‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

0 minutes, 0 seconds Read
This entry is part 1 of 20 in the series 23 மே 2021

 

 

 

 1. ஒப்பாய்வு

 

ஒரு மலையை இன்னொரு மலையோடு

ஒப்பிட்டுப் பார்க்கலாம்

இரண்டின் உயரங்கள், சமவெளிகள்

பள்ளத்தாக்குகள் அருவிகள்

தட்பவெப்பம் பருவமழை

தாவரங்கள் விலங்கினங்கள்

இரண்டின் பறவையினங்கள் பூர்வகுடிகள்,

குகைகள் காலமாற்றங்கள்

இரண்டில் எது சுற்றுலாவுக்கு அதிக உகந்தது

இரண்டில் எது மலையேற்றத்தை

அதிக சிரமமில்லாமல் அனுமதிப்பது?

இரண்டின் உச்சிகளில் எது தற்கொலைக்கு

அதிகம் இடமளிப்பது….

எதிலிருந்து பார்த்தால் கடல் தெரியும்

ஒற்றைக்கோடாக

எதிலிருந்து கையுயர்த்தினால்

தொடுவானத்தைத் தொட்டுவிட

முடியும்போல் இருக்கும்…

இரண்டு மலைகளுக்கிடையே ஒப்புநோக்க

எத்தனையெத்தனையோ இருக்கும்.

என்றாலும்

ஒரு மலையை பொடிக்கல்லோடு ஒப்புநோக்கி

பொடிக்கல்லை பெருமலையாகப் பேசுவதே

இங்கே அப்பழுக்கற்ற திறனாய்வாகும் திறம்

இன்றளவும் அறியப்படும் பொருள்விளங்கா

சிதம்பர ரகசியமாக……

 

 

 1. நடுவில் நிறைய பக்கங்களைக் காணவில்லை

 

அவர் வாழ்ந்த காலத்திலிருந்து வெகுகாலம் கடந்து

அவர் கவிதைகள் பற்றி எழுதப்பட்டிருந்த

குறிப்பு

கட்டுரை

திறனாய்வில்

காணாமல் போயிருந்தது _

கையில் கிடைத்த தத்துவங்களை

சோழியாய் வரிகளில் சுழற்றி வீசி

யவர் தன்னை தீர்க்கதரிசிக் கவியாக நிலைநிறுத்திக்கொண்டது;

அன்பே சிவம் என்று ஒரு மேடையில் போதித்து

சிவம் சவம் என்று இன்னொரு அரங்கில் சாதித்தது;

தன் வீட்டின் பத்துக்குக் குறையாத அறைகளை பூதங்காத்தவாறும்

எந்நாளூம் நிலவறையில் நெல்மூட்டைகள்

பத்துக்குக் குறையாமல் வைத்திருந்தபடியும்

‘தனியொருவனுக்குணவில்லையெனில்

ஜகத்தினை அழித்திடுவோமை

தவறாமல் உணர்வெழுச்சிமிக்க ஏற்ற

இறக்கங்களோடு தழுதழுக்கும் குரலில்

தீ கலந்து பகர்ந்தது;

தந்த கோபுரத்தின் கண்ணாடி அறையுள்ளிருந்து கணினியைத் தட்டியவாறே

தன்னாலான கலவரத்தைத் தூண்டும்

சமூகப்பணி செய்துகொண்டிருந்த

அவர் தர்மசிந்தனையும்

தாராளமய நன்னெறியும்;

கழிபொழுதில் தனது மொழியாற்றலை

யெல்லாம்

குறிப்பிட்ட ஒரு தலைவரைப் பழிப்பதற்கே

செலவழித்த

அவரது மெச்சத்தகுந்த கூர்கவனமும்;

அழியாப்புகழ் பெற அவர் செய்த

அரசியலும்;

அவரிலிருந்து பெருக்கொடுத்தோடிக்

கொண்டிருந்த

பொல்லாப்பும் பொச்சரிப்பும்;

சிற்றும்பு கடித்ததைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டு

உச்சிமீது வானிடிந்து வீழுகின்றபோதிலுமான

’சிச்சுவேஷனை’ உருவாக்கி அவர் பாடிய

நவீன ஒப்பாரியில் அவர்

கச்சிதமாய் ஒளித்துவைத்திருந்த

நச்சுத்துப்பாக்கியும்;

அச்சச்சோ அராஜகம் என்று

பன்னிப் பன்னிச் சொன்ன அதே வாயால்

அதே விஷயத்தை ‘அதெல்லாம் வாழ்வில் சகஜம்’

என்று அடித்துச்சொன்னதும்;

ஒரு பத்தியில் தொற்றுநோயும் மறுபத்தியில் நடிகர் வெற்றிவேலுக்கான

’வாகைசூடி வா’ வாழ்த்துமாய்

பதிவுகளைப் பகிரும் வித்தகமும்;

எழுத்தின் நிறைமௌனத்தைக் கிழிக்கும்

வெற்றுமுழக்கங்களும்;

மற்றும்……….

 

 

 1. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

பயிர் முளையிலே தெரியும்…………

 

 

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்

அநியாய அவதூறுகள்

அவமானகரமான வசைச்சொற்கள்

அமைதியிழக்கச்செய்யும் கெக்கலிப்புகள்

அசிங்கப்படுத்தும் அடைமொழிகள்

அக்கிரம வக்கிரச்சொலவடைகள்

பொச்சரிப்புப் பழமொழிகள்

பொல்லாங்குப் புதுமொழிகள் என

ஒருவருக்கு நாம் தந்துகொண்டிருக்கும் அத்தனையையும்

நமக்கு இன்னொருவர் தரக்கூடும்

இன்றே

இங்கே

இப்போதே

குளிர்காலம் வசந்தம் போல்

முற்பகல் பிற்பகல்

இரண்டின் இடைத்தூரம் சில மாதங்கள்

அன்றி சில நாட்கள்

அன்றி

சில மணித்துளிகள்

அன்றி சில கணங்கள்

அன்றி ஒரு கணத்திற்கும் மறுகணத்திற்கும் இடையிலான

நூலிழை அவகாசம்….

காலம் கணக்குத்தீர்க்கும்போது

அதைப் புரிந்துகொள்ளத் தவறியும்

புரியாததுபோல் பாவனை புரிந்தும்

ஆழ்ந்த யோசனையிலிருப்பதாய் அண்ணாந்துபார்ப்பதாலேயே

நம்மை ஆகாசம் என்று இன்னும் எத்தனை நாள்தான் நம்பிக்கொண்டிருக்கப்போகிறோம்….?

 

 

 1. கேள்வியும் பதிலும்

  தன்னிடம் எழுப்பப்படும் கேள்விகளுக்காய்
  தவமியற்றாத குறையாய்
  காத்திருக்கத் தொடங்கினார்.

  சத்தமாய் தன்னை நோக்கிக் கேட்கப்படும் கேள்விகள்
  சத்தற்றவையாக இருந்தால் என்ன?
  பொத்தாம்பொதுவாய் இருந்தால் என்ன?
  மொத்த விற்பனைத்தனமாயும் சில்லறைவிற்பனை ரீதியிலும்
  வாழ்க்கைத் தத்துவங்களாய் வெத்துமுழக்கங்களைத்
  தந்துபெறும் விதமாய் கேட்கப்பட்டால்தான் என்ன?

  அந்தரத்தில் வந்தமர்வதாய் ஆன் – லைனில்
  அவரிடம் அனுப்பப்பட்டுக்கொண்டேயிருக்கும் வினாக்களில்
  அவரே சில பெயர்களில் ஒளிந்துகொண்டிருப்பவை
  அதிகம் போனால் நாற்பது இருக்கும்.
  அதனாலென்ன?
  ஒரு மனிதருக்குள் குறைந்தபட்சம் இருவராவது இருப்பார்களல்லவா?

  குகைக்குள் சிறைவைக்கப்பட்டிருக்கும் கிளியில் இருக்கும்
  ராஜகுமாரியின் உயிர்போல்
  தன்னிடம் எழுப்பப்படும் கேள்விகளின் எண்ணிக்கையில்
  தனதுயிர் அழுகுவதும் துளிர்ப்பதும் அடங்கியிருப்பதாகக்
  கருதியவருக்குப் புரிந்தது ஒருநாள் _

  தன்னால் தொடுக்கப்படும் கேள்விகளின் எண்ணிக்கையில்
  தனதுயிர் அழுகுவதும் துளிர்ப்பதும்
  அடங்கியிருப்பதாக
  வினா தொடுப்பவரும் நினைத்துக்கொண்டிருப்பது.

 

 1. இருபத்தியேழாயிரத்து முக்காலே அரைக்கால் வார்த்தைகளில் எழுதப்படவேண்டிய குறுநாவல்

  குறுநாவல் போட்டியொன்று அறிவிக்கப்பட்டிருந்தது.
  கலந்துகொள்வதற்கான நிபந்தனைகள் அழுத்தமான எழுத்துருவில் அடிக்கோடிடப்பட்டிருந்தன.

  அவற்றிலொன்று குறுநாவல் மொத்தம் இருபத்தியேழாயிரத்து முக்காலே அரைக்கால் வார்த்தைகளுக்கு மேல் இருக்கக்கூடாது
  என்று கறாராய் கூறியிருந்தது.

  அதில் கலந்துகொள்ள ஆர்வமுற்றவன்
  தனது கதையின் கதை, பாத்திரங்கள், நிகழ்வுகள்,
  சந்தர்ப்பசூழல்கள், திடீர்த்திருப்பங்கள்
  எல்லாவற்றையும் வார்த்தைகளின் எண்ணிக்கையாய் மட்டுமே
  பார்த்தும் வார்த்தும் கோர்த்தும் போர்த்தும்
  எழுதிமுடித்தான்.

  பழுதடைந்திருந்தாலென்ன பரிசுவென்றால் போதும்
  என்ற மனநிலை பக்குவமா பெருந்துக்கமா
  என்ற வரிகளும் அவற்றின் வார்த்தைகளும்
  போட்டிக்கான சட்டதிட்டங்களுக்கு அப்பால்
  அந்தரத்தில் ஊசலாடியபடி…

 

 

 1. நோய்த்தொற்று

 

கொரோனா காலத்திலும்

தன் கோணல்பார்வையையும்

கேடுகெட்ட ஆணவத்தையும்

குறுக்குபுத்தியையும்

கிண்டல் சிரிப்பையும்

குத்தல்பேச்சையும்

குசும்புத்தனத்தையும்

கொஞ்சமும் விடாதவர்

’கொரோனாவை விடக் கடுமையான வைரஸ்

நானே’ என்று

கண்ணில் பட்டவரிடமெல்லாம் கர்வப்பட்டுக்கொண்டிருக்கிறார்.

 

Series Navigationகி ராஜநாராயணன் என்ற அன்பு நெசவாளி
author

ரிஷி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *