இரா.ஜெயானந்தன்
நான் சினிமாக்காரனாய் மாற, ஏதேதோ இலக்கியங்களை எல்லாம் படித்து விட்டு, அய்யம் பேட்டையில் பஸ் ஏறி சென்னைக்கு வந்திறங்கினேன் .விடிந்தும் விடியா காலை பொழுது. ஆனாலும், இங்கு
மனிதர்கள் இயந்திரங்களாக ஓடிக்கொண்டிருந்தனர்.
சென்னை, பலரின் தலையெழுத்தை மாற்றிய மாயாஜாலமான உலகம்.
பையிலிருந்து, மூன்று வருடங்கள் பத்திரமாக,வைத்திருந்த என் தஞ்சாவூர் நண்பன் விலாசத்தை தேடினேன். கைபேசியில் அழைத்ததும், தூக்கக்கலக்கத்தோடு வழி சொன்னான்.
கடைசியில் அவனது பத்துக்கு பதினைந்து கூடுதான் திருவல்லிக்கேணியில் அடைக்கலம் தந்தது. வாழ்க்கையில் மிகவும் நொந்துப்போன குடும்பத்திலிருந்த
வந்தவன் என் நண்பன் சிதம்பரம்.
வந்திறங்கியவுடன் , என் சினிமா கனவை அவனிடம் அவிழ்த்தால் அடுத்த வேளை சோறு கிடைக்காது என்ற வேதாந்தம் எனக்கு தெரியும். அவன் ஆழ்வார்பேட்டையில் ஒரு தனியார் கம்பெனியில்தான் காலை எட்டுலிருந்து இரவு எட்டுவரை கணக்கெழுதிக்கொண்டிருந்தான். அந்த ஆழ்வார் பேட்டையிலிருந்து தான் உலகநாயகன் வந்தார் என அவனிடம் சொல்ல முடியாமல் தவித்தேன்.
அடுத்த நாளிலிருந்து கோடம்பாக்கத்தில் சினிமா வேட்டைக்கு கிளம்பினேன். கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் எத்தனையோ கிழட்டு சினிமா புலிகள் தள்ளாடி பலகாலமாக நடமாடிக்கொண்டிருப்பதை, ஏவிஎம் ஸ்டோடியோ பக்கத்திலிருக்கும் டீக்கடையில் மதிய நேர பசிக்காக டீ குடிக்கும் நேரத்தில் தெரிந்துக்கொண்டேன். பலர் சினிமா கனவில் வாழ்க்கையை தொலைத்தவர்கள் தெரிய வந்தனர்.
ஆனாலும் மீண்டும் மீண்டும் சினிமா எனும் பூதம் அவர்களையும் என்னையும் விடவில்லை. இன்னும்
சிலர், குறும்படம் எடுத்த கனவோடு,சினிமாவை ஆத்மாவில் அடக்கிக்கொண்டும் அலைந்தனர். இதைவிட ஒரு கூட்டத்தைக்கண்டு கொஞ்சம் பயந்தேன். அவர்கள் சினிமா கல்லூரியில் படித்தவர்கள். வெளிநாட்டு படங்களைப்பற்றியே பேசிக் கொண்டிருந்தனர். ஐரோப்பிய சினிமாக்களின் கதையாடல் அவர்களின் மொழியாக தவழ்ந்தது.
எத்தனையோ பகல்கள், எத்தனையோ இரவுகள், சென்னையின் பானைத்தண்ணீரே உணவானது. திருவல்லிக்கேணி குடிநீரில் கொஞ்சம் மெரினா உப்பு இருந்தாலும், சினிமாக்கனவில் அதுவும் கரைந்து இனித்தது. நண்பனின் அறையில் படுத்துக்கொள்ளலாம். அவனுக்கு அதிக தொந்தரவு தராமல் நடந்துக்கொள்ள முயற்சித்தேன்.
அவனே குறைந்த சம்பளத்தில் வாழ்க்கையில் தொங்கிக்கொண்டிருந்தான். அவனது மாத சம்பளத்தில் ஊரில் மூன்று ஜீவன்கள் உயிர் வாழ்ந்துக்கொண்டிருந்தன. திருவல்லிக்கேணி மேன்ஷனில் பகலில் என்னைப்போல் சினிமா கனவில் கோடம்பாக்கத்தில் அலைந்துவிட்டு, மாலை நேரத்தில் மெரினாவில் பலர் சுண்டல் காரப்பொரி விற்றுக்கொண்டிருந்தனர். எனக்கு இன்னமும்
கொஞ்சம் தன்மானம் இருந்தது.
நேற்று ஒரு சினிமாக்கனவுக்காரனை பார்த்தேன். உடலை திடகாத்திரமாக வைத்துக்கொள்ள, இரவில் மூன்று நட்சத்திர ஓட்டலில் ரூம் பாயாகவும், பகலில் பல ஸ்டுடியோ வாசலில் காத்திருப்பதாக சொன்னான். இன்னொரு சினிமாக்காரன் அலைந்து திரிந்து ஓய்ந்து, கோடம்பாக்கத்தில் பழைய பரணி ஸ்டுடியோ பக்கத்தில், ஜாதக நிபுணராக மாறிவிட்டான். ஏதோ ஒன்றிரண்டு சினிமா பையத்தியங்கள் வந்த
அவனிடம் மாட்டிக்கொண்டு, அவன் வயிற்றை கழுவின. இத்தனைக்கும் இடையே பெண் புரோக்கர்கள் அலைந்தனர். கையில் ஆல்பம் வைத்திருந்தனர். டீ குடிக்கும் போது பக்கத்தில் அமர்ந்து ஆல்பத்தை விரிப்பர். வறண்டு போன மனங்களோடு, கவலையோடு அலையும் இளசுகள் மாட்டிக்கொள்ளும். கோடம்பாக்கம் சந்தில் இருட்டில் மறையும் பாம்புகள்.
ஒரு மாதமாக கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் அலைந்தது,
நான் நடந்தே தஞ்சாவூருக்கு நூறு முறை போயிருக்கலாம்.
மோகமுள் பாபுவும், யமுனாவும்
அலைந்த, மெரினா கடற்கரையில் ஆயிரம் முறை நடந்தேன்.
அங்கே கூடிமகிழும் காதலர் கண்களைப்பார்த்து பத்தாயிரம் கவிதை எழுதலாம். ஒவ்வொரு மணல் துகளும் ஒராயிரம் கதைகள் பேசின. மீண்டும்மீண்டும் வரும் அலைகள் ஒவ்வொரு நாளும் எனக்கு நம்பிக்கையாய் நீண்டது.
சினிமா. ..சினிமா…என்று அலைந்ததில்,
காதல் செய்ய நேரமில்லை.
கன்னியர்கள் ஆயிரம் உண்டிங்கு.
காதலிக்க நேரமில்லை படத்தில் வரும், மாடிவீட்டு பசுங்கிளிகள் பக்கத்து வீட்டு இளசுகளின் மாமரத்தில் கூடுகட்டியது. எனது தாரக மந்திரம் சினிமா. ஒரு நாள் படியிறங்கும் போது ஒரு பெண் உரசிக்கொண்டு சென்றாள். நானும் அவளும் ஒரே நேரத்தில் சாரி கேட்டு கொண்டோம். எனக்கு அவளின் முகம் தெரிந்த முகமாக நெஞ்சில் நெளிந்தது. அதன்பிறகு இரவில் அவள் என்னை மொட்டை மாடியில் துணி காய வைக்கும் போது பார்க்க வேண்டிய தருணங்கள் அமைந்தன.
அறிமுக பேச்சில்,என் சினிமா கனவை நோக்கிய பயணத்தை அவளிடம் சொன்னேன். வாழ்த்துக்களை சொன்னவள் அவள்
எதிர்முனை பிளாட்டில் இருப்பதாக சொன்னாள். அதன்பிறகு அவளை பார்க்க வேண்டிய சந்தர்ப்பங்களை குறைத்துக் கொண்டேன். என் லட்சிய கனவு கோட்டைக்குள் சினிமா என்ற ராஜகுமாரிக்குதான் இடமுண்டு.
நான்காண்டுகள் சென்றும், எந்த புதிய பாதையும் சினிமா முயற்சியில் போடமுடியவில்லை. எத்தனையோ பட்டினிப் போர்கள், எத்தனையோ ஏறி இறங்கிய படிக்கட்டுகள், எத்தனையோ சினிமா பங்களாக்களில் அவமானங்கள், எத்தனையோ பணக்காரர்களின் அவமதிப்புகள்.
ஓடிவிட்டது காலம்.
இனி அதனை பிடிக்க முடியாது.
ஊரிலிருந்த
அம்மா தினமும் எனது வேலையைப்பற்றி கேட்டுகொண்டிருந்தாள். பி.காம் சர்டிபிகேட் உடனே வேலை தந்துவிடும் என அம்மா நம்பினாள். அதுவும் சென்னைதான் எங்கள் ஊருக்கு பொன்னகரம். அது உண்மை முகம் காட்டாமல் முகமூடி போட்டு அலைந்துக்கொண்டிந்த கதை அவளுக்கு தெரியாது.
ஒடிந்து விழுந்த மரமாகி போனபின்,
நண்பன்தான் என் சினிமாக்கனவை கலைத்தான். செளகார்பேட்டையில் ஒரு மார்வாடி கடையில் கணக்கெழுத வேலை செய்து கொடுத்தான். ஏற்கெனவே அங்கு வேலை செய்தவனுக்கு, அரசாங்க வேலை கிடைக்கவே அந்த இடம் எனக்கென எழுதப்பட்டது போல் தெரிந்தது.அந்த மார்வாடி அதை ஒரு சிறிய வங்கியாக நடத்தினார். தினமும் வட்டிக்கு பணம் வாங்கி சென்று , பிளாட்பார வியாபாரிகள் வியாபாரம் செய்வர். கரண்ட் வட்டி, மீட்டர் வட்டி, வார வட்டி, மாத வட்டி என பலவகைகளில் பணம் புரண்டது. சேட்டு வியாபாரத்திற்கு பல ரவுடிகளின், நிழல் தாதாக்களின் தொடர்பும், அரசியல் செல்வாக்கும் அவரது தொழிலை செழிப்பாக மாற்றியது. நான் பி.காம்.,பாடத்தில் படிக்காத வணிக தந்திரங்களை அங்குதான் படித்தேன். தந்திர பூமியில் வாழ, வெறும் பட்டப்படிப்பு போதாது என உணர்ந்தேன்.
என்னை பார்த்த முதலாளி முதலில் அறிவுஜீவி தாடியை மழித்து எடுக்க சொன்னார் . தினமும் ஷேவ் செய்த முகத்துடன், பயபக்தியோடு வர உத்திரவிட்டார்.
ஏற்கெனவே ஒட்டிய கன்னத்தில் தாடியும் எடுத்த பிறகு, தேவாங்கு மாதிரி தெரிந்தேன்.
முதல் நாள் அனுபவத்தை என் அறை நண்பன் சிதம்பரம் கேட்டான். நான் தன்மானம் அழிந்து போனது போல் உணர்ந்ததை சொன்னேன். அவன் ஏற்கெனவே பெட்டியில் வாங்கி வைத்திருந்த அரசாங்க நுழைவு தேர்வுக்கான புத்தகங்களை கொடுத்து படிக்க சொன்னான். சினிமா கனவை மூட்டைக்கட்டி மெரினாவில் கரைக்க சொன்னான்.
எதையும் என் மனம் கேட்கவில்லை.
பெண் கிடைக்காமல், அம்மா சோர்ந்துப்போய், புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு மாவிளக்கு போட்டார்கள். சுமாரான குடும்ப பெண் கிடைத்தால் கூட போதும் என, புரோக்கர்களிடம் சொல்லி வைத்தனர். எந்த தெய்வமும் கைகொடுக்க வில்லை. எல்லாம் விதி என நொந்துக்கொண்டனர். நாக தோஷம் என ஜோசியர் கூறினார். ஒருமுறை வைத்தீஸ்வரன் கோயிலுக்கு போய்வர காசு சேர்த்தாள் அம்மா. மாமா ஒரு முறை கைபேசியில் பேசும் போது யாரையாவது காதல்
..கீதல்…ஏதாவது உண்டா என கேட்டார். நான் அப்படி ஏதும் இல்லை என்றேன்.
அந்த சமயத்தில் தான் எதிர்மாடி பெண்ணே எனக்கு ஞாபகத்தில் வந்தாள். என் சினிமா கனவு நிறைவேறினால் ஒருவேளை அவளிடம் மனம்விட்டு பேசலாம் என நினைந்திருந்தேன்.
நான் குழம்பி போய், சினிமாக்கனவில் கண்ணீர் வடித்தேன். ஆனால், யதார்த்த வாழ்வின் கனத்தில், கனவு வாழ்க்கை கலைந்துவிடுகின்றது.
இதற்குள் நான்கைந்து வருடங்கள் ஓடிவிட்டது.
தீடீரென ஒருநாள் இரவு பக்கத்து அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியில்,ஒரு வயது குழந்தை வீறிட்டது.
குழந்தையை கொஞ்சிய அவள்,
முகுந்தா அழாதடா. …கண்ணா முகுந்தா அழாதடா. ..என ஜன்னல் வழியாக என்னைப்பார்த்துக்கொண்டே கண்ணீர் வடித்தாள். நான் பார்த்த, பார்த்தும் நான் பார்க்காமல் போன அவளேதான்.
பிறகுதான் புரிந்தது , அவள் காதலித்தது
என்னை.
நான் சினிமாவை காதலித்த நேரத்தில்…..,
அதற்குள் அவளுக்கு திருமண முடிந்து, குழந்தையே பிறந்துவிட்டது.
சினிமா கனவாய் போனது போல், என் காதலும் கனவாய் போனது.
அவள் குழந்தைக்கு என் பெயர்.
என் பெயர் முகுந்தன்