மன்னிப்பு

author
0 minutes, 44 seconds Read

பென்னேசன்

          

இதுவரை ஐந்து முறை   வாட்ஸாப் அழைப்பை நிகராகரித்து விட்டான் ருக்மாங்கதன். இப்போது ஆறாவது முறையாக மீண்டும் அழைப்பு. ஒலிப்பானை அமைதிப்படுத்தியிருந்தாலும் தொலைபேசித் திரை மீண்டும் மீண்டும் ஒளிர்ந்து அமைதியானது. நிச்சயம் மெசேஜ் அனுப்பியிருப்பான் மாங்கேலால்.  இடது பக்கத்து இருக்கைக்காரன் படம் பார்க்கும் சுவாரசியத்தில் இந்தத் தொந்தரவைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் மஞ்சுளாவின் உச்சுக் கொட்டும் சத்தம் அதிகரித்து வந்தது.  அவன் பக்கம் சாய்ந்து காதில் கிசுகிசுத்தாள்.

“இதோ பாரு ருக்கு உனக்கு சினிமா எல்லாம் பிராப்தம் இல்லை. வெளியிலே போய் வேணும்னா பேசிட்டு வா. உன்னோட மாங்கேலால் உன்னைப் பொண்டாட்டியோட படம் பார்க்க விடமாட்டான். அவனுக்கு மூக்கில் வேர்த்திருக்கும். போ.  வெளியே போய் பேசிவிட்டு வா…

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் காட்சியானதால் எந்த இருக்கையும் காலி இல்லாமல் நிரம்பி வழிந்திருந்தது.

சலித்துக் கொண்டே இருக்கைகளின் குறுகலான இடைவெளியில் நிறைய “உஷ்… உஷ்…களைக் கடந்து, ஓரிரு முகங்களில்  பிருஷ்டபாகத்தை அறைகுறையாகத் தேய்த்து ஒருவழியாகக் கதவைத் திறந்து  திடீர் வெளிச்சத்துக்கு வந்து கைப்பேசியின் திரையை உயிர்ப்பித்துப் பார்த்தான்.

கிராதகன் மாங்கேலால் தான். அழைப்புகள் மட்டுமின்றி, பலமுறை மெசேஜ்… “அவசரம். மிகவும் அவசரமாகத் தொடர்பு கொள்… நான்காவது மேசேஜூக்குப் பிறகு, வெடித்திருந்தான்.  “ஹரே போஸடிகே… கஹான் மர்கயா தூ… ஜா.. தேரா பாப் தேரேகூ டூண்ட்ரஹா ஹைன்…”

“அப்பன் தேடுகிறான்”… இவன் அடுத்தவனை நிம்மதியாக இருக்க விடமாட்டான். யாரிடமும் மரியாதையாகப் பேசத் தெரியாது.  எதையும் மரியாதையாக அணுகத் தெரியாது.  மஞ்சுளா எப்போதாவது இவனைப் பார்க்க அலுவலகம் போய் நின்றால் அவளைப் பார்த்ததும் மாங்கேலால் ஊருக்கே கேட்பது போல சத்தமாக,

“லே பாய் ரூக்கு… தேரா லுகாயி ஆயீ ஹை”

“லுகாயி” இது ஹரியான்வி ஜாட்டுகள் மனைவியரைக் குறிக்கும் சொல்.  ஆனால் மிகவும் ஆபாசமான பொருள் கொண்டது. அதைப்பற்றி அவன் எப்போதும் கவலையோ கூச்சமோ கொண்டது கிடையாது.   மஞ்சுளாவுக்கும் இவனுக்கும் கொலைவெறி வரும். எப்போதாவது இதை எதிர்த்து கிட்டே சென்று கத்தினால்… கோயி நை… ஓ மேரே பஹூ… (மருமகள்) என்று அசிங்கமாகப் பல்லைக் காட்டுவான்.

முதல் மணி அடித்ததுமே காத்துக் கொண்டிருந்தது போல மாங்கேலால் எடுத்தான்.  மிகவும் அவசரத்தில் இருக்கிறான் போலிருக்கிறது.  “அபே காண்டூ… கஹான் மர்கயா தூ… ஆபீசுக்கு ஓடிப்போ… பாஸ் ரொம்ப டென்ஷனாக இருக்கிறார்.  ஒடு.  நான் இங்கே என் கிராமத்தில் இருக்கிறேன்.  என்னைப் போன் பண்ணியே கொன்னுக்கிட்டு இருக்கான். பாரு.  இப்போவும் அவன்தான் கூப்பிடுறான்… வண்டி இல்லைன்னா சொல்லு… டெல்லி போலீசுக்கு போன் பண்றேன்…”

அந்த அமைச்சகத்தின் நிர்வாகப் பிரிவின் சோட்டா அதிகாரி ருக்மாங்கதன். அவனுக்குக் கொஞ்சம் படா அதிகாரி மாங்கேலால். அந்த அமைச்சகத்தின் புரோட்டாகால் பிரிவு இவனுடையது. இவன் சோட்டா புரோட்டோகால் அதிகாரி.

பிரிவின் பெயர் மிகவும் நாகரிகமாக இருந்தாலும் அந்தப் பிரிவின் சொல்லப்படாத வேலை என்பது மாமா வேலை ஒன்று மட்டும்தான். அமைச்சருக்கு வேண்டிய விருந்தாளிகளைக் கவனிப்பது.   வெளியூரிலிருந்தோ வெளிநாடுகளிலிருந்தோ விருந்தாளிகள் வந்தால் அவர்களை விமானநிலையம் சென்று அழைத்து வருவது. அவர்களுக்கு ஓட்டலில் வேண்டிய வசதிகளைக் கவனிப்பது. அவர்கள் திரும்பிச் செல்வது வரை அவர்களைக் குழந்தை போலப் பார்த்துக் கொள்வது. யாராவது அரசியல் தலைவர் அல்லது மந்திரி செத்துப்போனால் அமைச்சர் வைக்க வேண்டிய மலர் வளையத்தை ஏற்பாடு செய்வது, அமைச்சர் வீட்டில் விசேஷம் என்றால், சாஸ்திரிகள், சமையல்காரர்களை ஏற்பாடு செய்வது, முதற்கொண்டு அத்தனையும் ருக்மாங்கதன் பொறுப்பு. மாங்கேலால் மேற்பார்வையில் எல்லாம் இவன் செய்ய வேண்டும்.

இது தவிர, அமைச்சரின் மனைவி, கள்ளக்காதலி, பிள்ளைகள், குடும்பத்தினர், அவ்வப்போது  ஏவும் குற்றேவலை செய்வது போன்ற வேலைகள் இவனுடைய வேலை.

இப்போது ஏதோ அவசர வேலையாக இருக்க வேண்டும். இல்லையென்றாலும் இந்தக் கோமாளிகள்  இப்படித்தான் எப்போதும் ஆசனவாயில் தீப்பந்தத்தைச் சொருகியது போலக்  குதித்தவாறு இருப்பார்கள். இப்படி எங்காவது நடுவில் விட்டு ஓடுவதெல்லாம்  மஞ்சுளாவுக்குப் பழக்கமானதுதான். அவளுக்கு மேசேஜ் மட்டும் அனுப்பி விட்டு ஸ்கூட்டரைக் கிளப்பி வேகமாக அலுவலகம் நோக்கி வேகமெடுத்தான்.

ஞாயிற்றுக்கிழமையானாலும் அலுவலகம் சாதாரண பணிநாளின் பரபரப்பிலேயே இருந்தது. அறையில் நுழைந்ததும் உதவியாளன் அதிகாரியின் அறை நோக்கிக் கை காண்பித்தான். “ஏதாவது பிரச்சினையா?” என்று கேட்டான் ருக்மாங்கதன். சர்தார்ஜி ஓரிரண்டு பெக் நறுமணத்துடன் உதட்டைப் பிதுக்கினான். தயங்கிக் கொண்டே டெபுடி செகரட்டரி அறையில் நுழைந்தான்.

“மன்னிக்கணும் சாஹிப்… சொந்தக்காரங்க வீட்டுலே சாவு…   போன் எடுக்கலை” என்று தயங்கிக் கொண்டே சொன்னான்.

 அவர்  சிரித்துக் கொண்டே, “பரவாயில்லை ரூக்… நானும் சினிமா தியேட்டரில்  இருந்தால் என்னுடைய படா அதிகாரியிடம் இப்படித்தான் இல்லாத என் சித்தி அல்லது பெரியப்பாவை சாகடிப்பேன். ஏதோ இப்போதாவது வந்தாயே… நான் போக முடியாத வேலை.  என் லெவலுக்கு சரியில்லாத வேலை.  நீதான் போகணும்…”

“என்ன சாஹிப்… ஏதாவது பிரச்சினையா?”

“ஆமாம்… கொஞ்சம் பெரிய பிரச்சினைதான்.   ஏமாந்தால் மீடியாவுக்கு விஷயம் போயிடும். நம்ம படா  சாஹிப், மதியம் தன் மனைவியோடு  அவரே காரை ஓட்டிக்கொண்டு நேரு பிளேஸ் போயிருக்கிறார்.   அங்கே பார்க்கிங்கில் நெரிசல் போலிருக்கிறது. காரைக் கொஞ்சம் சந்துக்கு ஒட்டி நிறுத்தியிருக்கிறார்.  ஏதோ ஒரு டிராபிக் போலீஸ்காரன்  வந்து சத்தம் போட்டிருக்கிறான். இவர் வெளியே வந்து பேசாமல் கண்ணாடியை மட்டும் இறக்கி “நான் யார் தெரியுமா? நான் யார் தெரியுமா?” என்று அவனைக் கேட்டிருக்கிறார்.  எரிச்சலடைந்த போலீஸ்காரன், “நீ யாராக இருந்தால் எனக்கென்ன?” என்று கத்திக்கொண்டே காரின் கதவைத் திறந்து அவரை வெளியே இழுத்துப்போட்டு கன்னத்தில் பளாரென்று அறைந்திருக்கிறான்.

              “சாஹிப்… இப்போ நான் என்ன செய்யணும்?”

              “சொல்றேன்.. அத்தனை பெரிய மார்க்கெட்டில் ஜன சந்தடி நிறைந்த அந்தக் கார் பார்க்கிங் பகுதியில்  ஒரு சாதாரண கான்ஸ்டபிள், மூத்த  அதிகாரியான தன் கணவரை இப்படி அறைந்தது மேம் சாஹிப்புக்கு எக்கச்சக்க கோபம்.  அந்தக் கான்ஸ்டபிளை விடக்கூடாது என்று சத்தம் போடுகிறார். தேவ் சாஹிப் கூட ஒன்றும் அதிகமாகப் பேசவில்லை. அவர் பாவம் அவமானத்தில் குறுகியிருக்கிறார் அந்த அம்மாதான் ஊரைக் கூட்டியிருக்கிறது.  என்னை உடனே கூப்பிட்டு நான் ஏதோ அவள் புருஷனை அறைந்து விட்டதைப் போல என்னிடம் சத்தம் போடுகிறது. ஏதாவது  செய்தாக வேண்டும் என்று குதிக்கிறது”.

              “சாஹிப், இதில் நாம் அதிகமாக ஏதாவது செய்தால் மீடியா கவனத்துக்குப் போய்விடும். போலீஸ் நிர்வாகத்தைக் கையில் வைத்திருக்கிற அமைச்சகத்தின் அதிகாரியை ஒரு கான்ஸ்டபிள் பொதுஇடத்தில் கன்னத்தில் அடித்திருக்கிறான் என்பது நமது அமைச்சகத்துக்கே கேவலம்” என்றான் ருக்மாங்கதன்.

“ஆமாம். உண்மைதான்.   மாங்கேலால் சூத்தியா இந்த நேரம் பார்த்து கிராமத்துக்குப் போயிட்டான். பரவாயில்லை. நான் கமிஷனரிடம் பேசிவிட்டேன். அவர் டெபுடி கமிஷனருக்கு விஷயத்தை சொல்லி விட்டார். உன் கிட்டே அந்தப் பகுதி டெபுடி கமிஷனர் நம்பர் இருக்குமே. அவரிடம் இன்னைக்கே நேரம் கேட்டு அவரைப் பார்.  உனக்குக் கார் சொல்லியிருக்கிறேன். வேலை முடியும் வரை வைத்துக் கொள்.  அந்தக் கான்ஸ்டபிள் விபரங்களை அவரிடமிருந்து வாங்கிக் கொள். தேவ் சாஹிப் வீட்டுக்குப் போய் மேம் சாஹிப்பை பார். அவள் குதிப்பாள். கொஞ்சம் பொறுமையாக ஏதாவது சொல்லி, என்ன செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள். தேவ் சாஹிப் வரை போகவேண்டாம் என்கிறாள். பார்த்துச் செய்” என்றார்.

ருக்மாங்கதன்  தன் இருக்கைக்குச் சென்று சர்தார்ஜியிடம் ஒரு பிரெட் பக்கோடா, காபிக்கு ஆர்டர் செய்யச் சொல்லி விட்டு தொலைபேசி எடுத்தான்.  எண்ணைத் தேடி டெபுடி கமிஷனரை நேரடியாக மொபைலில் அழைத்தான். அவர் “இதெல்லாம் போனில் வேண்டாம். நேரில் வா” என்று சொல்லி வைத்து விட்டார்.

அவரை சந்திப்பதற்கு முன்பு தேவ் சாஹிப்பின் தருமபத்தினியை சந்திக்க வேண்டும். ஏற்கனவே ஓரிரு முறை அவருடைய சொந்த வேலைக்காக அந்த வீட்டுக்குப் போயிருக்கிறான். அந்த சமயத்தில் அவள் இவனையும் உதவியாளர்களையும் படாத பாடு படுத்தியிருக்கிறாள்.

  உதவியாளனை உடன் அழைத்துச் செல்லலாமே என்ற நினைப்பை அவசரமாக உதறித் தள்ளி விட்டு,   அலுவலகக் கார்கள் நிற்குமிடத்துக்குப் போனான்.  டிரைவர்கள் அறையில் ஐந்தாறு டிரைவர்கள் கூட்டாக உட்கார்ந்து எதையோ போனில் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இவர்கள் பிரிவின் டிரைவர் மாஞ்சி இவனைப் பார்த்ததும் ஓடிவந்து காரின் கதவைத் திறந்து விட்டான்.

உட்கார்ந்ததும், ” டெபுடி கமிஷனர் ஆபீசுக்குப்  போகணும்” என்றதும், ஏதாவது பிரச்சினையா ரூக் சாஹிப் என்றான். அதெல்லாம் ஒன்றுமில்லை. நம்ம படா சாஹேப்  ஏதோ வேலை கொடுத்திருக்கிறார். இடையில் பண்டாரா ரோடில் ஒரு  அதிகாரி வீட்டில்  பென் டிரைவ் கொடுக்கணும் என்றார்.  முதலில் அங்கே போய்விட்டு பிறகு டெபுடி கமிஷனர் ஆபீஸ் போகலாம் என்றான். மாஞ்சி ஒன்றும் பேசவில்லை. அவன் லேசாக சிரித்தது போலக் கண்ணாடியில் தெரிந்தது. ஒருவேளை பிரமையாக இருக்கலாம்.

பண்டாரா ரோட்டில் தேவ் சாஹிப் வீடு அமைந்திருக்கும் தெருவுக்கு அடுத்த தெருவில் காரை நிறுத்தச் சொல்லி விட்டு அங்கிருந்து நடந்தே போனான்.  இரண்டு கார் கேரேஜ்கள் இடையில் இருந்த சந்தில் நுழைந்து தேவ் சாஹிப் வீட்டை அடைந்தான். மேம் சாஹிப் பூம்புகார் சினிமாவில் வரும் விஜயகுமாரி போல முழுக்கக் கலைந்துபோய் மிகவும் ஆவேசமாகக் கதவைத் திறந்து இவனை வருமாறு கூப்பிட்டாள். ருக்மாங்கதனை விடப் பெரிய அதிகாரியை எதிர்பார்த்திருப்பாள் என்பது அவளுடைய முகத்தில் தெரிந்தது.

“என்ன செய்யப்போகிறாய்?” என்று கேட்டாள்.

தனக்குக் கிடைத்த உத்தரவைச் சொன்னான். “அப்படியே செய். அவனை விடாதே. அதே நேரம் விஷயம் அதிகம் பரவ வேண்டாம். தேவ் சாஹிப்புக்குப் பிடிக்காது’‘ என்றாள்.

“டீக் ஹை மேம் சாஹிப்” என்று அவசர அவசரமாக அங்கிருந்து கிளம்பினான். இன்னும் அதிக நேரம் மொட்டை பிளேடு போடுவாள் என்று பயந்திருந்தான். அப்படியெல்லாம் இல்லை.

டெபுடி கமிஷனர் இவனுக்காக அலுவலகத்தில் காத்திருந்தார்.  அறை வாசலில் சொன்னதும் கான்ஸ்டபிள் இவனை மரியாதையாக க் கதவைத் திறந்து உள்ளே அனுப்பினான்.  ஆந்திரா அல்லது தெலுங்கானாவை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.  சினிமா வில்லன் போல ஆஜானுபாகராக இருந்தார். இவனிடம் பெயரைக் கேட்டுத் தனக்குத்தானே ஓரிரு முறை உச்சரித்துப் பார்த்தார்.

“உங்க பாஸ் விஷயம் எல்லாம் சொல்லி விட்டார். இடம், நேரம் வைத்து ஆளைக் கண்டிபிடித்து விட்டோம். வெளியில் உட்கார வைத்திருக்கிறோம்.  நாளைக்கு நான் வரணுமா?  இன்னும் அவனைக் கூப்பிட்டு விசாரிக்கலை. ஏசிபி தான் பேசியிருக்கிறார்”.

“என்ன சொல்றான் சார்”

“என்ன சொல்வான்? ஆத்திரத்தில் அப்படி செய்துவிட்டான். உள்ளே காரிலிருந்து தேவ் சாஹிப் மனைவி ஏதோ தப்பாகப் பேசியிருக்கிறாள். அவளை ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இவரைப் போட்டு அடித்திருக்கிறான்.   ஆள் நல்லவன் என்கிறார் ஏசிபி.  பார்த்து ஏதாவது செய்யுங்க. நாளைக்கு உங்க  அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கிறேன். தேவ் சாஹிப் கிட்டே அவன் நேரடியாக மன்னிப்புக் கேட்கட்டும். நடுவில் அந்த அம்மா வேண்டாம்” என்றார்.

ஏ.சி.பி. போலீஸ் வேலைக்குத் தகுதியற்ற உயரத்தில் சற்றுக் குள்ளமாகவே இருந்தார். முகம் முழுவதும் மூக்காகவே நிறைந்திருந்தது. சற்றுக் கோபக்கார ஆள் போலத்தெரிந்தார். உள்ளே சென்று பரஸ்பர அறிமுகம் முடிந்ததும், “அவனை இங்கே கூப்பிடணுமா?  நீங்க எதாவது பேசணுமா?” என்று ஆங்கிலத்தில் கேட்டார்.

“தேவையில்லை சார். நாளை நேரடியாக எங்கள் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்து விடுங்கள். எங்கள் பாஸ் முடிவெடுப்பார். அது வரைக்கும் சஸ்பென்ஷன் எல்லாம் வேண்டாம். எந்தத் தண்டனையும் நிறுத்தி வைக்கச் சொன்னார் பாஸ். அந்த ஆள் தேவ் சாஹிப்பிடம் நேரடியாக மன்னிப்புக் கேட்டால் போதும் என்று பாஸ் சொன்னார். நாளை காலை பத்தரைக்கு அனுப்பி விடுங்கள். என்னுடைய எண்ணை அவனுக்குக் கொடுத்து விடுங்கள். நான் செக்யூரிடியில் பாஸ் ஏற்பாடு செய்கிறேன்” என்று சொல்லிவிட்டு அவரிடம் இருந்து விடைபெற்றான்.

அங்கிருந்து அலுவலகம் சென்று படா அதிகாரிக்கு சொல்லிவிட்டு ஸ்கூட்டர் எடுத்துக் கொண்டு வீட்டுக்குப் போனான். வழக்கப்படி மஞ்சுளா தூங்கிக் கொண்டிருந்தாள். எழுப்பினாலும் சற்று வில்லங்கம்தான். சமையலறையில் மிச்சமிருந்ததை சாப்பிட்டு விட்டு  அவள் பக்கத்தில் பாம்பைப் போல சத்தமில்லாமல் ஊர்ந்து படுத்தான்.

காலையில் சரியாக பத்தரை மணிக்கு மொபைலில் அந்த கான்ஸ்டபிள் அழைத்தான். செக்யூரிடி ஆபீஸ் உள்ளே சென்று உட்காரச் சொன்னான்.

செக்யூரிடி ஆபீசில் நின்றிருந்த  அவனை எளிதாக அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது.  சீருடை அணியாமல் சாதாரண உடை அணிந்திருந்தான். அநியாயத்துக்கு ஆஜானுபாகனாக இருந்தான். தேவ் சாஹிப் பாவம். உண்மையிலேயே பொறி கலங்கியிருக்கும்.

“கிஷண் சந்த் பலோடி சார்” என்று விரைப்பாக சல்யூட் அடித்தான்.

“இதெல்லாம் இங்கே வேண்டாம். செக்யூரிடியிலும் போலீஸ் ஐடி காட்ட வேண்டாம். ஆதார் கார்டு இருக்கா என்று கேட்டு அவனுக்கு அதைக் காண்பித்துப்   பாஸ் போட வைத்து அழைத்துச் சென்றான் ருக்மாங்கதன். வழியில் எதுவும் பேசாமல் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு வந்தான் பலோடி. கண்கள் லேசாகக் கலங்கியிருந்தன. அழுதிருக்க மாட்டான். முந்தைய இரவு சற்று அவன்  அதிகமாகக் குடித்திருக்கலாம்.

மாங்கேலால் இன்னும் வந்திருக்கவில்லை.  டெபுடி செகரட்டரி அறையின் வாசலில் அவனை நிற்க வைத்து விட்டு உள்ளே சென்று, “சார், அந்தக்  கான்ஸ்டபிள் வெளியில் இருக்கிறான்” என்றான். அவர், இன்டர்னல் போனில் எதையோ பேசி விட்டு நான் முன்னால் போகிறேன். நான் தேவ் சாஹிப் அறைக்கு உள்ளே போனதும் அவனை அழைத்து வா” என்று சொல்லி விட்டுக் கிளம்பினார். டெபுடி செகரட்டரி அறையிலிருந்து வெளியில் வந்தபோது கான்ஸ்டபிள் பலோடி அவரைப் பார்த்துப் பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு, இரு கைகளையும் கூப்பி,  “ஜெய்ஹிந்த் மாய்பாப்” என்றான். அவர் அவனைக் கண்டு கொள்ளாமல் தேவ் சாஹிப் அறையை நோக்கி விரைந்தார்.

சிறிது நேரம் கழித்து மொபைலில் ருக்மாங்கதனிடம்,  அவனை உள்ளே அழைத்துக் கொண்டு வருமாறு சொன்னார்.  தேவ் சாஹிப் தன் இருக்கையில் இருந்து எழுந்து சோபாவில் உட்காந்திருந்தார்.  இவனுடைய பாஸ்  டீப்பாய் பக்கத்திலிருந்து குஷன் வைத்த நாற்காலியில் அமர்ந்திருந்தார்.  அறைக்குள் நுழைந்ததும், பலோடி திடீரென்று வேரற்ற மரம் போல தடாரென்று சரிந்து தேவ் சாஹிப் காலயிடில் சரிந்தான்.

“ஆப்கே பச்சே ஹைன் மாய் பாப்.  தெரியாமல் செய்து விட்டேன்.  ஏதோ டென்ஷனில் இருந்தேன் ஜனாப். வேண்டுமென்றால் உங்கள் ஷூவைக் கழற்றி என் முகத்திலேயே அடியுங்கள். வாங்கிக் கொள்கிறேன். பிள்ளை குட்டிக்காரன் ஹுஜூர். உங்க பிள்ளையாக நினைத்து என்னை மன்னிக்கணும் ஜனாப்” என்று  தேவ் சாஹிப் காலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.

அவர் சலனமற்று இருந்தார்.   “டீக் ஹை. எழுந்திரு” என்று சின்னக்குரலில் சொன்னார். ருக்மாங்கதன் அசைவற்று நின்றிருந்தான்.

டெபுடி செகரட்டரி சாஹிப் சற்று ஆவேசமானார். “நீ போலீஸ்காரன்னா யாரை வேணும்னாலும் அடிப்பியா? ஒரு தராதரம் வேண்டாம்?  எங்கேயும் கைநீட்டுவாயா?  நீ உன்னோட பவரைக் காண்பித்தாய். இப்போது நாங்கள் எங்களுடைய பவரைக் காண்பிக்கலாமா? உன்னால் தாங்க முடியுமா? என்று சத்தம் போட்டார்.

பலோடி, டெபுடி செகரட்டரி சாஹிப் எதிரில் நின்று இருகைகளையும் கூப்பி, கூழைக்கும்பிடு போடும் பாவனையில் வில் போல வளைந்து நின்றான். “சாஹிப், எனக்கு ஏதாவது தண்டனை கிடைத்தால் என் குடும்பமே தற்கொலை செய்து கொள்ளும் ஜனாப். மூத்த பெண்ணுக்கு நான்கு மாதத்தில் கல்யாணம். சஸ்பெண்ட் அல்லது டிஸ்மிஸ் ஆகி நின்றால் பெண்ணுடைய கல்யாணம் நின்று போய்விடும் சாஹிப். சஸ்பெண்ட் ஆன ஆளுக்கு எங்க ஜாதியில் மரியாதை கிடையாது சாஹிப்.  என் மகளை உங்க மகளாக நினைத்து ரட்சிக்கணும் ஜனாப்” என்று அழுகின்ற குரலில் பேசினான்.

தேவ் சாஹிப் ருக்மாங்கதனைப் பார்த்து அவனை வெளியில் அழைத்துச் செல்லுமாறு சைகை காட்டினார்.  டெபுடி செகரட்டரி சாஹிப்பையும் வெளியில் போகலாம் என்பது போலக் கைகாட்டித் தன் இருக்கைக்குத் திரும்பினார். இருக்கையருகில் சென்றதும், “ரூக், அவனை வெளியில் நிற்க வைத்து விட்டு ஒரு நிமிஷம் உள்ளே வந்து விட்டுப் போ” என்றார்.

ருக்மாங்கதன் திரும்பி வந்ததும், தேவ் சாஹிப் முகம் சற்று வெளிறியிருந்த மாதிரி இருந்தது.    இவனுக்கெல்லாம் விஷயம் தெரிந்திருக்கிறதே என்ற பதட்டமும் எரிச்சலும் அவருடைய முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.

“போலீஸ் டெபுடி கமிஷனர் கிட்டே நீயே பேசு. தண்டனையெல்லாம் எதுவும் வேணாம். பெண்ணுக்குக் கல்யாணம் இருக்கிறதென்று சொல்கிறான். மன்னிப்பும் கேட்டு விட்டான். பெரிது படுத்த வேண்டாம். போய்த் தொலையட்டும்”. என்றார்.

“ஆகட்டும் சார்” என்று சொல்லிவிட்டுக் கதவருகில் போனவனிடம் “ஒரு நிமிஷம் ரூக்மாங். மேம் சாஹிப் நிச்சயம் இதுபற்றி உன்னைக் கேட்பாள். அவளிடம் அவனை சஸ்பெண்ட் செய்து விட்டதாகச் சொல்லிவிடு. அவள் கண்ணில் இவன் எங்காவது படவேண்டாம். டெபுடி கமிஷனரிடம் நான் சொன்னேன் என்று சொல்லி இவனை ஷாலிமார் பார்க், பீதம்புரா என்று எங்காவது தூரமாகத் தூக்கிப் போடச் சொல்” என்றார்.

செக்யூரிட்டியில் பலோடியின் என்ட்ரி பாஸை ஒப்படைப்பதற்காக பலோடியுடன் கீழிறங்கிச் சென்றான் ருக்மாங்கதன்.  ஒப்படைத்து விட்டு பதிவேட்டில் கையெழுத்துப்போட்டு விட்டு அவனை வழியனுப்புவது போல வெளியில் வந்தான் ருக்மாங்கதன்.

ஒரு நிமிஷம் நின்று அவனிடம், “எதற்காக இப்படி அவசரப்படவேண்டும்? எதற்கு இப்படி அவமானப்படவேண்டும்? கொஞ்சம் கட்டுப்பாடாக இருந்திருக்கலாமே. இந்த மாதிரி காலில் விழுகிற அவஸ்தையெல்லாம் பட்டிருக்க வேண்டாமே” என்றான் ருக்மாங்கதன்.

“சாஹிப்…  தவறாக நினைக்க வேண்டாம்… நீங்க மதராசியாக இருக்கீங்க. நிச்சயம் காண்பித்துக் கொடுக்க மாட்டீங்க… ஒரு விஷயம் சொன்னால் என்னை நிச்சயம் தவறாக நினைக்க க் கூடாது” என்றான்.

“சாஹிப்… ஒரு விஷயம் நீங்க நினைச்சுப் பாருங்க.  நான் வேலை செய்யற இடத்துலே  நீங்க எப்போதாவது அரைமணி நேரம் மட்டும் நில்லுங்க சாஹிப். நான் சொல்றது புரியும்.  அந்த படே சாஹிப்பும் அவருடைய மேம் சாஹிபும்  என்னை ஏதோ என்னை சின்ன கான்ஸ்டபிள் என்று நினைத்து ஏதேதோ வாய்க்கு வந்தபடி பேசினார்கள். அப்போ நான் என் அதிகாரத்தைக் காண்பிக்க வேண்டியிருந்தது. இப்போ உங்க சாஹிப்மார்கள் தங்கள் அதிகாரத்தைக் காண்பித்திருக்கிறார்கள். அதுக்கு அடிபணியலைன்னா என்னுடைய குடும்பம் கஷ்டப்படும்.  இந்த ஆபீசரை ஓப்பன் பஜார்லே பூரா ஜனங்க முன்னாலே கன்னத்தில் அறைந்திருக்கிறேன்.  ஆனால் உங்க ரெண்டு பேர் முன்னாடி மட்டும்  மூடின அறையிலே   காலில் விழுந்து மன்னிப்பு கேட்டிருக்கேன். அதையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்க சாஹிப். ஏதாவது இன்னொரு நாளைக்கு யாரோட கன்னமோ, யாரோட காலோ.  இதுதான் என்னுடைய பிழைப்பு சாஹிப். ஆப்கோ பஹூத் பஹூத் ஷூக்ரியா. ஜெய்ஹிந்த் சாஹிப்” என்று சொல்லி  விரைப்பாக சல்யூட் அடித்து விட்டு வேகமாகக் கிளம்பினான்.

ருக்மாங்கதன், பிறகு நேராக டெபுடி கமிஷனரை சந்தித்து தேவ் சாஹிப் பிறப்பித்த வாய்வழி உத்தரவைத் தெரிவித்து விட்டு  அலுவலகம் திரும்பினான். பாஸ் அறைக்குச் சென்று நடந்தவற்றைச் சொன்னான். டெபுடி செகரட்டரியும், “அப்பாடா ஒருவழியாக முடிந்தது. ரொம்ப நன்றி ரூக். மாங்கேலால் இல்லாத நேரத்திலும் திறமையாக சமாளித்திருக்கிறாய். அருமை” என்றார்.

சிறிது நேர அமைதிக்குப் பிறகு ருக்மாங்கதன், “படே சாஹிப், விஷயம் இன்னும் முடியலை. இப்போது உங்களுக்கு ஒரு அவசரமான வேலை ஒன்று வந்திருக்கிறது. யூடியூப் நிர்வாகத்துக்கிட்டே பேசி ஒரு வீடியோவை உடனடியாக டெலீட் பண்ண வைக்கணும்”.

பென்னேசன்

author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *