மகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல்:
(THE CONQUEST OF HAPPINESS)
பெர்ட்ராண்ட் ரஸ்ஸல்!
(BERTRAND RUSSEL)
பாகம் – 1
மகிழ்ச்சியின்மைக்கான காரணங்கள்
அத்தியாயம் – 7 பாவ உணர்வு / குற்ற உணர்ச்சி
[THE SENSE OF SIN]
தமிழாக்கம்: லதா ராமகிருஷ்ணன்


பாவம் செய்துவிட்டதான உணர்வு குறித்து ஏற்கனவே முதல் அத்தியாயத்தில் சில கருத்துக்களை முன்வைத்திருக்கிறேன். இந்த உணர்வு குறித்து நாம் இன்னும் ஆழமாகச் சென்று பார்க்கவேண்டியது அவசியம். ஏனெனில், வளர்ந்த மனிதர்களின் வாழ்வில் மகிழ்ச்சியின்மையை உருவாக்கும் மிக முக்கிய உளவியல் காரணங்களில் இது ஒன்றாகும்.
பாவம் குறித்த மரபாத்தமான, மதம் சார் உளவியல் ஒன்று இருக்கிறது. நவீன உளவியலாளர்கள் யாரும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதாவது, ஒரு குற்றச்செயலை செய்யும்படியாகத் தூண்டப்படும்போது அதை அதை குற்றச் செயலை செய்யும்படியாக தூண்டப்படும் போது அதைச் செய்வது தவறு என்று ஒவ்வொரு மனிதனின் மனசாட்சியும் அவருக்கு எடுத்துக்காட்டுகிறது. அதேபோல், அத்தகைய முறையற்ற செயலை மேற்கொண்ட பிறகு அந்த மனிதர் இரண்டுவிதமான வலி, வேதனை கூடிய உணர்வுகளை அனுபவிக்கக்கூடும். ஒன்று கழிவிரக்கம் என்று சொல்லப்படும் உணர்வு; ஆழ்ந்த வருத்தம். அதில் எந்தவித அடிப்படையும், பிரயோஜனமும் இல்லை. இரண்டாவது, சுய பச்சாதாபம் / மன மாற்றம். அது அவருடைய குற்றவுணர்வை அகற்றிவிடும் வலிமை வாய்ந்தது. ப்ராட்டஸ்டண்ட் நாடுகளில், கடவுள் நம்பிக்கை இழந்தவர்களில் பலரும்கூட பாவம் குறித்த மனமார்ந்த கண்ணோட்டத்தை பெரிய அளவு அல்லது சிறிய அளவு மாற்றங்கள், திருத்தங்களுடன் ஏற்றுக் கொள்வதை தொடர்ந்து கடைபிடித்துவந்தார்கள். நாம் வாழும் இந்த நாட்களில் உளவியலாய்வு காரணமாக நம்மிடம் மரபார்த்தமானத பார்வைக்கு நேர்மாறான அணுகுமுறைகளும் செயல்பாடுகளும் இருக்கின்றன.
பாவம் குறித்த பண்டைய கண்ணோட்டத்தை மரபுசாராதவர்கள் மறுதலிப்போடு மட்டுமல்லாமல் தங்களை மரபார்த்தமானவர்களாக பாவிப்பவர்களில் பலரும் கூட அதே மாதிரி மறுதலிக்கிறார்கள். மனசாட்சி என்பது மர்மமான ஒன்றாக இருந்த காலம் போய்விட்டது. அப்படி மனசாட்சி என்பது மர்மமாக இருந்த காரணத்தாலேயே கடவுளின் குரலாக கருதப்படக்கூடிய நிலைமையும் மாறிவிட்டது. இப்போது, மனசாட்சி என்பது உலகின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறுவிதமான செயல்களை வகுத்துரைப்பது என்று நமக்கு தெரியும். பொதுவாக, அது எல்லா இடங்களிலுமே ஆதி குடிகளின் பாரம்பரிய நடைமுறையோடு இணக்கமாகப் பொருந்தியிருப்பதாக கூற முடியும். அப்படியெனில், ஒரு மனிதனின் மனசாட்சி அவனை குத்தும்போது உண்மையில் என்ன நடந்துகொண்டிருக்கிறது?
மனசாட்சி என்ற சொல் ஒன்றுக்கொன்று வித்தியாசமான சில வெவ்வேறு உணர்வுகளை உள்ளடக்கியிருப்பது. இவற்றில் மிகவும் எளிய உணர்வு கண்டுபிடிக்கப்பட்டுவிடுவோமோ என்ற அச்சம். வாசகரே, நீங்கள் அப்பழுக்கற்ற வாழ்க்கை வாழ்ந்திருப்பீர்கள் என்பது உறுதி. ஆனால், தண்டனைக்குரிய குற்றச்செயல் எதையாவது எப்போதேனும் செய்திருக்கக்கூடிய ஒருவரிடம் இது குறித்து நீங்கள் கேட்டால் ’அப்படி கண்டுபிடிக்கப்படுவது நடந்தே தீரும் என்கிற தருணத்தில் சம்பந்தப்பட்ட அந்த நபர் தனது குற்றச்செயலுக்காக மனம் வருதினார். என்பதை அறிந்துகொள்ள முடியும். இது தொழில்முறைப்பட்ட திருடன் விஷயத்தில், திருடுவதை தொழிலாகக் கொண்ட ஒருவர் குறிப்பிட்ட கால சிறைவாசத்தை தன் தொழில் சார்ந்து எதிர்கொள்ள வேண்டிய இக்கட்டாகப் பார்ப்பவர் விஷயத்தில் பொருந்தும் என்று நான் சொல்லவில்லை. ஆனால், இது மரியாதைப்பட்ட அத்துமீறல்காரர் விஷயத்தில், அதாவது ஒரு நெருக்கடியான தருணத்தில் நிதி கையாடல் செய்துவிட்ட வங்கி மேலாளர் அல்லது இச்சைவேகத்தால் துண்டப்பட்டு பாலுறவு சார் அத்துமீறல் எதிலாவது ஈடுபட்டுவிட்ட மதபோதகர் போன்றவர்கள் விஷயத்தில் பொருந்தும் என்று சொல்கிறேன். மரியாதைப்பட்ட அத்துமீறல்வாதிகளான இத்தகு மனிதர்களைப் பொறுத்தவரை, தங்கள் குற்றச் செயல்கள் அம்பலமாக வாய்ப்புகள் அறவே யில்லை என்று தோன்றினால் அவர்களால் தங்கள் குற்றத்தை மறந்துவிட முடியும். ஆனால், அவர்களுடைய குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டால் அல்லது கண்டுபிடிக்கப்படலாகும் அபாய கட்டத்தில் அவர்கள் இருந்தால், இன்னும் ஒழுக்கத்தோடு நடந்துகொண்டிருக்கலாமே என்று அவர்கள் எண்ணுவார்கள்.
இந்த எண்ணம் தங்களுடைய குற்றத்தின் பிரம்மாண்ட அளவிலான தீவிரம், விளைவு குறித்த உயிர்ப்பான உணர்வை அவர்களிடம் ஏற்படுத்தக்கூடும். இந்த உணர்வோடு நெருங்கிய தொடர்புடையது தனது குழுவில் இருந்து வெளியேற்றப்படுவது குறித்த அச்சம். சீட்டு விளையாட்டில் ஏமாற்றும் ஒருவர் அல்லது வாக்குறுதியை காப்பாற்றாதவராய், தான் வாங்கிய கடனைத் திருப்பித் தராமலிருப்பவர், அவர் செய்த குற்றம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டால் குழுவிலிருந்து விலக்கி வைக்கப்படுவதிலிருந்து, குழுவினரின் கண்டனத்திற்கு எதிராக தன்னை தற்காத்துக் கொள்ள அவருக்கு எந்த வழி வகைகளும் இல்லை. இதில் அவர் மதம் சார் புத்தாக்கர், அராஜகவாதி போலவோ, புரட்சியாளரைப் போலவோ இருப்பதில்லை. மேற்கண்டவர்கள் நிகழ்காலத்தில் தங்கள் நிலைமை என்னவாக இருந்தாலும் எதிர்காலம் தங்கள் பக்கம் என்றும், நிகழ்காலத்தில் தாம் எந்த அளவுக்கு நிந்திக்கப்பட்டிருக்கிறார்களோ அந்த அளவுக்கு எதிர்காலம் அவர்களைக் கண்டிப்பாக கௌரவப்படுத்தும் என்றும் நம்புகிறவர்கள். இவ்வகை மனிதர்கள் தாம் சார்ந்த குழுவினரின் கோபத்துக்கும் கண்டனத்திற்கும் ஆளானபோதும், தமது குழுவால் விலக்கிவைக்கப்பட்ட போதும் பாவம் புரிந்தவர்களாக, குற்றம் புரிந்தவர்களாக உணர்வதில்லை. ஆனால், தனது குழுவின் ஒழுக்கவியலை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் ஒருவர் அதற்கு எதிராக நடந்து கொள்ளும் போது, அதன் விளைவாய் தனது குழுவினரின் அதிருப்திக்கு ஆளாகும்போது. தனது சாதியை இழக்கும்போது மிகவும் மகிழ்ச்சியின்மையை அனுபவிக்கிறார்; வருத்தத்தில் உழல்கிறார். இந்தவிதமான பெருந்தண்டனை குறித்த அவரது அச்சம் தனது செயல்களை பாவகரமானதாக அவரைக் கருதச் செய்கிறது
ஆனால். குற்ற உணர்வு என்பது, அதன் மிக முக்கியமான வடிவங்களில், இன்னும் ஆழமாக ஊடுருவிச் செல்வது. அது நம் நினைவிலி மனதில் வேரூன்றியிருப்பது. மற்றவர்கள் அதை ஏற்க மாட்டார்கள், மற்றவர்களால் அது கண்டனத்திற்கு உரிய அவச்செயலாகப் பார்க்கப்படும் என்ற அச்சத்தால் இந்த குற்ற உணர்வு நமது பிரக்ஞைத்தளத்தில் வெளிப்படுவதில்லை. நமது பிரக்ஞையில் சில குறிப்பிட்ட வகையான செயல்கள் பாவகாரியங்களாக, அது குறித்த நமது தீவிர சிந்தனைக் குரியவையாக, எந்தக் காரணமும் புலப்படாத அளவில் முத்திரை குத்தப்பட் டிருக்கின்றன. இந்தச் செயல்களில் இறங்கும் ஒருவர் எதற்கென்று தெரியாமல் தர்மசங்கடமாக உணர்கிறார். பாவச் செயல் என்று அவர் நம்பும் செயல்களை மேற்கொள்ளாமல் இருக்கும் மனிதனாக தான் இருக்க வேண்டும் இருந்திருந்தால் எத்தனை நன்றாக இருந்திருக்கும் என்று விழைகிறார் அவர் . மனதளவில் தூய்மையானவராக இருப்பவராக தான் நம்பும் ஒருவருக்கே அறிவியல் ரீதியான பாராட்டையும் அனுமதிப்பையும் அவர் அளிக்கிறார் . முற்றும் துறந்த முனிவராக இருத்தல் தனக்கு முடியக்கூடியது அல்ல என்று அதிக அளவோ, ஒப்பீட்டளவில் அதிக அளவு அல்லது குறைந்த அளவு வருத்தத்துடன் அவர் கண்டுகொள்கிறார்.
சொல்லப்போனால், முற்றும் துறந்த முனிவர் என்பது குறித்து அவருடைய அறிதலும் புரிதலுமே வழக்கமான தினசரி வாழ்க்கையில் பின்பற்ற முடியவே முடியாத ஒரு விஷயமாகவே இருக்க வழி யுண்டு. அந்தப் புரிதலின் விளைவாக அவர் வாழ்க்கை முழுவதையுமே ஒரு வித குற்றவுணர்வோடு கழிக்கிறார். வாழ்வின் ஆகச்சிறந்த அம்சங்கள் தனக்கானவை அல்ல என்றும், தனது வாழ்க்கையின் ஆகச்சிறந்த தருணங்கள் உணர்ச்சி வசப்பட்ட பிராயச்சித்த உணர்வுகள் நிரம்பியவையே என்றும் எண்ணியபடி வாழ்க்கை முழுவதுமே ஒரு குற்ற உணர்விலேயே கழிக்கிறார்.
குற்ற உணர்வு கொள்ளும் ஒவ்வொரு மனிதனின் விஷயத்திலும் அவர் தனது 6 வயதை எட்டும் முன் தனது தாய் மற்றும் செவிலிர்களிடமிருந்து பெறும் அறவியல் போதனைகளே அதற்கான காரணமாக அமைகின்றன அந்த வயதிற்குள்ளாகவே அவர் மற்றவரை பார்த்து கெட்ட வார்த்தை சொல்வது தீய குணமென்றும், சீமாட்டிகளின் மொழி வழக்கு போலவே இருப்பதான பேச்சு தவிர்த்து வேறு எதையும் பேசுவது சரியில்லை என்றும், கெட்ட மனிதர்களே குடிப்பார்கள் என்றும், புகையிலை என்பது மிக உன்னதமான ஒழுக்கத்தோடு இம்மியளவும் இணக்கமற்றது என்றும் கற்றுக்கொண்டுவிடுகிறார். ஒருவர் பொய் சொல்லவே கூடாது என்று கற்றுக்கொள்கிறார்.
எல்லாவற்றுக்கும் மேலாக, பாலுறவு தொடர்பான உடல் உறுப்புகளில் ஏற்படும் எந்த ஆர்வமும் மிக மிக மோசமானது என்று கற்றுக்கொண்டுவிடுகிறார். இவையெல்லாம் தனது அம்மாவின் கண்ணோட்டங்கள் என்பது அவருக்குத் தெரியும். தன்னை சிருஷ்டித்தவர்களின் கண்ணோட்டங்கள் இவை என்று அந்த மனிதர் நம்புகிறார். அவருடைய அம்மா அவரை அன்போடு நடத்துவதும், அப்படியில்லாமல் அவள் அவரைப் புறக்கணிப்பவளாக இருந்தால், அவருடைய செவிலியால் அப்படி அன்போடு அக்கறையோடு நடத்தப்படுவதும் வாழ்வில் அவருக்குக் கிடைக்கக் கூடிய உச்சபட்ச ஆனந்தம் _ ஒழுக்கமற்ற, தீய செயலாக வகுத்துரைக்கப்பட்டிருக்கும் நெறிமுறைகளுக்கு எதிராக அவர் குற்றமிழைக்கா விட்டால் மட்டுமே, அவற்றுக்கு எதிரான பாவ காரியங்களில் ஈடுபடாவிட்டால் மட்டுமே, அந்த ஆனந்தத்தை அவரால் அடைய முடியும். எனவே, அவர் தனது தாயோ செவிலியோ ஆட்சேபிக்கக்கூடிய எந்த நடத்தையுடனும் ஏதாவதொரு வகையில், ஏனென்று தெளிவற்ற முறையில், மோசமான ஒன்றைத் தொடர்பு படுத்திக்கொள்கிறார்.
மெல்ல மெல்ல, அவர் வளர வளர, தனது ஒழுக்கவியல் சார் நடத்தை விதிகள் எங்கிருந்து வந்தன என்பதும், அவற்றை மீறி நடந்து கொள்வதற்கு ஆரம்பத்தில் என்ன தண்டனை கிடைத்தது என்பதும் அவருக்கு மறந்துபோய்விடுகிறது. ஆனாலும், அவர் அந்த ஒழுக்கவியல் சார் நெறி முறையைத் தூக்கியெறிந்துவிடுவதில்லை. அதை மீறி நடந்துகொண்டால் அபாயகரமான விளைவுகள் கண்டிப்பாகத் தனக்கு நேரும் என்ற நினைப்பு அவரிடம் எப்போதுமே இருந்துகொண்டிருக்கிறது
இந்த குழந்தை பருவ ஒழுக்கவியல் போதனையின் பெரும்பகுதி எந்தவிதமான தர்க்கபூர்வ அடித்தளமும் இல்லாதது. எனவே, அதை சாதாரண மனிதர்களின் சாதாரண நடத்தையோடு பொருத்திப் பேச இயலாது. எடுத்துக்காட்டாக, கெட்ட வார்த்தை என்று கூறப்படும் மொழிவழக்கைப் பயன்படுத்தும் ஒரு மனிதன் பகுத்தறிவார்ந்த, தர்க்கபூர்வமான கண்ணோட்டத்தை பயன்படுத்தாதவரை விட எந்தவிதத்திலும் மோசமானவர் கிடையாது. இருந்தபோதிலும், கோபத்தில் கெட்ட வார்த்தை சொல்லித் திட்டுவதைக் கைவிடவேண்டியது அதிலிருந்து துறவறம் பூணுவது ஒரு முனிவருக்கு அவசியமானது என்பதாகவே முனிவரை பற்றிய எல்லோருடைய மனத்தோற்றம் இருக்கிறது. பகுத்தறிவு தர்க்கபூர்வமான சிந்தனை என்ற ரீதியில் பார்க்கும் போது இது அபத்தமான ஒரு கண்ணோட்டம். மது, புகையிலை விஷயத்திலும் அப்படியே.
மதுவைப் பொறுத்தவரை, அது பாவகரமானது என்பதான பார்வை தென்திசை நாடுகளில் நிலவவில்லை. குடிப்பது குறித்து ஒருவித பக்தியின்மை புழக்கத்தில் இருக்கிறது என்றுகூடச் சொல்லலாம். ஏனெனில், நமது தேவனும் அப்போஸ்தலர்களும் ‘வயின்’ அருந்தினார்கள் என்பது தெரிந்த விஷயம். புகையிலையைப் பொறுத்தவரை, அது பயன்பாட்டுக்கு வருவதற்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த தலைசிறந்த துறவிகள் நன்கு அறியப்பட்டிருப்பதால் புகையிலை குறித்த ஓர் எதிர்மறை நிலைப்பாட்டைத் தக்கவைத்துக்கொள்வது அதிக எளிதாக இருக்கிறது. ஆனால், இங்கும் தக்கப்பூர்வ வாதம் என்பது சாத்தியமில்லாதது. எந்த ஒரு துறவியும் புகைக்க மாட்டார் என்ற கண்ணோட்டம் – முந்தைய ஆய்வலசலில் உள்ளது – தனக்கு இன்பம் அளிக்கிறது என்ற காரணத்திற்காக மட்டும் ஒரு துறவி எதையும் செய்ய முற்பட மாட்டார் என்ற கண்ணோட்டத்தை ஆதாரமாகக் கொண்டு அமைந்தது. இந்த, துறவி வாழ்வியல் சார் அம்சம் சாதாரண ஒழுக்கவியலில் ஏறத்தாழ நனவிலி மனம் சார்ந்ததாகவே மாறிவிட்டது. ஆனால், அது நமது ஒழுக்கவியல் சார் நடத்தை விதிகளை பகுத்தறிவுக்கு ஒவ்வாததாக்கும்படியான அனைத்துவிதமான வழிகளிலும் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு பகுத்தறிவார்ந்த நெறிமுறையில் யாருக்கேனும் ஆனந்தமளித்தல் – தனக்கே கூட – என்பது போற்றுதலுக்குரியதாக பாவிக்கப்படும் – அதாவது, இந்த ஆனந்தத்தின் சமமான அளவு வலி, வேதனை தனக்கோ மற்றவர்களுக்கோ ஏற்படாத வரை.
(இன்னுமுண்டு)