வெற்றியின் ரகசியம்!

author
6
0 minutes, 0 seconds Read
This entry is part 30 of 36 in the series 30 செப்டம்பர் 2012

ரசிப்பு எஸ். பழனிச்சாமி
காலையிலிருந்து பாத்ரூம் ஷவர் குழாயில் சிறிதளவு தண்ணீர் தொடர்ந்து கொட்டிக்கொண்டே இருக்கிறது. குமிழை முழுவதுமாக மூட முடியவில்லை. ராஜனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. பிளம்பரைக் கூப்பிடலாமா? அவன் கேட்கும் கூலி ஒரு பக்கம் இருக்கட்டும். குழாயைக் கழட்டுகிறேன் பேர்வழி என்று சுவர் டைல்ஸை எல்லாம் உடைத்து விட்டால் என்ன செய்வது? பார்த்து பார்த்து செலக்ட் செய்த டிசைன் என்று வாடகைக்கு விடும்போது வீட்டுக்காரர் சொன்னாரே! அது இப்போது உடைந்துவிட்டால் கடையில் இதே டிசைன் கிடைக்குமோ என்னவோ? அதற்கு வேறு தனியாக செலவாகும்.
அன்று ராஜன் ஆபீஸுக்குப் போய் விட்டதால் பகல் பொழுது அப்படியே கழிந்தது. ராஜன் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்கிறான். கிடைக்கும் மாதச் சம்பளத்தில் பட்ஜெட் போட்டுத்தான் செலவு செய்ய வேண்டியதிருக்கிறது. அன்று இரவு முழுதும் தண்ணீர் கொட்டிக்கொண்டே இருந்தது. படுக்கப்போகும் முன் அதன் அடியில் ஒரு பெரிய பிளாஸ்டிக் வாளியை வைத்தான். காலையில் பார்த்தால் முக்கால் வாளி தண்ணீர் நிரம்பியிருந்தது.
அதைப்பார்த்த அவன் மனைவி ‘இப்படி வீட்டில் தண்ணீர் சிந்தக்கூடாதுங்க. செல்வம் கரையும் என்று சொல்வார்கள். அதை உடனே சரி செய்யுங்கள்’ என்றாள். ‘இது என்னடா வம்பா போச்சு’ என்று உடனே அதைச் சரி பண்ண முடிவு செய்தான் ராஜன். இன்று ஆபீஸுக்கு லீவு போட்டுவிட வேண்டியதுதான் போலிருக்கிறது. ஆபீஸில் முன்பே சொல்லாமல் லீவு போட்டால் ஒரு நாளுக்கு 400 ரூபாயை சம்பளத்தில் பிடித்து விடுவார்கள்.
அந்த ஏரியாவில் பல்லவன் ஹார்டுவேர்ஸ்தான் பிரபலமானது. பல்லவனுக்கும் அந்த ஹார்டுவேர்ஸ் கடைக்கும் என்ன சம்பந்தமோ தெரியவில்லை. ராஜன் அந்தக் கடைக்குச் சென்றபோது, கடைக்காரர் பச்சைக்கலரில் ஒரு வலையைக் காண்பித்து, யாரோ ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார். “சார், இந்த வலை தோட்டத்தில் செடிகளுக்கு பாதுகாப்புக்காக போடுவது. ஃபென்ஸிங் (Fencing) போடவேண்டும் என்றால் இரும்பு வலைதான் சரியாக இருக்கும். காங்கிரீட் தூண்களை பத்து அடி இடைவெளியில் ஊன்றி வலையை கட்டிவிட்டீர்கள் என்றால் மிகவும் பாதுகாப்பாகவும் உறுதியாகவும் இருக்கும்” என்று சொன்னார்.
“எவ்வளவு ஆகும்” என்று அவர் கேட்டதற்கு கடைக்காரர், வலை, காங்கிரீட் தூண், லேபர் என்று கணக்குப்போட்டு பார்த்து, பதினெட்டாயிரம் ரூபாய் ஆகுமென்று சொன்னார். “சரி நான் இன்னும் ஒரு மணி நேரத்தில் கன்ஃபர்ம் பண்ணி சொல்லி விடுகிறேன். நாளைக்கே ஃபென்ஸிங் (Fencing) போட ஏற்பாடு செய்து விடுங்கள்” என்று சொல்லி விட்டுக் கிளம்பினார் அவர். அதன் பிறகுதான் ராஜன் இருக்கும் பக்கம் திரும்பினார் கடைக்காரர். அவரைப் பார்த்ததும் இவர் எப்போதுமே சிரித்தபடிதான் இருப்பாரோ? என்ற சந்தேகம் அவனுக்கு ஏற்பட்டது.
ராஜனைப் பார்த்து, புன்னகையுடன் என்ன என்பதுபோல் தலையை அசைக்க அவரிடம் விஷயத்தைச் சொன்னான். அவர் அமைதியாக கேட்டு விட்டு “ஸ்பின்டில் போயிருக்கும். அதை மட்டும் மாற்றி விட்டால் போதும்” என்று சொன்னார். ராஜனுக்கு ‘அட, இது மிகவும் சாதாரண வேலைதான் போலிருக்கிறது, நாம்தான் ரொம்பவும் பயந்து விட்டோம்’ என்று தோன்றியது. நிம்மதியாக இருந்தது. நல்லவேளை பைப்பை எல்லாம் கழற்ற வேண்டி இருக்காது. அவரிடம் “அப்ப இதை நாமே சரி செய்து விடலாமா?” என்று கேட்டான்.
அவர் புன்னகையுடன் “ரொம்ப சிம்பிள். இதோ இந்த குழாயைப் பாருங்கள். இதன் மேலே உள்ள மூடியை இப்படி கூரான ஒரு பொருளை வைத்து அழுத்தி இப்படி எடுத்தீர்கள் என்றால், மூடி தனியே வந்து விடும். உள்ளே ஒரு ஸ்குரு தெரிகிறது பாருங்கள், அதை ஸ்குரு டிரைவரை வைத்து இப்படி கழற்றிவிட்டால், இந்த குமிழை தனியாக எடுத்து விடலாம். பிறகு இதோ தெரிகிறதே இந்த ஸ்பின்டிலை ஸ்பானர் வைத்து இப்படி லேசாக திருகினால் தனியே வந்துவிடும். அவ்வளவுதான்” என்றார்.
அவர் சொல்வதைப் பார்த்தால் ஏரோப்ளேனில் ஏதாவது ரிப்பேர் என்றால்கூட அரைமணி நேரத்தில் கற்றுக் கொண்டு சரி செய்து விடலாம் போல தோன்றியது. எல்லாமே அவ்வளவு எளிதாகத் தெரிந்தது. “இது நானே செய்து விடலாம் அல்லவா? பிளம்பர் தேவையில்லையே” என்று மறுபடியும் கேட்டான் ராஜன். “சேச்சே! ரொம்ப சிம்பிளான வேலை. நாமே செய்து விடலாம். அப்படி பிளம்பரை அனுப்ப வேண்டும் என்றால்கூட அப்புறமாக அனுப்பி வைக்கிறேன்” என்றார் கடைக்காரர். இவ்வளவு எளிதான வேலைக்கு பிளம்பர் எதற்கு? “வேண்டாம்” என்றான் ராஜன்.
புதிதாக ஒரு ஸ்பின்டில், பழைய ஸ்பின்டிலைக்கழற்றி இதை மாற்ற ஒரு ஸ்பானர், டஃப்லான் டேப் ஆக மொத்தம் 100 ரூபாய் ஆகிறதென்று சொன்னார் கடைக்காரர். ஸ்குரு டிரைவர் வீட்டிலேயே இருப்பதால் அது வேண்டாம் என்று சொல்லி விட்டான். வெறும் நூறு ரூபாய் செலவுதானே, பரவாயில்லை! அவற்றை எடுத்துக் கொண்டு வண்டியை ஸ்டார்ட் செய்தான்.
அவனுக்கு திடீரென ஒரு சந்தேகம் வந்தது. அந்த ஸ்பின்டிலைக் கழட்டும்போது, தண்ணீர் குழாயை மூட வேண்டாமா? இல்லாவிட்டால் தண்ணீர் பீய்ச்சி அடிக்குமே? அவரிடமே கேட்டு விடலாம் என்று திரும்ப கடைக்குச் சென்று தன்னுடைய சந்தேகத்தைக் கேட்டான். “ஆமாம், முதலில் மேலே ஓவர்ஹெட் டாங்கிலிருந்து வரும் குழாயை மூடிவிடுங்கள். பிறகு இதைக் கழற்றுங்கள்” என்றார்.
அவருக்கென்ன ஈஸியாகச் சொல்லிவிட்டார். அதில் என்ன பிரச்சினை இருக்கிறது என்பது ராஜனுக்கல்லவா தெரியும். அவன் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் தண்ணீரை மேலே ஏற்றுவது, தொட்டியை சுத்தம் பண்ணுவது போன்ற வேலைகளை வாட்சுமேன்தான் செய்து கொண்டிருக்கிறான். அவனுக்கும் ராஜனுக்கும் இப்போது சரிப்படவில்லை. அது ஒரு தனி பிரச்சினை. ஹிந்தி பேசும் நேபாளி வாட்சுமேன் அவன். தமிழ் அவ்வளவாகத் தெரியாது.
மற்றவர்களைப் போல் ராஜனும், தன்னுடைய பைக்கை கழுவுவதற்காக மாதாமாதம் பணம் கொடுத்துக்கொண்டு வந்தான். ஆனால் அவன் அதைத் தினமும் சுத்தம் செய்வதில்லை. சுத்தம் பண்ணவில்லையா? என்று கேட்டால் ‘யாருமே கேட்கமாட்டார்கள், நீங்கள் மட்டும் இப்படி அடிக்கடி கேட்கிறீர்களே’ என்கிறான் அந்த வாட்சுமேன். அதனால் அவனை துடைக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு இப்போது ராஜனே தன் பைக்கை துடைக்கிறான்.
அந்த வாட்சுமேனிடம்தான் போய் குழாயை மூடு என்று சொல்ல வேண்டும். கடையிலிருந்து சாமானை வாங்கிக்கொண்டு வரும்போதே அவனைக் கூப்பிட்டு மேலே குழாயை மூட வேண்டும் என்று சொல்லிவிட்டான். ஆனால் ராஜன் ஒவ்வொன்றாக கடைக்காரர் சொல்லிக்கொடுத்தபடி குமிழைக் கழற்ற முயற்சித்துக் கொண்டிருந்த போது, ரொம்ப நேரமாகியும் குழாயில் தண்ணீர் நிற்கவேயில்லை.
வேலையை பாதியில் நிறுத்திவிட்டு வாட்சுமேனைக் கூப்பிட்டு கேட்டால், ரிப்பேர் பண்ணும் ஆள் வந்த பிறகு மூடுகிறேன் என்றான் தூரத்தில் இருந்தவாறே. “நான்தான் ரிப்பேர் பண்ணுகிறேன் போய் மூடு” என்று அவனை அனுப்பி விட்டு வேலையைத் தொடர்ந்தான். ஒருவழியாக தண்ணீர் நின்றுவிட்டது. குமிழைக் கழற்றி எடுத்து விட்டான். அவ்வளவுதான் அந்த ஸ்பின்டிலை கழற்றி விட்டால் முக்கால்வாசி வேலை முடிந்து விடும். பிறகு புது ஸ்பின்டிலின் மரையில் டஃப்ளான் டேப்பைச் சுற்றி அதைப் பொருத்தி ஸ்பானரைக் கொண்டு டைட் பண்ணி விட்டால் அவ்வளவுதான். ஆஹா! சுலபமான வேலைதான்.
ஆனால், என்ன இது! அதில் உள்ள நட்டின் தலை போன்ற பகுதியில் ஸ்பானரை வைத்தால் பெரிதாக இருக்கிறதே! பொருந்தவில்லையே! மறுபடி கடைக்காரரிடம் போய் சொன்னான். ‘இதோ ஒரு சின்ன ஸ்பானர் வாங்கிக்கொள்ளுங்கள். இருபது ரூபாய்தான்’ என்று கடைக்காரர் இன்னொரு ஸ்பானரையும் வாங்க வைத்தார்.
வீட்டிற்குச் சென்று அதை வைத்து கழற்றினால் வெறும் நட்டு மட்டும்தான் வந்தது. ஸ்பின்டில் அப்படியே இருந்தது. பேசாமல் பிளம்பரையே வரச்சொல்லி விடலாமா என்றுகூட யோசித்தான். பிறகு அந்தப்பகுதியை கொஞ்சம் கூர்ந்து கவனித்தபோது இன்னொரு ஆறுமுகப்பு கொண்ட பகுதி இருப்பது தெரிந்தது. முதலில் கொண்டு வந்த ஸ்பானர்தான் அதற்கு பொருந்தியது. அதைக்கொண்டு கழற்றினான். இப்போது ஸ்பின்டில் தனியாக வந்து விட்டது. அப்பாடா, இதற்குப் பதிலாக புதிய ஸ்பின்டிலை மாட்டிவிட்டால் வேலை முடிந்தது.
ஆனால் இப்போது வேறு ஒரு பிரச்சினை. கழற்றிய அந்த ஸ்பின்டில் நீளமாக இருக்கிறது. இதற்கும் புது ஸ்பின்டிலுக்கும் சம்பந்தமே இல்லை. மறுபடியும் கடைக்காரரிடம் ஓடினான். அவர் பார்த்து விட்டு, “ஓ! இது ஷவரில் வெந்நீர், குளிர்ந்த நீருக்காக தனித்தனியாக இருக்கும் ஸ்டாப் காக் ஸ்பின்டில். இருங்கள் நம்மிடம் அது இருக்கிறதா என்று பார்க்கிறேன்”. இங்கு பார்த்தார், அங்கே தேடிப் பார்த்தார். கிடைக்கவில்லை. “சாரி, இந்த ஸ்பின்டில் நம்மிடம் இல்லை. வேறு கடையில் வாங்கிக் கொள்ளுங்கள்” என்று சொல்லி விட்டார் கடைசியில். ஆனால் நல்ல மனிதர்; சேராத அந்த ஸ்பின்டிலுக்கு உரிய பணத்தை திருப்பிக் கொடுத்து விட்டார்.
‘வேறு எங்கு கிடைக்கும்?’ என்று கேட்டதற்கு, “அடுத்த தெருவில் இரண்டு கடைகள் இருக்கிறது, கேட்டுப்பாருங்கள்” என்று சொன்னார். அந்தக் கடைகளில் போய் கேட்டான். ஒரு கடையில் இதைவிட நீளமான ஸ்பின்டில்தான் இருந்தது. இன்னொரு கடையில் ஒரு வயதானவர் இருந்தார். அந்த ஸ்பின்டிலை பார்த்தவுடனே சொன்னார், “இது வேறு எங்கும் கிடைக்காது. மெயின்ரோட்டில் நேராகப் போனீர்கள் என்றால், கடைசி திருப்பத்தில் குமரன் ஹார்டுவேர்ஸ் என்று ஒரு கடை இருக்கிறது. அங்குதான் கிடைக்கும்” என்றார்.
அவனுக்கு ஒரு நிம்மதி வந்தது. அப்பாடா ஒருவழியாக பிரச்சினை தீர்ந்தது. ஆனால் அந்த வயதானவர் சொன்ன “சாயந்தரம் நாலு மணிக்கு மேல்தான் அந்தக் கடை திறப்பார்கள்” என்பது ராஜனுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. மணி பன்னிரண்டுதான் ஆகிறது. வேலை முடிந்துவிட்டால் மதியமாவது ஆபீஸுக்குப் போகலாம். இல்லாவிட்டால் ஒரு நாள் முழுக்க லீவாகி விடும். சம்பளத்தில் 400 ரூபாய் போய்விடும். சோர்ந்து போய் வெளியே வந்தான்.
என்ன செய்யலாம் என்று யோசித்தான். இன்னொரு நாள் அந்த வாட்சுமேனிடம் குழாயை மூடச் சொல்லி போராடமுடியாது. வேறு ஏதாவது கடை இருக்கிறதா என்று தேடிப்பார்க்கலாம் என்று கிளம்பினான். அதே ரோட்டில் ஏதாவது ஹார்டுவேர்ஸ் கடை இருக்கிறதா என்று தேடிக்கொண்டே வந்து, மெயின்ரோட்டிற்கு வந்துவிட்டான். மெயின்ரோட்டில் ஒரு கடை இருந்தது. ஆனால் ஸ்பின்டிலைப் பார்த்தவுடன் ‘நம்மிடம் இல்லை’ என்று கைவிரித்து விட்டார். ‘வேறு எங்கு கிடைக்கும்’ என்று கேட்டான். அவரும் குமரன் ஹார்டுவேர்ஸில் கேட்கச் சொன்னார். ‘அது நாலு மணிக்குத்தான் திறப்பார்களாமே?’ என்றதற்கு அது தனக்குத் தெரியாது என்று சொல்லி விட்டார்.
வேறு வழியில்லை. அந்த குமரன் ஹார்டுவேர்ஸ் எங்கே இருக்கிறது என்றாவது பார்த்து வைத்துக் கொள்வோம். நாளைக்கு காலையிலேயே வந்து அதை வாங்கி விடலாம். நாளைக்கும் காலையில் லீவு போட வேண்டும். இதோ கடைசி திருப்பம் வந்து விட்டது. அங்கிருந்த ஒருவரிடம் குமரன் ஹார்டுவேர்ஸ் எங்கிருக்கிறது என்று கேட்டான். அவர் அதோ என்று கைகாட்டிய திசையில் பார்த்தால் குமரன் ஹார்டுவேர்ஸ் என்ற போர்டு தெரிந்தது. பெரிய கடைதான். அட! கடை திறந்திருக்கிறதே! பிறகு ஏன் நாலு மணிக்குத்தான் திறப்பார்கள் என்று அந்த பெரியவர் சொன்னார்? காரணம் புரியவில்லை.
இங்காவது அது கிடைக்க வேண்டுமென்று கடவுளை வேண்டிக்கொண்டு உள்ளே நுழைந்தான். கவுண்டரில் இருந்தவரிடம் ஸ்பின்டிலை காட்டினான். கடவுளே, இருக்கிறது என்று அவர் சொல்ல வேண்டுமே. அவர் அதை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றார். சரியாக 5 நிமிடத்தில் புது ஸ்பின்டிலுடன் வந்தார். இவ்வளவு எளிதாகக் கிடைத்து விட்டதே. சரியானதுதானா?
“சார் இதுதானா? மரையெல்லாம் சரியாக இருக்குமா?” என்று சந்தேகத்துடன் கேட்டான்.
“சரியானதுதான். நூற்றி ஐந்து ரூபாய் அங்கே கட்டுங்கள்” என்றார் அவர்.
வாங்கிக்கொண்டு வேகமாக வீட்டுக்கு வந்தான். டஃப்ளானை மரையில் சுற்றி சரியாக பொருத்தி ஸ்பானரை வைத்து மாட்டினான். முடிந்து விட்டது. வெளியே வந்து வாட்சுமேனைக் கூப்பிட்டு தண்ணீரை திறந்துவிடச் சொன்னான். மிக கச்சிதமாக சரியாகிவிட்டது. மிகவும் சந்தோஷமாக இருந்தது. சாதித்து விட்டது போன்ற ஒரு உணர்வு. இதற்கு காரணம் நமக்கு நம்பிக்கையைக் கொடுத்த அந்த பல்லவன் ஹார்டுவேர்ஸ் கடைக்காரர்தானே. அவர்தானே எப்படிக் கழற்ற வேண்டும் என்றெல்லாம் செய்து காண்பித்தார். அவருக்கு ஒரு நன்றி சொல்ல வேண்டும். முடிந்தால் மீதி உள்ள ஸ்பானரை திருப்பிக் கொடுத்து காசு வாங்க வேண்டும்.
மறுபடி அந்த கடைக்குச் சென்றான். வெளியே பெரிய கார் ஒன்று நின்றிருந்தது. உள்ளே வேறொருவரிடம் அந்த கடைக்காரர் பேசிக்கொண்டிருந்தார், “சார், இப்போதெல்லாம் பிளம்பர்கள் கிடைப்பதில்லை. நம்மிடம் உள்ள பிளம்பர்கள் இரண்டு பேரையும் வேறு வேலைக்கு அனுப்பி வைத்திருக்கிறேன். இது ரொம்ப சாதாரண வேலைதான். அதனால் நீங்களே செய்து விடலாம்” என்றார். பதிலுக்கு அந்த மனிதர், “நமக்கு இந்த மாதிரி வேலையெல்லாம் செய்து பழக்கமில்லை” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
உடனே கடைக்காரர் ராஜனைக் காண்பித்து, “இதோ இவரும் கூட காலையில் வந்து கேட்டு விட்டுப் போனார். இப்போது அவரே சரி பண்ணி விட்டார். நான் சொல்வது சரிதானே சார்” என்று கேட்டார். ராஜனுக்கு அங்கு என்ன நடக்கிறது என்று புரிந்தது. அதாவது அந்த மனிதர் தன்னால் செய்ய முடியாது, யாராவது ஒரு ஆள் வேண்டும் என்று கேட்கிறார். பிறகு அந்த மனிதர் ராஜனைப் பார்த்து, “உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றால் கொஞ்சம் என் வீட்டுக்கு வர முடியுமா?” என்று கேட்டார்.
இன்று எப்படியும் லீவு போட்டாகி விட்டது. சரி நமக்கு தெரிந்த வேலையை வைத்து நம்மால் முடிந்தால் இவருக்கு உதவி பண்ணலாமே என்று அவருடன் சென்றான். போய் பார்த்தால் மிகவும் ஈஸியான வேலைதான். தன் வீட்டில் செய்ததை இங்கும் செய்தான். 40 நிமிடத்தில் வேலை முடிந்து விட்டது. கீழே ஒரு ரூமிலும், மாடியில் ஒரு ரூமிலும் சரி செய்ததற்காக மொத்தம் 500 ரூபாயை வேண்டாமென்று எவ்வளவோ சொல்லியும், அன்பளிப்பாக வைத்துக் கொள்ளுங்கள் என்று கொடுத்தார். அத்தோடு அவனைப் பற்றி விசாரித்து, தன்னுடைய கம்பெனியில் சின்ன சின்ன காண்டிராக்ட் வேலைகளையும் கொடுக்க ஆரம்பித்தார்.
பிறகு ராஜனின் வளர்ச்சி அபாரமாக இருந்தது. பெரிய காண்டிராக்டர் ஆகி, அதன் பிறகு சொந்தமாக ஒரு தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து, இன்று ராஜன் மிகப்பெரிய தொழிலதிபர்.
“சார்!” முன்சீட்டில் இருந்து வந்த டிரைவரின் குரல் அவருடைய சிந்தனையை கலைத்தது. ட்ராபிக் ஜாம் காரணமாக கொஞ்ச நேரம் நின்றிருந்த கார் இப்போது மெதுவாக ஊர்ந்து செல்ல ஆரம்பித்தது. வரும் வழியில் ட்ராபிக்கில் கார் நின்ற போது பார்த்த அந்த ஹார்டுவேர்ஸ் கடை தன்னுடைய பழைய நினைவுகளை ஞாபகப் படுத்தி விட்டதே!
“சார், லெப்ட்ல திரும்பணுமா? இல்லே ரைட்ல போகணுமா?” என்று கேட்ட டிரைவருக்கு, “ரைட்ல போ!” என்று சொல்லிவிட்டு பின் சீட்டில் சாய்ந்து உட்கார்ந்தார் தொழிலதிபர் ராஜன்.

Series Navigationஅக்னிப்பிரவேசம் -3கதையே கவிதையாய்! (7) சிங்கமடங்கல் – கலீல் ஜிப்ரான்
author

Similar Posts

6 Comments

  1. Avatar
    இரா. கண்ணன் says:

    கதை நன்றாக இருந்தது. இரு புதிர்க்கான விடையை தேடுவது போல.. விறுவிறுப்பான எழுத்து நடை.. வாழ்த்துக்கள் எஸ். பழனிச்சாமி. தொடர்ந்து எழுந்துங்கள்.

    1. Avatar
      எஸ். பழனிச்சாமி says:

      உங்களது பாராட்டுக்கு மிக்க நன்றி கண்ணன் அவர்களே! இது போன்ற வாழ்த்துரைகள் ஒரு டானிக் போல என்னை ஊக்குவிக்கும் என்பது நிச்சயம்.

  2. Avatar
    ஜெயஸ்ரீ ஷங்கர் says:

    அன்பின் திரு.எஸ்.பழனிச்சாமி அவர்களுக்கு வெற்றியின் ரகசியம்…கதை அருமை..நல்ல நடை…
    அடிக்கடி வீட்டில் நடப்பது தான்…ஆனால் அதுவே வெற்றிக்கு
    வழி காட்டும் போது…அதிர்ஷ்டம் தான்…உழைப்புக்கும் வழி
    சொல்கிறது.நல்லதோர் சிறந்த கதை.

    அன்புடன்
    ஜெயஸ்ரீ ஷங்கர்

    1. Avatar
      எஸ். பழனிச்சாமி says:

      அன்பார்ந்த ஜெயஸ்ரீ ஷங்கர் அவர்களுக்கு தங்களது பாராட்டுக்கு மிக்க நன்றி! தங்களைப் போன்ற சிறந்த எழுத்தாளரிடமிருந்து கிடைக்கும் பாராட்டை என்னுடைய பாக்கியமாக கருதுகிறேன்.

Leave a Reply to இரா. கண்ணன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *