ரங்கநாயகி
(புதினம்)
ஆசிரியர்: கே.பாரதி
முதல் பதிப்பு: ஜனவரி, 20 21. வெளியீடு கவிதா பப்ளிகேஷன்ஸ்

கே.பாரதி: கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றியவர். மாணவியாக இருந்த காலத்திலிருந்தே எழுத்துப் பணியிலும், சமூகப் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். இலட்சியப்பெண் என்ற இதழின் ஆசிரியராகப் பணியாற்றி யவர். தமிழ் சினிமாவில் பெண்கள் என்ற கருப்பொருளில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றுள்ளார். அது நூலாகவும் வெளியாகியுள்ளது. எழுத்தாளர்கள் ராஜம் கிருஷ்ணன், சூடாமணி ஆகியோர் குறித்த நூல்களையும் எழுதியுள்ளார்.
* நூலின் பின் அட்டையில் இடம்பெறும் முத்திரை வாசகம்
“…………. அமுதம் வேண்டிப் பாற்கடலைக் கடைஞ்ச போது கூட முதல்ல ஆலகாலம் தான் வந்தது. அதைப் பெண்கள் தான் கண்டத்திலே அடக்கிக்க வேண்டி யிருக்கு. முழுங்கினா நமக்கு சேதம். உமிழ்ந்தா குடும் பத்துக்கு சேதம். ஆனா, என்றைக்காவது ஒருநாள் அமுதம் வரும்! நம்பிக்கை இருக்கு!”

நல்ல படைப்பு என்பதற்கான தர நிர்ணய அளவுகோல் எது? தர நிர்ணய அளவுகள் யாவை? ஒரு வகையில் இது வாசகருக்கு வாசகர் மாறுபடலாம் என்றாலும் பரவலாக அறியப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட அடிப்படை அளவுகோல்கள் சில உண்டு. ஒருவகை Catharsis உணர்வை ஏற்படுத்துதல்; மனித மனதை மேம்படுத்துதல், விசாலமாக்குதல் வாழ்க்கை குறித்த நம் பார்வையை தெளிவுபடுத்துதல், விரிவுபடுத்துதல்… அதேபோல் Style of narrationனும் முக்கியம். ஒரேடியாக புரியாமல் போனாலும் அனைத்து தரப்பு வாசகர்களாலும் ஒரு படைப்பிற்குள் ஒன்றமுடியாமல்போய்விடும் அதேசமயம், எளிமையாக எழுதுகிறேன் என்று ஒரேயடியாக வறண்ட எழுத்துநடையாக இருந்தாலும் வாசகர் மனதில் தாக்கம் ஏற்படுத்தத் தவறிவிடும். படைப்பாளி கதையோட்டத்தில் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்வதே குறியாக கிடைத்த இடத்திலெல்லாம் பீடம் ஏறி போதித்துக்கொண்டேயிருந்தால், மேடை ஏறி முழங்கிக்கொண்டேயிருந்தால் வாசகருக்கு கதையில் பங்கேற்க இயலாது. வாசகப் பிரதிக்கான இடமேயில்லாமல் வாசகர், வெறும் பார்வையாளர் நிலையில் நின்றுவிடுவார்.
Underplay of emotions எழுத்து, சினிமா இரண்டிலுமே தரமான படைப்புக்கான தர நிர்ணய அளவுகோலாகக் கொள்ளப்படுகிறது. Underplay of emotionsஇல் வாசக மனங்களில், பார்வையாளர்கள் மனங்களில் உச்சபட்ச தாக்கத்தை ஏற்படுத்துதல் என்பது உட்பொருள்.
கே.பாரதி எழுதிய ரங்கநாயகி என்ற தலைப்பிலான நாவலை (வெளியீடுகவிதாபப்ளிகேஷன்ஸ்; முதல் பதிப்பு: ஜனவரி,20 21) வாசித்த போது மேற்கண்ட சிந்தனைகள் தவிர்க்க முடியாமல் எழுந்தன. இந்த புதினத்திலும், இதற்கு முந்தைய அவரது நூல்களான சொந்தசகோதரிகள் என்ற தலைப்பிலான சிறுகதை தொகுப்பு, தேவ மனோகரி என்ற புதினம் போன்றவற்றிலும் கதாசிரியர் பற்றிய குறிப்பு மிகவும் சுருக்கமாகவே தரப்பட்டிருக்கும். பல புத்தகங்களில் பெரிய பெரிய மகத்தான என்னுரைகளும், முன்னுரைகளும், அணிந்துரைகளுமாக அந்த படைப்பை வாசகர்கள் பாராட்டிய தீர வேண்டும் இல்லையென்றால் அவருக்குத்தான் ரசனை இல்லை தேர்ந்த வாசிப்பில்லை என்ற ஒரு நினைப்பை பதட்டத்தை வாசகம் மனங்களில் தோற்றுவிப்பதைப் பார்க்க முடியும்.
”ரங்கநாயகிஎன்ற தலைப்பில் அமைந்த இந்த நாவல் சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு சாதாரண பெண்ணை மையமாகக்கொண்டது. அவள் எதையாவது சாதித்தாளா என்றால்,குறிப்பாக ஒன்றுமில்லை. அவளுக்குள் பொங்கிய சகமனித உணர்வு தான் அவளுடைய தனித்தன்மை” ,என்று குறிப்பிடுவதன் மூலம் அது மனிதர் களிடையே அரிதாக இருப்பதை, சக மனித உணர்வு என்பது எத்தனை அரிய, உயர்வான விஷயம் என்பதைக் குறிப்புணர்த்திவிடுகிறார் கதாசிரியர்!
சக மனித உணர்வு உள்ளவர்கள், சக மனித உணர்வு அற்றவர்கள் என இக்கதையின் பிரதான பாத்திரங்களும், உப பாத்திரங்களும் இரு பிரிவுகளாக இருக்கிறார்கள். சிலர் சற்றே முயன்றால் தாண்டிவிடக் கூடிய அளவிலான எல்லைக்கோட்டில் இருக்கிறார்கள். சிலர் மிக மிக உள்ளார்ந்து, தாண்ட மனம் இல்லாத, தாண்ட முயற்சி செய்யாத, தாண்டவே வழியற்ற இடங்களில் இருக்கிறார்கள். சக மனித உணர்வு உள்ளவர்கள் குறைவாகவும் சக மனிதர்கள் சக மனித உணர்வற்றவர்கள் அதிகமாகவும் சக மனித உணர்வு உள்ளவர்கள் குறைவாகவும், சக மனித உணர்வற்றவர்கள் அதிகமாகவும் இருப்பதாகச் சொல்லலாம். சிலருக்கு சக மனித உணர்வு என்பது அவரவர் குடும்பம், சுற்றம் என்பதாக நின்றுவிடுகிறது. ரங்கநாயகி போன்றவர்களுக்கு தனிமனித வாழ்வில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் அவலங்கள் துயரங்களையும் தாண்டி சக மனித உணர்வு ஆழமாக சமூகம், மானுடம் முழுவதையும் உள்ளடக்கிய அளவில் மனதில் வேரோடியிருக்கிறது.
“அவள் அன்பு தந்த பலத்தில் விவேகம் காட்டிய வெளிச்சத்தில் அடுத்த தலைமுறைப் பெண்கள் தங்கள் வாழ்க்கையின் முக்கிய தருணங்களில் தடம் பதிக்கிறார்கள்” என்று கதாசிரியர் முன்னுரையில் குறிப்பிடுவது சக மனித உணர்வு மனித வாழ்வுக்கு அடிநாதமாக விளங்குவதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
“இவர்கள் அத்தனை பேரும் கற்பனை பாத்திரங்கள் அல்ல; நிஜ மனிதர்கள் என்று கதாசிரியர் ஒரு தகவலாக குறிப்பிட்டிருக்கிறார். (நிஜவாழ்வில் இது சாத்தியமே என்ற உட்குறிப்பு கிடைக்கிறது!) ஆனால் தன்வரலாற்றுப் புனைவு (Autofiction, Biopic) என்ற பெயரில் வாழ்ந்து மறைந்த, வாழ்கின்ற மனிதர்களை அவர்களின் உண்மைப் பெயர்களோடு தம் படைப்பில் உபபாத்திரங்களாக உலவ விட்டு (ஹீரோ கதாசிரியரின் ‘carefully filtered version!) அதன் மூலம் மட்டுமே தம் படைப்புக்கொரு தனி அடையாளம் தேட முயலும் போக்கு, நிஜ ஊரின் நிஜப் பெயரை போட்டு அந்த ஊர் மக்களை சிறுமைப்படுத்தும் போக்கு போன்ற எதுவும் இந்த கதாபாத்திரங்களில் இடம்பெற வில்லை.
ஸ்ரீ ராஜபுரத்தின் தேசிகாச்சாரி குடும்பம், அதன் ஆண்கள், பெண்கள் இளந்தலைமுறையினர், அந்த கிராமத்தில் வசிக்கும் தேவதாசிகளாக்கப்பட்ட பெண்கள், அவர்களுடைய குடும்பத்தினர், ஒரு குடும்பத்தில் ஒரு பெண் மட்டுமே பொட்டுக்கட்டப் பட்டு மற்றவர்கள் படிப்பதும் வேலைக்கு போவதுமாக சாதாரண வாழ்க்கை வாழ்ந்தாலும் அந்தக் குடும்பம் முழுவதையும் ’தேவதாசி’க் குடும்பமாக பார்க்கும், பாவிக்கும் போக்கு, இரு துருவங்களாக கருதப்படும் ஆச்சார குடும்பப் பெண்கள், தேவதாசி குடும்பப் பெண்களுக்கிடையே ஏற்படும் பரஸ்பரப்பரிவும் புரிதலும் இந்த இருதரப்புப் பெண்கள் வாழ்விலும் நேரும் துயரங்கள் இடர்ப்பாடுகள், அவற்றை கடந்து அவர்களிடம் முகிழ்க்கும் சக மனித உணர்வு, புரிதல், தன்மானம், தன்னம்பிக்கை, வீட்டு ஆண்களிலும் ஊரிலுள்ள ஆண்களிலும் சிலரிடம் வெளிப்படும் சக மனித உணர்வு, பெண்களை சக மனிதராய் பார்க்கும் பக்குவம் – பத்ரி நாராயணன் கதாபாத்திரம் போல்……
அத்தகைய அனுசரணையும் புரிதலும் சக மனித உணர்வும் கொண்ட வீட்டு ஆண்களிடம், வீட்டுப் பெண்கள் நாட்டு நிலைமையை கேட்டறிவது, சுதந்திரப் போராட்டம் பற்றி, காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் பற்றித் தெரிந்துகொள்வது என இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இடம்பெறும் கதையின் போக்கில் போராளி மணியம்மை யின் செயல்பாடு குறித்தெல்லாம் தகவல்கள் இடம்பெறுகின்றன
”நல்ல புத்தி கொடு என்று மட்டும் வேண்டிக்கோ. புத்தி மட்டும் சரியா இருந்தா போதும் – எல்லாத்தையும் சமாளிக்கலாம்” என்று சொல்லிக் கொடுக்கும் பாட்டி _
இளம் வயதில் கைம்பெண்ணாகிவிட்ட தங்கைக்கு முடி சிரைக்க வழக்கமாக வரும் முதியவருக்கு உடல் நலம் சரியில்லாததால் அவர் அனுப்பிவைக்கும் இளைஞன் கை அந்தப் பெண்ணின் மேல் தவறாகப் பட்டுவிட்டதற்காக தனயன் தேசிகாச்சாரி பேசும் பேச்சில் மனமடைந்து தற்கொலை செய்து கொள்ளும் தங்கை கனகவல்லி_
என நேர்மறையான, எதிர்மறையான எல்லா கதாபாத்திரங்கள் மூலமும் கதாசிரியர் கே. பாரதி முன்வைக்கும் ஒரே ஒரு வேண்டுகோள், மன்றாடல் _ ‘ இந்த மனித வாழ்வை, மானுடப்பிறவியை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ளும் அன்பும் மரியாதையும் புரிதலும் சக உணர்வுமாக நாம் இன்னும் மேம்பட்ட முறையில் வாழலாமே’ என்பதுதான்!
ஒரு குறிப்பிட்ட கற்பனை கிராமத்தில் வாழும் தேசிகாச்சாரி குடும்பம், அதில் உள்ள பெண்களைச் சுற்றி, அந்த ஊர் பெண்களை சுற்றி கதை பின்னப்பட்டிருந்தாலும் அவர்கள் அவர்கள் அந்த காலகட்டத்தில் பேசும் மொழியில் உரையாடல்கள் இடம்பெற்றி ருந்தாலும் கதை முன் வைக்கும் வாழ்வுக்களம் விரிந்துபரந்தது; எல்லோருக்குமானது; எல்லாக் காலத்திற்குமானது.
இந்த நூலின் ஆங்கில மொழியாக்கத்தையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. THE STONE IN THE BACKYARD நூலின் என்ற தலைப்பில் RATNA BOOKS வெளியீடாக ஜனவரி 2025இல் வெளிவந்துள்ளது
அனுபவம் மிக்க ஆங்கில மொழிபெயர்ப்பாளர் திரு. டி. ஸ்ரீராமன் அற்புதமாக மொழி பெயர்த்திருக்கிறார். பொதுவாக, மொழிபெயர்ப்புப் பிரதியை விமர்சிப்பவர்களில் பெரும்பாலோரிடம் அதில் குற்றம் காண்பதே குறிக்கோளாகக் கொண்டு, அப்படி செய்வதன் மூலமே தம்மை மொழிபெயர்ப்பாளரை விட மேலானவராகக் காட்டிக் கொள்ளும் முனைப்பே மேலோங்கியிருக்கிறது மூலநோலை படிக்காமல் மொழி பெயர்ப்பு நூலை பற்றி மட்டுமே பேசும் போக்கும் இருக்கிறது. கவிஞர் பிரம்மராஜனின் போர்ஹே படைப்புகளின் மொழியாக்கம் பற்றி எழுத்தாளர் வாசுதேவன் ஆற்றிய உரை போல் ஆழமான உரை / கட்டுரை அரிது. ஆனால், ரங்கநாயகி என்ற தமிழிலான புதினம், அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் இரண்டையும் படிக்க வாய்ப்பு கிடைத்ததில் ஆங்கில மொழிபெயர்ப்பாளர் டி.ஸ்ரீராமனுடைய மொழிபெயர்ப்பின் தரத்தை நன்றாக உணர்ந்து அனுபவிக்க முடிந்தது! மூலநூல் குறித்து அவர் எழுதியுள்ள அருமையான அறிமுகக் கட்டுரையும் ஆங்கில மொழியாக்கப் பிரதியில் இடம்பெற்றுள்ளது.