This entry is part 7 of 13 in the series 18 ஜனவரி 2026

அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர்

கிசு கிசு கோ பதாயேங்கே ஜூடாயி கே சபாபு ஹம்

எத்தனை பேரிடம் எனது துக்கத்தைச் சொல்வேன்

நீ என் மீது பைத்தியம் என்றால் இந்த உலகத்திற்காக வா

என்னை வேதனைப் படுத்துவதற்காகவே இருக்கட்டும் அன்பே

இல்லை என்னை சித்திரவதைப் படுத்துவதாகவே இருக்கட்டும் வா

என்னை வேதனைப் படுத்துவதற்காகவே இருக்கட்டும் அன்பே

இல்லை என்னைக் கைவிட்டு என் இதயத்தைக் கிழிப்பதற்காகவே இருக்கட்டும் வா

என்னை வேதனைப் படுத்துவதற்காகவே இருக்கட்டும் அன்பே

  • உருது கஜல் கவிஞர் அஹமத் பராஸ்

நபீல், காபூல் மாகாணம், ஆப்கானிஸ்தான் 

காபூலில் இருந்த அந்த அரசாங்க ஆஸ்பத்திரியில், நானும் எனது மூன்று குழந்தைகளும் நின்று கொண்டு இருந்தோம். ஒரு மாதக் கவலையில், எனக்கு தாடி வளர்ந்து இருந்தது.

இந்த அரசாங்க ஆஸ்பத்திரிக்கு வருவது ஒன்றும் எனக்கு புதிதான விஷயம் அல்ல. முதலில் ரபி பிறந்தான். இரண்டு வருடம் கழித்து சின்னவன் பாரூக் பிறந்தான்.

நானும் குல்பாரியும், இரண்டோடு நிறுத்தி விடலாம் என்றுதான் இருந்தோம். ஆனால், ஒன்பது வருடங்கள் ஓடிய பிறகு, ஒரு பெண் குழந்தை பெற்றுக்கொள்ள, நான்தான் நை நை என்று குல்பாரியை அரித்துக்கொண்டு இருந்தேன். அதன் பிறகு பிறந்தவள்தான் பர்கானா.

பெரியவன் ரபியும் எனது கைகளை இறுக்கப் பிடித்துக் கொண்டே, கவலையுடன் நின்று கொண்டு இருந்தான். சின்னவன் பாரூக் இங்கும் அங்குமாக ஓடியாடி விளையாடிக்கொண்டு இருந்தான்

பக்கத்து வீட்டு மாமிதான், எங்களோடு வந்திருந்தாள். அவள் கையில், ஆறு மாதக் கைக்குழந்தையான பர்கானா அழுது கொண்டே இருந்தாள். பாவம் பாலுக்காக அம்மாவைத் தேடுகிறாள் போலும்.

மாமி என் பக்கம் வந்து, எனது காதில் மெல்லப் பேசினாள். “குல்பாரி உடல் நிலைமை பத்தி, இப்ப என்னதான் சொல்றாங்க தம்பி? பாவம்.. இப்படி ஒரு கொடுமையா குல்பாரிக்கு நடக்கணும்? நல்ல மனசுக்காரி அவ..” என்று வேதனையுடன் பேசினாள் மாமி.

அவள் பேசப் பேச, என்னால் கண்ணீர் விடாமல் இருக்க விட முடியவில்லை. மாமியே தொடர்ந்து பேசினாள்.

“ஹ்ம்ம் முன்னமாவது இந்த ஆஸ்பத்திரிலே பொம்பளை டாக்டருங்க நிறைய இருந்தாங்க. பொம்பளை நர்சுங்களும் நிறைய இருந்தாங்க. ஆனா, இப்பத்தான், அரசாங்கத்திலே, கொஞ்ச வருசமா, பொம்பளைகள படிக்கவே விட மாட்டேங்கறானே..” என்று மாமி அங்கலாய்த்தாள்.

நான் மௌனமான கண்ணீருடன் அவள் சொல்வதை ஆமோதித்தேன். “மாமி சொல்வது உண்மைதான். பெண்களைப் படிக்கவே விட மாட்டேன் என்று அரசாங்கம் பிடிவாதம் பிடித்தால், எங்கிருந்து பொம்பளை டாக்டருங்களும் பொம்பளை நர்சுங்களும் கிடைப்பாங்க? அப்படியே கிடைச்சாலும், பொம்பளை டாக்டருங்க, நர்சுங்க எல்லாம், தைரியமா ஆஸ்பத்திரிக்கு வந்து, எப்படி வேலை பார்ப்பாங்க?

மாமி இன்னும் பேசினாள். “பிரசவம் பாக்கவே, பொம்பளை டாக்டருங்க, இங்கே இல்லே.. எல்லாம் ஆம்பளை நர்சுங்கதான்… இந்த நிலைமைலே குல்பாரிக்கு வந்து இருப்பதோ புற்றுநோய். குல்பாரிக்கு இங்க என்ன மருத்துவம் பாத்துக் கிழிச்சுடப் போறாங்க?” மாமி பேசிக்கொண்டே போனாள்.

வெளியே வந்த ஒரு ஆண் நர்ஸ், “யாருப்பா நபீல்” என்று கேட்டவுடன், நான் வேகமாக உள்ளே போனேன்.

குல்பாரி ஒரு நாற்காலியில் உடகார்ந்து இருந்தாள். அவளால் என்னைப் பார்த்து பேசக்கூட முடியவில்லை. நான் கவலையுடன் நின்று கொண்டு இருந்தேன்.

டாக்டர் பேசினார். “உங்கள் மனைவிக்கு வந்து இருக்கற கருப்பை புற்றுநோய், ரொம்ப முத்துன நிலைல இருக்கு. இதுக்கு மேல, இந்த ஆஸ்பத்திரிலே அவங்களுக்கு சிகிச்சை அளிக்க எந்த வசதியும் இல்லை” என்ற போது, நான் திகைத்துப் போனேன்.

“டாக்டர் எப்படியாவது அவளைப் பிழைக்க வைங்க டாக்டர்” என்று கதறினேன்.

ஆனால் டாக்டர் என் கதறலை எல்லாம் கண்டு கொள்ளவேயில்லை. தான் சொல்ல வந்ததை எல்லாம் அமைதியாக, ஆனால் தெளிவாகப் பேசினார்.

“நபீல்… ரொம்ப முத்திப்போன புற்றுநோய். உங்க மனைவி ரொம்ப நாள் தாங்க மாட்டாங்க… இதுக்குன்னு நிறைய தனியார் மருத்துவ மனைகள் இருக்கு.. பணத்தைப் பாக்காம அங்கே போய்ப் பாத்தீங்கன்னா, ரொம்ப நாள் வாழ்வாங்க.. ஏன் இந்த நோயே இல்லாமப் போயி பொழைச்சுக்கக் கூட வாய்ப்பு இருக்கு.. அப்புறம் ஒரு விசயம்.. ” என்று அவர் பேச்சை நிறுத்தினார்.

“உங்க மனைவிக்கு கொஞ்சம் ரெஸ்ட் குடுங்க.. அவங்க வேலை எதுவும் செய்யாது பாத்துக்கங்க. ஓய்வுதான் அவங்க குணம் அடைய நல்ல வாய்ப்பைக் கொடுக்கும்… செய்வீங்களா?” என்று டாக்டர் வினவியபோது, நான் பலமாகத் தலையாட்டினேன்.

கண்ணைக் கட்டி காட்டில் விட்ட நிலையோடு, நான், ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்தேன்

குல்பாரி, காபூல் மாகாணம், ஆப்கானிஸ்தான் 

இப்போதெல்லாம், என்னால் சமையல் வேலைகள் எதுவும் செய்ய முடிவதில்லை. அப்படியே எப்போதாவது நான் சமையல் வேலை செய்ய முயற்சி செய்தாலும், நபீல், என்னை சமையல் வேலைகள் செய்ய அனுமதிப்பது இல்லை.

என்னால் சமையல் செய்ய முடியாத போது, நாங்கள் நடத்தும் சாப்பாட்டுக் கடைக்கு, யார் சமையல் செய்து தருவார்? நபீலுக்கு சுட்டுப் போட்டாலும், சமையல் செய்ய வராது. அவனுக்கு அந்த அளவிற்கு பொறுமையும் இல்லை.

யாரோ ஒரு சமையல்காரரைப் பிடித்து, சமையல் செய்யச்சொல்லி, கடையை இப்போது நடத்திக்கொண்டு இருக்கிறான். ஆனால் நான் செய்து தருகிற சுவையான சமையல் போல, அந்த சமையல் இல்லாமல் போனபோது, கடையில் கூட்டம் குறைய ஆரம்பித்து விட்டது. 

ஆனாலும், நபீல், இன்னும் விடாமல் கடையை நடத்திக்கொண்டுதான் இருக்கிறான். அதற்கு அவன் சொன்ன ஒரே காரணம், என்னை அழவைத்து விட்டது. 

“இந்தக் கடை நம்ம வீட்டுக்குப் பக்கத்துலேயே இருக்குடி குல்பாரி.. வருமானம் கொறைஞ்சா என்ன.. உன்னை, எப்போதும் நான் நல்லா  கவனிச்சுக்க முடியுது இல்லையா? அது போதுமடி குல்பாரி” என்று நபீல், தன்னம்பிக்கையுடன் பேசினான். என்னால் அவன் முடிவை மாற்ற முடியவில்லை.

அரசாங்க ஆஸ்பத்திரியில் இருந்து வந்த பிறகு, என்னை தூரத்தில் இருக்கும் ஒரு தனியார் புற்றுநோய் மருத்துவமனைக்குத்தான், எப்போதும் நபீல் அழைத்துச் செல்கிறான்.

காசு தண்ணியாகக் கரைந்ததுதான் மிச்சம். அடிக்கடி எனக்குக் கொடுக்கப்படும் கதிர்வீச்சால், எனக்குக் கொஞ்சம் நோய் குறைந்தது போல இருக்கும். ஆனால் அதற்காக நபீல் செய்யும் செலவைப் பார்த்து, எனக்கு என் வாழ்க்கையே வெறுத்துப் போகும்.

குடும்பத்தின் நல்வாழ்விற்காக சேர்த்து வைத்த பணத்தை, எனது ஒருத்திக்காக மட்டும், எவ்வளவுதான் செலவழிப்பான் நபீல்?

அதற்காக, நான் அவனோடு போட்ட சண்டைகள் கொஞ்ச நஞ்சமல்ல. நிறையச் சண்டைகளுக்குப் பிறகு, இப்போதுதான், நபீல், நான் சொல்வதற்கு சம்மதம் தெரிவித்து இருக்கிறான்.

நாங்கள் இப்போது, அருகில் இருக்கும் அரசாங்கம் நடத்தும் புற்றுநோய் மருத்தவமனைக்குத்தான் போய்க்கொண்டு இருக்கிறோம்.

காபூல் நகரில், தனியார் மருத்துமனைக்குப் போன பின்தான் தெரிந்தது. காபூல் அரசாங்க ஆசுபத்திரியில், வேலை பார்க்க, டாக்டர்களும், நர்சுகளும் மட்டுமே குறைவாக இல்லை. புற்றுநோயைக் குறைக்கும் மருத்துவ உபகரணங்களும் அங்கே கொஞ்சம்தான் இருந்தது.

அதுவும் பழைய, இற்றுப்போன மருத்துவ உபகரணங்கள். அந்த இருக்கும் உபகரணங்களை வைத்து காலத்தை ஓட்டும் அரசாங்க டாக்டர்கள்.

காபூலில் இருக்கும் புற்றுநோய் ஆசுபத்திரிகள் வேறு ரொம்பக் குறைவு. அதைத் தேடி வருகிற, ஆப்கானிஸ்தானின் பல்வேறு மாகாணங்களில் இருந்து வரும் புற்றுநோயாளிகள்.

இந்த பெரிய புற்றுநோயாளிகள் கூட்டத்திற்கு இடையே, நான் நீண்ட வரிசையில் நின்று, சிகிச்சை முடித்து வீடு திரும்பவேண்டிய நிலை.

எனக்கு கொஞ்சம் கொஞ்சமாய் நோய் முற்றிக்கொண்டே போனது. ஆனால், நான் என் நோய் முற்றல் குறித்து, நபீலிடம் சொல்வதை, முற்றிலும் நிறுத்தினேன்.

பக்கத்து வீட்டு மாமி, இப்போது இந்தத் தெருவில் இல்லை. பத்து தெரு தள்ளி இருந்த, அவள் மகனுக்கு குழந்தை பிறந்து இருந்ததால், அங்கே போய் விட்டாள். எனக்குத்தான், எங்கள் மகள் பர்கானாவைப் பார்த்துக் கொள்வது, சிரமமாக இருந்தது.

அப்போதுதான், கரீம் அண்ணா வந்து சேர்ந்தார். நபீல் சொல்லித்தான் எனக்குத் தெரிய வந்தது. கரீம் அண்ணா, ஒரு பச்சாபாசியாம். நபீலோடு, ஒரே பச்சாபாசி கூடத்தில் வளர்ந்தவராம். 

ஆனால் நபீலைப் போல், கரீம் அண்ணா, ஒரு ஆண்மகனாக இல்லை. கரீம் அண்ணாவின், உடை, நடை எல்லாமே, ஒரு பெண்ணைப் போலவே இருந்தது.

எங்கள் வீட்டிற்குள் வருகையில் எல்லாம், முழுக்க மூடும் கோசா போட்டுக்கொண்டு வருவார். சமையல் அறைக்குள் உள்ளே போய், நபீல் வேலைக்கு வைத்து இருக்கும் சமையல்காரர் அண்ணாவுடன் சேர்ந்து கொள்வார். 

சமையலுக்குத் தேவையான காய்கறி வெட்டிக் கொடுப்பது, சால்னாவுக்குத் தேவையான சம்பல் அரைத்துக் கொடுப்பது, பிள்ளைகளை கவனித்துக் கொள்வது, இப்படி ஏதாவது சில்லறை வேலைகள் செய்வார், கரீம் அண்ணா.

சமையல் எல்லாம் முடிந்த கையோடு, மதிய நேரத்திலேயே, அவரது வீட்டுக்குப் போய்விடுவார் கரீம் அண்ணா. அப்புறம் திரும்பவும் காலையில் வருவார்.

ஒரு அண்ணன் கிடைத்த சந்தோசத்தில் நான் இப்போது இருந்தேன். எனது நோய் முற்றிக்கொண்டே போவது எனக்குப் புரிந்தது. 

நபீல், கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கையை இழந்துகொண்டே போவதும், எனக்குப் புரிந்தது

கரீம் அண்ணா, காபூல் மாகாணம், ஆப்கானிஸ்தான் 

இந்த உலகத்தைப் படைத்த இறைவன் கொடியவன் என்றுதான் நேற்று வரை நான் நினைத்தேன்.

ஆனால், நபீலின் வீட்டுக்குள் நுழைய எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்து, அவனது குழந்தைகளோடு ஒரு குழந்தையாக மாறி விளையாட ஒரு சந்தர்ப்பம் கொடுத்து, குல்பாரி என்ற ஒரு பெண்ணை, தங்கையாக அடைய ஒரு சந்தர்ப்பம் கொடுத்த, அந்த இறைவன், எனக்கு இப்போது, நல்லவன் ஆகத் தெரிந்தான்.

ஒரு பச்சாபாசியாலும் இல்லற வாழ்க்கை வாழ்ந்து காட்ட முடியும் என்று வாழ்ந்து காட்டும், நபீல் மீது எனக்குப் பெருமையாக இருந்தது.

குல்பாரிக்கு புற்றுநோய் அதிகமாகி, நபீல் நடத்திவந்த கடை, நஷ்டத்தில் ஓட ஆரம்பித்த ஒரு நாளில், கடன் உதவி பெறுவதற்காக, நபீல், அவன்  பழைய கடை முதலாளியைப் பார்க்க வந்து இருந்தான். அந்த இரவு வேளையில்தான், நான் நபீலை மறுபடியும் சந்திக்க நேர்ந்தது.

பல நாள் சிரைக்காத ஒரு தாடி, ஒரு கசங்கிப்போன மேல் உடை என்று ஒரு பிச்சைக்காரக் கோலத்தில், நபீலைப் பார்த்தபோது, மிகவும் பதறிப்போனேன்.

நான் துருவித் துருவிக் கேட்டும், அவன் ஆரம்பத்தில், விட்டுக் கொடுக்காது பேசிக்கொண்டு இருந்தான். அப்புறம் நான் கொஞ்சம் கோபமாக, “நபீல்.. உன் வீட்டில் நடக்கிற விசயங்களைத் தெரிந்து கொள்ள எனக்கு உரிமையில்லையா?  என்று அவனைக் கடிந்து கொண்ட பின்னரே, அவன் என்னிடம் பேசினான்.

குல்பாரியின் புற்றுநோய் பற்றிப் பேசினான். தனியார் மருத்துவமனைக்கு கட்ட வேண்டிய பெரும்பணம் பற்றிப் பேசினான். கடைக்கு கட்ட வேண்டிய வாடகை பாக்கி பற்றியும் பேசினான். நான், அவன் பேசிய அனைத்தையும், அமைதியாகக் கேட்டுக்கொண்டேன்.

“உன் பழைய முதலாளி என்ன சொன்னார்?” என்று நான், நபீலை வினவியபோது, வெறுப்புடன் பதில் சொன்னான்.

காலையில் போன நபீலை, இதோ அதோ என்று போக்குக் காட்டி, இரவு வரை காக்க வைத்தாராம். அப்படி ரொம்ப நேரம் காக்க வைத்தால், நபீலே எழுந்து  போய் விடுவான் என்று கடை முதலாளி நினைத்தாராம். ஆனால், நபீல் பொறுமையுடன் இருந்தானாம்.

இரவில்தான் சொன்னாராம், “என்னிடம் நீ கேட்கும் தொகை இப்பொது இல்லை நபீல்… வேறு யாரிடமாவது போய் கடன் கேள். சரியா?” என்றாராம்.

இரக்கமே இல்லாத உலகம் என்று அவன் சொன்னபோது, நான் சிரித்துக்கொண்டேன். “செத்த இங்கேயே நில்லு.. சரியா?” என்று சொல்லிக்கொண்டே வழியில் நடந்து போன ஒருவரைத் துரத்திக்கொண்டே, அந்த இருளில், நான் ஓடினேன். அந்த இருளில் நடந்து போன, அந்த நபரையும் பிடித்து விட்டேன்.

நான் அவரோடு ரொம்பநேரம் பேசிக்கொண்டே இருப்பதை, பார்த்துக்கொண்டே இருந்த நபீல், அவனது வீடு திரும்புவதற்காய், அவன் நின்று கொண்டு இருந்த இடத்தை விட்டு நகர்வதை, நான் பார்த்துக் கொண்டே இருந்தேன். என்னால், அந்த நேரத்தில் அவனைத் தடுக்க முடியவில்லை. அவன் போகட்டும் என்று விட்டு விட்டேன்.

ஆனால், அரை மணி நேரம் கழித்து ஓடிப்போய், அவனை, இரண்டு தெரு தள்ளிப் பிடித்து விட்டேன்.

என்னை மறுபடியும் பார்த்த நிலையில், “என்ன கரீம், அந்த வாடிக்கையாளருக்கு வாய் போட்டு முடித்து விட்டாயா?” என்று அவன் கேட்டபோது, நான் சிரித்தேன். 

எனது கையில் இருந்த, பெரும் பணக்கட்டை, நபீலிடம் நான் நீட்டினேன்.

நபீல், அதிர்ந்து போனான். அவன் இதை எதிர்பார்க்கவில்லை போலும். “இவ்வளவு பணம்.. இவ்வளவு பணம்.. எப்படி நண்பா?” என்றான்.

“நான் உழைத்த பணம் நபீல்.. நான் வாய்போட்டு சம்பாதித்த பணம்தான் நபீல். நான் கை போட்டு சம்பாதித்த பணம்தான் நபீல். நான் என் குண்டியைக் காட்டி சம்பாதித்த பணம்தான் நபீல்…” என்றவுடன், எனது கைகளைப் பிடித்துக் கொண்டான் நபீல். நான் தொடர்ந்து பேசினேன்.

“நாய் போல நான் உழைத்து சம்பாதித்த பணம் இது நபீல். ஆனால், நாய் விற்ற காசு குரைக்காது நபீல்.. பணத்தை எடுத்துக்கொண்டு போ” என்று நான் சொன்னபோது, அவன் குலுங்கிக் குலுங்கி அழுதான்.

“என்னை மன்னித்து விடு நண்பா.. நான் தவறாகப் பேசிவிட்டேன்” என்று அவன் சொன்ன்னபோது, “நபீல்… என்னை நண்பா என்று சொல்லாதே.. அண்ணா என்று சொல். உன்னை விட நான் எட்டு வயது பெரியவன்.. இந்த உலகத்தின் உண்மையான ரூபத்தை, உன்னை விட, நான் நன்கு தெரிந்து கொண்டவன்” என்று நான் சொன்னபோது, அவன் விசும்பலை, நபீல் நிறுத்தவில்லை.

நான் நபீலின் இதயத்தில் ஆழமாகப் படும்படி சில வார்த்தைகள் பேசினேன். “தம்பி நபீல்.. நன்கு தெரிந்து கொள். நம் நாடு ஒன்றும் பணக்கார நாடு அல்ல. மிக மிக ஏழை நாடு.”

“அதனால்தான், உலகத்தில் உள்ள எல்லா ஏழை நாடுகள் போலவே, இங்கேயும், ஊழல் எங்கும் பரவிக்கிடக்கிறது”

“இதில் நாம் மட்டும் ஒழுக்கம் பற்றிப் பேசி எந்தப் பிரயோசனமும் இல்லை.” என்று நான் சொன்னபோது, நான் பேசுவதை இன்னும் ஆர்வமாகக் கவனித்தான்.

“தம்பி நபீல்.. ஒரு மாட்டினைத் துரத்தி, அதன் பின்னால், ஒரு கும்பல் ஓடுகிறது. தான் கல்லால் அடிக்கப்படுகிறோம் என்று தெரிந்த அந்த மாடு, இன்னும் வேகமாக ஓடுகிறது. கும்பல் இன்னும் வேகமாக, மாட்டின் பின்னால் ஓடி, கல்லால் அடிக்க முனைகிறார்கள்.  மாடு மறுபடியும் ஓடுகிறது. கடைசியில், மாடு ஓடிய பாதையில், ஒரு தடுப்புச்சுவர் வருகிறது. மாடு இனிமேல் ஓடமுடியாது என்று தெரிந்துகொள்கிறது.”

“இவ்வளவு நேரம் ஓடிய மாடு… இனி ஓட முடியாது என்று தெரிந்த பின்னர், திரும்பி நின்று, கும்பலைப் பார்த்து முறைக்கிறது. இப்போது கும்பல் மாட்டைப் பார்த்து, பயப்பட ஆரம்பிக்கிறது. மாடு, இப்போது கும்பலைத் துரத்துக்கிறது.. கும்பல் இப்போது, பயந்து போய் ஓடுகிறது.”

“மறந்து விடாதே நபீல்… அந்த மாட்டைப் படைத்ததும் இறைவன்தான். மாட்டைத் துரத்தும் கும்பலைப் படைத்ததும் இறைவன்தான். நான் அந்த மாடாக இருக்கிறேன். இந்த ஆப்கன் சமூகம், அந்த மாட்டைத் துரத்தும் கும்பலாக இருக்கிறது”

“நீ உன்னை ஒழுக்கமானவாக மாற்றிக்கொண்டு, அந்தக் மாட்டைத் துரத்தும் அதே கும்பலில் சேரத் துடிக்கிறாய். அல்லது ‘அந்தக் கும்பல் செய்வது மட்டுமே சரி’ என்று நினைத்து, அந்த கும்பலுக்குப் பின்னால் நின்று கொள்ள விழைகிறாய்… உனக்கும் எனக்கும் அவ்வளவுதான் வித்தியாசம்” என்று நான் சொன்னபோது, “அண்ணா.. என்னை மன்னியுங்கள்” என்று எனது கைகளை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டான் நபீல்.

நான் மூச்சு வாங்கினேன். “தம்பி நபீல்.. நாளை காலை உன் வீட்டிற்கு நான் வருகிறேன். என்னை அனுமதிப்பாயா?” என்று நான் கேட்டவுடன், “நிச்சயமாக வாங்க அண்ணா” என்று நபீல் சொன்ன பின்தான், எனக்கு நிம்மதி வந்தது.

அடுத்த நாள், என்னை கோசாவில் மறைத்துக்கொண்டு, நபீல் வீட்டிற்குப் போனேன். குல்பாரியால், என்னை எழுந்து வரவேற்கும் நிலைக்கு அவள் உடல்நிலை இல்லை. ஆனாலும் “வாங்க அண்ணா” என்றாள்.

நான் சந்தோசமாக சமையலறைக்குப் போனேன். நபீல் கடையில் வேலை பார்க்கும், அந்த சமையல்காரர், அப்போதுதான் சமையல் வேலைகளை ஆரம்பித்து இருந்தார். 

நான் முதலில், இன்னும் விளக்க வேண்டிய சமையல் பாத்திரங்களை, சாம்பல் போட்டு, விளக்கிக் கொடுத்தேன்.

“அண்ணா.. நான் காய்கறி வெட்டிக்கொடுக்கறேன் அண்ணா..” என்று சமையல்கார அண்ணனிடம் சம்மதம் வாங்கிக்கொண்டு, காய்கறிகள் வெட்டினேன்.

சமையல்காரர், தனது அன்றாடப் பணிகளின் சுமை குறைந்ததால், சமையலில் மட்டும் நன்கு கவனம் செலுத்தினார்.

நபீல், பிள்ளைகள் மீது கவனம் செலுத்தினான். அவர்களைக் குளிப்பாட்டி, பள்ளிக்கு கொண்டுபோய் விட்டு வருவது அவன் வேலை.

பகலில் நபீல் வீடு. இரவில் நான் வழக்கமாகச் தொழில் செய்யும் தெருக்கள்… என, எனது பாதையை நான் மாற்றிக்கொண்டேன்.

எல்லாம் நல்லபடியாகப் போனது. ஆனால், ஆறே மாதத்தில், குல்பாரி இறந்து போனாள்.

இறந்து போன குல்பாரியின் உடல் முன்னால், நபீல் கதறினான்… கதறினான்.. அவன் நெஞ்சே வெடித்து விடும் அளவிற்குக் கதறினான்.

“குல்பாரி… குல்பாரி..இந்தப் பாழாய்ப்போன சமூகத்தின் இரக்கம் இல்லாத தன்மையால், ஆசை ஆசையாய், உன்னோடு வாழ்ந்த வாழ்க்கை போய் விட்டதே குல்பாரி…” என்று அவன் வாய் வெடித்து அழுதபோது, என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. 

சமூகத்தின் மீதான வெறுப்புடன், நான் எனது சோகத்தை விழுங்கிக்கொண்டேன்.

தொடரும்

அழகர்சாமி சக்திவேல்

சிங்கப்பூர்

Series Navigationமழைபுராணம் -16விளக்கு விருதளிப்பு விழா காட்சிகள்