This entry is part 9 of 9 in the series 29 ஜூன் 2025

  -ஜெயானந்தன். 

ஒப்பற்ற தமிழின் படைப்பாக பார்க்கப்படும் மோகமுள் நாவல் வழியாக, நம் இதயங்களில் வந்தமர்ந்த 

எழுத்து சிற்பி தி.ஜானகி ராமன். 

இவரின் படிப்பு முடிந்தவுடன், வேலை தேடுகின்றார். கடைசியாக, அவர் அகில இந்திய வானொலியில் பணியில் அமர்கின்றார். 

எல்லோரையும் போலவே, அவரது திருமணம், குடும்பம், குழந்தைகள், 

தினம்தினம் நாம் எதிர்கொள்ளும், வாழ்க்கைப்பிரச்சனைகள். 

டெல்லிவாழ்க்கை அங்குள்ள பிரச்சனைகள் ஏராளம். இது எல்லோருக்குமான வாழ்க்கை. 

தீடீரென எங்கிருந்து குதித்தார்கள் பாபுவும்-யமுனாவும். 

எங்கிருந்து குதித்தது காவிரியும்-சங்கீதமும். 

எங்கிருந்து குதித்தது, 

காம ரசனையும், பிறண்ட வாழ்வின் எண்ணங்களும். 

எங்கிருந்து கலந்தது 

கடவுளும் கோயிலும் அம்பாளும்,

காம வஸ்துக்களும். 

மேலே சொன்ன அத்தனை உருப்படிகளும், மோகமுள்ளின் கதாபாத்திரங்கள். 

இது தி.ஜா,.வின் இதயத்தில் ஆழமாக பதிந்த அவரது மனச்சித்திரங்கள். 

அவரது கும்பகோண வாழ்க்கையின் 

ரேகைகள் அழியாத கோலங்களாய், 

அவரது ஆழ்மனதில் பதிந்த எண்ணங்கள்தான், மோகமுள்ளாய் அவரது எண்ணங்களில் உதித்து, 

தஞ்சாவூர் தமிழில் அற்புதமான நாவலாய் பிறந்தது. 

மகாமக குளத்தில் குளிந்தெழுந்த அம்மணிகள்,  தி.ஜா. வின் டெலஸ்கோப் கண்ணில் படாமல் போவாரோ!.

யாரும் சண்டைக்கு வராதீர். 

இலக்கிய ஜாம்புவான்கள் அப்படி பார்த்தால்தான்,  நல்ல இலக்கியம் கிடைக்கும். நல்ல இசையை ரசிப்பவர். அழகை ஆராதனை செய்பவர். 

அட கோவிந்தா, கோபாலா, 

மார்கழி வந்துவிட்டாலே, கண்ணன்களின் கண்கள் விரிந்துவிடுமே. அதுவும் எழுத்தாளன் கண்கள் ஃபவர்புல் ஆனது. 

அவரது மொத்த எழுத்தையும் ஆராய்ந்தால், அவரது தஞ்சாவூர்-கும்பகோண சுற்றுவட்டார வாழ்வின் சங்கீதங்களே கேட்கும். 

இவரது ஆழ்மனதில் அவைகள் தான் பதிந்துவிட்டது. 

ஒரு மனிதனின் ஆழ்மனதில் பதிந்த எண்ணங்கள் மீண்டும் அவனுள்ளே தீயாக எரிந்துக்கொண்டுதான் இருக்குமென சிக்மெண்ட் பிராய்டு கூறுகின்றார். 

ஒரு வேளை, தி.ஜா..வை, ஃஇப்னாடிசம் செய்து பார்த்திருந்தால், அவரது ஆழ்மனம் சொல்லும் ரகசியங்கள் தெரியும்.

டெல்லிவாழ்க்கை, அவரின் மனதில் பதிய வில்லை. அங்கு வெறும் மெக்கானிக்கலாக, அவரது வாழ்க்கை ஓடியது. அங்கே காவிரி ஓடவில்லை. ஆட்டோவும் காரும்தான் ஓடியது .அந்த வாழ்க்கை அவரது ஆழ்மனதில் பதியவில்லை. 

பாபு-யமுனா டெல்லியிலும் இருக்கலாம். அங்கும் காமரசம் ஓடுகின்ற வாழ்வை எத்தனையோ நபர்கள் வாழ்ந்திருக்கலாம். 

ஆசை, அபிலாசை பிடித்த மனங்கள் எங்கும் சுற்றிக்கொண்டுதான் இருக்கும். 

அங்கும் இந்துஸ்தானி இசைக்கடல் இருக்கலாம். ஆனால் அவையெல்லாம் தி.ஜா.,வின் காதில் கேட்க வில்லையே. 

நாமே சில நேரங்களில், அழகின் கடாச்சத்தில் அசந்து போவது சகஜம். 

மனக்குதிரையை லகான் போட்டு, கடிவாளத்தை கையில் வைத்துக்கொண்டு ஓடும், குடும்பஸ்து குதிரைகள் நாம். ஆனாலும் அக்கம்பக்கம் பார்த்து அசடு வழியும் நேரத்தில், மனைவி என்ற அம்பாள் சூலாயதத்தை எடுத்து காண்பித்து விடுகின்றாள். பத்ரகாளி பிரசன்னத்தை பார்த்து மாமாக்கள் அடக்கி வாசிப்பர். 

இது ஆண்-பெண் இருபாலருக்கும் பொருந்தும். 

இதைதான் வத்ஸாயனரும் கூறுகின்றார். 

தி.ஜானகிராமனும் எழுதுகின்றார். 

ஆனால் அப்படிப்பட்ட நாவலை எழுத, ஒரு மனோ தைரியம் வேண்டும். 

அது தி.ஜா.,வுக்கு கிடைத்தது.

மோகமுள் பிறந்தது. 

தி.ஜானகிராமன் மீண்டும் பிறந்துவிட்டார். 

பிறந்த நாள் வாழ்த்துக்கள் 

தி.ஜானகிராமன் அவர்களே!!!.

ஜெயானந்தன். 

Series Navigationசொல்ல வேண்டிய சில  திரைப்படம், தொலைக்காட்சி சீரியல், சமூகம்