சாவடி – காட்சிகள் 10-12

This entry is part 3 of 23 in the series 7 டிசம்பர் 2014

WW1_TitlePicture_For_Caucasus_Campaign

காட்சி -10

 

 

காலம் முற்பகல்   களம் உள்ளே

 

ப்ராட்வே போலீஸ் ஸ்டேஷன். வெள்ளைக்கார இன்ஸ்பெக்டர் மிஸ்டர் ப்ரவுன் சிகரெட் புகைத்தபடி அமர்ந்திருக்கிறார். முன்னால் சப் இன்ஸ்பெக்டர் ராமோஜி ராவ். இன்ஸ்பெக்டரின் ஆர்டர்லி பிளாஸ்கில் இருந்து காப்பியைக் குவளையில் நிறைத்து ஒரு தட்டில் வைத்து இன்ஸ்பெக்டருக்கு நீட்டுகிறான்.

 

இன்ஸ்பெக்டர் துரை: where are the fucking biscuits, man? the german bastards took them away or what?

 

ஆர்டர்லி: பிஸ்கோத்துங்களா? அம்மா கூடையிலே வைக்க விட்டுப் போயிடுச்சு போல.. ஓடிப் போய் வாங்கியாந்துடட்டா?

 

இன்ஸ்பெக்டர் துரை: Its certainly not worth running those fucking five miles to fetch a packet of Navy Hard Tack buiscuits.. baked wheat in water .. no butter.. give it a go..

 

சப் இன்ஸ்பெக்டர்: sir, Perambur Barracks.. Smith bakery.. good good biscuit.. all English…eat one.. eat all..

 

இன்ஸ்பெக்டர் துரை: what was that you guys were taking with tea before we came?

 

சப் இன்ஸ்பெக்டர்: மல்லாக்கொட்டை சார்..no tea.. mallakottai and sukku kapi.. good for throat.

 

இன்ஸ்பெக்டர் துரை: sukoo coffee? japanese? very bad? and what is mallaa..?

 

நாயுடு யூனிபார்மில் உள்ளே நுழைந்து இன்ஸ்பெக்டருக்கும் சப் இன்ஸ்பெக்டருக்கும் சல்யூட் வைக்கிறார்.

 

இன்ஸ்பெக்டர் துரை: (in a sarcastic tone) are you still alive, Naidu?

 

நாயுடு: அலைவ் சார்.. கிக்கிங் அண்ட் பக்கிங்

 

இன்ஸ்பெக்டர் துரை: (பலமாகச் சிரித்து) – I’ve my own doubts about the second though.. who taught you this wonderful phrase?

 

நாயுடு: பட்லர் சார்.. கலெக்டர் பட்லர்.. மை சகலபாடி.. all body

 

இன்ஸ்பெக்டர் துரை:       Tell him go to hell or board the wretched Emden..

(தொப்பியைத் தலையில் வைத்துக் கொண்டு ஷுக்களை முடிந்து கொண்டபடி)

let me go now and meet the superindentent bugger before I proceed with my vacation..

 

சப் இன்ஸ்பெக்டர்: you back sir ?

 

(இன்ஸ்பெக்டர் துரை நிமிர்ந்து நிற்கிறார்)

 

இன்ஸ்பெக்டர் துரை: no..send my lunch to SP office..(to orderly) tell madam to pack for two.. fish and chips separate..drain out the oil..

 

இன்ஸ்பெக்டர் துரை புகைத்தபடி வெளியேற ஆர்டர்லி சப் இன்ஸ்பெக்டருக்கு சல்யூட் வைத்து நிற்கிறார்.

 

சப் இன்ஸ்பெக்டர்: (மேஜையில் இருந்து துட்டு எடுத்துக் கொடுத்து) அய்யர் கடையிலே சூடா மசால் வடை போட்டிருப்பான்.. ரெண்டு வாங்கியாந்து வச்சுட்டு துரை காரியத்தைப் பாரு.. எஸ் பி ஆபீசுக்கு லஞ்ச் எடுத்துப் போவணுமாம்.. ரெண்டு பேர் தின்னு தீர்க்க.. மீனும் வறுவலும் தனித்தனியா வைக்கச் சொல்லி துரைசானி கிட்டே ஞாபகப் படுத்து..அதெல்லாம் ஒரு சாப்பாடா? கண்றாவி.. ஐயன் கடை மசால் வடை மாதிரி வருமா என்ன?

 

நாயுடு: சார் எதிர் சாரியிலே .. வாராவதி முகப்பு இருக்கு பாருஙக்.. அங்கேதான்.. இன்னொரு ஐயன் கடை போட்டிருக்கான்.. கன்னடக்காரன்.. மசால் வடை மகா வடை.. நேத்துத்தான் கடிச்சுப் பார்த்தேன்.. ஆஹா

 

சப் இன்ஸ்பெக்டர்: நமக்குச் சொல்லாம எப்படிக் கடை போட்டான்?

 

நாயுடு: துரை லைசன்ஸ் கொடுத்திட்டார் சார் (விஸ்கி பாட்டிலை அபிநயித்துக் காட்டுகிறார்)

 

சப் இன்ஸ்பெக்டர்: போவுது போ.. (ஆர்டர்லியிடம்).. அய்யர் கடை.. புதுசாம் .. பார்த்து வாங்கு (நாயுடுவிடம்) இன்னிக்கு என்னய்யா விசேஷம்? தலை குளிச்சு துளசி வச்சிருக்கே காதுலே.. தொப்பிக்கு கீழே துருத்திக்கிட்டு நிக்குது?

 

நாயுடு: கொத்தவால் சாவடியிலே கட்டை விரலைப் பார்த்தேன் சார்..

 

சப் இன்ஸ்பெக்டர்: ஏமிய்யா மொட்டத் தாதன் குட்டையிலே உளுந்த மாதிரி?

 

நாயுடு: நிசமாத்தான் சார்.. கட்டை விரல்..

 

சப் இன்ஸ்பெக்டர்: மிச்சம்?

 

நாயுடு: எவரிக்கி தெலுசுனு சார்? (யாருக்குத் தெரியும்?) வெண்டிக்கா குவியல்லே விரல் மட்டும் கிடைச்சது அகஸ்மாத்தா.. கான்ஸ்டபிளோட போறதுக்குள்ளே ஆள் அப்ஸ்காண்ட். கேஸ் பைல் பண்ணிடு விசாரிச்சுடலாமா?

 

சப் இன்ஸ்பெக்டர்: சனியனைத் தலையைச் சுத்தி எறி.. நமக்கு ஆயிரம் சோலி…

 

யாரோ ஒரு கான்ஸ்டபிள் வந்து நிற்கிறார். யாரை என்ன கேட்பது என்பது தெரியாத குழப்பம் முகத்தில். பொதுவாக ஒரு சல்யூட் அடித்து

 

வந்தவர்: எஜமான்களே

 

சப் இன்ஸ்பெக்டர்: எந்த ஸ்டேஷன்யா

 

வந்தவர்: செங்கல்பட்டு எஜமான் .. துரையவங்களை பார்க்க முடியுமா?

 

சப் இன்ஸ்பெக்டர்: என்ன விஷயம்யா?

 

வந்தவர்: எங்க எஜமான் கடுதாசி கொடுத்திருக்கார்

 

சப் இன்ஸ்பெக்டர்: ஒரு மணி நேரம் முந்தி வந்திருக்கக் கூடாது? துரை கிளம்பி ஊட்டிக்கு போயிட்டார். இனி ஒரு மாசம் ஆகும் திரும்பி வர. எம்டனே இன்னொரு ரவுண்ட் பாம் போட்டாலும் துரை வர்றப்போதான் வரத்து.

 

நாயுடு: ஏ ஊரனி செப்பேரு? (எந்த ஊர் சொன்னீரு?)

 

வந்தவர்: செங்கல்பட்டு எஜமான்

 

நாயுடு: ஓய் தாணா கச்சேரியிலே இருக்கப்பட்டவங்க எல்லாரும் எஜமான் தானா உமக்கு

 

சப் இன்ஸ்பெக்டர்: யோவ் நாயுடு

 

நாயுடு: உங்களைச் சொல்லலே .. நீர் ஏசாமானுக்கு ஏசாமான் .

 

நாயுடுவும் சப் இன்ஸ்பெக்டரும் சிரிக்க வந்தவன் சிரிக்க ஆரம்பித்து உடனே நிறுத்திக் கொள்கிறான்.

 

வந்தவர்: (மரியாதையாக ஒரு சீல் செய்த கவரை சப் இன்ஸ்பெக்டரிடம் கொடுத்தபடி) துரை எஜமான் வந்தா கொடுக்க உத்தரவாகணும்..

 

நாயுடு: செங்கல்பட்டுலே என்னய்யா விசேஷம் துரைக்கு துரை லிகிதம் கொடுத்து விட?

 

வந்தவர்: மூணு பொம்பளைப் பிள்ளைங்க, எல்லாம் குமருங்க.. சிநேகிதிங்க வேறே.. அதுலே ஒண்ணு பண்ணையார் மக.. அடுத்த வாரம் அதுக்கு கண்ணாலம்

 

நாயுடு : ஒத்தவாடையிலே ஆடற நாடகம மாதிரி என்னமோ சொல்றீயே செங்கல்பட்டு.. சட்டு புட்டுனு விஷயத்துக்கு வா

 

வந்தவர்ம் : இல்லீங்க.. பொண்ணு மூணும் காணாமப் போச்சு..  .. பட்டணம் வந்ததாத்தான் துப்பு கிடைச்சிருக்குங்க.

 

சப் இன்ஸ்பெக்டர்: மாப்பிள்ளைக்கு வேறே பொண்ணைப் பாத்து கட்டி வைக்கச் சொல்லுமய்யா.. பட்டணத்துப் பேய்க் கூட்டத்துலே உம்ம ஊர்ப் பொண்னுங்களை எங்கே தேடறது? போட்டோ படம் வச்சிருக்கியா?

 

வந்தவர்: ஐயா..செங்கல்பட்டுலே அந்த வசதியெல்லாம் இல்லீங்களே

 

சப் இன்ஸ்பெக்டர் லெட்டரை கொடுத்திட்டே இல்லே போய்ச் சேரு.

 

நாயுடு எதுக்கும் ஜோசியன் கிட்டே கேட்கச் சொல்லு..

 

வந்தவர்: சல்யூட் செய்து விட்டு நடக்கிறான்.

 

நாயுடு: யோவ் செங்கல்பட்டு.. அங்கே வெண்டிக்கா தோப்பு.. தோட்டம் எதாச்சும்

 

வந்தவர் காதில் விழவில்லை.

 

சப் இன்ஸ்பெக்டர்: முப்பது ரவுண்ட் குண்டு போட்டிருக்கான்.. அதுலே பத்து கிடச்சாலும் ஈயத்தை உருக்கி வித்துக் காசு பாத்துடலாம்னு அவனவன் ஆர்பர் பக்கம் சாக்கு மூட்டையோட அலையறானாம்

 

நாயுடு: சார் இன்னிக்கு சள்ளக்கடுப்பா இருக்கு.. நீர்க்கடுப்பு வேறே.. என்னை விடுங்க..

 

சப் இன்ஸ்பெக்டர்: உம்மைப் போகச் சொல்லலேய்யா.. நாட்டு நிலவரம் சொல்றேன்.. இந்த அக்கப்போர் தவிர ஊர்லே திருட்டுப் பய, மொல்ல மாறி, முடிச்சவிக்கியைப் பிடிக்கவே நேரத்தைக் காணோம்.. காங்கிரஸ் காரன் வேறே கலாட்டா பண்றான்.. திலகர் திரும்பி வந்துட்டாராம்.. பேசினா பீச்சாங்கரையே ரொம்பி வழியும்.. எம்டன் வந்தாலும் எந்திரிக்க மாட்டானுங்க

 

நாயுடு: வரமாட்டான் சார்.. இங்கே ஏப்ப சாப்ப ஆசாமிங்க இவனுங்க மேலே குண்டு போடறதும் ஒண்ணுதான்.. பொணத்தை கிடத்தி பீரங்கி வச்சு வெடிக்கறதும் ஒண்ணுதான்.. அவன் மானஸ்தன்…விரோதிக்கு கூட தராதரம் பாக்க வேணாம்? அதான் மலேயா பர்மான்னு போய்ட்டு இருக்கானாம்.. கொழும்புவிலே எம்டன் பய நங்கூரம் போட்டு நிக்கறதா ஹைகோர்ட் வக்கீல் ஒருத்தர் சொன்னார்..

 

சப் இன்ஸ்பெக்டர்: எம்டன் எங்கேயும் நிக்கட்டும்.. எக்கேடும் கெட்டுப் போகட்டும்.. செங்கல்பட்டு விஷயம் பாரு..

 

நாயுடு: செங்கல்பட்டா? ரொம்பப் பேர் வீட்டைப் பூட்டிட்டு அங்கே தான் போய் ஒண்டியிருக்கான் எவாகு என்னாது எவாகுமேஷன்..

 

சப் இன்ஸ்பெக்டர்: என்ன எளவோ.. போயும் போயும் அங்கேயா போவணும்.. அங்கே எல்லாம் பொம்பளைப் பிள்ளைங்களை வளக்கறது சரியில்லே போல இருக்குய்யா.. பாரு.. மூணு குமரு.. ஒரே நேரத்துலே..ஓடிப் போயிருக்கு.. அதே எண்ணிக்கையிலே பசங்களும் இல்லே காணாமப் போயிருப்பானுவ.. தகவல் இல்லியே..

 

நாயுடு: கொஞ்சம் பெரிய கேசு மாதிரி இருக்கு சார்.. எடுத்து செஞ்சா

 

சப் இன்ஸ்பெக்டர்: ஆமா, துரைசானி வந்து நிஜார்லே மெடல் குத்தி விடுவா.. போவியா. ஏய்யா ரிடையர் ஆக எம்புட்டு நாள் இருக்கு?

 

நாயுடு: மூணு மாசம் ஏழு நாள்

 

சப் இன்ஸ்பெக்டர்: லீவு பாக்கி எம்புட்டு இருக்கு?

 

நாயுடு: அது கிடக்கு சார் ரெண்டு மாசத்துக்கு மேலே

 

சப் இன்ஸ்பெக்டர்: ரிடையரானா அது ஒரு மயித்துக்கும் பிரயோசனம் இல்லே.. காசா மாத்தி கடைசி சம்பளத்திலே கூட போட்டுத் தர மாட்டான்

 

நாயுடு: மெய்யாலுமா சார்

 

சப் இன்ஸ்பெக்டர்: நானா இருந்தா ஜாம் ஜாம்னு லீவு போட்டுட்டு ரிடையர் ஆக ரெண்டு நாள் முந்தி ஜாயின் பண்ணியிருப்பேன்..

 

நாயுடு: (கொஞ்சம் யோசித்து) போட்டுட வேண்டியதுதான்

 

காட்சி 11

 

காலம் : மாலை களம்: வெளியே / உள்ளே (திண்ணை)

 

அய்யங்கார் வீட்டு வாசல் திண்ணை.. நாயுடு விசிறியால் விசிறியபடி உட்கார்ந்திருக்கிறார். அய்யங்கார் காபி டபராவோடு உள்ளே இருந்து வருகிறார்.

 

நாயுடு : என்னமா புளுங்குது எளவு

 

அய்யங்கார் : எதுக்காக்கும் ஓய் எதுக்கெடுத்தாலும் ஒரு எளவைக் கூட்டிக்கறேர்.. நல்ல நாள்.. வெள்ளிக்கிழமை.. நவராத்ரி ஆறாம் தினம் ..இந்தாரும்.. வட்டை செட்டைப் பிடியும்..சூடா பில்டர் காப்பிங்காணும்..

 

நாயுடு காப்பியை ஆர்வமாக வாங்கிக் கொள்கிறார்.

 

நாயுடு : நவராத்திரிங்கறீர்..ஆத்திலே கொலு வச்சிருக்குமே? … சுண்டல்லாம் கண்ணுலே காட்டவே மாட்டீரா? காப்பி மட்டும் தானா?

 

அய்யங்கார்: கொலு வச்சிருக்கு வாஸ்தவம் தான்..(குரலைத் தணித்து) கூடவே அவளும் கொலு உக்காந்துட்டாளே.. தூரம்..போற நேரம்.. per menopause..ரொம்ப படுத்தறது போம்

 

நாயுடு பட்டாணி சுண்டல் தராததுக்கு படா ஷோக்கா தஸ்ஸு புஸ்ஸுனு இங்கிலீசு சாக்கு.. நல்லா இருமய்யா.. நல்லா இரும் (தான் குடிக்க எடுத்த டம்ளரைக் காட்டி) இந்தக் காப்பி?

 

அய்யங்கார்: ஆத்துக்காரிதான் போட்டா… சந்தேகம் என்ன? காப்பிக்கெல்லாம் தீட்டு பத்து பாக்கப் ப்டாது

 

நாயுடு: அதானே.. ப்டாதுன்னா ப்டாதுதான்..ஆஹா காப்பி கள்ளிச் சொட்டாட்டம் இருக்கு. காப்பி போட கிளாஸ் ஏதாச்சும் எடுத்தா சொல்லும். நம்ம பொம்பளையை அனுப்பி வைக்கணும்..

 

அய்யங்கார்: அத்தையெல்லாம் கிளாஸ் எடுத்தா பிரியாது’பா

 

நாயுடு: இன்னாது பிரியாதுபாவா.. தோ பாரு, நான் பேசற தமிளை நீர் பேச முடியாது ஆனா நீர் பேசறதை அப்படியே நான் பேசிடுவேன்.. இன்னா பந்தயம் கட்டறீர்

 

அய்யங்கார்: நெனப்பு தான்யா ஆளை கொல்றது..

 

நாயுடு: சப்ஜட்டுக்கு வந்துட்டீர்’யா.. கொல்றதுன்னீர் பாரும்

 

அய்யங்கார்: யார் கொலை? கோர்ட் வெக்கேஷனும் அதுவுமா..

 

நாயுடு: நம்மளைத்தான்..இன்னும் மூணு ஜெர்மன் கப்பல் பட்டணத்தைப் பார்க்க வந்துக்கினு இருக்காம்.. வெகேஷனா இருந்தா உமக்கு வீட்டுலே கருமாதி.. எனக்கு தெருவிலே..

 

அய்யங்கார்: என்னய்யா சொல்றீர்?

 

நாயுடு: பெண்டகாய (வெண்டைக்காய்)

 

அய்யங்கார்: ஓ ஆமா, வெண்டக்கா.. எந்த வெண்டக்கா

 

நாயுடு :கேட்க மாட்டீர்…கொத்தவால் சாவடி .. லேடீசு பிங்கர்

 

அய்யங்கார் ஓ அதுவா?

 

நாயுடு: ஒரு நடை போய் விசாரிச்சுட்டு வரலாமா?

 

அய்யங்கார்: பேஷாப் போய்ட்டு வாரும்.. எங்கே போகப்போறீர்?

 

நாயுடு: செங்கல்பட்டு. நீரும் வரீர்..ஒரே ஒரு நாள்.. காலையிலே கிளம்பிப் போனா மறுநாள் விடிகாலை திரும்பிடலாம்

 

அய்யங்கார்: செங்கல்பட்டா?

 

நாயுடு: வெள்ளைக்காரன் எதுக்கு ரயில் விட்டான்? நாம நம்ம ஊரையாவது ஒழுங்கா பார்த்து வச்சுக்கணும்னு தானே.. .. எம்டன் கிருபையிலே நமக்கெல்லாம் திதி திவசம் வந்து தொலைச்சா எங்கே என்னத்தைப் பாக்கறதாம்?

 

அய்யங்கார்: இப்போ என்ன பண்ணச் சொல்றீர்?

 

நாயுடு: மதுராந்தகத்துலே ஏரி காத்த ராமனை தரிசிக்க வேணாமா? என்னய்யா வைஷ்ணவன் நீரெல்லாம்? மேலே போறச் சொல்ல பெருமாள் வெவரம் கேட்க மாட்டாரு?

 

அய்யங்கார்: கொஞ்சம் இரும் நாயுடு.. மேலிடத்து உத்தரவு வாங்கிண்டு வரேன்

 

அய்யங்கார் உள்ளே போகிறார்.

 

அய்யங்கார்: (குரல) வெகேஷன் தானே.. ஏரிகாத்த ராமன் கூப்பிடறான்.. ஓடிப் போய் தரிசனம் பண்ணிட்டு ஓடி வந்துடறேன். நாயுடுகாரு கூட வரேன்னாரு..அப்படியே அந்தாண்ட செங்கல்பட்

 

(உள்ளே)

 

நாயகி : ஊரே எவாகுவேஷன்னு ஓடிட்டு இருக்கு.. உங்களுக்கு வெக்கேஷன்.. ராமன் கூப்பிட்டான், ராவணன் கூப்பிட்டான்னு ஊர் சுத்த சாக்கு.. ஏர் ரைட் நேரத்துலே ஜோரா லாந்திட்டு வாங்கோ.. அதுக்கு முந்தி பால்காரி, தயிர்க்காரிக்கு காசு எண்ணி வச்சுட்டுப் போங்கோ

 

அய்யங்கார்: பால்காரியை காலம்பற வழியிலே பாத்து காசு கொடுத்தாச்சு

 

நாயகி: கொஞ்சம் எடுப்பா இருக்கா இல்லே .. சகலத்துக்கும் அட்வான்ஸே அழுதிருப்பேளே.. பீடை.. கொலுப்படி மேலே சாயாதீங்கோ.. ..அந்த பலசரக்கு செட்டியார் அம்போன்னு கவுந்து கெட்க்கார். பின்னாலே நகர்த்துங்கோ.. ..

 

அய்யங்கார் : நிமித்தி வச்சாச்சு ..அப்புறம்?

 

நாயகி : ஜன்னல்லே கருப்புக் காகிதம் ஒட்டணும்னு நேத்தே வீடு வீடா வந்து ஹோம்கார்ட் சொல்லிட்டுப் போனான்..எல்லோரும் ஒட்டிட்டா

 

அய்யங்கார் அவாளுக்கு ஒட்டும்..பணப் பசை இருக்கப்பட்டவா.. எனக்கும் வாய்ச்சுதுன்னா ஆத்துலே மட்டுமென்ன ஜில்லா பூரா ஒட்டிட்டு வந்து என் வாயிலேயும் ஒட்டிண்டு நிப்பேன்..

 

நாயகி : இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லே.. பார்த்துண்டே இருங்கோ.. ஏர் ரெயிட் ஆச்சுன்னா ஜன்னல் வழியா நம்மாத்துலே தான் முதல் குண்டு விழப் போறது.. அதுவும் என் தலையிலே

 

அய்யங்கார் : இப்போ என்ன பண்ணச் சொல்றே?

 

நாயகி: இருட்டடிக்க கருப்பு காகிதம் எல்லாராத்திலேயும் ஒட்டியாச்சு

 

அய்யங்கார்: சரி நம்மாத்திலேயும் ஒட்டினாப் போச்சு..(குரலை உயர்த்தி வெளியே கேட்க) ஏன் நாயுடு.. காகிதம் எங்கே கிடைக்கும்? கருப்பா, அழுத்தமா..

 

நாயுடு: ஏன் கருமாதிக் கடுதாசி போடவா? வெள்ளிக்கிழமையும் அதுவுமா ஏய்யா வாயைப் பிடுங்கறீர்..

 

நாயகி : நன்னாக் கேளுங்கோ நாயுடுகாரு.. இந்து பேப்பரைத் தவிர இதர பேப்பர் எங்கே கிடைக்கும்னு கூட தெரியாம குப்பை கொட்டிண்டிருக்காரே எங்காத்துக்காரர்,,

 

நாயுடு: கவலைப் படாதீங்கம்மா..நான் நைனியப்ப நாயக்கன் தெருவுலே கருப்பு காகிதம் வாங்கியாந்து எங்கூட்ட்லே ஜன்னல் கதவுன்னு ஒண்ணு விடாம ஒட்டினேனா.. பொறகும் ஒரு ராத்தல் போல மீதி கிடக்கு… அய்யங்கார் சாமிகிட்டே கொடுத்தனுப்பறேன்..

 

நாயகி: பாருங்கோ எம்புட்டு பொறுப்பான மனுஷரா இருக்கார்.. நீங்களும் இருக்கேளே.. .. சவாரி சரி, போற எடத்துலே, சாப்பாடுக்கு என்ன பண்றதா உத்தேசம்?

 

அய்யங்கார்: ஒரு கவலையும் இல்லேடிம்மா..ஏரி காத்த ராமன் சந்நிதியிலே சேவிச்சுண்டு வெளியே வந்தா. கோவில் மடப்பள்ளியிலே அக்கார வடிசல், தயிர் சாதம், புளியோதரை.. கமகமன்னு உப்பும் உரைப்புமா ஆளை இழுக்குமே….

 

நாயகி: புளியோதரை இழுக்கறதா.. சேவை சாதிக்கறேன் வாங்கோன்னு பொம்மனாட்டி எவளாவது இழுக்கறாளா?

 

அய்யங்கார்: பெருமாளே பெருமாளே

 

நாயகி: எக்கேடும் கெட்டு ஒழியுங்கோ…

 

அய்யங்கார் வெளியே வந்து கட்டை விரலை நிமிர்த்தி என்று காட்டுகிறார்,

 

காட்சி 12

 

காலம் : முற்பகல்   களம் வெளியே / உள்ளே

 

செங்கல்பட்டு போலீஸ் ஸ்டேஷன். ஒரு கான்ஸ்டபிள் வாசலில் பாரா கொடுத்துக் கொண்டு நடக்கிறார். அவர் தலை அவ்வப்போது தட்டுப்படுகிறது.

 

ஜல்ஜல் என்று குதிரை வண்டி நிற்கிற ஒலி. சத்தமான குரலோடு நாயுடு போலீஸ் ஸ்டேஷனில் நுழைகிறார். கூடவே அய்யங்கார். குதிரை வண்டிக்காரன்.

 

நாயுடு: என்னது? ரயில்வே ஸ்டேஷன்லே இருந்து போலீஸ் ஸ்டேஷன் வர கால் ரூபாயா?

 

வண்டிக்காரன்: நியாயமா இதான் வாங்கறது… வேறே வண்டிக்காரங்க கிட்டே வேணா கேட்டுப் பாருங்க ஐயா

 

நாயுடு: ஆமாய்யா வேலை மெனக்கெட்டு ஒவ்வொருத்தனா என்கொயரி பண்ணிட்டு நிக்கணும்.. அதுக்குத்தானே வந்திருக்கேன்.. மெட்றாஸ் தாணாக் கச்சேரியிலேருந்து

 

அய்யங்கார்: இந்தா ரெண்டணா. இதுவே எதேஷ்டம்

 

வண்டிக்காரன்: வேணாங்க சாமி.. நான் வரேன் உத்தரவு தாங்க சாமி

 

அய்யங்கார்: அட நான் போலீஸ் எல்லாம் இல்லே.. வக்கீல் தான் .. வாங்கிக்க

 

நாயுடு: அது இன்னும் டேஞ்சர் பார்ட்டி.. கிரிமினல் வக்கீல்..பேசாம் வாங்கிக்கினு எடத்தைக் காலி பண்ணு.. இல்லே கேசு போட்டு கோர்ட்டுக்கு இழுத்துடுவாரு..

 

உள்ளே இருந்த கான்ஸ்டபிள்களில் ஒருவர் மதறாஸுக்கு வந்தவர். நாயுடுவை அடையாளம் கண்டு கொள்கிறார். உடனே சல்யூட் அடிக்கிறார்.

 

நாயுடு: எதுக்குயா சல்யூட் எல்லாம்? யூனிபாரம் போடாம

 

கான்ஸ்டபிள்: போட்டிருக்கேன் எஜமானே

 

நாயுடு: அறிவுக் கொளுந்துய்யா.. உன்னை இல்ல.. என்னை சொன்னேன்

 

கான்ஸ்டபிள்: உடுத்துனாலும் உடுத்தாட்டியும் எசமான் எப்பவும் எசமான் தானே

 

நாயுடு: தொப்பி போட்ட கடவுள்’யா நீ..

 

உட்கார்ந்தபடி, அய்யங்காரையும் இன்னொரு நாற்காலியில் உட்காரச் சொல்கிறார். தொடுக்கினாற்போல் உட்கார்கிறார் அய்யங்கார்.

 

அய்யங்கார்: சீக்கிரம் முடியும் ஓய்.. ..மதுராந்தகம் கோவில் வேறே டயமாச்சுனா அடச்சுடுவா.. வயிறு இப்பவே ஆபேரி பாடிண்டு இருக்கு.. காயப் போட்டா முகாரிக்கு சஞ்சரிச்சுடும்..

 

நாயுடு: ஆச்சுய்யா மிஞ்சிப் போனா ஒரு மணி நேரம்..(கான்ஸ்டபிளிடம்) டியூட்டி சப் இன்ஸ்பெக்டர் சாமிகள் எங்கேய்யா?

 

கான்ஸ்டபிள்: குல தெய்வம் கும்பிடப் போயிருக்காருங்க.. பேத்திக்கு மொட்டையடிச்சு காது குத்தி நாளை மக்காநாள்..

 

நாயுடு: (கை அமர்த்தி) அந்த மூணு பொம்பளப்பிள்ளைங்க காணோம்னு கம்ப்ளெயிண்ட் என்ன ஆச்சு?

 

கான்ஸ்டபிள்: அப்படியே நிக்குதுங்க.. துரை வேறே லூட்டிக்கு போயிருக்காரா

 

நாயுடு: உன் நாக்குலே குப்பையைப் போட்டு பொசுக்க..லூட்டியா? அதுவும் சரிதான்.. (சிரிக்கிறார்).. அந்தப் பொண்ணுங்க.. பெத்தவங்க.. பண்ணையார்னு சொன்ன நியாபகம்

 

கான்ஸ்டபிள்: ஆமாங்க ஒரு பிள்ளை மட்டும் தான்.. மத்ததுங்க சம்சாரி வீட்டுப் பொண்ணுங்க.. மூணும் பக்கத்து கிராமம் தான்

 

நாயுடு: கிளம்பு.. மாட்டு வண்டியா குதிரை வண்டியா

 

கான்ஸ்டபிள்: டவுன்லே எல்லாம் குதிர வண்டிதான் எஜமான்

 

நாயுடு: இது டவுனு? நாலு குதிர வண்டி நாலு அழுக்கு வேட்டி, அப்படியும் இப்படியும் போனா டவுனா? ஜெர்மன்காரன் ப்ளேன்லே இருந்து பாத்திட்டே காறி உமிஞ்சுட்டுப் போயிடுவான்.. ஒரு சோத்துக்கடை உண்டாய்யா? டவுணு..

 

அய்யங்கார்: நீர் பட்டண விசுவாசி நான் பட்சண விசுவாசி..

 

கான்ஸ்டபிள்: எஜமானுக்கு எங்க வீட்டுலே கறியும் மீனும் ஆக்கிப் போடறேங்க.. கடைக்கு ஏன் போவணும்?

 

நாயுடு: இந்த அய்யர் அதெல்லாம் சாப்பிட்டா தர்ப்பணம் பண்ணியாகணும் ..

 

அய்யங்கார் : கொஞ்சம் சும்மா இருக்கீறா?

 

நாயுடு : உத்தரவு சாமிகளே…(கான்ஸ்டபிளிடம்) ஜருகு ஜருகு

 

(போகிறார்கள்)

 

 

 

 

Series Navigationவரலாற்றில் வளவனூர் [ஆவணங்களால் அறியப்படும் அரிய வரலாறு]நகை முரண்
இரா முருகன்

இரா முருகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *