தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

22 ஜூலை 2018

பாரதியும் பட்டுக்கோட்டையாரும்(பகுதி-6)

முனைவர் சி.சேதுராமன்


 இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

பொதுவுடைமை பாடிய கவிஞர்கள்

பொதுவுடைமைச் சிந்தனைகளை முதன் முதலில் பாடிய பெருமை மகாகவி பாரதியாரையே சாரும். பொதுவுடைமை இயக்கமோ, தொழிற்சங்க இயக்கமோ உறுதியாகக் கால் கொள்ளாத காலத்தில் ரஷ்யாவில் நடந்த புரட்சியின் விளைவாகப் பாடியவர் பாரதியார். ‘‘வையகத்தீர் புதுமை காணீர்’’(ப.,90) என்று ரஷ்யப் புரட்சியைப் பாடிய பாரதியார்,

‘‘முப்பது கோடி ஜனங்களின் சங்கம்

முழுமைக்கும் பொதுவுடைமை

ஒப்பில்லாத சமுதாயம்

உலகத்துக் கொருபுதுமை’’

‘‘எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம்

எல்லாரும் இந்திய மக்கள்

எல்லாரும் ஓர்நிறை எல்லாரும் ஓர்விலை

எல்லாரும் இந்நாட்டு மன்னர் –நாம்

எல்லாரும் இந்நாட்டு மன்னர் –ஆம்

எல்லாரும் இந்நாட்டு மன்னர்’’ (பக்.,40-41)

அனைத்தும் அனைவருக்கும் பொது, அனைவரும் சமம் என்று பொதுவுடைமைக் கருத்துக்களைப் பாடுகின்றார்.

பாரதியார்க்குப் பின் பொதுவுடைமையின் இன்றியமையாமையை மிகச் சிறப்பாகப் பாடிய பெருமை புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார்க்கு உண்டு. ஆனால் தேசிய இயக்கதில் இருந்து கொண்டே அவ்வியக்கக் கொள்கைக்கு மாறாகப் பொதுவுடைமையைப் பாடியவர் பாரதியார். திராவிட இயக்கத்தில் இருந்து கொண்டு பொதுவுடைமையைப் பாடியவர் பாரதிதாசனார். பொருளாதார விடுதலையைக் காட்டிலும் தேசிய விடுதலையை முன்னிறுத்தியவர் பாரதியார். பொருளாதார விடுதலையினும் சமூக விடுதலையை முன்னிறுத்தியவர் பாரதிதாசனார் ஆவார்.

பாரதியாரையும், பாரதிதாசனையும் குறித்து,

‘‘பாரதி பிரக்ஞை பூர்வமான பொதுவுடைமைவாதி அல்ல வேதாந்த வரம்பிற்குள் செயல்பட்ட வீறார்ந்த தேசபக்தன் அவன். ஆயினும் உலகைக் கலக்கிய முதலாவது சோசலிஸ்டு புரட்சி நடந்தேறிய சகாப்தத்தில் உயிர் வாழ்ந்த அவன், பொதுவுடைமையின் சிற்சில அம்சங்களைக் கருத்தில் கொண்டான் எனக் கூறுவதில் தவறில்லை. வரலாற்றின் அடிப்படையில் அமைந்த பொருள் முதல் வாதமோ புரட்சிகர நடவடிக்கையோ அவருக்கு உடன்பாடில்லை. அவற்றைச் சரியாக அறிந்து கொள்ள அவருக்கு வாய்ப்பு இருந்திருக்குமோ என்பதும் ஐயமே!’’

‘‘பாரதிக்குப் பின் பெரும்புலவர்களில் ஒருவராய்க் கருதப்படும் பாரதிதாசனாரின் படைப்புகளில் பொதுவுடைமைச் சிந்தனைகள் அழுத்தமாக இடம் பெற்றிருப்பினும் ஓர் எல்லைக்கு மேல் அவர் போவிலலை என்பதும் ஒப்புக்கொள்ள வேண்டியதாகும். வர்க்க முரண்பாட்டிற்கப் பதிலாக வருண – இன முரண்பாடுகளை அவர் முதன்மைப்படுத்தினார்’’.

என்று அறிஞர் கைலாசபதி (சமூகவியலும் இலக்கியமும், பக்., 115 – 117) கூறுவது நோக்கத்தக்கது.

அறிஞர் கைலாசபதி அவர்களின் கருத்துக்களிலிருந்து பாரதியாரும், பாரதிதாசனாரும் பொதுவுடைமைச் சிந்தனைகளை அக்கொள்கைக்கு ஏற்ற வகையில் முழுமையாகப பாடியவர்கள் அல்லர் என்பதை உணரலாம். மக்கள் கவிஞர் பாரதியார், பாரதிதாசனார் போன்று அல்லாமல் அனைத்து விடுதலைக்கும் பொருளாதார விடுதலையே தலைமையானது என்பதைச் சரியாக உணர்ந்தவர். உழைக்கும் மக்களின் உள்ளத்தை உணர்ந்து அவர்களது உணர்வுகளையும், துன்பங்களையும் உள்ளது உள்ளவாறு பாடினார். அவர்களின் துயரங்களைப் போக்கும் வகையில் போராட்ட உணர்வைத் தமது கவிதையில் பொருளாக்கினார். முரண்பாடற்ற வகையில் திரை உலகில் பொதுவுடைமைச் சிந்தனைகளை அழுத்தமாகவும் ஆழமாகவும் பாடிய முதற்பெருமை மக்கள் கவிஞரையே சாரும்.

உழைப்பாளர்கள் சுரண்டப்படுவதை,

‘‘வல்லமையோடு வாழ்ந்திடும் எளியோர்

வாடிக்கைக்காரர் நாட்டுக்கு – பலர்

வாடுவதுண்டு சோற்றுக்கு – ஆனால்

மாடுகளே உங்க பாடு தேவலே

வைக்கோல் வந்திடும் வீட்டுக்கு’’

(படம் கன்னியின் சபதம்,ப.கோ.பா.,ப.,68)

என்று எதிர்த்துப் பாடுகிறார்.

இப்பாடலில் உழைத்த உழைப்பு பெருஞ்சுரண்டலாக நிலவுடைமையாளர்களின் கையில் போய்ச் சேருகிறது. என்பதை மிக வெளிபப்படையாகவே திரைப்படத்திலேயே கூறியுள்ளார். உழைத்த உழவர்களுக்குச் சோறு இல்லை. ஆனால் உழுத மாட்டிற்கு வீட்டிற்கே வைக்கோல் செல்கிறது. மாட்டைவிடக் கேவலமாக உழைக்கும் மக்கள் சுரண்டப்படுகிறார்கள் என்பதை மனதில் பதியும் வண்ணம் மக்கள் கவிஞர் உணர்த்துகிறார்.

காதலை நினைத்தாலும் இயற்கையை நினைத்தாலும் அவற்றோடு உழைப்பாளரையும் இணைதது நினைக்கும் உள்ளம் படைத்தவராக மக்கள் கவிஞர் விளங்கினார். அதனால் தான் காதலைப் பாடினாலும் இயற்கையைப் பாடினாலும் அவற்றோடு உழைப்பாளரையும் இணைத்துப் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. காதலன், காதலி இருவரும் சந்திக்கும்போது காதலியைக் காதலன் நலம் பாராட்டுவது இயல்பு. இது கவிதைகளில் தொன்றுதொட்டு இருந்து வரும் மரபாகும்.

ஆனால் மக்கள் கவிஞரின் காதலரோ, சமூக நலத்தைப் பற்றி எண்ணும் பொதுநலக் காதலராகவே உள்ளனர். உழைப்பாளர்களின் நிலையைப் பற்றி விவாதிக்கும் முற்போக்குச் சிந்தனையாளராகவே உள்ளனர். நாடோடி மன்னன் எனும் திரைப்படத்தில் வரும் காதலர்களின் உரையாடல்,

‘‘சும்மா கெடந்த நிலத்தைக் கொத்திச்

சோம்பலில்லாம ஏர்நடத்திக்

கம்மாக்கரையை ஒசத்திக்கட்டிக்

கரும்புக் கொல்லையில் வாய்க்கால் வெட்டிச்

சம்பாப் பயிரைப் பறிச்சு நட்டுத்

தகுந்த முறையில் தண்ணீர்விட்டு

நெல்லு வெளைஞ்சிருக்கு – வரப்பும்

உள்ளே மறைஞ்சிருக்கு – அட

காடு வெளைஞ்சென்ன

மச்சான் – நமக்குக்

கையுங்காலுந்தானே மிச்சம்’’

என்று பொதுநல நோக்கோடு அமைகிறது.

உழைக்கும் மக்களின் உழைப்பைச் சுரண்டிவிட்டார்களே எனக் காதலி கேட்டதும்,

‘‘வழிகாட்டி மரமான

தொழிலாளர் வாழ்க்கையிலே

பட்டதுயரினி மாறும் – ரொம்பக்

கிட்ட நெருங்குது நேரம்’’

என்று காதலன் கூறி, சுரண்டல் எப்போதும் இருக்க முடியாது என்றும், வருங்காலம் நமக்காக விடியும் என்றும் நம்பிக்கை ஊட்டுகிறான்.

காலந்தோறும் உழைப்பாளர்களை, ஏழை மக்களைச் சுரண்டிக் கொழுக்கும் வர்க்கத்தினரை என்ன செய்ய வேண்டும். அது தானாக மாறிவிடுமா? இதற்கு மக்கள் கவிஞர்,

‘‘தானா எல்லாம் மாறும் என்பது

பழைய பொய்யடா – எல்லாம்

பழைய பெய்யடா’’ (படம் அரசிளங்குமரி, 1957, ப., 278)

என்று விடையளிக்கின்றார்.

தானாக மாறும் என்பது பொய். அது உழைப்பாளர்களை ஏமாற்றுவதற்காக ஆதிக்க வர்க்கத்தினரால் கையாளப்படும் தந்திரமாகும். ஆதலால் அவர்கள் கூறுவதை நம்பாதே. உலகம் மாறுவதற்கு, உன்நிலை மாறுவதற்கு நீதான் போராட வேண்டும் என்று மக்கள் கவிஞர் தெளிவுபட எடுத்துரைக்கின்றார். மக்கள் கவிஞர்தான்பட்ட வறுமையை வாழ்க்கைப் போராட்டத்தைத் தனக்கு வசதி வந்தபோதும் மறக்கவில்லை. ஒழுக்கப்பட்டவர்களுக்காக அனுதாபப்பட்டு எழுதாமல் ஒடுக்கப்பட்டவர்களின் குராக ஒலித்தவர் மக்கள் கவிஞர்.

மக்கள் கவிஞர் எந்த நிலையிலும் பொதுவுடைமை இயக்கத்தை மறவாது அவ்வியக்கத்துடன் இணைந்தே இருந்தார். இதற்கு பின்வரும் நிகழ்ச்சி சான்றாக அமைந்துள்ளது.

‘‘1957 தேர்தல்ல கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்கள் தோற்றனர். தோல்விக்குக் காரணத்த கவிஞர் என்னிடம் விவாதித்தார். தேர்தலில் வெற்றி பெறவிட்டாலும் நம்முடைய கருத்துக்கள மக்களிடத்தில் எடுத்துச் சொல்ல இந்தத் தேர்தல் பயன்படுவது பற்றியும் நமக்கிருக்கிற வாய்ப்பு வசதியில் இவ்வளவுதான் முடிந்தது என்றும் சொன்னேன்’’.

‘‘சரி!சரி! அடுத்த தேர்தலுக்கு நான் பிரச்சாரத்திற்கு வருகிறேன். டேப் அடிச்சு ஜனங்களைத் திரட்டி நம்ம தோழர்களை ஜெயிக்க வைக்க முயற்சிக்கிறேன்’’ என்றார். அடுத்த எலெக்ஷன் வந்தது. ஆனால் மக்கள் கவிஞர் திரும்பி வரமுடியாத இடத்திற்குச் சென்று விட்டார்.’’

என்று பட்டுக்கோட்டை வட்டார பொதுவுடைமை இயக்க வட்டாரச் செயலாளர் எம்.மாசிலாமணி அவர்கள் குறிப்பிடுவது(சமூகவியலும் இலக்கியமும், ப., 134) மக்கள் கவிஞர் எந்நிலையிலும் கொள்கைமாறா பொதுவுடைமைக் கவிஞராகவே திகழ்ந்தார் என்பதனை உறுதிப்படுத்தகிறது.

மக்கள் கவிஞர் மார்க்சிய கோட்பாடுகளை நன்கு அறிந்திருந்ததால்,

‘‘கஞ்சி கஞ்சி என்றால் பானை நிறையாது

சிந்திச்சு முன்னேற வேணுடிமடி’’

என்று தத்துவக் கண்ணோட்டத்துடனும்,

‘‘வசதியிருக்கிறவன்தரமாட்டான் – அவனை

வயிறு பசிக்கிறவன் விடமாட்டான்’’

‘‘தனியுடைமைக் கொடுமைகள் தீரத்

தொண்டு செய்யடா’’

என்று போராட்ட உணர்வைத் தூண்டுகின்ற வண்ணம் அழுத்தமாக பொதுவுடைமைக் கருத்துக்களை வலியுறுத்திப் பாடுகின்றார்.

பொதுவுடைமைச் சிந்தனைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டதோடு, அச்சிந்தனைகள் வாயிலாகப் புதிய உலகைச் சமைக்க முயன்ற இயக்கத்தோடும் ஒன்றி உழைத்தவர் மக்கள் கவிஞர். இறுதிவரை அக்கொள்கையை உறுதியாகப் பற்றியிருந்தார். மக்கள் கவிஞரைப் பற்றி,

‘‘பாரதிக்குப் பின் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்களிலேயே பொதுமைச் சிந்தனைகள் வலிவுடனும் வனப்புடனும் வெகுவான கவர்ச்சியுடனும் விளங்குகின்றன. தமிழ் மக்களின் வாழ்க்கை நிலைகளிலிருந்து முகிழத்த எளிமை, இனிமை, வன்மை, நேர்மை முதலிய பண்புகளுடனி் கற்றோரும் மற்றோரும் படித்து இன்புற்றுச் சிந்திக்கும் வண்ணம் அமைந்த பாடல்களைக் கல்யாணசுந்தரம் இயற்றினார். அவை இன்று முற்போக்கு இலக்கியத்தின் பொதுவுடைமையாக உள்ளன’’

என்று அறிஞர் கைலாசபதி(சமூகவியலும் இலக்கியமும்,ப., 11) கூறுவது மிகவும் பொருத்தமானதாக அமைந்துள்ளது. மகாகவி பாரதி என்ற நெடுஞ்சாலையில் புரட்சிக்கவி பாரதிதாசன் என்ற கைகாட்டியின் உதவியுடன் உழைக்கின்ற மக்களின் வீடுகளுக்குச் சென்றவர் மக்கள் கவிஞர் ஆவார்.

 

Series Navigationபூட்ட இயலா கதவுகள்கல்விக் கனவுகள் – பணம் மட்டுந்தானா வில்லன்?

Leave a Comment

Archives