வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் 15

Spread the love

நன்றாற்ற னுள்ளுந் தவறுண்டு அவரவர்

பண்பறிந் தாற்றாக் கடை.

 

இந்திய நாட்டில் சுதந்திரப் போராட்ட காலத்திலேயே பெண் விடுதலை பற்றிய சிந்தனையும் தோன்றி, முயற்சியையும் தொடங்கிவிட்டனர். இந்த மண்ணில் பெண் சமுதாயம் ஏறிவந்த முன்னேற்றப் படிகளைக் காணலாம். முதலில் பெண்களுக்கு அடையாளம் பெற்றுத்தர வேண்டுமென நினைத்தனர். அன்னிபெசன்ட் அம்மையாரால். அகில இந்திய மாதர்சங்கம் தோன்றியது அதன்மூலம் ஓட்டுரிமை பெற்றுத் தந்தனர்.. இதனை யாரும் மறத்தல் கூடாது

100 ஆண்டுகளுக்கு முன்னரே விழிப்புணர்வு முயற்சியை மேற்கோண்ட வைகளை மீண்டும் நினைவுறுத்த விரும்புகின்றேன்.

பெண் சிசுக்கொலை, பலதாரமணம், பால்யவிவாகம், உடன்கட்டை ஏறுதல், விதவாமறுமணம் மறுப்பு, பெண்களுக்குச் சொத்துரிமை, கல்வி முதலியன மறுத்தல், தீண்டாமை, மூடப்பழக்கம் இதுபோன்ற பழக்கங்களை நீக்க பலவகையிலும் முயற்சிகள், மேற்கொள்ளப்பட்டன

இயக்கங்களும் போராட்டங்களும் மனித இன ஒருமைப்பாட்டிற்காக நடக்க வேண்டும்.. இன்றோ எத்தனை பிரிவுகள் கொண்டுவரலாமோ அத்தனையும் கொண்டு வந்து நமக்குள்  காழ்ப்புணர்ச்சியை வளர்த்துக் கொண்டு சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றோம்

அன்னிபெசண்ட் அம்மையார்,, ராஜாராம் மோகன்ராய் ஆகியோர் குழுக்கள் அமைத்து விழிப்புணர்வு முகாம்களை நடத்தினர். ஓட்டுரிமை கிடைத்தது போல், சதியின் பெயரால் பெண்ணை உடன்கட்டை ஏற்றுவதை நிறுத்தினார்கள். தொடர்ந்து பல சீர்திருத்தச் சட்டங்களும் இயற்றப்படன. சமுதாயத்தில் வேரூன்றிப் போன பழக்கங்களை மாற்றுவது அவ்வளவு எளிதல்ல. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள் தேவதாசி ஒழிப்புத் திட்டம் கொண்டு வந்தாலும் அந்தத் தொழில் ஏதோ ஒரு வடிவில் இன்றும் நடைபெற்று வருகின்றது. அகில இந்திய மாதர் சங்கம் நாடு முழுவதும் பரவலாக கிளைகளைத் தோற்றுவித்து பணிகள் செய்து வந்தனர். டாக்டர் முத்துலட்சிமி ரெட்டி அவர்களும் கான்ஸர் ஆஸ்பத்திரி ஆரம்பித்தது போல் ஆதரவற்ற மகளிர், குழந்தைகள் நலனுக்கு இல்லம் தோற்றுவித்தார். சமுதாயத் தேவையை நோக்குமிடத்து இந்தஅமைப்புகள் போதாது. பெரியவர்கள் சிந்திக்க ஆரம்பித்தனர்.

முதலில் பிரச்சனைகளை நன்றாக ஆராய வேண்டும். தீர்க்கும் வழிகளையும் ஆய்வு செய்தல் வேண்டும். எத்தகைய அமைப்புகள் இருந்தால் பயன் கிடைக்கும் என்பதையும் பார்க்க வேண்டும். கல்வி,, பயிற்சி, பணியாளர்கள் என்று எல்லாக் கோணங்களிலும் தீவிரக் கவனம் செலுத்தி அறிக்கை தயார் செய்ய வேண்டும். பின்னர்தான் அரசும், தொண்டு நிறுவனங்களும் எத்தகைய பொறுப்புகளை ஏற்று நடத்துதல் சிறப்பானது என்பதனை அறிதல் முடியும் என்று முடிவு செய்தனர்.

இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர் திருமதி பாரிஜாதம் நாயுடு அவர்கள். இவர்களைப் பற்றி வலைப் பக்கங்களில் கூட விபரங்கள் அதிகமாக இல்லை. . சமூகநலத்துறையில் அதிக நாட்கள் பணியாற்றியவள் என்பதுமட்டுமல்ல பல பிரிவுகளில் பணியாற்றியவள் என்பதாலும் என் கடமையாக நினைத்து சில குறிப்புகளை விபரமாக எழுத விரும்புகின்றேன். குறிப்பெடுக்கும் பழக்கம் சின்ன வயது முதல் எனக்குண்டு. ஓய்வு பெறும் முன்னர் மகளிர் நலப் பிரிவின் துணை இயக்குனராகப் பணியாற்றினேன். ஆர்வத்தில் இருப்புக் கோப்புகளைப் பார்த்தேன். இதன் ஆரம்ப வரலாறு என்னை ஈர்த்தது.  குறிப்புகள் எடுத்து வைத்துக் கொண்டேன். இப்பொழுது முழு விபரங்கள் என்று இல்லாவிட்டலும் முக்கியமான தகவல்களைப் பதிவு செய்யப் போகின்றேன்.

ஆலமரத்தின் வேர்களைப் பார்ப்போம்

திருமதி பாரிஜாதம் நாயுடு அவர்கள் யார், அவருடைய தகுதிகள் என்ன, இந்த முயற்சியில் பங்கு கொண்ட பெரியவர்கள் யார், யார் என்று பார்க்கலாம்.

திருமதி பாரிஜாதநாயுடு அவர்கள் ஓர் கல்வியாளர். முதுகலைப் பட்டம் பெற்றவர். பல சிறப்பு விருதுகளும் பெற்றவர். பிரிக்கப்படாத மாகாணமாக இருந்த காலம். மதராசில் அப்பொழுதிருந்த கல்வித்துறையில் 1930 ஆம் ஆண்டு அக்டோபர் மாதர் 22 ஆம் தேதி முதல் 1944 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், 3 ஆம் தேதிவரை பல பொறுப்புகளில் இருந்தார். அந்த காலத்தில் அவர் கவனித்தவை, ஆசிரியைகள். பெற்றோர்கள், குழந்தைகள், சமூக நலம், சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், தீர்க்கும் வழிகள் இவைகளுக்கான திட்டங்களின் செயல்பாடுகளைக் கண்காணித்தல்.

அவருடைய புலமை, திறமை, அனுபவங்கள் இவைகளைக் கண்ட அரசு அவருக்கு. 1944 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் தேதியன்று ஓர் புதிய பொறுப்பைக் கொடுத்தது. மகளிர், குழந்தைகள் நலனைக் கவனிக்க அரசில் புதிய துறையொன்று உருவாக்க என்னென்ன செய்ய வேண்டுமென்பதற்கு ஆய்வு செய்து, அதன் அறிக்கையைச் சமர்ப்பிக்கும் பொறுப்பை அவர்களிடம் ஒப்படைத்தது..

இந்த அமைப்பின் முக்கிய பொறுப்புகளைப் பற்றிய பட்டியல் தயார் செய்யப்பட்டது.

1 துறையின் அமைப்பும் செயல்முறைகளும் வகுக்கப்படவேண்டும்

2 குடும்பநலப் பணிகள், சமுதாய மன்றங்கள், மக்கள் தொடர்புகளில் கையாள வேண்டிய முறைகள், ஆய்வுகள், பயிற்சிகள், குழந்தை களுக்கும் கல்வித் திட்டங்கள், தயார் செய்யப்பட வேண்டும்.

2 மேற்குறித்தவைகளை இலக்காகக் கொண்டு கிராமங்கள், நகரச் சேரிகள் இவைகளுடன் பொருளாதார நிலையில் பின் தங்கிவர்களீன்  வசிக்கும் இடங்களில் மையங்கள் ஏற்படுத்துதல்

4 பணிகள் செவ்வனே நடக்க முறைப்படி பயிற்சி கொடுத்தல் வேண்டும்.

5 அடிப்படை கிராம ஊழியருக்கு கிராம சேவிக்கா என்ற பெயர் கொடுக்கப்பட்டு ஓராண்டு பயிற்சி கொடுத்தல்

6 அவர்களுக்கு வழிகாட்டவும் மேற்பார்வையிடவும் பட்டதாரிப் பெண்களை நியமித்தல்

7 ஒருமுறை பயிற்சி கொடுத்தால் மட்டும் போதாது. அவர்கள் ஆர்வத்தை ஊக்குவிக்கவும் மேற்கொண்டு புது உத்திகளைக் கற்றுக் கொடுக்கவும் சிறு சிறு பயிற்சிகளைக் கொடுத்தல் (Refresher course and work shops)

8 தாய்சேய் நலப்பணிகளிலும் சிறப்புப் பயிற்சி

9 சேவை இல்லங்களில் மகளிரை வைத்து சிறு சிறு கைத்தொழில் கற்றுக் கொடுக்க முதலில் களப்பணியாளர்களுக்குக் கைத்தொழில் கற்றுக் கொடுத்தல்

10.அரசுப் பணியாளர்கள் மட்டுமன்றி ஆங்காங்கு தொண்டு செய்ய விரும்புவர்களுக்கும் சிறு பயிற்சி கொடுத்தல்

11 ஆதரவற்ற பெண்களுக்குப் புனர்வாழ்வளிக்க இடமளித்து, கல்வியும், தொழிற்பயிற்சியும் அளிக்க சேவை இல்லங்கள் ஏற்படுத்துதல்

12 கல்வி உட்பட குழந்தை நலன்களைக் கவனிக்கும் நிறுவனங்கள்

13 திட்டங்கள் செவ்வனே நடக்கின்றனவா என்பதனை அவ்வப்பொழுது ஆய்வு செய்து, குறைகள் காணின் அதனை நீக்கி, முன்னேற வழிகாட்டும் அமைப்புகள்

14. கிராமப்புரங்களில் மகளிர்க்குத் தொழில் மையங்கள் ஏற்படுத்துதல்

மேற்குறித்தவைகளைப் பல ஆண்டுகள் ஆராய்ந்து  இன்னும் பல அரிய ஆலோசனைகளுடன் ஆய்வறிக்கையை திருமதி பாரிஜாத நாயுடு அவர்கள் அரசுக்கு அளித்தார்கள்.

சென்னை மாகாணத்தில் முதல்வராக இருந்த திரு ராஜாஜி அவர்கள். சிறிது காலம்தான் முதல்வராக இருந்தாலும் அவர் பொறுப்பில் இருந்த துறைகளின் கீழ் இதுவும் வந்ததால் திட்ட நுணுக்கங்களைப் பார்த்து செயல்வடிவம் பெற விழைந்தார். மறைந்த முன்னாள் பிரதமர் திரு பண்டித ஜவஹர்லால் நேருஜி அவர்களும் ஆக்க பூர்வமான அறிக்கை யாக இருக்கக் கண்டு பாராட்டினார்கள்.

மகளிர் நலத்துறை உதயமானது.

இந்தியாவில் இத்தகைய அமைப்பு முதல் முறையாக தமிழகத்தில்தான் தோன்றியது. அதுமட்டுமல்ல, அறிக்கையில் தெரிவித்தபடி களப் பணிகளின் முன்னேற்றங்களை அவ்வப்பொழுது ஆய்வு செய்து பல புதியவைகளும் இணைக்கப்பட்டன.

1952 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதியன்று சென்னை அரசு டில்லியில் இயங்கிய திட்டக் கமிஷன் இரு பொறுப்புகள் கவனிக்க இவர்களைக் கேட்டுக் கொண்டது. ஒன்று சமூக நலம். மற்றொன்று பிற்பட்டோர் நலன். இவ்விரண்டு திட்டங்களும் ஐந்தாண்டுத் திட்டங்களில் சேர்க்கப்பட்டன. திருமதி பாரிஜாதம் நாயுடு அவர்கள் திட்டக்கமிஷனில் இயங்கிய சமூக நலப் பிரிவிற்கு இயக்குனராக நியமிக்கப்பட்டார். இத்துடன் மகளிர், குழந்தைகள் நலனைக் கவனிக்க குறிப்பாக மேல் நடவடிக்கை தொடர ஆரம்பித்தது. 1960ல் மத்திய அரசில் ஊரக வளர்ச்சிப் பிரிவில் மகளிர் குழந்தைகள் நலப் பிரிவின் இயக்குனராகவும் பொறுப்பு அளிக்கப்பட்டது. . இதுவரை ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றி வந்த சமூக நல அமைப்பாளர்கள் முக்கிய சேவிக்கா என்று அழைக்கப்பட்டு முக்கியா சேவிக்காக்கள், கிராம சேவிக்காக்களை மகளிர் நலத்துறையில் இணைக்கப்பட்டு அவர்கள் களப் பணியாளர்களாக்கப்பட்டனர்..

ஆய்வு செய்து திட்டங்கள் வரைந்தவரே இத்தகைய பல பொறுப்புகளில் சேர்ந்தமையால், திட்டங்களும்  சீரமைக்கப்பட்டு பல திட்டங்களை ஒருங்கிணைத்தவரும் திருமதி பாரிஜாதம் நாயுடு அவர்களே.. . பல நாடுகள் சென்றவர். பல மாநாடுகள், கருத்தரங்குகளில் கலந்து கொண்டவர். இன்னும் பல சிறப்பு நிலைகள் பெற்றவர். இவர் முயற்சிகளை, சாதனைகளைப் பாராட்டியவர்கள் பலர்.

உயர்திரு. கிரி அவர்கள்

உயர்திரு. பண்டித ஜவஹர்லால் நேருஜி அவர்கள்.

உயர்திரு. ராஜாஜி அவர்கள்

உயர்திரு. டி.டி. கிருஷ்ணமாச்சாரி அவர்கள் (மத்திய அரசு தொழிலாளர் நல அமைச்சராக இருந்தகாலத்தில் )

திட்டக் கமிஷன் மூலமாக ஓர் வழிகாட்டி நூலும் எழுதப்பட்டு பிரசுரமாகியுள்ளது.

அதில் ஆசிரியர் குழுவில் இருக்கும் பொழுது இந்தியாவில் சமூக நலம் என்ற ஒரு புத்தகமும் நாட்டில் சமூக நலத்திற்காக ஏற்படுத்த வேண்டிய அமைப்புகள், அதன் பணிகள்பற்றியும் விளக்கமாக எழுதப்பட்ட இன்னொரு புத்தகமும் வெளியிட்டார். சமூக நல ஆலோசராகவும் வெளி நாடுகளுக்குச் சென்றிருக்கின்றார்.

முதுமை காலத்திலும் சென்னையில் உள்ள ஆந்திர மகிள சபாவுடன் தன்னை இணைத்துக் கொண்டு பல பணிகள் செய்திருக்கின்றார். இவர் திறமைக்கும் பணிகளுக்கும் பல விருதுகள் பெற்றிருகின்றார்.

மகளிர் நலத்துறை உருவாவதற்குக் காரணமான திரு ராஜாஜி அவர்களையும் பல ஆண்டுகள் இதற்காகப் பாடுபட்ட திரு பாரிஜாதம் நாயுடு அவர்களையும் இந்த சமுதாயம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மகளிர் நலத்துறையின் ஒரு முகத்தைப் பற்றி சில குறிப்புகள் எழுதியுள்ளேன். அத்துடன் இணைக்கப்பட்ட இன்னொரு அமைப்பையும் கூறும் பொழுது இது ஓர் ஆலமரம் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

திட்டங்கள்  எழுதிவிட்டால் மட்டும் போதாது. களத்தில் என்னதான் பணிகள் நடந்தன என்று தெரிந்தால்தான் இதன் வலிமை தெரியும். அதுமட்டுமல்ல. அப்படிப்பட்ட ஓர் ஆலமரம் என்றால் ஆய்வின் பொழுது அறிந்து கொள்ள முடியாமல் போய்விடுமா என்று கேள்வியும் தோன்றும். எனவே எங்களிடையில் இருந்த சில பலஹீனங்களையும் வெளிப்படையாக எழுத விரும்புகின்றேன். நம் குறைகளை உணர்ந்தால்தான் நாமே அதனைச் சீராக்க முடியும். கடலில் கரைத்த பெருங்காயம் போன்று ஆகிவிடக் கூடாது. மரம் கீழே விழாமல் காப்பாற்றப்பட்ட பிறகு இத்துடன் இணைந்த கிளைகளைபப்பற்றியும் சில வார்த்தைகளாவது கூறுவேன்.

இது இலக்கியமாக எழுதப்படவில்லை. நம் நலனுக்கு, உடல், மனம் இவைகளின் ஆரோக்கியத்திற்குத் தெரிய வேண்டியவைகளை எழுத விரும்புகின்றேன்.

ஓர் திட்டத்தின் சிறப்பு அது தோன்றும் பொழுதே இலக்கிற்கு சம்பந்தப்பட்ட பல நிபுணர்களும் சேர்ந்து ஆராய்ந்து வரையப்பட வேண்டும். களத்தில் செயல்படுத்தும் பொழுது பிரச்சனைகள் வரின் அவைகளின் காரணங்களைச் சம்பந்தப்பட்ட நிபுணர்களைக் கொண்டு அறிந்து, அவர்கள் வழி காட்டலில் மாறுதல்கள் செய்ய வேண்டும். பயன்பெறும் மக்களும் பொறுப்புடன், திட்டங்கள் அவர்கள் நலனுக்காக என்பதனைப் புரிந்து ஒத்துழைக்க வேண்டும்.

இதனைப் படித்துவரும் பொழுதே பலருக்கு பல சந்தேகங்கள் எழும். இந்த அம்மாள் ஏதேதோ எழுதுகின்றார்களே, அப்படி என்னதான் நடக்கின்றது, எதுவும் நடப்பதாகத் தெரியவில்லையே என்பதுதான். எல்லோரிடமும் வேண்டிக் கொள்வது கொஞ்சம் பொறுமையுடன் தொடர்ந்து படிக்கவும். முதல் வகுப்பில் நுழைந்த அன்றே பட்டம் பெற்றுவிட முடியாது. இது நம் அன்றாட வாழ்க்கையுடன் சம்பந்தப் பட்டது. எனவே விபரங்களைப் படித்தபின்னர் நிச்சயமாக பலன் இருக்கும். உடனுக்குடன் பதில் தரமுடியாத நிலை.  தொடர் விட்டுப் போகும். ஆனால் முடிவில் அர்த்தமுள்ள கேள்விகளுக்கு நிச்சயம் பதில்கள் இருக்கும்.

எட்டயபுரம் உயர்நிலைப் பள்ளியில் கணக்கு வாத்தியாரம்மாவாக ஓராண்டு பணியாற்றினேன். தந்தையுடன் சென்றவள் பெருந்தலைவர் காமராஜ் அவர்களைப் பார்க்க நேரிட்டது. அவர்தான் என்னை கிராமப் பணிக்குச் செல்ல அறிவுரை கூறினார். 1956 இல் ஏப்ரல் மாதம் கிராமப் பணியில் சேர்ந்தேன். சேர்ந்த பொழுது என் பணியின் பெயர் சமூகக் கல்வி அமைப்பாளர். அதன் பின் 34 ஆண்டுகள் பல நிலைகளில் பொறுப்பேற்று பணியாற்றினேன். தமிழகத்தில் எல்லா மாவட்டங் களுக்கும் சென்றிருக்கின்றேன். மாவட்ட அதிகாரியாகப் பணியாற்றி யிருக்கின்றேன். ஏறத்தாழ 20000 கிராமங்களுக்கு மேல் சென்றிருப்பேன். போகிற பாதையில் பார்த்த கணக்கில்லை. ஊருக்குள் சென்று மக்களைச் சந்தித்துப் பேசியிருக்கின்றேன். 3200 நகரச் சேரிகளில் குடிசைகளைப் பார்வை யிட்டிருக்கின்றேன். நம் மாநிலம் மட்டுமல்ல பிற மாநிலங்களிலும் கிராமங்களுக்குச் சென்றிருக்கின்றேன். வெளி நாடுகள் சென்றாலும்  குடும்பங்களைச் சந்தித்துப் பேசியிருக்கின்றேன். இத்தகவலை என் பெருமைக்காகப் பதியவில்லை. என் அனுபவங்களின் ஆழத்தைப் புரிந்து கொள்வதற்காக இத்தகவல்களை எழுதி யுள்ளேன்.

இந்தப்பணி எனக்கு பிடித்தமான பணி. நான் கற்றவைகளை பயன்படுத்த முடிந்த களம். மேலும் மேலும் என்னைக் கற்க வைத்த பணி. ஆத்ம பூர்வமாக இத்தொடரை எழுத விரும்புகின்றேன். திட்டம், அதனைச் செயல்படுத்துதல், மக்களின் பங்கு இவைகளை சில உதாரணங்களுடன் விளக்க எண்ணியுள்ளேன் (planning, implimentation and people participation) முடிந்தவரை முயற்சி செய்து எழுதுவேன்.

ஒரு உதாரணம் மட்டும் கூற விரும்புகின்றேன். என் தந்தையின் குடும்பத்தில் பரம்பரை பரம்பரையாக சோதிடம் கற்றவர்கள். ஆனால் அவர்கள் அதனைத் தொழிலாகச் செய்யவில்லை. சோதிடம் என் வாழ்க்கையில் விளையாட ஆரம்பித்தது. எங்கோ இருக்கும் மண்ணுருண்டைகள் இந்த மண்ணின் மனிதர்கள் வாழ்க்கையை எப்படி இயக்க முடியும் என்று வாதிடுவேன்.

காலம் செல்லச் செல்ல எனக்குள் பிறந்த கேள்வியால் தேடல் தொடங்கியது. நானும் சோதிடம் கற்க ஆரம்பித்தேன். நான் படித்த புத்தகங்கள் அதிகம். ஊர்களுக்குச் செல்லும் பொழுது யாராவது கெட்டிக்கார சோதிடர் இருக்கின்றார் என்றால் உடனே போய்ப் பார்ப்பேன். ஜாதகம் காட்ட அல்ல. சோதிடம் பற்றி வாதாட. வித்துவான் ;லட்சுமணன், புலியூர்பாலு, பார்த்தசாரதி , இன்னும் பல நண்பர்கள் கிடைக்கவும், அவர்களிடம் சந்தேகம் கேட்பேன். வி. சுந்தரம் என்ற ஒருவர். அவர்தான் சோதிடம் ஓர் விஞ்ஞானம் என்பார். அவர் கிண்டியில் இருந்த ஐ.ஐ. டி யில் பேராசிரியராகப் பணியாற்றியவர். அவரிடம்தான் என் பல கேள்விகளுக்குச் சரியான விடைகள் கிடைத்தன. புலியூர் பாலுதான் என்னைத் திட்டினார். வெறும் புத்தகப் படிப்பு போதாது. அறிமுகமில்லாதவர்களின் ஜாதகங்களைப் பார்த்துப் பலன்கள் கூற வேண்டும். அப்பொழுதுதான் சோதிடத்தின் வலிமை தெரியும் என்றார். என்னை யாரென்று காட்டிக் கொள்ளாமல் சில கிராமங்களூக்குச் சென்று சோதிடம் பார்த்தேன். ஓர் பத்திரிகையில் ராசிபலன் எழுதினேன். ஓர் அமைப்பிற்கு ஆலோசகராகவும் இருந்தேன். பின்னர் அண்ணாநகர் டைம்ஸில் விளம்பரம் கொடுத்தேன். வீடு தேடி ஜாதகம் காட்ட வருவார்கள். இரண்டு வாரங்களுக்கு மேல் பொறுமை இருக்காது. சோதிடர் ஊருக்குப் போய்விட்டார் என்று சொல்லி விடுவேன்.

வருகின்றவர்களுக்கு சோதிட முறையில் பரிகாரங்கள் கூறமாட்டேன். உளவியல் முறையில் கவுன்ஸ்லிங் செய்திருக்கின்றேன். அவர்கள் பிரச்சனைகள் தீர வழிகாட்டியிருக்கின்றேன். சோதிடக் கலையையும் சமுதாய நலனுக்காகப் பயன்படுத்த முடிந்தது. நான் கற்ற கலைகள் அனைத்தும் ஒரே குறிக்கோளுடன் சென்று என் களப் பணிகளுக்கு உதவியாக இருந்தன என்பதற்காக இதனை உதாரணமாகக் காட்டினேன்.

எதைச் செய்தாலும் எங்கு சென்றாலும்  இல்லறம் நல்லறமாக இருக்க வேண்டுமென்பதில்தான் அக்கறை காட்டுவேன். நான் ஓர் செக்குமாடு. குடும்ப நலனே என் இலக்கு அதைத்தான் சுற்றிச் சுற்றி வருவேன். என் பலஹீனம் என்று நினைத்தாலும் சரி..

இனி ஆரம்பகாலத்தில் மகளிர் நலத்துறை பணிகளைப் பார்க்கலாம்

“எப்பொழுதும் உண்மையைப் பின்பற்று. நினைவிலும், சொல்லிலும், செய்கையிலும் அதை அடைய முயற்சி செய். எக்கஷ்டத்திலும் தைரியமாயிரு. உன்னுடைய கொள்கைகள், லட்சியங்கள் இவற்றில் உறுதியுடனிரு. உன் கடமையைச் செய்”

சுவாமி சிவானந்தா

(தொடரும்)

படங்களுக்கு நன்றி.

Series Navigationசந்தோஷ்சிவனின் “ உருமி “தாகூரின் கீதப் பாமாலை – 16 கீத இசையின் தாக்கம்