தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

19 ஜனவரி 2020

எம்.ராஜேஷின் “ ஒரு கல் ஒரு கண்ணாடி “

சிறகு இரவிச்சந்திரன்

Spread the love

ஸ்ரீதரின் “ காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு, உத்தரவின்றி உள்ளே வா, கலாட்டா கல்யாணம் “ போன்ற படங்களைப் பார்த்தவரா நீங்கள்? வின்சென்டின் ஒளிப்பதிவு, கோபுவின் நகைச்சுவை வசனங்கள், மெல்லிசை மன்னரின் பாடல்கள், கண்ணதாசனின் வரிகள், சிவாஜி, நாகேஷ், பாலையா, முத்துராமன், ரமாபிரபா, சச்சு போன்ற இந்திய சாப்ளின்களின் நடிப்பு என, நகைச்சுவையின் உச்சத்தைத் தொட்ட படங்கள். இப்போது அம்மாதிரி இல்லையே என்று பெருமூச்சு வருகிறதா? கொஞ்சம் நிறுத்தி வையுங்கள், ‘ ஒரு கல் ஒரு கண்ணாடி ‘ பார்க்கும்வரை. பார்த்தவுடன் பெரு மூச்சு தானாக வரும்.

சரவணன் ( உதயநிதி ), பார்த்தசாரதி (சந்தானம் ) நண்பர்கள். மீரா ( ஹன்சிகா மோத்வானி ) காவல்துறை அதிகாரியின்( சாயாஜி ஷிண்டே) மகள். பார்த்தவுடன் காதல். அது கைகூடுவதுதான் கதை. சே! இவ்வளவு தானா என்று தோன்றுகிறதா? படம் பார்த்தவுடனும் அப்படித்தான் தோன்றும். சரவணனின் தந்தை ( அழகம்பெருமாள்) பள்ளிக்கூட வாத்தியார். அவர் கலியாணத்தின் போது, பெண் டிகிரி படித்தவள் என்று பொய் சொல்லிக் கல்யாணம் செய்ததால், தன் மனைவியுடன் ( சரண்யா பொன்வண்ணன் ) 20 வருடங்களாகப் பேசாதிருப்பவர். வருடந்தோறும் பரிட்சை எழுதும் தாய்க்கு உதவும் மகன் சரவணன், இடையில் சந்தானத்தோடும், மீராவோடும் சுற்றுவது படம். நமக்கு சுற்றுவது தலை.

ஆனாலும் சந்தானத்தை நம்பி படத்தை எடுத்து விட்டார்கள். அவர் காட்சியில் இருந்தால் போதும், படம் ஓடிவிடும் என்கிற குருட்டு நம்பிக்கையில், கதையைக் கோட்டை விட்டு விட்டார்கள். உதயநிதி இயல்பான விடலைப் பையன் போல் இருக்கிறார். முதல் படம். முழுமையான நாயகன் வேடம். ஆனாலும் டப்பிங்கில் லிப் சிங்க் அபாரம். அசைட்டில் பேசுவதுதான் கேட்பதில்லை. பள்ளி டிரில் மாஸ்டர் சொல்லிக் கொடுக்கும், அடிப்படை உடற்பயிற்சி போல் நடனமாடுகிறார். சிறிய கண்கள், அகல விழிக்கும்போதே, அரை இன்ச்தான் விரிகிறது. நடிப்பு கண்களை நம்பித்தானே? அதனால் பாஸ் மார்க் இல்லை. சந்தானத்திற்கு மூன்று, நான்கு வகை ரியாக்ஷன்கள் தான் தெரியும். அவைகளும் போரடித்து விட்டன.

பரங்கிமலை ஜோதி அரங்கில், கட்டிடத்தை மறைத்து பெரிய பேனர் போட்டிருக்கிறார் கள். ஓல்ட் மாடல் பஜாஜ் சேட்டக்கில் சந்தானம் ( MDA 2223), பஜாஜ் பல்சரில் உதயநிதி (TN07 2747), ஸ்கூட்டிபெப்பில் ஹன்சிகா (TN07 4272 ). முன்பதிவு செய்துவிட்டு, பல மாதம் காத்திருந்து, வாங்கப்பட்ட, ஒன்சைட் இன்ஜின் பஜாஜ், இன்னமும் ஓடிக்கொண்டிருப்பதைப் போல சந்தானம். அடுத்த மாடல் வந்தவுடன் காணாமல் போகும் இக்கால பைக்குகள் போல உதயநிதி, படத்துக்குப் பெப்(சி) ஹன்சிகா! உற்சாகபானம்! டைரக்டோரியல் டச்!

ஷாயாஜி ஷிண்டே பாரதியாக நடித்தபோது, அவருக்குப் பின்னணிக் குரல் கொடுத்தவர் நடிகர் ராஜீவ். பாரதிக்கு ஒரு கம்பீரம் கொடுத்தது அந்தக் குரல்! இதில் அவருக்குக், காமெடி என்கிற பெயரில், லூஸ் மோகன் குரல் போல ஒன்றைக் கொடுத்திருக்கிறார்கள். சகிக்கவில்லை. சரண்யாவுக்கு எம்டன் மகனுக்கப்புறம் காமெடி செய்ய வாய்ப்பு. சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். கடைசி முறையாகப் தேர்வில் தோற்ற பின், வீடு திரும்பும் அவரை, டிகிரி வாங்காவிட்டாலும் பரவாயில்லை என்று ஏற்றுக்கொள்ளும் தந்தையை, தேர்வு ரிசல்ட் கவரைப் பிரித்துப் பார்க்கும்படி உதயநிதி வற்புறுத்தும்போது, சரண்யா காட்டும் ரியாக்ஷன்கள் சூப்பர்.

ஒரு காட்சியில் வரும் சினேகா, படம் முழுவதும் வரும் ஹன்சிகாவை, ஓரங்கட்டி விடுகிறார். பூனைக்கண்ணும், பிசிறு குரலுமாக ஆர்யா, அவரது தோளில் தொங்கிக் கொண்டிருக்கும் ஆண்டிரியா என்று ஏகப்பட்ட வெங்காயத் துகள்கள். ஆனால் பேல்பூரிதான் நமத்து விட்டது. பாலாவின் காவல்நிலைய மிமிக்கிரி காமெடிபோல், ஒரு காட்சி, அப்பா பார்த்த மாப்பிள்ளை, ஏற்கனவே ஒரு பெண்ணைக் கெடுத்து கைவிட்டவன் என்று அரத பழசு கிளைமாக்ஸ். விசுவின் ‘ ஈஸ்வர அல்லா தேரே நாம் ‘ நாடகத்தில் ஒய் ஜி மகேந்திரா, கிருத்துவ போதனையாளர்களை கிண்டலடிப்பதைப் போன்ற காட்சியின் அப்பட்ட காப்பியாக ஒரு காட்சி. ராஜேஷ¤க்கு கற்பனை வறண்டுவிட்டது.

படம் முழுக்க மீரா, சரவணன் மோதல், சந்தானம், உதயநிதி ஊடல், கூடல் என்று மொக்கையாகக் காட்சிகள். ராஜேஷின் முன் எழுத்து எம் ·பார் மொக்கையோ?

சரக்கு காதலன், தண்ணீர் காதலி, தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் குவளை நண்பன் என்று ஒரு வசனம். ஆர்ப்பரிக்கிறார்கள் இளைஞர்கள். தேறும் ஒரே வசனம் அது!

எங்கேயே கேட்டமாதிரியே இருக்கிறது பாடல்கள். பாஸ் படத்தின் கதை, ஒரு இளைஞன் வெற்றி பெறுவதை மையமாக வைத்து, காதலோடு சொல்லப்பட்டது. இதில் அதுகூட இல்லை. உதயநிதி என்ன படித்திருக்கிறார்? என்ன வேலை செய்கிறார்? அப்பாவின் பள்ளிக்கூட வாத்தியார் சம்பளத்தில் எப்படி பைக் வாங்குகிறார்? எப்படி பெட்ரோல் போடுகிறார்? ஜானவாசக் காரை வைத்துக் கொண்டு சந்தானம் எப்படி ஆயிரக்கணக்கில் செலவு செய்கிறார்? கேட்கக் கூடாத கேள்விகள்! தெரிந்திருந்தால் ராஜேஷ் சொல்லியிருக்க மாட்டாரா?

இன்னமும் எத்தனை நாளைக்கு ராஜேஷின் நாயகர்கள் தப்புதப்பாக இங்கிலீஷ் பேசுபவர்களாகவே இருப்பார்கள்? கிரேசி மோகனே மாற்றிக் கொண்டு விட்டார்! இவர்கள் இன்னமும் விடமாட்டேன் என்கிறார்கள்.

இந்தப் படம் வெற்றி பெற்றால் ஹாட்டிரிக் வெற்றியாம். பி சி சர்க்காரைத் துணைக் கழைத்து, தொப்பியிலிருந்து வெற்றியை வரவழைத்தால்தான் ஹாட் டிரிக்!

வெங்கட்பிரபு ஆங்கிலத்திலிருந்து சுட்டு, தமிழ்ப் படுத்துகிறார். அதனால் பிழைத்துக் கொள்கிறார். ராஜேஷ் தமிழிலிருந்தே சுட்டு விடுகிறார். அதனால் நீர்த்துப் போகிறார். சாப்ளின் சினிமாவையும், உலக சினிமாவையும் யாராவது அவருக்குக் காட்டுங்கள். பிழைத்துப் போகட்டும்.

#

கொசுறு

பரங்கிமலை ஜோதியிலிருந்து, ராணுவக்குடியிருப்பு வழியாக நடந்து வந்தால், மவுண்ட் சாலைத் திருப்பத்தில் இருக்கிறது, 25 வருடங்களாக நடந்துவரும் மவுண்ட் கேப். ஆரம்பத்தில் இந்து அப்பாவால் ஆரம்பிக்கப்பட்டது, தற்போது கன்வர்ட்டட் கிருத்துவ மகனால் நடத்தப்படுகிறது. ஆனாலும் சைவ மணம் மாறாமல் தோசை சுடுகிறார்கள். ஆச்சர்யம்! இரவு பத்து மணிக்கு தேங்காய் சட்னி புளிப்பதில்லை!

மவுண்ட் பேருந்து நிறுத்தத்தில் கண் பார்வையற்றவர் ஒருவர் கம்புடன் நின்றிருந்தார். ‘எங்கே போகவேண்டும்? ‘ என்று கேட்டேன். ‘போரூர்’ ‘ ஷேர் ஆட்டோவில் வருகிறீர்களா? நான் அழைத்துப் போகிறேன் ‘ என்றேன். ‘ வேண்டாம் சார்! பஸ் பாஸ் இருக்கு! ‘ 49 ஏவில் செமக் கூட்டம். ‘எப்படியாவது ஏற்றி விட்டுவிடுங்கள் சார்’ ஏறும் இடத்தின் அருகில் இடம் பிடித்து, அவரை நிற்க வைத்துவிட்டு, இறங்குபவர்கள் விலகும்வரை காத்திருந்தேன், அவர் தோள்மீது ஒரு கை வைத்தபடி. என் கையை விலக்கிவிட்டு முண்டியடித்து ஏறினார் நடுத்தர வயதுக்காரர். ‘ கண் தெரியாதவர்.. என் கையைத் தட்டி விட்டு ஏர்றீங்களே ‘ என்று கோபப்பட்டேன். ‘ விடுங்க சார்! அவருக்குத் தெரியல’ என்றார் பார்வையற்ற அந்த இளைஞர்.

#
( AFTER THOUGHT)

பாலசுப்ரமணியெம்மின் கேமரா புகுந்து விளையாடியிருக்கிறது. அதிகம் உறுத்தாத வண்ணங்கள் கொடுத்து ஒரு ரிச் லுக்கை படத்துக்குக் கொடுத்து விட்டார். ஆடும் தினேஷ் மாஸ்டரின் ஆட்களைப் பின்னுக்குத் தள்ளி, உதயநிதியே முன்னுக்கு வந்து ஆட்டிக் கொண்டிருப்பதால், பாலுவின் வித்தை விழலுக்கு இறைத்த நீர் ஆகிறது.

வீட்டுக்கு வந்தவுடன் தான் தோன்றியது! கரகர குரலில், ஒரு தொல்காப்பியத் தாத்தா கேரக்டர் போட்டிருந்தால், அட் லீஸ்ட் படம் குடும்பப் படமாகவாவது ஆகியிருக்கும்!

ஐந்தாவது நாளே 40 விழுக்காடு அரங்குதான் நிறைந்திருந்தது. போகப்போக எப்படியோ? இம்மாதிரி படங்கள் வெளியிடும்போது, வைகுண்ட ஏகாதசி போல ஒரு நல்ல படத்தையும் திரையிடலாம் ஒரே டிக்கெட்டில்!
#

Series Navigationஆலிங்கனம்வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 9

4 Comments for “எம்.ராஜேஷின் “ ஒரு கல் ஒரு கண்ணாடி “”

 • punai peyaril says:

  சாப்ளின் சினிமாவையும், உலக சினிமாவையும் யாராவது அவருக்குக் காட்டுங்கள்.–> ராஜேஷ உலக சினிமா , சாப்ளின் சினிமா அதிகமாக பார்த்தவ்ரே… ஒரு ஆன் தி கோ… பட வகையறாவை எடுத்துத் தள்ளியிருக்கிறார். சிட்டிஷன் கேன், ஆந்தராய் ருபலோவ், பேட்டில்ஷிப் போட்டம்கீன், லா ஸ்டரடா, முதல் நேற்று வ்ந்த ஈரானிய படம் வ்ரை பார்த்தவன் நான், இந்த் படத்தை பார்த்தேன்… ரிலாக்ஸ்டாக இருந்தது…. ஜாலியான படம் , அருவருப்பற்ற படம்… வேறென்ன வேண்டும்… இது வேறு.. .பதேர் பாஞ்சாலி வகையறா வேறு… விமர்சகர் (!) குழப்பி கொள்ள வேண்டாம்…

 • punai peyaril says:

  கண் தெரியாதவர்.. என் கையைத் தட்டி விட்டு ஏர்றீங்களே ‘ என்று கோபப்பட்டேன்–> பார்வையற்றவர்களுக்கு தங்களின் கைத்தடியின் பகுதி பிடித்து நடப்பது தொந்தரவாகவே கருதப்படுகிறது. தோள் மீது கைவைப்பது அதுவும் தெரியாதவர், யாருக்கும் பிடிக்காது… கண் தெரியாதவர் என்பதால் நீங்கள் தோள் மீது கை வைப்பது கரிசனம் என்று நினைத்தாலும், அவர்களின் உணர்வுகளை புரிந்தே உதவி செய்ய வேண்டும். கூகுள் செய்தால், கண் தெரியாதவரின் பல மனநிலை அறியலாம். மேலோட்டமாக, சுவாரஸ்ய கதம்பம் என்று எழுதுப்படுவது வேதனையே… பார்வையற்றோர் அவர்களின் உலகில், நார்மலாக வாழவே முயற்சிக்கிறார்கள், அது புரிந்து நாம் உதவ வேண்டும்.

 • arshiya.s says:

  நல்லவேளை என்னைக் காப்பாத்தீட்டீங்க.

  • punai peyaril says:

   யாரை சொல்றீங்க…? புரியலை… :) படம் பழுதில்லை.. ஜாலியா இருக்கும் பெரும்பாலான காட்சிகளில்.. 20% வேண்டுமானால் FF பண்ணிவிடலாம்.. ரிமோட்டுடன் பார்ப்பதன் வசதி அது…


Leave a Comment to punai peyaril

Archives