Posted in

அலங்காரத்தம்மாள்

This entry is part 5 of 5 in the series 30 நவம்பர் 2025

தி.ஜா.வின், அலங்காரத்தம்மாள், 

இந்த லெளகீக வாழ்வின் தொடர்ச்சி. 

காயமடைந்த பெண்ணாக காட்டப்பட்டாலும், ஒரு உயர்வான எண்ணங்களின் பவதாரணி. 

கையில் கமண்டலத்தோடு, காட்டில் அமர்ந்து,மூச்சு பிடித்து, தியானித்து 

இந்த உலகின் உறவிலிருந்து பிரிந்துவிட நினைப்பது ஒருவித, சுய- லாப எண்ணம் என்று தி.ஜா கருதுகின்றார். 

இந்த வாழ்வின் கர்ம பந்தத்திலிருந்து விடுபடல் என்பது, உணர்வும் அதனையொற்றிய கர்மாவும், இந்த உயிர் உடலை விட்டு பிரிந்து, உடல் ஜடமான பின்புதான் நடக்கும். அது வரை நீளும் வாழ்வில், மனிதன் , உணர்ச்சிகளின் அடிமைதான். 

நிறைய வேடங்களுக்கான உடல் இது. 

ஒவ்வொரு உணர்விலும் ஒவ்வொரு ரூபம். ஒவ்வொரு நாமம். 

அலங்காரத்தம்மாள் உடலிலும், எண்ணங்களில் ஆயிரம் பெண்களின் உணர்ச்சி அலைகள் புரண்டோடுகின்றன. 

கடல் ஒன்றுதான். 

நதிகள் ஏராளம். 

கடலில் தான் அலைகள். 

நதி அமைதியாக ஓடுகின்றது. 

அலங்காரத்தம்மாள் தனி மனுஷியாக பார்த்தால்-நதி. சர்வ கர்ம பந்தங்களை செய்துக்கொண்டு, ஒருவனுடைய மனைவியாக வாழ்கின்றாள். 

காம உணர்ச்சிகள் பொங்கும் போது, 

அவள்-காமக்கடல். 

காம லோகினி. 

இதுவம் ஒரு அவதாரம். 

காம அலைகளை அடக்கியாள தெரிந்தவன் காமன்.

அதற்கு ஒருவன் வருகின்றான். 

அவனும் மனிதனே!

நித்ய ஜீவன காட்சிகளை நடத்துபவன் 

அவளுடைய தாலி கட்டிய புருஷன். 

வேதங்களை அறிந்தவன். 

பெண்ணின் உணர்வுகளை அறியாதவன். 

பெண்ணின் உணர்வுகள் ,அடங்கா குதிரையாக ஓடும்போது, அதனை அடக்கியாளத்தான், புருஷன் வருகின்றான். அந்த குதிரையில், குடும்பத்தை ஏற்றுகின்றான். 

பின் அது ரதமாக மாறும். 

லாகனை பிடித்தக்கொண்டு  ,வாழ்வை அறவழியில் செலுத்த, புருஷ லட்சணம் வேண்டும். 

அது, தாலிகட்டிய, அலங்காரத்தமமாள்  கணவனிடம் காணவில்ல. 

 யார் குற்றம்? என்ற கேள்வி வருகின்றது. 

புருஷன் ஏற்றுக்கொண்ட, அலங்காரத்தம்மாள் மனைவி. 

மனைவியை அவன் ஆண்டான ?

அவள் உடலை தீண்ட நாகம் வருகின்றது. 

தெரிந்தே விஷத்தோடு இணைகின்றாள். 

விஷத் தீயில் ஆடுகின்றாள். 

தீச்சட்டியோடு உலா வருகினறாள். 

கர்ப்ப பையையும் நிரப்புகின்றாள். 

சபலம் தீயால் அழிக்கப்படுகின்றது.

சாந்தி அடைகின்றாள். 

வேத அறிந்த பிள்ளையின் வருகையில், அவன் காலடியில் அவளது பாபத்தை சமர்க்கின்றாள். 

பெற்ற பிள்ளையிடமே, பாவ மன்னிப்பு கோருகின்றாள். 

சீதை, அக்னியிடம் சரணடையும் காட்சி இது.

சீதையின் கற்பை, தீயால் எரிக்க முடியவில்லை. 

 ஒருவன் தன்னை முழுமையாக உணரும் போது, தத்துவாரத்த உலகில் சஞ்சாரம் செய்ய வருகின்றாள். 

வேதங்களை கற்றவனே, ஒருத்தியின் தீண்டுதலால் மனம் சஞ்சலம் அடைகின்றான். 

உன் தாய் தப்பு செய்கின்றாள். 

அவள் உத்தமியா, பத்தினியா என்று, 

ஒரு இளம் விதவையானவள், 

வேதம் படித்த அப்புவிடம் கேட்கின்றாள். 

அவன் தடுமாறுகின்றான்.

அம்மா என்ற நெடிய உருவம், 

நொடிப்பொழுதில் கரைகின்றது.

அவன் மனமும் கரைகின்றது. 

அப்புவின் நெஞ்சில்,இளம் விதவை படர்கின்றாள். 

இங்கு, தி.ஜாவின், காந்திய எண்ணமும் வெளிவருகின்றது. 

கணவர்கள், போரில் இறந்தபோய் ,

இளம் விதவைகளாக நிற்கும் பெண்களை, மணந்துக்கொள்ள, இளைஞர்கள் முன் வரவண்டும் என,

மகாத்மா காந்தி வேண்டுகோள் வைக்கின்றார். 

காந்தியும் அறம்,அகிம்சை, உண்மை, 

பகவத்கீதை எல்லாம் அறிந்தவர். 

வாழ்கையை அறத்தின் வழியே நடத்தவேண்டும் என, சத்திய சோதனை செய்தவர். 

தி.ஜா..காட்டும் அப்புவின் வாழ்வும் அதுதான். 

பாப புண்ணிய கணக்குகளை போடுகின்றாள்.

கதி மோட்சத்திற்கு வழி தேடுகின்றாள். 

கடைசியில் சரணாகதி, அலங்காரத்தம்மாள். 

அந்த சரணாகதியை, அலங்காரத்தம்மாள், தன் புருஷனுக்கு பிறந்த மகன் மூலமாகவும், அவளுடைய 

பாபங்களுக்கான பிராயச்சித்தமாக, தன் சுய மகனை வேதங்கள் கற்று தேர்ந்தவன் மூலமாகவும், அவள் கடைசியில், பாவ மன்னிப்பு கேட்கின்றாள். 

இதுதான், தி.ஜா , வின் , தத்துவாரத்த 

எண்ணம். அவர் படித்த, அறிந்த வேத 

அறிவை, கலாபூர்வமாக காட்டத்தான், 

அலங்காரத்தம்மாளை படைக்கின்றார். 

கடவுளுக்கு முன் வேதங்களை பாடுவது மட்டும் வேதத்தின் நோக்கமல்ல. 

இந்த லெளகீக வாழ்வை, அறத்தோடு வாழ, வழிக்காட்ட செய்வதும் வேதம். 

நாம் எல்லோருமே, ஏதோ ஒரு வகையில் இந்த லெளகீக வாழ்வில், அறத்தினை மீறுகின்றோம். அறிந்தும் செய்கின்றோம். அறியாமலும் செய்கின்றோம். ஆனால் யாரும் ஒத்துக்கொள்வதில்லை. 

ஆனால், அலங்காரத்தம்மாள் ஒத்துக்கொள்கின்றாள். 

கங்கையை நோக்கி ஓடுகின்றாள். 

கங்கையில் கரைந்து புனித மாகின்றாள். 

தி.ஜா..கங்காதரனாக காட்சியளிக்கின்றார். 

  -ஜெயானந்தன் .

Series Navigationகதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடல், சுஜாதா செல்வராஜ் எழுதிய “சிற்பம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *