ஜாக்கி சான் 23. படங்களுக்கு மேல் படங்கள்

author
0 minutes, 1 second Read
This entry is part 1 of 29 in the series 5 ஜனவரி 2014

அறைக்குள் நுழைந்த வில்லி முகத்தில் சுத்தமாக வருத்தத்தை மட்டுமே காண முடிந்தது.

அவரைக் கண்டதும் லோ, “என்னாச்சு..” என்று பதறிப் போய் கேட்டார்.

“முட்டாள் மாதிரி நிக்காதே, விசயத்தை சொல்..”

வில்லி எண்களைச் சொன்னார்.

“விளையாடறியா..” என்று சொல்லிவிட்டு, புகைப்பிடிப்பதை நிறுத்தி விட்டு, இதைத் தூர எறிந்து விட்டு வேகமாக கதவைத் திறந்து கொண்டு கோபத்தோடு சென்றார்.

ஜாக்கி அப்படியே உட்கார்ந்து விட்டான். இந்த அனுபவம் புதிதில்லை. இருந்தாலும் எடுத்த முயற்சியெல்லாம் தோல்வியாகிறதே என்ற ஆதங்கம் இருக்கவேச் செய்தது.

“இந்த முறையும் அதிர்ஷ்டமில்ல. கம்பெனி திவாலாவதற்கு முன்பாக திரும்பவும் ஆஸ்திரேலியா போக விமானச் சீட்டை வாங்கி விட வேண்டும் போலிருக்கு.. “ என்று கூறிக்கொண்டிருக்கும் போதே வில்லி, “ஜாக்கி.. நிறுவனத்திற்கு ஒன்றும் ஆகாது. இந்தத் படத்தை தென்கிழக்கு ஆசியாவில் விற்று பணம் பண்ணிடலாம். நான் தான் விற்பனைக்குப் பொறுப்பு. அந்த வேலையை நான் நல்லாவே செய்வேன். நான் என்ன இந்த ஆபிஸை அலங்கரிக்கவா இருக்கேன்” என்று ஆறுதல் கூறி ஜாக்கியைச் சமாதானப்படுத்தினார்.

புதிய பிஸ்ட் ஆப் புயூரி தந்த தோல்வியால் துவண்ட லோ, தன் நிறுவனத்தின் அடுத்தப் படத்தைப் புதிய இயக்குநரைக் கொண்டு செய்ய முடிவு செய்தார். சென் சீ ஹ_வா அப்போது தான் இயக்குநராக ஆகியிருந்த சமயம். மிகவும் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்யத் தயாராய் இருந்ததால், லோ, சென்னை இயக்குநராக ஆக்கினார். ஜாக்கி, சென் இருவரும் முன்பே அறிமுகமானவர்கள் என்பதால், ஜாக்கிக்கு படத்தில் நடிப்பது சற்றே ஆறுதலளித்தது.

ஷாவோலின் வுட்டன் மென் – ஷாவோலின் மர மனிதர்கள் என்ற படம் எடுக்கப்பட்டது. இதில் ஷாவோலின் பள்ளியில் பயிலும் மடத்தவர்கள், அதை விட்டுச் செல்ல விரும்பினால், குங்பூ வித்தையில் தங்கள் திறனைக் காட்டும் தேர்வில் தேர்ச்சி பெற்றாலே அனுமதிக்கப்படுவார்கள். அந்தத் தேர்வில் ஒன்று ஒரு பெரிய அறையில் 108 மர மனிதர்களைத் தாண்டிச் செல்வது. மர மனிதர்கள் ஒராள் உயரத்திற்கு இருப்பார்கள். பொம்மலாட்ட பொம்மைகள் போன்று அவர்களது கை கால்களின் கட்டுப்பாடு மடத்தின் ஆசிரியர்களின் கைகளில் இருக்கும். மின்னல் வேகத்தில் நகரும் அந்த மனிதர்களின் இடையே தன்னுடைய குங்பூ திறனைக் காட்டி தப்பி வெளியே வர வேண்டும். இதில் பலர் முயன்று இறந்ததுண்டு. ஷாவோலின் மடத்தில் வேலை செய்யும் ஒருவன் சூழ்ச்சிக்காரர்களின் கைகளில் தன் தந்தையை இழக்கிறான். அதனால் பழி வாங்கும் வரை பேசக் கூடாது என்ற சபதத்தை எடுத்து மடத்தில் பணியாற்றும் அந்த நாயகன் மர மனிதர்களைத் தாண்டி வெளியே வந்து எதிரிகளைப் பழி வாங்கத் துணிவதைப் படமாக எடுக்க முடிவு செய்தனர்.

அத்தகைய குங்பூ தேர்வில் வென்று வெளியே வரும் பாத்திரம், ஜாக்கி செய்ய வேண்டும்.

இதில் ஸ்டண்ட் அதிகம் இருந்ததால், பல புதிய யுத்திகளை சென்னும் ஜாக்கியும் கையாண்டனர். பல விஷயங்களில் முன்னனுபவம் இல்லாத காரணத்தால், இருவரும் பல தவறுகள் செய்தனர். அவற்றை அறிந்து திருத்திக் கொள்ளவும் செய்தனர். சென் புதியவர் என்பதால், ஜாக்கியின் பல அறிவுரைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. அதனால் ஜாக்கிக்கும் பல திரை நுணுக்கங்களைக் கற்றுக் கொள்ள முடிந்தது.

சண்டையின் போது சில நகைச்சுவை செய்கைகள் புகுத்தப்பட்டன. ஜாக்கியின் பாத்திரம் புரூஸ் லீயைப் போன்றே பழி வாங்கும் பாத்திரமாக இருந்ததாலும் ஜாக்கி அதற்குத் தகுந்தவனாக இல்லாத காரணத்தாலும், படம் மற்ற படங்களைப் போன்றே தோல்வியுற்றது.

லோ என்ன சொல்வாரோ என்று மனம் கலங்கிய ஜாக்கியிடம் வில்லி, “வெளியில் பலரும் பல விதமாக பேச ஆரம்பித்து விட்டார்கள். ஜாக்கி சான் நிச்சயம் எதையும் நகர்த்தக் கூடியவன் என்று” கூறிப் பாராட்டினார். அப்படி அவர் சொன்ன போதும், தோல்வி கண்டு துவண்டு போன ஜாக்கிக்கு “தான் எங்கே ஆஸ்திரேலியாவிற்கே திரும்பப் போக வேண்டி வருமோ..” என்ற ஐயம் கொள்ள வைத்தது.

ஹாங்காங்கில் படம் எடுப்பது மிகவும் செலவு என்று முடிவு செய்த லோ, அடுத்தப் படத்தை கொரியாவில் எடுக்க முடிவு செய்தார்.

அந்தப் படம், டு கில் வித் இன்டிரிக் – சதி செய்து கொல் என்பது. தன்னுடைய முகத்தைக் கோரப்படுத்தியவர்களைப் பழி வாங்கக் கிளம்பும் ஒரு பெண்ணின் கதை. முகத்தில் இருக்கும் தழும்புகளை மறைக்க முகமூடியை அணிந்து கொண்டு, சியால் என்பவனைத் தவிர மற்ற அனைவரையும் கொல்கிறாள். அவனுடன் பழகி ஒரு குழந்தைக்குத் தாயாகிறாள். மகன் பிறந்ததும் அவளைக் காப்பாற்ற, யார் என்று தெரியாமலேயே அவளைத் துரத்தி விடுகிறான் சியால். பிறகு, அவள் தான் தன் குடும்பத்தினரையும் நண்பர்களையும் கொன்றாள் என்பதை அறிந்து, இரண்டு முகங்கள் கொண்ட அவளை எதிர்த்து வெல்கிறான்.

அது எடுக்கப்பட்ட போது, ஜாக்கிக்கும் லோவிற்கும் பயங்கர மனஸ்தாபம் ஏற்பட்டது. திருமதி லோ அவர்களைச் சமாதானப்படுத்தி படத்தை வெளியிட வைத்தார். அதுவும் தோல்வியடைந்தது. கொரியாவின் குளிரில் கஷ்டப்பட்டும் கூட படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.

அதற்கு அடுத்த படம் தி கில்லர் மிடியோர்ஸ் – கொல்லும் விண்கற்கள்.

ஜாக்கி சாவேயில்லாத விண்கல் மனிதனாக, வில்லன் நாயகனாக சித்தரிக்கப்பட்டான். அவன் கைகளில் வைத்திருக்கும் ஆயுதத்தால் எவரையும் கொன்று விடும் திறம் படைத்தக் காரணத்தால், அவன் வாழ்ந்து வந்த இடத்து மனிதர்கள் அவனுக்கு வருடம் முழுவதும் காணிக்கைகளைச் செலுத்தி வந்ததாகக் கதை. இப்படிப்பட்டவன் தன் எதிரியின் மனைவியைக் கொல்லக் கிளம்பிச் செய்யும் காரியங்கள் படமாக்கப்பட்டன. இதிலும் ஜாக்கி இறுகிய முகம் கொண்ட பலசாலி மனிதனாகக் காட்டப்பட்டான்.

ரசிகர்கள் மாற்றங்களை விரும்புகிறார்கள் என்பதை லோ என்றுமே ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை. தன் படங்கள் அனைத்தையும் புரூஸ் லீ படங்களைப் போன்றே பழி வாங்கும் கதைகளாக எடுத்தார். அனைத்துக் கதைகளும் பழி வாங்கும் படலங்களை மையமாகக் கொண்டிருந்தன. மற்ற படங்களைப் போன்றே அதுவும் தோல்வி கண்டது.

அடுத்து என்ன?

எப்போதும் போன்றே பழி வாங்கும் படமா?

லோ சற்றே மாற்றத்தைக் கொண்டு வர எண்ணி, கதைக் கருவை வேறு விதமாக மாற்றினார். சினேக் அண்ட் கிரேன் ஆர்ட்ஸ் – பாம்பு மற்றும் கொக்குக் கலை என்பதே அது.

எட்டு தலைசிறந்த வர்மக் கலை குருக்கள், கலையைப் பற்றிய நுணுக்கங்களை ஒரு புத்தகமாக்குகிறார்கள். அந்த ஷாவோலின் ரகசியங்கள் அடக்கிய அந்தப் புத்தகத்தை வைத்துக் கொண்டு திரிபவனாக சானுக்குப் பாத்திரம். தன்னுடைய சண்டைக் காட்சியை வடிவமைக்கும் திறமையை இதில் முழுவதுமாக வெளிக்கொணர்ந்திருந்தான் சான். கடைசி காட்சியில் ஒரு கையில் பாம்பு விதமாகவும் மற்றொரு கையில் கொக்கு விதமாகவும் சண்டையிடுவது ஜாக்கியின் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது என்றே சொல்ல வேண்டும். இதில் பல இடங்களில் நகைச்சுவையைப் புகுத்தியதால் ஜாக்கிக்கு இரும்பு மனிதனாக இல்லாமல், தன் குணத்திற்கு ஏற்ற பாத்திரமாக இருந்தது சற்றே ஆறுதலளித்தது.

படம் எடுக்கப்படும் போது, ஜாக்கி அடிக்கடி கேலியாக பேசிக்கொண்டும், நகைக்கும் படியாக கரணம் போட்டு நடித்துக் கொண்டு இருப்பதைப் பார்த்தால் லோவிற்கு தன்னை கேலி செய்வதாக எண்ணி கோபம் ஏற்படும். அப்படிச் செய்வது தன் மன வருத்தத்தை அடக்கிக் கொள்ளவே என்று ஜாக்கி சான் நினைவு கூர்வார். அந்தப் படமும் மற்ற படங்களைப் போன்றே தோல்வி கண்டது.

இதையடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்று வருந்திக் கொண்டிருந்தான் ஜாக்கி. அதை வில்லியிடம் சொன்ன போது, ஆறுதல் கூறினார்.

“இரண்டு வருடங்கள் எதையும் சாதிக்க முடியவில்லை. லோ தகுந்த பாதிதிரங்களைத் தராமல் என்னை மிகவும் சங்கடப்படுத்துகிறார். இனியும் என்னால் தாங்க முடியாது” என்றான் ஜாக்கி வெறுப்புடன்.

வில்லி, “சான்.. உன் வருத்தம் எனக்குப் புரிகிறது. கஷ்டம் தான். உன் தொடர் தோல்வியால் நீ விஷமாக எண்ணப்படுகிறாய். இது இப்படியே போனால், உன்னுடைய முன்னேற்றம் என்னவாகும்..” என்றார்.

“நான் என்ன தான் செய்வது” என்று கேட்டான்.

“கவலைப் படாதே.. நான் ஏதாவது செய்கிறேன். சரி செய்கிறேன்” என்றார்.

வில்லியை முழுமையாக நம்பி, மாற்றத்தை எதிர் நோக்கி காத்திருக்க ஆரம்பித்தான் ஜாக்கி.

—-

Thanks.

Series Navigationஅனுபவச் சுவடுகள் – டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் – ஒரு சிறு அறிமுகம்நீங்காத நினைவுகள் – 28விடியலை நோக்கி…….என்னுடைய மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு ‘யாதுமாகி நின்றாய்’பெருமாள் முருகன் கவிதைகள் நீர் மிதக்கும் கண்கள் – தொகுப்பை முன் வைத்து…டாக்ஸி டிரைவர் – திரு.ஆனந்த் ராகவ் எழுதிய கதைகளின் தொகுப்புகவிதை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *