10. வரவுச் சிறப்பு உரைத்த பத்து

This entry is part 3 of 4 in the series 1 டிசம்பர் 2019

                

      தலைவன் தான் மேற்கொண்ட செயலை வெற்றிகரமாக முடித்துத் தன் வீடு திரும்புகிறான். அதனால் மிகவும் மகிழ்ந்த தலைவி தன்னை எழில் புனைந்து அவனையே சுற்றிச் சுற்றி வருகிறாள். அதைக் கண்ட மற்றவர்கள் மகிழ்ந்து தங்களுக்குள் பேசிக்கொள்கின்றனர். தலைவனின் வரவினால் ஏற்பட்ட சிறப்பாலேயே இப்பேச்சுகள் அமைந்த பகுதி என்பதால் இப்பெயர் பெற்றது. இதில் முதல் ஐந்து பாடல்கள் தலைவனின் கூற்றாகவும், அடுத்த நான்கு பாடல்கள் தோழி தலைவிக்குச் சொல்வது போலவும், அடுத்த 500-ஆம் பாடல் தோழி தலைவனுக்குச் சொல்வது போலவும் அமைந்துள்ளன.

=====================================================================================

1.கார்அதிர் காலையாம் ஓவின்று நலிய,

நொந்து நொந்து உயவும் உள்ளமொடு

வந்தனெம் மடந்தை! நின் ஏர்தர விரைந்தே.

      [ஓவின்று=இடையீடு இன்றி; நலிய=வருந்த; உயவும்=வருந்தும்; ஏர்=அழகு]

போன செயலை முடித்துக் கொண்டு அவன் ஊட்டுக்குத் திரும்பிட்டான். அவளத் தழுவி இன்பமா இருக்கான். அவள மறக்காம அவன் வந்ததை அவகிட்டச் சொல்ற பாட்டு இது.

      ”மடந்தையே! மேகமெல்லாம் இடிஇடிக்கற கார்காலம் வந்திடுச்சு. நீ எப்பவும் வருந்திக்கிட்டு இருக்கற மனசோட இருக்க. ஒன்னோட அழகை ஒனக்குத் திரும்ப தர்றதுக்காக ஒன்கிட்ட மறுபடியும் வந்துட்டேன் பாரு.”

=====================================================================================

2.நின்னே போலும் மஞ்ஞை ஆல,நின்

நன்னுதல் நாறும் முல்லை மலர,

நின்னே போல மாமருண்டு நோக்க,

நின்னே உள்ளி வந்தனென்

நன்னுதல் அரிவை! காரினும் விரைந்தே.

      [மஞ்ஞை=மயில்; ஆல=ஆட; நாறும்=மணக்கும்; மா=மான்; உள்ளி=நினைத்து; கார்=கார்மேகம்]

      போன பாட்டு மாதிரிதான் இதுவும்.

”அழகான நெத்தி இருக்கறவளே! ஒன்னைப்போலவே அழகா இருக்கற மயில் எல்லாம் ஆடின; ஒன் அழகான நெத்தி போல இருக்கற முல்லைப் பூவெலாம் பூத்தன. ஒன்னைப் போலவே மானெல்லாம் மருட்சியோட பாத்தன. இதையெல்லாம் பாத்த நானும் மானத்துல போற மேகத்தை விட வேகமா ஒன்னையே நெனச்சுக்கிட்டுத் திரும்பி வந்துட்டேன் பாரு.”

=====================================================================================

3.ஏறுமுரண் சிறப்ப, ஏறுஎதிர் இரங்க,

மாதர் மான்பிணை மறியொடு மறுக,

கார்தொடங் கின்றே காலை

நேஇறை முன்கை! உள்ளியாம் வரவே!

[ஏறு=காளை; ஏரு=இடிஏறு; இரங்க=முழங்க; மாதர்=அழகு;

 மான்பிணை=பெண்மான்; மறுக=உலவ; இறை=முன்கை; உள்ளி=நினைந்து]

இதுவும் போன பாட்டு மாதிரிதான்.

      ”அழகான முன்கை இருக்கறவளே! ஒன்னை நெனச்சுக்கிட்டு நான் வர்றச்ச மானத்துல இடி பலமா சத்தமா மொழங்கிச்சு; அதைக் கேட்ட காளையெல்லாம் பதிலுக்கு மொழங்கிச்சுங்க. அந்தச் சத்தங்களால பெண் மான் அதோட குட்டியை வச்சிக்கிட்டு அங்கையும் இங்கையும் திரிஞ்சுது. இப்படிக் கார்காலம் என்னைத் தூண்ட நான் ஒன்னை நெனச்சுக்கிட்டு வேகமாத் திரும்பிட்டேன்.”

=====================================================================================4. வண்டு தாதுஊத, தேரை தெவிட்டத்

தண்கமழ் புறவின் முல்லை மலர,

இன்புறுத் தன்று பொழுதே;

நின்குறி வாய்த்தனம் தீர்க, இனிப் படரே!

      [தாது=பூந்தாது; தெவிட்ட=ஆரவாரிக்க]

போன பாட்டு மாதிரிதான் இதுவும்.

      ”வண்டெல்லாம் காட்டுல பூத்திருக்கற பூவில இருக்கற தாதை ஊதி மகிழ்ச்சியா இருக்கவும், தேரையெல்லாம் பெரிசா சத்தம் போடவும், குளிர்ச்சியா வாசனை இருக்கற முல்லை நெலத்துல முல்லைப் பூ பூக்கவும், கார்காலம் ரொம்பவும் இனிப்பா இருக்குது. ஒங்கிட்ட சொன்னபடியே நானும் சரியான நேரத்துல வந்துட்டேன். அதால நீ ஒன் வருத்தத்தை உட்டுடு.”

=====================================================================================

5,செந்நில மருங்கில் பலமலர் தாஅய்,

புலம்பு தீர்ந்து, இனிய ஆயின் புறவே;

பின்இருங் கூந்தல் நல்நலம் புனைய

உள்ளுதொறும் கலிழும் நெஞ்சமொடு,

முள்எயிற்று அரிவையாம் வந்த மாறே.

      [செந்நிலம்=செம்மண் பாங்கான முல்லை நிலம்; தாஅய்=பரவி; கலிழும்=கலங்கும்; புலம்பு=துன்பம்; புறவு=முல்லை நிலம்]

போன பாட்டு மாதிரிதான் இதுவும்.

“முல்லைப் போல கூர்ப்பா பல் இருக்கறவளே! செம்மண் நெலத்துலப் பலவிதமா பூக்கள் எல்லாம் விழுந்து கெடக்கு. காட்டுப்பகுதியெல்லாம் கூடத் துன்பமா இல்லாம இன்பமாத்தான் இருந்தது. ஒன்னை நெனக்கும் போதெல்லாம் நீ வருந்தற மனசோட இருக்கறதுதான் நெனவில் வரும். இப்ப ஒன் கூந்தல் நல்ல அழகா இருக்கறதுக்கு ஒதவுமாறு நான் வந்துட்டேன் பாரு.

=====================================================================================

6. மாபுதல் சேர, வரகுஇணர் சிறப்ப,

மாமலை புலம்பக் கார்கலித்து அலைப்பப்

பேர்அமர்க் கண்ணி நின்பிரிந்து உறைநர்

தோள்துணை யாக வந்தனர்

போதுஅவிழ் கூந்தலும் பூவிரும் புகவே.

      [மா=விலங்கு;புதல்=புதர்; வரகு இணர்=வரகுகள் கொத்துக் கொத்தாகச் சிறக்க; உறைஞர்=வாழ்ந்தவர்; போது=மொட்டு; அமர்=விருப்பம்; கலித்து=இடியுடன் அலைக்கழிக்க]

      அவன் சொன்னபடிக்கு வேலய முடிச்சுட்டு கார்காலத்துல வந்திட்டான். அதால அவ ரொம்பவும் மகிழ்ச்சி அடையறா. அப்ப அவளப் பாத்துத் தோழி சொல்ற பாட்டு இது.

      ”பெரிசா கண்ணு இருக்கறவளே! மேகமெல்லம் இடி இடிச்சு பலமா மழை பெய்யுது. அதால வெலங்கெல்லாம் பொதர்ல போய் மறைஞ்சு கெடக்குதுங்க. வரகு பயிர் எல்லாம் கொத்துக் கொத்தாய் வெளஞ்சு கெடக்குதுங்க. பெரிய மலையிக்கெல்லாம் யாருமே போகல. ஒன் காதலர் ஒன் தோளுக்குத் துணையா இருக்கணும்னு வந்துட்டாரு. அதால நீ இனிமே ஒன் கூந்தலப்பின்னி பூ வெல்லாம் வச்சுக்கோ.”

=====================================================================================

7. குறும்பல் கோதை கொன்றை மலர,

நெடும்செம் புற்றம் ஈயல் பகர,

மாபசி மறுப்பக் கார்தொடங் கின்றே;

பேர் இயல் அரிவை!நின் உள்ளிப்

போர்வெம் குருசில் வந்த வாறே.

      [கோதை=மாலை; செம்புற்று=செந்நிறங் கொண்ட எறும்பின் புற்று; ஈயல்=ஈசல்; பகர=வெளிப்படுத்த; பேரியல்=பெரிதான இல்லறப் பண்பின் நலங்கள்;  

      போன பாட்டு மாதிரிதான் இதுவும்.

      ”பெருமை கொண்டவளே! போருக்காகப் போனவரு ஒன்னை நெனச்சுத் திரும்பி வந்துட்டாரு. கொன்றைப் பூவெல்லாம் பூத்திருச்சு. எறும்பின் புத்திலேந்து ஈசலெல்லாம் வெளியே வருது. மழையில இரை தேடப் போக முடியாத வெலங்கெல்லாம் பகையை மறந்து பதுங்கிக் கெடக்குதுங்க. இதுமாதிரி கார்காலம் ஆரம்பிச்சிடுச்சு பாரு.

=====================================================================================

8. தோள்கவின் எய்தின; தொடிநிலை நின்றன;

நீள்வரி நெடுங்கண் வாள்வனப்பு உற்றன;

ஏந்துகோட்டு யானை வேந்துதொழில் விட்டென,

விரைசெலல் நெடுந்தேர் கடைஇ,

வரையக நாடன் வந்த மாறே.

      [கவின்=அழகு; வனப்பு=அழகு; வரைநாடன்=மலைநாடன்;கடைஇ=செலுத்தி]

போன பாட்டு மாதிரிதான் இதுவும்.

      ”ஏந்தலான கொம்பெல்லாம் இருக்கற யானைங்க உள்ள யானைப் படையை  வச்சிருக்கற அரசன் சண்டையை முடிச்சுக்கிட்டு எல்லாரையும் ஊட்டுக்குப் போலாம்னு சொல்லிட்டான். அதால வேகமாப் போற தேர்ல நம்ம தலைவனும் இங்க வந்துட்டான். அதாலதான் ஒன் தோளெல்லாம் பழைய அழகுக்கு வந்திடுச்சு. ஒன் வளையெல்லாம் பழைய எடத்துக்குப் போயிடுச்சு. நீளமான செவ்வரிங்க இருக்கற ஒன் கண்ணெல்லாம் பசலைப் போயி அழகா மாறிடுச்சு. எனக்கும் இனிமே ஒன்னைப் பத்தி வருத்தமில்ல.

=====================================================================================

9. பிடவம் மலர, தளவம் நனைய,

கார்கவின் கொண்ட கானம் காணின்

’வருந்துவள் பெரிது’ என வருந்தொழிற்கு அகலாது

வந்தன ரால்நம் காதலர்

அம்தீம் கிளவி!நின் ஆய்நலம் கொண்டே.

      [தளவம்=செம்முல்லை; நனைய=அரும்பு விட;

 அருந்தொழில்=போர்த்தொழில்]

போன பாட்டு மாதிரிதான் இதுவும்

      ”அழகாவும் இனிமையாவும் பேசறவளே! பிடவம் பூக்க ஆரம்பிச்சிடுச்சு. செம்முல்லை அரும்பு கட்டுது. கார்காலம் வர்றதால காடு அழகா இருக்குது. அவரு மேல ரொம்ப அன்பு வச்சிருக்கற நீ வருந்துவேன்னு நெனச்சுக்கிட்டு அவரு வேற எந்த வேலையும் பாக்காம ஒன் அழகை மறுபடிக் கொடுக்கறதுக்காகவே வந்துட்டாரு.”

====================================================================================

10.கொன்றைப் பூவின் பசந்த உண்கண்,

குன்றக நெடுஞ்சுனைக் குவளை போலத்

தொல்கவின்பெற்றன இவட்கே வெல்போர்

வியல்நெடும் பாசறை நீடிய

வயமான் தோன்றல்! நீ வந்த மாறே.

      [தொல்=பழைய; கவின்=அழகு; வியல்=அகன்ற; நெடும்=நீண்ட; பாசறை; வயமான்=வலிமையான புலி]

      அவன் போன வேலையை முடிச்சுட்டு சொன்ன நேரத்துக்கு வந்துட்டான். அவளின் துன்பம் தீந்திருச்சி. அதால அவனைப் பாராட்டித் தோழி சொல்ற பாட்டு இது.

      ”சண்டைக்காகப் போட்டிருந்த பாசறையில ரொம்ப நாள் தங்கியிருந்த புலி போல இருக்கறவனே! நீ போரை வெற்றியா முடிச்சுட்டுப் புகழோட வந்ததால கொன்றைப் பூப் போல பசல வந்திருந்த இவ கண்ணெல்லாம் இப்ப மலைசுனையில இருக்கற கொவளைப் பூப் போல பழைய அழகுக்கு வந்திடுச்சு.

==========================================================================================================================================================================

Series Navigationமொழிவது சுகம் டிசம்பர் 1 2019சொல்வனம் இணையப் பத்திரிகையின் 211 ஆவது இதழ் இன்று வெளியிடப்பட்டது
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *