தி டோக்கன் ஆங்கிலம் – மே சிங்க்ளேர்

This entry is part 12 of 12 in the series 13 மார்ச் 2016

 

தமிழில் சிறகு இரவிச்சந்திரன்

0

சிசிலி டன்பார்! பெண்களே நேசிக்கும் அற்புதப் பெண். இன்னும், அவள் என் சகோதரனின் மனைவி என்றிருந்து விட்டால். டொனால்ட் சரியான ஸ்காட். அவனுக்கு எதையும் வெளியே சொல்லத் தெரியாது. உள்ளுக்குள்ளேயே புதைத்து வைத்திருப்பான். சிசிலிக்கு எல்லாம் சொல்லியாக வேண்டும். முக்கியமாக, டொனால்ட் தன்னை எவ்வளவு நேசிக்கிறான் என்பதை. ஆனால், அதை சொல்வதை விட டொனால்ட் இறந்து போகவே விரும்புவான்.

கடைசி வரையில் அவனுக்கு தெரியவேயில்லை. தன்னுடைய காதல் மனைவி சிசிலி இறந்து போகப்போகிறாள் என்று. எப்போதும் அவனுக்கு எழுத்துதான். அதனாலேயே அவர்கள் தனித்தனி அறைகளில் தூங்கினார்கள். அதனாலும் அவனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

எப்போதும் டொனால்ட் தன் நூலக அறையிலேயே இருப்பான். எதையாவது எழுதிக் கொண்டோ படித்துக் கொண்டோ. சிசிலிக்கு அதனுள்ளே அனுமதியில்லை. அவள் எப்போதும் கணப்பு அடுப்பின் அருகில் சோபாவில் உட்கார்ந்து கொண்டு எதையாவது படித்துக் கொண்டோ அல்லது ஸ்வெட்டர் பின்னிக் கொண்டோ இருப்பாள்.

ஒரு கூச்சலான சண்டைக்கு பிறகு அவள் இறந்து போனாள்.

தன் பொருட்களின் மேல் டொனால்டுக்கு அதீத கவனம். அதிலும் அந்த பேப்பர் வெயிட். அதன் மேல் ஒரு புத்தர் உருவம் பொறித்திருக்கும். அதை அவன் எப்போதும் ஆசையுடன் பார்ப்பான். அதற்கு புத்தரும் ஒரு காரணமாக இருக்கலாம். அவன் அதற்கு டோக்கன் என்று பெயர் வைத்திருக்கிறான்.

“ என்ன செய்கிறாய்?”

“ மையை துடைத்துக் கொண்டிருக்கிறேன்”

“ அதை எடுக்காதே என்று சொல்லியிருக்கிறேன் அல்லவா?” காட்டுக் கத்தல். சிசிலி நடுங்கிப் போனாள். தன்னுடைய கைக்குட்டையால் எச்சிலில் ஈரம் பண்ணி அந்த வெயிட்டை துடைத்துக் கொண்டிருந்தாள். பதட்டத்தில் அதைக் கீழே போட்டு விட்டாள். குனிந்து அதை அவளே எடுத்தாள்.

“ உடையவில்லை”

என்னிடம் பிறகு அவள் சொன்னாள்: “ டொனால்ட் என்னை நேசிக்கவில்லை. அவன் விரும்பும் எதையும் நான் உடைப்பேனா? நான் அவனை அந்தளவு நேசிக்கிறேன்!”

அன்றிரவு அவள் இறந்து போனாள்! டொனால்ட் அவளை நேசிக்கிறான் என்று தெரியாமலே அவள் இறந்து போய் விட்டாள்.

அதற்கப்புறம் டொனால்ட் மாறிப்போனான். மௌனியாக ஆனான். அவள் நினைவு வரும் எதையும் அவன் கண்ணில் படாமல் மறைத்து வைத்தான். கணப்பு அடுப்பு அருகில் இருந்த அவள் உட்காரும் சோபாவை மட்டும் அவன் மாற்றவேயில்லை.

0

ஒரு வேனிற்கால மாலையில் டொனால்ட் தன் ஆடும் நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறான். எனக்கு சிசிலி அந்த அறையில் இருப்பதாக ஒரு பிரமை தோன்றியது. இருக்குமா?

அப்போதுதான் அதைப் பார்த்தேன். சிசிலி வழக்கமாக உட்காரும் சோபாவில் அது உட்கார்ந்திருந்தது. உருவம் தெளிவாக சிசிலியைப் போலவே இருந்தது.அது டொனால்டை பார்த்துக் கொண்டிருந்தது. தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களுக்கு அது வந்தது. சிலசமயம் டொனால்டின் மேசையில் இருக்கும் பொருட்கள் இடம் மாறியிருக்கும். நான் மாற்றவில்லை. பின் யார்? அதுவா? அது எதையோ தேடுகிறது என்பது மட்டும் தெரிந்தது!

சில நாட்களில் அதற்கு தைரியம் வந்திருக்க வேண்டும். சோபாவிலிருந்து எழுந்து மிதந்து அது டொனால்டின் காலடியில் வந்து நின்றது. அவனை மெல்ல வருடியது. அவனுக்கு எதுவுமே தெரியவில்லை.

“ டொனால்ட்! நான் நினைக்கிறேன். சிசிலி இந்த அறையில் இருக்கிறாளென்று”

“ உனக்கு பைத்தியம் பிடித்து விட்டது”

இல்லை! இப்போது உன் அருகில் இருக்கிறாள். இப்போ அவள் உன் மேசையின் இழுப்பறைகளை திறக்கிறாள். ஓ! அந்த கடைசி அறையை அவளால் திறக்க முடியவில்லை. அதை பூட்டி வைத்திருக்கிறாயா?”

“ம்” மெல்ல தன் சராய் பாக்கெட்டிலிருந்து ஒரு சாவியை எடுத்துக் கொடுத்தான் டொனால்ட். முழுவதுமாக அந்த இழுப்பறையை வெளியே எடுத்தேன். கடைசியில் நன்றாக ஒதுக்கி ஒளித்து வைக்கப்பட்டிருந்தது அது! தி டோக்கன்.

“ இதைத்தான் அவள் தேடிக் கொண்டிருக்கிறாள் “

“ இதையா? இது ஒரு சைத்தான். என் சிசிலியைக் கொன்ற சைத்தான். நான் உயிருக்குயிராக நேசித்தவளைக் கொன்ற பைசாசம் “

சட்டென்று பிடுங்கிஜ் ஓங்கி அதை தரையில் வீசினான். சுக்கலாக அது உடைந்து போனது.

நீட்டிய அவன் கைகளுக்குள் அது நுழைந்தது. புயல்காற்றில் ஒரு தீக்குச்சி அணைவது போல அது பட்டென்று மறைந்து போனது.

0

“ நீ அவளை பார்க்கிறாயா? இப்போது அவள் வருகிறாளா?”

“ இல்லை டொனால்ட்! அவள் போய் விட்டாள். எதற்காக அவள் வந்தாளோ? எதைக் கேட்க அவள் பிரியப்பட்டாளோ? அது அவளுக்கு கிடைத்து விட்டது. அதனால் அவள் வருவதில்லை”

“ எதற்காக அவள் வந்தாள்?”

“ டோக்கனை விட நீ அவளை நேசிக்கிறாய் என்று தெரிந்து கொள்ள”

டொனால்ட் மெல்ல தன் கண்களைத் துடைத்துக் கொண்டான்.

0

Series Navigationகாரைக்குடி கம்பன் கழகத்தின் 2016 ஆம் ஆண்டு – 21.3.2016 முதல் 23.3.2016 வரை
author

சிறகு இரவிச்சந்திரன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *