This entry is part 3 of 13 in the series 18 ஜனவரி 2026

நந்தி பக்கத்தில்தான் உட்கார்ந்திருந்தேன் அசைவற்ற சிலை போல .

வரும் போகும் பக்தர்கள், 

நந்திக்காதில் ஏதேதோ சொன்னார்கள். 

நந்தியின் கன்னத்தைத்தடவி ஒரு மூதாட்டி முத்தமிட்டு சென்றாள். 

இரண்டு காதுகளுக்கு இடையே, சிவனை பார்த்து, கூடைகூடையாக சொன்னார்கள் சிவ பக்தர்கள். 

நந்தி பகவான் அப்படியேதான் இருந்தார். 

எங்கிருந்தோ வந்த குழந்தை, 

என் காதிலும் ஒன்று சொன்னது,

“நான் நந்தியின் பின்னால் ஒளிந்துக்கொள்கின்றேன். யார் வந்து கேட்டாலும் சொல்லாதே “.

நந்தி பகவான் என்னை பார்த்தார்.

நானும் அவரை பார்த்தேன். 

ஏதும் பேசிக்கொள்ளவில்லை.

மகாலட்சுமி சன்னிதியில் 

கூட்டம் அலைமோதியது. 

பட்டாச்சாரி தட்டில் 

ஐம்பதும், நூறுமாய் விழுந்தது. 

அடுத்த மாதம், வீட்டுக்கடன் தவணைக்கட்ட, பட்டாச்சாரி நிம்மதியடைந்தார். 

குங்குமத்தையும், துளசியையும் 

தங்கப்பல் தெரிய முகமலர்ந்து 

அள்ளிஅள்ளி கொடுத்தார்

கோவிந்த பட்டாச்சாரி. 

சிவன் கோயில் சந்நிதியில் 

கூட்டம் அதிகமில்லை. 

 நெற்றியில் மூன்று பட்டைப்போட்ட

காவிக்கட்டிய கபோதிகள்தான் 

சிவனை வேண்டி காத்திருந்தனர்.

ஐயர் தட்டு நிரம்பவில்லை. 

அடுத்த மாத, டூவீலர் தவணைக்கு 

நந்தியை வேண்டி நின்றார்

கண் கலங்கிய சதாசிவ ஐயர் .

நந்தியும், நானும் 

அசையாமல் அமர்ந்திருந்தோம். 

           இரா.ஜெயானந்தன். 

Series Navigationபோராளிட்ரம்பின் புத்தாண்டு பரிசு 2026…