா? மீறப்படுகிறதா? – 1டௌரி தராத கௌரி கல்யாணம்….! – 2
author

இரா. ஜெயானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *