பாலமுருகன்.லோ
ஆம்புலன்ஸ் வண்டி சத்தத்துடன் ரோட்டில் விரைந்தது. வாகன ஓட்டிகள் ஆம்புலன்ஸின் சத்தத்தைக் கேட்டு இடது புறமாக ஒருவரின் பின் ஒருவராக ஒதுங்க ஆரம்பித்தனர். ஆம்புலன்ஸ் வண்டி தனது வேகத்தைக் குறைக்காமலும் தனது சத்தத்தையும் அணைக்காமலும் ஆஸ்பத்திரியை நோக்கி விரைந்தது.
அந்த ஆம்புலன்ஸினுள் பங்கஜம் கண்ணீரும் கம்பலையுமாகத் தன் இஷ்ட தெய்வத்தையெல்லாம் வேண்டிக்கொண்டு பிரார்த்தனை செய்தபடி கலாவின் கைகளைப் பற்றிக்கொண்டிருந்தாள். பங்கஜத்திற்கு நேர் எதிர்ப்புறத்தில் அவளது கணவன் லிங்கம் அமர்ந்திருந்தார், சோகமே உருவெடுத்தாற்போல்.
இவர்கள் இருவரும் இப்படி சோகத்துடன் இருப்பதற்குக் காரணம் அவர்களது மகள் கலாதான். ஏன் கலாவை ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்கிறார்கள் என்றால்? அவள் தற்கொலைக்கு முயற்சி செய்ததால், அவளைக் குண்டுக்கட்டாக அள்ளிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர் அவளது பெற்றோர்.
லிங்கம் தன் கையில் கட்டியிருக்கும் வாட்சைப் பார்த்தபடி, “ஏம்பா தம்பி, கொஞ்சம் சீக்கிரம் போப்பா, எங்களுக்குப் பயமா இருக்கு,” என்றார்.
“சார், கவலைப்படாதீங்க. சரியான நேரத்திற்கு நாம ஆஸ்பத்திரிக்குப் போய்ச் சேர்ந்திடலாம், நம்பிக்கையுடன் இருங்க,” என்றான் ஆம்புலன்ஸ் டிரைவர்.
“சரிப்பா, ரோட்டைப் பார்த்து ஓட்டு. நாங்க உன்னைத் தொந்தரவு செய்ய மாட்டோம்,” என்ற பதிலைக் கூறி, தனது புலம்பலை நிறுத்தினார் லிங்கம்.
ஆம்புலன்ஸ் ஆஸ்பத்திரி வாயிலை வந்து அடைந்தவுடன், டிரைவர் வண்டியிலிருந்து இறங்கி ஓடிப்போய் செவிலியரை அழைத்து வந்த பிறகு, அங்கு வாயிலின் இடது புறமாக இருந்த ஸ்ட்ரெச்சரை எடுத்து, தனது ஆம்புலன்ஸ் பக்கத்தில் கொண்டுவந்து, ஆம்புலன்ஸ் கதவைத் திறந்தான். முதலில் லிங்கம் இறங்க, அதன் தொடர்ச்சியாகப் பங்கஜமும் இறங்கியவுடன், ஆஸ்பத்திரியிலிருந்த செவிலியர்கள் ஆம்புலன்ஸிற்குள் ஏறி, கலா படுத்திருந்த ஸ்ட்ரெச்சரைத் தூக்கி, வண்டியின் கீழ் வைக்கப்பட்டிருந்த மற்றொரு ஸ்ட்ரெச்சரில் அவளைக் கிடத்தினர். செவிலியருடன் பங்கஜமும் லிங்கமும் ஸ்ட்ரெச்சருடன் ஓட ஆரம்பித்தனர் எமர்ஜென்சியை நோக்கி.
எமர்ஜென்சியில் இருந்த டூட்டி டாக்டர் இவர்களிடம் என்ன நடந்தது என்று கேட்க, இவர்கள் விரிவாக அவரிடம், “கலா அந்த மாதிரி பண்ணிக்கிட்டா, நாங்க எதேச்சையா பார்த்ததால இங்கு அழைச்சிட்டு வந்துட்டோம்,” என்றனர்.
“சரி, இதற்கு அப்புறம் நீங்க உள்ள வரக்கூடாது. நாங்க என்னன்னு பார்க்கிறோம், இப்படி வெளியே உட்காருங்க. இருவரில் ஒருவர் போய் ரிசப்ஷனில் உங்க டீடெய்ல்ஸ் எல்லாம் கொடுங்க. பின், அவர்கள் கேட்கிற முன் பணத்தை அங்கு கட்டிடுங்க,” என்றார் டூட்டி டாக்டர்.
லிங்கம், “சரி டாக்டர், நான் போய் அந்த ஃபார்மாலிட்டீஸைப் பார்க்கிறேன் டாக்டர்,” என்று கூறிவிட்டு, பங்கஜத்தை அங்கு உட்காரவைத்துவிட்டு, அவர் மட்டும் ரிசப்ஷனுக்கு விரைந்தார்.
லிங்கம் ரிசப்ஷனில் எவ்வளவு சொன்னார்களோ, அவ்வளவு பணத்தையும் தான் கொண்டு வந்த கார்டின் மூலம் செலுத்தினார். பின் ஆஸ்பத்திரியில் உள்ள விநாயகரைப் பார்க்கச் சென்றார் லிங்கம். கிழக்கை நோக்கி வீற்றிருக்கும் விநாயகரை லிங்கம் மனமுருக வேண்டினார். “கடவுளே, எப்படியாவது அவளைக் காப்பாத்தி எங்க கையில கொடுத்துடுப்பா, எங்களுக்குன்னு யாருப்பா இருக்கா? இவளை விட்டா வேறு ஆளு இல்லப்பா. ஏதோ எங்க காலம் இன்னும் கொஞ்ச காலம்தான், அதுவரையிலும் அவள் எங்களுடன் இருக்கும் படி செய்திடுப்பா. இது என்ன அவளுக்கு சாகுற வயசா? இல்லையே!. அப்பா, அவ ஏற்கனவே மனசு ஒடைஞ்சு போய்த்தான் இருக்கா, அதனால்தான் இப்படி புத்தி பேதளிச்சு என்னென்னமோ யோசிச்சு செஞ்சுட்டா. நீ தான் அவளை எப்படியாவது காப்பாத்தணும் சாமி,” என்று தன்னாலான மட்டும் கடவுளிடம் முறையிட்டார்.
இங்கு இவர் சாமியிடம் மன்றாடிக்கொண்டிருக்கிற சமயத்தில், பங்கஜம் தன் சிவந்த கண்களை மூடியபடி, தன் தலையைச் சுவற்றில் சாய்த்தபடி இருந்தாள். அவளது நினைவில், கலா “வேண்டாம், வேண்டாம்” என்று சொன்னதுதான் மீண்டும் மீண்டும் கண்முன் வந்துபோனது. லிங்கம் மற்றும் பங்கஜம் அன்று கலாவைச் சமாதானம் செய்தனர்.
“ஏம்மா, இப்ப உனக்கு என்ன வயசாச்சுதும்மா! இன்னும் உனக்கு வயசு இருக்கு. நீ இப்படி இருக்கிறது எங்களால பார்க்க முடியலை. எவ்வளவு காலம் நீ இப்படி இருப்பே? உனக்குன்னு ஒரு வாழ்க்கை வேண்டாமா? அதுதான்மா நாங்க விரும்பறோம். எவ்வளவு காலம் நீ எங்களுடனே இருக்க முடியும்? உனக்குன்னு ஒரு துணை வேண்டாமா? அதனால, நாங்க சொன்னதைக் கொஞ்சம் சிந்திச்சுப் பாரேன்,” என்று மெல்ல மெல்லச் சொல்லி, அவளை ஒரு வழியாக மறுமணத்திற்குச் சம்மதத்தைப் பெற்றனர்.
ஆனால் அந்த சம்மதத்தைச் சொல்ல பல வருடங்கள் தேவைப்பட்டது. ஏனென்றால் அவளது முதல் மணம் அவளுக்குக் கொடுத்துவைக்கவில்லை. ஒரே வருடத்திற்குள்ளேயே அவளது கணவன் நோயின் தாக்கத்தால் உயிரிழக்க நேர்ந்தது. அதன் பின் கலா மீண்டும் பங்கஜம் மற்றும் லிங்கத்துடன் தான் வாழ்ந்துவந்தாள். அதைப் பார்த்துக் கவலை கொண்ட பெற்றோர் அவளுக்கு எப்படியாவது மீண்டும் மறுமணம் செய்திட வேண்டும் என்று நினைத்தனர். அவளது வாழ்வு அப்படி இருண்டுபோய் இருக்க நாமே காரணமாய் போயிட்டோமே என்று நினைத்தனர் இருவரும்.
இந்த முறை அவளுக்கு மீண்டும் மாப்பிள்ளை தேடிப்பிடித்து கட்டிக்கொடுக்கணும் என்று இருவரும் முழு முனைப்புடன் கலாவுக்கு மாப்பிள்ளை தேடினர். கலா எவ்வளவோ தனது பெற்றோருடன் மீண்டும் மீண்டும் சொல்லிப்பார்த்தாள். “எனக்கு மறுமணம் வேண்டாமே! நான் உங்களுடனே இருந்துட்டு போறேனே,” என்பாள்.
அதற்கு அவளது பெற்றோர், “ஏம்மா, ஏதோ யார் கண்ணு பட்டதோ, முதல் திருமணம் தான் அற்பாயுசுல போயிடுச்சு. உனக்கு இன்னும் வயசு இருக்குதும்மா, நீ இப்படி உன் வாழ்க்கையைத் தனியாக் கழிக்கக் கூடாது. எல்லாம் போகப்போக சரியாயிடும், நீ வேணா பாரு, நீ சந்தோஷமாதான் இருக்கப் போற, அதை நாங்க பார்க்கத்தான் போறோம்,” என்று அவளிடத்தில் கூறிவந்தனர். இது அனைத்தும் பங்கஜத்தின் நினைவில் வந்து போயின.
பங்கஜம் கடவுளின் மீது கோபத்தையும் வெறுப்பையும் வைத்திருந்தாள். “முதல் திருமணம் தான் அற்பாயுசுல போயிடுச்சு. அவளுக்கு அமைந்த இரண்டாவது கல்யாணமாவது ஒழுங்கா அமையக்கூடாதா? சாமி! நாங்க வேண்டாத தெய்வமில்ல, போகாத கோவில் இல்ல. இருந்தும் எங்களை நீ ஏன் இப்படிச் சோதிக்கிற? பாவம் அவ சின்னப்பொண்ணு, அவளுக்கு அடி மேல் அடி கொடுத்துக்கிட்டே இருந்தா அவ எப்படித் தாங்குவா? நீயே சொல்லு கடவுளே,” என்று மூடிய கண்களைத் திறக்காமல் மீண்டும் கடவுளுடன் போராட்டத்தை நடத்திக்கொண்டிருந்தாள் பங்கஜம். “நீ அவளுக்கு ஒரு நல்ல வழியைக் காட்ட மாட்டியா கடவுளே? நீ மட்டும் ஒரு நல்ல வாழ்க்கையை அவளுக்கு அமைத்துக் கொடுத்திருந்தா இப்ப அவ இப்படிப் பண்ணியிருப்பாளா? எல்லாம் எங்களாலதான்னு சொல்லுறியா நீ? ஏம்பா, உனக்கு இது அடுக்குமா? நாங்க எப்படிப்பா அவளுக்குத் துரோகம் செய்வோம்? அவள் வாழ்க்கை நன்றாக இருக்கணும்னுதான் மறுமணத்துக்கே அவளைச் சம்மதிக்க வச்சோம். இப்ப என்னடான்னா, நல்ல வாழ்வும் அவளுக்கு இல்லாமப் போயிடுச்சு. சரி, மனசை இப்பதான் கொஞ்ச காலம் தேத்திக்கிட்டு மீண்டும் போராட ஆரம்பித்தோம். இப்ப போய் இவ இப்படி செஞ்சுக்கிட்டாளே! நாங்க யாருக்குப்பா எந்தக் கெடுதலைச் செஞ்சோம்? நீ ஏன் எங்களுக்கு இவ்வளவு பெரிய வலியையும் வேதனையையும் மீண்டும் மீண்டும் கொடுக்கிறாய்?” என்று கடவுளுடன் மனமுருக மௌனமாகப் பேசிக்கொண்டிருந்த காரணமோ என்னவோ.
எமர்ஜென்சியில் இருந்து டாக்டர் வெளியே வந்து, “கலாவோட அட்டெண்டர் யார்?” என்றார்.
உடனே பங்கஜம் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து, “என்ன டாக்டர்?” என்றாள்.
“ஏம்மா, நீங்க என்ன வேணும் பேஷண்ட்டுக்கு?” என்றார் டாக்டர்.
“டாக்டர், நான் அவளுடைய அம்மா,” என்றாள் பங்கஜம்.
“இதைப் பாருங்கம்மா, சரியான நேரத்துக்குக் கொண்டு வந்ததால உங்க மகளைக் காப்பாற்ற முடிந்தது. கொஞ்சம் தாமதமாக வந்திருந்தீங்கன்னா, இப்படி அவளைப் பார்த்திருக்க மாட்டீங்க. ஏம்மா, ஏன் இப்படி இந்த நிலைக்குத் தள்ளப்பட்டாங்க? ரொம்பவே மனசஞ்சலத்தில் இருக்காங்க போல. இப்படி இருக்கிறவங்களை மத்தவங்க ரொம்ப கண்ணும் கருத்துமா பார்த்துக்கணும். அவங்களை தனியா விடக்கூடாது, யாராவது கூடவே இருந்துகிட்டே இருக்கணும்.”
“சரிம்மா.. யாராவது சைக்யாட்ரிஸ்ட்கிட்ட கூட்டிட்டுப் போனீங்களா?”
“இல்லை டாக்டர்.”
“முதல்ல பேஷண்ட்டை சைக்யாட்ரிஸ்ட்கிட்ட கூட்டிட்டுப் போங்க, ரெண்டு மூணு கவுன்சிலிங் எடுங்க. பின், பேஷண்ட்டோட நிலையைப் பொறுத்து சைக்யாட்ரிஸ்ட் டாக்டரே என்ன செய்யணும்னு சொல்வார்,” என்று கூறினார். “இன்னும் ரெண்டு நாள் அப்சர்வேஷன்ல இருந்துட்டு, அப்புறம் டிஸ்சார்ஜ் செஞ்சுட்டுப் போங்க,” என்றார்.
“டாக்டர், தெய்வமா இருந்து எங்க மகளைக் காப்பாத்திட்டீங்க.”
“இல்லம்மா, நீங்க அந்தக் கடவுளுக்குத்தான் நன்றியைச் சொல்லணும். சரியான நேரத்துக்கு வந்ததால உங்க மகள் பத்திரமா உங்ககிட்ட திரும்பி வந்திருக்கா. நான் சொன்ன மாதிரி சைக்யாட்ரிஸ்ட்கிட்ட கூட்டிட்டுப் போங்க.”
“சரி டாக்டர், கட்டாயம் அழைச்சுட்டுப் போறோம்,” என்றாள் பங்கஜம்.
விநாயகரிடம் வேண்டிக்கொண்டிருந்த லிங்கம், வெகு நேரம் கழித்து உள்ளே வந்தார். வந்தவரிடம் இந்தச் செய்தியைப் பங்கஜம் சொன்னவுடன், லிங்கம் தன் மனதாரக் கடவுளுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
ரெண்டு நாள் அப்சர்வேஷனில் இருந்துவிட்டு அவர்கள் வீடு திரும்பினர் மூவரும். டாக்டர் சொன்ன மாதிரி சைக்கியாட்ரிஸ்ட்டிடம் அழைச்சுட்டு போனாங்க தங்களது மகளை. முதலில் வர மறுத்த கலா, பின் அம்மா, அப்பாவின் அழுகையால் ஒத்துக்கொண்டாள்.
சைக்கியாட்ரிஸ்ட் அவளைப் பரிசோதித்துவிட்டு, அவளுடைய கடந்த கால நிகழ்வுகளை எல்லாம் கேட்டு அறிந்துகொண்டு, ஒரு நல்ல மனநல ஆலோசகர் என்ன செய்வாரோ, அதை அவரும் கலாவுக்கு மெதுவாகச் சொல்லிச் சொல்லிப் புரியவைத்தார்.
அவர் அவளிடத்தில், “கலாம்மா, எல்லோரும் நல்லா இருக்கணும்னுதான் போராடுறாங்க. ஒரு சிலர் அதில் வெற்றி அடையறாங்க. மற்றும் சிலர் தோல்வி அடையறாங்க. இதுல என்ன பார்க்க வேண்டியது என்றால், தோற்றவர்கள் அவ்வளவுதான் வாழ்க்கை என்று எண்ணுவதுதான் பெரிய முட்டாள்தனம். ஏம்மா கலா, தோல்விக்குப் பின்னாலதான் ஒரு பெரிய வெற்றி காத்திருக்கிறது. இது எத்தனை பேருக்குத் தெரியும்?”
“சரிம்மா நீயே சொல்லு, நீ கல்யாணம் பண்ணிக்கலைனா என்னவா ஆகியிருப்ப?”
‘நல்லா படிக்கணும்னு நினைச்சிருந்தேன் டாக்டர்.’
‘என்னவாக ஆக வேண்டும் என்று எண்ணியிருந்தாய்?’
‘பிஎச்.டி எல்லாம் படிக்கலாம்னு நினைத்திருந்தேன்.’
“ஏன், இப்ப உன்னால அதைப் படிக்க முடியாதா? சொல்லு,” என்றார் டாக்டர்.
“டாக்டர், அது அப்படி அல்ல டாக்டர். இப்ப போய் எப்படிப் படிக்கிறது?”
“ஏம்மா, படிப்புக்கு வயசு ஏதும்மா… எப்போ வேணும்னாலும் படிக்கலாம்.”
“ஏம்மா, உனக்குத் தெரியாதா? 50 வயதுக்கு மேல் சாதனை படைத்த 50 பெண்களில் மூவர் இந்தியப் பெண்கள். அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல வணிக இதழான ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள பட்டியலில் மூன்று இந்தியப் பெண்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர். ஊர்மிளா: குஜராத்தைச் சேர்ந்தவர் (80 வயது), சமையல் துறையில். கிரண் மஜும்தார் ஷா: பெங்களூருவைச் சேர்ந்தவர் (71 வயது), ஆண்டர்பிரனராக உள்ளார். ஷீலா படேல்: (72) மும்பையைச் சேர்ந்தவர், இவர் சமூக ஆர்வலர். இவர்களைப்போல் ஏன் நீயும் ஒரு உதாரண புருஷியாக மாறக்கூடாது? சற்று சிந்தித்துப் பார் கலா,” என்றார் டாக்டர். “கலா, நீ நல்லாவே மாத்திரைக்கு ரெஸ்பாண்ட் பண்ணுற. உன்னோட பயத்தை விட்டு வெளியே வா. நீயும் மத்தவங்க மாதிரி சிறகடித்துப் பறக்கலாம். நான் மேலே சொன்ன மூணு உதாரணப் பெண்களையும் நீ நினைத்துப் பார். உனக்குள்ளேயும் அந்த உத்வேகம் கட்டாயம் வரும்.”
“சரி டாக்டர், அப்ப நீங்க சொன்ன மாதிரி நான் படிக்கிறேன். இந்த உலகத்தில் தோல்வியடைந்தவளும் மீண்டும் ஜெயிச்சு முன்னுக்கு வருவாள் என்பதற்கு நானே ஒரு உதாரணமாக இருக்கப் போறேன்,” என்றாள் கலா.
டாக்டரும் கலாவின் பெற்றோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். கலாவின் பெற்றோர் சைக்கியாட்ரிஸ்ட் டாக்டருக்குத் தங்களது நன்றியைக் கண்ணீரால் தெரியப்படுத்தினர்.
-பாலமுருகன்.லோ-