தினம் என் பயணங்கள் – 2

This entry is part 10 of 18 in the series 26 ஜனவரி 2014

 

போதிக்கும் போது புரியாத கல்வி 

பாதிக்கும் போது புரியும்

 

முக்கூட்டு ரோடின் திருப்பத்தில் திரும்பி சாலையில் கலந்த போது ஒரு நானோ கார் விர்ர்ர்ர்ரென்று கடந்து சாலையின் ஓரத்தில் ஒதுங்கி நின்றது. எனக்கு இணையாக நடந்து வந்த அந்த பெண்மணி நடையைத் துரிதப்படுத்தி, அந்த காரின் பின் இருக்கையில் தஞ்சம் புகுந்த பின், கார் தன் ஓட்டத்தைத் தொடர்ந்தது. அதன் பின்புறக் கண்ணாடியில் இந்த வாசகம் எழுதியிருந்தது.

 

“போதிக்கும் போது புரியாத கல்வி பாதிக்கும் போது புரியும்.”

 

இந்த நானோ காரின் உரிமையாளர் காமத் ஒரு ஆங்கில ஆசிரியர். தற்போது அவர் வேறு பதவியிலும் இருக்கக்கூடும். நான் பன்னிரெண்டாம் வகுப்பு தனித் தேர்வராக எழுத இவர் உதவி செய்தார். போதிக்கும் போது புரியாத கல்வி பாதிக்கும் போது புரியும், இந்த வரிக்கு என்ன விளக்கம் என்று அவரிடம் கேட்டு அறிய வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.

 

சமீபத்தில் வாக்காளர் அடையாள அட்டை பெற வந்த ஒருவரிடம் “விண்ணப்பத்தில் கையெழுத்து போடுங்கள்”, என்றேன். அந்த இளைஞர் திறுதிறுவென விழித்தார். பிறகு குரல் கம்ம “கையெழுத்து போடத் தெரியாது மேடம்”  என்றார். “படிக்கலியா நீங்க”, என்றேன். “எட்டாவது வரைக்கும் படிச்சேன் மேடம்”, என்றார். விண்ணப்பத்தில் வயது ஆதாரமாக அந்தச் சான்றிதழையும் வைத்திருந்தார்.

 

அந்த இளைஞரின் காதில் ஒற்றைக் கம்மல். கழுத்தில் ஒரு பெரிய தாயத்து. சட்டைப் பொத்தான்கள் பாதிவரைப் போடப்படாமல். கை முத்திரை வைக்க மை தேடியவரிடம் அவர் பெயரை எழுதி, பார்த்து எழுதும் படிக் கூறினேன். கையெழுத்தைக் காப்பி அடித்தவரிடம், கையெழுத்தை எழுதி பழகிக் கொள்ளும்படிக் கூறினேன். அவர் எல்லாவற்றிற்கும் தலையாட்டினார். அன்று அவர் தெளிந்து போனாரா…? என்ன்னைத் திட்டிக்கொண்டே போனாரா…? என்ற சின்ன உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது என் மனதில்.

 

இன்றைய விடுதலைச் சமுதாயத்தில் பயிலும் கல்வி, கையெழுத்து போடத் தெரியாதவர்களைத்தான் உருவாக்குகிறது. மறுபுறம் பணக் காகிதங்களை சேகரிக்க கற்றுத் தருகிறது. இலவசங்களின் பின் ஓடச் செய்கிறது. போதிக்கும் போது புரியாத கல்வி அன்று என் முன் தயங்கி நின்ற இளைஞருக்கு புரிந்திருக்கும் என்று எண்ணுகிறேன்.

 

ஓஷோவின் ஜோக் ஒன்று படித்தேன். ஒரு இரயில் பயணத்தில் ஆப்ரிக்கன், இந்தியன், அமெரிக்கன் ஆகிய மூவரும் சென்ன்றார்களாம். ஒரு  ஈ அமெரிக்கன் மேல் போய் அமர்ந்ததாம், அமெரிக்கன் அந்த ஈயை ஓட்டி விட்டானாம். இந்தியன் மேல் அமர்ந்ததாம்; இந்தியனும் ஓட்டிவிட்டானாம். ஆப்ரிக்கன் மேல் அமர்ந்ததாம், ஆப்ரிக்கன் அந்த ஈயைப் பிடித்துத் தின்று விட்டானாம்.

 

மீண்டும் ஒரு ஈ, மீண்டும் அதே நிகழ்வு. மீண்டும் ஒரு ஈ இந்த முறை அமெரிக்கன் மேல் அமர்ந்த போது அமெரிக்கன் ஓட்டி விட்டானாம். இந்தியன் மேல் அமர்ந்த போது ஈயை பிடித்து வைத்துக்கொண்டு ஆப்ரிக்கனிடம் சென்று ஒரு நல்ல கொழுத்த ஈ என்னிடம் இருக்கிறது. அதன் விலை 10 ரூபாய் என்றானாம். இப்படி ஒரு கதை நாம் பணத்தின் பின் ஓடிக்கொண்டிருக்கிறோம். நம் வாழ்தலைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம் என்று உணர்த்தியது எனக்கு.

 

இன்றைய சூழ்நிலையில் பணத்தைக் கொண்டு எல்லாவற்றையும் வாங்க முடியும். எல்லா வளங்களும் வற்றிய பிறகு சேமிக்கப்படும் பணத்தை உண்ண முடியுமா………………..?

 

நமது கல்வி, நம் கலாச்சாரத்தை மேம்படுத்துவதாகவும், மனித திறன்களை மேம்படுத்துவதாகவும். இயற்கை வளங்களைப் பாதுகாப்ப தாகவும். இயற்கையோடும் சக மனிதர்களின் உணர்வுகளை புரிந்து நடக்கும் விதமாகவும் அமைய வேண்டும். இங்கு ஒவ்வொருவரும் அறிவில்லாமல் ஏதோ ஒரு வகையில் இயற்கையைக் காயப்படுத்தி நோயாளிகளாய் நம்மைத் துன்புறுத்திக் கொண்டிருக்கிறோம். “என் ஜனங்கள் அறிவில்லாமல் சங்காரமாகிறார்கள்”, என்ற வேதாகம வசனம் தான் எனக்கு நினைவுக்கு வருகிறது.

 

நான் சொல்லப் போகும் அந்த குடும்பம் எனக்கு மிகவும் பரிச்சயமான குடும்பம். நான் அலுவலகம் போகும் பாதையில்தான் அவர்களின் வீடு. தற்செயலாக அன்று அவர்களை வாசலில் வைத்தே சந்திக்க வேண்டி வந்தது. என் சிநேகிதி அழுதுக் கொண்டிருந்தாள். இதுதான் விடயம்,   அவளுக்கு சென்னையில் அரசு அலுவலர்களுக்கு உண்டான பயிற்சி வகுப்பு, அவளின் மகனோ அவள் போகக் கூடாது என்று முரண்டு பிடிக்கிறான். கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும்   மகனிடம் ஒரு தாய் “போய் வருகிறேன்” என்று சொல்கிறாள். “எங்காவது போய் சாவு”, என்கிறான் அவன்.

 

ஒரு மாணவனின் தேர்வு நாட்களில் அவனின் தாயார் எத்தனை ஆவலாக அவனுக்கு உதவுகிறாள். அதே போல் மகனும் “ஆல் த பெஸ்ட்”, என்று சொல்லி அனுப்பி யிருந்தால், மகிழ்ச்சியாய் இருந்திருக்கும். இதை ஏன் அவனுக்கு யாரும் கற்றுத் தரவில்லை, அல்லது அவனாகவே கற்கும் வாய்ப்பு ஏன் ஏற்படவில்லை ?

 

பொதுவில் ஆண்கள் எந்த ரூபத்தில் இருந்தாலும் மூத்த மாதர்கள் கூட அவர்களுக்கு அடங்கி இருக்க வேண்டும் என்பதையே எதிர்பார்க் கிறார்கள்.

 

அன்று, மதிய உணவிற்காக வீட்டிற்கு என் பயணம்.  கொளுத்தும் சூரியன் தன் கோரக் கரங்களால் அக்கினிப் பூக்களை என் மேல் சொரிந்து தள்ள…. வியர்வை முத்துக்கள் என் முகத்தை அலங்கரிக்க, என் சீரிய சைக்கிள் ஓட்டத்தைத் தடுத்தது அந்த குரல்.

 

அடையாளம் மாறியிருந்தார் அவர். காதில் இருந்த ஒற்றை கம்மல் காணாமல் போய் இருந்தது. பொத்தான்கள் ஒழுக்கமாக அதன் இடத்தில் பொருந்தி யிருந்தது. “இது என் பொண்டாட்டி, இது என் பொண்ணு,” என்று அறிமுகப்படுத்தினார். மூன்று மாதங்களே ஆன பெண் குழந்தையை நான் எதிர்பார்க்காத தருணத்தில் என் கரங்களின் தவழ விட்டாள் அந்த பெண். “இவங்க தான் கையெழுத்து போட அன்றெனக்கு கத்துக்குடுத் தாங்க என்று மனைவியிடம் கூறினார் அவர். என்னவோ போல் இருந்தது எனக்கு. கைகளில் ஆந்தக் குழந்தை குறுகுறுவென்று நெளிந்தது. அது எனக்கு ஒரு புத்துணர்வு. புதியதொரு காந்த தாக்கம். ஒரு முத்தத்தை தவிர  அந்த குழந்தைக்கு் தருவதற்கு ஒன்று மில்லை என்னிடம் அந்த தருணத்தில்.

 

புத்தகத்தில் குறிப்பிட்ட பாடங்களை  மனனம் செய்து தேர்வு நேரத்தில்  படித்ததை எல்லாம் கொட்டி விட்ட பிறகு நாளடைவில் அது மறந்தே போகிறது. என் தாத்தா அவர் காலத்தில் படித்த பாடல்களை நினைவில் வைத்திருந்து எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார். ஆனால் நான் படித்த மனப்பாடச் செய்யுள்கள் கூட இன்று என் நினைவில் இல்லை. எதையும் மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் போதே நினைவில் நிற்கிறது. என் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் விதமாக நான் படித்த கல்வி இல்லை என்பது தான் உண்மை.

 

கற்றல் என்பது பாடப் புத்தகங்களில் மட்டும் அல்லாமல், ஒவ்வொரு நிகழ்விலும், அனுபவத்திலும், பழகும் ஒவ்வொரு மனிதர்களிடமும், விலங்குகள் இடமிருந்தும் கூட நடைபெற வேண்டும்.

 

அவர்களிடமிருந்து விடைபெற்று, வரசித்தி விநாயகரைத் தாண்டும் பொழுது  கோவிலில்.

 

இன்னொருவர் வேதனை

இவர்களுக்கு வேடிக்கை !

இதயமற்ற மனிதருக்கு

இதுவெல்லாம் வாடிக்கை !

 

எத்தனை பெரிய மனிதனுக்கு

இத்தனை சிறிய மனமிருக்கு ?

இத்தனை சிறிய பறவைக்கு

எத்தனை பெரிய மனமிருக்கு ?

 

என்ற பாடல் பாடிக்கொண்டிருந்தது. உண்மைதான் அந்த பாடலின் வரிகள் அந்த பாடலை போட்டிருந்தவர்களுக்கும் பொருந்தும் என்று எண்ணிக் கொண்டேன். சங்கதி என்னவென்றால் நேற்று (24.02.2013) நம் தமிழக முதல்வரின் [ஜெயலலிதா] பிறந்த நாளாம். அதனால் இன்று பௌர்ணமியை முன்னிட்டு வரசித்தி விநாயகருக்கு பால் அபிஷேகமாம். மகளிர் குழு பெண்கள் மொத்தமும் படைத்திரண்டு ஒவ்வொரு குடத்தோடு பவனி வர, உள்ளுர் கொட்டு மேளம் முழங்க, அங்காங்கே வாகனங்கள் ஒதுங்க, போக வழியின்றி ஸ்தம்பித்து நின்றேன்.

 

ஆளுயரச் சினிமாக் கட்அவுட்களுக்கு அடியில் குவிந்து கிடக்கிறது குப்பையும் கூளமும். சின்னக் கொடிகள் வான் உயரப் பறக்கிறது. சுனாமியும், தானேவும் வெட்கி தலை குனிகிறதாம், அம்மா அவர்களின் நிவாரண வேகத்தை கண்டு. அடடா ! வாசகங்களை கண்டு நெஞ்சம் கருக அங்கிருந்து நகர்ந்தேன் நான்.

 

வேடிக்கை என்ன வென்றால், முதல்வர் அவர்களுக்கு இ-போஸ்ட்டில் வாழ்த்துரை அனுப்ப 20 ரூபாயாம். ஒரு பக்கம் அஞ்சல் துறை மும்முரமாக…………… அந்த ஒரு இ-போஸ்டைப் பார்க்கவாவது முதல்வர் அவர்களுக்குச் சற்று நேரமோ அல்லது மனமோ இருக்குமா…?

 

பாலாபிஷேகத்தில் பாவம் வரசித்தி விநாயகர். நிச்சயம் இன்று ஜலதோஷமும் காய்ச்சலும் அவருக்கு வரும். என் சார்பாக ஒரு பேராசிட்டமல் வாங்கி தருவதாக பிரார்த்தித்தபடி அவ்விடம் விட்டுக் கடந்தேன் நான்.

 

சிரிக்கத் தெரிந்தவர்களுக்கு நோய் வராதாம். விநாயகா ! உனக்கு சிரிக்கத் தெரியுமா…? தெரியா விட்டால் கற்றுக்கொள்.

 

மீண்டும் வருவேன்.

 

[தொடரும்]

Series Navigationஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் – 4திண்ணையின் இலக்கியத் தடம்- 19
author

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

Similar Posts