பாலமுருகன்.லோ
“ஹலோ! சிவாவா?”
“ஆமாம், சொல்லுங்க.”
“நான் ஊர்ல இருந்து கோமதி பேசறேன். கண்ணு, சௌக்கியமா?”
“கோமதி அக்காவா! எப்படி இருக்கீங்க? மாரி அண்ணன் எப்படி இருக்காரு?”
“அவருக்கென்னப்பா, நல்லா இருக்காரு. பொட்டிக் கடையில வர்ற வருமானத்தை வச்சு இத்தனை வருஷமா காலத்தை ஓட்டிட்டோம். பசங்க வளர்ந்துட்டாங்க, இனி அவுங்க காலம்தான்.”
“ஏங்கக்கா, கதிர்தான் முதல்ல, அப்புறம்தானே குமாரு?”
“ஆமாம்ப்பா, எல்லாத்தையும் மறக்காம ஞாபகம் வச்சிருக்கியே, நல்லதுப்பா.”
“எப்படிக்கா மறக்க முடியும்? ஊரையும் உங்களையும் எல்லாத்தையும் எப்படி மறக்கிறது? அப்பப்ப எல்லாம் நினைவுக்கு வரும், பழசை நினைச்சுப் பார்ப்பேன்.”
“சரிக்கா, விட்டா நான் பேசிட்டே இருப்பேன். சொல்லுங்க, எதுக்குக் கூப்பிட்டீங்க?”
‘அதுவாப்பா… நம்ம கதிருக்கு ஒரு நல்ல வேலை அமையும்னுதான் இத்தனை வருஷமா காத்திருந்தோம். ஆனா, அவனுக்கு ஒரு நல்ல வேலை அமைய மாட்டேங்குது.’
“ஏம்பா, உனக்குத் தெரிந்த இடத்தில ஏதாவது சொல்ல முடியுமா?”
“அதுக்கென்னக்கா, சொல்லிட்டாப் போச்சு. அவனை அவனுடைய ரெஸ்யூமை (Resume) எனக்கு அனுப்பச் சொல்லுங்க. நான் எனக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லி வைக்கிறேன்.”
“சரிப்பா, நீ சொன்ன மாதிரியே கதிரை உனக்கு அவனுடைய ரெஸ்யூமை அனுப்பச் சொல்றேன்.”
“ஏங்கக்கா, குமார் எப்படி இருக்கான்? அவனும் படிச்சு முடிச்சுட்டான் இல்ல!”
“ஆமாம்ப்பா, அவனும் படிச்சு முடிச்சுட்டான். ஆனா, அவன் ஒரு வேலையில உட்கார்ந்துட்டான்.”
‘நம்ம கதிர் தான் கொஞ்சம் சிரமப்படுறான், ஒரு நல்ல வேலையில உட்காரறதுக்கு.’
“அக்கா, அவனிடம் கேட்டீங்களா? ஏன் அவனுக்கு வேலையில கவனம் இல்லைன்னு?”
‘அவன் இன்ஜினியரிங் டிகிரிதானே முடிச்சிருக்கான்.’
“ஆமாம்ப்பா, ஏதோ கம்ப்யூட்டர் சம்பந்தமா படிச்சிருக்கான்.”
“சரிப்பா, நான் உன் நேரத்தை வீண்செய்ய விரும்பல. நீ சொன்ன மாதிரி அவனை அனுப்பச் சொல்றேன். கொஞ்சம் உதவுப்பா,” என்றாள் கோமதி.
“சரிக்கா, நீங்க அவனை அனுப்பச் சொல்லுங்க. இல்லைன்னா, அவனை ஒரு வாரம் அல்லது பத்து நாள் இங்கே வேணும்னா வந்து தங்கி வேலையைத் தேடச் சொல்லுங்க.”
“இல்லப்பா, உனக்கு தொந்தரவா இருக்கப் போகுது?”
“இல்லக்கா, எனக்கென்ன தொந்தரவு? அவன் அவன் அறையில தங்கப் போறான். நீங்க கவலைப்படாதீங்க.”
“ஏம்பா, பேசிக்கிட்டே இருந்ததுல உன்னோட பொண்டாட்டியைப் பத்திக் கேட்க மறந்துட்டேன்.”
“எப்படி இருக்கா லீலா? பசங்க எல்லாம் நல்லா இருக்காங்களா?”
“எல்லோரும் சௌக்கியம்.”
“சரி அப்ப நான் போனை வைக்கிறேன்.”
“சரி அக்கா, நானும் கடைக்கு போகணும். அதை கவனிக்கிறேன்,” என்று போனைத் துண்டித்தான் சிவா.
லீலா சொன்ன பொருட்களை வாங்க கடைக்குப் போய் சாமான்களை வாங்கி ஒரு மணி நேரத்தில் வீட்டிற்குத் திரும்பினான்.
“வந்துட்டீங்களா?” என்று குரல் கொடுத்தாள் லீலா.
“ஆமாம்பா, வந்துட்டேன். நீ சொன்ன சாமானெல்லாம் வாங்கி வந்திருக்கேன்.”
“ஏங்க, கொஞ்சம் சிரமம் பார்க்காமல் எல்லாவற்றையும் ஃபிரிட்ஜில் வைக்க முடியுமா? எனக்கு ஒத்தாசையா இருக்கும்.”
“சரி லீலா, நான் வாங்கி வந்த பொருட்களை, குறிப்பா காய்கறிகளை, ஃபிரிட்ஜில் அடுக்கிறேன்.”
“ஏங்க, தேங்க்ஸ்.”
சிவா ஃபிரிட்ஜில் அடுக்கிய பிறகு, வெயிலில் போய் வந்த களைப்பால் ஹாலில் இருந்த சோஃபாவில் உட்கார்ந்தான். விட்டத்தில் மாட்டியிருந்த மின்விசிறி வேகமாகச் சுழன்றதால், சற்று நேரம் அவன் கண்ணை மூடினான். அவனது மனதில் கோமதி அக்கா பேசியதும், அவனது சிறு வயது ஞாபகமெல்லாம் வரத்தொடங்கியது.
அப்போது சிவா அவனது ஊரான காட்டுப்புதூரில் வாழ்ந்த சமயம், கோமதி அக்கா, மாரி அண்ணன் இருவருக்கும் அப்பதான் கல்யாணம் ஆகி கதிர் பிறந்த சமயம். பத்தாவது படித்து வந்தான் சிவா. பள்ளிப்படிப்பை அங்கேயே முடித்தான். கல்லூரிக்குத் திருச்சி வந்து சேர்ந்தான். கல்லூரியில் உள்ள ஹாஸ்டலில் தங்கிப் படித்தான். அவன் வாரக் கடைசியில் இரு தினங்கள் மட்டும் கல்லூரியிலிருந்து பர்மிஷன் வாங்கிக்கொண்டு ஊருக்கு வந்து அம்மா அப்பாவுடன் இருந்துவிட்டு, மீண்டும் திங்கள் காலையில் பஸ்ஸைப் பிடித்துத் திருச்சி வந்துவிடுவான்.
இரு தினங்களில் சிவா நல்ல சோறு சாப்பிடுவான் அம்மா கையில். அப்பதான் அவனுக்கு அம்மாவின் சமையலின் மகத்துவம் புரிந்தது. சிறு வயதில் அவன் அம்மாவிடம் எத்தனை வம்பு பண்ணியிருக்கிறான் சாப்பாட்டிற்கு. வேளை மெனக்கெட்டு சமைத்து வைத்தால், அம்மாவுக்குத் தெரியாமல் அதை எடுத்துக் கீழே கொட்டுவது, சில சமயங்களில் அம்மா அவன் கொட்டுவதைப் பார்த்துவிட்டால்,
“ஏன்டா, காசுக்குப் பிடித்த கேடு! இப்படிச் சாப்பிடாம கீழே கொட்டற?”
“ஏன்டா சிவா, உனக்குத் தெரியுமாடா ஒரு வேளை சோறு கிடைக்காம எத்தனை பேர் இருக்காங்க என்று? நீ என்னடான்னா, கிடைச்ச சாப்பாட்டை இப்படிக் கீழே கொட்டற.”
“வேணும்னா நீ பாரேன், வீட்டோட அருமையெல்லாம் நீ தனியா இருக்கும்போதுதான் புரியும்,” என்று அவன் அம்மா அப்போது சொன்னதை இப்ப நினைத்துப் பார்க்கும்போது, அவனுக்குக் கண்ணெல்லாம் கலங்கிப் போய், மூடியிருந்த கண்ணைத் திறந்தான்.
“ஏங்க.. ஏங்க என்ன பண்ணீட்டு இருக்கீங்க?, சமைச்சுட்டேன், உடனே வந்தா சுடச் சுட சாப்பிடலாம்!”
‘இதோ வந்துட்டேம்மா,” என்றான் சிவா
சிவா வந்தவுடன் லீலா சாப்பாட்டைத் தட்டில் போட்டாள். வேறு ஒரு தட்டில் கூட்டுப் பொரியல், கூடவே முட்டைப் பொரியல் எல்லாவற்றையும் வைத்தாள். சிவா தட்டிலிருந்த சாப்பாட்டைப் பார்த்த மேனிக்கு இருந்ததால, லீலா அவனிடம்,
“ஏங்க, என்ன ஒரே யோசனை? சாப்பிட வந்தா கவனம் முழுவதும் சாப்பாட்டில் இருக்கணும். நீங்க என்னடான்னா, சாப்பிட உட்கார்ந்த பின் சாப்பிடாம ஏதோ யோசிச்சுக்கிட்டே இருந்தா எப்படி?”
“இல்ல லீலா, காலையில நம்ம ஊருல கோமதி அக்கா தெரியுமில்ல?”
“ஆமாம், நம்ம கல்யாணத்துல கூட அவங்களுக்கு ரெண்டு பசங்க.”
“ஆமாம், அவங்களேதான், போன் பண்ணியிருந்தாங்க.”
ஆமாம் நானே கேட்டேனே, நீங்க போன்ல லவுட் ஸ்பீக்கரை ஆன் செய்து பேசினது உங்களுக்கு வேணும்னா தெரியாம இருந்திருக்கலாம். ஆனா நான் நீங்க பேசியதை முழுசா கேட்டுட்டேன். இப்ப நீங்க அவனுக்கு ஒரு வேலை வாங்கித் தரப்போறீங்களா?
“ஏம்மா யாருமா வேலையை வச்சுக்கிட்டு ஆளைத் தேடிட்டு இருக்காங்க.” நாமதான் வேலையைத் துளாவணும்.
பார்ப்போம், அவங்ககிட்ட சொல்லியிருக்கேன், அவனோட ரெஸ்யூமை தரச் சொல்லியிருக்கேன். முதல்ல வரட்டும் பிறகு பார்ப்போம், எனக்குத் தெரிஞ்ச இடத்துல சொல்லிப் பார்ப்போம்.
“ஏங்க, நாம பேசினதை வச்சுப் பார்த்தா அந்தப் பையனுக்கு வேற ஏதோ ஒரு எண்ணம் இருக்கு போல.”
“ஆமாம் லீலா, நான் கூட இதையேதான் யோசிச்சேன். நான் என்ன நினைக்கிறேன்னா, அவனுக்குக் கனவு நிறைய இருக்கு போல. ஆனா அந்தக் கனவை எப்படி எட்டிப் பிடிப்பது என்றுதான் சரியாப் புரியலை.”
“ஆமாங்க, பேசினதை வைத்துப் பார்த்தா எனக்குக் கூட அப்படித்தான் படுது.”
“சரி, இப்ப நீங்க சாப்பிடுங்க. நாளைக்கு வேணும்னா ஒரு தடவை நீங்க அவன்கிட்ட பேசிப் பாருங்க. நீங்க அவன்கிட்ட பேசினா எல்லாமே தெரிந்துவிடும்.”
அதுவும் சரிதான் லீலா, நாளைக்கு ஞாயிற்றுக்கிழமையா இருக்கு. அவனும் வீட்லதான் இருப்பான். நீ சொன்ன மாதிரி ஒரு தடவை போன் போட்டுப் பார்ப்போம். அவன் மனசுல என்ன இருக்குனு தெரிஞ்சுக்கலாம்.
லீலாவும் சிவாவும் பேசினபடி ஞாயிற்றுக்கிழமை கதிருக்கு போன் போட்டு சிவா பேசியபோதுதான் தெரிந்தது, கதிர் ஒரு பெரிய கனவுடன் இருந்திருக்கிறான் என்று. அவன் ஒரு ஆன்டர்பிரெனர்ராக உருவாக வேண்டும், பத்து பேருக்கு வேலை கொடுக்க வேண்டும் என்றெல்லாம் மனதில் ஆசையைத் தேக்கி வைத்திருக்கிறான். இந்த ஆசையே அவனை ஒரு இடத்தில் நிரந்தரமாக இருக்க விடமாட்டேன்கிறது என்பதை சிவா முழுமையாகப் புரிந்துகொண்டான். சிவா எவ்வளவோ சொல்லிப் பார்த்தும், “கதிர், அண்ணே நான் எப்படியாவது முன்னுக்கு வந்துடுவேன். என்னால் மத்தவங்ககிட்ட கையைக் கட்டிக்கொண்டு நிற்க முடியாது. எனக்குத் திறமை இருக்கு, அதை நான் கண்டிப்பாக வெளி உலகத்திற்குக் காட்டத்தான் போறேன்,” என்றான் சவாலாக.
எல்லாவற்றையும் கேட்டு சிவா அவனிடத்தில்…
“அப்பா கதிர், நீ நல்லா முன்னுக்கு வந்தா, என்னைவிட சந்தோஷப்படறதுக்கு வேறு யாரும் இருக்க முடியாது. ஆனா நீ ஒண்ணு தெரிஞ்சுக்கணும். உனக்கு ஒரு குறிக்கோள் இருக்கு. அந்தக் குறிக்கோளை அடைய நீ எப்படியெல்லாம் போராட வேண்டும் தெரியுமா? இப்ப உனக்கு வயசு முப்பது ஆச்சு. நீ டிகிரி முடிச்சு ஆறு வருஷம் ஆச்சு. ஆனா நீ இன்னும் ஒரு நல்ல நிலைக்கு வரல. உன் அம்மா, அப்பாவை நினைச்சுப் பார்த்தியா? வயசான காலத்தில் நாமதான் அவங்களுக்குத் துணையா இருக்கணும். ஆனா நீயோ அவங்களோட துணையை எதிர்பார்க்கிற.
பெத்த கடனுக்கு அவங்க உனக்குச் செய்வாங்க, நான் இல்லைன்னு சொல்லல. நீ யோசிக்க வேண்டாமா, இன்னும் எவ்வளவு காலம் அவங்களைக் கஷ்டப்படுத்தப் போறோம் என்று. பெத்த கடனுக்கு அவங்க உன்னை நல்லா படிக்க வச்சிருக்காங்க. இன்னும் எத்தனை காலத்துக்கு உனக்கு அவங்க உதவி பண்ண முடியும்.
ஏம்பா, நான் உன்னைக் குத்தம் சொல்லல. உன்னோட உயரிய நோக்கம் நல்ல முறையில் செயல்படணும்னா, நீ ஒரு வேலையில் இருந்துகொண்டே, உன்னோட கனவை அடைய என்னென்ன செய்யணுமோ அதை நீ செய்யணும். என்னடா இவ்வளவு வருஷமா போன் கூட பண்ணாதவன் இப்ப வந்து நமக்குக் கிளாஸ் எடுக்கிறானேன்னு நினைச்சுக்காத. நான் உன்னை என் தம்பியாகத்தான் பார்க்கிறேன்.
டிகிரியில நல்ல சதவீதம் வச்சிருக்க, நான் எனக்குத் தெரிந்த இடத்துல சொன்னா, நீ போய் அங்கு வேலைக்குச் சேர்ந்துகிறியா?”
“அண்ணே, நீங்க கேட்டது போதும் அண்ணே. ஏனோ என் மனசு ஒத்துக்கல, என்னுடைய மனசு திரும்பத் திரும்ப என்ன சொல்லுதுன்னா, நான் கண்டிப்பா ஜெயிச்சுடுவேன் என்று.”
“அண்ணே, என்கிட்ட நிறையவே ஐடியா இருக்கு. இன்வெஸ்ட் பண்ண சரியான நபரைத்தான் தேடிக்கிட்டு இருக்கேன். நல்ல இன்வெஸ்டர் கிடைத்துவிட்டால், எனக்குக் கீழ் வேலை செய்ய ஆட்களெல்லாம் இருக்காங்க.”
“சந்தோஷம் கதிர், உன் முயற்சி உன்னை நல்ல இடத்துல கொண்டு போகணும். என் ஆசீர்வாதம் உனக்கு எப்போதும் இருக்கும். ஏதாவது உதவி வேண்டும் என்றால் தவறாமல் சொல்லவும்,” என்று சொல்லி ஃபோனைத் துண்டித்தான் சிவா.
போனைத் துண்டித்தவன், மௌனமாக.. சன்னல் வழியாக எதையோ பார்த்தபடி இருந்ததை லீலா பார்த்தவுடன், ‘ஏங்க அப்படி என்ன பார்க்கிறீங்க?’ என்று கேட்டுக்கொண்டு சிவா பக்கத்தில் வந்து பார்த்தாள். சன்னல் வழியாகப் பார்த்தபோது, ‘ஆன்ட்ரபிரனர் நீங்களும் ஆகலாம்’ என்ற விளம்பரத்தைத்தான் அவர்கள் இருவரும் பார்த்தனர்.
“அப்புறம் கோமதி அக்கா பேசுனாங்கன்னா சொல்லிருங்க அவங்ககிட்ட, கதிர் ஒரு முடிவுலதான் இருக்கான்னு.” என்றாள் லீலா.
-பாலமுருகன்.லோ-
- கொடை
- படைப்பும் படைப்பாளியும்
- மனம் போல் வாழ்வு
- சூதாட்டமாக மாறிய தேர்தல் களம் – மக்கள் வெறும் கருவேப்பிலை தான்
- தீரா காதல்…
- ஒரு வன பரப்பில்,பல மரங்கள் …
- “இந்தியாவின் சரக்கு பெட்டகப் புரட்சி: சீனாவின் ஆதிக்கத்திற்குப் பதிலடி கொடுக்குமா CMAS திட்டம்?”
- தருமிமுன் அறுந்துவிழுந்த பொற்கிழி முடிச்சு
- ‘அரண்மனை மியூசியம்’ நாவல் வெளியிடப் பட்டது
- மழைபுராணம் – 18
- இடைவெளி….