தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

5 ஏப்ரல் 2020

குருக்ஷேத்திரக் குடும்பங்கள் – 12

ஜோதிர்லதா கிரிஜா

Spread the love

மறு நாள் அதிகாலையில் கண் விழித்த ராதிகா தன் தோழி ஒருத்தியின் வீட்டுக்குப் போய்விட்டு அங்கிருந்தே கல்லூரிக்குப் போவதாகச் சொல்லிவிட்டு வழக்கத்தை விடவும் ஒரு மணி நேரம் முன்னதாகப் புறப்பட்டுவிட்டாள்.

தீனதயாளன் ஏற்கெனவே கிளம்பிப் போய்விட்டிருந்தார்.

அவள் பத்மஜாவின் வீட்டை அடைந்த போது, பத்மஜா சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

“அடடே. வாடி, வா. காலங்கார்த்தால வந்திருக்கே? ஆச்சரியமா இருக்கே? சாப்பிட்டியாடி?”

”சாப்பிட்டுட்டுத்தாண்டி கெளம்பினேன். உன்னோட உதவி எனக்கு அவசரமாத் தேவை.”

”சொல்லு. என்ன உதவி?”

”உங்கம்மா இல்லையா?”

“இருக்காங்களே. அடுக்களையில வேலையா இருக்காங்க. கூப்பிடட்டுமா? எப்படியும் எனக்கு இன்னும் கொஞ்சம் டிஃபன் வேணுமான்னு கேக்குறதுக்கு வருவாங்க.  ..”

“அவங்களுக்குத் தெரிஞ்சாலும் பரவாயில்லே. எனக்கு உன்னோட சல்வார்-கமீஸ் ஒரு செட் அவசரமாத் தேவைப்படுதுடி துப்பட்டாவோட. நீயும் நானும் ஒரே சைஸ்னுதான் நினைக்கிறேன்.”

“நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.  அது சரி, என்ன விசேஷம்? ஃபோட்டோ ஏதாச்சும் எடுத்துக்கப் போறியாடி?”

“அப்படித்தான்னு வச்சுக்கயேன்!”

“அதென்னடி, அது, அப்படித்தான்னு வச்சுக்கயேன்றே?”

”உங்கம்மாவைப் பொறுத்த மட்டுல அதுக்காகத்தான். நிஜமான காரணத்தை அப்பால் உனக்குச் சொல்றேன். ஆனா, அதைச் சொல்றதுக்கு என்னை உடனேயே வற்புறுத்தக்கூடாது.  எப்ப சொல்லணும்னு எனக்குத் தோணுதோ, அப்ப நானே உனக்குச் சொல்லுவேன். சரியா?”

“சரி….”

அப்போது பத்மஜாவின் அம்மா அங்கு வந்தாள்:  “வாம்மா, ராதிகா….”

“என்னோட சல்வார்-கமீசும் துப்பட்டாவும் வேணுமாம். இரவல் கேக்க வந்திருக்கா.  ஃபோட்டோ எடுத்துக்கணுமாம்.”

“அதுக்கு மட்டும் உங்க வீட்டில அந்த ட்ரெஸ் போடச் சம்மதிப்பாஙளா?”

“சம்மதிக்க மாட்டங்கதான்.  ஆனா எனக்கு அப்படி ஒரு ட்ரெஸ்ல ஃபோட்டோ எடுத்துக்கணும்னு ஆசை. அதான். நான் பிடிவாதம் பிடிச்சா சரின்னுடுவாங்கதான்.  அம்மாவுக்குத்தான் பிடிக்கல்லே.  அப்பா ஒண்ணும் சொல்ல மாட்டாரு.”

“எனக்குக் கூடத்தான் பத்மஜா சேலைதான் கட்ட்ணும்சிறது.  ஆனா யாரு எம்பேச்சைக் கேக்கறா? ஏதோ, இவ துப்பட்டாவாச்சும் போட்டுக்கச் சம்மதிச்சிருக்காளே, அந்த மட்டும் சந்தோசந்தான்! ஆனா சில பொண்ணுங்க் அது இல்லாம அலையிறதைப் பாக்கும் போதுதான் எனக்கு அப்படியே பத்திகிட்டு வருது! அது கிடக்கு. டிஃபன் சாப்பிட்றியாம்மா”

“இல்லிங்கம்மா. சாபபிட்டுட்டுத்தான் கெளம்பினேன்.”

சாப்பிட்டு முடித்த பின் ராதிகாவுக்குப் பிடித்த ஒரு சல்வார்-கமீஸ்-துப்பட்டாவைப் பத்மஜா அவளிடம் கொடுக்க, “உங்க வீட்டிலேயே ட்ரெஸ் மாத்திக்கிறேண்டி,”  என்ற அவள் பத்மஜாவின் அறையிலேயே தன் உடைகளை மாற்றிகொண்டாள். துப்பட்டாவை எடுத்து நன்கு போர்த்திக்கொண்டாள்.  தலைக்கு முழுமறைப்பாக அதனால் முக்காடிட்டுக்கொண்டாள்.   பின்னர், தன் குளிர்க்கண்ணாடியை எடுத்து மாட்டிக்கொண்டாள். பெரிதாக வைத்துக்கொண்டிருந்த நெற்றிப் பொட்டை நீக்கிவிட்டுச் சின்னதாய் ஓர் ஒட்டுப் பொட்டைக் கன்னத்தில் ஒட்டிக்க்கொண்டாள்.  தனது தலையின் முன்  புறத்து வாரலை மிகவும் தழைத்துக்கொண்ட ராதிகாவுக்குத் தனது தோற்றம் கணிசமான அளவுக்கு மாறி விட்டிருந்ததாய்த் தோன்றிற்று.

அந்த “கோகோ” மூக்குக் கண்ணாடியில் அப்பா தன்னைப் பார்த்ததே இல்லை என்பது ஞாபகம் வர, சற்றே தொலைவில் தன்னைக் காண நேரினும் அவரால் தன்னை அடையாளம் தெரிந்துகொள்ள முடியாது என்று அவள் நம்பிக்கை கொண்டாள்.

“இங்கே பக்கத்துல எங்கேயாவது செருப்புக் கடை இருக்காடி, பத்மஜா?”

“தெருத் திருப்பத்துலேயே ஒரு கடை இருக்குடி…”

“சரி, என்னோட பைக்ல வர்றியாடி?  உன்னைப் பாதி தூரத்துல விட்டுர்றேன். அங்கேருந்து நீ பஸ்ல காலேஜுக்குப் போய்க்க. நான் இன்னிக்குக் காலேஜுக்கு மட்டம்டி. எங்க வீட்டுக்குக் கூடத் தெரியாது.”

“என்னவோ ப்ளான் பண்றே. சரி.  உன்னை நான் எதுவும் கேக்கல்லே. … அம்மா! நாங்க கெளம்பறோம்.”

“சரி.. போய்ட்டு வா…. ராதிகா! உங்கம்மாவை நான் ரொம்ப வெசாரிச்சேன்னு  சொல்லும்மா…… அட!  ஆளே மாறித் தெரியறியே …”

“வர்றேம்மா!….”  –  தான் அவிழ்த்து வைத்திருந்த புடைவை, ரவிக்கை வகையறாவத் தான் உடனெடுத்து வந்திருந்த ஒரு பையில் வைத்து, பைக்கின் பெட்டியினுள் போட்டுக்கொண்ட ராதிகா பத்மஜாவுடன் படி இறங்கினாள்.

“முதல்ல செருப்புக் கடை.  அப்புறம் இன்னொரு விஷயம்… சொல்ல மறந்துட்டேன். சாயந்தரம் அஞ்சரை மணிக்கு உங்க வீட்டுக்கு வந்து,  இந்த ட்ரெஸ்ஸைக் கழட்டிட்டு என் பழைய ட்ரெஸ்ஸுக்கு மாறிப்பேன். ”

“என்னமோ செய். எல்லாம் ஒரே மர்மமா இருக்கு.”

முதலில் செருப்புக் கடைக்குப் போய், மிக உயரமான குதிகால் ஷூக்களை வாங்கி அணிந்துகொண்ட பின் ராதிகா பைக்கைக் கிளப்பினாள்.

“நான் போற வேலை சீக்கிரமே முடிஞ்சிருச்சுன்னு வச்சுக்கயேன், அப்ப, மத்தியானமே கூட உங்க் வீட்டுக்குப் போய் ட்ரெஸ் மாத்திண்டு போயிடுவேன். துவைக்காம திருப்பிக் குடுக்கறாளே இவன்னு உங்கம்மா எதுவும் தப்பா நினைச்சுக்க மாட்டாங்களே?”

“சேச்சே!”

“இல்லாட்டி ஒண்ணு செய்யறேன். உங்க வீட்டுக்குப் போய் ட்ரெஸ் மாத்திக்கிட்டதும், உன்னோட ட்ரெஸ்ஸை எங்க் வீட்டுக்கு எடுத்துக்கிட்டுப் போய்த் துவைச்சுட்டுத் திருப்பிக் கொண்டு வந்து குடுக்கறேனே?”

“அதெல்லாம் ஒண்ணும் வேணாம்.  அப்படியே கழட்டி என் ரூம் ஹேங்கர்ல மாட்டிடு.  நான் பாத்துக்கறேன்.”

அடுத்த பேருந்து நிறுத்தத்தில் பத்மஜா இறங்கிக்கொள்ள, “நான் வர்றேண்டி. எனக்கு மூட் வர்றப்ப எல்லாத்தையும்  நீ கேக்காமயே சொல்லுவேன் – இல்லாட்டி சொல்லாமயும் இருப்பேன்! என்ன?” என்ற ராதிகா சிரித்தாள்.

“உன் வேஷத்தோட பின்னணி பத்தி எதுவும் கேக்காதேன்றே! அம்புட்டுத்தானே? கேக்க மாட்டேண்டி.  ஆனா ஏதோ காதல் விவகாரம்னு மட்டும் புரியுது! ஆல் த பெஸ்ட்!”

“இல்லேன்னும் சொல்ல முடியல்லே. ஆமான்னும் சொல்ல முடியல்லே. ஆனா, அது என் சம்பந்தப்பட்ட விஷயமே இல்லே.”

“சரிதாண்டி. புதிர் போடுற மாதிரி பேசிக்கிட்டு! கெளம்பு, கெளம்பு…”

ராதிகா வாய்விட்டுச் சிரித்த பின், பைக்கைக் கிளப்பினாள்.

… மகாவீரரின் பிறந்த நாளை முன்னிட்டு அன்று மைய அரசு அலுவலகங்களுக் கெல்லாம் விடுமுறை.  ஆனால் தீனதயாளன் தமக்கு அலுவலகத்தில் வேலை இருப்பதாய்ச் சொல்லிக்கொண்டு அவளுக்கும் முன்னதாய்க் கிளம்பிப் போய்விட்டிருந்தார். அவளது திட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள அதுவும் அவளுக்குச் சாதகமாக இருக்கவே கிளம்பிவிட்டாள்.

தனது பைக்கை அவரது அலுவலகத்துக்கு எதிரே இருந்த பெரிய மரம் ஒன்றுக்குப் பின்னால் நிறுத்தி இறங்கிய ராதிகா, மிக அருகில் இருந்த பொதுத் தொலைப்பேசிக் கூண்டுக்குச் சென்று, தீனதயாளனின் தனிப்பட்ட தொலைப்பேசி இலக்கத்தைச் சுழற்றினாள்.

இரண்டாம் மனியோசையில் தீனதயாளன் ஒலிவாங்கியை எடுத்துப் பேசினார்.

”ஹல்லோ! மை டியர் சிந்தியா!” என்றார். கூப்பிட்ட நபரின் குரலைக் கூடக் கேட்காமல்.அவர் அவ்வாறு சொன்னதும், ராதிகா இணைப்பைத் துண்டித்தாள்.

‘ஓகோ! அந்த மேனாமினுக்கியின் பெயர் சிந்தியாவா!  சரியாக ஒன்பது மணிக்கு அவள் கூப்பிடுவாள் போலும்!  அதனால்தான் குரலைக் சுடக் கேட்காமல், ‘மை டியர் சிந்தியா’ என்றாரா?  அதிலும் இன்றைக்கு விடுமுறை நாள் வேறு.  தாம் தமது அலுவலகத்துக்குப் போக இருப்பதை அவளிடம் சொல்லி இருக்கிறார்.  ஒன்பது மணிக்குத் தொலைபேசுவதாக அவளும் சொல்லி இருப்பாள் போலும்…’

ஐந்து நிமிட இடைவெளிக்குப் பின்னர், அவள் மறுபடியும் அவரது இலக்கத்தைச் சுழற்றினாள். இந்தத் தடவை தீனதயாளன், “யெஸ்?” என்று மட்டும் ஒற்றைச் சொல்லை உதிர்த்தார்.

அவள் கைக்குட்டையால் தன் வாயைப் பொத்திக்கொண்டு, குரலையும் கொஞ்சம் மாற்றிக்கொண்டு, “குட் மார்னிங், சார்! நான் ஒரு எம்.எஸ்ஸி. என் வயசு இருபத்திரண்டு.  உங்க டிபார்ட்மெண்ட்ல எனக்கு ஏதாச்சும் வேலை கிடைக்குமா, சார்? வேகன்சி இருக்கா?” என்றாள்.

“இன்னிக்கு எங்களுக்கு ஹாலிடேம்மா.  தவிர, இந்த டிபார்ட்மெண்ட்ல இன்னும் ஒரு வருஷத்துக்கு ஆள் எடுக்கிறதா இல்லேம்மா. வேற எங்கேயாச்சும் ட்ரை பண்ணு. ஆல் த பெஸ்ட்!”

“நான் இப்ப வந்து உங்களை நேர்ல சந்திச்சு என்னோட செர்ட்டிஃபிகேட்ஸ் காப்பீஸைக் குடுக்கிறதுல உங்களுக்கு ஏதாச்சும் ஆட்சேபணை உண்டா, சார்? குடுத்துட்டு ஒரே நிமிஷத்துல போயிடுவேன். உங்க ஆபீசுக்கு ரொம்பப் பக்கத்துலேர்ந்துதான் பேசறேன்… அஞ்சே நிமிஷத்துல என்னால வர முடியும், சார்.”

“இத பாரும்மா. இன்னைக்கு ஹாலிடேயானதுனால இங்க என்னையும் இன்னும் ரெண்டொருத்தரையும் தவிர வேற யாருமே இல்லே. வாட்ச்மேனும் உன்னை உள்ளே விட மாட்டான். தவிர நான் இன்னும் ரெண்டே நிமிஷத்துல ஒரு அவசர வேலையாக் கிளம்பப்போறேன். ஒரு அர்ஜென்ட் ஃபைல்ல கையெழுத்துப் போடுறதுக்காக வந்தேன். நாளைக்கு வேணா வந்து என்னைப் பாரும்மா.  பட் ஐ காண்ட் ப்ராமிஸ்! தெரிஞ்சுதா? இதோ, நான் கெளம்பிட்டே இருக்கேன்….”    –  தீனதயாளன் ஒலிவாங்கியைக் கிடத்தினார்.

ராதிகாவும் ஒலிவாங்கியை வைத்துவிட்டு, வாயில் கட்டி இருந்த கைக்குட்டையை அகற்றியபின் அதே இடத்தில் மரத்துக்குப் பின்னால் பைக்குடன் மறைவாக நின்றுகொண்டாள்.  அவள் நின்றுகொண்டிருந்த இடத்திலிருந்தே, தீனதயாளனின் அலுவலக நுழைவாயிலை அவளால் பார்க்க முடிந்தது.

சரியாக இரண்டே நிமிடங்கள் கழித்து, தீனதயாளன் அலுவலக வாயிலுக்கு வந்து சுற்றுச் சுவருள் இருந்த தமது மாருதி காரைக் கிளப்பினார்.
தயாராகத் தன் பைக்கின் மீது அமர்ந்திருந்த ராதிகாவும் உடனே தன் பைக்கை உயிர்ப்பித்து, தீனதயாளன் காரைச் செலுத்திய திசை தெரிந்ததும் தானும் அதைச் செலுத்தி அவரைப் பின்தொடர்ந்தாள். எந்தக் காரணத்துக்காகவும் அவரைத் தான் முந்தக் கூடாது என்று தீர்மானித்தாள் – தன் பைக்கின் இலக்கம் அவர் பார்வையில் பட்டுவிடும் என்பதால்.

தீனதயாளனின் மாருதி கார் ராய்ப்பேட்டைப் பொது மருத்துவமனைக்கு அருகில் இருந்த ஒரு தெருவுக்குள் நுழைந்தது.  ராதிகாவும் அதே தெருவுக்குள் பைக்கைச் செலுத்தினாள். பிறகு மாருதி கார் பிறிதொரு சந்தினுள் நுழைந்தது. அவளும் நுழைந்தாள்.  பின்னர், அது மற்றொரு கிளைச் சந்தினுள் புகுந்தது.  அவள் மிக மெதுவாய்ப் பின்தொடர்ந்தாள். அந்தக் கிளைச் சந்தினுள் புகுந்ததும் முன்னடியிலேயே கார் நின்றது. கார் நின்றதும் ராதிகா சற்றுத் தொலைவிலேயே பைக்கை நிறுத்திக்கொண்டாள்.

காரை நிறுத்தி அதனின்று இறங்கிய தீனதயாளன் நான்காம் வீட்டுக்கு முன் சென்று கூப்பிடு மணியை அழுத்தினார். சந்தின் முனையில் பைக்கின் மீது அமர்ந்தவாறே ராதிகா கவனித்தாள்.  அழைப்பு மணி அழுத்தப்பட்ட மறு விநாடியே கதவு திறந்தது. திறக்கப்பட்ட கதவுக்குப் பின்னால் அந்த சிந்தியா நின்றுகொண்டிருந்தாள். அவள் கதவைத் தள்ளிகொண்டு சற்றே முன்னால் வந்ததால் அவளை ராதிகாவால் நன்றாகவே பார்க்க முடிந்தது. அவள் அமர்க்களமான அலங்காரத்தில் இருந்தாள்.

‘இருவரும் வெளியே எங்கோ போகப் போகிறார்களா என்ன?’ –

தீனதயாளன் அவளது இடை பற்றி நகர்த்திக்கொண்டு உள்ளே செல்ல, அவள் சிணுங்கலாக ஏதோ கூறியவாறு கதவைச் சாத்தினாள். கதவை மூடுவதற்கும் முன்னல் அவர் தனது இடையைப் பற்றிய அவசரத்தைக் கண்டிக்கும் பொருட்டு அவர் சிணுங்கி யிருக்கலாம் என்று ராதிகா ஊகித்தாள்.

ராதிகா வெளிவிட்ட பெருமூச்சில் அவள் தோள்கள் உயர்ந்து சரிந்தன. இனி அங்கே இருப்பதில் எந்தப் பொருளும் இல்லை என்று தோன்ற, அவள் சகித்துக்கொள்ள முடியாத சினத்துடனும் வேதனையுடனும் பைக்கைக் கிளப்பி மிக விரைவாக அதைப் பத்மஜாவின் வீடு நோக்கி விரட்டலானாள்.

அவள் போன போது, பத்மஜாவின் அம்மா கட்டிலில் உட்கார்ந்து ஏதோ பத்திரிகை படித்துக்கொண்டிருந்தாள்.

”ஃபோட்டோ எடுத்திண்டியாம்மா?”

”ஆச்சும்மா.  நான் ட்ரெஸ் மாத்திண்டு உடனே கிளம்பிடறேம்மா.”

“சரிம்மா. பத்மஜாவோட ரூம்ல்யே மாத்திக்க…”

ராதிகா பத்மஜாவின் அறைக்குள் நுழைந்து தனது சேலைக்கு மாறினாள். பிறகு வெளியே வந்து, “நான் எடுத்துட்டுப் போன சல்வார்-கமீஸ்-துப்பட்டா எல்லாத்தையும் துவைச்சுக் குத்துடறேம்மா. எடுத்துட்டுப் போறேன் “  என்று அவள் சொன்னதும், “ரொம்ப நல்லாருக்குதுடி. … நான் துவைச்சுக்கறேன்… நீ என்ன அதை யெல்லாம் சேறுலயும் சகதியிலயும் போட்டுப் புரட்டினியா என்ன? கொண்டா இங்கே!” என்று கூவிய பத்மஜாவின் அம்மா அவற்றைப் போட்டு அவள் வைத்திருந்த பையைப் பிடுங்கிக்கொண்டாள்.

பிறகு, “காப்பி குடிச்சுட்டுப் போயேம்மா. … டிகாக்‌ஷன் ரெடியா யிருக்குது,” என்றாள்.

“இப்பதாம்மா வர்ற வழியில குடிச்சேன்…பத்மஜா வந்ததும் சொல்லிடுங்க. நான் இன்னைக்குக் காலேஜுக்குப் போகல்லே. வரட்டுமா?” என்ற ராதிகா அவளிடம் விடை பெற்றாள்.`

’ராயப்பேட்டையில், அந்தச் சந்தின் நான்காம் வீட்டுக்குள் நுழைந்ததும் அப்பாவும் அந்தப் பெண்மணியும் நேரே படுக்கை யறைகுத்தானே போயிருப்பார்கள்?’

இந்தக் கேள்வியைத் தொடர்ந்து திரைப்படக் காதல் காட்சிகள் பல அவள் மனக்கண்ணில் தோன்ற,  “ஏய், பொண்ணு! வீட்டுல சொல்லிட்டு வந்தியா? ரோட்டைப் பாத்து ஓட்டுவியா? எங்கேயோ ஆகாசத்தப் பாத்துக்கினு ஓட்றியே? உனக்கெல்லாம் பைக்கு ஒரு கேடு!”  என்ற ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் கூச்சல் தற்காலிகமாய் அவளது கற்பனைக்குத் தடை விதித்தது.

நூலகம், பூங்கா, ஓட்டல் என்று சுற்றிப் பொழுதைப் பிடித்துத் தள்ளிவிட்டு ஐந்து மணிக்கு ராதிகா வீட்டை யடைந்தாள்.

கதவைத் திறந்த அம்மாவைப் பார்த்ததும் அவளைக் கட்டிக்கொண்டு ஒரு பாட்டம் அழவேண்டும் போல் அவளுக்கு இருந்தது.

பளிச்சென்ற முகத்தில் திருநீறுடனும் கால் ரூபாய் அளவுக்குக் குங்குமப் பொட்டுடன், மூக்கில் எட்டுக்கல் பேசரி ஒளிர, காதுகளில் வைரத் தோடுகள் மிளிர, அவற்றோடு போட்டி போட்டுக்கொண்டு அவள் கண்களின் கருவிழிகளும் அவற்றின் வெண்பரப்பும் இன்னும் அதிகமாய் ஒளி உமிழ, புன்னகைபுரிந்த அவளைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் போன்று ராதிகாவுக்கு இருந்தது. ‘இந்த அம்மாவையா அப்பா ஏமாற்றுகிறார்!’

”என்னடி என்னமோ அப்படி முறைச்சுப் பாக்குறே?”

ராதிகா பதில் சொல்லாமல், உள்ளே போனாள்.

“என்னடி, பதிலே சொல்லாம போறே? நேத்து உங்கப்பாவை அப்படி ஒரு முறை முறைச்சே! இன்னிக்கு நானா?”

காலணிகளைக் கழற்றி உதறிவிட்டு, “ஆமாம்மா.  நீங்க எம்புட்டு அழகா இருக்கீங்கன்னு பாத்தேன்!  வேற ஒண்ணுமில்லே.  காப்பி குடுக்கிறீங்களாம்மா?” என்ற ராதிகா சோஃபாவில் அமர்ந்தாள்.

……… அன்றிரவு சாப்பிட உட்கார்ந்த போது, ராதிகாவின் முகம் கலகலப்புக் குறைந்து காணப்பட்டததைக் கவனிக்க தனலட்சுமி தவறவில்லை.

“என்னடி, ராதிகா? மறுபடியும் டல்லாத் தெரியறியே?”

“மறுபடியும் லேசாத் தலை வலிக்குதும்மா! மாத்திரை போட்டுக்கிட்டேன். இப்ப கொஞ்சம் தேவலைம்மா.”

தீனதயாளன் ஒன்றுமே சொல்லாமல் தன்னை ஆழ்ந்து நோக்கிய தினுசில் ஒரு வித்தியாசத்தை அவள் உணர்ந்தாள்.

“காலேஜ்ல இன்னைக்கு என்ன விசேஷம்?”  என்று கேட்டார் திடீரென்று.

தான் கல்லுரிக்குப் போகாதது அவருக்கு எப்படியோ தெரிந்து விட்டது என்பதைப் புரிச்துகொண்ட ராதிகா அவருக்கு என்ன பதிலைச் சொல்லுவது என்கிற குழப்பத்தில் கணம் போல் ஆழ்ந்தாள்.   –                                                    தொடரும்

jothigirija@live.com

Series Navigationவால்ட் விட்மன் வசனக் கவிதை -26 என்னைப் பற்றிய பாடல் – 20 (Song of Myself) என் போர்க் காலச் சேவை .. !கதிர்பாரதியின் ” மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்” – கவிதை நூல் விமர்சனம்

Leave a Comment

Archives