காதலிக்கச்சொல்லும் வள்ளுவர்

This entry is part 1 of 12 in the series 9 ஏப்ரல் 2017

 

 

 

(வள்ளுவர் சொல்லும் காமசூத்திரம் )(9)

அதிகாரம் 117: படர் மெலிந்து இரங்கல்

 

“நீள் இரவு கொடியது”

 

நான்

காமநோயை மறைப்பேன்

 

அந்நோய்

யாரும்

அறியக்கூடாத நோய்

ஆகவே

அந்நோயை மறைப்பேன்

 

ஆனால் கொடுமை!

அது

இறைக்க இறைக்க

ஊறும்

ஊற்றுநீர்போல் பெருகும்!

 

 

 

மறைக்கமுடியாமல்

நான்படும் துன்பம் அதிகம்

அதை

அந்நோய்தந்த காதலருக்குச்சொல்லுதல்

இன்னும் வெட்கமானது

வெட்கம்கலந்த துன்பமானது

காதல்துன்பம்

தாங்காமல்

தவிக்கும் என்னுடலில்

காமமும் நாணமும்

காவடித்தண்டின் இருமுனையாய்

எந்தோளில் தொங்கும்

கைகோர்த்துக்கொள்ளும்

கைகோர்த்துக்கொல்லும்

 

காமம் கடல்

என்ன செய்வது?

நீந்திச்செல்லத்தெரியவில்லை

நீந்தும்மிதவை ஏதுமில்லை

 

நெருக்கமாய் நட்பாய்

இருக்கும்போதே

இப்படித்

துன்பத்தைத்தருகிறார்!

பகையால் பிரிந்தால்

பாவியெனக்கு

அவர் தரும் துன்பம்

அவரால் வரும் துன்பம்

எப்படியிருக்குமோ!

எண்ணமுடியவில்லை

அப்பப்பா

என்னால் முடியவில்லை

 

முதலில்

காமம்

கடலென எண்ணி

கலங்கினேன்

நீந்தக்கவலைபட்டேன்

 

காமத்தில் ஆழ்ந்து

கலந்து

மகிழும் வேளையில்

இன்பமும் இப்போது

கடல்தான்

ஆனால்

வருந்துவதால் வரும்துன்பம்

கடலினும்பெரிது

 

காமமும் இன்பமும்

கடல்

துன்பம்

கடலினும் பெரிது

 

காமவெள்ளத்தை

நீந்த வழியில்லை

நீந்திக்கரைகாண முடியவில்லை

என்செய்வேன்

நள்ளிரவில் நான்

தனித்திருந்து தவிக்கின்றேன்

 

அனைத்து உயிர்களையும்

உறங்கவைக்கும் இரவுக்கு

தவிக்கும்

தகிக்கும்

என்னைத்தவிர

எந்தத்துணையுமில்லை

 

இந்த இரவும்

என்னைப்போல் பாவிதான்

 

பாவம்

இந்த இரவு

வருந்தத்தக்கது

இரங்கத்தக்கது

 

கொடியமனம் படைத்தோரின்

கொடியசெயலினும் கொடியது

இரவு

அதனினும் கொடியது

நீண்ட இரவு

நீளும் இரவு

நீளும் இரவினும்

கொடியது ஏது?

 

காதலர் எங்கே?

என்

மனம் அங்கே

நான்மட்டும் இங்கே

 

அவரிருக்கும் இடத்தில்

அவரோடு  இருக்கும்

என் மனம்போல்

நானிருந்தால்

இருக்கமுடிந்தால்

இறுக்கமற்றிருப்பேன்

மனம்

இலேசாகிப்போயிருப்பேன்

முகத்தின்

இருளைத்தொலைத்திருப்பேன்

சித்திரை

மதிபோல் ஒளிர்ந்திருப்பேன்

கண்ணீர்வெள்ளத்தில்

கண்கள்

நீந்துதல் தவிர்த்திருப்பேன்

நீந்தித்தவிப்பதையும்

தவிர்த்திருப்பேன்

 

 

 

பிச்சினிக்காடு இளங்கோ

(சிங்கப்பூர்)(24.03.2014)

Series Navigationவேண்டாம் அந்த முரட்டுப் பெண்! – 7
author

பிச்சினிக்காடு இளங்கோ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *