வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் -40

This entry is part 22 of 27 in the series 23 டிசம்பர் 2012

சீதாலட்சுமி

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா

ஊக்க முடையா நுழை.

 

வாழ்க்கைச்சக்கரத்தின்அச்சாணிபெண்

Annadurai -40சமுதாயத்தில் அவள்  பிரச்சனைகளைத் தீர்க்க, பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் முயன்றனர். இந்த நூற்றாண்டு வரலாற்றின் நிகழ்வுகளை இத்தொடரில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அவளும் மனிதப் பிறவியில் ஒருத்தி என்பதற்கு அடையாளச் சீட்டு கிடைத்தது.  ஆம். ஓட்டு போடும் உரிமை கிடைத்தது. இந்தியாவில் கிடைத்த இந்த உரிமை  பல நாடுகளில் பெண்களுக்குக் கிடைக்க வில்லை.

நாட்டு விடுதலைப் போராட்டம் நடந்த காலத்தில் வீட்டுக்குள் அடங்கிக் கிடந்த அவளும் வெளியில்  எட்டிப்பர்த்தாள். கணவன் செத்தால் அவனோடு உயிருடன் பிணைத்துப் பொசுக்கியதும் நிறுத்தப்பட்டது. பல சட்டங்கள், பல திட்டங்கள் தோன்றின.  தொண்டு நிறுவனங்கள் மூலமாகப் பல புனர் வாழ்வுத் திட்டங்களும் தோன்றின. பல திக்குகளில் முயற்சிகள் செய்தும் முன்னேற்றம் அதிகம் இல்லை.  கல்வியாளர் திருமதி. பாரிஜாதம் நாயுடு அவர்கள் நான்கு ஆண்டுகள் ஆய்வு செய்து பரிந்துரைகளுடன் அறிக்கை கொடுக்க, அதனை ஏற்றார் திரு ராஜாஜி அவர்கள்.  அரசில் ஓர் அமைப்பை தோற்றுவிக்கும் எண்ணம் ஏற்பட்டு மலர்ந்ததுதான் “மகளிர் நலத் துறை”

இத்தொடரில் எடுத்துக்காட்டுகளுடன் வரலாற்றுச் செய்திகள் எழுதப்பட்டுள்ளன. உதாரணங்களும் உண்மை நிகழ்வுகளே.

திருமதி பாரிஜாதம் நாயுடு அவர்கள் டில்லிக்குச் சென்று அமர்ந்த பதவியால் இத்திட்டத்தின் தொடர் திட்டங்களும் உருவாயின. அரசு எந்த திட்டம் கொண்டு வந்தாலும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த சமூகக் கல்வி அமைப்பாளர் களை அமர்த்திய பொழுது பெண் அமைப்பாளரும் சேர்க்கப்பட்டது. பயிற்சி திட்டங்கள் முதல் அனைத்தும் அந்த அம்மையாரால் வடிவமைக்கப்பட்டது. ஏற்கனவே தொண்டு நிறுவனங்களும் மகளிர், குழந்தைகள் நலத்திட்டங்களை நடத்தி வந்தன. சுதந்திரம் கிடைத்தவுடன் பல்முனை முயற்சிகள் தொடர்ந்தன. இவைகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்தால் ஒருங்கிணைப்பில் முன்னேற்றம் சிறப்பாகக் கிடைக்கும் எனக் கருதினர். மகளிர் நலத்துறை, வட்டார  வளர்ச்சித் திட்டத்தில் பணியாற்றும் சமுகக் கல்வி அமைப்பர்களும் மற்றும் சில திட்டங்களும், தமிழ்நாடு சமூக நல வாரியமும் ஒன்றிணைக்கப் பட்டன. பெண்கள் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர்கள் விதைத்த வித்து செடியாகி மரமாகி இப்பொழுது ஆலமரமாக உருவாக்கப்பட்டு விட்டது. இந்த ஒருங்கிணைப்பு தமிழ் நாட்டில் மட்டும்தான் ஏற்பட்டது

இந்த ஆலமரத்தை வெட்ட, வீழ்த்த ஒரு சோதனை தோன்றியது

1967 ல் அரசில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி பீடத்தில் அமர்ந்தது.  அறிஞர் அண்ணா அவர்கள் முதல்வரானார்.

அரசியலில் ஒரு வழக்கம் உண்டு. ஆட்சி மாற்றங்கள் ஏற்படும் பொழுதெல்லாம் முன்னவர் செய்தவைகள் சில மாற்றப்பட்டு வேறு திட்டங்கள் உருவாகும். நிர்வாகச் சீர்திருத்தம் செய்யப் போவதாகக் கூறி அதற்கு ஓர் ஆய்வு அறிக்கை தயாரித்தனர்.  திரு முருகேச முதலியார் அவர்கள்தான் முதல்வரின் ஆலோசகர். அவர் தந்த அறிக்கையில் ஒரு இலாக்கா தேவை யில்லையென்றும் அதனை மூடி விடலாம் என்றும் கருத்து தெரிவித்துவிட்டார். அப்படி நீக்கச் சொன்ன துறைதான் மகளிர் நலத்துறை.

அலங்காரப் பொம்மைகள்

பத்திரிகைகள் எங்களுக்குக் கொடுத்த பட்டம் இது. மகளிர் நலத்துறையில் எந்தப் பணிகளும் நடக்கவில்லையென்றும் அதில் வேலை பார்ப்பவர்கள் வெறும் அலங்காரப் பொம்மைகள் என்றும் கேலியாக எழுதியிருந்தனர்.

இதைப் படித்துப் பார்க்கவும் எனக்குக் கோபம் வந்தது

ஆத்திரம் வந்தது

அலங்காரப் பொம்மைகள் என்பதர்க்குப் பதிலாக அலங்கோலப் படுத்தப்பட்ட அனாதைப் பெண்கள் என்று எழுதியிருக்கலாம். இதுவரை 39 அத்தியாங்களில் மிக விளக்கமாக எழுதினேனே, அவைகளை இப்பொழுது எழுத வேண்டும். ஆனால் இதனை எழுதும் பொழுதே மனம் பதறுகிறதே, இப்பொழுது எழுதினால் அத்தனை புள்ளி விபரங்களை விளக்கமாக, நிதானமாக எழுத முடியுமா? என்னால் முடியாது. என்னிடம் உள்ள குறை. அதிக உணர்ச்சி வயப்படுவேன். அதிலும் பெண்களைக் யார் கேவலமாகப் பேசினாலும் என் பொறுமை போய் விடும்.

அமைதியான ஆசிரியைப் பணியில் இருந்தேன். என்னைக் களப்பணிக்கு போகச் சொன்னவர் கர்மவீர்ர் காமராஜ். அவர் கொடுத்த அறிவுரைகள் எனக்குள் ஆழமாகப் பதிந்தன. ஆனால் களப்பணியில் சேர்ந்த கடிதத்தை அலுவலகத்தில் கொடுக்கும் பொழுதே அவலக் குரல் கேட்டது. எனக்கு முன்னிருந்த பெண்மணி மிகவும் நல்லவர்கள். சில கழுகுகளிடமிருந்து காப்பாற்ற அதிகாரி முயன்றார். அவர் ஒரு காந்தியவாதி.. அந்த நல்லவரையும் அந்தப் பெண்மணியையும் இணைத்துச் சுவறோவியம் எழுதி, நோட்டீஸ்கள் அச்சடித்து கேவலப்படுத்தினர். அதனால்தான் அவர்களை மாற்றி என்னை அவர்கள் இடத்தில் போட்டிருக் கின்றார்கள். அடுத்த நாளே என்னுடன் வேலை பார்க்கும் ஓர் பெண்மணியின் சோகக் கதை தெரிந்தேன்.

ஒரு பெண்ணுக்கு இராட்டை நூற்கக் கற்றுக் கொடுக்கச் சென்றவளை அந்த வீட்டில் இருந்தவன் கெடுத்துவிட்டான். முதல் இரண்டு நாட்களின் அனுபவங்களே தீயைவிட சுட்டது. இது தொடர்கதை. எத்தனை பெண்களின் வாழ்வு பாழானது சமுதாயத்தைச் சீர்திருத்த பெண்கள் தங்கள் நற்பெயரைப் பலிகொடுத்தார்கள். என்னுடைய பயணத்தில் ஒரு நிமிடம் கூட மறக்க முடியாது.

கல்லடியைவிட சொல்லடியின் வலி அதிகம். அடிகள் தொடர்ந்தால் மரத்துப் போகும் என்று சொல்வதுண்டு. ஆனால் சில சொல்லடிகள் ஆழமான காயத்தை உண்டு பண்ணி ஆறாத புண்ணாய் இதயத்தில் தங்கிவிடும்.

பெண் படிப்பதற்கே வெளியில் செல்லக் கூடாது என்ற சமுதாயத்தில் களப் பணிக்குச் செல்வது எளிதானதா?

வட்டார வளர்ச்சித் துறையில் பெண்களைக் களப் பணிக்குத் தேர்ந்தெடுக்கும் பொழுது முன்னுரிமை யார் யாருக்குக் கொடுத்தார்கள் தெரியுமா? விதவைகள், வாழ்க்கையில் வழுக்கி விழுந்தவர்கள், அனாதரவான பெண்கள் இவர்களுக்குத் தான் வேலையில் முன்னுரிமை.  ஒரு சிலர் மட்டும் திறமை காரணமாக, கல்வியின் காரணமாக தேர்வில் இடம் பெற்றனர். களப்பணிக்குச் சென்ற பிறகு சொல்லடி படாத பெண்களே கிடையாது. சமுதாயத்தில் விழிப்புணர்வை உண்டு பண்ண வந்தவர்கள்,  வீட்டுக்குள் அறியாமையில் மூழ்கிக் கிடந்து  தங்கள் பிள்ளைகளின் படிப்பைப் பற்றிக் கூட அக்கறை எடுக்காத பெண்களுக்கு வழிகாட்டியாக வந்தவர்கள். எதிர் கொண்ட பிரச்சனைகள் எத்தனை எத்தனை.?! இந்த தொடரில் ஏற்கனவே விரிவாக எழுதிவிட்டேன்.  கிடைத்த பட்டம்

அலங்காரப் பதுமைகள்

இந்த மண்ணில் பெண்களின் எழுச்சி, அதற்காகப் போராடியவர்கள், சிதறிக்கிடந்த பல பணிகளை ஒருங்கிணத்து ஓர் ஆலமரமாக வளர்ந்த துறை மகளிர் நலத்துறை.  ஏன் அந்த பணிகளை மற்றவர்களால் பார்க்க முடியவில்லை? கட்டடங்கள், பாதைகள் போன்று மனமாற்றத்தைக் கணக்கிட தெர்மாமீட்டர் எதுவும் கிடையாது. ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக தொடர்ந்துவரும் பழக்கங்களை மாற்றுவது அவ்வளவு எளிதல்ல.

செய்தி அளித்த அதிர்ச்சி என்னை மிகவும் பாதித்தது. என் காலத்தில் பணியில் சேர்ந்தவர்கள் என் நினைவுத் திரையில் வரிசையாக வந்தனர். கண்ணீரில் மிதக்கும் விழிகள்.  அவர்கள் நிலையை நான் உணர்வேன். அவர்கள் எந்த அவசர முடிவும் எடுத்துவிடக் கூடாது. அரசு எடுத்த முடிவை மாற்ற வேண்டும். என்னால் முடியுமா?

எங்கள் துறைக்கு திருமதி சத்தியவாணிமுத்து அவர்கள்தான் அமைச்சர். ஊட்டிக்கு தன் குடும்பத்தாருடன் வந்திருந்தனர். முதலில் அவர்களைப் பார்த்து பேச முடிவு செய்தேன். விருந்தினர் மாளிகைக்குச் சென்றேன். அவர்கள் குழந்தைகளில் சித்ரா துடிப்பானவள். வந்த இரு நாட்களுக்குள் அக்கா அக்கா என்று என்னைச் சுற்றி வருவாள். நான் அங்கே போன பொழுது சித்ராதான் ஓடி வந்து என்னைப் பிடித்துக் கொண்டாள். அவள் அம்மாவைப் பார்க்க வந்திருப்பதை அவளிடம் சொல்லி அனுப்பினேன். அனுமதி கிடைக்கவும் உள்ளே சென்றேன். அங்கே போகும் பொழுது கையில் அந்த பத்திரிகையையும் எடுத்துச் சென்றிருந்தேன். எஙகளுக்குள் நடந்த உரையாடலைச் சுருக்கமாகக் கூறுகின்றேன்.

எங்கள் அமைச்சருக்கு இச்செய்தி தெரிந்திருக்கின்றது. இப்பொழுதுதான் புதிதாக ஆட்சிக்கு வந்திருப்பதாலும், ஏற்கனவே செய்தியை அறிவித்து விட்டபடியாலும் அமைச்சரால் ஒன்றும் செய்ய முடியாது என்றார்கள். மேலும் இந்த முடிவிற்குக் காரணமாயிருப்பது முதல்வரின் ஆலோசகர் திரு முருகேச முதலியார் . அவருடைய ஆய்வு அறிக்கையின்படி நடந்திருக்கின்றது..

நிர்வாகச் சீர்திருத்தமாம்.

அதற்கு முதல் பலி மகளிர் நலம் கவனிக்கும் ஓர் துறை, வாழ்க்கையில் பாதிக்கப் பட்ட பெண்களுக்குப் புனர் வாழ்வளிக்கும் ஓர் துறை

வேலையை இழக்கும் பெண்களில் பலர் தன் பிள்ளைகளுடன் தற்கொலை செய்து கொள்வார்கள். ஒரு நல்ல தங்காள் கதை ஏற்கனவே இருக்கின்றது. இப்பொழுது பல நல்ல தங்காள்கள் கதை வரும். பத்திரிகைகளுக்கும் சூடான செய்திகள் கிடைக்கும்.

ஆட்சிக்கு வந்தவுடன் இந்த அவலக் குரல் கேட்பது சரியா?

நான் பேசப் பேச அமைச்சருக்கு ஆத்திரம் வந்தது. அவர்களும் எங்களைக் குறை சொன்னார்கள். எங்கள் வேலைகளைப் பற்றி சில கேள்விகள் கேட்கவும் அவர்களால் பதில் கூற முடியவில்லை. அமைச்சர்  திட்டினால் அடங்கிப் போகும் அரசு ஊழியர் கதைகள் உண்டு. இப்படி அமைச்சரிடமே வாதிடும் ஓர் பெண்ணைச் சந்திப்பது அவர்களுக்கு முதல் தடவையாக இருக்கலாம். இத்துறையில் நடக்கும் வேலைகளைப் பற்றிய முழுவிபரம் அவர்களுக்குத் தெரிய வில்லை. தவறு அவர்களுக்குச் சரியாகச் சொல்லப்படவில்லை.

நான் அவசியம் உடனே சென்னைக்குச் செல்ல வேண்டும் என்றும் அதற்கு அவர்கள் அனுமதி வேண்டும் என்றும் கேட்டேன். சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் இருக்கையில் இப்படி அவரை விடுத்துச் செல்வது சரியானதல்ல. அதனால்தான் அவர்கள் அனுமதி கேட்டேன். சித்ரா எனக்காகச் சிபாரிசு செய்தாள். எனக்கும் அனுமதி கிடைத்துவிட்டது

எங்கள் முதல் சந்திப்பு மோதலில் ஆரம்பித்தாலும் பின்னர் அவர்கள் குடும்பத்தில் ஒருத்தியானேன். அவர்கள் மறைந்த பிறகும் அவர்கள் பிள்ளைகளுடன் இன்றும் தொடர்பு இருக்கின்றது. சித்ரா இப்பொழுது திராவிட முன்னேற்றக் கழகத்தில் பேச்சாளராகி விட்டாள்.

சென்னைக்கு உடனே புறப்பட வேண்டும். முன்பதிவு கிடையாது. கிடைக்கும் வாகனங்களில் சென்றாவது சென்னையில் காலையில் இருக்க வேண்டும். சில பத்திரிகை நண்பர்களுக்குக் கடிதங்கள் எழுதி வைத்துக் கொண்டேன். சில குறிப்புகளும் தயார் செய்து கொண்டேன்.

பயணம் தொடங்கியது.

பிரச்சனையின் அளவு விஸ்வரூபம் எடுத்தது.

முதலில் முதல்வரின் ஆலோசகரைப் பார்க்க வேண்டும். அவரிடம் துறையில் பணிகளை விளக்க வேண்டும். அவர் கேட்கும் கேள்விகளுக்குப் பதில்கள் கூற வேண்டும். அவ்வளவு பெரிய பதவியில் இருப்பவரைப் பார்க்க அனுமதி கிடைக்குமா? ஓர் சாதாரண அதிகாரியுடன் பேசுவாரா? சில நிமிடங்கள் பேச அனுமதித்து போகச் சொல்லிவிட்டால் பயனில்லையே.. இதற்கு ஓர் முடிவு காண வேண்டும்.

பின்னர் முதல்வரைச் சந்திக்க வேண்டும். அனுமதி கிடைக்குமா?

அரசு விதிகளில் ஒன்று. கீழ் நிலையில் பணி புரிகின்றவர்கள் தன் நேரடி அதிகாரியைப் பார்க்கலாம். அதற்குமேல் இருப்பவர்களைப் பார்க்க அனுமதி வேண்டும்.  (protocal).  யாரிடமும் அனுமதி வாங்காமல் சென்றால் ஆலோசகரைப் பார்க்க அனுமதி கிடைக்காது. அப்படியும் குறுக்கு வழியில் சென்று பார்த்தால் ஆலோசகர் என்னைப் பற்றி புகார் செய்தால் உடனே என்மீது கடும் நடவடிக்கை எடுக்கலாம். பார்ப்பதுவே பிரச்சனை யென்றால் எப்படி பேச முடியும்/? அவருடைய  ஆய்வு சரியில்லை என்று கூற முடியுமா? இத்தனையும் கடந்து சென்றால்தான் முதல்வரைப் பார்க்க முடியும். என் முயற்சிகளில் தோல்வி அடைந்தால் மேலும் என்ன செய்வது என்றும் சிந்தித்தேன். எனக்கு இருக்கும் ஒரே துணை பத்திரிகை. கோட்டைக்கு முன் உண்ணா விரதத்தில் உட்கார்ந்து விட வேண்டும். ஒரு பெண் அமர்ந்தாலேயே சூடான செய்தி. அதுவும் நான் என்றால் பல பத்திரிகை நண்பர்கள் ஓடிவருவர். என் கற்பனை விரிந்தது. பயணத்தில் நான் செல்லும் வண்டியின் வேகத்தைவிட என் எண்ணங்கள் அதி வேகமாக ஓடிக் கொண்டிருந்தது

தண்ணீர் விட்டா வளர்த்தோம் சர்வேசா

கண்ணீரால் இப்பயிரைக் காத்தோம்

எம் மானத்தை, மரியாதையை, வாழ்க்கையை இழந்து காத்தோம்

எம்மினம் கருகத் திருளமோ?!

உயிர் போகும்வரை போராடுவேன் .  மன உறுதி  ஏற்பட்டுவிட்டது

முன்பெல்லாம் சென்னை சென்றால் தங்கும் இடம் மயிலாப்பூரில் மந்த வெளியில், மாமன் வீட்டில் . 1962 முதல் நான் தங்கும் இடம் மயிலாப்பூர் அருண்டேல் தெருவில் அண்ணன் மா. ரா. இளங்கோவன் அவர்கள் வீட்டில் தங்க ஆரம்பித்தேன்.

மா.ரா இளங்கோவன் அவர்கள் வாரப்பத்திரிகை சுதேசமித்ரனுக்கு உதவி ஆசிரியராக இருந்தார். அப்பொழுது ஏற்பட்ட பழக்கம். பத்திரிகை அலுவலகங்களுக்கு நேரில் சென்று என் கதைகளைப் போடச் சொன்னதில்லை. 1962ல் எனக்கு பதவி உயர்வு கிடைக்கவும் பத்திரிகைகளில் எழுதுவதை நிறுத்தி விட்டேன். அதற்கு முன் ஐந்து ஆண்டுகள் பல பத்திரிகைகளில் கதைகள் எழுதினேன். மா.ரா இளங்கோவன் அவர்களின் தந்தையார் வரலாற்று ஆய்வாளர் டாக்டர். ராசமாணிக்கனார் அவர்களாகும். அண்ணனின் மனைவியின் பெயர் திருமதி புனிதவதி இளங்கோவன். நான் பழக ஆரம்பித்த காலத்தில் வீட்டுப் பறவை. பின்னர் வானொலி நிலையத்தில் பணி. பல துறைகளில் மேல் நிலையில் பணியாற்றியவர். ஒரு காலத்தில் இவர்கள் குரல் கேட்காத கிராமங்கள் கிடையாது. அன்று அண்ணியானார். பின்னர் எனக்குத் தோழியானார்.

அண்ணன் வீட்டுக்குள் நுழைந்தவுடன் சாமன்களை வீசிவிட்டு “ஓ வென்று” அழ ஆரம்பித்தேன். துணிச்சல்காரி சீதா எங்கே? புனிதம் அருகில் வந்து உட்கார்ந்து அணைத்துக் கொண்டார். அண்ணன் என்னம்மா விஷயம் என்று கேட்டார். அழுது கொண்டே பிரச்சனைகளைக் கூறினேன்

“சீதா, உங்களுக்கு முருகேச முதலியாரையும் அறிஞர் அண்ணாவையும் பார்க்க வேண்டும். அவ்வளவுதானே அண்ணன் ஏற்பாடு செய்வார். அழுகையை நிறுத்துங்க “ புனிதத்தின் பேச்சு என்னை மலைக்க வைத்தது. முடியாதது என்று நினைத்தது  அவ்வளவு சுலபமாக நிகழப் போகின்றதா என்ற வியப்பு. புனிதம் மேலும் தொடர்ந்து பேசினார்கள்.

“முருகேச முதலியார் எங்களுக்கு நெருங்கிய சொந்தம். நீங்கள் மனம் விட்டுப் பேச அண்ணன் கூட்டிச் செல்வார்.”

எனக்குப் பதில் பேச சக்தியில்லை.  அண்ணாவை  உடனே வெளியில் அனுப்பினார்கள் புனிதம்.

வெளியிலிருந்து திரும்பிய அண்ணன் முகத்தில் சிரிப்பைப் பார்க்கவும் என் மனத்தில் நம்பிக்கை துளிர்த்தது. சீக்கிரம் அண்ணனும் நானும் கோட்டையை நோக்கிப் புறப்பட்டோம். முதல்வரின் ஆலோசகரை உடனே பார்க்க அனுமதி கிடைத்தது. அவர் முன்னால் உட்கார்ந்த பொழுது என் மனத்தில் கலக்கமில்லை. அவர் என்ன கேட்டாலும் பதில் கூறத் தயராக இருந்தேன். எங்கள் உரையாடல் ஆரம்பித்தது. முதலில் அவர் சில கேள்விகள் கேட்டார். எந்த தயக்கமுமின்றி பதில்கள் கூறினேன். அதன் பின்னர் முக்கியமான அத்தனை புள்ளி விபரங்களை யும் கூறினேன். அவர் அமைதியாகக் கேட்டார். என் விளக்கங்கள் கேட்ட பின்னரும் சில சந்தேகங்களைக் கேட்டார் உரையாடல்கள் முழுவிபரங்கள் எழுதுவது சரியல்ல. ஒன்றை மட்டும் கூற விரும்புகின்றேன்.

பல இடங்களில் ஆய்வுகள் நடத்தியிருக்கின்றார். தமிழகத்திலும் சிலரிடம் பேசியிருக்கின்றார். எங்கள் குறைகளைச் சொன்னார். என்னால் மறுக்க முடிய வில்லை. மனம் திறந்த பேச்சு இரு பக்கமும் இருந்தது. சில வினாடிகள் சிந்தனையில் ஆழ்ந்தார். உடனே எழுதுந்திருந்து எங்களை இருக்கச் சொல்லி விட்டு வெளியில் சென்றார்.

அறையில் உட்கார்ந்திருந்த பொழுது அவர் சொன்ன குறைகளை எண்ணினேன்.. ஆம். எங்களிடம் அந்த குறை இருப்பதை மறுப்பதற்கில்லை. சில கேள்வி களுக்குப் பதில்கள் கூட கூற முடியாதவர்கள் சமுதாயத்தில் எப்படி விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும்?!. ஆனால் ஒரு வேடிக்கை. அலுவலர்களிடம் அப்படி இருக்கும் பெண்கள் வீடுகளைப் பார்வையிடும் பொழுது  நிறைய பேசுவார்கள். பேச்சு எப்படியும் பிரச்சனைகளிடம் வரும் இவர்களும் அதற்கு வேண்டிய பதில்கள் கூறுவார்கள். பெற்ற பயிற்சிகள் அவர்களை வழி நடத்தும். அவர் சொன்ன இன்னொரு குறை இப்பொழுதும் இருகின்றது. தாங்கள் பணியாற்றும் திட்டம் தவிர துறையில் என்னென்ன திட்டங்கள் இருக்கின்றன என்பது தெரியாது. துறையின் வரலாறும் ஒருவருக்கும் தெரியாது. வேதனை யுடன் இதனைச் சொல்ல வேண்டியிருக்கின்றது. இது எங்கள் துறையில் மட்டுமல்ல.

காலத்துக்கேற்ற, சூழலுக்கேற்ற மாதிரி பயிற்சித் திட்டங்களிலும் சில மாறுதல்கள் செய்தாக வேண்டும். ஒரு துறையில் வேலை பார்க்கின்றவர்களுக்கு அதன் வரலாறு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும். புதிய திட்டம்  கொண்டு வர நினைக்கும் பொழுது ஏற்கனவே எந்த நோக்கங்களில் முன்பு இருந்த திட்டங்கள் அமைக்கப்பட்டன என்பதனையும் அவைகள் செயல்படுத்தும் பொழுது, கண்ட குறை நிறைகளையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் நோக்கங்கள் சிதறாமல், வலிமையான திட்டமாகக் கொண்டுவர முடியும். முன்னேற்றம் கருதிக் கொண்டு வரும் திட்டங்களுக்கு இந்த தொடர் ஒப்பீடு அவசியம்.

நினைவுகளில் மூழ்கி இருக்கும் பொழுது ஆலோசகர் திரும்பி வந்தார்.

ஆவலுடன் அவர் முகத்தைப் பார்த்தேன்

“நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்கள் துறைக்கு இனி தீங்கு நேராது..” என்று சொன்னவுடன் அவருக்கு நன்றி கூறினேன்.  “முதல்வரை இனி பார்க்கலாமா , அவரிடம் நன்றி கூற வேண்டும்” என்றேன். “போய்ப்பாருங்களேன்” என்றார்

முதல்வரைக் காண சென்றேன்.

அறிஞர் அண்ணா

பிள்ளைப் பிராயத்தில் அண்ணாவின் பேச்சில் ஓர் மயக்கம். எனக்கு மட்டுமா? மாணவர்கள் அனைவருக்கும் அவரின் அடுக்குத் தொடர்ப் பேச்சில் அப்படி ஒரு மோகம். அக்காலத்தில் மேடை ஏறினால் அடுக்குத்தொடரில்தான் பேசுவேன். கிராமப் பணிக்கு வந்த பிறகு என் பேச்சு , பேச்சுத் தமிழில் மாறிவிட்டது. அவர் எழுதிய புத்தகங்கள் நான் படித்தது ஒன்றா இரண்டா? அத்தனை புத்தகங்கள் படித்தேன். அண்ணாவிடம் கொண்ட பற்று அரசியல் சம்பந்தப்பட்டதல்ல. அவருடைய அழகுத் தமிழ்தான் அவர்மீது பிரியத்தை ஏற்படுத்தியிருந்தது.

முதல்வரின் முன்னால் போய் நின்றேன். உட்காரச் சொன்னார். உடனே அவரே பேசினார்.

“ஆலோசகர் எல்லா விபரங்களையும் கூறினார். உங்கள் துறைக்கு ஆபத்தில்லை”

“நன்றி “ என்று கூறிவிட்டு கைகூப்பினேன். மேலே பேச்சு வரவில்லை.

யாருடன் நிறைய பேச வேண்டும், அரட்டையடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேனோ அவர் முன்னால் கண்களில் நீர்மல்க பேசாப் பதுமையாக ஆகிவிட்டேன். முதல்வரே பேசினார்

“துணிச்சலுடன் தனியொருத்தியாய் வந்து பேசியிருக்கின்றீர்கள்.நீங்கள் கண்கலங்கலாமா? நீங்கள் எந்த ஊர்? “

“எட்டயபுரம்”

“ஓ, பாரதி ஊர்ப் பெண்ணுக்கு துணிச்சல் இருப்பதில் வியப்பில்லை”

அதற்கு மேல் உட்கார்ந்திருப்பது சரியல்ல. மீண்டும் ஒருமுறை நன்றி கூறி விட்டுப் புறப்பட்டேன்

அறிஞர் அண்ணாவுடன் நேரில் சந்திப்பும் உரையாடலும் இந்த ஒரு முறைதான்.

பெண்சமுதாயம் நன்றி செலுத்த வேண்டியவர்கள் :

அன்றைய முதல்வர் அறிஞர் அண்ணா

முதல்வரின் ஆலோசகர் திரு. முருகேச முதலியார். உடனே இவர் நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால் துறை போயிருக்கும் என்பதற்கும் மேலாகப் பல பெண்களின் உயிர் போயிருக்கும். பல குடும்பங்கள் அழிந்திருக்கும்.

எல்லாவற்றிற்கும் மேலாக நன்றி செலுத்தப்பட வேண்டியவர். திரு. மா.ரா.இளங்கோவன் அவர்கள். இத்துறைக்குச் சம்பந்தமில்லாத ஒருவர் அக்கறை எடுத்துக் கொண்ட உடனே செயலாற்றாமல் இருந்திருந்தால் எத்தனை விபரீதங்கள் நடந்திருக்கும்?!

என் பயணத்தில் வெற்றிகளும் உண்டு. தோல்விகளும் உண்டு. எனக்குக் கிடைத்த வாய்ப்புகளுக்கு நான் வணங்கும் முருகனுக்கு நன்றி செலுத்து கின்றேன்.

இந்த நிகழ்ச்சியை இதுவரை என் துறையைச் சேர்ந்தவர்களிடம் கூடச் சொன்ன தில்லை. இப்பொழுதும் எழுதியிருக்க மாட்டேன். ஆனால் சில காரணங்களால் இந்த வரலாற்று உண்மையைப் பதிய வேண்டிய நிலைக்கு ஆளானேன்

கடைசியாக சென்னைக்குச் சென்றிருந்த பொழுது தமிழ்மரபு அறக்கட்டளையில் இரு பெண்களைச் சிறப்பித்தார்கள். அவர்களில் நானும் ஒருத்தி. என் தோழி புனிதமும் கூட்டத்திற்கு வந்திருந்தார்கள். சுபா அவர்கள் என் தோழியிடம் என்னைப் பற்றிய விபரங்கள் கேட்டிருக்கின்றார்கள். அவர்கள் அப்பொழுது இந்த சம்பவத்தைக் கூறியிருக்கின்றார். சுபாவும் மேடையில் அதனைக் கூறினார்கள். புனிதத்திற்கு ஒரு குறை இருந்திருக்கின்றது. அவர்கள் கணவர் செய்த உதவி மகத்தானது. அதனை நான் எழுத்தில் பதிய வில்லையே என்பதுதான். நியாயமான ஆதங்கம். அவர்களும் ஓர் எழுத்தாளர். மேலும் ஓர் வரலாற்று ஆய்வாளரின் மருமகள்.  இது ஒரு வரலாற்று செய்தி. இதனைப் பதிவது முக்கியம். வருங்காலத்தில் சோதனைகள் ஏதாவது ஏற்பட்டால் எப்படிக் கையாள வேண்டும் என்பதற்கும் ஓர் வழிகாட்டி நிகழ்வாக இருக்கும் என்றார். அவர்களிடம் எழுதுவதாக உறுதி கூறினேன்.

ஏற்கனவே இந்த அறிவுரை ஒரு மேலதிகாரியிடமிருந்தும் கிடைத்திருக்கின்றது. குழந்தைகள் நலத் திட்டங்கள் வெவ்வேறு வடிவில் வர ஆரம்பித்தன. இதன் ஆரம்பத்தைப் பார்க்க முயன்ற பொழுது சரியான ஆவணங்கள் கிடைக்க வில்லை. அப்பொழுது உஷா என்ற அலுவலகப் பணியாளர் அந்த அதிகாரியிடம் என் பெயரைக் கூறி என்னை வரவழைத்துப் பேசினால் தகவல்கள் கிடைக்கும் என்று சொல்லி யிருக்கின்றாள். நான் பணி ஓய்வு பெற்று வீட்டில் இருந்த காலம். ஓர் சனிக்கிழமையன்று இயக்குனர் அலுவலகம் சென்று அவரைப் பார்த்தேன். அவரிடம் ஆரம்ப காலம் முதல் எல்லா விபரங்களையும் கூறினேன். அப்பொழுதே அவர் சொன்னார்.

“நீங்கள் இந்த துறை சம்பந்தப்பட்ட எல்லா தகவல்களையும் எழுதுங்கள். அது இந்த துறைக்கு ஓர் ஆவணமாக இருக்கும்”

அடுத்தும் ஓர் சம்பவம் ஏற்பட்டது. என் அலுவலகம் தீக்கிரையாகி விட்டது. எந்தப் பழைய ஆவணங்களும் இப்பொழுது கிடையாது. மகளிர் நலம், குழந்தைகள் நலம் என்று புதியதாக திட்டங்கள் வந்து கொண்டே இருக்கும் என் அனுபவங் களை, எனக்குத் தெரிந்த தகவல்களைப் பதிந்து வைத்தால், இந்த ஆவணம் உதவியாக இருக்கும். இதனை எழுதுவதுடன் நிற்காமல் இதனை என் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ருக்மணியிடம் தொடர் நடவடிக்கைக்குக் கொடுக்கின்றேன். அவளும் பல பயிற்சிகள் பெற்றவள். திறமைசாலி. அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும் பல திட்டங்களுக்கு அவள் ஒரு  consultant

இந்தத் தொடர் எழுதுவதின் நோக்கமே அதுதான். இதனை வெறும் அறிக்கையாக எழுத விரும்பவில்லை. இன்னும் சிலர் தங்கள் பணிக்கோ , சில ஆய்வுகளுக்கோ இதனை முதல் ஆவணமாக எடுத்துக் கொள்ளலாம். வெளிப்படையாகப் பல செய்திகள் எழுதி யிருக்கின்றேன். சமூகப் பணியில் உளவியல் முக்கியம். எனவே எதையும் மறைக்காமல் உண்மைகளைப் பதிவு செய்துள்ளேன். எந்த பாராட்டுக்காகவும் எழுதவில்லை. இந்தப் பிரச்சனையிலும் நான் கற்றுக் கொண்ட படிப்பினை. ஓர் தொழில் சங்கத்தின் முக்கியத்துவம். தொழில் சங்கமாக இருந்தால் சந்திப்புகள், கோரிக்கைகளில் விவாதங்கள் செய்வது எளிது.

“உலகின் மாறுபாடுகளுக் கிடையே வெற்றி – தோல்வி,  இலாப – நஷ்டம், இன்ப- துன்பம் இவற்றைச் சட்டை செய்யாத மனோ நிலையை அமைத்துக் கொள்.

உன்னுடைய எண்ணம், இலட்சியம், கொள்கைகள் இவைகளை உறுதியாகக் கொள். இவைகளிலிருந்து ஒரு சிறிதும் பிறழாதே”

சுவாமி சிவானந்த மகரிஷி

புகைப் படத்திற்கு நன்றி.

[தொடரும்]

 

Series Navigationவால்ட் விட்மன் வசன கவிதை -3 வரலாற்று ஆசான் ஒருவனுக்கு (To a Historian) (1819-1892) (புல்லின்இலைகள் -1)தாயுமானவன்
author

சீதாலட்சுமி

Similar Posts

5 Comments

  1. Avatar
    மலர்மன்னன் says:

    அம்மா, அண்ணாவைப் பற்றிய நினைவுகளை எழுப்பி என்னை மிகுந்த உணர்ச்சி வசப்படச் செய்துவிட்டீர்கள். அண்ணாவை நான் அறிந்திருந்தேன் என்பதைவிடவும் அவர் என்னை அறிந்திருந்தார் என்பதே எனக்குள்ள பெருமை. அண்ணா முதலமைச்சராக இருக்கையில் நான் தினமும் கோட்டைக்குச் சென்று செய்தி திரட்டும் செய்தியாளனாக இருந்தேன். நாங்கள் விரும்பினால் எந்த நேரத்திலும் எங்களைச் சந்திக்கலாம் என்று அண்ணா அவர்கள் எங்களுக்குச் சொல்லியிருந்தார்கள். மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையே பாலமாக இருப்பவர்கள் செய்தியாளர்கள், இருதரப்பு நிலைகளையும் பரஸ்பரம் பரிமாற்றம் செய்து விடுபவர்கள் அவர்கள்தான் என்பதால் எங்களுக்கு இச்சலுகை. இதைப் பயன்படுத்தி எனக்கு ரேஷன் கார்டு வேண்டும் என்று முதல்வரிடமே கேட்ட செய்தியாளர்களும் உண்டு! அண்ணாவும் கர்ம சிரத்தையாய் அதற்கு ஏற்பாடு செய்வார்! முதலமைச்சர் என்றால் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் அண்ணா விளங்கினார்கள். ஒரு கோரிக்கை யாரிடமிருந்து வந்தாலும் அதில் நியாயம் இருந்தால் உடனடியாக, ஒரு கண நேரத் தாமதமும் இன்றி அதனை நிறைவேற்றிக் கொடுக்கும் முதல்வராக அண்ணா விளங்கினார்கள். ஒரு கோப்பைக் கையில் எடுக்கும்போது அதை வெறும் காகிதங்களின் தொகுப்பாக எண்ணாமல் அவற்றுக்குப் பின்னால் பிரச்சினையின் தீர்வுக்காக ஒரு மனிதர் அல்லது மனிதர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கிறார்கள் என்பதை மறவாதீர்கள் என்று அரசு ஊழியர்களுக்குத் தாம் பதவி ஏற்ற முதல் நாளே அறிவுறுத்தியவர் அண்ணா அவர்கள். அவர் காலத்தில் தமிழக அரசுச் செயலாளர்கள் அனைவருமே எவ்விதத் தயக்கமும் இன்றி முதலமைச்சரிடம் ஒரு சகோதரனிடம் பேசுவதுபோல் பேச முடிவதை நேரில் கண்டு மகிழ்ந்தவன் நான். அண்ணா எந்தப் பிரச்சினையையும் தமது சொந்தப் பிரச்சினையாகவே எடுத்துக்கொண்டு விடுபவராக இருந்ததால் பதவி ஏற்றது முதலே அவரது உடல் நலன் சடுதியில் சீர் கெடலாயிற்று. அவரால் சரிவர நிர்வாகத்தை கவனிக்க இயலவில்லை. இதனை மற்றவர்கள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளத் தொடங்கிவிட்டார்கள். அண்ணாவின் செவிகளுக்கு அவையெல்லாம் எட்டி மிகுந்த வேதனைக்கு உள்ளானார்கள். அண்ணா ஓர் எம் எல் ஏ ஆவதற்கு முன்பிருந்தே என்னை நன்கு அறிந்திருந்ததால் சில சமயம் கோட்டையிலிருந்து வீடு திரும்புகையில் வண்டியில் ஏறு என்பார்கள். நானும் மறுபேச்சின்றி ஏறி விடுவேன். ஒருமுறை அப்படித்தான் செல்கையில் ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே செல்கையில் அண்ணா திடீரென்று முன்ன மாதிரியே இருந்துட்டா நல்லா இருக்கும் இல்லே என்றார்கள். என்ன அண்ண சொல்லறீங்க் என்றேன். இப்படியே ஊர் ஊராப் போயி கூட்டம் போட்டுப் பேசிக்கிட்டு, நினைச்சப்ப சினிமா பார்த்துக்கிட்டு… என்றார்கள். அண்ணா அவர்கள் எந்த அளவுக்கு மனம் புண்பட்டிருக்கிறார்கள் என உணர்ந்து கண் கலங்கினேன். அவரது அகால மறைவுக்கு அவர் பதவி ஏற்றதே காரணம் எனக் கருதுகிறேன். அண்ணாவைப் பற்றிய நினைவு வந்தால் மகிழ்ச்சிக்குப் பதிலாக நெஞ்சு வலிதான் ஏற்படுகின்றது.
    -மலர்மன்னன்

    1. Avatar
      seethaalakshmi says:

      அய்யா, உங்கள் எழுத்தைப் பார்க்கவும் அழுதுவிட்டேன். ஏற்கனவே இத்தொடரில் இப்பகுதி எழுதும் பொழுது டில்லி செய்தி வந்து என்னை உலுக்கிவிட்ட்து. எழுத முடியவில்லை. அல்லது அண்ணாவைப்பற்றி நிறைய எழுதியிருப்பேன். ஆனாலும் வரும் அடுத்த பகுதியில் நிச்சயம் எழுதுவேன். ஆமாம் கொஞ்சம் அரசியல் எழுதியாக வேண்டும். தமிழ் நாட்டின் துரதிருஷ்டம் அறிஞர் அண்ணா சீக்கிரம் இறந்தது. இந்திய நாட்டில் துரதிருஷ்டம் திரு லால்பகதூர்சாஸ்திரி அவர்கள் மறைந்தது, அவர்கள் இருந்திருந்தால் பின்னால் நடப்பவைகளைப் பார்த்து மனமுடைந்து செத்திருப்பார்கள். அவர்கள் இறந்தது அவர்களுக்கு நல்லது. என் வாழ்க்கையில் பல திசைகளீல் பயணம் செய்ய நேரிட்டது. .அவைகளில் அரசியலும் ஒரு பகுதி. சில சந்திப்புகள், சில நிகழ்வுகள் என்று எழுதினால் பல அரசியல் நிகழ்வுக்ளை எழுதமுடியும். ஏனோ ஒரு சக்தி என்னைத் தடுத்துக் கொண்டே வருகின்றது. அண்ணாவுடன் பழக வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று பெரும் குறை.
      மனித நேயம் காத்த மாமனிதர் அறிஞர் அண்ணா.
      எக்கட்சியினரும் விரும்பிய ஒரு நல்ல மனிதர்.
      ஒருவர் சிறப்பை மற்றவர்கள் கூறவேண்டும். கூற வைத்துக் கிடைக்கும் புகழ்ப்பாடல்கள் சிக்கிரம் வெளிறிவிடும்.
      அடுத்து அத்தியாயத்தில் அறிஞர் அண்ணாவில் ஆரம்பித்து சிலரைப்பற்றி எழுதுகின்றேன்.
      இப்பொழுதும் சொல்கின்றேன். நான் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவள் இல்லை. சாதி, மதம், அரசியல், மொழி இவைகளீல் எனக்கு தனிப்பட்ட மோகம் எதிலும் கிடையசது. என் மனச் சிமிழில் போற்றிக் காத்துவரும் ஒரு சிலரில் அறிஞர் அண்ணாவும் ஒருவர்.
      தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி
      சீதாலட்சுமி

  2. Avatar
    மலர்மன்னன் says:

    அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருக்கையில் கோட்டைக்குப் போகும்போதும் நுங்கம்பாக்கம் வீடு திரும்பும்போதும் எப்போதும் கடற்கரைச் சாலையில் சொகுசாகப் போக மாட்டார்கள். ஊர் நடப்பை நேரில் காண வெவ்வேறு வழிகளில் செல்வார்கள். அதன் காரணமாகவே சென்னைச் சாலைகளும்கூட அக்கறையுடன் நல்லவிதமாகப் பராமரிக்கப்பட்டன!
    -மலர்மன்னன்

  3. Avatar
    மலர்மன்னன் says:

    அம்மா, தில்லி அக்கிரமம்பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்கள். அதன் எதிரொலியாக மக்கள், குறிப்பாக இளைஞர்கள் திரண்டெழுந்தபோது அவர்களைச் சந்திக்க தில்லி முதல்வரோ, பிரதமரோ, மத்திய உள் துறை அமைச்சரோ முன்வராமல் அவரவர் வீடுகளிலேயே முடங்கிக் கிடந்தார்கள். அண்ணா முதலமைச்சராக இருக்கையில் மாணவர்-பஸ் தொழிலாளர் மோதல் நிகழ்ந்தபோது மாணவர்கள் கொதிப்படைந்திருக்கையில் அண்ணா மருத்துவக் கல்லூரி மாணவர்களைத் தேடிச் சென்று சமாதானப் படுத்தினார்கள். மாணவர்கள் தங்கள் ஆத்திரத்தையெல்லாம் அண்ணா மீது காட்டினார்கள். ஆனால் அண்ணா அவர்கள் எல்லாவற்றையும் பொறுமையுடன் தாங்கிக் கொண்டு மன்னிப்பும் கேட்டார்கள். வருவதற்கு ஏன் தாமதம் என்று மாணவர்கள் சீறினார்கள். தொழிலாளர்கள் வழி நெடுகிலும் பஸ்களைக் குறுக்கும் நெடுக்குமாக நிறுத்தி வைத்திருப்பதால் உடனே வர முடியவில்லை என்று ஒரு பள்ளிக் கூடக் குழந்தையைப் போல் முதலமைச்சர் அண்ணா சமாதானம் சொன்னபோது கண்ணீர் சிந்தினேன். குடிக்கத் தண்ணீர் கிடைக்குமா என்று அண்ணா கேட்டார்கள். தர முடியாது என்றார்கள். என்னால் துயரைச் சகித்துக் கொள்ள இயலவில்லை. வெளியே வந்து ஒரு மூலையில் நின்று வாய்விட்டு அழுதேன். என்னைப் போலவே மற்ற செய்தியாளர்களும் கண்ணீர் வடித்தார்கள். இந்தச் சம்பவம் அன்றைய செய்தித்தாள்களில் எல்லாம் வெளியானதுதான். தேடிப்பார்த்தால் கிடைக்கும். மாணவர்கள் அவர்களின் கோபத்தை எல்லாம் என் மீது காட்டியதில் அவர்கள் கொதிப்பு தணிந்து விட்டிருக்கும் என்று அண்ணா அவர்கள் பின்னர் எங்களிடம் திருப்தியுடன் சொன்னார்கள்.
    இதனால்தான் அன்றைக்கு இருந்த மெயில் நாளிதழ் சிலர் தாம் வகிக்கும் பதவியால் பெருமை பெறுகிறார்கள். வேறு சிலரால் அவர்கள் வகிக்கும் பதவி பெருமை அடைகிறது. அண்ணா இரண்டாம் வகையினர் என்று அண்ணா இருக்கையிலேயே தலையங்கம் எழுதியது.
    -மலர்மன்னன்

  4. Avatar
    Dr.G.Johnson says:

    வாழ்க்கை சக்கரத்தின் அச்சாணி பெண் எனும் அருமையான கட்டுரையை இவ்வாரம் சீதாலட்சுமி அவர்கள் எழுதியுள்ளது பயன்மிக்கது. திருமதி பாரிஜாதம் நாயுடு அவர்களால் உருவாக்கப்பட்ட மகளிர் நலத் துறை எவ்வாறு இவரின் துணிச்சலும் ஆவேசமும் கொண்ட முயற்சியால் காக்கப்பட்டது என்பதை சுவைபட எழுதியுள்ளார். 1967 ஆம் ஆண்டில் தி.மு.க. ஆட்சி அமைத்தபோது நான் வேலூரில் இரண்டாம் ஆண்டு மருத்துவம் பயின்றுகொண்டிருந்தேன். அறிஞர் அண்ணா அவர்கள் முதல்வர் ஆனதும் முதல் அதிகாரப் பூர்வமான நிகழ்ச்சியாக வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரிக்கு பட்டமளிப்பு விழாவுக்கு வந்தார். அப்போது அவர் ஆங்கிலத்தில் ஒரு மணி நேரம் தங்கு தடை இன்றி தெளிந்த நீரோடைபோன்று அழகான சொற்பொழிவு நிகழ்த்தி எங்களை வியப்பில் ஆழ்த்தினார். நான் தாம்பரம் சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் பயின்றபோதுகூட அவரது பொதுக்கூட்டம் எங்கு நடந்தாலும் சென்றுவிடுவேன். அண்ணாவின் அடுக்குத் தமிழ் கேட்டு மயங்கிய ஆயிரமாயிரம் இளைஞர்களில் நானும் ஒருவன். அவர் எழுதிய நூல்களை தேடி வாங்கி படிப்பேன். அவர் எழுதிய ” வண்டிக்காரன் மகன் ” நாடகத்தை நான் வேலூரில் பொங்கல் விழாவன்று கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் அரங்கேற்றினேன். எனது வாழ்கையின் வழிகாட்டியாகத் திகழும் அண்ணா பற்றி சீதாலட்சுமியும் மலர்மன்னனும் சிறப்பாக எழுதிவருவது மகிழ்ச்சியை உண்டுபண்ணுகிறது. அண்ணா பற்றி மேலும் சுவையான தகவல்கள் அடுத்த வாரமும் வெளிவரும் என்பது கண்டு ஆவலுடன் காத்துள்ளேன்…டாக்டர் ஜி.ஜான்சன்.

Leave a Reply to மலர்மன்னன் Cancel reply

Your email address will not be published. Required fields are marked *