நேர்மையான மௌனம்

author
0 minutes, 1 second Read
This entry is part 4 of 13 in the series 2 ஏப்ரல் 2023

ஆர் வத்ஸலா

சிறு வயதில்

உனக்கு என் மேல் கொஞ்சம் பாசம்

இருக்கத் தான் செய்தது

சத்தியமாக –

எனக்கு உன்‌ மேலிருந்த அளவு இல்லையென்றாலும்

வயது ஏற ஏற

அது குறைந்ததை

நான் ஏற்றுக் கொண்டு விட்டேன்

அது உன் இயல்பென்று –

பல சமயங்களில்

உன் குரலை கேட்க ஏங்கி

நின்றாலும்

மிகுந்த மன உழைப்பின்

பலனாக

உனது பாசமில்லாத

ஓர் உலகுக்கு

என்னை நான்

பழக்கிக் கொண்ட பின்

இன்று

ஏனோ பேசுகிறாய்

என்னுடன்

முற்றிலும் தொடர்பில்லா

வாழ்க்கையை

ஏற்க பயந்து –

இயங்க மறுக்கும்

தொண்டையை செருமிக் கொண்டு

நம்மிருவருக்குமே

சுவையற்ற விஷயங்களைப்

பற்றின சொற்களை

சிரமத்துடன் தேடி

நடுநடுவே நீளும்

மௌனத்தில் திணித்து

வேண்டாமே இந்த  நாடகம்

இருந்து விட்டு போகட்டுமே

நம்மிடையே

நேர்மையாக ஒரு மௌனம்

Series Navigationமௌனம் – 2 கவிதைகள்இலக்கியப்பூக்கள் 277 ஆவது வாரம்!
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *