ஆனந்த பவன் -காட்சி-23 இறுதிக் காட்சி

This entry is part 19 of 19 in the series 25 ஜனவரி 2015

 

இடம்: ஆனந்த பவன்

 

நேரம்: காலை மணி ஏழரை.

 

உறுப்பினர்: ராஜாமணி, சுப்பண்ணா, மாதவன், உமாசங்கர், ராமையா மற்றும் ரங்கையர், பாபா.

 

(சூழ்நிலை: ராஜாமணி கேஷில் உட்கார்ந்து பில் வாங்கிக் கொண்டிருக்கிறான். எதிரில் சுப்பண்ணா நின்று, பஞ்சாயத்து யூனியன் ஆபீஸுக்கு ஒரு பார்ட்டிக்காக ஒப்புதல் பெற்று வந்தவர், சொல்லி விட்டுப் போனதை அவனிடம் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்)

 

சுப்பண்ணா: என்ன ராஜா சொல்றது காதில வாங்கிண்டு இருக்கியா, சிவனேண்ணு கேட்டுண்டு இருக்கியா?

 

ராஜாமணி: சொல்லுங்கோ மாமா…

 

சுப்பண்ணா: போன தடவை பார்ட்டி படுபிரமாதமா இருந்ததாம். அதே மாதிரி அமையலேண்ணா பணம் வாங்க முடியாதுண்ணு மெரட்டிட்டுப் போறார் மானேஜர்.

 

ராஜாமணி: இதெல்லாம் ஏங்கிட்டே ஏன் சொல்றேள்?

 

சுப்பண்ணா: வேற யாரண்டே சொல்லட்டும்! அறுபது செட் பாதாம் ஹல்வா வரைக்கும் நான் தயார் பண்ணிடுவேன். வெஜிடபிள் கட்லெட்டும் ப்ரெட் மசாலாவும்னா நான் ஒண்டியா சிரத்தையா செய்ய முடியாது… நீ ராமையாட்டே வந்து சொல்லு… அவனுக்கு அத்திம்பேர் பையன் எவனோ பம்பாய் ஹோட்டல்லே இருந்து வந்தவன். அவனைக் கூட்டிண்டு வந்தாத்தான் இந்த கட்லெட் பிரட் மசாலால்லாம் சாத்யம்… இது என்னமோ மினிஸ்டர் புரோகிராமாம்… நம்மால முடியாது! ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயி பதம் தவறினா ஹோட்டல் பேரு ரிப்பேர் ஆயிடும்.

 

ராஜாமணி: அவர் மோவாயைப் புடிச்சுட்டு வேற, நான் நீவி விடணுமாக்கும்!

 

சுப்பண்ணா: வேற என்ன வழி?

 

ராஜாமணி: இதெல்லாம் ரங்கையர் மாமார்ந்து பண்ண வேண்டிய வெவகாரம். என் தலையை ஆளுக்கு ஒரு பக்கம் உருட்டறேள்.

 

சுப்பண்ணா: அப்பாடா, ரங்கண்ணாவுக்கு ஆயுசு நூறு அதோ வந்திண்டிருக்கார், விடு ராஜா!  இனிமே பாரம் ஒன்னையும் விட்டது. என்னையும் விட்டது. அண்ணா வாங்கோ!

 

(ரங்கையர் படியேறுகிறார்.வழியிலேயே மெனு போர்டைப் பார்க்கிறார்)

 

ரங்கையர்: போர்டை யாரு எழுதினது? மாதவன் கையெழுத்துப் போலன்னா இருக்கு என்னது அது? நன்னா

பளிச்சுனு தெரியறாப்பிலே எழுதுவாளா இப்படி மரவட்டை சுருட்டிண்டு இருக்காப்ல எழுதுவாளா? பஸ்ல போறவனுக்கும் தூரத்திலே வர்றவாளுக்கும் கூட தெரியணுமோல்லியோ (ராஜாமணியைப் பார்த்து) ஏன் ராஜா, இதையெல்லாம் கவனிக்கணுமோல்லியோ? சுப்பு நீராவது சொல்லப்படாதா?

 

(படியேறி உள்ளே வருகிறார். அதற்குள் ஒவ்வொருவராக மேஜையருகே ரங்கையரைப் பார்க்கக் கூடி விடுகிறார்கள்.)

 

சாரங்கன்: அண்ணா! இப்படி மூணு நாலு நாளா எங்களை அனாதையா விட்டுட்டேளே!

 

ராமையா: இது ஹோட்டலாவே இல்லேண்ணா!

 

மாதவன்: தலை தலைக்கு பெரியதனமாப் போச்சு!

 

உமாசங்கர்: மொதல்லே இவன்தான் பண்றான் பெரிய தனம்.

 

ரங்கையர்: இதெல்லாம் என்ன வார்த்தை! சரி சரி, உள்ளே போங்கோ! காலைல கூட்டம் வந்துண்டிருக்கு. வாங்கோ, வாங்கோ வாசு தேவாச்சார், சாரங்கன், அண்ணாவுக்கு டிக்ரி காப்பி கொண்டா, சுப்பண்ணா இன்னிக்கு என்ன ஸ்பெஷல்?

 

வைத்தி: சாயங்காலத்துக்குத் தானேண்ணா?

 

ரங்கையர்: பின்னே? காலமற என்னமோண்ணு போர்டு எழுதியிருக்கியே!

 

சுப்பண்ணா: கேஷ்யூ நட் பக்கோடாவும் ரஸகுல்லாவும் போட்றேன்னு சொன்னேன்! ராமையா ஒண்ணு சொன்னா, ராஜாமணி ஒண்ணு சொல்றான்.

 

(அப்போது மேஜையைச் சுத்தம் செய்து கொண்டிருக்கும் பாபா பக்கெட்டைக் கீழே வைக்கிறான் ரங்கையரைப் பார்க்கிறான்)

 

பாபா: (திடீரென்று அவன் குரல் கம்முகிறது) அண்ணா (குரல் சற்றே உயர்கிறது) அண்ணா (ஓவென்று கதறத் தொடங்குகிறான்)

 

ரங்கையர்: ஏய்… ஏய்… பாபா… பாபா… எதுக்குடா அழறே? அதான் நான் வந்துட்டனே ஏண்டே அழறே (அருகில் சென்று அவனை அணைத்துக் கொள்கிறார்) சுப்பண்ணா, இவனை உள்ளே அழச்சுண்டு போங்கோ! இதுக் கெல்லாம் நேக்கு ஒரு அர்ஹதயும் இல்லே; யார் இருந்தாலும் போனாலும் லோகம் ஓடிண்டே தான் இருக்கும். நீயும் ஏண்டா அழறே? எல்லாம் கொழந்தைகள்டா! போங்க, போங்க போய் வேலயப் பாருங்க! அதோ வாசுதேவாச்சார் வந்துண்டிருக்கார் ஸ்பெஷல் காப்பி கொண்டு போ! ராமையா, மத்தியானம் மீல்ஸுக்கு என்ன போடப்போற!

 

(உள்ளே போகிறார்)

 

(நிறைவு)

Series Navigation“ எதுவும் மாறலாம் “ குறும்படம்
author

வையவன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *