மீட்சிக்கான விருப்பம்

This entry is part 21 of 34 in the series 28அக்டோபர் 2012

எந்த வகுப்பில் படித்தேன் என்பது நினைவில் இல்லை. ஆனால் ஏதோ ஒரு வகுப்பில் துணைப்பாட நூலாகத்தான் காந்தியின் வாழ்க்கை வரலாற்றை முதன்முதலாகப் படித்தேன். நேரடியான தமிழ்ப்பாடத்தை வரிவரியாகப் படித்து விளக்கம் சொல்லி நடத்தும் எங்கள் தமிழ் ஐயா  துணைப்பாடத்தை நடத்தும்போது புத்தகத்தையே பார்க்காமல் ஏதோ கதை சொல்கிறமாதிரி கூடுதலான உற்சாகத்தோடும் ஏராளமான வெளியுலகச் செய்திகளோடும் நடத்தினார். ’புத்தன் ஏசு காந்தி பிறந்தது  பூமியில் எதற்காக, தோழா ஏழைகள் நமக்காக’ என்றொரு திரைப்பாடல் எல்லா இடங்களிலும் ஒலித்தபடி இருந்த சமயம் அது. அதனால் தமிழ் ஐயா, நேரம் கிடைக்கும்போதெல்லாம் காந்தியின் வரலாற்றோடு புத்தரின் வாழ்க்கை வரலாற்றையும் ஏசுவின் வாழ்க்கைவரலாற்றையும்  எங்களுக்குக் கூடுதலாகச் சொல்லித்தந்தார்.

”யாரு பொறந்து என்னடா செய்யமுடியும்? மனுசப் பசங்களுக்குன்னு இருக்கற ராசிய யாரால தடுக்கமுடியும்?. கடவுளே வந்து எதுத்தாப்புல நின்னு பேசனாலும் நமக்குலாம் காதே கேக்காது. தள்ளி நில்லுயா அந்தப் பக்கம்னு அடிச்சி கெடாசிட்டு போயிட்டே இருப்போம். ஆள அடிச்சி சமாதிக்குள்ள வச்சிட்டதுக்கப்பறம் ஐயையோ போயிட்டானேன்னு மார்ல அடிச்சிகினு அழுவம்…” என்பதையே ஒவ்வொரு முறையும் வேறுவேறு சொற்களில் சொல்லி ஒருதரமாவது பெருமூச்சு விடுவார். அப்போதெல்லாம் அவர் கண்கள் கலங்கிவிடும். அவர் காந்தியை நேருக்குநேர் பார்த்த தலைமுறையைச் சேர்ந்தவர். வெற்றியின் சின்னத்தைப்போல இரண்டு விரல்களை உயர்த்திக் காட்டி, “அவர ரெண்டுதரம் பாத்திருக்கேன். மாயவரத்துல ஒரு தரம், அப்பறம் மஞ்சகுப்பத்துல ஒரு தரம்” என்றார். ”பாக்கறதுக்கு ஆளு குச்சியாட்டம்தான் இருந்தாரு. ஆனா பாக்கற பார்வையிலயும் பேசற பேச்சிலயும் மந்திரம் போட்டாப்புல ஒரு சக்தி இருந்திச்சி. அப்படியே காந்தமாட்டம் நம்ம இழுத்துக்கற சக்தி. அந்த அனுபவத்த இப்ப நெனச்சாலும் என் ஒடம்பும் மனசும் புல்லரிச்சிடும்……” என்று சொல்லிவிட்டு ஒருகணம் நிறுத்தி பார்வையை மதிலுக்கப்பால் தெரியும் வானத்தின்பக்கம் செலுத்தியபடி நின்றிருந்துவிட்டு மீண்டும் பாடத்தைத் தொடங்குவார்.

ஒவ்வொருநாளும் தன் சொற்களால் மெல்லமெல்ல ஒரு சிலைபோல காந்தியைச் செதுக்கி எங்கள் மனபீடத்தில் நிற்கவைத்தவர் அவர் என்றுதான் சொல்லவேண்டும். “அந்த மகாத்மா பொறந்த இந்த பூமியிலதான் அவர சுட்டவனும் பொறந்தான். எவ்வளவு பெரிய துரதிருஷ்டம் பாருங்கடா….” என்று தலையை மேலும் கீழும் அசைத்தபடி நாக்குச் சப்புக்கொட்டியவாறு நின்ற தோற்றம் இன்னும் என் நெஞ்சில் அழியாமல் இருக்கிறது.

ஐயாவின் அறையில் மூன்றுகுரங்குப் பொம்மை இருந்தது. கட்டுரை நோட்டுகளைக் கொண்டுபோய் வைக்கும்போதும் எடுத்துவரச் செல்லும்போதும் அந்தப் பொம்மையைத் தொட்டுத்தொட்டுப் பார்ப்பது எங்கள் வழக்கம். ஒருமுறை முத்துகிருஷ்ணன் “எதுக்கு சார் குரங்கு பொம்மைலாம் வச்சிருக்கிங்க?” என்று கேட்டுவிட்டுச் சிரித்தான். ”கொரங்காட்டம் சிரிக்கறான் பாரு” என்ற ஐயாவும் சிரிப்பை அடக்கமுடியாமல் சிரித்துவிட்டார். “இதுலதான்டா காந்தியுடைய தத்துவமே இருக்குது” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே முத்துகிருஷ்ணன் பொம்மையை எடுத்து திருப்பித்திருப்பிப் பார்த்தான். ”அதும் முதுவுல இல்லடா, அதும் வடிவத்துல இருக்குது” என்ற ஐயா “தீயவற்றைப் பார்க்காதே, தீயவற்றைப் பேசாதே, தீயவற்றைக் கேட்காதே. மூணும் மூணு கட்டளபோல. அதத்தான் இந்த பொம்மைங்கமூலமா உருவகமா காந்தி சொல்றாரு” என்று சொல்லிமுடித்தார். ஒரு கணம் அமைதி காத்த முத்துகிருஷ்ணன் “வாயால பேசாம மனசுக்குள்ளயே பேசறத எப்படி ஐயா தடுக்கமுடியும்?” என்று கேட்டான். ஒருகணம் அவனையே உற்றுப் பார்த்தார் ஐயா. பிறகு “அப்பாவியாட்டமா இருந்துகினு ஆயிரத்துல ஒரு கேள்வி கேட்டுட்டான் பாருங்கடா” என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார். “ஒரு நாய பழக்கறமாதிரி மனச பழக்கணும்டா முத்துகிருஷ்ணா. அதுக்காகத்தான் இந்த மூணு பொம்மைங்க, புரியுதா?” என்று முடித்தார்.

தமிழ் ஐயா பொறுப்பேற்று நடத்திய பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டிகளில் வென்றவர்களுக்கு அவரே புத்தகங்கள் வாங்கிவந்து பரிசளித்தார். பாதிக்கும் மேல் காந்தியைப்பற்றிய புத்தகங்கள். எஞ்சியவை பாரதியார் பற்றியவை. சத்திய சோதனை, மகாத்மாவின் ஜீவிய சரித்திரம், நான் கண்ட காந்தி, அண்ணல் காந்தியின் ஆயிரம் அமுதமொழிகள், மகாத்மாவின் சரித்திரம், மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் ஆகிய நூல்களெல்லாம் எனக்கு அந்தப் போட்டிகளில் வென்றதன்வழியாகக் கிடைத்தவை. மீண்டும்மீண்டும் படிக்கத்தக்க நூல்கள் அவை. சமீபத்திய கோடைவிடுமுறையில் ஊருக்குச் சென்றிருந்தபோது பழைய நூல்களையெல்லாம் புரட்டிக்கொண்டிருந்தேன். எங்கள் தமிழ் ஐயா கையெழுத்திட்டுக் கொடுத்த திரு.வி.க.எழுதிய மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் என்ற புத்தகம் என் கண்ணில் பட்டது. அக்கணம் தமிழ் ஐயாவின் குரல் காதில் நெருக்கமாக ஒலிப்பதுபோல இருந்தது. தூசு துடைத்துவிட்டுப் புரட்டத் தொடங்கினேன். எப்போதோ படித்த நினைவிருந்தது. அங்கங்கே அடிக்கோடிட்ட பகுதிகளுக்கு அருகில் சின்னச்சின்ன குறிப்புகளில் தெரிந்த என் சிறுவயதுக் கையெழுத்தைப் பார்த்ததும் புன்னகை வந்தது. ”கையெழுத்த நல்லா எழுதுங்கடா பசங்களா, தன்னுடைய கையெழுத்து சரியில்லன்னு ஒரு குற்ற உணர்ச்சி கடைசிவரைக்கும் காந்திய உறுத்திகினே இருந்ததாம். அத அவரே சொல்றாரு. எந்த வாத்திடா ஒனக்கு எழுதக் கத்துக்குடுத்தான்னு ஒங்கள நாள பின்னால யாரும் கேள்வி கேக்கற நெலமய உண்டாக்கிடாதிங்கடா. அப்பறம் ஒங்களுக்கும் வெட்கக்கேடு, எனக்கும் வெட்கக்கேடு”  என்று எதிரில் நின்று பேசுவதுபோல இருந்தது.

சென்னையில் காந்தியைப்பற்றி போலக் என்னும் அயல்நாட்டுக்காரர் ஒருவர் நிகழ்த்திய சொற்பொழிவைக் கேட்டதன் வழியாக முதன்முதலாக காந்தியத்தின்மீது ஈர்ப்புகொண்டார் திரு.வி.க. காந்தியத் தொண்டர்களான நடேசனும் கணேசனும் எழுதிய புத்தகங்களை வாசித்தபிறகு அந்த ஈர்ப்பு இன்னும் கூடுதலானது. இதன் தொடர்ச்சியாக காந்தியை நேரில் சந்திக்கும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது. பல மேடைகளில் அவருடைய உரையை தமிழில் மொழிபெயர்க்கிற தருணங்களும் திரு.வி.க.வுக்கு அமைந்தன. தேசபக்தன் என்னும் பத்திரிகையையும் அவர் நடத்தினார். அந்தப் பத்திரிகையில் காந்தியைப்பற்றி தொடர்ச்சியாக எழுதப்பட்ட கட்டுரைகளே பிறகு தொகுக்கப்பட்டு மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்தது. 1921 ஆம் ஆண்டில் வெளிவந்த இப்புத்தகம் முதலில் வெறும் 51 பக்கங்களைமட்டுமே கொண்டிருந்தது. அதே புத்தகம் இரண்டாம் பதிப்பாக வெளிவந்த சமயத்தில் ஐந்நூறு பக்கங்களைக் கொண்ட பெரிய நூலாக விரிவடைந்தது. யங் இந்தியா இதழிலிருந்து எடுத்து மொழிபெயர்க்கப்பட்ட பல குறிப்புகளை இப்பதிப்பில் திரு.வி.க. இணைத்துகொண்டார். 1952 ஆம் ஆண்டில் ஆறாம் பதிப்பை வெளியிட்ட சமயத்தில் அவர் முதுமையின் எல்லையில் இருந்தார். மனைவியின் மரணம், பிள்ளையின் மரணம் என ஏராளமான சொந்த இழப்புகளைத் தொடர்ந்து பார்வையையும் இழந்த நிலையில் நூலை மேலும் விரிவாக்கம் செய்து பிரசுரத்துக்கு அனுப்பினார். இது காந்தியின் வரலாற்றை முன்வைக்கவில்லை. மாறாக வரலாற்றில் உள்ள பல நுட்பங்கள் மனித வாழ்க்கையோடு இயைந்து நிற்கும் முறைமையை முன்வைக்கிறது. திரு.வி.க. இந்த நூலை மூன்று பகுதிகளாக வகுத்துக்கொண்டிருப்பதைப் பார்க்கமுடிகிறது. முதல் பகுதியில் முழுக்கமுழுக்க மனிதன் என்பவன் யார் என்கிற கேள்விக்கான விடைகள் வரலாற்றுப் பார்வையோடு ஆய்வு செய்யப்படுகின்றன. இரண்டாவது பகுதியில் புறத்தூய்மைக்கும் அகத்தூய்மைக்கும் உரிய முறைகளும் வாழ்வின் இலட்சியமும் விரிவாக முன்வைக்கப்படுகின்றன. மூன்றாம் பகுதியில் காந்தியின் பிறப்பு, வளர்ப்பு, கல்வி, தியாகம், உண்மை, தொண்டு, அறம், அன்பு ஆகியவற்றின் வழியாக திரண்ட காந்தியம் விளக்கப்படுகிறது.

அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்பது ஒளவையின் வாக்கு. மானுடனாகப் பிறந்தவனுக்கு பிறவி நோக்கம் ஒன்று இருக்கிறது. அறியாமை என்னும் தளைகளிலிருந்து உயிரை விடுதலை செய்வித்து அகிம்சைநெறியில் நிறுத்தி, மெல்லமெல்ல அதற்கு அறிவூட்டி வளர்த்தெடுப்பதுதான் அந்த நோக்கம். அதுவே வாழ்க்கையின் இலக்கணம். காலம்தோறும் இந்த இலக்கணத்தை மீண்டும்மீண்டும் வரையறை செய்து வலியுறுத்தியபடி பல நூல்கள் எழுதப்படுகின்றன. அவற்றின் சாரத்தை சின்னச்சின்ன அத்தியாயங்களில் சுருக்கமாக எழுதிச் செல்கிறார் திரு.வி.க. முதலில் கீதையை முன்வைத்து பயன்கருதாது பிறருக்காக வாழும் வாழ்வின் பெருமை உரைக்கப்படுகிறது. அடுத்து திருக்குறள் முன்வைக்கப்பட்டு இக்கருத்துக்கு மேலும் வலிமையேற்றப்படுகிறது. பிறகு இதன் தொடர்ச்சியாக உடலோம்பல், வாய்மை, தூய்மை, மெய்யறிவு, பொறுமை என பல தளங்கள்வழியாக இக்கருத்தை ஒட்டிய முக்கியத்துவம் உணர்த்தப்படுகிறது. இந்த உண்மையையே தன் வாழ்வாகக் கருதி   வாழ்ந்த அரிச்சந்திரன், புத்தர், சோக்ரதர், கிறிஸ்து, மகம்மது, திருநாவுக்கரசர், தல்ஸ்தோய், தோரி ஆகிய பெரியவர்களைப்பற்றிய குறிப்புகள் தரப்படுகின்றன. இறுதியில் சாதுநிலைபற்றிய சில எண்ணங்கள். இடையிடையே வள்ளலார், தாயுமானவர், மாணிக்கவாசகர் எழுதிய பல பாடல்களைப் பொருத்தமாகச் சுட்டிக்காட்டியபடி செல்கிறார் திரு.வி.க. சாதுநிலை உலகத்துக்கு அப்பாற்பட்ட ஒன்றன்று. உலகத்துக்குப் பயன்படாததுமன்று. பொறாமை போன்ற குணங்களால் பீடிக்கப்பட்டு பிறரை வருத்தும் ஒருவனைவிட, அவற்றால் பீடிக்கப்படாத குணநலமுடைய ஒருவன் உலகத்துக்குப் பலவிதங்களில் பயன்படக்கூடியவன் . ”மண்ணுலகதிலே உயிர்கள்தாம் வருந்தும் வருத்தத்தை ஒரு சிறிதெனினும் கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் கணமும்நான் சகித்திடமாட்டேன்” என்று ஒரு சாதுவால் மட்டுமே சொல்லமுடிகிறது. சாதுநிலை எய்தியவர்களே உலகை வெறுக்காமலும் தனக்கென வாழாமலும் பிறர்நலம் கருதியும் வாழத் தலைப்படுகிறார்கள். காட்டுக்குப் போகிறவன் என்றும் உலகை வெறுத்தவன் என்றும் சாதுவைப்பற்றிப் பேசுவது பேதைமை. உலகுக்கு உழைக்க தன்பால் உள்ள குறைகளை அறவழியில் போக்கிக்கொண்டவன் சாது. மனிதனை விலங்காக்கி அலைக்கழிக்கும் தீய குணங்களிலிருந்து விடுதலை அடைந்தவன் சாது. மனிதன் பிறந்து வளர்ந்து, கல்வி கற்று, ஞானத்தைப் பெற்று வாழ்வதெல்லாம் இறுதியாக இந்த சாதுநிலையை அடைவதற்காகவே என்று சொல்லலாம்.  சாதுநிலை என்பது தனக்கென வாழாது பிறர்க்கென வாழும் நிலையாகும். இந்த நெறிகளின்வழி நின்று வாழ்கிறவர்கள் இன்றும் பலர் இலைமறை காயென இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரை உலகம் உணர்ந்திருக்கிறது. அவர் காந்தியடிகள். திரு.வி.க.வே காந்தியின் பெயரோடு அடிகள் என்னும் பின்னொட்டை முதன்முதலாக உருவாக்கிப் பயன்படுத்தியவர். மகாத்மா என்னும் முன்னொட்டுக்கு இணையாக இந்தப் பின்னொட்டை , இளங்கோ அடிகள், கவுந்தியடிகள் என்னும் மரபுவழிப் பெயர்களை முன்வைத்து உருவாக்கினார் திரு.வி.க.

அகிம்சைத் தத்துவத்தை முன்வைத்து திலகருக்கும் காந்திக்கும் இடையே நிகழ்ந்த ஒரு கருத்துப் பரிமாற்றம் மிகமுக்கியமானது. ‘அரசியல் என்பது உலகியலாரின் விளையாட்டு. அது சாதுக்களுடையதல்ல’ என்று எழுதினார் திலகர். அதற்குக் காந்தியடிகள், ‘உலகம் சாதுக்களுக்கல்ல என்று சொல்வது தவறு. எல்லாச் சமய கோட்பாடுகளும் புருஷார்த்த வளர்ச்சியையே அறிவுறுத்துகின்றன என்றும் புருஷார்த்தம் என்பது சாதுவாக முயற்சி செய்வது என்றும், சாதுவாவது அமைதி நிரம்பிய மனிதனாவது’ என்றும் பதில் எழுதினார் காந்தி. சாது என்பவன் அமைதியாக இருத்தல் கூடாதென்றும் அவன் உலகியலுக்குரிய கடமையை ஆற்றியவண்ணம் இருக்கவேண்டும் என்பது காந்தியின் கொள்கை. காந்தியடிகளின் வாழ்க்கையையும் அவ்வாழ்வில் உள்ள பொறுமை, தியாகம், கைம்மாறு கருதா உழைப்பு, அன்பு முதலியவற்றையும் நன்கு ஆராய்ந்து நோக்கினால் அடிகள் ஒரு சாது என்பது அழகாக விளங்கும். நவகாளியில் கட்டுக்கடங்காமல் போன கலவரத்தை நிறுத்தும்பொருட்டு, பலரும் செல்லத் தயங்குகிற இடங்களுக்கெல்லாம்  துணிந்து சென்று பல வாரங்கள் தங்கியிருந்து, பேச்சுவார்த்தை நடத்தி அமைதியை மீண்டும் கொண்டுவர அவருடைய சாதுநிலையின் தூண்டுதலே காரணம். ‘இந்துக்களும் மக்கள், முஸ்லிம்களும் மக்கள்’ என்று பொதுமை அறத்தை அவர் சென்ற இடங்களில் எல்லாம் வலியுறுத்தினார். அந்த அறிவுறுத்தல் இந்துப் பற்றாளர்களுக்குப் பிடிக்கவில்லை. அடுத்ததாக, பிரிவினையின்போது அளிப்பதாக ஏற்றுக்கொண்ட தொகையைத் தருவதில் இந்திய அரசு மிகவும் தாமதம் செய்துகொண்டே இருந்தது. அதை உடனே தந்துவிடவேண்டும் என்று வலியுறுத்தினார் காந்தி. பாகிஸ்தான் சென்று அவர்களிடம் இந்துக்கள்மீது எழுந்துள்ள சீற்றத்தைத் தணிக்க முயற்சி செய்யப் போவதாகவும் சொன்னார். இவையெல்லாம் மதப்பற்றாளர்களின் சினத்தைத் தூண்டின. இறுதியில் அவர் கொல்லப்படுவதற்கும் இதுவே காரணமானது.  மரணத்தின் புள்ளியில் நின்ற நிலையில்கூட அவரால் அறவழியையொட்டிமட்டுமே யோசிக்கவும் செயலாற்றவும் முடிந்ததை நாம் ஒருகணம் எண்ணிப் பார்க்கவேண்டும். அருளுணர்வு நிறைந்த நிலையிலேயே தன் மனத்தை அவரால் எப்படி வைத்துக்கொண்டிருக்கமுடிந்தது? அருளின் ஊற்றைக் கண்டடைவதும், அது வற்றாமல் சுரந்தபடி இருக்க வழிவகுப்பதும் மிக இயல்பாகவே மிகச்சிறிய வயதில் காந்தியின் வாழ்வில் ஓர் அற்புதம்போல நிகழ்ந்துவிட்டன. காலம் முழுக்க அந்தச் சுடரின் பாதையில் அவர் நடந்துகொண்டே இருந்தார்.

இளமை, கல்வி, திருமணம் என வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அருள், உண்மை, அகிம்சை ஆகிய உணர்வுகளின்பால் காந்தியின் மனம் ஈர்க்கப்பட்டு அழுத்தமாகப் பதிந்துபோன விதத்தை முந்நூற்றுக்கும் மேற்பட்ட பக்கங்களில் பலவிதமான எடுத்துக்காட்டுகளோடு எழுதிச் செல்கிறார் திரு.வி.க.

தென்னாப்பிரிக்காவில் காந்தி வசித்துவந்த காலத்தில் நிறத்தின் அடிப்படையில் அவர் அடைந்த அவமானங்கள்  ஏராளம். அவர் எத்தருணத்திலும் அவர்களைத் திருப்பி அவமானப்படுத்த நினைக்கவில்லை என்பது கவனிக்கவேண்டிய முகியமான ஒரு விஷயம். மாறாக தன் மன உறுதியை வளர்த்துக்கொள்ள அவற்றையே உரமாக்கிக்கொண்டார். ஒருமுறை டர்பன் நகர் நீதிமன்றத்தில் காந்தி தன் தலைப்பாகையை அகற்றவேண்டும் என்று ஒரு மாஜிஸ்ட்ரேட் கட்டளையிட்டார். அதை மறுத்து நீதிமன்றத்தைவிட்டே வெளியேறினார் காந்தி. தன் தலைப்பாகைக்குப் பதிலாக ஆங்கிலேய முறையிலான தொப்பியை அணிந்துகொள்ள முயன்றாரே தவிர, தலைப்பாகையை அகற்ற மறுத்துவிட்டார். வேறொரு முறை வேறொரு நீதிமன்றத்தில் காத்திருக்க நேர்ந்தபோது, தலைப்பாகைத்தாங்கியில் தன் தலைப்பாகையை வைத்ததற்காக அங்கிருந்த வேலைக்காரன் அவரைக் கடுஞ்சொற்களால் திட்டி அவமானப்படுத்தினான். அப்போதும் அவர் நீதிமன்றத்தைவிட்டு வெளியேறவேண்டியிருந்தது. நேடாலிலிருந்து பிரிடோரியாவுக்குச் செல்கிற வழியில் மாரிட்ஜ்பர்க் என்னும் இடத்தில் உரிய பயணச்சீட்டு இருந்தும்கூட முதல் வகுப்புப் பெட்டியிலிருந்து வெளியே தள்ளிவிடப்பட்டார். சவாரிக்கு ஏற்றிச் சென்ற ஒரு குதிரைவண்டிக்காரன்கூட அவரை வண்டியில் அமர வைப்பதற்கு மாறாக தன் பக்கத்தில் வந்து அமர்ந்துகொள்ளம்ட்டுமே அவரை அனுமதித்தான். அதற்கு உடன்படாதபோது அவன் காந்தியின் முகத்தில் அறைந்துவிட்டான். கரிய நிறத்தினரான காந்தி நீதிமன்றத்தில் பாரிஸ்டர் தொழில் புரிய அனுமதிக்கக்கூடாது என்று மற்ற வழக்குரைஞர்கள் ஒன்றாகச் சேர்ந்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள். காந்தி தெருவில் உலாவுவதைக்கூட வெள்ளையர்களால் சகித்துக்கொள்ள இயலவில்லை. பல முறை அடிபடவேண்டியிருந்தது. தென்னாப்பிரிக்காவில் இந்தியரின் நிலை அந்த அளவுக்கு மோசமாக  இருந்தது. ஆங்கிலம் பயின்று, லண்டன் நகரில் பட்டம் பெற்று, பாரிஸ்டராக பழக்கவழக்கங்களில் வெளிநாட்டவரைப்போல வாழ்க்கை நடத்திய காந்தியடிகளே அடியும் உதையும் பட்டாரெனில், ஆங்கிலப்பயிற்சி எதுவும் இல்லாத, நல்ல பழக்கவழக்கங்களும் இல்லாத ஏழை இந்தியர் எந்த அளவுக்கு இழிவாக நடத்தப்பட்டிருப்பார்கள்  என்பது நினைத்துப்பார்க்கவேண்டிய ஒரு விஷயம். கறுப்பினத்தையே ஒரு பெருவாரி நோய்போல அல்லது நச்சுக்காற்றைப்போலப் பார்த்தது ஆப்பிரிக்காவின் வெள்ளையரினம். சில இடங்களில் இந்தியரின் வீடுகள் கொள்ளையடிக்கப்பட்டன. தீக்கிரையாக்கப்பட்டன.  வழக்கறிஞர் தொழில் செய்து பொருளீட்டலாம் என்ற அவருடைய எண்ணம் மெல்லமெல்ல மாய்ந்தது. நாட்டைவிட்டு, நகரைவிட்டு, உற்றாரைத் துறந்து உறவினரைத் துறந்து துணையில்லாமல் துன்பத்தில் ஆழ்ந்திருக்கும் மக்களுடைய நலத்துக்காக உழைக்கும் ஆர்வம் உருவானது.

நிறத்தின் காரணமாக தம்மை வெறுக்கிறார்கள் என்பதால் வெள்ளையரை அவர் ஒருபோதும் வெறுக்கவில்லை. தென்னாப்பிரிக்காவில் காந்திக்கு எதிராக தீர்ப்பெழுதி சிறைக்கனுப்பியவர் ஸ்மட்ஸ் என்னும் அதிகாரி. தம் அன்பின் வழியாகவும் அகிம்சையின் வழியாகவும் அவரையும் நண்பராக்கிக்கொள்ளவே முயற்சி செய்தார் காந்தி. சிறைவாசத்தின்போது அவர்மூலமாகவே பல தத்துவ நூல்களை வாங்கிப் படித்தார். சிறையிலிருந்து வெளியே வந்தபோது தாமே செய்த ஒரு காலணியை அவருக்கு அன்பளிப்பாக அளித்தார்.  அவருடைய தியாகத்தில் பகைமையுணர்வுக்கே இடமில்லை. முதலாம் உலகப்போரில் பிரிட்டனுக்கு ஆதரவாக போருக்கென்று ஆள் சேர்த்தார். 1939 ஆம் ஆண்டில் வீறிட்டெழுந்த பெரும்போரின்போதும் காந்தி நாட்டுக்குள் எந்த உட்போராட்டத்தையும் தொடங்கவில்லை. “இந்தியாவை விட்டுப் போ” என்னும் இயக்கம்கூட மக்களைக் குறிப்பதன்று என்றும் ஆட்சிமுறையை உணர்த்துவதென்றும் அவர் விளக்கினார். போர்  நிகழ்ந்த சமயத்தில் சில ஆப்கானியர் அடையாளம் தெரியாமல் காந்தியை கடுமையாகத் தாக்கி பற்களை உடைத்துவிட்டனர். அதைப் பார்த்துச் சீற்றமுற்ற காலன்பக் என்னும் காந்தியின் ஜெர்மானிய நண்பர் அடுத்த கணமே தன் துப்பாக்கியை எடுத்து, அக்கொடியவனைச் சுடமுயன்றார். ரத்தம் ஒழுகும் வாயுடன் அவரை வேகமாகத் தடுத்த காந்தி, ”வேண்டாம் நண்பரே, அவர் நம் சகோதரர்” என்று சொல்லிவிட்டு மயக்கமுற்று கீழே விழுந்துவிட்டார். இப்படி ஏராளமான சம்பவங்கள். ஒவ்வொன்றும் அவரைப் புடம்போட்டுத் தூயவராக்கியது. அவருடைய அன்பு அவரைப் பகைமையற்ற ஒருவராக்கியது.

எளிமைக்கும் வாய்மைக்கும் இலக்கணமாக இளமைமுதல் திகழ்ந்தார் காந்தி. “என்றும் உள்ளது ஒன்று. அது சத். சத்தின் அடியாகப் பிறப்பது சத்தியம். சத்தியமே கடவுள்” என்பது காந்தியின் வாக்கு. தாய்தந்தையரிடத்தில் நான் எதையும் ஒளித்துப் பேசியதில்லை என்று காந்தியே பலமுறை சொல்லியிருக்கிறார். அயல்நாடு கிளம்பும் முன்பாக அவர் தன் தாய்க்கு மூன்று சத்தியங்கள் செய்துகொடுத்த்தாகவும் அதைக் கடைசிவரைக்கும் காப்பாற்றியதகவும் எழுதியிருக்கிறார். மனைவி மக்களையும் பொய்ம்மையினின்று அவர் காத்துவந்தார். தம் மூத்த மகன் ஹரிலால் என்பவர் தம் பெயரில் பணம் திரட்டுவதைக் கேள்வியுற்று யங் இந்தியாவில் கடிந்தெழுதியதை மறக்கமுடியாது. அக்கட்டுரையில் புதல்வர் என்னும் பற்றுக்கு இடம்தராமல் பொய்ம்மையைக் கடுமையாகக் கடிந்து எழுதியிருப்பதைக் காணலாம். ஆப்பிரிக்கத் துறைமுகத்தில் இறக்குமதித் தொழில் புரிந்துவந்த ரஸ்ட்ம்ஜி எனப்வர் காந்தியின் நண்பர். வரி கட்டாமலேயே அல்லது  குறைவான வரியைக் கட்டிவிட்டு லாபமீட்டிக்கொண்டிருந்த ரஸ்டம்ஜி ஒருமுறை சட்டத்தின் பிடியில் சிக்கினார். எந்தத் தருணத்திலும் கைது செய்யப்படக்கூடும் என்று அஞ்சிய அவர் வழக்கறிஞராக இருந்த காந்தி தனக்கு உதவக்கூடும் என்று அவரை நாடி வந்து விவரங்களைச் சொன்னார். ஆனால் உண்மையை மறைத்து அவரைக் காப்பாற்ற முனையவில்லை காந்தி. பிழையை உள்ளது உள்ளபடி உரியவர்களிடம் சொல்வதன் மூலமாகவே நீங்கள் பிழைக்கமுடியும் என்று உறுதியாகச் சொல்லிவிட்டார் காந்தி. காவல் நிலையத்துக்குக் கிளம்பும்படி அவரை அழைத்தார். அச்சத்தின் காரணமாக முதலில் அவர் அதை ஏற்கவில்லை. பிறகு காந்தியின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு காவலர்களிடம் உண்மையைத் தெரியப்படுத்தினார். கடைசியில் அவ்வழக்கு ஒரு சிறு அபராதத்துடன் முடிவடைந்தது.

1917 ஆம் ஆண்டில் ஆமதாபாத் நகரில் பிளேக் நோய் பரவியது. நெசவுத்தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பலரும் நகரைவிட்டு வெளியேற முயற்சி செய்தார்கள். அதைக் கண்ட தொழிற்சாலை முதலாளிகள், ஆலைகளை மூடவேண்டிவருமோ என்கிற எண்ணத்தால், நூற்றுக்கு எழுபது சதவீதம் சம்பளத்தை அதிகப்படுத்தித் தருவதாகவும் நகரைவிட்டுச் செல்லாமல் வேலை செய்யவேண்டும் என்றும் ஆசைகாட்டினார்கள். பணப்பித்துக் கொண்ட பல தொழிலாளர்கள் அந்த ஏற்பாட்டுக்கு இணங்கி ஆலையில் தொழில்செய்யப் புகுந்துவிட்டார்கள். நோயின் வேகம் குன்றியதும் முதலாளிகள் சம்பள விகிதத்தைக் குறைத்தனர். இதனால் முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையில் பிரச்சினை எழுந்தது. வேலை நிறுத்தம் வரைக்கும் அது நீண்டுவிட்டது. சாம்ப்ரான் பகுதியில் இருந்த காந்தி அதைக் கேள்விப்பட்டு வந்து தொழிலாளர்கள் சார்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அந்த ஆலை முதலாளிகள் அனைவரும் அவருடைய நண்பர்கள் என்றபோதும், நியாயத்தின் பக்கமே நிற்கவேண்டும் என்கிற உண்மையை அவர் உணர்ந்திருந்தார். பேச்சுவார்த்தை தோல்வியுற்றதைத் தொடர்ந்து போராட்டம் தொடங்கப்பட்டது. இரண்டு வாரங்கள் நகர்ந்துவிட்டன.  நிலைமையில் முன்னேற்றம் இல்லை என்பதால் பெரும்பாலான தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பச் செல்ல விரும்பினார்கள். ஆனால் அவர்களைத் தடுத்து நிறுத்திய காந்தி அவர்களுக்கு ஒரு நல்ல முடிவு காணப்படும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாகச் சொல்லிவிட்டு, அவ்வாறே தொடங்கியும் விட்டார், கடைசியில் முதலாளிகள் இறங்கிவரும்படி நேர்ந்தது. ஏழைகளின் நல்வாழ்வுக்காக உண்ணாவிரதத்தை மேற்கொண்ட காந்தி, தன் பெயரால் பிறர் நிகழ்த்திய கொடுஞ்செயலுக்கு அஞ்சி தம்மையும் மற்றவரையும் தூமைப்படுத்தும் முறையில் பல முறை உண்ணாவிரதத்தை  மேற்கொண்டதுண்டு. 1919 ஆம் ஆண்டில் அறிவிக்கபட்ட ரெளலட் சட்டத்தை எதிர்த்து சத்தியாக்கிரகத்தைத் தொடங்கினார் காந்தி. அவ்வியக்கத்துக்கான ஆதரவைத் தேடி அவர் பாஞ்சாலத்தைநோக்கிச் சென்றார். அவர் அந்த நாட்டுக்குள் செல்லக்கூடாது என்று அரசாங்கம் ஆணை விதித்து, அவ்வாணையை மீறியதற்காக அவரைக் கைது செய்து புகைவண்டியில் ஏற்றிச் சென்றார்கள்.  காந்தி கைது செய்யப்பட்டுவிட்டார், என்ன ஆகுமோ என்கிற அச்சமும் தகவலும் பலவாறாக நாடுமுழுதும் பரவியது. கடையில் அது பம்பாய், ஆமதாபாத் முதலிய பல இடங்களில் கொலையும் குழப்பமுமாய் முடிந்தது. அக்குழப்பத்தைக் கண்டு மிகவும் மனம் நொந்துபோன காந்தி ‘இதுவா சத்தியாக்கிரகம்? இது துராக்கிரகத்தினும் கொடியது. இந்தப் பாவத்தைப் போக்க மூன்றுநாள் உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன்” என்று நோன்பு பூண்டு சத்தியாக்கிரக இயக்கத்தையே நிறுத்திவிட்டார். ஒத்துழையாமை இயக்கம், சட்டமறுப்பு இயக்கம் என காந்தி பல போராட்டங்களைத் தொடங்கினார். அவற்றின் உச்சக்கட்டங்களில் அகிம்சைப்போராட்டத்தின் உண்மைப்பொருள் புரியாமல் தொண்டர்களால் பல அசம்பாவிதங்கள் நிகழ்ந்தன.  அத்தருணங்களில் தற்காலிகமாக போராட்டங்களைத் தடுத்து நிறுத்தி, தொண்டர்களுக்கு உண்மையை விளங்கவைப்பதற்காக  பலமுறை அவர் உண்ணாவிரதங்களை மேற்கொண்டார். இந்து முஸ்லிம் ஒற்றுமையின்றி நாடு விடுதலை பெறாதெனும் உண்மைகண்டு, ஒத்துழையாமை இயக்கக் காலத்தில் உழைத்து உழைத்து அவ்வொற்றுமைக் கோட்டையைக் கட்டினார். ஆனால் அவர் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்றதும், அந்தக் கோட்டை சிதைந்தது. பல இடங்களில் கொலைகள் நிகழ்ந்தன. கோஹத் என்னுமிடத்தில் நிகழ்ந்த மோதலில் பலர் உயிர் துறந்தனர். கொலையும் கொள்ளையும் கற்பழிப்பும் அளவின்றி நடந்தன. விடுதலை பெற்று வெளியே வந்த காந்தி இவற்றை அறிந்து மனமுடைந்தார். இருதரப்பினரிடையேயும் ஒற்றுமை வலுப்பெறும்வகையில் இருபத்தோரு நாள் உண்ணாவிரதம் இருந்து மீண்டும் அந்த உறவைக் கட்டியெழுப்பினார். அகிம்சைநெறியை உண்மையிலேயே ஏற்று பின்பற்றுகிறவர்கள், அறிந்தோ அறியாமலோ தாமோ தம்மைச் சார்ந்த பிறரோ நன்னெறியினின்றும் வழுவுவாராயின், உடனே அதற்காக மனம் வருந்தி அதற்கான கழுவாய் தேடிக்கொள்வார்கள். போனிக்ஸ் பள்ளியிலும் சபர்மதிப்பள்ளியிலும் பிள்ளைகளிற் சிலரும் வேறு சிலரும் ஒழுக்கத்தினின்று பிறழ்ந்துபோன தருணங்களில், அவர்களை நேரிடையாகக் கடிந்துகொள்ளாமல் தாமே உண்ணாநோன்பிருந்து மறைமுகமாக அவர்கள் மனம் மாறக் காரணமாக இருந்தார் என்பதைக் கவனிக்கவேண்டும்.

பிறர் பொருட்டு உண்ணாவிரதம் இருப்பதால், அவர்கள் திருந்திவிடுவார்களா என்னும் ஐயம் சிலருக்குப் பிறக்கக்கூடும். அந்தப் பிறர் மாற்றார்களாக இருப்பின், அவர் திருந்துவது அரிது. ஆனால் மாற்றாரில்லாத பிறரை ஒழுங்குபடுத்தும் என்பதில் ஐயமில்லை. மாற்றாருள்ளும் சில தன்மானமுடையவர் திருந்தினாலும் திருந்தக்கூடும். அன்புடையாரைத் திருத்தவே உண்ணாநோன்பு பெரிதும் ஏற்கப்படல் வேண்டும்   என்றும், ஒருவரது உரிமையை அநியாயமாகப் பிடுங்க எவரும் உண்ணாநோன்பைப் பயன்படுத்தக்கூடாது என்றும் தந்தையின் குடியை நிறுத்த மைந்தன் உண்ணாமை மேற்கொள்ளலாம் என்றும் தாம் மேற்கொள்ளும் விரதம் அத்தகையதே என்றும் பல இடங்களில் எழுதியும் பேசியும் வந்திருக்கிறார் காந்தி. அவருடைய பேச்சும் எழுத்தும் அகிம்சையின் நுட்பத்தை விளக்குவன.

சுகாதாரத்தைப்பற்றிப் பேசநேரும்போதெல்லாம் ஐரோப்பியரின் சுகாதார முறைகளையும் அவர்களது புறாத்தூய்மையையும்பற்றி காந்தி மனதாரப் புகழ்ந்து பேசுவார். காந்தி எதைச் செய்தாலும் உள்ளும் புறமும் ஒத்து வெளிப்படையாகச் செய்வாரே யன்றி புறமொன்றாகவும் அகமொன்றாகவும் செய்ததே இல்லை. அதனால் அவரிடம் அஞ்சாமை நிலவியது.  நீதிமன்றங்களில் அவர் விசாரணைக்கு உட்படுத்த நேர்ந்தபோதெல்லாம் அவர் எதையும் மறைத்துப் பேசியதில்லை. “உங்கள் சட்டப்படி எனது பேச்சும் செயலும் குற்றமுடையவையே. உங்கள் சட்டங்கள் அறவொழுக்கத்துக்கும் உரிமைக்கும் மாறுபட்டவையாக இருப்பதால் அவற்றை மீறவேண்டியது என்னுடைய கடமை. என்னை விடுதலை செய்தாலும் அதையே நான் மீண்டும்மீண்டும் செய்வேன். ஆகவே, உங்கள் முறைப்படி எனக்கு முழுத்தண்டனை வழங்குங்கள்” என்று சொல்வதையே வழக்கமாகக் கொண்டிருந்தார். காசி பல்கலைக்கழக அடிக்கல்நாட்டு விழாவில் அவர் ஆற்றிய உரை அங்கே கூடியிருந்த மன்னர்களையும் அன்னிபெசண்ட் அம்மையாரையும் நடுக்குறச் செய்தது . வேல்ஸ் இளவரசரின் வருகை விழாவில் கலந்துகொள்ளாதிருக்குமாறு நாட்டுமக்களிடம் கேட்டுக்கொண்டவர் காந்தி. சட்ட மறுப்பு இயக்கம் உச்ச வேகத்தில் செயல்பட்டுக்கொண்டிருந்தபோது, செளரிசெளரா சம்பவத்தைக் கேள்விப்பட்டதும் தம் போராட்டத்தை நிறுத்திக்கொள்வதாக அறிவித்தார் காந்தி. உண்மையும் அஞ்சாமையும் மனிதரிடம் உள்ள தன்முனைப்பைப் போக்கி மெய்யறிவைத் தூண்டிவிடும் என்பது அவர் முடிவு.

அகிம்சை என்பது பிறரை இம்சிக்காது இருப்பதுமட்டுமல்ல, தன்னை பிறர் இம்சிக்கும்போது அவர்மீது காழ்ப்புக் கொள்ளாமல், அக்கொடுமையினின்றும் அவரைக் காக்கவேண்டி, அவர்பால் அன்புகொண்டு துன்பம் பொறுத்தலும் அகிம்சையின்பாற்பட்டது. சுதேசியம் இல்லாமல் சுயராஜ்ஜியமில்லை என்பது காந்தியின் கருத்து. சுதேசியம் என்பது சுதேசிய உடை அணிவதில் மட்டுமல்ல. நாட்டுக்கல்வி, தொழில், அரசு, அறம் போன்ற பல விஷயங்களை நிலைநிறுத்த சுதேசியக்கொள்கை உதவியாக இருக்கும். சுயராஜ்ஜியம் என்பது ஒவ்வொருவருடைய பிறப்புரிமையகும். ”நாமார்க்கும் குடியல்லோம்” என்றார் திருநாவுக்கரசர். “சுய ஆட்சி எனது பிறப்புரிமை” என்றார் திலகர். சுயராஜ்ஜியத்துக்கு அடிப்படை அகத்தூய்மை. அகத்தூய்மையில்லாத ஒருவன் பல கேடுகளுக்கு அடிமையாவான். உலகில் பலரும் பொய்மை, பொறாமை, சீற்றம், காமம் போன்றவற்றுக்கு அடிமையாளராய் உரிமை இழந்து நிற்கிறார்கள் இக்குற்றங்களிலிருந்து விடுதலை அடைவது ஆத்ம சுயராஜ்ஜியம். இச்சுயராஜ்ஜியம் பெறவே மக்கள் படைக்கப்படுகிறார்கள். இதற்குப் புறச்சுயராஜ்ஜியம் அதாவது உலக சுயராஜ்ஜியம் இன்றியமையாதது. இந்து-முஸ்லிம் ஒற்றுமை, கதர், தீண்டாமை விலக்கு ஆகிய மூன்றும் சுயராஜ்ஜியத்தின் கடைக்கால் என்று காந்தி கருதினார்.

ஒரு சொட்டு நஞ்சு ஒரு குடம் பாலையே கெடுத்துவிடுவதுபோல தீண்டாமை மானுடத்துக்கும் மதத்துக்கும் ஊறு விளைவிக்கக் கூடியது என்றார் காந்தி. தீண்டாமைக்கு இடம் தந்ததால் இந்து மதம் பாவத்துக்கு இடம் தந்துவிட்டது  என்றும் சொன்னார்.  பேச்சளவோடும் எழுத்தளவோடும் நிற்பவரல்லர் காந்தி. அவர் சொல்வழி நின்று செயலில் எதையும் செய்து காட்டக்கூடியவர். தம் வாழ்நாளில் ஒன்றைச் செயலில் கொணர்ந்து பயனுணராது அதைப்பற்றி பிறருக்கு உரைக்க அவர் நினைத்ததில்லை. காந்தியடிகள் எந்தப் பேத உணர்வுமின்றி எல்லோரையும் தம் உடன்பிறந்தவர்களைப்போலவே கருதிப் போற்றி வந்தார். தான் இருக்கும் இடங்களில் எவ்விதமான பேத உணர்வும் அண்டாதபடி பார்த்துக்கொண்டார்.

மனிதர்களிடத்தில் விலங்குத்தன்மையும் உண்டு. தெய்வத்தன்மையும் உண்டு. சத்தியாக்கிரகம் முதல் தன்மையைக் களைந்து இரண்டாவது தன்மையை ஒளிரச் செய்கிறது. தெய்வத்தன்மை முற்றும் விளங்கப்பெற்றவரே முழு உண்மை சத்தியாக்கிரகியாவர். மனிதன் தெய்வத்தோடு தொட்ர்புகொண்டு வாழும் சத்தியாக்கிரக வாழ்வே சமய வாழ்வாகும் என்கிறார் திரு.வி.க. சமய வாழ்வு என்பதற்கு அவர் அழகான விளக்கமொன்றைக் கொடுக்கிறார். சமயம் என்னும் சொல்லுக்கு இரண்டு பொருட்கள் உண்டு. ஒன்று ’வேளை’ அல்லது ’தருணம்’ என்பது. மற்றொன்று ’நன்றாகச் செய்யப்பட்டது’ என்பது.  மனிதன் சத் என்னும் செம்பொருளுடன் கொண்டுள்ள தொடர்புணர்ந்து நிற்கும் தருணம் சிறப்பான சமயம் என்று சொல்லப்படும். மனிதன் அத்தொடர்பை உணராது, வேறு பல துறைகளைப்பற்றி நிற்கும் சமயங்களைச் சமயமென்று சிறப்பாக எவரும் சொல்வதில்லை. அவற்றை உழும் சமயம், படிக்கும் சமயம், உண்ணும் சமயம், உறங்கும் சமயம் என்று மட்டுமே சொல்லமுடியும். மனிதன் சத்துடன் கொண்டுள்ள தொடர்பை உணர்ந்து நடக்கும் சமயத்தைமட்டும் எவ்வித அடைமொழியுமின்றி ‘சமயம்’ என்று வழங்குவதற்குக் காரணம், அவன் இயல்பாக என்றும் நிலைத்து நிற்றற்குரிய சமயம் அதுமட்டுமே என்பதால்தான். அது மனிதப் பிறவிக்கு இன்றியமையாததாகலின் அதற்கு என்றும் கேடு நிகழாதவாறு நன்றாகவே செய்யப்பட்டுள்ளது. சத்துடன் ஆக்கிரகித்து நிற்கும் சமய வாழ்வு நம் காலத்து மனிதர்களுக்கும் சாத்தியமே என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் காந்தியடிகள்.

காந்தி நம்மிடையே வாழ்ந்து மறைந்த மகத்தான மனிதர். மனிதன் என்னும் சொல்லுக்குரிய எல்லாப் பொருட்களுக்கும் இலக்கணமாகத் திகழ்ந்தவர் காந்தி. அவரிடம் படிந்திருந்த நேர்மை, அஞ்சாமை, அருளுணர்வு, பகைவனுக்கும் அருளும் இரக்கம், தியாகம், அஹிம்சையுணர்வு, சத்தியாக்கிரகப்பண்பு என ஒவ்வொன்றும் அவரை எவ்விதம் முழுமனிதனாகச் செதுக்கியெடுத்தன என ஏராளமான எடுத்துக்காட்டுகளோடு அடுக்கிக் காட்டுகிறார் திரு.வி.க.

திரு.வி.க. எடுத்துக்காட்டாக முன்வைத்துள்ள பல சம்பவங்கள் ஏற்கனவே பற்பல நூல்கள்வழியாக நாம் அறிந்தவைதான். ஆனால் அவற்றை ஒரு புதுவிதமான வெளிச்சத்தில் பார்ப்பதற்கு திரு.வி.க.வின் நூல் உதவி செய்கிறது. சத்தியமே வடிவமாக துலங்கிய காந்தி பிறந்த இம்மண்ணில் அவர் நினைத்தே பார்க்காத அளவுக்கு இன்று அநியாயங்களும் அசிங்கங்களும் குவிந்துவிட்டன. நம்முடைய பேராசைகளுக்கும் தன்னலங்களுக்கும் அளவே இல்லாமல் போய்விட்டன. பொதுச்சொத்தில் ஆனமட்டும்  அள்ளித் தின்ன கூச்சமே இல்லாத அளவுக்கு நம் தலைவர்களும் அதிகாரிகளும் மாறிவிட்டார்கள். எல்லா வகைகளிலும் நாம் சரிந்துகொண்டிருக்கிறோம்   என்னும் கசப்பான உண்மை நமக்கே தெரிகிறது.  இதிலிருந்து நமக்கு ஒரு மீட்சி கிடைக்காதா என்னும் ஏக்கம் ஒவ்வொருநாளும் பெருகியபடி இருக்கிறது. இந்த மீட்சிக்கான விருப்பம்தான் நாற்பதாண்டுகள் கழித்துப் படிக்கிற இந்தப் புத்தகத்தை மேலும்மேலும் நெருக்கமானதாக உணரவைக்கிறது.

———————————

Series Navigationமணலும், நுரையும்தபால்காரர்
author

பாவண்ணன்

Similar Posts

2 Comments

  1. Avatar
    Nithya Sri priyan says:

    தன்னை கீழே தள்ளி விட்ட பிறகு ரொம்ப நாள் கழித்துதான் இந்திய மண்ணில் நடக்கின்ற தீண்டாமை கொடுமைகள் காந்திக்கு உரைத்ததா.. என்கிற அம்பேத்காரின் கேள்வி ?

Leave a Reply to Nithya Sri priyan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *