ஜாக்கி சான் 15. நரகமாகிப் போன மாயலோகம்

This entry is part 18 of 34 in the series 10 நவம்பர் 2013

15. நரகமாகிப் போன மாயலோகம்

 

Jackie-Chan-jackie-chan-5468506-553-800சார்லஸ் குடும்பத்தினர் சீன நாடகக் கழகத்தை அடைந்த போது, குரு அவர்களுக்காகக் காத்திருந்தார்.  சானின் பெற்றோரை வரவேற்று விட்டு, அவனது தோளைத் தொட்டு நடத்தி, “வா.. கொங் சாங்”என்று அன்புடன் கூறி, கூடத்திற்கு அழைத்துச் சென்றார்.  “நீ இங்கு வரும்போதெல்லாம் நன்றாக இருந்ததல்லவா.. நீ இங்கே தங்குவதை விரும்புவாய் என்று எண்ணுகிறேன்” என்று பேசிக் கொண்டேநடந்தார்.

 

உடனே தந்தையின் பக்கம் திரும்பி, “அப்பா.. நான் நிஜமாகவே இங்கேத் தங்கலாமா?” என்று கேட்டான் சான்.

 

“ஆமாம் பாவ்.. உனக்கு எவ்வளவு நாள் வேண்டுமோ.. அவ்வளவு நாள்” என்றார் தந்தை.

 

உண்ணும் மேசை மேல் ஒரு காகிதச் சுருள் வைக்கப்பட்டு இருந்தது.  அதில் ஏதோ எழுதப்பட்டிருந்தது.  அதைப் படிக்கத் தெரியாத காரணத்தால், சான் அதைக் கண்டு கொள்ளவில்லை.  சார்லஸ்அதைப் படித்துப் பார்த்தார்.  தாயும் அவரது கைகளைப் பிடித்துக் கொண்டு எட்டி எட்டிப் பார்த்துப் படித்தார்.

 

“சான் அவர்களே.. எல்லாம் சரியாக இருக்கிறதா?” என்று கேட்டார் குரு.  “இதில் இருப்பது தான் நடைமுறைபடுத்தப்படும்.  நீங்கள் கையெழுத்திட்ட பின், இங்கு இருக்கும் வரை உங்கள் மகன் என்முழுப் பொறுப்பில் இருப்பான்.  நான் என் செலவில் உணவு, உடை, தங்கும் இடம் கொடுத்து விடுவேன்.  அவனது பாதுகாப்பிற்கு நான் உத்தரவாதம். நான் உலகின் மிகச் சிறப்பான பயிற்சியைஅவனுக்குக் கொடுத்துப் பெரியாளாக்குவேன். அவன் மிகப் பெரிய நட்சத்திரமாகும் வாய்ப்பும் உண்டு” என்று உறுதி கூறினார்.

 

தந்தை சொல்வதனைத்தையும் கேட்டுவிட்டு, “அவன் சம்பாதிப்பது கழகத்தைச் சேர்ந்தது என்று பத்திரம் சொல்கிறதே?” என்று கேட்டார்.

 

“நாங்கள் கழகத்தை குழந்தைகளின் நிகழ்ச்சிகளின் மூலமாகத் தான் நடத்தி வருகிறோம்.  அதனால் நாங்கள் சொல்லித் தருவனவற்றை தொடர்ந்து கற்று, தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளவேண்டும். சரி தானே..”

 

சார்லஸ் குருவின் கூற்றை ஆமோதித்துவிட்டு, “இன்னொரு விசயம்.  பையனை ஒழுங்குப்படுத்துவதாயும், அதுவும் இறக்கும் அளவிற்கும் கூட சென்று ஒழுங்குப்படுத்துவதாய் உள்ளதே..” என்றுபயத்துடன் கேட்டார்.

 

“ஆம்.. கலைக்கு ஒழுக்கம் ஆத்மா.  மனித இனத்தின் வேரே ஒழுக்கம் என்று சொல்லப்படுகிறதல்லவா?” என்று எதிர் கேள்வி கேட்டார்.

 

சார்லஸ் அதை ஏற்றுக்கொண்டு, சானை அழைத்து, “பாவ் கவனமாக் கேள்..” என்றார்.

 

“என்னப்பா?”

 

“உனக்கு இங்கு எவ்வளவு காலம் இருக்க வேண்டும்.  ஐந்து வருடம், ஏழு வருடம்..?” என்று கேட்டார்.

 

“எப்போதும்” என்று மகிழ்ச்சியுடன் உரக்கக் கத்தினான்.

 

தாய் சார்லஸின் கைகளை பலம் கொண்ட மட்டும் அழுத்தினார்.

 

“அதிகபட்சம்  பத்து ஆண்டுகள் இருக்க முடியும்” என்றார் குரு.  பத்திரத்தில் பத்தாண்டு காலம் என்று எழுதி சார்லஸிடம் நீட்டினார். கையெழுத்திட்டுப் பெயர் பதித்த முத்திரையை இட்டார் சார்லஸ்.

 

சானுக்கு நடப்பது ஏதும் புரியவில்லை.  அடுத்த பத்து ஆண்டுகள் கழகத்தின் சொத்தானான் சான்.

 

கையெழுத்தான சிறிது நேரத்திலேயே, அங்கு விளையாடிக் கொண்டிருந்த சான் அழைக்கப்பட்டான்.

 

“விடை கொடுக்க எங்களுடன் வா பாவ்..” என்று தாய் கூறினார்.  அப்போது சானுக்கு அது புரியவில்லை.  இப்போதே விடைபெற வேண்டியது தானே என்று எண்ணினான்.

 

தாய் சொன்ன விதத்தை உணர்ந்து, சான் மறு பேச்சு பேசாமல் அவர்களுடன் நடந்தான்.  “நான் சீக்கிரமே வந்து விடுவேன்” என்று அங்கிருந்தவர்களிடம் சொல்லிவிட்டு சான் கிளம்பினான்.

 

 

 

வீட்டிற்குச் சென்று பொருள்களை எடுத்துக்கொண்டு கப்பல் துறைமுகத்திற்கு வந்தனர்.

 

சிறிது நேரத்தில் தந்தை கிளம்ப எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்.  தாயிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு சானிடம் வந்தார்.

 

“கொங் சாங்.. நீ இப்போது பெரியவன். உன்னைப் பார்த்துக் கொள். நீ எங்களுக்குப் பெருமை சேர்ப்பாய் என்று நன்றாகத் தெரியும்”

 

தலையை மட்டும் ஆட்டினான் சான்.

 

“நான் அடுத்த முறை உன்னைப் பார்க்கும் போது.. வாலிபனாகியிருப்பாய்.  அது வரை ஒரு தந்தையாக உன்னுடன் இருந்து அறிவுரை கூற இருக்க மாட்டேன்.  அதனால் இப்போது எனக்கு மூன்றுசத்தியங்களைச் செய்து கொடு” என்றார்.

 

“முதலாவதாக.. எந்தவொரு கடத்தல் கும்பலிலும் சேரக் கூடாது.  இரண்டாவதாக.. போதைப் பொருள்களைச் சாப்பிடப் பழகக் கூடாது.  மூன்றாவதாக.. சூதாடக் கூடாது” என்றார்.

 

அவை மூன்றுமே என்னவென்று தெரியாத வயதானதால், சத்தியம் செய்வது மிகவும் எளிதாக இருந்தது.

 

சான் உடன் சத்தியம் செய்தான்.

 

“வாழ்க்கையில் என்ன நடந்தாலும்.. எந்தக் கஷ்டம் வந்தாலும்.. இந்த மூன்றை மட்டும் எப்போதுமே செய்யக் கூடாது” என்று கூறினார்.

 

இதைக் கூறிவிட்டு, கடைசி முறையாக, அவசரமாக அவனைக் கட்டியணைத்து விட்டு புறப்பட்டார். பெரிய படகுக்குள் சென்ற பின்னும் “நான் சொன்னதை ஞாபகத்தில் வைத்திரு..” என்று கத்தினார்.

 

தந்தையை வழியனுப்பி வைத்துவிட்டு அவர்கள் இருவரும்  கழகத்திற்கு வந்தபோது, குரு அவர்களை வரவேற்று, சானை நன்கு கவனித்துக் கொள்வதாகக் கூறினார்.  அடிக்கடி வந்து பார்ப்பதாகக் கூறிவிட்டு, வருத்தத்துடன் தாய் சென்றார்.

 

“அம்மா.. என்னைப் பற்றி கவலைப்படாதீங்க..” என்றான் சான்.

 

பிரிய மனமின்றி தாய் தயங்கித் தயங்கி சென்று கதவினை அடைந்து திரும்பிப் பார்க்கும் நேரத்தில் சான் அங்கிருந்தவர்களுடன் பேச ஆரம்பித்திருந்தான்.

 

அன்றிரவு உண்டு உறங்கினான்.

 

அடுத்த நாள் காலை எழுந்ததும், சான் கண் முன்னே மாணவர்கள் பயிற்சி செய்து கொண்டிருப்பது தெரிந்தது.  சானை யாரும் எழுப்பவுமில்லை. எதுவும் சொல்லவுமில்லை.  சில நாள்கள் செல்லக்குழந்தையாக இளவரசனைப் போன்று கழகம் முழுவதும் வலம் வந்தான்.  உணவு நேரத்தின் போது வேண்டிய உணவை உண்ணும் விருந்தாளியாக நடத்தப்பட்டான்.

 

கழகத்திற்கு வந்த சேர்ந்து ஆறு நாள்கள் ஆனதும் தான் அங்கிருந்த முழுச் சூழலை சான் புரிந்து கொண்டான்.

 

குளிர் சாதனப் பெட்டிக்குக் கீழே சென்ற பருப்புக் கொட்டையை எடுக்கப் போய், வந்தது வினை.  யூன் தாய் “வந்து பாருங்கள் குரு.  இவன் மின்சாரத் துளையில் விளையாடிக் கொண்டு இருக்கிறான்”என்று கூறிக் கொண்டே வெளியே சானை இழுத்தான்.

 

குருவின் கோபமான முகத்தைக் கண்டதுமே, “நான் என்னுடைய பருப்புக் கொட்டை எடுக்கவே போனேன்” என்றான்.

 

அவன் சொன்னதைக் காதிலே வாங்கிக் கொள்ளாத குரு, சானை அப்படியே இழுத்து வந்து கூடத்தின் மத்தியில் நின்றார்.  சான் இதுவரை அவரை அப்படிக் கண்டதேயில்லை.  பயந்தே போனான்.

 

யூன் டிங்கைப் பார்த்து, “கொஞ்சம்  ஜியா ஜியாங் மியன் தேவைப்படும்” என்றார்.

 

ஜியா ஜியாங் மியன் என்பது சுவையான சீன நூடுல் வகை உணவு.  ஆனால் யூன் டிங் அதைக் கொண்டு வர சமையலறைக்குச் செல்லாமல், வேறு அறைக்குச் சென்று ஒரு பிரம்புடன் வந்தான்.

 

குரு சானை கீழே தள்ளி, வயிறு தரையோடு இருக்குமாறு படுக்கச் சொன்னார். பயத்தோடு கண்களை மூடிக்கொண்டு, பற்களை இறுக்கிக் கொண்டான்.

செமத்தியான அடிகள்.  ஆறு அடிகள் தான் என்றாலும் பலமான பிரம்படிகள்.

 

“அப்பா.. அம்மா.. என்னை கூட்டிட்டு போயிடுங்க.. எனக்கு இங்கே இருக்கப் பிடிக்கல்ல..” என்று அவனுக்குக் கத்த வேண்டும் போலிருந்தது.

 

கத்தி அழ ஆரம்பித்தான்.

 

“மூச்.. சத்தம் வரக் கூடாது.  வந்தால் இன்னும் அடி விழும்..” என்றார் குரு.

 

அடிக்கு பயந்து கப்சிப்பென்று அமைதியானான் சான்.

 

அவனை அங்கிருந்த மற்ற மாணவர்கள், நாங்களும் இதையெல்லாம் கடந்து வந்தவர்கள் தான் அனுபவித்தவர்கள் தான் என்று சொல்லும் விதத்தில் பரிதாபத்துடன் பார்த்தனர்.

 

சானுக்கு தான் அப்போது எங்கு இருக்கிறோம் என்று நன்றாகவேப் புரிந்தது.  அன்றைய இரவு வலியுடன் இந்த நரகத்தில் தான் இனி இருக்க வேண்டும் என்று உணர்ந்து கொண்டே கழித்தான்.

 

காலையில் குரு அவனை மற்ற மாணவர்கள் மத்தியில் நிறுத்தி, “இதோ.. நம் கழகத்தின் புதிய மாணவன்.  இவன் பெயர் கொங் சாங்.  ஆனால் நம் குடும்பத்தில் ஒருவனாக அவனை யூன் லோ என்றுஇனி அழைக்க வேண்டும். இதோ உங்கள் சகோதரன் யூன் லோ” என்று அறிமுகப்படுத்தினார்.

 

குருவுடன் மாணக்கர்கள் அனைவரும் அவனருகே வந்து அவனை தோளில் தட்டியும் கைகளைக் கொடுத்தும் வரவேற்றனர்.

 

ஒரேயிரவில் குருவின் குணம் மாறிவிட்டது போல் சானுக்குத் தோன்றியது.  சானின் உண்மையான வாழ்க்கை அன்று தான் ஆரம்பித்தது.

 

காலை ஐந்து மணிக்கு எழுந்தது முதல் பயிற்சி, பயிற்சி, பயிற்சி.  இரவு பன்னிரண்டு மணி வரை பல்வேறு விதமான பாடங்கள்.  முதல் வாரம் கிடைத்த விருந்துபசாரம் கனவாகிப் போனது. இளையவனாகையால், மேசையில் அனைத்து மாணவர்கள் உண்டது போக மீதியே அவனுக்குக் கிடைத்தது. சானுக்குப் பிடிக்காத பாட வகுப்புகளும் அங்கு இருந்தன.  வகுப்பில் எத்தனை தான்கலாட்டா செய்தாலும், வரும் ஆசிரியர்கள் மாணவர்கள் தரும் தொல்லை தாங்காமல் ஓடினாலும், புதிய புதிய ஆசிரியர்கள் வந்து சானையும் மற்ற மாணவர்களையும் படிக்கும்படி தொந்தரவுசெய்தனர்.

 

வாரம் தவறாமல் சானின் தாய் அவனைச் சந்திக்க வந்தார்.  அந்த நேரம் மட்டுமே அவனுக்கு ஆறுதலாக இருந்தது.  சுவையான பிஸ்கெட்டுகளையும் ரொட்டிகளையும் கொடுத்துச் செல்வார்.

 

கழகத்தின் குரு மூன்று விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.  அடக்கம், கடின உழைப்பு, ஒழுங்கு.  ஒழுங்கு வேகமாகவும், வலியோடும் வந்தது.  அடி உதவுவது போல் அண்ணன் தம்பியும்உதவ மாட்டான் என்பது தமிழ் பழமொழி.  பிரம்படியே ஒழுக்கத்தின் உயிர் நாடி என்று நம்பிய குரு , அதன் வழியே மாணவர்களை நெறிப்படுத்தினார்.  கடின உழைப்பே நாளின் சட்டம்.  சில நிமிடங்கள்சோம்பித் திரிந்தாலும், அது பல மணி நேர பயிற்சிக்குக் கொண்டு விடும்.  அதிலும் கழகத்தில் சேர்ந்த மாணவர்களின் வரிசைப்படி பொறுப்பு இருந்தது.

 

கட்டளை வரிசை இருந்தது.  முதலில் குரு.  அடுத்து குருவின் மனைவி. அடுத்து பாட்டு, குத்துச் சண்டை, ஆயுதப் பயிற்சி கொடுக்கும் ஆசிரியர்கள்.  பின்னரே மாணவர்கள்.

 

இந்த வரிசைக்குச் சவால் விடக் கூடாது. எந்தவொரு மாணவன் எது சொன்னாலும் செய்தே தீர வேண்டும்.  குருவின் ஆணைகபுக அடிபணியாதவர்கள் பிரம்படி பெறுவார்கள்.

 

எப்படி மூத்த மாணவன் ஆணையிட தகுதி பெற்றிருக்கிறானோ, அதேப் போன்று உணவிலும் அவர்களுக்கு அதிகப்படியான சலுகை உண்டு.   உணவும் வரிசைப்படியே கொடுக்கப்படும்.  தட்டு நிறையஉணவு ஆரம்பத்தில் இருக்கும்.  தட்டு வரிசையாகக் கை மாற மாற, அவர்கள் தங்களுக்கு பிடித்த கோழி மீன் துண்டுகளை எடுத்துக் கொள்ளலாம்.  உணவுத் தட்டு இளைய மாணவர்களுக்கு வரும்போது, அவர்கள் வைத்த மிச்ச மீதியே கிடைக்கும்.

 

முதல் வாரம் குருவிற்கு பக்கத்தில் அமர்ந்து உண்ணும் சலுகை, கழகத்தின் உறுப்பினர் ஆனதும் அப்படியே சரிந்து கடை நிலைக்கு வந்தான் சான். அதனால் மிச்ச மீதி உணவினையே சான் உண்ணவேண்டி இருந்தது.  அகோரப் பசி வாட்டி எடுக்கும். இருந்தாலும் மனத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டேயாக வேண்டும்.  கிடைப்பதை உண்டு, பயிற்சியைத் தொடர்ந்தான் சான்.

 

எல்லோருக்கும் மூத்தவனான யூன் டிங் கழகத்தின் கொடுமைகளைத் தாள முடியாமல் ஒரு நாள் இரவு ஓடி விட்டான்.  அனைத்து மாணவர்களையும் அதற்காக தண்டித்து, அடுத்ததாக இருந்த யூன்லுங்கை பெரியண்ணனாக ஆக்கினார் குரு.

 

சானின் வாழ்க்கையில் மிகவும் கடினமான நாள்கள் அன்று முதல் ஆரம்பித்தது என்றே சொல்லலாம்.  யூன் லுங் தன் அதிகாரத்தைப் எவ்வளவு மோசமாகப் பயன்படுத்த முடியுமோ அவ்வளவுமோசமாக பயன்படுத்தி இளையவர்களைக் கொடுமைப்படுத்தினான்.

 

எல்லாவற்றிலும் குற்றம் கண்டான். சரியாகச் செய்யாவிட்டால், குற்றம் சொன்னால் பரவாயில்லை.  நடை சரியாக இருந்தால், வேகத்தில் குற்றம் என்றான். வேகம் சரியாக இருந்தால் உணர்வில்குற்றம் என்றான்.  ஒவ்வொரு குற்றத்தையும் சுட்டிக் காட்டும் போதும் அந்தப் பெரிய அண்ணனின் கை முஷ்டியைத் தான் மாணவர்கள் உணர வேண்டி இருந்தது.

 

பயிற்சியின் போது இப்படி என்றால், மற்ற நேரங்களிலும் மேலும் மோசமாக யூன் லுங் நடந்து கொண்டான்.  அவனைப் பணிந்து போவது அனைவரது கடமை என்றானது.

 

இப்படிப்பட்ட சூழலில் தான் சான் பல விசயங்களைக் கற்றுக் கொண்டான். இவ்வளவு கடுமையான பயிற்சி தான் அந்தப் பத்து வருடத்தில் உலகப் புகழ்பெற்ற பாடகர்கள், சண்டை செய்வோர்,உடல்பயிற்சி வித்தவர்களை ஏற்படுத்திக் கொடுத்ததாக பல வருடங்களுக்கு பிறகு இன்றும் சான் நினைவு கூர்வார்.

 

இந்தக் காலத்தில் இத்தகைய பயிற்சிகள் கிடையாது.  குழந்தைகளைத் தண்டித்து எந்தப் பயிற்சியும் கொடுக்க முடியாது.  அதனால் இவர்களைப் போன்று சிறந்தவர்களை உருவாக்குவது மிகவும்கடினம்.  சிறந்த மேடைக் கலைஞர்களை உருவாகலாம்.  ஆனால் தலைசிறந்தவர்கள் ஆவது என்பது சந்தேகமே.

கடின பயிற்சி முறை சானின் வாழ்க்கையில் இன்றளவும் பலன் கொடுக்கிறது என்றே சொல்லலாம்.

Series Navigationநெய்தல் நிலத்து குறுந்தொழில்கள்தமிழ் ஸ்டூடியோ இரண்டு நிகழ்வுகள்
author

சித்ரா சிவகுமார், ஹாங்காங்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *