‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்) இன் கவிதைகள்

This entry is part 9 of 10 in the series 22 நவம்பர் 2020

  1. இல்லாத மாடிக்கான சுழல்படிக்கட்டுகள்

கொரோனா காலம் என்றில்லை

எப்பொழுதுமே நல்லதல்ல

கண்ட இடத்தில் எச்சில் துப்பும் வழக்கம்.

விழுங்குவதே உத்தமம் உமிழ்நீரையும்

உறுதுயரையும்.

பழகத்தான் வேண்டும்.

பரிதாபம் பொல்லாப்பு கட்டுக்கதைகள்

காலெட்டிப்போட்டு நம்மைப் பின் தொடராதிருக்க

வழியதுவொன்றேயெனக்

குழம்பித் தெளியும் கவி யழும் கண்ணீர்த்துளிகள்

வழிந்து வழிந்து தம்மை வடிவமைத்துக்

கொள்கின்றன

இல்லாத மாடிக்கான சுழல்படிக்கட்டுகளாய்.

அந்தரத்தில் ஒவ்வொரு படியாய் தட்டுத்தடுமாறித்

தடுக்கி விழுந்து

தரையில் உள்ளங்கையழுந்தி நிமிர்ந்து

எழுந்து போகும் கவி

தன் வரிகளில் உறுதியான ஒன்றை எடுத்துத்

தன் முழங்கையில் பொருத்தி முட்டுக்கொடுத்துக்

கொண்டு

இன்னொரு நுண்வரியை விரித்தும் வளைத்தும்

மீட்டத்தொடங்குகிறார்.

பாட்டின் ஒரு நுனி அவர் கையிலும்

மறுநுனி வாசிப்போர் கையிலுமாய்

மொட்டைமாடியின் கைப்பிடிச்சுவருக்கப்பாலான

அந்தரத்தில் பரவும் காட்டின் திக்குகள்

சிறிதே தெரிய ஆரம்பிக்க

சன்னமாய் கேட்கலாகும்

சிங்கத்தின் கர்ஜனை சின்னமுயலின் சுவாசம்

சீறும் பாம்பு தோட்டா பாய்ந்து செத்துக்கொண்டிருக்கும் புள்ளிமான்

எல்லாவற்றின் சுநாத சுருதிபேத சேர்ந்திசைபோல் ஒன்று.

***  ***  ***

  • கண்ணிரண்டும் விற்று……..

அந்த மெகாத்தொடரில் அண்ணி மாமியாருக்குக் காப்பியில் விஷம் கலந்துகொண்டிருந்தாள்.

அனிச்சைச்செயலாய் சேனலை மாற்றிய கை நின்ற அடுத்த சேனலில்

அக்கா தங்கையின் ஜூஸில் எலிமருந்தைக் கலந்துகொண்டிருந்தாள்

அய்யோ என்று அலறாமல் அலறியபடி இன்னொரு சேனலைச் சென்றடைய அங்கே யொரு தோழி இன்னொரு தோழியைப் பின்பக்கமாக நின்று பாதாளத்தில் தள்ளிக்கொண்டிருந்தாள்

அடுத்த நாள் அந்தத் தோழி ஆவியாய் வருவதற்குத் தோதாக.

பதறி பத்து சேனல்கள் தள்ளி திருப்பினால் அங்கே

கதாநாயகி பச்சைக்கிளியாக மாறி பார்ப்பவர்மீதெல்லாம்

நெருப்பைக் கக்கிக்கொண்டிருந்தாள்.

பட்டறைகளில் உருவாகும் அத்தனைத் தொடர்களிலும்

பயங்கர சதித்திட்டங்களெல்லாம் தயாராகிக் கொண்டிருந்தன

திருக்கோயில் பிராகாரங்களிலும் மண்டபங்களிலும்.

ஒரு கையால் கன்னத்தில் போட்டுக்கொண்டே

இன்னொரு கையால்

பிச்சுவாக் கத்தி, பட்டாக்கத்தி கைத்துப்பாக்கி வெடிகுண்டு என்று

விதவிதமாய் ஆயுதங்களை சுழற்றி

யாரையாவது தீர்த்துக்கட்டிக்கொண்டிருந்தார்கள் ஆண்கதாபாத்திரங்களெல்லாம்.

பெண் கதாபாத்திரங்களுக்கு இருக்கவே இருக்கிறது

பிரசாதத்தில் பல்லியை விழச்செய்யும் திருப்பணி.

கதாநாயகிகள் தீச்சட்டி ஏந்தி காவடி தாங்கி

 அடிப்பிரதட்சணம் செய்து அங்கப்பிரதட்சணம் செய்து

வாரத்திற்கு ஏழு நாட்களும் ஏதாவதொரு விரதமிருந்துகொண்டிருக்கிறார்கள்.

விரைவில் உடன்கட்டை ஏறினாலும் வியப்பதற்கு ஏதுமில்லை.

ஆத்திகத்திற்கு ஆத்திகம் நாத்திகத்திற்கு நாத்திகம்

அதோ பாருங்கள்

சாத்திரம் படித்துக்கொண்டே வருகிறது பேய்;

அடுத்த சேனலில் ஊளையிடுகிறது நாய்;

அடுத்ததில் ஓநாயின் திறந்த வாய்

பிறாண்டும் கைக்குக் கிடைத்த பாய்

கிழிந்ததாக,

ரிமோட்டின் செயலின்மையைப் பழித்தபடி

விழிகளுக்குள் வலுக்கட்டாயமாக நுழையும்

பிராண்ட் நியூ மெகாஆஆஆஆஆத்தொடருக்கான ‘டீஸர்’ அழைப்பிதழ்

***  ***  ***

  • கவிதையும் சொல்லியும்

மிகச் சிறந்த கவிதை யது
மிக மிகப் பொருத்தமான சொற்களால்
நிரம்பியிருந்தது.
விழவுக்கும் எழவுக்குமான
குழவிக்கும் கிழவிக்குமான வேறுபாட்டைக்
கைபோனபோக்கில் காற்றில் பறக்கவிடும்
எழுத்தல்ல
அழுத்தமாகச் சொல்லமுடியும்
ஆகச் சிறந்த கவிதைகளில் அதுவுமொன்று.
மனதை நெகிழ்த்தி
மிக இலகுவாக உள்ளுக்குள் ஊடுருவிச்சென்று
அங்கிருக்கும் உயிருக்கும் ஆன்மாவுக்கும்
’சார்ஜ்’ செய்கிறது; ’டாப்-அப்’ செய்கிறது
அங்கே ஒலித்துக்கொண்டேயிருக்கும் அழைப்புகளுக்கு ‘அலோ அலோ’ என்று ஒருகையோசையாய் அலறிக்கொண்டேயிருப்பதைத் தாண்டி
அவற்றைக் காதாரக் கேட்டு பதிலளிக்கச் செய்கிறது.
பாலைவனத்தில் கால்கடுக்க நடந்துகொண்டிருக்கும் நேரம்
திடீரென எதிரே குளிர்பானப் புட்டிகள் வரிசையாக வரிசையாக வண்ணமயமாக வைக்கப்பட்டிருக்கும்
அடுக்கொன்று தென்படுவதாய்…..
உடுக்கையிழந்தவன் கைபோல என்றுகூடச் சொல்லமுடியும்.
எல்லாமிருந்தும்
உருகியுருகி வாசித்துக்கொண்டிருக்கும் நேரமெலாம்
இரண்டறக் கலக்கவொட்டாமல் உறுத்திக்கொண்டே யிருக்கிறது
உண்மையெனப் பொய் பரப்பி யக் கவி
உதிர்த்துக்கொண்டிருக்கும் கொச்சைமொழிக்குப்பைமன
வெறுப்புப்பேச்சு.

***  ***  ***

  • வானம் வசப்படும் தருணங்கள்
https://scontent-maa2-1.xx.fbcdn.net/v/t1.0-9/125563109_1383706285308305_7358925637933959433_n.jpg?_nc_cat=102&ccb=2&_nc_sid=730e14&_nc_ohc=A6heJbCy1TkAX-Zvgvk&_nc_ht=scontent-maa2-1.xx&oh=9e121b95a173a47a45f37f6f68a59186&oe=5FE18FE6

வழக்கம்போல் ஒரு நூல்வெளியீட்டுவிழா

படித்ததில் பாதிக்குமேல் நல்ல கதைகள்.

விமர்சிக்கத் தோதாய் ஏற்கெனவே

தபாலில் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது

பிரதியொன்று.

விழாமேடையில் பேசிமுடித்ததும் கையில் தரப்பட்டது

வழுவழுத்தாளில் பொதியப்பட்டிருந்த இன்னொரு பிரதி.

தரமான கெட்டி அட்டையில்.

விலை நானூறுக்கு மேல்.

விழாமுடிந்து விடைபெற்றுக்கொண்டு வீடுதிரும்ப

கூப்பிடுதூரத்திலிருந்த பேருந்துநிறுத்தத்திற்கு நடக்கலானேன்.

ஆர்வமாய் பேசிக்கொண்டே கூடவந்த வளரிளைஞன்

என் கையிலுள்ள புத்தகத்தை அடிக்கொருதரம் பார்ப்பதைப் பார்த்து

”படித்திருக்கிறீர்களா?” என்று வினவினேன்.

”நண்பனிடம் ஒரு பழைய பிரதியிருக்கிறது. இரவல்

வாங்கிப் படித்தேன்” என்றான்.

”இதை வைத்துக்கொள்ளுங்கள் இன்னொன்று

இருக்கிறது என்னிடம்” எனத்

தந்தேன் வழுவழுத்தாளில் பொதியப்பட்டிருந்த

பிரதியை.

நம்பமுடியாமல் அதைப் பார்த்து அதிசயித்து

நெகிழ்வில் அழுகுரலில் நன்றிபகர்ந்தவனுக்குத் தெரியாது

அவன் தயவால் நான் தாற்காலிக தேவதையாகி யிருப்பது!

 

*

 

Series Navigationநட்பு என்றால்?வெற்றிடம்
author

ரிஷி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *