யுவராஜ் சம்பத்
ஒன்றிய அரசின் 2026 வரவு–செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட ஒரு புதிய அறிவிப்பு, எதிர்காலத்தில் இந்தியாவின் சரக்கு பெட்டக வர்த்தகமும் போக்குவரத்தும் எப்படி இயங்கப்போகிறது என்பதை மாற்றும் சக்தி கொண்டது. இந்தியா உலகப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் கண்டெய்னர் சந்தையில், தனது முதல் பலமான அடியை எடுத்து வைத்துள்ளது”
CMAS (Container Manufacturing Assistance Scheme) என்ற பெயரில், ₹10,000 கோடி கண்டெய்னர் உற்பத்திக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் (1 மில்லியன்) 20-அடி (TEU) கண்டெய்னர்கள் உற்பத்தி செய்யும் திறனை நாட்டிற்குள் உருவாக்குவதே இதன் நோக்கம்.
இந்த அளவிலான முதலீடு ஏன்?
சாலைகள், ரயில்கள், துறைமுகங்கள் எனப் பல இடங்களில் முதலீடு தேவைப்படும் சூழலில், அரசுக்கு இவ்வளவு பணத்தை ‘சரக்கு பெட்டிகளுக்காக’ செலவிட வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. அந்தக் கேள்விக்கான விடையைத் தேடும்போது, இந்தத் திட்டம் வெறும் தொழிற்துறை மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்தது அல்ல; அது இந்தியாவின் உலக வர்த்தக அரசியல் (Geo-economics) சார்ந்து எடுக்கப்பட்ட ஒரு மூலோபாயத் தீர்மானம் (Strategic Decision) என்பதும் புரிகிறது.
ஒன்றிய அரசு கணிப்பின்படி, இந்தத் திட்டம் ₹1 லட்சம் கோடி அளவிலான பொருளாதாரச் செயல்பாட்டையும், 50,000-க்கும் மேற்பட்ட நேரடி–மறைமுக வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். .
இந்த முதலீட்டின் அரசியல்.
இந்த ₹10,000 கோடி ஒதுக்கீட்டை, சீனாவின் Belt and Road Initiative (BRI) பின்னணியின்றி புரிந்து கொள்ள முடியாது. இன்று உலகளாவிய கண்டெய்னர் உற்பத்தியில் சீனாவின் பங்கு மிக உயர்ந்ததாக,90%க்கும் மேல்,இருப்பதாகப் கூறப்படுகிறது. BRI வழியாக சீனா உலகம் முழுவதும் கட்டமைக்கும் வர்த்தகப் பாதைகளுக்கு தேவையான கண்டெய்னர்களையும், லாஜிஸ்டிக்ஸ் உள்கட்டமைப்பையும் சீன நிறுவனங்களே வழங்குகின்றன.
இதன் விளைவு என்ன? உலக வர்த்தகத்தின் ஒரு முக்கிய அங்கமான சரக்கு பெட்டகங்கள் சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.கோவிட் பெரும் தொற்று காலத்தில் நிலவிய, சரக்கு பெட்டக தட்டுப்பாடு இந்திய ஒன்றிய அரசுக்கு இதன் முக்கியத்துவத்தை சொல்லி இருக்க கூடும்
இந்த நிலையில், இந்தியா CMAS மூலம் எடுக்கும் முயற்சி, சீன ஆதிக்கத்தை நேரடியாக எதிர்க்கும் ஒரு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. இது மூலோபாயத் தற்சார்பு (Strategic Autonomy) என்ற கருத்தின் நடைமுறை வடிவம். இறக்குமதி கண்டெய்னர்களை—அதிலும் சீனாவை—நம்பியிருக்கும் நிலை தொடர்ந்தால், விநியோகச் சங்கிலி பாதிப்புகளும், செலவுச் சுமைகளும் தவிர்க்க முடியாதவை என்று ஒன்றிய அரசு கருதுகிறது
மேலும், BRI-க்கு மாற்றாக இந்தியா முன்னெடுக்கும் IMEC,( The India-Middle East-Europe Economic Corridor ) INSTC (The International North-South Transport Corridor ) போன்ற சர்வதேச வர்த்தக வழித்தடங்களில், சரக்குகளை ஏற்றிச் செல்லப் போதிய அளவு கண்டெய்னர்கள் நாட்டிற்குள் இருப்பது கட்டாயம். அதற்கான அடித்தளமே இந்த ₹10,000 கோடி முதலீடு.
தமிழ்நாடு: பாரம்பரியத்திலிருந்து புதிய வாய்ப்புகள் வரை
தமிழ்நாட்டில் இன்றைக்கு முழுமையான ‘Greenfield’ ISO கண்டெய்னர் உற்பத்தி இன்னும் வரம்புக்குள் தான் உள்ளது. ஆனால் சீரமைப்பு, மாற்றியமைப்பு, சிறப்பு பயன்பாட்டு கண்டெய்னர்கள் ஆகிய துறைகளில் மாநிலம் ஏற்கனவே வலுவான அடித்தளத்தைக் கொண்டுள்ளது.
சென்னை மற்றும் தூத்துக்குடி பகுதிகளில் ரீஃபர் (குளிர்சாதன) கண்டெய்னர்கள், திரவப் பொருட்களுக்கான ISO டேங்க் கண்டெய்னர்கள், அலுவலகம்–குடியிருப்பாக மாற்றியமைக்கப்பட்ட கண்டெய்னர்கள் போன்றவை தயாரிக்கப்படுகின்றன. அதைவிட முக்கியமாக, நாமக்கல்–கரூர்–கோவை பகுதிகளில் பல தசாப்தங்களாக வளர்ந்துள்ள லாரி பாடி கட்டும் தொழில், இந்த மாற்றத்தின் மையமாக மாறக்கூடிய திறன் கொண்டது.
இதுவரை, உபயோகப்படுத்தப்பட்ட (Second-hand) கண்டெய்னர் சீரமைப்பே அதிகமாக இருந்த இந்தத் துறையில், CMAS போன்ற மத்திய அரசுத் திட்டங்கள் காரணமாக, முழுமையான புதிய சரக்கு பெட்டகங்கள் தயாரிப்பை நோக்கி நகரும் சூழல் உருவாகியுள்ளது.
முதலீடு: சிறிய மாற்றமா, பெரிய பாய்ச்சலா?
ஒருபுறம், Skeletal Trailer / Chassis தயாரிப்பில் கவனம் செலுத்தும் குறைந்த முதலீட்டு முறை. இதில், சில லட்சங்கள் முதல் ஒரு கோடி வரை முதலீடு போதுமானதாக இருக்கலாம். இது பாரம்பரிய பாடி கட்டும் நிறுவனங்களுக்கு இயல்பான அடுத்த கட்டமாகும்.
மற்றொரு புறம், சர்வதேச தரம் வாய்ந்த ISO கண்டெய்னர் உற்பத்தி. இதற்கு CNC, ரோபோடிக் வெல்டிங், ஹைட்ராலிக் பெண்டிங் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களுடன், ₹100–130 கோடி வரை முதலீடு தேவைப்படும். இது பெரிய பாய்ச்சல் தான்.
பாடி கட்டும் தொழில் அழிந்துவிடுமா ?
இந்த மாற்றம் குறித்து ஒரு அச்சம் இயல்பாக எழுகிறது: பாரம்பரிய பாடி கட்டும் தொழில் அழிந்து விடுமா என்பதுதான் அது.. இது அழிவு அல்ல—பரிணாம வளர்ச்சி.
மல்டிமாடல் லாஜிஸ்டிக்ஸ் காலத்தில், லாரிகள் முழுமையான பாடிகளுடன் ஓடும் வாகனங்களாக இல்லாமல், Container-on-Chassis முறை அதிகரிக்கும். மரம்–இரும்பு பாடிகளுக்குப் பதிலாக, Twist Lock, Safety Systems, Chassis Engineering போன்ற புதிய பணிகள் உருவாகும். தொழில்நுட்ப மாற்றத்தை ஏற்கத் தயாராக உள்ளவர்களுக்கு இது ஒரு வாய்ப்பு; மறுக்கும் சிறிய பட்டறைகளுக்கு மட்டுமே இது ஒரு சவாலாக இருக்கும். அதே நேரத்தில் ஒன்றிய மற்றும் தமிழ்நாடு அரசு,பழைய முறையிலிருந்து டிஜிட்டல் மற்றும் ரோபோடிக் வெல்டிங் முறைக்கு மாற,அடுத்த தலைமுறைக்கு , அரசு மானியம் அல்லது பயிற்சிகளை வழங்க வேண்டும்
உள்நாட்டு போக்குவரத்தில் நிகழும் அடிப்படை மாற்றம்
இந்தத் திட்டத்தின் உண்மையான தாக்கம், ஏற்றுமதியைத் தாண்டி, உள்நாட்டு போக்குவரத்தில்தான் வெளிப்படும்.
இதுவரை, இந்தியாவின் உள்நாட்டு சரக்கு போக்குவரத்து திறந்த லாரிகள், நேரடி ஏற்றம்–இறக்கம் என்ற பழைய முறைகளில் இயங்கி வந்தது. கண்டெய்னர் மையமான போக்குவரத்து பரவத் தொடங்கும் போது, போக்குவரத்து இழப்பு அல்லது வழிப்பயண இழப்பு குறையும். தொழிற்சாலையிலேயே சரக்கு கண்டெய்னருக்குள் அடைக்கப்பட்டு, அதே கண்டெய்னர் லாரி–ரயில்–பிற நகரங்கள் என நகரும்.
இதன் விளைவாக, ஏற்றி இறக்கும் நேரம் குறையும்; சேதம் குறையும்; ரயில்–சாலை இணைந்த போக்குவரத்து வலுப்பெறும். உள்நாட்டுச் சரக்குக் கட்டணங்களில் நிலைத்தன்மை உருவாகும். குறிப்பாக, விவசாயம், கடல் உணவு, மருந்து போன்ற துறைகளில், ரீஃபர் கண்டெய்னர்கள் “பண்ணையிலிருந்து துறைமுகம் வரை” தொடர்ச்சியான குளிர்சாதனச் சங்கிலியை சாத்தியமாக்கும்.
சுற்றுச்சூழல் (ESG): இன்றைய காலக்கட்டத்தில் பசுமைப் போக்குவரத்து (Green Logistics) முக்கியம். கண்டெய்னர் பயன்பாடு அதிகரிப்பதால் பிளாஸ்டிக் பயன்பாடு குறையும் அல்லது திறந்தவெளிப் போக்குவரத்தால் ஏற்படும் விரயம் குறையும் .
சீனாவின் BRI-க்கு சமநிலையாக இந்தியா எடுத்துள்ள இந்த ₹10,000 கோடி CMAS முன்னெடுப்பு, வெறும் தொழிற்துறை அறிவிப்பல்ல. அது இந்தியாவின் வர்த்தக அரசியல், உள்நாட்டு போக்குவரத்து, மற்றும் மாநில அளவிலான தொழில்முனைவு அனைத்தையும் தொடும் ஒரு திருப்புமுனை.
குறிப்பாக, நாமக்கல், கரூர் போன்ற தமிழகத்தின் பாரம்பரிய தொழில்முனைவு மையங்களுக்கு, உலகத் தரத்திற்கு உயர ஒரு பெரிய கதவு திறக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய திறனையும் நவீன தொழில்நுட்பத்தையும் இணைக்க முடிந்தால், இந்த மாற்றம் அச்சமாக அல்ல—வரலாற்றுச் சந்தர்ப்பமாக மாறும்.
இது வெறும் இரும்புப் பெட்டிகளுக்கான முதலீடு அல்ல, இந்தியாவின் இறையாண்மை மற்றும் வர்த்தகப் பாதுகாப்பிற்கான முதலீடு”
===============
- கொடை
- படைப்பும் படைப்பாளியும்
- மனம் போல் வாழ்வு
- சூதாட்டமாக மாறிய தேர்தல் களம் – மக்கள் வெறும் கருவேப்பிலை தான்
- தீரா காதல்…
- ஒரு வன பரப்பில்,பல மரங்கள் …
- “இந்தியாவின் சரக்கு பெட்டகப் புரட்சி: சீனாவின் ஆதிக்கத்திற்குப் பதிலடி கொடுக்குமா CMAS திட்டம்?”
- தருமிமுன் அறுந்துவிழுந்த பொற்கிழி முடிச்சு
- ‘அரண்மனை மியூசியம்’ நாவல் வெளியிடப் பட்டது
- மழைபுராணம் – 18
- இடைவெளி….