நீங்காத நினைவுகள் 15

This entry is part 4 of 25 in the series 25 ஆகஸ்ட் 2013

                1959 அல்லது 1960 ஆக இருக்கலாம்.  என்னைப் பார்க்க ஒருவர் வந்துள்ளதாக வரவேற்பறையிலிருந்து தொலைபேசித் தகவல் வந்தது. அப்போது அலுவலரிடம் சென்று வாய்மொழிக் கடிதம் வாங்கி எழுதுவது என் முறையாக இல்லாததால் எனது இருக்கையில் இருந்தாக வேண்டிய அவசியமின்றி நான் சற்றே ஓய்வாக இருந்தேன் எனவே, கீழ்த்தளத்தில் இருந்த வரவேற்பறைக்குப் போனேன்.  நான் மாடிப்படிகளில் இறங்கிக்கொண்டிருந்த போது, வரவேற்ப்றைக்கு மேற்கூரை இல்லாததால், அங்கிருந்தவாறே தலை உயர்த்தி என்னைப் பார்த்துவிட்ட ஓர் இளைஞர் புன்சிரிப்புடன் எழுந்து நின்று வெளியே வந்து  மாடிப்படிகளில் ஏறி என்னைப் பாதி வழியிலேயே சந்தித்துவிட்டார்.

 

அப்போது நான் பெரியோர்க்கு எழுதுபவளாக அறிமுகம் ஆகியிருக்கவில்லை. எனினும் பல சிறுவர் இதழ்களில் என் புகைப்படத்தை அவர் பார்த்திருந்திருக்க வேண்டும் என்பது என்னை அவர் அடையாளம் கண்டுகொண்டதில் புரிந்தது. எனவே, அவரும் குழ்ந்தைகளுக்காக எழுதுபவராக இருக்கலாம் என்று நினைத்தேன்.

                என்னைக் கும்பிட்ட அவரை நானும் பதிலுக்குக் கும்பிட்டபின், எதுவும் பேசத் தோன்றாமல் மவுனமாக நின்றேன். சில நொடிகளுக்குப் பிறகு, “ நீங்கள்….” என்று நான் தயங்கி இழுத்ததும், “நான் சினிமாவில் பாட்டு எழுத மெட்ராசுக்கு வந்து கொஞ்ச நாளாச்சு. கூடிய சீக்கிரம் நிறைய சந்தர்ப்பங்கள் வரும்னு தோண்றது. என் பேர் வாலி.” என்று சன்னமான குரலில் தெரிவித்தார்.

 

“அப்படியா?” எனும் ஒற்றைச் சொல்லை மட்டும் உதிர்த்துவிட்டு மேற்கொண்டு என்ன பேசுவது என்று தெரியாமல் மவுனமாக நின்றேன். எனக்குத் தெரிந்தவர்கள் யாரேனும் என்னைக் காண அலுவலகத்துக்கு வந்தால் அவரை நான் எங்கள் காண்டீனுக்கு அழைத்துச் சென்று காப்பி உபசாரம் செய்வது வழக்கம். அல்லது, எங்கள் பிரிவுக்கு அழைத்துச் சென்று அங்கே காப்பி வரவழைத்துக் கொடுப்பதுண்டு. இரண்டில் எதையும் செய்யாமல் நான் அவரைப் பார்த்தபடி பேசாமல் நின்றேன். பாவம்! அவருக்கு ’இந்தப் பெண்ணோடு மேற்கொண்டு என்ன பேசுவது’ என்கிற தயக்கமோ அல்லது குழப்பமோ ஏற்பட்டிருந்திருக்கவேண்டும். அவரும் ஒன்றும் பேசாமல் என்னைப் பார்த்தபடியே சில நொடிகள் போல் நின்றார்.  நான் மேல்படியிலும், அவர் அதற்கு அடுத்த மூன்றாம் கீழ்ப்படியிலுமாகச சில விநாடிகள் அமைதியாக நின்றோம்.

 

பின்னர், “சும்மா உங்களைத் தெரிஞ்சுக்கலாம்னு வந்தேன். வேற ஒண்ணும் இல்லே.  அப்ப நான் வரட்டுமா?” என்றார், கை கூப்பி.

 

”சரி. போய்ட்டு வாங்க. ரொம்ப சந்தோஷம்!” என்று நானும் கைகூப்பினேன்.

 

அவர் விரைவாய்ப் படிகளில் இறங்கிப் போய் வெளியேறினார். தலை உயர்த்தி என்னைப் பார்த்த வரவேற்பாளர் அனசூயா, இறங்கி வரச் சொல்லிச் சைகை காட்டினாள். நான் போய் அவள் எதிரில் உட்கார்ந்தேன். அப்போது அங்கே என்னையும் அவளையும் தவிர வேறு யாரும் இல்லை.

 

“யாருடி அந்தாளு? …. தெரிஞ்சுக்கணும்னு எனக்கொண்ணும் க்யூரியாசிட்டி இல்லே. ஆனா உன்னைத் தேடி வந்த மனுஷனை இப்படியா ஒருத்தி மாடிப்படியிலேயே நின்னு பேசிட்டு அனுப்புவே? ஒருக்கா, அவாய்ட் பண்ண வேண்டிய ஆளோன்றதுக்காகக் கேக்கறேன். இன்னொரு வாட்டி வந்தா நீ லீவுன்னு சொல்லித் திருப்பி யனுப்பிடலாம்ல? அதுக்குத்தான் கேக்கறேன்.”  என்று விளக்கமாய் வினவினாள் அனசூயா.

 

”ஒரு விதத்துல அப்படியே வெச்சுக்கலாம். சினிமாவுக்குப் பாட்டு எழுதுறதுக்காக மெட்ராசுக்கு வந்திருக்காராம். சினிமாக்காரங்க நட்பெல்லாம் நமக்கெதுக்கு, அனசூயா?” என்றேன்.

 

“தவிர அவர் இளைஞரா வேற இருக்கார். எதுக்கு வம்புன்னு நினைக்கிறே. அதானே?”

 

“அதுவும் ஒரு காரணந்தான்னு வெச்சுக்கயேன்.”

 

“என்ன இருந்தாலும், தேடி வந்த ஒருத்தரை நீ இப்படி மாடிப்படியிலேயே நிக்கவெச்சுப் பேசி அனுப்பினது பண்பாடு இல்லே.  இங்கேயாவது கூட்டிட்டு வந்திருக்கலாம்.  நான் காப்பி வரவழைச்சிருப்பேன். அந்தாளு உன்னைப் பத்தி என்ன நினைப்பாரு?”

 

: “நீ சொல்றது சரிதான்.  ஆனா என்ன வேணும்னாலும்                                                                                  நினைச்சுக்கட்டும  அவரு சினிமான்னு சொன்னதும் கொஞ்சம் நெருடலா ஆயிடிச்சு.” என்றேன். உண்மையும் அதுதான்.

 

அதன் பிறகு சில நாள் கழித்து அவரது பெயர் சினிமாத் துறையில் அடிபடலாயிற்று. ஆனால் நான் எனது எண்ணத்தை மாற்றிக்கொள்ளவில்லை. சரியோ, தவறோ, சினிமாக்காரர்களைப் பற்றி ஓர் அவநம்பிக்கை உணர்வு மக்கள் மனங்களில் இன்றளவும் இருந்துதானே வருகிறது? 52 ஆண்டுகளுக்கு முன்னால், நான் மட்டும் – அதிலும் இளம் பெண்ணாக இருந்த நிலையில் – வேறு எப்படி நினைத்திருந்திருக்க முடியும்?

 

மிகக் குறுகிய காலத்துள், கவியரசு கண்ணதாசனுக்கு இணையானவர்  எனும் பேரும் புகழும்  அவரைத் தேடி வரலாயின. அதற்குரிய முழுத் தகுதியும் கவித்திறனும்   அவருக்கு இருந்தன.  “சில பாடல்களைக் கேட்கும் போது, அவை நான  எழுதியவையா, இல்லாவிட்டால் வாலி எழுதியவையா என்று எனக்கே சந்தேகம் வந்துவிடும” என்று கண்ணதாசனே ஒரு முறை கூறி வியந்துள்ளார். அந்த  அளவுக்கு வாலியின் பாடல்களில் கண்ணதாசனுடைய தத்துவார்த்தமும் யதார்த்தமும் பின்னிப் பிணைந்திருந்தன. இது யாவர்க்கும் தெரிந்த ஒன்றே.

 

‘கால் போன போக்கிலே மனம் போகலாமா? மனம் போன போக்கிலே கால் போகலாமா?’ போன்ற பாடல்களை   இயற்றி அவர் சாகா வரம் பெற்ற கவிஞரென்பதை மெய்ப்பித்தார்.

 

ஒருவர் மரித்த பின், அவரைப் பற்றிய நல்லவற்றைப் பற்றி மட்டுமே நினைவுகூர்தல் வேண்டும்   என்று சொல்லுவோருண்டு. பலரும்   அதை ஒரு பண்பான மரபாகவே கடைப்பிடித்தும் வருகிறார்கள்.  இந்தப் பண்பாடு சார்ந்த மரபு சாமனியர்களூக்கு மட்டுமே பொருந்து மென்பது நமது துணிபு. சமுதாயத்தைக் கெடுக்கிற வண்ணமோ, மனிதர்க்குத் தீங்கு செய்து அவர்களைப் பண்பற்ற வழியில் செலுத்துகிற வண்ணமோ தம் செயல்களை அமைத்துக்கொள்ளும் மனிதர்களை – அதிலும், அவர்கள் லட்சக்கணக்கான மக்களை ஈர்க்கும் துறையில் இருப்பவர்கள்  எனில் – இந்தப் பண்பாட்டின் அடிப்படையில் மட்டும் விமர்சிப்பது நியாயமாக இருக்க முடியாது. எனினும் இப்போதைக்கு நண்பர் வாலி அவர்களை விட்டுவைக்க உத்தேசம். அவர் காலமாகி மிகச் சில் நாள்களே ஆகின்றன என்பது அதற்கான காரணமன்று. நேற்று மரணித்தவர் என்றாலும் நியாயம் நியாயமே. அதில் தள்ளுபடி எதுவும் இருத்தலாகாது.  ஆனால் பெரிய கட்டுரையாக எழுதுகிற அளவுக்கு அதில் விஷயம் இருக்காது என்பதால் மட்டுமின்றி, அந்தத் தலைப்பின் தொடர்பாக வேறு பலரைப் பற்றியும் எழுதும்போது அவருக்கும் எனக்கும் ஒரு வார இதழில் நடந்த “சன்டை” பற்றிக் குறிப்பிடலாமே என்று தோன்றுவது ஒரு கூடுதல் காரணமாகும்.

 

பின்னர் ஒரு கட்டுரையில் குறிப்பிடப்

போகும் இந்தச் “சண்டை’ நடந்த பின் சில் நாள்கள் கழித்து ஆனந்த விகடனில் வாலி அவர்கள் “பாண்டவர் பூமி” என்கிற தலைப்பில் மகா பாரதக் காவியத்தைப் புதுக் கவிதைப் பாணியில் படைக்கத் தொடங்கினார். மிக அற்புதமான படைப்பு அது.

 

வாக்கியங்களை உடைத்து வரிசைப் படுத்தி எழுதிவிட்டு அதைப் புதுக்கவிதை என்று சொல்லுவது நமக்கு உடன்பாடானதன்று. (அல்லது ரசிக்கத் தெரியாத ஞான சூனியமோ!?) அவற்றை உடைக்காமல் வரிசையாகப் படிக்கும்போது அவை வெறும் உரைநடை வாக்கியங்களாகத்தான் (எனக்கு!) ஒலிக்கும் என்பதால் எனக்கு இப்படி ஒரு கருத்து.  ஆனால் எல்லாப் புதுக் கவிதைகளையும் இப்படிக் குறை கூறிவிட முடியாது என்பதும் தெரியும்.

 

வாலி அவர்களின் புத்க்கவிதைகள் ரசித்தலுக்கு உகந்த – ஓசை நயம் உள்ள ­ கவிதைகள் என்பது நமது கருத்து. வாலியுடன் சண்டை போட்டிருந்தாலும், நல்லவற்றைப் பாராட்டுவதற்கும் தயங்கக் கூடாது என்பதால்  “புதுக்கவிதை” என்பதாய் நான் நினைத்த ஒன்றை எழுதி அவருக்கு அஞ்சலில் அனுப்பிவைத்தேன்.

 

அது பின் வருமாறு:

 

அது வில்லி பாரதம்! இது வாலி பாரதம்!

 

எதுகை, மோனை இன்னபிற நயங்களில் ஏதுமற்றே

எழுதப் படுகின்ற “கவிதை” களில்

எதுவாயினும் ஏனோ இவளுக்கது

பழுதுடைய ஒன்றே! ஓசை நயம் சிறிதுமற்றே

புதுக்கவிதை பேராலே புனையப்படுபவற்றை

ஒதுக்கிடுவாள் என்றும் இவள் ”புரிதல்”  அற்றே.

 

தலைக்கன மிவளுக்கென்று ஒருபோதும்

தவறாய்க் கணிக்க வேண்டா: – ஏனெனில் உள்ளபடி

இலக்கணம் ஏதொன்றும் இவளறியாள்,­ சிரிக்காதீர்!

இருந்தாலும் சொல்லத் துணிந்தாளிவள் – வாலி

இலக்கினை எட்டிப் பிடித்துவிட்டார்  “பாண்டவர் பூமி” மூலம் !

கலக்குகிறாரிவர் சொற்சிலம்பாடி – அது போதும்!

இதற்கு முன்னர்ச் செயவிலை எவருமேதான் எப்போதும்

இத்தகு செயற்கரிய சொற்சாலம்!

வித்தகரின் சொற்சோலைக்கேது வேலி?

 

இலக்கணம் மீறிடினும் இவர்தம் புதுக்கவிதை ஜோராக(க்)

குலுக்குநடை போட்டுக் கொஞ்சுவதால்,

அலுக்கவில்லை இம்மியளவும் – மாறாக

இனிக்கிறது இதன் மென்மை – அத்துடன் மேன்மை

பலுக்கவில்லை பொய்யேதும் – இது முழு உண்மை!

 

நல்லதை நாடிப் புகழுவதும்

அல்லதைச் சாடி இகழுவதும் – அகச்சான்று

உள்ளோரின் சோலி!

அதனால்தான்

சொல்லவந்தாளிவள் இன்று –

”சொல்லாட்டக்காரன் கவிஞன் வாலி!

இல்லை இதில் இமைளவும் ஐயம்” என்று!

 

காலியாகிவிடும் கட்டாயம் தமிழகராதி

காவியத்தை அவன் முடிக்கின்ற தேதி!

போலியாய்ப் புகழவில்லை இது மெய்யான சேதி!

வாலிதான் இத்தினமே

கவிஞருள் ரத்தினமே! ­இவள்

நா வியந்து நவின்ற யாவும்

சாவிழந்த சத்தியமே!

               

அதைப் படித்த வாலி அவர்கள் உடனே என்னோடு தொலைபேசினார் – நான் சற்றும் எதிர்பாராதபடி.

 

“உங்க புதுக்கவிதை கிடைச்சுது. புதுக்கவிதை எழுத வராதுன்னு சொல்லிண்டே, ஒரு நல்ல புதுக்கவிதையை எழுதி அனுப்பியிருக்கேளே! உங்ளுக்குப் புதுக்கவிதை நன்னாவே வருது. ..” – அவரை மேற்கொன்டு பேசவிடாமல் நான் சிரிக்கத் தொடங்கினேன்.

 

“என்ன சிரிக்கிறேள்? இதோ, பக்கத்துல் இருக்கிற என் மனைவிகிட்ட குடுக்கறேன். அதைப் படிச்சதும் நான் என்ன சொன்னேன்கிறதை அவங்க சொல்லுவாங்க!”  என்று கூறிவிட்டு   ஒலிவாங்கியை அவர் கையில் கொடுத்துவிட்டார்.

 

“ஆமாங்க! பாண்டவர்ங்கிற சொல்லுக்கு ஏத்தபடி ஆண்டவர் அது இதுன்னெல்லாம் பண்டைய பாணியில எழுதாம…. அந்தத் தாளை இப்ப்டிக் குடுங்க, சொல்றேன்…. ம்ம்ம்… ‘காலியாகிவிடும் கட்டாயம் தமிழகராதி, அவன் காவியத்தை முடிக்கின்ற தேதி’ அப்படின்னு நீங்க எழுதியிருந்ததை சந்தோஷமாத் திருப்பித் திருப்பிப் படிச்சார்! உங்க கவிதையில இருக்கிற கடே.சி நாலு வரிகளை நானும் ரொம்ப ரசிச்சேன். உங்களுக்குப் புதுக்கவிதை நல்லா வருதுன்னு உடனேயே சொன்னார்!” என்றார் ரமண திலகம்.

 

பிறகு வாலியிடம் ஒலிவாங்கியைத் திருப்பிக் கொடுத்தார். “நான் பொய் சொல்லல்லேனு தெரிஞ்சுண்டேளா?’  என்று சிரித்த வாலி, “ஒரு நாள் வீட்டுக்கு வாங்கோ!” என்றார். சரி என்றேன். ஆனால் போகவில்லை.

என் அலுவலகத்துக்கு வந்து தாம் என்னைப் பார்த்தது பற்றி அவரும் நினைவு கூரவில்லை;. நானும் அதுபற்றி அவருக்கு ஞாபகப்படுத்தவில்லை.

 

அவர் காலமான அன்று இவையும் அவரோடு நான் போட்ட சண்டையும் நினைவுக்கு வந்தன.

jothigirija@live.com

 

                 

Series Navigationநேர்முகத் தேர்வுபிரேதத்தை அலங்கரிப்பவள்
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

9 Comments

  1. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    வாலிக்கு எழுதிய புதுக்கவிதை
    காவியக் கவிதை,
    காதல் கவிதை,
    மோதல் கவிதை இல்லை !
    நளினக் கவிதை.

    சி. ஜெயபாரதன்

    1. Avatar
      ஜோதிர்லதா கிரிஜா says:

      மிக்க நன்றி – அமரர் வாலி அவர்களுக்குப் பிறகு எனது அவநம்பிக்கையை நீக்கியமைக்கு.
      அன்புடன் ஜோ. கிரிஜா

  2. Avatar
    ஷாலி says:

    //‘கால் போன போக்கிலே மனம் போகலாமா? மனம் போன போக்கிலே கால் போகலாமா?’ போன்ற பாடல்களை இயற்றி அவர் சாகா வரம் பெற்ற கவிஞரென்பதை மெய்ப்பித்தார்.//
    என்று கட்டுரையாசிரியை குறிப்பிடுகிறார்.
    வாலியின் சரியான வரியைப் பார்ப்போம்.

    கண் போன போக்கிலே கால் போகலாமா
    கால் போன போக்கிலே மனம் போகலாமா
    மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
    மனிதன் போன பாதையை மறந்து போகலாமா.

    நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்
    நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்
    ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்
    உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்.

    பொய்யான சிலபேர்க்கு புது நாகரிகம்
    புரியாத பலபேர்க்கு இது நாகரிகம்
    முறையாக வாழ்வோர்க்கு எது நாகரிகம்
    முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரிகம்.

    திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
    வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்
    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும்
    இவர் போல யாரென்று ஊர் சொல்லவேண்டும்.

    பொதுவாக திரைப்பாடலாசிரியர்கள் வார்த்தை வியாபாரிகள் என்றுதான் கருதப்படுகிறார்கள்.இயக்குனர் சொல்லும் பாத்திரத்திற்கேற்றாற்போல் பாலையும் ஊற்றுவார்கள்.கள்ளையும் ஊற்றி விற்பனை செய்வார்கள்.
    மற்றபடி கவிஞர்கள் சொல்லுக்கும் செயலுக்கும் எப்போதும் சம்பந்தம் இருப்பதில்லை.பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமான்கள்.இவர்களது ஆக்கங்களை ரசிக்கலாம் அதற்குமேல் ஒன்றுமில்லை.

    1. Avatar
      ஜோதிர்லதா கிரிஜா says:

      அன்புக்குரிய ஷாலி
      மிக்க நன்றி – என்னைத் திருத்தியதற்கும், முழுப்பாடலையும் எழுதித் தெரிவித்ததற்ம்.
      அன்புடன் ஜோதிர்லதா கிரிஜா

  3. Avatar
    ஜோதிர்லதா கிரிஜா says:

    மிக்க நன்றி கணபதி ராமன் அவர்களே!
    அன்புடன் ஜோதிர்லதா கிரிஜா

    1. Avatar
      ஜோதிர்லதா கிரிஜா says:

      மிக்க நன்றி கணபதி ராமன் அவர்களே.
      ஜோதிர்லதா கிரிஜா

  4. Avatar
    Mahakavi says:

    Ms. Jothilatha Girija:
    You have a poetic brain. Nourish it further. As for VAli (Rangarajan) he was one of those geniuses (like iLaiyarAja, BharathirAja, and others) who grew up poor looking for the next meal. Moviedom gave them shelter and their creative talents flourished. That aspect needs to be kept in mind. Yes he wrote kavidhaigal for the movieland and catered to their special interests. But I want to point out he also wrote several carnatic music compositions which were tuned by a musician-friend and sung at his concerts. They were recently (?) published as a book with proper swara notations. My point is VAli was a multi-talented man. Hats off to him.

Leave a Reply to ஜோதிர்லதா கிரிஜா Cancel reply

Your email address will not be published. Required fields are marked *