தனக்குப் போட்டியாக இருந்தவர்களை மும்தாஜின் தகப்பனின் உதவியுடன் விரட்டியடித்த குர்ரம், ஷா-ஜஹான் (உலகத்து அதிபதி) என்கிற பெயருடன் ஹிந்துஸ்தானத்து பாதுஷாவாகப் பதவியேற்றார். ஆரம்பத்தில் இருந்தே மும்தாஜ் கிறிஸ்தவப் பாதிரிகளின் மீது, கிறிஸ்தவர்களின் மீது மிக வெறுப்பு கொண்டவளாகவே இருந்தாள். அதற்கான காரணம் தெரியவில்லை. அனேகமாக ஷாஜஹான் பாதுஷாவாவதற்குத் தடையாக இருந்ததால் கிறிஸ்தவப் பாதிரிகளின் மீது அவள் கோபம் கொண்டவளாக இருந்திருக்கலாம். இது வெறும் யூகம் மட்டுமே.
கிறிஸ்தவர்களுக்கு எதிராக ஷாஜஹானை மும்தாஜ் தூண்டிவிட்டுக் கொண்டே இருந்தாள். முகலாய அரசில் “பரமண்டலத்திலிருக்கும் பிதாவுக்கு” ஊழியம் செய்து கொண்டிருந்த 400 கிறிஸ்தவர்களைப் பிடித்து ஷாஜஹானின் முன்னால் நிறுத்தினார்கள். அவர்கள் அத்தனைபேற்களும் உடனடியாக இஸ்லாமியர்களாக மதம் மாறவேண்டும் என உத்தரவிடப்பட்டது. பலர் உடனடியாக மதம் மாறினார்கள். மறுத்தவர்கள் அந்த இடத்திலேயே வெட்டிக் கொல்லப்பட்டனர். பிடிக்கப்பட்டவர்களில் இருந்த பெண்கள் முகலாய அரசின் பிரதிநிதிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டார்கள். கிறிஸ்தவகளுக்கெதிரான தொல்லைகள் அத்துடன் நின்றபாடில்லை. வாழ்க்கை முழுவதும் நிரந்தர கர்ப்பிணியாக இருந்து மறைந்த மும்தாஜுக்கு வாய்ப்புக் கிடைத்திருந்தால் மொத்த கிறிஸ்தவர்களையும் இந்தியாவை விட்டு ஓட்டியிருந்திருப்பாள் என்பதில் சந்தேகமில்லை. அதையும் விட ஒரு பெரும் போர்ச்சுக்கீசிய கடற்கொள்ளைக்காரர்கள் வங்காளத்தில் முகலாய அரசுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்ததுவும் ஷாஜஹான் வெள்ளைக்கார கிறிஸ்தவர்கள் மீதான கோபத்திற்குக் காரணமாக இருந்தது.
பிற்காலத்தில் அதே ஷாஜஹான் வங்காளத்தின் ஹூப்ளி பகுதியில் ஒரு கிறிஸ்தவ தேவாலயம் அமைத்துக் கொள்ள அனுமதி வழங்கினார். அதே சமயத்தில், ஷாஜஹானின் மூத்த மகனான தாரா-ஷிகோ உலக மதங்களைப் பற்றி ஆர்வத்துடன் பயின்று கொண்டிருந்தார். அவரது கிறிஸ்தவ மனைவியான பாய் உதய்புரி (Bai Udaipuri) அவரைக் கிறிஸ்தவராக மதம் மாறச் செய்திருந்தாள். பாய் உதய்புரி என்பவள் ஜார்ஜியா நாட்டைச் சேர்ந்த வெள்ளைக்காரப் பெண். அடிமையாக பிடித்து வரப்பட்ட அவளின் அழகில் மயங்கிய தாரா-ஷிகோ அவளை விலைக்கு வாங்கித் தன்னுடன் வைத்துக் கொண்டார். பதவிச் சண்டையில் அவரது சகோதரனான அவுரங்கசீப்புடன் நடந்த போரில் தோல்வியுற்று, இந்தியாவின் பல பிரதேசங்களுக்குத் தப்பியோடி வாழ்ந்து வந்த காலத்தில் அவர் முழுக் கிறிஸ்தவராக மாறியிருந்தார் அவர்.
தாரா-ஷிகோவைப் பிடிக்கும் அவ்ரங்சீப் அவரது தலையைத் துண்டித்துக் கொல்லும்படி உத்தரவிடுகிறார். அந்தக் கொலைகாரர்கள் அவரது தலையைத் துண்டிக்குமுன் தான் இஸ்லாமை புறக்கணிப்பதாகவும், பரமண்டலத்திலிருக்கும் பிதாவே என் தேவன் என்று சொல்லியதாக அவருக்கு நெருக்கமாக இருந்த இத்தாலிய மருத்துவரான நிகாலோ மானூச்சி குறிப்பிடுகிறார் (A Pepys of Mogul India – Niccolao Manucchi). தாரா-ஷிகோ கொல்லப்படாதிருந்தால் அவரும் ஒரு கிறிஸ்தவ பாதுஷாவாக ஆகியிருக்க வாய்ப்பிருக்கிறது.
தாரா-ஷிகோ இறந்தபிறகு கிறிஸ்தவச்சியான பாய் உதய்புரியை அவ்ரங்க்சீப் திருமணம் செய்து கொண்டார். அவ்ரங்க்சீப்பின் நான்காவது மகனான காம்-பக்ஷ் அவள் மூலமாகப் பிறந்தவன்தான் (Caumbaxey என்கிற கிரேக்கக் கிறிஸ்தவப் பெயரின் மரூஉ காம்-பக்ஷ்). தீவிர இஸ்லாமியரான அவ்ரங்க்சீப் பாய் உதய்புரியின் கிறிஸ்தவ மதவழிபாடுகளில் எந்த குறுக்கீடும் செய்யவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. அதையெல்லாம் விட, அவரது முதலாவது மனைவி ஒரு ராஜபுத்திர ஹிந்துப் பெண். அவரது முதலாவது மகனான முகமது-ஆஸம்-ஷா அவளுக்குப் பிறந்தவன்தான். அரண்மனைக்குள்ளேயே ஒரு சிறிய அறைக்குள் விக்கிரகங்களை வைத்து வழிபாடு செய்த அவளையும் தீவிர இஸ்லாமியரான அவ்ரங்க்சீப் தடை செய்யவில்லை என்பது ஆச்சரியமானதொரு செய்தி. இவையெல்லாம் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. ஊருக்கொரு சட்டம், வீட்டுக்கொரு சட்டம் என்பது அந்தக் காலத்திலேயே நடைமுறையில் இருந்திருக்கிறது.
அவ்ரங்க்சீப்பிற்குப் பிறகு தனது மகனான காம்-பக்ஷ் பாதுஷாவாகப் பதவியேற்க வேண்டும் எனத் தொடர்ந்து அவ்ரங்க்சிப்பை தொல்லை செய்து அதில் ஏறக்குறைய வெற்றியும் அடைகிறாள் பாய் உதய்புரி. வயதாகித் தளர்ந்து, மராட்டாக்களுடனான போரில் படுதோல்வியடைந்து மனநிலை குன்றி இருந்த அவ்ரங்க்சீப் காம்-பக்ஷ்ஷின் மீது மிகுந்த அபிமானம் கொண்டிருந்தார். துரதிருஷ்டவசமாக காம்-பக்ஷை பாதுஷாவாக அறிவிப்பதற்கு முன்னால் அவர் மரணமடைந்துவிட்டார். தங்களுக்குப் போட்டியாக இருக்கும் காம்-பக்ஷை, அவ்ரங்க்சீப்பின் மற்ற மகன்கள் கொன்றுவிட்டார்கள். பாய்-உதய்புரி என்னவானாள் என்று தெரியவில்லை.
***
இந்தச் சம்பவங்களெல்லாம் புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்றாலும் ஒவ்வொரு புத்தகத்திலும் தகவல் சிறிதளவு மாற்றத்துடன் இருக்கிறது. அதனை ஆராய்ந்து உண்மையை உணர்வது ஆராய்ச்சியாளர்களின் வேலை. என்னுடைய வேலை அந்த ஆராய்ச்சியாளர்களின் (அப்படி எவரும் இருந்தால்) ஆர்வத்தைத் தூண்டுவது மட்டுமே. இன்றுவரை இந்திய வரலாறு முழுமையாக, எந்தவிதமான சமரசங்களும் இல்லாமல் எழுதப்படவேயில்லை. நமக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் நமது உண்மையான வரலாற்றை நாம் அறிந்து கொள்வது நமது உரிமை. என்றேனும் ஒருநாள் அப்படியொரு வரலாறு எழுதப்படுமாயின் மகிழ்ச்சியே.
References :
A Pepys of Mongul India, 1653-1708; being an abridged ed. of the “Storia do Mogor” of Niccolao Manucci, tr. by William Irvine (abridged ed. prepared by Margaret L. Irvine)
by Manucci, Niccolò, 17th cent; Irvine, William, 1840-1911; Irvine, Margaret L.
- டாக்டர் வி. கிருஷ்ணமூர்த்தி நூல் அறிமுகம் – 30-9-2018
- பூமியைத் தாக்கும் முன்பே முரண்கோள் போக்கை நோக்கித் திசை மாற்றவோ, தகர்க்கவோ நாசா புதிய திட்டம் வகுக்கிறது.
- அழகின் மறுபெயர்……
- மருத்துவக் கட்டுரை குருதி நச்சூட்டு ( SEPTICAEMIA )
- மானிடக் கவிஞர் பாரதி ஒரு மகாகவியே
- மீண்டும் வேண்டாம் !
- தொடுவானம் 241.தாழ்ந்தவர் உயர்ந்தனர்
- ஜெயபாரதன் படைப்புகளைத் தொடா்ந்து படிக்கும் ஆா்வலா்களுக்கோர் அரிய போட்டி!
- முகலாயர்களும், கிறிஸ்தவமும் – 3