25 வது மணி

This entry is part 6 of 13 in the series 14 நவம்பர் 2021

 

 

தெலுங்கில் : உமா நூதக்கி

mahimusings@gmail.com

 

தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன்

tkgowri@gmail.com

“இப்போ உடனே மருந்து எழுதி தரப் போவதில்லை. ஆனால் கொஞ்சம் லைப் ஸ்டைல் மாற்றிக்கொள்ள வேண்டும்.” அப்பொழுதுதான் எல்லையைத் தாண்டியிருக்கும் சர்க்கரை லெவலை பார்த்துக்கொண்டே சொன்னார் மருத்துவர்.

திடீரென்று பத்து நாட்களுக்கு முன்னால் முழங்கால் வீங்கி வலிக்கத் தொடங்கியது. மருந்து  மாத்திரை என்று பயன்படுத்தி, குறையாமல் போனதால் ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தாள். டாக்டர் எழுதிக்கொடுத்த டெஸ்டுகளை முடித்துவிட்டு  இன்று  மறுபடியும் பார்க்க வந்திருந்தாள்.

“அப்படிஎன்றால்?”

கேள்விக்குறியுடன் பார்த்துக் கொண்டிருந்த அவளிடம்…

“வலிக்கு மாத்திரைகள்  எழுதியிருக்கிறேன். காலையிலும் இரவிலும் போட்டுக் கொள்ளுங்கள். பிறகு வலி இருக்கும்போது போட்டுக் கொண்டால் போதும். வலி குறைந்த பிறகு நாளுக்கு குறைந்தபட்சம் 45 நிமிடங்கள் நடைபயிற்சியை பழக்கப் படுத்திக் கொள்ளுங்கள். கொஞ்சம் வெயிட் குறைந்தால் உங்களுக்கு முழங்கால் வலியும் குறையும். வலி அதிகரித்தாலும், மேலும் வெயிட் கூடினாலும் நடைபயிற்சியை மேற்கொள்வது சிரமம்.” பழக்கப்பட்ட ரீதியில் சொல்லிவிட்டு அடுத்த நோயாளிக்காக பெல்லை அடித்தார் மருத்துவர்

எழுந்து கொண்டே கேட்டாள்.” வேறு ஆப்ஷன் ? அதாவது உணவுப் பழக்க வழக்கங்கள்?”

“கொஞ்சம் கார்போஹைட்ரேட் உணவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். உணவியல் நிபுணர் யாரையாவது பாருங்கள்…if”

டாக்டர் மேலும் ஏதோ சொல்லும் முன்பே அவர் கையில் இருந்த பைலை  பிடுங்கிக்கொள்ளாத குறையாக எடுத்துக்கொண்டு வேகமாக வெளியே வந்து விட்டாள்.

if  என்று டாகடர் ஒரு ஆப்ஷன் கொடுத்தால் என்ன செய்ய வேண்டும் என்று அவளுக்குத் தெரியும். சிறுவயதில் ரென் அண்ட் மார்ட்டினில் சொன்னபோது  மூளைக்கு ஏறவில்லை என்றாலும், இப்பொழுது காலத்தின் தேவைகள் அவளுக்கு நன்றாகவே கற்றுகொடுத்து விட்டன.

 ஏற்கனவே  அலுவலகத்திலிருந்து  ஆறுமுறை தொலைபேசி அழைப்பு வந்து விட்டது.  ஒரு மணி நேரத்தில் வந்து விடுகிறேன் என்று அனுமதி பெற்று ஆஸ்பத்திரிக்கு வந்திருக்கிறாள். மேலும் அரைமணி நேரம் தாமதம் ஆனாலும் யாரும் ஒன்றும் சொல்லப் போவதில்லை. வருமானவரி துறையில்  சீனியர் டாக்ஸ் அசிஸ்டென்ட் ஆக பணி புரிகிறாள். சாதாரண விசாரணையாக இருக்கக் கூடும். நிறைய பேரிடம் தன்னுடைய நம்பர் இருக்கும். உணவியல் நிபுணரிடம்  போகாமலேயே அலுவலகத்திற்கு ஓட்டமெடுத்தாள்.

 வெளியே வந்ததும் கேட் அருகில் அப்பொழுதுதான் யாரையோ இறக்கிவிட்ட ஆட்டோவிடம் சென்றாள்.

“எங்கே போகணும் மேடம்?” கேட்டான் ஆட்டோக்காரன்.

“வாக்கிங் 45 நிமிடங்கள்.” வேறு நினைப்பில் சொன்னாள்.

அதற்குள் மீண்டவளாக அலுவலக முகவரி சொல்லிவிட்டு அவனுடைய பதிலை எதிர்பார்க்காமல் ஆட்டோவில் ஏறி உட்கார்ந்து கொண்டாள்.

கண்ணாடியிலிருந்து வினோதமாக பார்த்த அவனை பொருட்படுத்தாமல் போனில்  யூ ட்யூப் ஓபன் செய்தாள். ஆஸ்பத்தியிரியிலிருந்து  20 நிமிடங்கள் பயணம்.

“How to loose wait?’ என்று அடித்தாள். பல வீடியோக்கள்… இயர் போனை வைத்துக்கொண்டு ஒன்று இரண்டை கேட்டாள்.

“நாளையிலிருந்து சாதத்தை விட்டு விடவேண்டும். இன்று முதல் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்.”

நாலைந்து முறை மனதில் நினைத்துக் கொண்டாள். சாதாரணமாக அலுவலகத்தில் அதிகமாக தண்ணீர் குடிக்க மாட்டாள், எல்லோருக்கும் நடுவிலிருந்து பாத்ரூமுக்கு செல்ல வேண்டியிருக்கும் என்று.

*****

 சீட் அருகில் போகும்போதே நாலு பேர் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆபீசிலிருந்து நோட்டீஸ்கள் சென்று அவற்றுக்கு கிளார்ஃபிகேஷன் எடுத்துக் கொண்டு வந்தவர்கள். சாதாரணமாக ஆடிட்டர் மூலமாக இல்லாமல் டிபார்ட்மெண்டுக்கு நேரடியாக அதிகம்பேர் வரமாட்டார்கள். ஆனால் அவள் எல்லோருடனும் நட்பு ரீதியில் பழகுவாள். அறிவுரை வழங்குவாள்.

மன்னிப்பு கேட்பது போல் முறுவலித்துவிட்டு, முதலில் பாட்டிலை எடுத்து மளமளவென்று தண்ணீர் குடித்து விட்டு, வந்தவர்களை கவனிக்கத் தொடங்கினாள்.

சிரித்த முகம், அதைவிட மென்மையான பேச்சு, எப்படிப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் மளமளவென்று தீர்த்து வைக்கும் திறமை இருப்பதால் இடைஞ்சல்கள் எதுவும் அவளுக்கு இருந்தது இல்லை.

கொஞ்ச நேரம் கழித்து சங்கடம் தொடங்கி விட்டது. புதிய பழக்கம் இல்லையா. சற்று முன் குடித்த பாட்டில் தண்ணீர் உள்ளே போன பிறகு சங்கடம்  தோன்றி விட்டது. முழங்கால் வலியுடன் மேஜையை பிடித்து எழுந்து கொண்டு மெதுவாக பாத்ரூமை நோக்கி போனாள்.

வந்து உட்கார்ந்து வேலையில் ஆழ்ந்து விட்டாள். அரைமணி நேரம் கழித்து திரும்பவும் போக வேண்டிய அவசியம் ஏற்பட்டது. போய்விட்டு வரும்போது பக்கத்து இருக்கையில் அமர்ந்து இருப்பவர் கேட்டார். “மேடம்! உடல்நிலை சரியாக  இல்லையா?”

‘வேறு வேலை இல்லையா இவனுக்கு. என் பாத்ரூம் விஷயத்தைகூட கணக்கிடுகிறான்.’ எரிச்சலுடன் நினைத்துக்கொண்டாள். முகத்தை சுளிக்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால் எதுவும் புரியாதது போல் முகத்தை வைத்துக்கொண்டு  தண்ணீர் பாட்டிலை உள்ளே வைத்து விட்டாள். இன்று இதற்கு ஒரு கும்பிடு. கால்வலியால் நகர முடியவில்லை. சர்க்கரை நோய் வந்திருக்குமோ என்ற கவலை மேலும் பயமுறுத்தியது.  வேலை அழுத்தத்தினால் ரத்த அழுத்தம் கூட வந்து சேருமோ என்னவோ. நாளை முதல் குறைந்தபட்சம் முக்கால் மணி நேரம் நடக்கவேண்டும்.  முக்கால் மணி நேரம் என்றால் நாளில் எத்தனையாவது பங்கு?

 முதலில் இந்த வலி குறையட்டும். ஆனால் எண்ணங்கள் அவளை விட்டபாடு இல்லை.

சமீபத்தில்தான் கொஞ்சம் உடல் பருக்கத் தொடங்கியது. இருபத்தி எட்டு நாட்களுக்கு ஒரு முறை வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தாற்போல் வந்து விடும் மாதவிடாய் இப்பொழுது  கணக்கு தவறி விட்டது. தாயிடம் கேட்டபோது ஐம்பது வயது ஆகும் வரையில் மாதவிலக்கு ஆகிக்கொண்டு இருந்ததாகச் சொன்னாள். அந்தக் கணக்கின் படி தனக்கு இன்னும் ஆறுவருடங்கள் இருக்கிறது. ஆனால் அவளுக்கு ப்ரி மெனோபாஸ் என்று மருத்துவர் உறுதி செய்து விட்டாள். விருப்பப்பட்டு வாங்கிய உடைகள், டிசைனர் பிளவுசுகள் எங்களை என்ன செய்யப்போகிறாய் என்பதுபோல் பார்த்தன. சற்றுமுன் ஆஸ்பத்திரியில் பார்த்துக்கொண்ட எடை B M I கிராஸ் ஆகியிருப்பது போல் எச்சரித்தது.  செதுக்கியது போல் இருந்த மேனி அங்காங்கே பருத்து விகாரமாக காட்சி அழைத்தது.

‘ஏதோ ஒன்றை செய்தாக வேண்டும்’ அப்போதைக்கு எண்ணங்களை ஒதுக்கிவிட்டு மாத்திரையை போட்டுக்கொண்டு, ரிப்போர்டுகளை கணவனுக்கு வாட்ஸ்அப் ல் அனுப்பிவிட்டு வேலையில் ஆழ்ந்தாள்.

*****

இருவரும் ஒரே துடையில் பணி புரிகிறார்கள். சமீபத்தில் கணவனுக்கு பதவி உயர்வு கிடைத்து வேறு ஊருக்குப் போயிருக்கிறான். அவள் கூட எல்லா டிபார்ட்மென்ட் தேர்வுகளை பாஸ் செய்து இருக்கிறாள். அனால் ஒருமுறை குழந்தைகளின் படிப்பு, இரண்டாது முறை பாதியில் இருக்கும் வீடு,  இன்னொரு முறை மாமனாரின் உடல்நலக் குறைவு… இப்படி அவளுக்கு நித்தியமும் ஏதோ ஒரு தடங்கல்.

உண்மையில் பதவி உயர்வுக்கு பிறகு  கணவனுக்குக் கிடைக்கும் அதிக சம்பளத்தை விட, அங்கே தனி வீடு, ஒவ்வொரு வாரமும் வந்து போகும் செலவு எல்லாம் அதிகமாக இருந்தது.  போகும் முன் இருவரும் சேர்ந்து நிறைய யோசித்தார்கள். ஆனால் அரிதாக கிடைத்த பதவி உயர்வை விடுவதில் கணவனுக்கு விரும்பமில்லை. அவன் என்றுமே அதுபோல் விட்டுக் கொடுத்ததும் இல்லை என்பது வேறு விஷயம்.

மதியம் லஞ்ச் பாக்ஸ் திறந்தாலும் சாப்பிடத் தோன்றவில்லை. ஆனால் அதற்கு முன் போட்டுக்கொண்ட மாத்திரைகளுக்காக வலுக்கட்டாயமாக சாப்பிட்டுவிட்டாள். வாட்ஸ்அப் திறந்து பார்த்தாள். இன்னும் நீல குறிப்பு தென்படவில்லை.

அரைமணி நேரம் கழித்து கணவன் போன் செய்தான். “மெசேஜ் பார்க்கவில்லை. இவ்வளவு வலியாக இருக்கும்போது  மாலை பேருந்தில் எப்படி போவாய்? காப் எடுத்துக்கொள். நான்கு நாட்கள் லீவி போட்டு விடேன்.”

அவன் குரலில் நேர்மை தென்பட்டது. சற்று இருந்த கோபம் இப்பொழுது அவளிடம் காணாமல் போய் விட்டது. அவன் கெட்டவன் இல்லை டேக் இட் பர் கிராண்டட் என்று எடுத்துக்கொள்ளும் கணவன்மார்களில் அவனும் ஒருவன். அவ்வளவுதான். தன்னுடைய கவலைகள், அதிருப்தி, தனியாய் இங்கே பொறுப்புகளை பார்த்துக்கொள்வதில்  ஏற்படுகின்ற ஸ்ட்ரெஸ்.. இதெல்லாம் அவனிடம் சொல்ல வேண்டும் என்று  நினைத்தாலும் அதற்கான சூழல் இருக்காது.  அவன் ரொம்ப சௌகரியமாக அந்த விஷயத்தை அவாயிட் செய்து விடுவானோ அல்லது அவள்தான் அந்த வாய்ப்பை எடுத்துக் கொள்வதில்லையோ.

விடுமுறை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று இருந்தது அவளுக்கு. ஆனால் போன வருடம் மாமனாரின் உடல்நலக் குறைவு, அதற்கு பிறகு அவர் இறந்து போனது எல்லாமாகச் சேர்த்து மூன்று மாதங்கள் விடுமுறை எடுத்துக் கொண்டிருந்தாள். இப்பொழுது மாமியாருக்கு வந்திருந்த பக்கவாத நோய்க்கு அவள் ஆஸ்பத்திரியில் இருந்தபோது திரும்பவும் பதினைந்து நாட்கள்.  சொல்லாமல் கொள்ளாமல் வரும் இடைபாடுகள் தனி. இப்பொழுது விடுமுறை என்ற யோசனையே மிகவும் கஷ்டம். அசாத்தியம்கூட

லஞ்ச் முடிந்தபிறகு இருக்கையில் வந்து அமர்ந்தாள். உடனே வேலையில் மூழ்கி விடாமல் முகநூளைத் திறந்தாள்.

நேற்று இரவு தான் அமிருதா ப்ரீதம் எழுதிய கவிதை,’வாரிஸ் ஸா’ மொழிபெயர்த்து முகநூலில் போட்டிருந்தாள். அதற்கு நிறைய மறுபதிவுகள் வந்திருந்தன. நூல்கள் அதிலும் கவிதைகள் என்றால் அவளுக்கு உயிர். கொஞ்சம் ஓயவு கிடைத்தாலும் படிப்பதை, எண்ணங்களை  பகிர்ந்து கொள்வதை மட்டும் அவள் விடவில்லை.

அதுவரையிலும் இருந்த வலியை, தன்னை வருந்தச் செய்து கொண்டிருந்த கவலைகளை  மறந்து விட்டு அந்த உலகில் மூழ்கி விட்டாள்.  எல்லாற்றுக்கும் பொறுமையாக பதிலளித்தாள். அரைமணி நேரம் கழிந்த பிறகு நோட்டீஸ்  டிராப்ட் செய்வதற்காக அதிகாரி இருக்கைகு வரும் வரையில் அந்த உலகத்திலேயே இருந்தாள்..

மாலையில் வலி ஓரளவுக்கு குறைந்து இருந்தது. ஓலாவில் போனால் குறைந்தபட்சம் ஐநூறு ஆகும் அதனால் அவள் ஓலாவை பயன்படுத்த மாட்டாள். நல்ல வீடு, தன் ரசனைக்கு ஏற்றவாறு தேவை என்ற்பதால் நகரத்திற்கு சற்று தொலைவில் இடம் வாங்கிக் கொண்டாரகள். தங்களுக்காக, ஒரே மகளுக்காக, மாமியார் மாமனாருக்காக என்று ஒவ்வொரு ரூபாயாக சேர்ந்து வீடு கட்டி முடிக்கும் போது கோடியைத் தாண்டி விட்டது. சேவிங்க்ஸ் எல்லாம் போக, அந்த வீட்டிற்கு இன்னொரு இருபது வருடங்கள் வரையில் மாதம் ஒரு லட்சம் கட்ட வேண்டிய நிலை. இருவரில் ஒருவரின் சம்பளம் அதற்கே போய் விடும். மகளின் படிப்பிற்கும், எதிர்காலத்திற்கும்  சேமிக்கும் விஷயத்தில் கணவன் மனைவி இருவரும் சமரசம் செய்துகொள்ள மாட்டார்கள்

கணவன் பதவி உயர்வு பெற்றுக்கொண்டு வெளியூருக்கு போன பிறகு உயர்ந்த சம்பளம், வரவு செலவு கணக்கு பட்டு பார்த்தால் கூடுதலாக பதினைந்து ஆயிரம் தேவைப்பட்டது. ஆக மொத்தம் அவளால் ஓலாவை கூப்பிட முடியாது.

அலுவலகத்திலிருந்து  வீட்டுக்கு ஒரு மணி நேரப் பயணம். பேருந்தில் ஏறியதும் ஜன்னல் அருகில் அமர்ந்து மூச்சை ஆழமாக எடுத்துக்கொண்டாள். அமேசான் ஆடியோவில் வாங்கிய எலீனா ஃபேராண்டே புத்தகத்தை கேட்கத் தொடங்கினாள். ஏற்கனவே படித்த புத்தகம்தான், திரும்பவும் கேட்க வேண்டும் என்று ஆடியோ வடிவத்தில் வாங்கிக் கொண்டாள். ஏனோ அன்றைக்கு கேட்கத் தோன்றவில்லை. ஏதேதோ எண்ணங்கள். உடல்நலக் குறைவு அவளை ஒரு நிலையில் இருக்க விடவில்லை..

பேருந்தை விட்டு இறங்கிய போது மணி ஆறரை. மெட்ரோ பேருந்தில் கால்களை சுருக்கிக்கொண்டு உட்கார்ந்ததால் திரும்பவும் கால் வலிக்கத் தொடங்கியது. நொண்டிக்கொண்டே வீட்டுக்கு போனாள். கட்டிலோடு கிடக்கும் மாமியாரை பார்த்துக்கொள்ள பகலுக்கு, இரவுக்கு என்று இரண்டு ஆயாக்கள் இருந்தார்கள். வீட்டுச் செலவுகள் அதிகரித்த பிறகு இரவு நேரத்து ஆயாவை நிறுத்தி விட்டு தானே பார்த்துக் கொள்ளத் தொடங்கினாள்.

வீட்டிற்கு வந்ததுமே மாமியாருக்கு காபி கலந்து கொடுத்து தானும் எடுத்துக்கொண்டு  மாமியாரின் படுக்கைக்குப் பக்கத்தில் நாற்காலியில் அமர்ந்தாள். போகும் முன் ஆயா சுத்தம் செய்து விட்டு போயிருந்தாள் போலும். மாமியாரின் முகம் தெளிவாக இருந்தது. முகம் அலம்பிக்கொண்டு வந்து சமையல் அறைக்குள் போகும் போது மாமியாரை சக்கிர நாற்காலியில் உட்கார வைத்து உடன் அழைத்துச் சென்றாள். சமையல் செய்யும் நேரத்தில் இருவரும் ஏதாவது பேசிக்கொண்டு இருப்பார்கள். கணவனுக்கு வெளியூருக்கு மாற்றல் ஆன பிறகு, இன்ஜினியரிங் படிப்பிற்கு வந்த மகளுக்கு தனி உலகமாகி விட்ட பிறகு, மாமியார் மருமகளின் உறவு மேலும் வலுத்தது. உடல் நலக் குறைவு ஏற்படுவதற்கு முன்பு மாமியார் மருமகளுக்கு உறுதுணையாக செயல்பட்டு வந்தாள். அன்று மருமகள் சுரத்தாக இல்லாதைதற்குக் காரணம் கூட புரிந்து விட்டது, ஏற்கனவே லேப் லிருந்து வந்த ரிப்போர்டுகளை தெரிவித்து இருந்ததால். அந்தம்மாளுக்கு. உடல்தான் ஒத்துழைக்கவில்லையே தவிர மூளை சுறுசுறுபாக இயங்கிக் கொண்டிருந்தது.

ஏதேதோ ஜாக்கிரதைகளை சொல்லிக் கொண்டிருந்தாள். குடும்பத்தில் ஏற்பகனவே இரண்டு பக்கமும் சர்க்கரை நோய் வரலாறு இருக்கிறது. அதனால் கவலைப்பட வேண்டியது என்று தைரியம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

மணி ஏழாகி விட்டது. காயகறியை வெளியில் வைத்து விட்டு மொட்டை மாடியில் இருக்கும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்காக சென்றாள். லிப்ட்காக எல்லா ஏற்பாடுகளையும் செய்தாலும் பணப் பற்றாக்குறையினால் அப்படியே விட்டு விட்டார்கள். மூன்றாவது மாடியில் ஸ்லாபுகளை போட வைத்து விதவிதமான செடிகளை வைத்தாள். செடிகளை வளர்ப்பது, அதன் புகைப்படங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்வது அவளுக்கு பிடித்தமான விஷயம்.

இருள் சூழ்ந்து விட்டிருந்தது. சனி, ஞாயிறுகளில் தவிர வெளிச்சத்துடன் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது சாத்தியம் இல்லை.  தண்ணீர் ஊற்றிக்கொண்டே, பழுத்த இலைகளை நீக்கினாள். சிநேகிதி போன் செய்தாள். ஏதோ புத்தகத்தைப் பற்றி உரையாடினார்கள்.

கீழே இருந்து மகள் தொலைபேசியில் அழைத்தாள்.அவள் அலுவலகத்திலிருந்து வந்த போது மகள் வந்திருக்கவில்லை  போனை நிறுத்திவிட்டு நொண்டிக்கொண்டே இரண்டு மாடி இறங்கி வந்தாள். வந்ததுமே மகளுக்கு பால் சுடவைத்து தரவேண்டும் . பதினெட்டு வயது முடிந்தாலும், குறைந்தபட்சம் பால் சுடவைத்துக் கொள்வது, தாய்க்கு சின்னச்சின்ன வேளைகளில் உதவி செய்வது தெரியாது மகளுக்கு. அவளுக்கு கற்றுத் தரவேண்டும் என்று தானும் நினைத்தது இல்லை.

சமையல் செய்து கொண்டிருந்தாலும் அவள் எண்ணங்கள் வேறு இடத்தில் இருந்தன. ஒரு பத்திரிகைக்கு இரண்டு வருடங்களாக காலம் எழுதி வருகிறாள் அவள். நல்ல வரவேற்பு இருந்தது. உடல்நலக்குறைவினால் இந்த மாதம் அதைப் பற்றி யோசிக்கவில்லை.  எண்ணங்களில் மூழ்கியபடி கணவனின் போனை ரிசீவ் செய்து கொண்டாள்.

பட்டும் படாமல் அவள் பேசியதை கண்டு கோபமாக இருக்கிறாள் போலும் என்று நினைத்து விட்டான்.  தான் பத்திரிகையைப் பற்றி யோசித்துக்கொண்டு இருந்ததாக சொன்னதும், லேசாக கடிந்து கொண்டு வைத்து விட்டான். தன்னுடைய வாசிப்புப் பழக்கம், எழுதுவது இதெல்லாம் அவனுக்கு விருப்பம் இல்லை என்று அர்த்தம் இல்லை. ஆனால் அதற்காக மற்ற விஷயங்கள் பாதிக்கப் படுவது அவனுக்கு விருப்பம் இருக்காது.

சமையல் முடிந்த பிறகு மாமியாருக்கு பிசைந்து கொடுத்து விட்டு, மகளும் தானும் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இருந்தார்கள். அப்பொழுது இரவு ஒன்பது மணி.

மறுநாள் காலை சமையல், ப்ரேக்பாஸ்ட் பற்றிய எண்ணங்கள் சூழ்ந்து கொண்டன. சட்டென்று எழுந்து பிரிஜ்ஜை திறந்து பார்த்தாள். அடைமாவு இருப்பது தெரிந்ததும் நிம்மதியாக மூச்சு விட்டுக்கொண்டு, மறுநாளைக்கு வேண்டிய காய்கறியை நறுக்கி பிரிஜ்ஜில் வைத்துக்கொண்டாள். பாலை உரை குத்தி சமையலறையை ஒழுங்குப் படுத்திவிட்டு ஹாலுக்கு வந்தாள்.

மாமியாருக்கு மருந்துகள் கொடுத்து விட்டு, அந்தம்மாள் உறங்கிய பிறகு பக்கத்திலேயே இருந்த சாய்நாற்காலியில் அமர்ந்துகொண்டு மடிகணினியை திறந்தாள்.

இரவு பத்தரை.

அது அவளுடைய சமயம். கணவனுக்கு மனைவி, மகளுக்கு தாய், மாமியாருக்கு மருமகள், அலுவலகத்தில் வேலை செய்பவள்… இவை எதுவும் இல்லை. தன்னுடைய உலகம் அது. பிடித்ததை படிப்பாள். எழுதுவாள். கனவு உலகத்தில் இருப்பாள். உள்ளூர இருக்கும் அமைதியின்மை, வெறுமை எல்லாம் வெளிப்பட்டு விடும். எழுத்துகளால் அதனை போர்த்தி விடுவாள். மகழ்ச்சியை, கண்ணீரை பகிர்ந்து கொள்வாள்.

பன்னிரண்டு மணிவரையில் அவள் உலகம். அவளுக்கு மட்டுமே உரிய உலகம் அது.

அன்று எப்போதும் போல் இல்லாவிட்டாலும், உடல் உபாதைகள் துன்புறுத்திக் கொண்டிருந்தாலும், எழுத வேண்டிய கட்டுரையை எழுதி முடித்தாள். ரொம்ப நாட்களுக்கு முன் ஒரு கதையை எழுதத் தோங்கியவள் எப்படி முடிப்பது என்று தெரியாமல் விட்டு வைத்திருந்தாள். அதனை எழுதி முடித்தபோது கைவிரல்கள் வலித்தன. விருப்பமான ரசனையானது, ஒரு பழக்கமாக, அதன் பிறகு ஒரு வேலையாக, இறுதியில் நிர்பந்தமான பணியாக எப்போது மாறியது என்று புரியவில்லை.

நடுவில் மாமியார் விழித்து பார்த்து விட்டு இன்னும் தூங்கவில்லையா என்று அன்புடன் கடிந்துகொண்டாள்.

உறங்கும் முன் டாக்டர் சொன்ன எச்சரிக்கை நினைவுக்கு வந்தது.  உடனே தன்னால் திரும்பி வர முடியாது என்பதால் கவனமாக இருந்து கொள் என்ற கணவரின் நயமான பேச்சு, மகள் மற்றும் மாமியார் பற்றிய கவலை, உடல் நலனை பற்றிய பயம்… எல்லாவற்றுக்கும் ஒரே முடிவு நாள் ஒன்றுக்கு 45 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். நாளைக் காலையில் ஒரு மணி நேரம் முன்னால்  எழுந்துகொண்டால் போதும்.

எழுந்து உட்கார்ந்துகொண்டு காலை முதல் இரவு பன்னிரண்டு வரையில் தான் செய்து வந்த வேலைகளை எல்லாம் வரிசையாக எழுதி அதன் பக்கத்தில்  எதையெல்லாம்  நீக்குவது என்று  கணக்கிடத் தொடங்கினாள்.

காலை எழுந்ததும் காபி கடை, சமையல், துணி தோய்ப்பது, ஆயா வருவதற்குள் மாமியாருக்கு அவசர உதவி ஏற்பட்டால் செய்வது. சமையல்காரியை வைத்துக்கொண்டால்? குறைந்தபட்சம் பத்தாயிரமாவது தரவேண்டும்.

பேருந்து பயணம் கணிசமான நேரத்தை விழுங்குகிறது. ஓலாவில் போனால் குறைந்தபட்சம் முக்கால்மணி நேரம் மிச்சப்படும்.  யோசித்து பார்த்தாள் அதை நீக்குவதா என்று.  இப்போ இருக்கும் பொருளாதார நிலையில் அது சாத்தியம் இல்லை.

இப்படி வரிசையாக பரிசீலித்து வந்தபோது இரவு சீக்கிரம் படுத்துக் கொண்டால் தவிர காலையில் நான்கு மணிக்கு எழுந்து கொள்ள முடியாது என்று அவளுக்குப் புரிந்துவிட்டது.

ஏனோ அவளுக்கு திடீரென்று அழுகை பொங்கிக்கொண்டு வந்தது.

சோர்வு ஆட்கொள்ள, மடிகணிணியை திறந்து பத்திரிகைக்கு மின்னஞ்சல் அனுப்பி வைத்தாள். சிலநாட்கள் தன்னால் கட்டுரையை எழுத முடியாது என்று.

தான் இயங்கும் முகநூல் போன்ற சமூக வலை தளங்களில்  தன்நிலையை புதுப்பித்தாள்… சில நாட்கள் விடுமுறை

காலையில் வலுக்காட்டாயமாக் நான்கு மணிக்கு எழுந்துகொள்ள வேண்டும் என்று முயன்றாள். ஆனால் முதல் நாள் என்பதால் ஐந்து மணி ஆகிவிட்டது. மளமளவென்று தயாராகி நடைபயிற்சிக்காகக் கிளம்பினாள். கேட் அருகில் பவழமல்லி அப்பொழுதுதான் பூத்துக் கொண்டிருந்தது. அப்பொழுதுதான் முதல் முறையாக கவனித்தது போல் கீழே விழுந்த மலரை எடுத்து ஆழமாக முகர்ந்தாள். இன்னும் சூரியன் உதிக்கவில்லை. தெருவிளக்கு வெளிச்ச்த்திலேயே மெதுவாக நடக்கத் தொடங்கினாள். காலனியில் அங்காங்கே சாலை பக்கத்தில் மரங்களுக்கு கீழே பெஞ்சிகள் இருந்தன. கால்வலி பெரும்பாலும் இல்லை என்றாலும் அவ்வப்பொழுது மளுக் என்றது. நடக்க முடியாமல் போனாள் சிறிது நேரம் மரத்தடியில் அமர்ந்துகொள்ளலாம் என்று நினைத்தாள். புதிய ஆடியோ புத்தகத்தை கேட்கத் தொடங்கினாள். அதற்குள் போன் வந்தது. வேலைக்கார பெண். யாரோ உறவினர் இறந்து விட்டார் என்றும், இரண்டு நாட்கள் வர முடியாது என்றும் தகவல். ஒரு நிமிஷம் தெரியாத துக்கம் வந்து சூழ்ந்து கொண்டாற்போல் இருந்தது. ஆனால் எப்போதும் போல் அந்த துக்கத்தை அதிகநேரம் மனதில் தங்க விடாமல் நீக்கி விட்டாள்.

ஒருகால் இதுநாள் வரையில் தான் படித்த அல்லது படித்து தன் சிநேகிதிகளுக்கு சொன்னவற்றில் சிலவற்றை யாவதுநடைமுரையில் செயல்படுத்தி இருந்தால் இவ்வளவு ஸ்ட்ரெஸ், உடல்நலக் குறைவு ஏ ற்பட்டு இருக்காது. ஆனால் தனக்கு பாதுகாப்பான வாழ்க்கை வேண்டும்.  வெற்றிகரமான பெண்மணி என்று அழைக்கப் பட வேண்டும். தானும் ஒரு சராசரி பெண்மணி.

விட்டுக்கொடுக்க முடியாது என்று தான் நினைத்து இருந்தவற்றை எல்லாம் எளிதில் விட்டு விட்டால். ஆனால் விட்டுக்கொடுக்க முடியாத வேலைகள் அவளைத் துரத்திக்கொண்டு இருந்தன.

நடைபயிற்சி தொடங்கியது முதல் ஐந்து நிமிஷங்களுக்கு ஒரு முறை மணியை பார்த்துக்கொண்டு இருக்கிறாள்.

உடலும், மனமும், காலமும் ஒரே கதியில் இயங்கிக்கொண்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

பாத்திரங்களை தேய்த்து முடித்தபோது மொபைலில் பதிவு செய்து வைத்திருந்த வாயிஸ் மெசேஜ் வந்தது. “நாற்பத்தி ஐந்து நிமிடங்கள் நடைபயிற்சி முடிந்து விட்டது.”

விரக்தியுடன் சிரித்துக்கொண்டாள்.

“45 நடைபயிற்சிக்காக நாளில் எனக்கு 25 மணி நேரம் இருக்க வேண்டும்.”

*****

 

 

 

Series Navigationஜப்பானிய சிகோ கதைகள்சூடேறிய பூமியில் நாமென்ன செய்யலாம் ?
author

கௌரி கிருபானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *