யுவராஜ் சம்பத்
கடந்த ஒரு மாத காலமாக இந்தியாவின் காற்று மாசுபாடு குறித்த செய்திகள் தொடர்ந்து வாசிக்க நேரிடுகின்றன. கடந்த ஆண்டுகள் வரை இந்தப் பிரச்சனை இந்தியாவின் தலைநகரான புது டெல்லியை மையமாகக் கொண்டதாகவே இருந்தது. பொதுவாக தீபாவளி நாட்களில் தொடங்கும் காற்றுத் தரக் குறைவு, அதன் பின்னர் குளிர்காலம் முழுவதும் நீடிக்கும்.
தினமணி (16 ஜனவரி) செய்தியின்படி, 2024ஆம் ஆண்டில் டெல்லியில் மட்டும் காற்று மாசுபாட்டின் காரணமாக சுமார் 9,000 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த காற்று மாசுபாடு பிரச்சனை தற்போது சென்னையையும் தாக்கியுள்ளது. வழக்கமாக AQI (Air Quality Index) 80–100 அளவில் இருக்கும் சென்னை, போகி பண்டிகையை முன்னிட்டு 200 வரை உயர்ந்துள்ளது. இது “மிகவும் மோசமான தரம்” என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இதற்குக் காரணமாக, போகி என்ற பெயரில் தேவையற்ற பழைய பொருட்கள், குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகள், எரிக்கப்படுவதையே அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த நிலைமையின் காரணமாக விமான போக்குவரத்துகளும் சில நேரங்களில் பாதிக்கப்படுகின்றன. மேலும், காற்று மாசுபாட்டினால் டெல்லியில் நடைபெறவிருந்த பேட்மிண்டன் போட்டியிலிருந்து உலகின் மூன்றாம் நிலை வீரர், டென்மார்க்கைச் சேர்ந்த ஆண்டர்ஸ் ஆண்டோன்சன் (Anders Antonsen) விலகுவதாகவும், அதற்காக விதிக்கப்பட்ட 5,000 டாலர் அபராதத்தையும் செலுத்தத் தயாராக இருப்பதாக அறிவித்த செய்தி, இந்தப் பிரச்சனையின் தீவிரத்தை மேலும் உணர்த்துகிறது.
காற்று மாசுபாட்டிற்கான முக்கிய காரணங்களில் ஒன்று, மூடநம்பிக்கையின் அடிப்படையில் கொளுத்தப்படும் தீ. பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் பயிர் அறுவடைக்குப் பின் மீதமிருக்கும் நெல் ஒட்டு (paddy stubble) எரிக்கப்படுவது, மண்ணிற்கு சத்து தரும் என்ற தவறான நம்பிக்கையில் நடைபெறுகிறது. உண்மையில், இது செலவை குறைக்கும் ஒரு சுலபமான வழி என்பதே முக்கிய காரணம்.
ஒருபுறம் இந்தப் பிரச்சனை இருக்க, மறுபுறம் “தீ”யை மையமாகக் கொண்ட மற்றொரு மூடநம்பிக்கையாக தீபாவளி உள்ளது. இல்லாத கடவுளை இருப்பதாகக் கருதி, அவர் வென்றதாக அல்லது தோற்றதாகக் கூறப்படும் ஒருவரின் சாவை கொண்டாடும் விழாவாக அது மாறியுள்ளது.
இதுபோன்ற மூடநம்பிக்கைகள் தமிழின் வரலாற்றிலும் உண்டு. கிபி 7ஆம் நூற்றாண்டு முதல் 12ஆம் நூற்றாண்டு வரை நடைபெற்ற சைவ–சமண மோதல்களின் காலத்தில், பக்தி இயக்கத்தின் தாக்கத்தால் புனல்வாதம் மற்றும் அனல்வாதம் தீவிரமாக நடைமுறையில் இருந்தன. சமணர்கள் எழுதிய அரிய சுவடிகள் ஆறுகளில் வீசப்பட்டன; சில தீயில் எரிக்கப்பட்டன. பின்னாளில் அவை பொதுமக்களிடம் வந்தபோது, படிக்கத் தெரியாதவர்கள் அவற்றை “பழைய குப்பை” எனக் கருதி, போகிப் பண்டிகை அன்று எரித்தனர். அந்தப் பழக்கத்தின் தொடர்ச்சியே, இன்று டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றை நடுவீதிகளில் எரிக்கும் ஒரு கலாச்சாரமாக மாறியுள்ளது.
இவை அனைத்தும் சேர்ந்து மனித உயிரிழப்புகளுக்குக் காரணமாகின்றன. இதனை எதிர்ப்பதும், தவிர்ப்பதும் நமது தலையாய கடமை.
இந்தியா அதிக மக்கள்தொகை கொண்ட நாடு. கடந்த ஐந்து ஆண்டுகளாக உலகிலேயே மிகவும் நச்சுத்தன்மை கொண்ட காற்றை சுவாசிக்கும் நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் தொழில்களை கட்டுப்படுத்த அரசுகள் பல முயற்சிகளை மேற்கொண்டபோதும், இந்த நிலையை முழுமையாகத் தவிர்க்க முடியவில்லை.
டெல்லியில் சில நாட்களில் AQI 500ஐத் தாண்டுகிறது. காற்றுத் தர அளவுகோலில் 50க்கு மேல் இருந்தாலே அது நச்சுக்காற்று என வரையறுக்கப்பட்ட நிலையில், இந்திய நகரங்கள் தொடர்ந்து அந்த எல்லையை மீறிக்கொண்டே இருக்கின்றன. இந்தியாவின் மிக அதிக மாசுபட்ட நகரங்கள் பெரும்பாலும் கங்கை சமவெளியில் அமைந்துள்ளன. வடக்கிலும் தெற்கிலும் உள்ள மலைத் தொடர்கள் மாசுபட்ட காற்றை வெளியேற விடாமல் சிக்கவைக்கின்றன. கோடைக்காலத்தில் தார் பாலைவனத்திலிருந்து வரும் தூசி மாசுபாட்டை மேலும் அதிகரிக்கிறது; குளிர்காலத்தில் அந்த மாசுபட்ட காற்று வெளியேற முடியாமல் அடங்கிக் கிடக்கிறது.
அதிகரிக்கும் மக்கள்தொகை, தொழில்துறை நடவடிக்கைகள் ஆகியவை இந்தப் பிரச்சனையை இன்னும் சிக்கலாக்குகின்றன. இதைத் தடுப்பதற்காக பல அரசுகள் பல்வேறு காலகட்டங்களில் முயற்சிகள் எடுத்தாலும், அவை போதுமானதாக இல்லை.
குப்பை கொட்டும் நிலங்களில் தேங்கி கிடக்கும் குப்பை மலைகள், மீத்தேன் வாயுவை உருவாக்கி, சில நேரங்களில் தானாகவே தீப்பிடித்து எரிகின்றன. ஆகவே, வட இந்தியாவை ஆண்டுதோறும் தாக்கும் நச்சுத்தன்மை கொண்ட காற்றுக்கு ஒரே காரணம் மட்டும் சொல்ல முடியாது.
இந்த நிலைமையை மாற்ற அரசுகள் கட்டாயமாக பல மாற்றங்களைச் செய்ய வேண்டும். அதில் முதன்மையானது நிலக்கரிக்கு மாற்றாக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியை வேகமாக விரிவுபடுத்துவது. எஃகு, சிமெண்ட், ரசாயனங்கள் போன்ற கனரக தொழில்களில் வெளிப்படும் கார்பன் டைஆக்சைடு வாயுவை கணிசமாகக் குறைக்க வேண்டும்.
கிரீன் ஹைட்ரஜன் ஒரு நல்ல மாற்றாக அமையக்கூடும். ஆனால் அதிக முதலீடு தேவைப்படுவதால் தொழிற்சாலைகள் தயங்குகின்றன. எனவே அரசு தாராளமான நிதி உதவி மற்றும் ஊக்கத்திட்டங்களை வழங்க வேண்டும். மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க, தேவையான கட்டமைப்பு வசதிகளையும் பயனாளி ஆதரவையும் உருவாக்க வேண்டும்.
பயிர் கழிவுகளை எரிப்பதை முற்றிலும் தடுக்க வேண்டும். குப்பைகளை உரமாக மாற்றும் முயற்சிகளை அரசு தீவிரப்படுத்த வேண்டும். இதற்கான சட்டங்களை கடுமையாகவும் கட்டாயமாகவும் அமல்படுத்த வேண்டும்.
ஒன்றிய அரசு தொடங்கியுள்ள தேசிய தூய காற்று திட்டத்திற்கு (NCAP) 20,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிதியை திறம்பட பயன்படுத்துவது ஒரு பெரிய சவாலாக உள்ளது. பல மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள் தெளிவான தரவுகளும் தொழில்நுட்ப பார்வையும் இல்லாமல் செயல்படுவது இதற்குக் காரணமாகும்.
மேலும், தொழில் முனைவோர் திட்ட அனுமதிக்காக அரசுகளை அணுகும்போது, சுற்றுச்சூழல் அனுமதி, நிலம் கையகப்படுத்துதல் போன்றவற்றில் நீண்ட கால தாமதம் ஏற்படுகிறது. மாநில மற்றும் ஒன்றிய அரசுத் துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு குறைவும், மாவட்ட அளவில் பயிற்சி பெற்ற தொழில்நுட்ப பணியாளர்கள் இல்லாமையும் இதற்குக் காரணமாகின்றன. மானியங்கள் வழங்குவதிலும் தாமதம் ஏற்படுவதால் தொழில் முனைவோர் பின்னடைவை சந்திக்கின்றனர்.
இதனால், பசுமை மாற்றம் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுக்கான நிதி ஒதுக்கீடுகள் பல்லாயிரம் கோடியாக இருந்தாலும், அதன் பயன் எதிர்பார்த்த அளவில் கிடைக்கவில்லை. அதே நேரத்தில், காற்று மாசுபாடு குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடமும் பரவ வேண்டும். மக்கள் புரிந்து கொண்டு ஏற்றுக்கொண்டால், வெற்றியின் பாதி அங்கேயே கிடைத்துவிடும்.
மக்கள் இதை அவசர நிலை என உணர்ந்து, தங்களை மற்றும் தங்கள் குடும்பத்தினரை பாதுகாக்க வேண்டும். அரசுகள் மேற்கொள்ளும் முயற்சிகளில் பொதுமக்கள் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும். இது ஒருவரின் தவறு மட்டுமல்ல; இதில் நம்முடைய பங்கும் உள்ளது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
நாட்டின் வேகமான பொருளாதார வளர்ச்சி பாராட்டத்தக்கதுதான். ஆனால் அது மக்களின் ஆரோக்கியத்துடன் இணைந்ததாக இல்லாவிட்டால், அது நீடித்த வளர்ச்சியாக இருக்க முடியாது. மாசுபாடு தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க, நாட்டின் சுகாதார அமைப்பு எதிர்காலத்தில் மிகப் பெரிய நிதிச்சுமையைச் சுமக்க வேண்டியிருக்கும்.
காலநிலை மாற்றம் குடிநீர், உணவு பாதுகாப்பு ஆகியவற்றிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். சமத்துவமின்மை அதிகரிக்கும்; உற்பத்தித் திறன் குறையும்; வேலை நாட்கள் இழக்கப்படும்; மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். அதைவிட முக்கியமாக, பயம், பதட்டம், மனச்சோர்வு போன்ற உளவியல் பிரச்சனைகள் சமூகத்தில் அதிகரிக்கும்.
மாசு நிறைந்த நாட்களில் மக்கள் வீட்டிற்குள் முடங்கி கிடப்பதால் சமூக பங்களிப்பு குறையும். இதிலிருந்து தப்பிக்க மக்கள் இடம்பெயரத் தொடங்குவார்கள். அரசுகள் மீதும் சக மனிதர்கள் மீதும் நம்பிக்கை குறைந்து கோபமும் வெறுப்பும் அதிகரிக்கும். இது சில நேரங்களில் சமூக கலவரங்களுக்கும் வழிவகுக்கலாம்.
எனவே, இந்த நிலைமையிலிருந்து உடனடியாக வெளியேற நடவடிக்கை எடுப்பதே நலம்.
காற்று மாசுபாடு என்பது இனி எதிர்காலத்தில் வரும் அபாயம் அல்ல; அது இன்றே நம் உடலையும் சமூகத்தையும் தாக்கிக் கொண்டிருக்கும் ஒரு நிஜம். இதன் பாதிப்புகள் உடல் ஆரோக்கியத்தை மட்டும் அல்லாது, மனித உறவுகள், சமூக ஒற்றுமை மற்றும் வாழ்க்கை தரத்தையும் மெல்ல மெல்ல சிதைக்கின்றன. குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் நாள்பட்ட நோயாளிகள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பள்ளி செல்லும் வயதிலேயே குழந்தைகள் சுவாச நோய்களால் பாதிக்கப்படுவது, எதிர்கால மனித வளத்திற்கே ஒரு எச்சரிக்கை மணி.
இந்தப் பிரச்சனையை அரசுகளின் தோல்வியாக மட்டும் பார்க்க முடியாது. பொதுமக்களின் தினசரி வாழ்க்கை முறைகளும் இதற்குப் பெரிய காரணியாக உள்ளன. தனியார் வாகனப் பயன்பாடு, தேவையற்ற மின்சாரச் செலவு, திறந்தவெளிகளில் குப்பை எரித்தல், சுற்றுச்சூழலை அலட்சியப்படுத்தும் பழக்கங்கள்—இவை அனைத்தும் மாசுபாட்டை மேலும் தீவிரப்படுத்துகின்றன. “நான் மட்டும் மாற்றிக் கொண்டால் என்ன மாறும்?” என்ற மனநிலைதான் இந்த நெருக்கடியின் மிகப்பெரிய தடையாக உள்ளது.
உண்மையில், சிறிய மாற்றங்களே பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும். பொது போக்குவரத்தைப் பயன்படுத்துதல், மரங்களை பாதுகாத்து வளர்த்தல், குப்பைகளை பிரித்துச் சேகரித்தல், விழாக்களில் தீ மற்றும் வெடிகளை தவிர்த்தல் போன்ற செயல்கள் ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பாக மாற வேண்டும். சுற்றுச்சூழல் கல்வி பள்ளிப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக மட்டும் இல்லாமல், சமூக நடைமுறையாக மாற வேண்டிய அவசியம் உள்ளது.
இன்றைய தலைமுறை இந்தச் சவாலைக் கடந்து செல்லவில்லை என்றால், நாளைய தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்லப்போவது வளர்ச்சியல்ல—நச்சுத்தன்மை நிறைந்த ஒரு வாழ்விடமே ஆகும். அதைக் காக்கும் பொறுப்பு அரசுகளுக்கும் பொதுமக்களுக்கும் சமமாகவே உள்ளது.
“கெடுவல்யான் என்பதறிக தானெஞ்சி
விடுவல்யான் என்பதறிக வான்.”
நடுவுநிலைமை தவறிச் செயல்படலாம் என்று ஒரு நினைப்பு ஒருவனுக்கு வந்துவிடுமானால் அவன் கெட்டொழியப் போகிறான் என்று அவனுக்கே தெரிய வேண்டும்.
வள்ளுவர் 2000 ஆண்டுகளுக்கு முன்பே நம் மக்களுக்கு சொன்னதான செய்தி இதுதான்..
மறத்தல் தகுமோ??
யுவராஜ் சம்பத்…11.02.2026..