வாழ்க்கை ஒரு வானவில் – அத்தியாயம் 15

This entry is part 21 of 23 in the series 10 ஆகஸ்ட் 2014

15

        “சாரி, சேது சார். நான் ராமு பேசறேன். ஆஃபீஸ் டயத்துல டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” என்று ராமரத்தினம் சொன்னதும், “இல்லேப்பா. இப்ப எங்களுக்கு லஞ்ச் டைம்தான். சொல்லு. என்ன விஷயம்?” என்று சேதுரத்தினம் விசாரித்தான். ஊர்மிளாவுக்குத்தான் மறுபடியும் ஏதோ என்று கவலைப்பட்டபடி தொலைப்பேசியை நெருங்கிய அவனுக்கு நிம்மதியாக இருந்தது.  

“சொல்லாம கொள்ளாம எங்கே சார் போயிட்டீங்க? உங்க கிட்ட சொல்றதுக்கு எக்கச்சக்கமான விஷயங்கள் வெச்சிருக்கேன், சேது சார். இன்னைக்கு ஓட்டலுக்கு வருவீங்களா? ஒங்க ஒய்ஃபுக்கு உடம்பு சரியில்லேன்னு கோயமுத்தூருக்குப் போயிருந்தீங்களாமே? என்ன சார் ஆச்சு? குழந்தை பிறந்துடுத்தா?”  என்று அவன் மூச்சுவிடாமல் பேசினான்.

“இன்னும் இல்லேப்பா. ஒரு வாரத்துக்கு மேல ஆகுமாம். வெறும் காய்ச்சல்தாம்ப்பா. பயந்துண்டு தந்தி யடிச்சுட்டாங்க. அதான் போய்ப் பார்த்துட்டு அப்படியே மதுரையில ஒரு இன்ஸ்பெக்‌ஷன் வேலையையும் முடிச்சுட்டு இன்னைக்குத்தான் வந்தேன். அவங்க சொன்ன ஒரு வார கெடு முடிய இன்னும் ரெண்டு நாள்தான் இருக்கு….”

“ஆல் த பெஸ்ட், சேது சார்…இன்னைக்கு வர்றீங்களான்னு கேட்டேன்..”

“கண்டிப்பா வர்றேன்ப்பா.”

சேதுரத்தினம் ஒலிவாங்கியை வைத்துவிட்டு ராமரத்தினம் பற்றி யோசிக்கலானான்.  ‘…. காரில் தாமே வந்து ராமரத்தினத்தை அழைத்துப் போன ரமணியின் அப்பா அவனை எதற்குக் கூட்டிக்கொண்டு போயிருந்திருப்பார்? அவனிடம் எதைப்பற்றி என்ன பேசி யிருந்திருப்பார்? … எல்லாம், அவனை நேரில் சந்திக்கும் போதுதான் தெரிய வரும்…’

சேதுரத்தினத்தின் வருகை லலிதாவிடம் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிட்டிருந்தது. எந்தத் தவறும் செய்யாத ஒரு பெண்ணை விடவும் தான் ரங்கனிடம் அதிக அதிகார தோரணையுடன் நடந்து வந்துள்ளதைத் கறை படிந்த தன் கடந்த காலம் சேதுரத்தினத்தால் வெளிப்பட்டுவிடுமோ என்கிற அச்சம் அவளை மறு பரிசீலனை செய்ய வைத்துவிட்டது. எனவே, இனிமேல் ரங்கனிடம் சற்றேனும் மரியாதையாக நடந்துகொள்ள வேண்டும் என்கிற முடிவை அந்த அச்சம்  அவளிடம் விளைவித்தது. அவள் அது போன்று மாறாவிடில், தனது வருங்காலம் சிக்கலின்றி இருக்கவேண்டும் என்கிற தன் பிரார்த்தனை பலிக்க வாய்ப்பில்லை என்றும் அவள் நம்பத் தொடங்கினாள். அவளுக்கே தன்னைப்பற்றிய வியப்பு மேலோங்கியது. கறைபடிந்த தனது கடந்த காலம் அவனுக்குத் தெரியாது – தெரிய வராது –  என்கிற நிலையில் தனது எதேச்சாதிகாரம் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்ததையும், தெரிந்து விடுமோ என்கிற தற்போதைய திடீர்த் திருப்பத்தால் இப்போது அது பெரிதும் தளர்ந்து விட்டிருப்பதையும் ஒப்பிட்டுப் பார்த்து, மனித மனம் செயல்பட்ட விந்தையை ஒரு புதிய கோணத்தில் அவள் ஆராய முற்பட்டாள். ரங்கனின் மீது அவளுக்கு அது வரையில் அவள் உணர்ந்தறிந்திராத அன்பும் பரிவும் விளைந்தன!

ஆயினும் அறிவும், தந்திரமும் நிறைந்த அவள் அந்த மனமாற்றத்தை முழுவதுமாக உடனே செயல்படுத்திவிடக்கூடாது என்னும் ஜாக்கிரதையான முடிவுக்கு வந்தாள்! கொஞ்சங் கொஞ்சமாகத்தான் அவள் மாறவேண்டும். சேதுரத்தினத்தின் வருகையுடன் தன் மனமாற்றத்தை முடிச்சுப்போட்டுப் பார்த்து ரங்கனை யோசிக்க வைக்கக் கூடாது என்று அவள் நினைத்தாள். அரசல் புரசலாய் ஏதேனும் அவன் காதில் தன்னைப்பற்றிய சேதி பின்னர் என்றேனும் விழுந்தால் அது உண்மையாகத்தான் இருக்கும் என்று அவனை அவளது மாற்றம் ஊகிக்க வைக்கும் என்று அவள் அஞ்சினாள். வேறு  ஆதரவற்ற நிலையில் தான் புத்திசாலித்தனத்துடன் நடந்துகொண்டாக வேண்டிய கட்டாயத்தையும் அவள் நன்றாகவே உணார்ந்தாள்.

விளைவுகள் பற்றிய எச்சரிக்கை உணர்வுகள் அற்றிருந்த இளவயதில் காதலன் என்று தான் நம்பிய ஒருவனுடன் ஓடிப்போய் வாழ்ந்து ஒரு குழந்தையையும் பெற்ற உறுத்தல் அவ்வப்போது அவளுக்கு வந்துகொண்டுதான் இருந்தது. அது வந்த போதெல்லாம் அந்தக் குழந்தை உயிருடன்  இருந்திருந்தால் அதற்கு அப்போது என்ன வயதாகி யிருந்திருக்கும் என்பதைக் கணக்கிடவும் அவள் தவறியதே இல்லை.

தனக்கு விரைவில் ஒரு குழந்தை பிறந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினாள்.  காலதாமதம் விளைந்தால் அவளை ரங்கன் மருத்துவரிடம் இட்டுச் செல்லக் கூடும். அப்போது அவள் ஏற்கெனவே கருத்தரித்தது பற்றிய பேச்சை அவனிடமே தற்செயலான உரையாடலின் போது மருத்துவர் குறிப்பிட நேர்ந்தால் ஆபத்து. முதல் குழந்தை பற்றி அவர் அவர்களிடமே விசாரித்துவிட்டால் வம்பு. எனவே தான் விரைவில் தாய்மையுறுவது பல வழிகளிலும் தன்னைக் காக்கும் என்று அவள் எண்ணினாள்.  ரங்கனுக்குச் சொல்லாமல் ஒரு பெண் மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக் கொண்டால் என்ன என்று அவளுக்குத் தோன்றியது.

…அன்று மாலை சேதுரத்தினம் ஓட்டலுக்குப் போனான். ஒரு மேசைக்கு அருகில் நின்று வாடிக்கையாளரிடம் பில்லைக் கொடுத்துக் கொண்டிருந்த ராமரத்தினம் அவனைக் கண்டதும் விரைந்து வந்தான்.

“சவுக்கியமா, சேது சார்?”

“உம்..  நீ எப்படி இருக்கே?”

“ஒண்ணும் சொல்லிக்கிறாப்ல இல்லே சார்.  இன்னைக்கு ட்யூட்டி முடிஞ்சதும் பீச்சுக்கு வர்றேன். அங்கே விவரமா எல்லாம் சொல்றேன்.”

“சரிப்பா.”

“நீஙக இல்லாம எனக்குக் கை ஒடிஞ்ச மாதிரி இருந்தது, சார். என்னமோ தெரியல்லே.  உங்களோட மனசு விட்டுப் பேசிப் பழகணும்னு தோணுது. என்னோட மத்த சிநேகிதங்க கிட்ட எனக்கு இல்லாத மன நெருக்கம் உங்ககிட்ட எனக்கு ஏற்ப்ட்டிருகு, சேது சார். .. சரி. என்ன சாப்பிடறீங்க? சூடா மசால்தோசையும் சப்பாத்தி-குருமாவும் இருக்கு. என்ன கொண்டுவரட்டும்?”

“சப்பாத்தி-குருமா கொண்டு வா…ஏன் உன் கண்ணு கலங்கி யிருக்கு?”

“ரொம்பப் பெரிய கேடு ஏற்பட்டுப் போச்சு, சார். பீச்ல சொல்றேன், சேது சார். இங்கே பேச முடியாது…”

“எதுவானாலும் மனசை மட்டும் தளர விடாதேப்பா. …”

ராமரத்தினம் முகத்தைத் திருப்பிக்கொண்டு சப்பாத்தி எடுத்து வர அகன்றான்.

சற்றுப் பொறுத்துச் சப்பாத்தி-குருமாத் தட்டுகளுடன் வந்த அவன், அவற்றை மேசையில் வைத்துவிட்டு, “சாரி, சேது சார். நான் ஒரு சுயநலக்காரன்.  உங்க விஷயம் பத்தி நான் விசாரிக்கவே இல்லியே! உங்க ஒய்ஃப் எப்படி இருக்காங்க? உடம்பு சரியில்லைன்னு கோயமுத்தூர் போனதாச் சொன்னீங்களே?” என்றான்.

“அவங்களுக்குக் காய்ச்சல்லாம் இல்லே. ஆஃபீஸ்ல வெச்சு விவரமாப் பேச முடியல்லே. பொய்வலின்னுவாங்கல்லே? அது வந்திருக்கு. பயந்து போய் எனக்குத் தந்தி குடுத்துட்டாங்க. அதான் போய்ப் பார்த்துட்டு வந்தேன். ஒரே நாள்லே வலி நின்னுடுத்து. நானும் கிளம்பி வந்துட்டேன். கொஞ்சம் பயந்த சுபாவம். நான் பக்கத்துல இருக்கணும்னு தோணியிருக்கு. அதான் உடனே கிளம்பி வரச்சொல்லித் தந்தி குடுதுட்டாங்க. நானும் பயந்துதான் போயிட்டேன் – என்னமோ ஏதோன்னு.”

“பாவம் சார் இந்தப் பொண்ணுங்க! அவங்களுக்குத்தான் எத்தனை கஷ்டங்கள்! ஆம்பளைங்க குடுத்து வெச்சவங்க, சார்.”

“அப்படிச் சொல்லிட முடியாது, ராமு. கடவுளோட படைப்பில நாம் குத்தம் காணக் கூடாது. கடவுள் என்னவோ எல்லாம் சரியாத்தான் படைச்சிருக்கார். மனுஷன் பண்ற தப்புகளாலதான் ஏற்றத்தாழ்வுகள், பேதங்கள், அநியாயங்கள் இதெல்லாம் ஏற்பட்டுப் போறது. சரி, நீ போய் உன் வேலையைக் கவனி. முதலாளி இந்தப் பக்கம் பார்க்கிறாரு….”

ராமரத்தினம் உடனே அகன்று காப்பி போடும் மேடைப் பக்கம் போனான்.

…. வெகு அருகில் பின்னால் காலடியோசை கேட்டு அது ராமரத்தினத்துக்கு உரியதுதான் எனும் ஊகத்துடன் சேதுரத்தினம் திரும்பிப் பார்த்தான். அவன் தான் வந்துகொண்டிருந்தான்.

“வாப்பா, ராமு. வா, வா. உக்காரு.”

ராமரத்தினம் அவனுக்கு எதிரில் அமர்ந்துகொண்டான்.

சில நொடிகளுக்குப் பிறகு, “… சொல்லு, ராமு. நீ என்ன சொல்லப் போறியோன்று கவலையா உக்காந்துண்டிருக்கேன்… என்ன ஆச்சுப்பா?” என்று சேது ரத்தினம் வினவினான்.

“அன்னைக்கு பீச்சுக்கு வர்றேன்னு சொல்லிட்டு என்னால வர முடியாம போச்சு, இல்லையா?”

“ஆமா. நானே கவலைப்பட்டு ஓட்டலுக்குப் போய் விசாரிச்சேன்.  யாரோ கார்ல வந்து உன்னை அவசரமாக் கூட்டிண்டு போனதா உன்னோட தோஸ்து கணபதி சொன்னான். ரமணியோட அப்பாதானே?”

“ஆமா, சேதுசார். அவர்தான். அது என் தங்கை சம்பந்தப்பட்ட ரகசியம், சார். நியாயமாப் பார்த்தா, அதை நான் உங்க கிட்ட சொல்றது கூடத் தப்புதான். இருந்தாலும் உங்க மேலே உள்ள நம்பிக்கையால்….”

“வேணாம், ராமு. அப்ப சொல்லாதே. அது தப்பு.”

“இல்லே, சேது சார். பரவால்லே, உங்க கிட்ட சொல்றதுக்கென்ன?… என் முதல் தங்கை – மாலான்னு பேரு – அவ ஒரு தப்புப் பண்ணிட்டா. என் ஃப்ரண்டு ரமணிக்கு லெட்டர் எழுதிட்டா – அவனோட ஆஃபீஸ் அட்ரெசுக்கு. அதாவது அவனைத் தான் விரும்புறதாயும், அவனுக்கும் அதிலே சம்மதம்னா என்னோடவும் எங்கம்மாவோடவும் வந்து பேசுங்கன்னும் அதிலே எழுதிட்டா. … அப்ப ரமணி ஊர்ல இல்லே ஆஃபீஸ் விஷயமா டூர் போயிருந்தான்…” என்று தொடங்கி அவன் அப்பா அதைப் பிரித்துப் படிக்க் நேர்ந்தது எப்படி என்பதை அவன் விளக்கினான்.

“ஓ! அதைப் பத்திப் பேசுறதுக்குத்தான் அவர் உன்னைக் கூட்டிண்டு போனாரா?”

“ஆமா. என் தங்கைக்கு அடக்கம் பத்தாது, அது இதுன்னு அவளைப் பத்தி ரொம்பவும் கேவலமாப் பேசிட்டார், சேது சார்னா?”

“அவர் பேசினது தப்பு.”

“நானும் அப்படித்தான் சொன்னேன். அவர் ஒத்துக்கல்லே, அது மட்டுமில்லே, ரமணிக்கு மாலாவுடைய லெட்டர் பத்தி எதுவுமே தெரியக்கூடாதுன்னாரு. அவ இனிமே அவனுக்கு எழுதக் கூடாதுன்னும் சொன்னாரு…”

“அது அந்தப் பையனோட இஷ்டம். இவர் யாரு அப்படியெல்லாம் சொல்றதுக்கு? அப்புறம்?”

ராமரத்தினம் எல்லாவற்றையும் அவரிடம் விவரமாய்ச் சொன்னான். சொல்லி முடித்துவிட்டு, “ரமணி நாளைக்குத்தான் டூர்லேர்ந்து திரும்பறான்….”

“அவனோட பேசுப்பா…”

அந்தக் கணத்தில் சேதுரத்தினத்துக்குப் பின்னால் நடந்துசென்ற இருவரில் ஒருவன் சொன்ன சொற்கள் மிகத் தெளிவாக ராமரத்தினத்தின் செவிகளில் விழுந்தன. சேதுரத்தினத்துக்கு எதிரே அவன் உட்காந்திருந்ததால் அவர்களை அவனால் நன்றாய்ப் பார்க்க முடிந்தது. அவன் மயிர்க்கால்கள் குத்திட்டன.

அவன் மிகச் சன்னமாக, “சேது சார்! கொஞ்சம் எழுந்து என்னோட வாங்க. எதுவும் பேசாதீங்க, கேக்காதீங்க. அப்புறம் எல்லாம் சொல்றேன், “ என்று கூறிய பின் எழுந்து அவ்விருவரையும் பின்பற்றி நடக்கலானான்.  சேது ரத்தினமும் ஒன்றும் பேசாமல் வியப்புடன் ராமரத்தினத்தோடு நடக்கலானான்.

Series Navigationஆழியாள் கவிதைகள்=மேகத்துக்குள் இயங்கும் சூரியன்.மெல்பனில் முருகபூபதியின் சொல்லமறந்த கதைகள் நூல்வெளியீட்டு அரங்கு
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *