நீங்காத நினைவுகள் – 18

This entry is part 8 of 33 in the series 6 அக்டோபர் 2013

   கொஞ்ச நாள்களுக்கு முன்னர், நேரில் அறிமுகம் ஆகாத, ஆனால் தொலைப் பேசியில் மட்டும் பேசும் வழக்கமுள்ள, ஓர் அன்பர் என்னிடம் இவ்வாறு கூறினார்:  ‘அம்மா! என் அண்ணனுக்கு ஒரு பேரக் குழந்தை சென்ற வாரம் பிறந்தது. ஆனால், பிறந்த இரண்டே நாள்களுள் அது இறந்துவிட்டது.  முதல் பேரக்குழந்தை என்பதால் எங்கள் வீட்டில் எல்லாரும் ஒரே சோகத்தில் இருக்கிறோம்.’

    ’அய்யோ. குழந்தையுடைய அம்மாவுக்குத்தான் எல்லாரைக் காட்டிலும் அதிக வேதனையாக இருக்கும்,’ என்றேன்.

‘ஆமாம். எங்கள் அண்ணனுக்கு ரொம்பவே வருத்தமும் ஏமாற்றமும். முதல் பேரக் குழந்தை என்பதோடு அது ஆண் குழந்தையாகவும் இருந்து இறந்துபோனதில் அதிக வருத்தம் அவருக்கு!’ என்று அவர் தொடர்ந்ததும் என்னை யாரோ அடித்துவிட்டார்ப்போன்று இருந்தது. என்னுள் வேதனை பெருகியது. ‘பிறந்து செத்துப் போனது பெண் குழந்தையாக இருந்தால் பரவாயில்லையா! அதை மட்டும் ஒரு தாய் கிட்டத்தட்டப் பத்து மாதங்கள் சுமப்பதில்லையா? ஓரிரு மாதங்களுக்குள் பெற்று விடுகிறாளாமா? ஆண் குழந்தையை மட்டும்தான் வலிக்க, வலிக்கப் பெறுகிறாளாமா? பெண்குழந்தை தாய்க்கு எந்த வலியும் இன்றிப் பிறந்துவிடுகிறதாமா!  ஆண் குழந்தையைப் பெறும் போது மட்டுமே ஒரு தாய் இரத்தம் இழக்கிறாளாமா! இதென்ன பேச்சு’ – இத்தனை கேள்விகளும் கணப் பொழுதுக்குள் என் மனத்தில் எழுந்தன.

ஆனால் அவரைப் புண்படுத்த மனமின்றி மவுனமாக இருந்தேன்.  ஓரவஞ்சனைத்தனமான இந்தப் பேச்சு பல ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சி யொன்றை நினைவுக்குக் கொண்டுவந்தது.

என் தங்கையின் பேறுகால உதவிக்காக நான் விடுப்பில் இருந்த சமயம். குழந்தை பிறந்ததும், அலுவலகத்துக்குச் சென்று என் பிரிவைச் சேர்ந்த நண்பர்களுக்கெல்லாம் சாக்கலேட் விநியோகம் செய்தேன். மகிழ்ச்சி தெரிவிதத பின், எல்லாரும் ஆளுக்கு ஒரு சாக்கலேட் எடுத்துக்கொண்டார்கள்.

ஒரு நண்பர் மட்டும், ‘பிறந்தது ஆண் குழந்தைதானே?” என்று வினவினார்.

’ஆமாம். அதுதான் முதலிலேயே சொன்னேனே’ என்று சொன்னதும், ‘அப்படியானால் நான் இரண்டு சாக்கலேட் எடுத்துக்கொள்ளுவேன்!’ என்றார்.

‘எத்தனை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால், ஏன் என்று சொல்லுவீர்களா?’

‘ஆண் குழந்தை ஒசத்தியாச்சே! அதனால்தான்,’ என்றவாறு அவர் இரண்டு சாக்கலேட்டுகளை எடுத்துக்கொண்டார்.  நான் சிரித்துவிட்டுப் பேசாதிருந்தேன்.

அப்போது அவருக்குத் திருமணம் ஆகியிருந்த புதிது. சில மாதங்கள் கழித்து அவருக்குக் குழந்தை பிறந்தது. அவரும் எங்கள் பிரிவில் இருந்தவர்களுக்குச் சாக்கலேட் விநியோகம் செய்தார்.

‘என்ன குழந்தை?’ என்று கேட்டேன்.

‘அதுதான் சொன்னேனே! பெண் குழந்தை!’

‘அப்படியானால் நான் இரண்டு சாக்கலேட்டுகள் எடுத்துக் கொள்ளுவேன். என் தங்கைக்குக் குழந்தை பிறந்த போது ‘ஆண்குழந்தை ஒசத்தி’ என்று சொல்லி இரண்டு சாக்கலேட் எடுத்துக்கொண்டீர்களே, ஞாபகம் இருக்கிறதா? உங்களுக்கு ஆண் குழந்தை ஒசத்தி. அது உங்கள் அபிப்பிராயம். பெண் குழந்தை ஒசத்தி என்பது என்னுடைய அபிப்பிராயம்!’ என்று நான் சொன்னதும் அவருக்கு முகம் விழுந்து போயிற்று.

கடவுளின் படைப்பில் உயர்வு-தாழ்வு கற்பித்தல்  ஆகுமா? ஆகுமெனில், பெண்ணையன்றோ ‘ஒசத்தி’ என்று சொல்லவேண்டும்? பெற்றோர் மீது அன்பு செலுத்துதல், குழந்தைகளைப் பேணுதல், கணவனிடம் விசுவாசமாக இருத்தல் போன்றவற்றில் பெண்களே யன்றோ இன்றளவும் ஆண்களைக் காட்டிலும் உயர்ந்தவர்களாக இருந்து வந்துள்ளார்கள்! இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. மனம் சம்பந்தப்பட்ட இது போன்ற விஷயங்களில் மட்டுமல்லாது, அதிகவலிமை படைத்தவர்கள் (the stronger sex) என்று தங்களைப் பற்றிப் பெருமை பேசுகிற ஆண்களை விடவும்  பெண்களே உண்மையில் வலிமை மிக்கவர்கள் என்பது மருத்துவக் கூற்று.

பல ஆண்டுகளுக்கு முன்னால், இரண்டு ஆண் மருத்துவர்களால் எழுதப்பெற்ற Women are stronger than men (ஆண்களைக் காட்டிலும் பெண்கள் அதிக வலிமைகொண்டவர்கள்) எனும் கட்டுரையை ரீடர்ஸ் டைஜெஸ்டில் படிக்க வாய்த்தது.  நான் பத்திரப்படுத்தி வைத்திருந்த அக்கட்டுரையின் நறுக்குத் தொலைந்து போய்விட்டது. அதனால் அது வெளிவந்த தேதியைச் சொல்லமுடியவில்லை.  மனவலிமை, நோய் எதிர்ப்புத்திறன் ஆகிய இரண்டிலும் பெண்ணே ஆணைவிடவும் மேலானவள் என்கிறார்கள். ஆனால்,  முரட்டுத்தசை வலிமையில் (brutal muscular strength எனும் சொற்களை அவர்கள் பயன்படுத்தியிருந்தார்கள்.) ஆணே பெண்ணைக்காட்டிலும் அதிகத் திறன் படைத்தவன் என்றும் கூறியிருந்தார்கள்.  இந்த ஒன்றால்தான் ஆண் பெண்ணை அடிமைப்படுத்தினான் என்கிறார்கள்.

‘இந்தியாவே! விழித்தெழு!’ (Wake up, India!) எனும் புத்தகத்தை என்னிடம் கொடுத்துப் படிக்கச் சொன்ன என் அப்பா (திரு சுப்பிரமணியம்) சொன்னார் – பெண்ணே ஆணைக்காட்டிலும் அறிவிலும், கல்விகற்கும் திறனிலும் அதிகம் சிறந்தவள் என்று. அவர் படிக்கக் கொடுத்த அந்நூலை எழுதியவர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டு கணிசமாய்ப் பங்காற்றிய ஐரிஷ் பெண்மணியான அன்னீ பெசன்ட் அம்மையார் ஆவார். என் அப்பா சுட்டிக்காட்டிப் படிக்கச்சொன்ன பகுதியில் அன்னீ பெசன்ட், “பெண் கல்வி என்பது இந்தியாவுக்குப் புதிது அன்று.  வேதவாகினிகள் என்று அழைக்கப்பெற்ற, வேதகாலத்துப் பெண்மணிகளான, மைத்ரேயி, கார்க்கி போன்றவர்கள் தர்க்க சாஸ்திரத்தில் ஆண் முனிவர்களைத் தோற்கடித்ததன் விளைவாகவே, பெண்கள் இனிக் கல்வியறிவு பெறக்கூடாது என்பதாய் அவர்கள் சட்ட்மியற்றினார்கள்’ என்று கூறியுள்ளார். (கருத்து இதுதான். புத்தகம் கிடைக்கவில்லை யாதலால், சொல்லுக்குச் சொல் மொழி பெயர்க்க முடியவில்லை.)

இந்தியாவைப் பொறுத்த வரையில், அண்மைக்காலப் பள்ளி / கல்லூரித் தேர்வு முடிவுகளும் இதனை மெய்ப்பித்து வருகின்றன. நரம்பியல் வல்லுநரான காலஞ்சென்ற டாக்டர் பி. ராமமூர்த்தி அவர்கள் இக்கூற்றை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். அவர் கூறுகிறார்: ‘பெண்ணின் மூளையின் எடை ஆணின் மூளையின் எடையைக் காட்டிலும் சில கிராம்கள் குறைவுதான்.  ஆனால் இதை மட்டும் வைத்துப் பெண்ணின் மூளையின் திறனைக் குறைத்து மதிப்பிடக் கூடாது’

பரம்பரை, பரம்பரையாக ஒன்றைச் செய்யும்போது, அதைச் செய்கிறவர்களின் வழித்தோன்றல்கள் அந்தச் செயலில் (அல்லது தொழிலில்) தங்கள் மூதாதையரை விடவும் மேலும் அதிகத் திறமை கொண்டவரகளாகப் பிறப்பிலேயே திகழ்வார்கள் என்று கூறுகிறது விஞ்ஞானம். ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டறிந்த உண்மை இது என்று சொல்லப்படுகிறது. அப்படி ஒரு பரம்பரைத் தன்மை இல்லாத நிலையிலும் கூட – அதாவது மிகச் சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் கல்வி கற்கத்தொடங்கியுள்ள நிலையிலும் – பரம்பரை பரம்பரையாய்க் கல்விகற்று வந்துள்ள ஆண்களைப் பெண்கள் விஞ்சுகிறார்கள் எனும் போது, அவர்களது அறிவுக்கூர்மை அயர வைக்கிற தல்லவா? ஆனால் நடப்பதென்ன? ஆணே உயர்ந்தவன் என்கிற மமதை ஆண்களில் பெரும்பாலோரின் மனங்களை விட்டுப் போகவே இல்லை. அதன் விளைவுதான் ஆண் குழந்தை பிறந்தால் குதூகலிப்பதும். பெண் குழந்தை பிறந்தால் அங்கலாய்ப்பதும். இந்த மனப்பான்மை சிறுகச் சிறுகக் குறைந்துதான் வருகிறது. இது காலப்போக்கில் அறவே மறைந்து விடும் என்று நம்புவோமாக.

சென்னை அரசு மகப்பேறு விடுதிகளில் கூட, ஆண்குழந்தை பிறந்தால், அதன் பெற்றோர்கள் எவ்வளவு ஏழைகளானாலும் அவர்களிடமிருந்து ரூ.500 கறந்துவிடுகிறர்களாம் மருத்துவ விடுதி ஊழியர்கள்.  பெண் குழந்தையானால் ரூ.300 கொடுத்தால் போதுமாம்!

ஒரு நாள், எங்கள் அலுவலகத்தில், நான் சற்றே ஓய்வாக இருந்த போது, நடுத்தர வயதைக் கடந்த ஒரு தலைமை எழுத்தர் எனது அறைக்கு வந்து என்னெதிரில் சட்டமாக அமர்ந்து கொண்டார். தொண்டையைச் செருமிய பின், “உங்கள் ஆஃபீசர் டூர் போயிருக்கிறார் என்பதால் நீங்கள் அவ்வளவு பிஸியாக இருக்க மாட்டீர்கள் என்று நினைத்து வந்தேன். உங்களோடு கொஞ்சம் பேச வேண்டும். ஒன்றும் தொந்தர வில்லையே?” என்று பீடிகை போட்டார்.

அவர் ஓர் அறுவைத் திலகம் என்பது தெரியும், எனக்கும் உடனே முடிக்க வேண்டிய அவசர வேலை இல்லாவிட்டாலும், நான் ஒன்றும் வேலையே இல்லாமல் முழு ஓய்வுடன் இல்லை.

‘அவசர வேலை இல்லைதான். ஆனால் என் ஆபீசர் வேலைகள் கொடுத்துவிட்டுத்தான் டூர் போயிருக்கிறார், இருந்தாலும் பரவாயில்லை. சொல்லுங்கள்.’

‘பெண்ணுரிமை பற்றியெல்லாம் நிறையவே எழுதுகிறீர்கள்.  பெண்களின் துயரங்கள் பற்றியும் எழுதுகிறீர்கள். ஆனால் நீங்கள் சொல்லுவது எல்லாமே சரி என்று சொல்ல முடியவில்லை. கோபித்துக்கொள்ளக் கூடாது.’

‘பரவாயில்லை. சொல்லுங்கள்.’

‘பல பெண்கள் இன்று அரசு அலுவலகங்களிலும், தனியாரின் கம்பெனிகளிலும், தொழிற்சாலைகளிலும் வேலை செய்கிறார்கள்.  இதன் விளைவாக இங்கெல்லாம் டிசிப்ளின் கெட்டுப் போகிறது….’

‘எப்படி?’

‘வேலையில் முனைப்பாக ஆழ முடியாமல் ஆண்கள் டிஸ்டர்ப் ஆகிறார்கள். அவர்களின் கவனம் சிதறுகிறது. நம் ஆஃபீசிலேயே எத்தனை லவ் மேரேஜஸ் நடந்திருக்கின்றன, தெரியுமா?’

    ’அதில் நமக்கென்ன ஆட்சேபணை? அது அவர்களின் சொந்த விஷயம்!’

    ’ஆஃபீஸ் டைமில் ஆஃபீஸ் வேலைகளை யெல்லாம் பெண்டிங்கில் வைத்துவிட்டு, இவர்கள் லவ் லெட்டர்ஸ் அல்லவா எழுதி ஆஃபீஸ் ஃபைல்களில் வைத்து எக்ஸ்சேன்ஜ் பண்ணிக்கொள்ளுகிறார்கள்!”

    ’நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?’

 

    பொங்கிவந்த சிரிப்பை யடக்கிக்கொண்டு சொன்னேன்: “நீங்கள் சொல்லுவது ரொம்பவே சரி.  ஆண்களும் பெண்கலும் இணைந்து வேலை செய்யும்போது, டிசிப்ளின் கெட்டுத்தான் போகிறது. இதைத் தடுக்க ஒரு வழி இருக்கிறது. இனிமேல் ஒவ்வோர் ஆண் ஊழியரும் ரிடைர் ஆனதும் அவரது இடத்தில் ஒரு பெண்ணையே வேலைக்கு எடுப்பது என்று ரூல் கொண்டுவரலாம். இதன் விளைவாக அனைத்து ஆண்களும் ரிடைர் ஆனதும் அவர்களின் இடங்களில் பெண்கள் வேலைக்கு வந்து விடுவார்கள். பெண்கள் ரிடைர் ஆக்னதும் அவர்களின் இடங்களிலும் பெண்களையே ரெக்ரூட் பண்ணலாம். காலப்போக்கில், ஆண் ஊழியர்களே இருக்க மாட்டார்கள். எல்லாருமே பெண்கள் என்று ஆகிவிடும்போது, ஆண்களின் கவனம் சிதறுவது, ஒழுங்கும் கட்டுப்பாடும் குலைந்து இண்டிசிப்ளீன் ஏற்படுவது இதெல்லாம் போய்விடும்.  நல்ல ஐடியா தானே இது?’ – இப்படி நான் சொன்னதும், அந்தத் தலைமை எழுத்தர் – என்னை உதைக்க முடியாமல் – தாம் உட்கார்ந்திருந்த நாற்காலியைப் பின்புறமாக உதைத்துக்கொண்டு எழுந்து என்னை வெறுப்பாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியேறினார்.

    அவர் தலை மறைந்ததும்,    எனது அறையில் நான் ஒற்றை ஆளாய் இருந்ததையும் மறந்து வய்விட்டுப் பெரிதாய்ச் சிரித்துவிட்டேன்.

………

………

Series Navigationதமிழ் விக்கியூடகங்களில் பெண்களின் பங்களிப்புதிண்ணையின் இலக்கியத் தடம் -3
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

5 Comments

  1. Avatar
    IIM Ganapathi Raman says:

    // முரட்டுத்தசை வலிமையில் (brutal muscular strength எனும் சொற்களை அவர்கள் பயன்படுத்தியிருந்தார்கள்.) ஆணே பெண்ணைக்காட்டிலும் அதிகத் திறன் படைத்தவன் என்றும் கூறியிருந்தார்கள். இந்த ஒன்றால்தான் ஆண் பெண்ணை அடிமைப்படுத்தினான் என்கிறார்கள்.//

    முழுக்கச் சரியன்று. கருவுற்ற நாளிலிருந்து குழந்தை பிறந்த பல நாட்களுக்கு ஒரு பெண் தனக்குத்தானே உதவி செய்து கொள்ள முடியாது. பிறர்தான் அவளைப் பேணவேண்டும். அப்படிக்கவனிக்கப்படாத பெண் – பல அனாதை ஏழைப்பெண்களுக்கு இந்நிலை வரும் – எங்கேயோ பெற்றுப்போட்டுவிட்டு தாயும் சேயும் மரணமடையும் காட்சிகள் உண்மையிலும் இலக்கியத்திலும் வருவன.

    தாய்மையடைதல் இயற்மை நியதி. அத்தாய்மையடைந்த காலங்களில் அவளின் கையறு நிலை அந்நியதியோடு ஒட்டியது.

    உலகம் தோன்றியதிலிருந்து இதற்கு விதிவிலக்கை எவரும் கண்டிபிடிக்கவில்லை. இப்போது கண்டுபிடித்தாலும், கோடிக்கணக்கான ஆண்டுகளாக மனிதப்பெண்ணுக்கு நேரும் இச்செயலினால், மனித ஆண் அவளை தனக்கடிமையாக்க முடிந்ததே தவிர வெறும் மஸ்குலார் வலிமையால் மட்டுமன்று.

    பெண்ணை ஆண் தனக்கு நிகராக வைத்துப்பேண வேண்டுமென்பது வளர்ச்சியடந்த நாகரிகம் மட்டுமேயன்று. இயற்கையில் வாய்த்தவொன்றன்று. மாரல்ஸ் ஆர் நாட் எம்பெடட் இன் மேன். தே ஆர் கல்டிவேட்டட்.

  2. Avatar
    IIM Ganapathi Raman says:

    /இது காலப்போக்கில் அறவே மறைந்து விடும் என்று நம்புவோமாக.//

    தன்னாலே மறையாது. காலத்தில் செயல்கள் தன்னால் மறைவன என்பது ஒரு கற்பனைக் காதல் மட்டுமேயன்றி எதார்த்தமாகாது. மனிதர்கள் முயற்சியில்லாமல் ஒன்றும் நடவாது

    இதைப்புரிவதற்கு ஜோதிர்லதா கிரிஜா அவர் பூர்விக மண்ணிற்கே வந்து இன்று வாழவேண்டும் (வததலக்குண்டு). மண் அதாவது அங்கிருக்கும் சமூக சூழ்நிலையே மனிதர்கள் வாழ்க்கையை உருவாக்குகிற்து. தேனி மாவட்டமே பெண் சிசுக்கொலையில் தமிழகத்தில் முதலிடம்.

    கொல்கிறார்கள் எனபதை விட ஏன் கொல்கிறார்கள் என்பதே அறிவார்ந்த கேள்வி. நோய் நாடி நோய் முதல் நாடினால் அந்நோயைக்குணப்படுத்த முடியுமென்பதைவிட மீண்டும்வராமல் தடுக்க முடியும்.

    பெண் இன்றைய தமிழ்ச்சமூகத்தில் ஒரு பெற்றோருக்கு லையாபிலிட்டி. மணத்தின் போது 50 பவுன் நகைபோட்டாச்சு. வீட்டுப்பொருள்களோ இலக்கத்தில் மணமண்டபத்திலே பிறர் பார்க்க வைத்தாச்சு. பையனுக்கு செயினும் மோதிரமும் போட்டாச்சு. பெண்ணுக்கு எல்லாம் பண்ணியாச்சு. முடியவில்லை. தீபாவளி வருகிறது. மலபார் கோல்டிலே மீண்டும் மதுரையில் வாங்கிக்கொண்டு போகிறோம். இத்தோடு முடிகிறதா என்றால் இல்லை என்கிறார். தீபாவளிக்கு வரிசை வைக்கவேண்டும். குழந்தை காலத்தை வைக்கவேண்டியது ஏராளம். வரிசை. வரிசை வரிசை நில்லா வரிசை. மாமனிடம் பணத்தைக்கறந்து ஆண்டியாக்க வேண்டும். இதற்கு பெண்ணும் உடந்தை.

    தொடர்கதையாக இந்த லையாபிலிட்டி ஓடுகிறது. வசதி படைத்தோர் சரி. இல்லாதார் என் செய்வார்? சிசுக்கொலை. பெண்ணைக்கொன்று விடு. இல்லாவிட்டால் பேறுகால விடுதியிலே மாற்றி விடு. நர்சுக்குக் கொடுத்தால் செய்துவிடுவார். இல்லாவிட்டால் எங்காவது கொண்டுபோட்ட்டுவிடு. கள்ளக்காதலில் பிறந்தது என நினைத்து விடுவர். எவராவது ஒரு நல்லவர் எடுத்தால் அஃது ஆண்டாளாக வளர வாய்ப்புண்டு.

    ஆக, பெண் பிறந்தால் இரட்டை மிட்டாயென்பது ஜோதிர்லதா என்ற தனிநபருக்கு மகிழ்ச்சியைத்தரும். சமூகத்தில் ஒரு சக்கரங்களுள் சின்ன சக்கரமாக உழலும் மாந்தருக்கு?

    இயலாது.

    1. Avatar
      IIM Ganapathi Raman says:

      நான் எழுதிய நீண்ட பின்னூடடத்தை கார்ல் மார்க்சு ஒரே வரியில் போட்டுவிட்டார்:

      “It is not the consciousness of men that determines their being; but therir social being that determines their consciousness”

      ஆக பெண் குழந்தை பிறந்தால் நோ சாக்லெட். ஆண் குழந்தை பிறந்தால் டபுள் சாக்லெட் என்பது எப்படி மூளையில் போய் உட்கார்ந்தது என்பதை ஜோதிர்லதா கிரிஜா ஆராய்ந்தால் பலவிடைகள் அவருக்கு கிடைக்கும்.

  3. Avatar
    ஷாலி says:

    //“பெண் கல்வி என்பது இந்தியாவுக்குப் புதிது அன்று. வேதவாகினிகள் என்று அழைக்கப்பெற்ற, வேதகாலத்துப் பெண்மணிகளான, மைத்ரேயி, கார்க்கி போன்றவர்கள் தர்க்க சாஸ்திரத்தில் ஆண் முனிவர்களைத் தோற்கடித்ததன் விளைவாகவே…..//

    அத்வைத தத்துவத்தை நாடெங்கும் பரப்பிய ஆதி சங்கரர் மாற்றுக்கொள்கை உடைய அறிஞர்களான,பட்ட பாஸ்கர,அபினவ குப்தா,முராரி மிஸ்ரா,உதயனசாரியார்,தர்ம குப்தர்,குமரில,பிரபாகர,மற்றும் மஹிஷ்மதியில் கர்ம மீமாம்சத்தில் தேர்ந்தவரான மண்டன மிஸ்ரரையும் சங்கரர் வாதத்தில் வென்றார்.ஆனால் சகல சாஸ்திரங்களிலும் பண்டிதையான மண்டன மிஸ்ரரின் மனைவி சரசவாணி கேட்ட, இல்லறம் எனும் அகத்துறையின் மோகம்,ஈகம்,போகம்,தாகம் இந்த நான்கு கேள்விகளுக்கும் பதில் தெரியாமல் தோற்றுவிட்டார்.

  4. Avatar
    ஷாலி says:

    // ரிடைர் ஆனதும் அவர்களின் இடங்களில் பெண்கள் வேலைக்கு வந்து விடுவார்கள். பெண்கள் ரிடைர் ஆக்னதும் அவர்களின் இடங்களிலும் பெண்களையே ரெக்ரூட் பண்ணலாம். காலப்போக்கில், ஆண் ஊழியர்களே இருக்க மாட்டார்கள். எல்லாருமே பெண்கள் என்று ஆகிவிடும்போது, ஆண்களின் கவனம் சிதறுவது, ஒழுங்கும் கட்டுப்பாடும் குலைந்து இண்டிசிப்ளீன் ஏற்படுவது இதெல்லாம் போய்விடும். நல்ல ஐடியா தானே இது?//

    நல்ல ஐடியா தான் ஆனால் “உத்தியோகம் புருஷ லட்சணம்” என்றுதான் சொல்கிறார்களே தவிர பொம்பளை லட்சணம் என்று யாரும் சொல்வதில்லை.ஒவ்வொரு பெண்களும் அவரவர் வீட்டையும் குடும்பத்தையும் குழந்தைகளையும் நிர்வகித்தாலே போதும் அலுவலகத்தில் இண்டிசிபிளின் ஏற்படாது.வேலையில்லா திண்டாட்டம் இருக்காது.குழந்தைகள் தாயின் அரவணைப்பில் நல்ல குடி மகனாக வளர முடியும்.அலுவலக ஆண்களின் பாலியல் சீண்டலை தவிர்க்கலாம்.மொத்தத்தில் பெண்கள் கண்ணியமாக வாழலாம்.இன்றைய புதுமைப் பெண்கள் இதற்க்கு தயாரில்லை.எல்லாம் சரிசமமாக கேட்கிறார்கள்.இல்லறத்தை பார்ட் டைம் ஆகவும், ஆபிஸ் வேலையை முழு நேரமாகவும் பார்க்கிறார்கள்.சரி….சகோ.ஜோதிர்லதாகிரிஜா அவர்களுக்காக ஒரு பாட்டை பாடுவோம்.

    ஆணென்ன பெண்ணென்ன நீ என்ன நான் என்ன
    எல்லாம் ஓரினம் தான்- அட
    நாடென்ன வீடென்ன காடென்ன மேடென்ன
    எல்லாம் ஓர் நிலம்தான்.
    நீயும் பத்து மாசம் நானும் பத்து மாசம்
    மாறும் இந்த வேஷம்.

    ஒன்னுக்கொன்னு ஆதரவு உள்ளத்திலே ஏன் பிரிவு
    கண்ணுக்குள்ளே பேதம் இல்லை பார்ப்பதிலே ஏன் விரிவு
    பொன்னும் பொருள் போகும் வரும் அன்பு மட்டும் போவதில்லே
    தேடும் பணம் ஓடிவிடும் ம்..ஹூம் தெய்வம் விட்டு போவதில்லே
    இதை தெரிஞ்சும் உண்மை புரிஞ்சும் இன்னும் மயக்கமா?

Leave a Reply to IIM Ganapathi Raman Cancel reply

Your email address will not be published. Required fields are marked *