சொல்

 rishi1

 

 

 

நீலாயதாட்சி….. நித்யகல்யாணீ….

பாலாம்பிகையம்மே…. பத்ரகாளித்தாயே…

காலாதீதத்தில் துளியேனும் கைவசப்பட அருள்வாயே…

வேலா வடிவேலா நீ  தமிழ்க்கடவுளென்றால்

விநாயகர் யாரென்று விளங்கச்சொல்வாயா?

போலாகும்போல் நெருப்பு நிஜமல்லவா…

நூலாய் இளைத்த கதை நொந்ததெதை என்பதை யிங்கே

நந்தமிழ் தெரிந்ததாலேயே சொல்லப்போமோ

சாலா என்றால் சுமாரான கெட்டவார்த்தையா இந்தியில்

ஓலாப் பயணத்தில் பழுதாவது வீலா ஸ்டியரிங்கா

தோலா சதையா எது பெரிதென்ற பட்டிமன்றம்

நடந்திருக்கிறதா எங்கேனும்

நாலாயிர திவ்யப்பிரபந்தத்தில் குறைவது நூறா இருநூறா

பாலாறு வழியுமென்ற புரட்சியின் குருதிப்பெருக்கில்

வாலா தலையா அதிகம் மிதந்தவை

ஏலா நேயமதை எந்நாளும் மாந்தி மாந்தி

மாலாகி மருகியுருகி முறிப்பானில்லா மனம்

ஆலாப் பறப்பதெல்லாம் அழுதுபுரளத்தானா

சீலாதி சீலரெல்லாம் நாலாதிக்குமிங்கே

பீலா விட்டுக்கொண்டிருப்பது தெரியாதா என்ன

லாலா லஜபதிராயும், லேலாதேவிக்காரரும் நீயும் நானும்

அந்த நாற்காலியும் ஒன்றேதானா

கோலா கழியா புளியம்விளாறா, கலமா, குளிர்பானமா

மாலாவான (சதாரா) மாலதியின் கவித்துவம் மறக்கலாமா சூலாயுதமா சுடுமௌனமா எதன் காயம் ஆற நாளாகும்

சீலாதி சீலா, சின்முத்திரைக்காரா

ஞாலாதி ஞாலமெல்லாம் நாற்பதுநாள் டூரா

தாலாட்டிச் சீராட்டியதெல்லாம் மெய்யா, டுபாக்கூரா

லீலாவினோதா நீலார்ப்பணக் கண்ணா

மேலா, கீழா – உனக்குவந்த புணர்ச்சி நிலை வேறா

காலா நீ அசுரகணமா, தேவகணமா….

ஆலாலசுந்தரரிடம் மிச்சமிருக்கா ஆலகால விஷம்

ஆலாபனை யோலமாகும் அரைக்கண்ணிமைப்போதில்.

அலையும் சுவாசமாய் காலாதிகாலம்

காலாவதியாகாக் கவிதையின்

மூலாதாரமாகி நிற்குமொரு சொல்லாச்சொல்.

 

Series Navigationபயணம்‘ரிஷி’((லதா ராமகிருஷ்ணன்) யின் 2 கவிதைகள்