டௌரி தராத கௌரி கல்யாணம்…! – 7

This entry is part 14 of 40 in the series 26 மே 2013

 

அந்த பிரம்மாணடமான லட்சுமி பில்டிங்க்ஸின் ஆறாவது தளத்தில் கௌரி லிப்ட் கதவைத் திறந்து கொண்டு வெளியே வருவதற்கும் முன்பாக அவள் போட்டுக் கொண்ட “ப்ளூ லேடி “சென்டின் மென்மையான மணம் அவளைத் தாண்டிக் கொண்டு அந்த நீள வராண்டா முழுதும் ‘ஹலோ’ சொல்லிக் கொண்டு பறந்தது…”டக் டக் ” என்ற கௌரியின் செருப்பின் சத்தம் எதிரொலியாக கூடவே நடந்து வந்து கொண்டிருந்தது.

கௌரி வருவதை உணர்ந்து கொண்ட அங்கிருந்த ‘குரூப்4 செக்யூரிட்டி’ தன்னை சுதாரித்துக் கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தபடியே, அவள் நெருங்கியதும்…..
மேடம்…குட் மார்னிங்…என்று தயங்கினான்.

ம்ம்….மார்னிங்…! ஏதாவது ப்ராப்ளமா? என்று கேட்டு விட்டு ஒரு நிமிடம் நின்றாள் கௌரி.

எஸ்….நோ….என்று தடுமாறியவனாக, ரெண்டு மாசமா எங்க கம்பெனி பேமெண்ட் பில் பெண்டிங் இருக்குதாம்….எங்க ஃபீல்ட் ஆபீசர் இன்னிக்கு உங்க கிட்ட சொல்லச் சொன்னார்….என்கிறான்.

ஓ ….நீங்க அவரை வந்து என்னை மீட் பண்ணச் சொல்லுங்க…பார்ப்போம் என்றபடியே கண்ணாடிக் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தவளுக்கு ஏதோ உரத்த குரலில் பேச்சு சத்தம் கேட்கவும், அந்தப் பெரிய அறை முழுதுமாக குளிரூட்டப்பட்டு சிறு சிறு கணினி தடுப்பான் அறைகளாகப் பிரிக்கப் பட்டு ஒவ்வொன்றுக்குள்ளும் ஒருவர் மும்முரமாக வேலை செய்து கொண்டிருக்கும் போது இது யாருடைய குரல்? என்றும் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்? என்றும் அறியும் ஆவலில் தனது நடையை அமைதிப்படுத்திக் கொண்டு யாருக்கும் தெரியாதபடி அங்கிருந்த ஒரு காலியான தடுப்புக்குள் புகுந்து கணினி முன்பு அமர்ந்து தன்னை மறைத்துக் கொண்டவளாக காதை மட்டும் தீட்டிக்கொண்டாள் கௌரி.

இங்காருடா மச்சி…புளிமூட்ட கோபால….தலைக்கு மேல இடியே விழுந்தாலும் எந்திரிக்க மாட்டாண்டா …..நானும் வந்த நாள் முதலா பாக்கறேன்…இவனுக்கு சம்பளம் கூடுதோ….. இல்லியோ….. கண்ணாடி பவர் கூடிக்கிட்டே போவுது…அதோட இல்லாம இடுப்பு சைஸ் வேற அநியாயத்துக்கு கூடிக்கிட்டே போவுதுடா.. அப்படியே அந்த கம்ப்யூட்டருக்கு மட்டும் கதவு இருந்துச்சின்னு வெய்யி கோபாலு அதுக்குள்ளாரத் தான் குடித்தனம் பண்ணுவான்….இதை ஜீவா தனது அடித் தொண்டையில் சொன்னதும் அதைக் கேட்ட மற்றவர்கள் கட கட வென்று சிரித்தனர்.

“பின்ன என்னடா மச்சி….கோபாலுக்கு கல்யாணம் ஆயிருச்சி…..நம்மள மாதிரியா ‘வெந்தது போதும்’னு இருக்கறதுக்கு…..இதுவும் .வேலையின் நடுவே இன்னொரு குரல்…!

அதுக்குன்னு இப்பிடியாடா மாப்ள…..சைட் பிசினஸ் பண்ணிப் பண்ணியே பக்கத்துல ஒரு லட்சுமி பில்டிங் வெலக்கி வாங்கிருவாப்பல…கில்லாடிரா..கோபாலு ..பாரேன்…நான் இம்புட்டு சொல்றேன்….மவன்..முகத்தைத் திருப்பரானா பாரேன்….அம்புட்டு பெர்ஃபெக்டாம்…! வேலைல….வேலைல….! ஜீவா கிண்டலடிக்கிறான்.

டேய்…கோவாலு…..கோவாலு…..என்று வடிவேலு ஸ்டைலில் ‘சந்திரமுகி எஃபெக்டில்’ இன்னொருவன் கூப்பிட்டுப் பார்த்தும் தோற்றுப் போய் அவரவர் கணினியில் தங்களை புதைத்துக் கொள்கிறார்கள்.

யூ …நோ…..காற்றுள்ள போதே தூற்றிக் கொள்னு, இவர் எந்த சந்தர்ப்பத்தையும் கைநழுவ விட மாட்டார்டா…எப்படியோ அந்த கௌரி மேடத்தை கைல போட்டுகிட்டு இந்த கான்டீன் கான்டிராக்ட்டை கூட அவர் தான் பண்றார் தெரியுமா? மாசா மாசம் சுளையா முப்பதாயிரம்…..ம்ம்ம்….எங்கிருந்தோ ஒரு குரல் ஆஜராகிறது.

அதுல என்னடா ஆச்சரியம்….தயிர் சாதமும்…தயிர் சாதமும்….எங்க போனாலும் ஒண்ணாயிரும்டா…!

ஹி ….ஹி …ரியல் எஸ்டேட் பிசினஸ் பத்தி உங்க யாருக்கும் தெரியாதா? நம்ம கோபால் சார் தான் இந்த சிட்டில பாதிக்கு மேல பில்டிங்ஸ்ல ஃபிளாட்ஸ் புக் பண்ணியிருக்க பெரிய புள்ளி….யாருக்காச்சும் ஃபிளாட் வேணும்னா இவரைக் கான்டாக்ட் பண்ணினா போதும் எந்த ஏரியா ஆனாலும் கிடைக்கும்….இதுக்கெல்லாம் ஏஜெண்ட் இவருதான்.

முதல்ல புக்கிங் பிறகு செல்லிங் தென் லாபம் சுருடிங்….ன்னு கோபால் & கம்பெனிக்கு எப்பவும் சுக்கிர தசை தான்…! நமக்கு தான் எதுவுமே செட் ஆக மாட்டேங்குது…என்று ஜீவா பெருமூச்சு விடவும்.

டேய் ஜீவா…உன்னோட புதிய டெல்லி ப்ராஜெக்ட் என்னாச்சு…? இப்ப உக்காந்து கதை பேசிட்டு அப்புறம் மேடம் வந்ததும்…..தலையைச் சொறி…..அந்த டெல்லி ப்ராஜெக்டை சர்வே பண்ணிட்டியாடா… ஜீவா? அதப் பண்ணு முதல்ல…எவனுக்கு எங்க பேங்க் பேலன்ஸ்ன்னு பார்க்காதே..நீ விடற புகை இப்பவே என் கண்ணைக் கட்டுதே…! – இது கோபால்.

ஏண்டா…மச்சி..இப்படி பயமுறுத்திக்கிட்டு ..! நான் எப்படியெல்லாம் இருக்கணும்னு ஆசைப் பட்டேன் தெரியுமா? உன்ன மாதிரி இருவது பேரை எனக்குக் கீழ வேலைக்கு வெச்சி சொடக்கு போட்டு வேலை வாங்குறாப்பல …! இப்பப் பாரு என் நிலமைய…ஆழாக்குக்கும், படிக்கும் பதில் சொல்லுற நிலைமை…! ஆனாலும் இந்த கௌரி ரொம்ப மோசம்டா…நெனைச்சா நடக்கணும்…சொன்னா முடிக்கணும்னு…ஒரு லேடி ஹிட்லர் கிட்ட மாட்டிக்கிட்டு நான் தவிக்கிறேன்டா….! .இத்த எல்லாம் எவன் கல்யாணம் கட்டித் தாலி………………!

அதற்குமேல் பொறுக்காமல் கௌரி டக்கென எழுந்து “ஸ்டாப் ஜீவா….கமின் ” என்று கடுமையான குரலில் அழைத்துக் கொண்டே தன அறைக்குள் நுழைந்து அவளது சீட்டில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு லேசாக ஆடிக் கொண்டே ஜீவாவுக்காக காத்திருந்தாள்.

தயங்கிய படியே உள்ளே நுழைந்த ஜீவா….”மேடம்…ப்ளீஸ் ஐம் சாரி…” என்று குரலில் நடுங்கினான்.

“இது உனக்கு டிரெனிங் பீரியர்ட் தானே ” நினைவிருக்கா?

எஸ் மேடம்….!

அதுக்குள்ளே இத்தனை வாய்ஸா ..! இப்ப உன்னைப் பார்த்தால் எனக்கு அன்னிக்கு வேலைக்கு இண்டர்வியூ வந்த போது பவ்யமா நின்ன கோலம் தான் நினைவுக்கு வருது. என் மேல தான் மிஸ்டேக். ஒரு சான்ஸ் கொடுத்தேன். யூ ப்ரூவ்ட்….!. கதம்….கதம்….!.என்று சொல்லிக் கொண்டே இண்டர்காமில் யாரிடமோ பேசிவிட்டு…”ஜீவா இனிமேல் உங்க சர்வீஸ் எங்களுக்குத் தேவை இல்லை…கண்டிப்பான குரலில் சொன்னாள் கௌரி.

மேடம்…..ப்ளீஸ்…ப்ளீஸ்….!

நோ…எக்ஸ்க்யூசெஸ்…!

அட்லீஸ்ட்…இன்னும் ரெண்டு நாளில் வரும் ” நண்பன் டே” வரைக்கும் இருந்துட்டுப் போயிடறேன்…அதுக்குள்ளார இருக்குற பெண்டிங் வொர்க்ஸ் முடிச்சு கொடுத்துடுவேன்…ப்ளீஸ்…ஜீவா கெஞ்சினான்.

ம்ம்…சரி…அது கழிஞ்சு நீங்க ரிலீவ் ஆகிக்கோங்க ஜீவா ….லெட்டெர் ஃபாலோஸ் என்று சொல்லிவிட்டு தன் இருக்கையை விட்டு எழுந்து வெளியேறினாள் கௌரி.

ஜீவா தான் செய்த தவறை நியாயப் படுத்திக் கொண்டே….”இரு…இரு…உன் திமிரை அடக்கறேன்…..எனக்கா இங்க வேலை இல்லை….உன்னை என்ன பண்றேன் பார் .” என்று கருவிக் கொண்டே தனது இருக்கையை நோக்கி நடக்கிறான்.

கௌரி தனக்குள்ளே…”நான் இவனை எப்படி வேலைக்கு செலெக்ட் பண்ணினேன்….வெறும் அவுட் லுக்கைப் பார்த்தா!…..தப்பு பண்ணிட்டேன்….நல்ல வேளையா இந்தப் புல்லுருவியை உருவியாச்சு…என்று நினைத்துக் கொண்டே “இடியட்….எங்கிட்டயேவா…” என்று எதையோ எழுதிக் கொண்டிருந்தாள்.

கௌரிக்கு இந்த ஜீவாவா இப்படி….என்று அதிர்ச்சியுடன் வேறு எந்த வேலையும் ஓடாமல் மனது அலை பாய்ந்து கொண்டிருந்தது.

இந்த ஜீவாவால் தான் தன் வாழ்க்கை ஜீவன் இழக்கப் போகிறதென்று அறியாதவளாக அவனை மனசுக்குள் திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தாள்.

ராத்திரி பூரா கார்த்திக்கின் போன்காலுக்காக காத்து காத்து கடைசியில் அவனது போன் வந்து…” அம்மா நம்ம கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டா அனேகமா நாளைக்கு உங்காத்துக்கு வருவா…அடுத்த மாசமே கல்யாணமாம்….உனக்கும் சம்மதம் தானே ” என்று கேட்டது நினைவுக்கு வரவும், அந்த நினைவில் மனசின் தற்போதைய இறுக்கம் தளர்ந்து குளிர்ந்தது.

சீக்கிரமா வீட்டுக்கு போய் அம்மாவிடம் சொல்லியாகணும் …மனம் அவசரப் பட்டது.

அதற்கும் முன்பு, “நண்பன் டே ” க்கு கார்த்திக்கையும் கூப்பிடலாம்…கண்டிப்பா வருவான் என்று நினைத்தவள் தனது செல்போனில் கார்த்திக்கை கொஞ்சியபடி அழைத்தாள்.

0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0

“விளையாட இது நேரமா…?
என் வினையாலே படும்பாடு
தனை சொல்ல வரும்போது
விளையாட இது நேரமா? முருகா…
களைத்தேன் ஜென்மம் எடுத்து சலித்தேன்..
பொறுத்திருந்து உளமார
உன்னை நாடி வரும்போது
விளையாட இது நேரமா…?
முருகா…!

வாசல் வராண்டா வரையிலும் சித்ரா பாடும் குரல் கணீரென்று கேட்டது .

வீட்டிற்குள் நுழைந்தது கூடத் தெரியாமல் தனை மறந்து கண் மூடிப் பாடிக் கொண்டிருந்த அம்மாவை பார்த்தபடியே நின்றிருந்தாள் கௌரி.

பாடல் முடிந்து கண் விழித்துப் பார்த்ததும் அதில் வடிந்த கண்ணீரைப் பார்க்கத் தவறவில்லை கௌரி…

ஏன்மா…? இப்படி அழுதுண்டே இருக்கே….? மனசைத் தேத்திக்கோ…எங்கயாவது வெளில போயிட்டு வர வேண்டியது தானே….? கொஞ்சம் புத்துணர்ச்சியா இருக்கும்.

வேண்டாம்…பிடிக்கலை…ஒண்ணுமே பிடிக்கலை…!விரக்தியோடு வந்தது சித்ராவின் குரல்.

டீ பாய் மேலிருந்த புத்தகத்தைப் பார்க்கிறாள் கௌரி….” மாற்றியது யாரோ…?” என்று தலைப்பிட்டு அட்டைப் படத்தில்அழகான பெண்…அந்தப் புத்தகத்தை கையில் எடுத்துப் பார்க்கிறாள்…ஓ அன்று இந்தப் புத்தகத்தைத் தான் அப்பா படித்துக் கொண்டிருந்தாரோ….அந்த டெல்லி பிரசாத் லெட்டர் இதுக்குள்ள தானே இருந்தது…அதைத் தான் இப்போ அம்மாவும் படிச்சிண்டு இருக்காளா? அப்படி இந்தக் கதையில் என்ன இருக்கும்.?…அதை கையில் எடுத்துக் கொண்டு தன அறைக்குள் நுழைகிறாள்.
கையில் காப்பியோடு வந்த அம்மாவைப் பார்த்து லேசான புன்சிரிப்புடன்….அவாத்தில் இருந்து இன்னைக்கு யாராவது வந்தாளா? என்று கேட்கிறாள்.

யாராத்திலிருந்து….அந்த கார்த்திக் ஆத்திலிருந்தா ..?

ம்ம்…ம்ம்…அவரோட அம்மா இன்னைக்கு வரேன்னு சொன்னாளாம்…கார்த்தியோட அம்மா சம்மதிச்சுட்டா ன்னு கார்த்திக் தான் சொன்னான்…..அதான் கேட்டேன்…! காப்பியை உறிஞ்சிக் கொண்டே சோபாவில் உட்கார்ந்து கொள்கிறாள் கௌரி. கையில் அந்தக் கதைப் புத்தகத்தைப் புரட்டிக் கொண்டே ஏதோ ஒரு வரியில் கண்கள் குத்திட்டு நிற்கிறது.

” ஆம்…வாழ்க்கைக்குத் துணை எந்த வயதிலும் அவசியம் தான்…ஒரு வயதுக்குப் பிறகு மனசுக்குத் துணை….அவசியத் தேவை தான்…” என்ற வரியைப் படித்ததும் அவள் மனம்….அம்மா…உனக்கென்ன வயதாகிறது? .வெறும் நாற்பத்தி ஐந்து தானே…? பாவம்மா நீ..! எனக்கு இது கூடப் புரியாமல் போச்சே…நினைத்துக் கொண்டே காப்பியை குடித்து விட்டு அந்த புத்தகத்தை மூடி வைத்து விட்டு , சோபாவில் நன்றாக சாய்ந்து கொள்கிறாள்.

வாசலில் நிழலாடும் சப்தம் கேட்கிறது..எட்டிப் பார்க்கிறாள்….கார்த்திக்கின் அம்மாவும் அப்பாவும் நின்றிருந்தார்கள்.

துக்கம் கேட்க வந்திருந்தவர்களாக அவர்களும் சோகம் மூடிய முகத்தோடு உள்ளே நுழைய…..

உட்காருங்கோ…என்றதும் உட்கார்ந்தார்கள்.

சித்ராவின் அம்மாவைப் பார்த்து கல்யாணி …மெல்லிய தொனியில்…” பாவம்..இப்படியாகும்னு நாங்க நினைக்கவே இல்லை….பாவம் சின்ன வயசுதான் அவருக்கு .சாகிற வயசில்லை தான்…இப்படியா விபத்தில் வாரிக் கொடுக்கணம் ? விதி….என்ன செய்ய? என்று சொல்லிக் கொண்டிருக்கையில்.

ஒரு சோகம் ஒரு கல்யாணத்தில் சரியாகும்னு சொல்வா…என்று கார்த்திக்கின் அப்பா ஆரம்பிக்கும் போது …

மாமா….என்று குறிக்கிட்ட கௌரி..சரியாச் சொன்னேள்…நானும் அப்படித் தான் நினைக்கறேன்…என் அம்மா என் அப்பாவை மறக்கணும். மிச்ச வாழ்க்கையை நிம்மதியா வாழணும் ..அதுக்குத் தான் நான் ஒரு முடிவு பண்ணிருக்கேன் என்று சொல்லிவிட்டு அமைதியாகிறாள்.

அந்த மௌனத்தை கிழித்துக் கொண்டு எல்லோரது மனமும் ஒரே கேள்வியால் நிரம்பி வழிந்தது…என்னவாக்கும் அது?

எனக்கு இன்னொரு அப்பா….அதாவது என் அம்மாவுக்கு இன்னொரு கல்யாணம்…பண்ணனும்னு….அவள் முடிக்கவில்லை..

சித்ரா…கத்துகிறாள்..போதும் நிறுத்துடி…….ஏன்தான் என் மானத்தை நீ இப்படி வாங்கறியோ? குபுக்கென கண்களைக் கண்ணீர் ததும்பி வழிய சட்டென எழுந்து அறைக்குள் சென்று கதவை அழுத்திச் சார்த்தி எதிர்ப்பைத் தெரிவிக்கிறாள்.

இதென்ன புதுக் கூத்து…? கிணறு வெட்ட பூதம் கிளம்பற கதை தான்…! நீ எப்போ உங்கம்மாவுக்கு பிள்ளை பார்த்து……ம்ம்..இதெல்லாம் .நடக்கற காரியமா? கல்யாணி கேலியாக பட்டென சொல்கிறாள்.

ஏன் நடக்காது? நடந்ததுக்கு அப்பறம் உங்க பிள்ளை கார்த்தியை நான் கல்யாணம் பண்ணிக்கறேன்…என் அம்மாவுக்கு ஒரு பாதுகாப்பு வேண்டாமா? என்று ஆவலோடு அவர்கள் முகத்தை ஏறெடுத்துப் பார்க்கும் போது .

வாங்கோன்னா…இதெல்லாம் நமக்கு சரிப் படாது…இந்தப் பொண்ணு தெளிஞ்ச வெள்ளம் குடிச்சவளாக்கும் …நான் தான் புத்தி கெட்டுப் போயி இங்க வந்தேன்….நீங்களாவது சொல்லப் படாதோ…? என்று பழியைப் பக்கத்துத் தலையில் போட்ட கல்யாணி …கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா…அங்க ரெண்டு கொடுமை ஜிங்கு ஜிங்குன்னு ஆடித்தாம்..இதெல்லாம் திருந்தாத ஜென்மங்கள்….என்று பொரிந்து தள்ளியபடியே…நீங்க எழுந்திருங்கோ முதல்ல…வாங்கோ போலாம்….!

இவ பெரிய… முற்போக்குவாதி…! இந்த முற்போக்குவாதி இன்னும் என்னெல்லாம் செய்யுமோ? இதெல்லாம் பார்க்கற சக்தி நேக்கு இல்லடீம்மா….நீயுமாச்சு…உங்கம்மாவுமாச்சு…என்று கணவனின் கையைப் பிடித்து எழுப்பியப்படியே நடந்தவள்….”இவ நம்மாத்துக்கு சரிபட்டு வரமாட்டா” எனக்கு ஆத்துல ஆயிரம் வேலை இருக்கு…..என்று சொல்லிக் கொண்டே வெளியேறினாள்.

ரெண்டு வேதாளமும் முருங்கை மரம் ஏறியாச்சு…! என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டார் கார்த்திக்கின் அப்பா.

நான் தான் உங்களுக்குச் சரிப்பட்டு வருவேன்…..என்று அவர்களது முதுகைப் பார்த்து சொல்லியபடியே….”தான் மட்டும் நன்னா இருக்கணும்….மத்தவா எப்படிப் போனா என்ன?” ..இவா எல்லாம் தான் திருந்தாத்த ஜென்மங்கள்…..என்று சொல்லிக் கொண்டே அம்மா…அம்மா…கதவைத் திற அவாள்ளாம் போயாச்சு ….வெளில வா…என்று பட பட வென்று அறைக் கதவைத் தட்டுகிறாள் கௌரி.

கதவைத் திறந்த சித்ரா…..பெரியவா சின்னவான்னு பார்க்காமல் இப்படிப் போயி சம்பந்தி மாமிக்கு முன்னாடி என் மானத்தை வாங்கினியே… போதுமா? திருப்தியா? என்று கண்ணைக் கசக்கிக் கொண்டாள். எதை, எப்போ…யாருகிட்ட பேசணும்னு ஒரு விவஸ்தையே இல்ல உன்கிட்ட….! என்று பொருமுகிறாள் சித்ரா.

அம்மா……ஒண்ணும் தப்பு நடக்கலை…..நான் உனக்கு ஒரு துணையைத் தேடித் தந்துட்டாக்கும் அவாத்துக்கு மருமகளாப் போவேன். கார்த்திக் இதுக்கு சம்மதிப்பான்….இவாள்ளாம் சம்மதிக்கணும்னு ஒண்ணுமில்லை….எனக்கு வேண்டியது உன்னோட சம்மதம் மட்டும் தான்.

வாயை மூடு….! அப்பா போய் மூணு மாசம் கூட ஆகலை…அதுக்குள்ளே அசட்டுப் பிசட்டுன்னு நீ பண்றது கொஞ்சம் கூட ரசிக்கலை….கல்யாண வயசிலே பொண்ணை வெச்சுண்டு …நோக்கு புத்தி கித்தி பேதலிச்சுப் போச்சா என்ன? நான் தான் உனக்கு ரொம்ப செல்லம் கொடுத்து கெடுத்து வெச்சுட்டேன்னு நினைக்கறேன்…என்று சித்ரா சொன்னதும்…..

நீ உன் மனதைத் திற…! இப்பப் பார்த்து அடுத்த வருஷம் கல்யாணம் பண்ணீடா போறது…நாளைக்கேவா உன்னை கல்யாணம் பண்ணிக்க சொல்றேன்….இந்த உலகத்தில் எதுக்குமே நீ மட்டும் முதலாவது கிடையாது…அதைப் புரிஞ்சுக்கோ , என்று சொல்லி விட்டு தனது மடி கணினியைத் திறந்து இணையத்தில் இணைந்தாள் .

அவள் தேடுதல் இணைய தளத்தில் “மறுமணம்” பக்கத்தை நோக்கி விரிந்து கொண்டிருந்தது.

நான் பாட்டுக்கு உன்னை இப்படியே விட்டுட்டு கார்த்திக்கோட கல்யாணமாகி போயிட்டேன்னு வெய்யி…நீ யாருமில்லாத்த இந்த வீட்டை சுத்தி சுத்தி வந்து நோக்குத் தான் பயித்தியம் பிடிக்கும்….ஒரு வயசுக்கப்பறம் பேச்சுத் துணை ரொம்ப முக்கியம்…அதைத் தெரிஞ்சுக்கோ..அதான் அந்த புத்தகத்தில் கூட படிச்சிருப்பியே….!

அதுக்குக் கல்யாணம் தேவையில்லை…..ஆன்மிகம்..கடவுள்…ஜபம்….தபம்…. போதும்…நான் பாட்டுக்கு கோயில் குளம்னு போயிண்டு…..!

சித்ரா பேசி முடிக்கவில்லை….கௌரி குறுக்கிட்டு…….”ரெண்டு பேருமா சேர்ந்தே போங்கோளேன்…..”

இவளிடம் பேசிப் பிரயோஜனம் இல்லை என்று சித்ரா வாயை மூடிக்கொண்டாள் .

நீண்ட நிசப்தம் அவர்களுக்குள் நுழைந்து கொண்டது.

0 0 0 0 0 0 0 0 0 0 0 0 0

“நண்பன் டே” நினைவுடனே மனசெல்லாம் கோலாகலமாக அன்றைய பொழுது விடிந்தது. வழக்கத்துக்கு மீறிய சந்தோஷத்தில் கௌரி இருந்தாள் . கார்த்திக் தானும் வரேன் என்று சொன்னதால் தான் அவளுக்குள் அத்தனை சந்தோஷம் என்று அவள் உணர்ந்தாள் .

பார்த்துப் பார்த்து தன்னை அலங்கரித்துக் கொண்டாள் . அவள் பிறந்ததே அவனுக்குத்தானோ என்ற மனநிலையில் தனக்குள் தானே ரசித்துச் சிரித்துக் கொண்டாள் .
திரும்பத் திரும்ப கார்த்திக்குக்கு போன் செய்து கண்டிப்பா வந்துடுடா….இங்க சிலபேர் கிட்ட சொல்லியிருக்கேன்…நாம எல்லாரும் இ சி ஆர் ரோட்டில் முட்டுக்காடு போறோம்…அங்கே ஒரு ரிசார்ட்…ஒரு நாள் பூரா…..அங்க தான்….சரியா..டிரஸ் எடுத்துண்டு வந்துடு….என்ன.

ஆஹா ……கௌரி ஸோ நைஸ் ஆ ஃ ப் யூ ..! நானும் ரொம்ப நாளா அங்கல்லாம் உன்னோட போகணும்னு நினைச்சேன்….உனக்கும் வேலை…எனக்கும் வேலை….அட்லீஸ்ட் என்னால உன்னை அழைச்சுண்டு போக முடியலை…உன்னால எல்லாம் முடியறது. நீ கிரேட்….கௌரி…!

ரொம்ப ஐஸ் வைக்காதே…அப்பறம் நான் மூக்கைத் துடைச்சிண்டு மூலைல உட்கார்ந்துடுவேன்….!உன்னோட கோல்டன் வர்ட்ஸால எனக்கு கோல்ட் பிடிச்சிடும்…!ஆமா..உனக்குப் பிடிச்ச கலர் சொல்லேன்….!

ஆரஞ்ஜ் ….மிட்டாய் ரோஸ்…கிளிப்பச்சை…!

மாடு முட்டும்… பரவாயில்லையா?

இருவரும் சேர்ந்து சிரிக்கிறார்கள். சரி..சரி…சீக்கிரம் கிளம்பி வா…நான் ஃபோனை வைக்கறேன்…என்றவள் கார்த்திக்கின் வரவுக்காக காத்துக் கொண்டே மனசுக்குள் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறாள். இது தான் சரியான தருணம்….இன்னைக்கே நம்ம அம்மாவுக்கு கல்யாணம் பண்ண நினைக்கறேன்னு கூட அவனுக்குத் தெரியப் படுத்தணம் . கார்த்திக் புரிஞ்சுக்குவான்..ரொம்ப நல்லவன்…!

ஒரு வழியா ஹைடெக் ஏசி பஸ்ஸில் “விப்ரோ நண்பன் டே குதூகலம் ” என்று பெரிய பானர் கட்டிவிட்டு பஸ்ஸுக்குள் அனைவரும் அடைந்து கொண்டனர்…..சந்தோஷப் பேச்சும், சிரிப்பும்,களிப்புமாக பஸ் முட்டுக்காடு நோக்கி நகர்ந்தது.

‘மச்சி ஓபன் த பாட்டில்’ என்று ஒரு குரல் குஷியானது…அதைத் தொடர்ந்து கூடவே தொடர் விசில் அடிக்கும் சத்தங்கள். இதில் பெண்களும் அதிக கரகோஷத்தோடு விசில் அடித்து சிரித்துக் கொண்டதைப் பார்த்த கௌரி…..எல்லாருமே தெளிஞ்ச வெள்ளம் குடிச்சதுகள் தான் என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டாள். அவளது அருகில் இருந்த கார்த்திக் “ஹேய்….நீங்கள்லாம் நல்லாவே என்ஜாய் பண்றீங்கப்பா….என்று சொல்லி கௌரியின் தோளில் இடித்துச் சிரித்தான்.

முட்டுக்காடு போட்டிங், ரிசார்ட்டில் லூட்டி, பாட்டு, டான்ஸ்…என்று நேரம் ஜாலியாகப் போய்கொண்டிருந்தது….!

ஜீவா தான் கார்த்திக்கிடம் தன்னை சுய அறிமுகம் செய்து கொண்டு….ஜோக் அடிக்க இருவரும் சேர்ந்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தான். அது தனக்குப் பிடிக்காவிட்டாலும் கூட மரியாதை நிமித்தம் கௌரி அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

அந்த நேரத்தில் கௌரி…நானும் ஒரு பெக்… சோஷியல் டிரிங்க் …ஓகேயா…என்று கண்ணால் கேட்டு சைகை காட்டிய கார்த்திக்கை கண்ணால் அதட்டி “உஷ் மூச்சு ” என்று சைகை காட்டினாள் கௌரி….அவனும் பதிலுக்கு சரி சரி என்று அடங்கினான்…கௌரி “சமத்து” என்று சிரித்துக் கொண்டாள் .

ஐந்து மணிக்கு பஸ் திரும்பும் சமயம் பார்த்து கார்த்திக் தான் கேட்டான் “கௌரி இத்தனை தூரம் வந்தாச்சு அப்டியே எங்க ஆபீசுக்கு சொந்தமான ‘சான்ட் ஃபீல்டை’ ஒரு நடை பார்த்துட்டு வந்துடுவோம்..எனக்கும் ரொம்ப நாளா ஆசை…!

வேண்டாம் கார்த்திக்…நாளைக்கு நான் டெல்லிக்கு போகணும்….அந்த புது ப்ராஜெக்ட் கிடைச்சாச்சு..அதுக்கு கமிங் மண்டே சர்வே பண்ணி சிக்னேச்சர் போட டெல்லி பிராஞ்சில் கூப்பிட்டிருக்கா ….அம்மாட்ட இன்னைக்கு வந்துடுவேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன்…நெக்ஸ்ட் வீக் ப்ளான் பண்ணலாமே…என்ன சொல்றே..? என்று முகத்தை சாய்த்துக் கொண்டு பதிலுக்கு எதிர்பார்க்கிறாள் கௌரி.

நீ ஏன் டெல்லி வரை போகணும்…இதெல்லாம் உங்க ஹையர் பாஸ் பார்த்துக்க மாட்டாளா…..? வேண்டாத்த வேலை எல்லாம் இழுத்துப் போட்டுக்காதே…!

இல்ல கார்த்திக்…இது என்னோட ரெஸ்பான்சிபிலிட்டி….பை தி பை….நீ இதெல்லாம் வேண்டாம்னு சொல்லாதே….’ஐ நோ வாட் நாட் டு டூ’…!

அப்போ….இப்போ ‘வாட் டு டூ’ ன்னு நான் சொல்றேன்….நீ கேளு….இவாள்லாம் பஸ்ல ரிடர்ன் போகட்டும்…நாம சான்ட் ஃபீல்ட்….ஓகேயா..?

கௌரிக்கும் தனிமை தேவைப் பட்டது….எப்படியாவது இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்திக் கொண்டு அம்மா விஷயத்தை சொல்லிப் புரிய வைக்கணுமே..அதனால் ..”சரி கார்த்திக் ” என்றாள் .

அடுத்த சில நிமிடங்களில் கால் டாக்ஸி இசிஆர் ரோட்டில் இவர்களோடு விரைந்தது ‘சான்ட் ஃபீல்ட்’ நோக்கி. இரண்டு பக்க பசுமை கண்களையும் நெஞ்சத்தையும் நிறைத்தது. நாளைக்கு நைட் தான் டெல்லி ஃப்ளைட்…..ஒரே நாள் தான்…மண்டே ஈவினிங் நான் ரிடர்ன்…என்றாள் கௌரி.

சரி…சென்று வா…விடை கொடுக்கிறேன் என்று வழிந்தான் கார்த்திக்.

அவர்களை இறக்கி விட்டு விட்டு டாக்ஸி நகர்ந்தது.

வாவ்….கிரேட் ப்ளேஸ் யா…என்று ஆச்சரியமானாள் கௌரி…!

பெருமையில் மிதந்தான் கார்த்திக்.

அவர்களது ரிசார்டை திறந்து கொண்டு உள்ளே சென்றதும்…ஏதோ மாயா லோகத்தில் நுழைந்த உணர்வோடு மனது துள்ள ஆரம்பித்தது இருவருக்கும்..

ஒவ்வொரு அறையாகச் சென்று பார்த்தவர்கள்…..ஆஹா…வீடு கட்டினா கூட இப்படித்தான் கட்டணம்…இங்க பார்த்தியா கார்த்திக்..என்று கண்ணாடிச் சுவரை மறைத்த பெரிய ஸ்க்ரீனை விலக்கிக் காட்ட அங்கே கருநீல வானும்…தூரத்துக் கடலும்…பைன் மரங்களுமாக அட்டகாசமான ஒரு இயற்க்கை சூழலை கண்முன்னே நிறுத்தியது.

தனை மறந்து நின்ற கௌரியின் தோளில் கைபோட்டபடியே கார்த்திக் அருகே நின்று கொண்டான்.

ரொம்ப ரம்மியமா இருக்குல்ல…என்றவள்…..சரி பார்த்தாச்சு…போகலாமே என்றாள் .

உனக்குப் போக மனசு வருதா? எனக்கு வரலே….உன்னோட இருக்கணும் இந்த மாதிரி இடத்தில்…..பேசிண்டே…! என்று நிறுத்தினான்.

கார்த்தி…நானும் உன்னோட கொஞ்சம் பேசணும்…அதாவது…என்று இத்தனை நேரம் தனது மனதில் அரித்துக் கொண்டு நின்ற அம்மாவின் கல்யாணத்தைப் பற்றியும், அதனால் வரும் விளைவுகள், நன்மைகள், என்று அலசிப் பேசி முடித்தாள். கார்த்தி..இப்ப நீயே சொல்லு நான் நினைக்கறது சரி தானே?

ம்ம்ம்ம்…நீ சொல்றது சரி தான் கௌரி…உன் அம்மா சம்மதிச்சா …..நிச்சயம் உன் எண்ணம் ஈடேறும். இது எனக்கொண்ணும் இலலை. இந்த விஷயத்தில் உன்னை நினைக்கும் போது எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு தெரியுமோ? நீ கிரேட் தான் கௌரி….!

கார்த்திக்கின் கண்களை ஊடுருவிப் பார்த்தவளாக, நீ மட்டும் என்னவாம்….நான் என்ன சொன்னாலும் அதுக்கு ஏத்தா மாதிரி தான் நீயும் யோசிக்கிறே….நீ கூட கிரேட் தான்.

பின்பு இருவரும் வெளியில் கைகோர்த்தபடி நடக்கிறார்கள்…..’கேண்டில் லைட்டில்’ ஒருவர் முகத்தை ஒருவர் விழுங்கியபடி டின்னர் என்று பசிக்கு எதையோ கொரி க்கிறார்கள்.

இரண்டு மனமும் சந்தோஷ அலைவரிசையில் ஒன்றாக சேர்ந்து ராஜநடை போட்டுக் கொண்டே அறைக்குள் நுழைந்தனர்.

தனிமை, சந்தோஷம், சுதந்திரம், சூழ்நிலை இவை எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து அவர்கள் இருவரையும் சிறை பிடித்தது.

ஜீனே லகா ஹூன் பெஹலே ஸே ஜ்யாதா
பெஹலே ஸே ஜ்யாதா
தும் பர் மர்னே லஹா ஹூம்….! ,,
மேய்ன் மேரா தில் ஔர் தும் ஹோ யஹான்…
ஃபிர் க்யோன் ஹோ பலுகேன் ஜூகயேன் வஹான்…
தும் ச ஹசீன் மைனே தேக்கா நஹின்..
தும் இஸ் ஸே பெஹலே தி ஜானே கஹான்
ஜீனே லகா ஹூன் பெஹலே ஸே ஜ்யாதா….!

எல்.சி.டி யில் ஒரு புது ஹிந்தி படத்துக்காக ஸ்ருதிஹாசன் வெட்கப்பட்டுக் கொண்டிருந்தாள். அதை ஓரக்கண்ணால் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள் கௌரி.

கௌரியைப் பார்த்து ..யூ லுக் கார்ஜியஸ்….என்ற கார்த்திக்கின் வார்த்தைக்கு மெழுகென உருகினாள் கௌரி.

கார்த்திக்கின் தைரியத்தில் கௌரியின் தயக்கங்கள் தளர்ந்து போனது.

“இந்த உலகத்தில் எதுக்குமே நீ மட்டும் முதலாவது கிடையாது…அதைப் புரிஞ்சுக்கோ என்று நேற்று அம்மாவுக்கு அறிவுரை சொன்னது நினைவுக்கு வந்தது”. கௌரி கார்த்திக்கின் அன்புப்பிடிக்குள் பிடிவாதமாக நுழைந்து கொண்டு மயங்கினாள் .

காலைச் சூரியன் சுதந்திரமாக எழுந்தபோது தான் இருவருக்கும் சூழ்நிலையின் பிடிக்குள் இருந்து தாங்களும் விடுபட்டது போலிருந்தது.

சந்தோஷமாகவே இருவரும் அவரவர் வீட்டை நோக்கி விரைந்தார்கள்.

கௌரியின் மனம் ஊமையாக இருந்தது. “தப்புப் பண்ணிட்டேனோ ..” வந்திருக்கக் கூடாதோ என்று ஒரே கேள்வியை திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தது. மெளனமாக கண்ணாடி வழியாக வெளியே பார்த்துக் கொண்டே உள்ளுக்குள் புகைந்து கொண்டிருந்தாள்.

” கௌரி…நீ .ஒண்ணும் நினைச்சு குழம்பாதே….நீ எப்போ சொல்றியோ அன்னிக்கே நம்ம கல்யாணம்….ப்ராமிஸ் என்று சொல்லி கார்த்திக் அவளது கைகளை தனது கரத்தோடு இணைத்துக் கொள்கிறான். கௌரி நிம்மதி பெருமூச்சு விடுகிறாள்.

ஐ….நோ யூ டா…..என்றவள் அவனது கண்களைப் பார்க்க முடியாமல் முகத்தை தாழ்த்திக் கொள்கிறாள். அதில் கூடவே வெட்கமும் வந்து ஒட்டிக் கொள்கிறது.

ஒரு இடத்தில் இருவரும் இறங்கி வேறு வேறு வாகனத்தைப் பிடித்து அவரவர் வீட்டுக்குள் ஒன்றுமே நடக்காதது போல நுழைந்து கொண்டார்கள்.

இரவில் கிளம்பும் முன்பு ‘கார்த்தி… அப்போ நான் டெல்லி கிளம்பியாச்சு ஏர்போர்டில் இருக்கேன் செக்- இன் ஆயிட்டேன்’…என்று தகவல் கொடுத்தாள் கௌரி.

சேஃப் ஜெர்னி….கீப் இன் டச்….கண்ணம்மா …!. என்று கைபேசியில் முத்தமிட்டான் கார்த்திக்.

ஏர் இந்தியா விமானம் கௌரியை ஏற்றிக் கொண்டு டெல்லிக்குப் பறந்தது.

நேற்று நான் ஏன் இப்படி பண்ணினேன்…? ..அம்மாவுக்குத் தெரிந்தால் என்னவாகும்…? நான் நிஜத்தில் அவ்வளவு பலவீனமானவளா? நம்பவே முடியலையே…
கார்த்திக்கிடம் நான் உயிரையே வெச்சுருக்கேன்…அவனோட அன்புக்காக எதையும் செய்யத் துணிஞ்சுட்டேன்….ன்னு நினைக்கறேன்…இது தப்புன்னு தெரிஞ்சும் அந்த
எண்ணத்தை உதாசீனப் படுத்திட்டேன்….இதனால பெரிசா ஏதாவது நடக்குமா? என்ற மனசாட்சியின் குரலுக்கு ஒண்ணும் நடக்காது..கார்த்தி ரொம்ப நல்லவன் என்று மனசாட்சியே பதில் சொல்லியது.

ஜன்னல் வழியே பார்வையை அனுப்புகிறாள்…..பஞ்சுப் பொதியாக மேகங்கள் உலகத்திற்கும் உணர்வுகளுக்கும் சம்பந்தமே இல்லாத ஒரு நிலையை உணர்த்திக் கொண்டிருந்தது….இந்த மேகக் கூட்டத்துக்குள் இருந்து சினிமால வராமாதிரி நாரதர் வந்தால்…எப்படி இருக்கும்…? என்று நினைத்துச் சிரித்துக் கொண்டாள் .

மேடம்….’வெஜ் டின்னர்’ என்று அவளது கைகளில் ஒரு ட்ரே திணிக்கப் பட்டது. அவளது பசி நிரம்பவும், டெல்லி ரன் வேக்குள் விமானம் இறங்கி ஓடி நின்றது.

(தொடரும்)

Series Navigationகுரங்கு மனம்நிறமற்றப் புறவெளி
author

ஜெயஸ்ரீ ஷங்கர்

Similar Posts

2 Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    தன்னைப் பெண் கேட்டு வந்தவர்களிடம் கெளரி தன்னுடைய அம்மாவுக்கு மறுமணம் செய்யணும் என்பது பைத்தியக்காரத்தனம்.இவ்வளவுக்கும் அவர்களின் வரவை கார்த்திக் அவளிடம் கூறியுள்ளான். இது அவனையும் அவனின் பெற்றோரையும் அவமதித்தது ஆகாதா? பெண் எவ்வளவுதான் முற்போக்குச் சிந்தனை கொண்டவளானாலும் இப்படி நடந்துகொள்வாளா ? அவளுடன் தனிமையில் கழிக்க விரும்பும் அவனிடம் தன்னுடைய அம்மாவின் தனிமை பற்றியும், அவளுக்கும் ஒரு துணை தேவை என்பது பற்றியும் சொல்லி அவனையும் அதற்குச் சம்மதிக்க வைப்பது ஏற்புடையதாகத் தெரியவில்லை. இதைப் படித்தபின் கெளரியும் கார்த்திக்கும் சூப்பர் முற்போக்குச் சிந்தை கொண்டவர்போன்றே எண்ணத் தோன்றுகிறது. இத்தகு முற்போக்கு சிந்தை கொண்டவர்கள் தங்களுடைய திருமணத்தை என் இதற்காக தள்ளிப் போடவேண்டும்.? ஒரே மேடையில் சித்ராவுக்கும் சேர்த்தே ( தாய்க்கும் மகளுக்கும் ) திருமணத்தை வைத்துக்கொள்ளலாமே!..டாக்டர் ஜி.ஜான்சன்.(* பின் குறிப்பு: என் கோபம் கெளரி மேல்தான், ஜெயஸ்ரீ மேல் அல்ல. )

  2. Avatar
    latha says:

    stupid storyline. I am a 45 year old mother too. I wouldn’t want to get myself tangled into another relationship and complicate my life. The remaining years must be peaceful and without stress of looking after an old man. Unless the old .lady loves someone she will never marry again. The author seems ignorant of women’s psychology.

Leave a Reply to latha Cancel reply

Your email address will not be published. Required fields are marked *